Monday, April 27, 2009

அக்கரைப்பச்சைகள்

ரொறென்றோ மாநகரின் வீதியின் இருமருங்கிலும் கட்டிடங்கள் வானளாவ எழுந்திருக்க, வீதிகள் வாகனங்களால் நிறைந்திருந்தன. என் மகன் கார் கண்ணாடிகளினூடே உலகப் பிரசித்தி பெற்ற CN ரவரை தனது கமராவுக்குள் அடக்கிக் கொண்டிருந்தான். அவன் இப்படித்தான். கமரா கையில் கிடைத்தால் போதும், பாலுமகேந்திரா ஆகி விடுவான்.

உயரங்களில் அழகு பிரதிபலிக்க, கீழே சாலையோரங்களில் உருண்டு கிடந்திருந்த கோலா ரின்களும், உருட்டிப் போடப்பட்டிருந்த அழுக்குப் பேப்பர்களும் கனடா மீதான எனது பிரமைகளை ஒவ்வொன்றாகக் களைந்து கொண்டிருந்தன. ´ஜேர்மனியின் சுத்தத்துக்கும், ஒழுங்குகளுக்கும் மத்தியில் கனடா எந்த மூலைக்கு வரும்.` மனம் தன்னையறியாமலே ஒப்பீடு செய்யத் தொடங்கியது.

தற்போதெல்லாம் எந்த நாட்டுக்குள் காலடி எடுத்து வைத்தாலும் சட்டென்று இப்படியொரு எண்ணம் தோன்றி விடுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. எனது தாய் நாட்டுக்கு அடுத்த படியாக நான் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜேர்மனியை நேசிக்கிறேன் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஆனாலும் எம்மவரில் பலர் ஜேர்மனியில் வதிவிட உரிமை கிடைத்ததும் லண்டனுக்கு ஓடி விடுவதும், கனடாவுக்கு ஓடி விடுவதும் நடக்காமலில்லை. புகலிட அந்தஸ்து கிடைக்காது என்று தெரியும் பட்சத்தில் இன்னொரு நாட்டுக்கு ஓடி, தம்மைக் காத்துக் கொள்ள வேண்டியது அவசியந்தான். ஆனால் புகலிட அந்தஸ்துக் கிடைத்த பின் வருடக்கணக்காக வாழ்ந்த நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு ஓடுவது ஏதோ அக்கரைப்பச்சைத் தனமாகவே எனக்குத் தெரிந்தது.

மல்லிகாவும் அப்படி குடும்பமாக ஜேர்மனியை விட்டு ஓடிப் போனவர்களில் ஒருத்திதான்.

அது 1993ம் ஆண்டின் ஓர் நாள் என்றுதான் எனக்கு ஞாபகம். வேலை முடிந்து வீடு திரும்பும் போது இரவு எட்டு மணிக்கு மேலாகியிருந்தது. ரீன்ஏஜ் பருவக் குழந்தைகள் வீட்டில். வேலை முடிந்து விட்ட ரிலாக்ஸ் மனதில் இருந்தாலும் என் வரவுக்காய் காத்திருக்கும் பிள்ளைகள் பற்றிய கவலைகள், யோசனைகள், பதட்டங்கள்... என்னிடம் இருந்தன.

வீட்டுக்குள் நுழைந்த போது எனது சிந்தனைகளோடு ஒட்டாது வீடு இருந்தது. வரவேற்பறை கலகலப்பால் நிறைந்திருந்தது. மல்லிகாவும், அவளது கணவரும், அவர்களது ஆறு குழந்தைகளும் சிரித்த முகத்துடன் என்னை வரவேற்றார்கள். எனது குழந்தைகள் தமது படிப்பு, மற்றைய விடயங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டு உடைக்கு மாறி, எனது குழந்தைகளின் அன்றைய பொழுதுகள், தேவைகள் பற்றிய அளவளாவல்களுக்கான எனது சுதந்திரத்துடன் கூடிய சின்ன சந்தோசம் சட்டென என் கனவுகளிலிருந்து கலைய அவர்களது கலகலப்புடன் நானும் கலந்து கொண்டேன்.

மல்லிகா குடும்பத்தினரது திடீர் விஜயம், அதுவும் முன்னறிவுப்பு ஏதுமின்றிய அந்த வரவு எனக்குள் கேள்விக் குறியாகவே குந்தியிருந்தது.

"ஏதாவது குடிச்சனிங்களோ? ரீ போடட்டோ?" என்ற போது எனது கணவர்
அவசரமாக "பிறிட்ஜ் க்குள்ளை இருந்து இறால் பக்கற் எடுத்து வைச்சிருக்கிறன்" என்றார்.

´ம்.. சமைக்க வேண்டும். சாப்பிடாமல்தான் வந்திருக்கிறார்கள்.`

அந்த நேரத்தில் சமைக்க வேண்டுமென்பது எனக்குச் சுமையாகவே தெரிந்தது. பிள்ளைகளுக்கும், கணவருக்குமான உணவை, காலை வேலைக்குப் பின் சமைத்து வைத்து விட்டே மாலை வேலைக்குச் சென்றேன். இப்போது எனக்குத் தேவையாக இருந்தது பிள்ளைகளையும், கணவரையும் கவனித்து விட்டு ஒய்யாரமாக எனது சோபாவில் அமர்ந்து ஒரு தேநீர் அருந்துவதே. இருந்தாலும், மனசின் சோர்வை வெளியில் தெரியவிடாமல் சில நிமிடங்கள் அவர்களோடு அளவளாவி விட்டு, எழுந்து குசினிக்குள் சென்றேன்.

பின்னால் தொடர்ந்து வந்த கணவர் "அவையள் நாளைக்கு இரவு கனடாவுக்குப் புறப்படுகினமாம். திரும்பி வாற எண்ணம் இல்லை. சொல்லிப் போட்டுப் போகத்தான் வந்திருக்கினம்" என்றார்.

எனது சோர்வு, களைப்பு எல்லாம் சட்டென என்னை விட்டுப் பறந்தன. நம்ப
முடியாதிருந்தது. ஓரிரு தடவைகள் மல்லிகா கனடா பற்றி அங்கலாய்த்திருக்கிறாள்தான். எல்லாம் வெறும் பேச்சுக்குத்தான் என்று நினைத்திருந்தேன். ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருக்கும் ஆறு பிள்ளைகளின் படிப்புகள், நட்புகள், இன்னும் எத்தனையோ விடயங்கள்.. எல்லாவற்றையும் குழப்பிக் கொண்டு புறப்படுவாள் என்ற எண்ணம் எனக்குக் கனவிலும் வந்ததில்லை.

"புட்டு விருப்பமோ, இடியப்பம் விருப்பமோ?" என வெளியில் சென்று மல்லிகாவைக் கேட்டேன். "இடியப்பம் எண்டால் இதுகள் வாயிலையும் வையாதுகள்" என்றபடி அவளும் எழுந்து குசினிக்குள் வந்தாள்.

"கனடாவுக்குப் போப்போறம். எல்லாம் சரி வந்திட்டுது. நீங்களும் இங்கை இருந்து என்ன செய்யப் போறியள். வெளிங்கிடுங்கோ. ஒண்டாப் போவம்" என்றாள்.

"ம்... கும் என்னாலை ஏலாது. ஏழு வருசங்கள் இங்கை வாழ்ந்திட்டம். பிள்ளையள் இங்கை படிக்கினம். இதையெல்லாம் குழப்பிக் கொண்டு..."

"என்ன சொல்லுறிங்கள்? நீங்கள் எத்தனை வருசமா வாழ்ந்த உங்கடை நாட்டையும், ஊரையும் விட்டுப் போட்டு வந்தனிங்கள். இது பெரிய விசயமே? உங்கடை அவர் நீங்கள் ஓமெண்டால் வருவாராம். உங்களை சமாளிக்கிறது என்ரை பொறுப்பெண்டு சொல்லிட்டார். உங்கடை கையிலைதான் இருக்கு. வாங்கோ"

எனக்குத் தெரியுந்தானே எனது கணவரைப் பற்றி. தனக்கு பிடிக்காத ஒன்று என்றால் என்னைச் சாட்டி விட்டு தான் நல்லபிள்ளைக்கு இருந்து விடுவார். பரவாயில்லை.

இருப்பதில் நிலைப்படுவதிலேயே பிரியம் கொண்டவள் நான். அங்கு இங்கு என்று தாவுவதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை. அப்படி இருக்கும் போது நாடு விட்டு நாடு பாய என் மனத்தில் துளி எண்ணமும் இல்லை.

'போனால் இலங்கை. இருந்தால் ஜேர்மனி' இதற்கு மேல் கேட்க வேண்டாம் என்ற விதமாக, திடமாக எனது மறுப்பைத் தெரிவித்தேன். மல்லிகாவுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. எப்படியாவது கதைத்து என்னை மாற்றலாம் என்ற அவளது நம்பிக்கை தளர்ந்ததில் அவள் முகம் வாடிப் போயிற்று.

பிட்டும், இறால் பிரட்டலும், மதியம் வைத்த போஞ்சியும், கத்தரிக்காய் வதக்கல் குழம்பும்.. என்று எல்லோரும் ஒரு பிடிபிடித்தார்கள். எனது குழந்தைகளுக்கும் மல்லிகாவின் குழந்தைகளோடு அரட்டை அடிக்க முடிந்ததில் வலுவான சந்தோசம். அவர்கள் புறப்பட இரவு 11மணிக்கு மேலாகி விட்டது.

வாசலில் நின்றும் "நல்லா யோசிச்சுப் போட்டு நாளைக்குப் போன் பண்ணிச் சொல்லுங்கோ. நல்ல சந்தர்ப்பத்தை விட்டிடாதைங்கோ" என்றாள் மல்லிகா.

´யோசிக்க எதுவுமே இல்லை. எனது முடிவு ஜேர்மனி அல்லது இலங்கைதான். இதில் எந்த மாற்றமும் இல்லை` என்பதை நான் சொல்ல நினைத்தும் சொல்லாமலே கையசைத்து விடை கொடுத்தேன்.

இந்த மல்லிகா வீட்டை நோக்கித்தான் நாம் கனடாவின் வீதியொன்றில் பயணித்துக் கொண்டிருந்தோம். அவர்கள் ஜேர்மனியில் இருந்த போது எனது கணவர்தான் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி சென்றிருக்கிறார். மல்லிகாவின் கணவரும், எனது கணவரும் ஏதோ ஒரு அமைப்பு ரீதியான நண்பர்கள். நான் ஒரேயொரு தடவைதான் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். ஆறு பிள்ளைகள் உள்ள பெரிய குடும்பம். மல்லிகாவைப் போலவே அழகான குழந்தைகள். வீடு விலையுயர்ந்த பொருட்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஆனாலும் எனது ரசனைக்குள் அகப்படாத ஏதோ ஒரு குப்பைத்தனம். மூலைகள், முடுக்குகளில் எல்லாம் கவனம் செலுத்தவில்லை என்று எண்ணும் படியாக சிலந்திப் பின்னல்கள். ஆங்காங்கு எறும்புகளின் ஊர்வலம். குசினிக்குள் முற்றுமுழுதாகக் கரப்பான் பூச்சிகளின் இராச்சியம்.

"ஏன்..?"
தாங்க முடியாமல் கேட்டு விட்டேன்.

"அது தமிழ் ஆட்கள் எல்லாற்றை வீட்டிலையும் இருக்கும். அதுக்கு ஒண்டும் செய்யேலாது" என்றாள் மல்லிகா.

ஊரில் கரப்பான் பூச்சி தவிர்க்க முடியாததாய் இருக்கலாம். ஜேர்மனியில் அப்படியல்ல. ஜேர்மனியர் யாருடைய வீட்டிலும் கரப்பான் பூச்சியைக் காணவே முடியாது. இப்படியானவற்றை அழிப்பதற்கான மருந்துகளும், வசதிகளும் இங்கு ஏராளம். வீட்டுக்குத் திரும்பும் போது எனது உடைகளோடு ஏதாவது வந்து விடுமா என்ற பயம் எனக்குள்ளே இருந்தது.

இனிமையான ஒரு சந்திப்பைப் பற்றிய கனவுகளோடு அந்தக் கரப்பான் பூச்சிகளின் ஊர்வலமும் தவிர்க்க முடியாமல் நினைவில் வந்து கொண்டே இருந்தது. மூன்று வருடங்களின் பின் சந்திக்கப் போகிறோம். எப்படி இருப்பார்கள். பிள்ளைகள் வளர்ந்திருப்பார்களோ... என்ற பல கேள்விகளுடன் அவர்கள் வீட்டைச் சென்றடைந்தோம்.

வரவேற்பு இனிமையாக, சந்தோசப் படுத்தியது. மல்லிகா எப்போதும் போல் அழகாகவே இருந்தாள். பிள்ளைகள் ஒரு படி வளர்ந்திருந்தார்கள்.

தோசை, இட்லி, பிட்டு.. என்று சாப்பாடு அமர்களமாக இருந்தது. சாப்பிட்டு விட்டுச் சோபாவில் அமர்ந்த போதுதான் கவனித்தேன், காலடியில் கரப்பான் பூச்சி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.

திடீரென மகன் கீச்சிட்டான். பார்த்தால் சுவரில் எனது தலைக்கு மேலே கரப்பான் பூச்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.

சந்திரவதனா
ஜேர்மனி
13.2.2009

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite