Friday, February 25, 2005

இது சரிதானா?


ஐரோப்பியக் கலாச்சாரம் ஒரு தீண்டத்தகாத விடயம் எனக் கருதும் ஐரோப்பியத் தமிழர்கள், ஐரோப்பியாவில் தமது பிள்ளைகள் சிகரெட் புகைத்தாலோ அல்லது மது அருந்தினாலோ அல்லது காதலித்தாலோ....

ஐரோப்பியாவுக்கு வந்ததால்தான், தமது பிள்ளைகள் இப்படியான பழக்கங்களைப் பழகிக் கெட்டலைகிறார்கள். என்று சொல்லித் தலையிலடித்துக் கொள்கிறார்கள்.

ஆனால் இப்படித் தலையிலடித்துக் கொள்ளும் பெற்றோராகிய இவர்கள், முக்கியமாகத் தந்தையர் ஊரிலேயே தமது பருவ வயதில் சிகரெட் புகைக்கத் தொடங்கி, மது அருந்தத் தொடங்கி இன்னும் அதை இங்கு ஐரோப்பியாவிலும் தொடர்கிறார்கள்.

அத்தோடு ஐரோப்பியாவில் வாழ்வதால்தான் தமது பிள்ளைகள் காதல் என்னும் மாயவலையில் சிக்கி மாய்கிறார்கள் என்று சொல்லி ஐரோப்பியக் கலாச்சாரத்தைத் திட்டும் இவர்களில் அனேகமானோர் ஊரில் காதல் செய்யாமல் இருக்கவில்லை.

சிகரெட், மது, காதல் இவைகள் மூன்றுமே ஊரிலும் இளைஞர்களை விட்டு வைக்காத போது ( இதை அநுபவரீதியாக உணர்ந்திருந்தும், தெரிந்திருந்தும்)
எம்மவர்கள் அர்த்தமற்ற முறையில் ஐரோப்பியக் கலாச்சாரத்தைச் சாடுகிறார்களே!

இது சரிதானா?

Thursday, February 24, 2005

கண்டு பிடிப்பு

காணாமற்போகும் பதிவுகள்


தற்போது நேசகுமாருக்கு இப்பிரச்சனை வந்துள்ளது. எனக்கும் இந்தப் பிரச்சனை இருந்தது. என்னைப் போல இன்னும் பலருக்கு இருந்தது.

ஒவ்வொன்றாகச் செய்து பார்த்து, ஒரு விடயத்தைக் கண்டு பிடித்தேன். தலைப்பு எப்போதும் சிறிதாக இருக்க வேண்டும். பெரிய தலைப்புகளில் போடப் பட்ட விடயங்கள்தான் காணாமற் போகின்றன.

இது எனதே எனதான கண்டு பிடிப்பு. அதனால் சரியோ! பிழையோ! என்பதை நீங்களும் செய்து பார்த்து உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் இந்த Title விடயத்தில் நான் கவனமெடுக்கத் தொடங்கிய பின் எனது பதிவில் காணாமற் போவது நின்று விட்டது.

Wednesday, February 23, 2005

தப்பான கணிப்புகள்


ஒருவரை முதன் முதலாகப் பார்க்கும் போது அவரது தோற்றம் எப்படியிருக்கிறதோ (அதாவது உடை நடை எல்லாமே.. எப்படியிருக்கிறதோ) அதை வைத்துத்தான் அவர் உடனடியாகக் கணிக்கப் படுகிறார் என்பதை எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரியவர் அழகிய கவிதை போல நான்கே வரிகளில் சொல்லியிருந்தார். யார் அவர்? எப்படிச் சொன்னார் என்பதெல்லாம் எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை. ஒருவர் தேர்ந்தெடுக்கும் உடை முக்கியமானதுமானதுதான். அதை நான் மறுக்கவும் இல்லை. புறத்தோற்றம் என்பதும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்றுதான். அதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை.

அதற்காக
காதில் வளையம் வளையமாகத் தோடுகள் கழுத்திலே தூங்கும் நாய்ச்சங்கிலிகளுடன் உலாவரும் எம்மவர்கள், மைக் பிடித்து ரப் பாடும் இளஞர் இளஞிகள் போன்றோரை நண்பர்களூடும் செய்திகளுடூம் பார்த்தும் கேட்டும் வந்ததால் இதுவும் ஆயிரத்தில் ஒன்று என்றே எண்ணத் தோன்றியது. இப்படியான கணிப்பை சரியென்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தொள தொளா ரவுசரும், மொத்தச் சங்கிலியும், காதில் வளையமும் போடுகின்ற இளைஞனையோ இளைஞியையோ நாட்டுப் பற்று இல்லாதவரென்றும், மேலைத்தேயக் கலாச்சாரத்துள் தன்னைத் தொலைத்து விட்டார் என்றும் எடை போட்டு விட முடியாது. இத்தனையும் போட்டுக் கொண்டு நாட்டுப் பற்றோடு வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இவை எதுவுமே போடாமல் தாய்நாட்டைப் பற்றிய அக்கறை துளி கூட இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபம் தொலைக்காட்சியில் "அன்பே சிவம்" படம் ஒளி பரப்பானது. அதிலே கூட ஒரு கருத்து வருகிறது. மாதவன், பார்ப்பதற்கு அநாகரீகமாகத் தெரியும் கமலகாசனை தலையிடி பிடிச்ச ஆள் என்ற மாதிரி எண்ணுகிறார். அதே நேரத்தில் ரெயினுக்குள் நல்ல desent ஆக உடை அணிந்து decent ஆகப் பேசத் தெரிந்த ஒருவரிடம் ஏமாந்து போகிறார்.

இதே போலத்தான் புலம்பெயர் இளைஞர்கள் மேலிருக்கும் தப்பான பிரமையும். இந்தப் பிரமை இன்னும் எம்மவரை விட்டுப் போகவில்லை. நாகரீகமும்.. அதனோடான உடை மாற்றங்களும் எமது நாட்டில் எமது முன்னோர்கள் மத்தியில் நடை பெறவில்லையா? எழுபதுகளில் எம்மவர்கள் பெல்பொட்டம் போடவில்லையா. அதற்கும் முன்னர் எம் மூதாதையர் கடுக்கன் போடவில்லையா? வேட்டி, சாரம், குறுக்குக்கட்டு...... என்று வாழ்ந்த சமூகம் இன்று ரவுசர் காற்சட்டை என்று போட்டுக் கொண்டு திரியவில்லையா? எங்களது பாட்டாக்கள் போல எங்களது அப்பாக்கள் உடுத்தவில்லைத்தானே. தலை இழுப்பதும் அப்படித்தானே. அப்படியிருக்க இன்றைய இளைய சமூகத்தை குற்ற முலாம் பூசிய பூதக்கண்ணாடி வைத்து ஏன் பார்க்க வேண்டும்.

காலஓட்டத்தில் சில மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையே. அதே போல வாழும் இடங்களினாலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த மாற்றங்களை வைத்து புலம்பெயர் இளைஞர் சமூகத்தைக் கணிப்பது மிகுந்த கவலைக்குரிய விடயமே.

Thursday, February 17, 2005

பனி கொட்டுகிறது

யேர்மனியில் பனி கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டிருக்கிறது. நானிருக்கும் இடமோ மலைப்பகுதி. வீட்டுக்குள்ளிருந்து பனியைப் பார்க்கும் போது கொள்ளை அழகு. பனிப்பூத்த மரங்கள்... பனி போர்த்திய வீடுகள்... அவைகளை ரசிப்பதில்தான் எத்தனை சுகம். வெளியில் இறங்கி பனிக்குள் கால் புதைத்து நடக்க வேண்டுமென்ற குழந்தைத்தனமான ஆசை.

நேற்று அந்த ஆசையைத் தீர்த்துக் கொண்டு போய் பேரூந்துக்காகத் காத்திருந்த போதுதான் அலுப்புத் தட்டியது. வாகனங்கள் எதுவுமே வழமை போல குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து சேரவில்லை. ஆங்காங்கு தடம் புரண்டு போனவையும், மதில்களிலும் மரங்களிலும் மோதியவையும், சில்லு சுற்றவே மறுத்ததால் நின்று போனவையும் என்று... வேலைக்கு யாருமே நேரத்துக்குப் போய்ச் சேரவில்லை.

இன்றும் அதே நிலைதான். காலை எழுந்ததிலிருந்து பனியை அள்ளிக் கொட்டுவதே முக்கிய பணியாய் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. யாராவது எவரது வீட்டின் முன்பாவது வழுக்கி வீழ்ந்து, அங்கு நோகுது, இங்கு நோகுது என்று வழக்குப் போட்டார்களோ..!
வீட்டின் முன்னுள்ள பனியை அள்ளாவதர் பாடு திண்டாட்டமாகி விடும். என் வீட்டின் முன் மீண்டும் குவிந்து விட்டது. அள்ளி விட்டு அல்லது தள்ளி விட்டு வருகிறேன்.

Tuesday, February 15, 2005

பாடலைக் கண்டு பிடியுங்கள்


வழமையாக பாலாதான் பல்லவியும் சரணமும் என்று தன் பதிவுக்கு எங்களை சந்தோசமாக அழைப்பார். இன்று ஒரு மாற்றத்திற்காக பாடல்களிலிருந்து எனக்குப் பிடித்த சில இடைவரிகளைத் தருகிறேன். பாடலைக் கண்டு பிடியுங்கள். முடிந்தால் படம் பாடியவர் போன்றவற்றையும்.

1)நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும்

2) உயிர் தந்த பூமி எனை அங்கு தேடும்
என் தோட்டப் பூவெல்லாம் காணாமல் வாடும்
மரம் என்னைத் தேடி கிளை கைகள் நீட்டும்
குயில் கூட்டம் நானின்றி குரல் வற்றிப் போகும்

3)விரல்களைத் தாண்டி வளர்வதைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம்.....!
எதற்கிந்த சோகம்? கிளியே..!

4)விண்மீன்களைக் கேட்டால் அண்ணன்கள் எல்லாம்
பறித்துப் பறித்துத் தருவார்கள்
நான் வானவில் கேட்டால் ஏணியில் ஏறி
ஒடித்து ஒடித்துத் தருவார்கள்

5) பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?


6) எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை
வாழ்க்கை போல எண்ணங்கொள் வாழ்வது துயரமில்லை
எந்த மேடை என்பதை அன்பே மறந்து விடு
ஏற்றுக் கொண்ட பாத்திரம் அதிலே கலந்து விடு

7)...... மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய் விட்டன
இரண்டும் சந்தித்த போது..

பேச முடியவில்லையே..

8) சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில்..!
மற்றும் மூன்று விரல்கள் உங்கள்
மார்பினை காட்டுதடா..!

9) முகிலனங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ


10) நிலவினில் இருக்கின்ற களங்கத்தை இவளது
பெருவிரல் துடைத்து விடும்
புதுயுக மகள் இவள் அணிகின்ற வளையல்கள்
சிறைகளை உடைத்து விடும்

Sunday, February 13, 2005

புனைபெயரில் எழுதுகிறீர்களா?


புனைபெயரில் எழுதுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மற்றவர்களைச் சாடவும், எழுத்துக்களால் மற்றவர்களை வெட்டவும், கொத்தவுமே சிலர் புனைபெயர்களைப் பாவிக்கிறார்கள். சிலரோ புனைபெயரால் சமூகத்துக்குத் தேவையான பல விடயங்களைச் சொல்கிறார்கள். சிலர் தம்மீது தமக்கே நம்பிக்கையில்லாமல் புனைபெயரில் எழுதுகிறார்கள். இப்படிப் பல காரணங்கள் புனைபெயரில் எழுதுபவர்களிடம் உண்டு.

புனைபெயரில் எழுதுபவர்களை முகமூடிகள் பயந்தாங்கொள்ளிகள்... என்றெல்லாம் சிலர் சாடுகிறார்கள்.

இது பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?
நீங்கள் புனைபெயரில் எழுதுகிறீர்களா?
எழுதினால் அதற்கான காரணம் என்ன?

ஒரு சில பதிவுகள்


இன்றைய வலைவலத்தில் பிடித்த, மனதைத் தொட்ட அல்லது மனைதைப் பாதித்த பதிவுகளில் ஒரு சில
மதம் பிடிக்கும் முறை
படித்துக் 'கிழிக்கும்' வாசகர்கள்

என்னை வியக்க வைக்கும் வலைப்பதிவாளர்களில் இவர் முக்கியமானவர். இவரது படிப்பகம், சலனச்சுருள் படைப்பு .. போன்ற பதிவுகள் உடன் சுவாரஸ்யத்தையும் விட என்றைக்கும் பயனானவை.

காதலே நிம்மதி


இன்று தீபத்தில் "காதலே நிம்மதி" படம் போட்டார்கள். படம் தொடங்கி 15 நிமிடங்களின் பின்தான் எதேச்சையாகத் தொலைக்காட்சியின் முன் போனேன். நாசரும் மனைவியும் கோயிலுக்குள் கும்பிட, கதாநாயகி நாசரின் குட்டி மகளுடன் ஒழிந்து விளையாட.. படத்தைப் பார்க்கும் எண்ணமும் வந்தது. படம் சொல்ல வந்த விடயம் பிடித்திருந்தது.

பெற்றோர்கள் என்ன ஏது என்று ஆராயாது எடுத்த உடனேயெ பருவ வயதுப் பிள்ளைகள் மேல் சந்தேகப் படுவதும் அதனால் வந்த சிக்கல்களுமே படமாக்கப் பட்டிருந்தது. பிள்ளைகள் யாரோடு பேசினாலும் யாரோடு சிரித்தாலும் எப்போதுமே சந்தேகக் கண்களுடன் பார்க்கும் பெற்றோருக்குப் படிப்பினையான ஒரு படம்.

காதல் - நல்ல படம்


"அம்மா காதல் படத்தை ஒருதரம் பாருங்கோ. நல்ல படம்" என மகன் திலீபன் சொன்ன போது காதல் இல்லாத படங்களா..? என நினைத்துக் கொண்டேன். ஆனாலும் அவன் சொன்னால் படம் நல்லாகத்தான் இருக்கும் என்ற எண்ணமும் வந்தது. இருந்தும் உடனே பார்க்கும் எண்ணம் வரவில்லை.

சுனாமியின் அவலங்களில் மனசு கனத்துப் போயிருந்த ஐனவரியில் ஓர்நாள் அவன் வீட்டுக்குப் போன போது அவன் கட்டாயப் படுத்தியதில் பார்க்க வேண்டியதாகி விட்டது. அரைமனதுடன்தான் பார்க்கத் தொடங்கினேன்.

சினிமாத்தனம் அதிகம் இல்லாத சினிமாப்படம். வழமையான காதல்தான். வழமையான எதிர்ப்புத்தான். ஆனாலும் படத்தை எடுத்த விதத்தில் ஏதோ ஒரு இயல்பு கலந்த சிறப்பு. பிடித்திருந்தது.

பின்னர்தான் வலைப்பதிவுகளிலே இப்படத்துக்கு மற்றவர்கள் எழுதிய விமர்சனங்களை பார்க்கும் போது வாசிக்க மனசு விரும்பியது. boopathy போன்று அனேகமான எல்லோருமே ஒற்றை வரியிலாவது நல்ல படம் என்றுதான் எழுதியிருந்தார்கள். karthikram நல்ல படந்தான் என்று சொல்லி விட்டு சில குறைகளையும் எழுதியிருந்தார். ரோசாவசந் எடுத்த எடுப்பில் நல்ல படம் என்று முத்திரை குத்தி விட்டு பின்னர், வேறு பல கோணங்களிலும் பார்த்து குறைகளையும் எழுதியிருந்தார். குறைகள் இருக்கலாம். ஆனாலும் வழமையான படங்களிலிருந்து நிறையவே முன்னேறியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஓ... இதுதான் காதலா !


அன்பே
உனக்கும் எனக்கும் என்ன சொந்தம்
உன்னோடு எனக்கென்ன பந்தம்

அலைஅலையாய் உன் நினைவு வந்து
என் மனமலையில் மோதுகையில்
சிறு மண்மேடாய் சரிந்து போகிறேன்
ஒரு பனி போலக் கரைந்து போகிறேன்.

தொலை தூரம் நீ வாழ்ந்தாலும்
உன் நினைவுகளோடுதான் நான்
தினம் வாழ்கிறேன்.

குளிரிலே இதமான போர்வையாய்
வியர்க்கையில் குளிர் தென்றலாய்
மழையிலே ஒரு குடையாய்
வெயிலிலே நிழல் தரு மரமாய்
தனிமையில் கூடவே துணையாய்
கால்களில் தழுவுகின்ற கடல் அலையாய்.....
உன் நினைவுகள் எப்போதும்
என்னோடுதான்

ஓ... இது தான் காதலா!
இது காதலெனும் பந்தத்தில்
வந்த சொந்தமா?
உனக்கு ஒன்று தெரியுமா?
திருமணத்திலும்
உடல் இணைவதிலும்தான்
காதல் வாழுமென்றில்லை
அன்பு நூலின் அதிசயப் பிணைப்பில்
நெஞ்சில் வாழ்வதும் காதல்

நினைவுகளின் தொடுகையிலே
உயிர்ப் பூக்கள் சிலிர்க்கின்ற
என் மனமென்னும் தோட்டத்தில்
உனக்காகத் துளிர்த்த காதல்

இன்று எனக்குள்ளே
விருட்சமாய் வியாபித்து
பூக்களாய் பூத்துக் குலுங்கி
அழகாய்
கனி தரும் இனிமையாய்

இது நீளமான காலத்தின்
வேகமான ஓட்டத்திலும்
அன்பு வேரின் ஆழமான ஊன்றலில்
நின்று வாழும் உண்மைக்காதல்

சந்திரவதனா
யேர்மனி
February-1999

ஒரு பிரச்சனை


என்னுடைய profileக்குப் பானால் Recent Posts 7.11.2004 உடனேயே நிற்கிறது. அதற்குப் பின்னர் எழுதிய எதுவுமே வருகுதில்லை. காரணம் யாருக்காவது தெரியுமா?

Saturday, February 12, 2005

அமிழ்ந்த காதல்


மாரிக்கிணறு நிரம்பியிருந்தது. கிண்ணத்தால் எட்டி அள்ளிக் குளிக்கலாம் போலிருந்தது. குளிரை நினைத்தால்தான் பயமாக இருந்தது. பல்லைத் தீட்டி முகம் கழுவி தேநீர் ஒன்றைக் குடித்து விட்டுக் குளிக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.

இன்னும் சரியாக விடியவில்லை. அம்மா எனக்காக வேளைக்கே எழும்பி விட்டா. இருட்டில் ஆட்டில் பால் கறந்திருப்பா. குசினிக்குள் ஆட்டுப்பால் தேநீர் ஆற்றும் வாசம் கிணற்றடிக்கும் வந்தது.

நேற்று ரியூசனால் வரும் போது கோகிலாவிடம் இருந்த எனது கெமிஸ்றி நோட்ஸ் கொப்பியை வாங்கிக் கொண்டு வந்தேன். படிக்க வேண்டும். அதுதான் வேளைக்கே எழும்பி விட்டேன்.

கோகிலாவை நினைக்கத்தான் பாவமாக இருந்தது. அவளுக்கு எப்படியோ கோணந்தீவு ராசுவிடம் காதல் வந்து விட்டது. காதலுக்கு என்ன தெரியும். அது சாதிமத பேதம் பார்த்து வருவதில்லைத்தானே.

ராசுவின் அப்பா பனையேறிக் கள்ளுச் சீவுகிறவர். வாழ்வது கொட்டில் வீட்டில். தேவகியின் அப்பா வங்கியில் வேலை செய்கிறார். சாதித்தடிப்பு என்று இல்லாவிட்டாலும் சாதி பார்ப்பவர். வாழ்வது மாளிகை போன்று இல்லாவிட்டாலும் வசதியான பெரிய வீட்டில். உணர்வுகளை விட மானம், மரியாதைக்கு முக்கியம் கொடுக்கும் சுபாவம் கொண்டவர்.

அவரது காதுக்கு ஏற்கெனவே விடயம் எட்டியதில் வீட்டில் ஒரு பனிப்போரே நடந்து முடிந்து விட்டது. அவளை அடி, உதை என்று துவைத்து எடுத்து விட்டார். அவனை மறந்து விட வேண்டுமென்ற கண்டிப்பான நிபந்தனையுடன்தான் பாடசாலைக்குப் போவதற்கான அனுமதியும் கொடுத்திருந்தார். அடிக்கும் உதைக்கும் பயந்து காதல் போய் விடுமா..? அது இன்னும் பலமாகத் தொடர்ந்தது.

இந்த நிலையில்தான், நேற்று ரியூசனால் வீட்டுக்குத் திரும்பி வரும்போது யாருக்கும் தெரிய வராது என்ற அசட்டுத் துணிச்சலுடன் அவள் பிய்ந்து கிடந்த வேலிக்கு மேலால் எட்டி ராசுவிடம் கடிதத்தைக் கொடுத்தாள். அந்த நேரம் பார்த்து துளியும் எதிர் பாராத விதமாய் அவர் அந்த ஒழுங்கையால் சைக்கிளில் வந்தார்.

அவர் பார்த்த பார்வையும் கோகிலா ஏறு சைக்கிள்ளை என்று உறுக்கிய விதமும் எனக்கே நடுக்கத்தை ஏற்படுத்தியது. "இன்னும் எங்களுக்குள்ளை தொடர்பு இருக்குது எண்டு அப்பாவுக்குத் தெரிஞ்சால் அப்பா என்னைக் கொண்டு போடுவார்" என்று அவள் ஏற்கெனவே சொல்லியது என் ஞாபகத்தில் வந்தது. நான் மௌனமாய் வீட்டுக்கு விரைந்து விட்டேன்.

நேற்றுக் கட்டாயம் அவள் வீட்டில் பிரளயம் நடந்திருக்கும். இன்று பள்ளிக்கூடத்தில் தான் என்ன நடந்ததென்று சொல்லுவாள். ம்.. வருவாளோ..! சிலவேளை இனி அவளைப் பள்ளிக்கூடத்துக்கு விடவும் மாட்டினம்.

நினைவுகளோடு தண்ணீரை அள்ளி முகத்தைக் கழுவிக் கொண்டிருந்த போதுதான் செய்தி வந்தது "கோகிலா கிணற்றுக்குள் விழுந்து இறந்து விட்டாள்" என்று.

காலையில் அவளின் அம்மா நித்திரைப் பாயிலிருந்து எழும்பி கிணற்றடிக்கு வநத போது அவளின் உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்ததாம்.

பெற்றவர்களினதும் உடன் பிறப்புகளினதும் ஓலத்துக்கு மேலால், ஊரின் ஊகங்கள் பலவாறாக ஒலித்தன. "சாமிக்கு பூ வைக்கிறதுக்காண்டி காலைமை எழும்பி கிணத்துக்கட்டிலை ஏறியிருப்பாள். தவறி விழுந்திருப்பாள்..... என்ற அவளின் அம்மா அப்பாவின் பதிலை நம்பியும் நம்பாமலும்... ஊர் பலதையும் மென்று கொண்டிருந்தது. நான் மௌனம் காத்தேன்.

சந்திரவதனா
12.2.2005

வேண்டுகோள்


வலைப்பதிவுகளின் வளர்ச்சி பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். இதில் காசியின் தமிழ்மணத்தினூடான முயற்சிகள் வலைப்பதிவாளர்களுக்கும், வாசகர்களுக்கும் பெரும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இந்த வளாச்சிகளின் மத்தியில் ஆரம்பத்தில் இருந்த ஒரு வசதி இல்லாது போய் விட்டது போல் தெரிகிறது. முன்னர் ஒரு சொல்லைக் கொடுத்து அது சம்பந்தமான ஆக்கங்களைத் தேடக் கூடிய வசதி இருந்தது. இப்போது அதைக் காணவில்லை. பல தடவைகள் Blogsஇல் ஏதாவதொன்றைத் தேட முனைந்து முடியாமல் கூகிளை நாடி நேரத்தைத் தொலைத்திருக்கிறேன். இந்த தேடும் வசதியும் தமிழ்மணத்தில் சேர்க்கப் பட்டால் மிகவும் உதவியாக இருக்கும். (ஏற்கெனவே இருந்து நான் அதைக் கண்டு பிடிக்காவிட்டால் சுட்டிக் காட்டுங்கள்.)

அத்தோடு துறைசார்ந்து வலைப்பதிவுகள் பட்டியலிடப் பட வேண்டும். அதை இன்று பாலாஜியும் குறிப்பிட்டிருந்தார். இதையும் வேறு யாரும் செய்வதையும் விட காசியே செய்து தமிழ்மணத்தில் இ.இதழ்கள் பக்கம் போல அமைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கவிதை

கவிதையின் வரைவிலக்கணம்தான் புரியவே மாட்டேனென்கிறது.
எதுகை மோனை... நயம்.. என்று எத்தனையோ விடயங்களைக் கவிதைகளில் எதிர் பார்க்கிறேன். எனக்கு அதெல்லாமுமாய் எழுதத் தெரியாவிட்டாலும் யாராவது இதையெல்லாம் சேர்த்து எழுதினால் மிகவும் ரசிப்பேன். ஆனால் எதுகை மோனை... என்று எதுவுமே இல்லாதவை கூட சில சமயங்களில் எனக்குப் பிடிக்கின்றன.

இன்று படித்தவற்றில் இன்று படித்தவற்றில் இளவஞ்சியின் இக்கவிதை பிடித்தது.

நேற்றுப் படித்ததில் சனியனின் இக்கவிதை பிடித்தது

காதல் கசக்குமா...?


"ஆண்பாவம்" படத்துக்காக இளையராஜாவினால் இசையமைக்கப் பட்டு இளையராஜாவே பாடும்
காதல் கசக்குதையா
வரவர காதல் கசக்குதையா...

என்ற பாடலைக் கேட்கும் போது "சீ... சீ... இந்தப் பழம் புளிக்கும்" என்ற திராட்சைப்பழம் எட்டாத நரியின் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. காதல் யாருக்குத்தான் கசக்கும். காதல் என்பது மிகவும் இனிமையானது, இன்பமானது, இயல்பானது, நம் எல்லோராலும் மிகவும் நெருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் அநுபவிக்கப் படுவது.

கண்மூடித்தனமான காதலும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத காதலும் (உண்மையில் இவையெல்லாம் காதல் என்றே சொல்லி விட முடியாது. வெறும் கவர்ச்சியாலும், பருவக் கோளாறாலும் வந்தவையே) உருப்படாமலோ சரிப்படாமலோ போவதுண்டுதான். ஆனால் ஒருவரையொருவர் புரிந்து மனதால் காதலிப்பவர்களின் காதல்கள் ஒருபோதும் உருப்படாமலோ சரிப்படாமலோ போகாது.

தேவதாஸ் பார்வதி காதலோ அம்பிகாவதி அமராவதி காதலோ தோற்றுப் போகவில்லை. அந்தக் காதல் இன்றுவரை வாழ்கிறது. எமது சமுதாயத்தின் அந்தஸ்து மோகம், சாதிமத பேதம், பணம்... என்ற கோட்பாடுகளுக்குள் காதலர்கள்தான் பிரிக்கப் பட்டார்கள். காதல் சாகவில்லை.

ஆனால் காலத்துக்குக் காலம் காதலின் தன்மை அதாவது காதலர்கள் காதலை வெளிப்படுத்தும் தன்மை மாறிக் கொண்டுதான் போகிறது. கிட்டப்பா காலத்தில் காயாத கானகத்தே.. பாடி களவாக நடந்த காதல்.. இன்று இணையங்கிளினூடும் அம்மா, அப்பாவின் அனுமதியுடனும் நடக்கிறது.

சரியாக யோசித்துப் பார்த்தால் காதலர்கள் சில காலம் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுப் பேசி தம்மை நன்கு புரிந்து கொண்ட பின் வாழ்க்கையில் இணைவது ஆரோக்கியமானது என்பது விளங்குகிறது.

இப்பாடலில்
நம்ம தகப்பன் பேச்சை தாயின் பேச்சை மதிக்கணும்
நீயாகப் பெண் தேடக் கூடாது
என்றும் கூறப் படுகிறது.

தகப்பன் தாய் பேச்சை கண்டிப்பாக மதிக்க வேண்டும்தான். ஆனால் அதையே தகப்பன் தாய்மார் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வதுதான் தப்பானது. எத்தனை திருமணங்கள் மனதால் விரும்பாமல் வெறுமனே தாய் தந்தையரின் விருப்பத்துக்காக நடந்து மனதளவில் தோல்வி கண்டுள்ளன.

வாழப்போவது பிள்ளைகள். ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பெற்றோர் வழங்கலாம். கட்டாயப் படுத்தக் கூடாது. இப்படியான கட்டாயக் கல்யாணங்கள் செய்தவர்கள்தான் மனைவியைக் காதலிக்க மறக்கிறார்கள்.

இதே நேரத்தில் காதலித்து கல்யாணம் செய்த எத்தனையோ ஆண்கள் மனைவியை வைத்துக் கொண்டு, வேறு பெண்களுக்காகவும் சபலத்தோடு அலைகிறார்கள்தான். இங்கும் கூட காதலில் தப்பு இல்லை. அந்த ஆண்களில்தான் தப்பு.

நண்டுகள்


உதவி செய்யப் போய் உபத்திரவங்களை வாங்கிக் கொண்ட அனுபவம் குறிப்பாகப் புலம் பெயர்ந்த பலருக்கும் இருக்கும். புலம் பெயர்ந்த ஆரம்ப காலங்களில் தாங்கள் அனுபவித்த தனிமைகளையும், பாஷைப் பிரச்சனைகளையும், உதவிகள் இல்லாத தன்மைகளையும் மனதில் கொண்டு... தொடர்ந்த காலங்களில்

புலம் பெயர்ந்து வந்தவர்களை தாமே போய்ச் சந்தித்து வில்லங்கமாக வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து...
பின்னர் பட்டிருககிறார்கள்.

உறவினர்களைத் தெரிந்தவர்களை என்று தாமே பொறுப்பேற்று அழைத்து அவர்களைச் சரியான முறையில் பதியும் வரை தங்கள் வீட்டில் தங்க இடம் கொடுத்து விட்டு......
பின்னர் முழித்திருக்கிறார்கள்.

இன்னும் சிலரோ பதிவுக்கு ஒரு இடம் வேண்டுமென்ற யாராவது மன்றாடும் போது பாவம் பார்த்து வீட்டில் பதிந்து விட்டு.. இருக்க விட்டால் சிறிதளவு பணமும் கிடைக்கும் என்ற ஆசையில் வீட்டுக்குள் விட்டு விட்டு...
தாம் நடுத்தெருவில் நின்றிருக்கிறார்கள்.

இப்போது ஷ்ரேயாவும் மிகவும் பட்டிருக்கிறார்..

எத்தனை கிலோ?


18 வருடங்களுக்கு முன்,
என் கணவருடன் இங்கு, யேர்மனிய அகதி முகாமொன்றில் இருந்த சில நண்பர்கள் எங்களிடம் வந்திருந்தார்கள். மதிய உணவின் பின் எல்லோரும் தமது உடல்நிறையைப் பார்த்தார்கள். ஒருவருக்கு தன் நிறையில் திருப்தி இல்லை.

நிறைகாட்டியிலிருந்து கீழே இறங்கினார். ஒரு Bodybuilder போல மசில்ஸ் எல்லாம் தெரியும் படி Body எடுத்தார். அப்படியே நிறைகாட்டியில் ஏறினார்.
"அக்கா இப்பா பாருங்கோ நான் எத்தனை கிலோ என்று" என்றாரே.

ஆணென்ன பெண்ணென்ன



இது 1991 இல் வெளிவந்த தர்மதுரை படத்துக்காக
இளையராஜாவின் இசையமைப்பில் பாலசுப்ரமணியம் பாடிய
ஒரு பாடலின் சில வரிகள். பாடலை எழுதியவர் யாரெனத்
தெரியவில்லை.


ஆணென்ன பெண்ணென்ன
நீயென்ன நானென்ன
எல்லாம் ஓரினம்தான்...

நீயும் பத்து மாதம்
நானும் பத்து மாதம்...

ஒண்ணுக்கொண்ணு ஆதரவு
உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ளே பேதமில்லை
பார்ப்பதிலே ஏன் பிரிவு...?

Friday, February 11, 2005

எதற்காக எழுதுகிறீர்கள்..?


ஏன் எழுதுகிறோம்..? ஏன் எழுதுகிறார்கள்..? என்ற கேள்விகளுக்கான பதில்கள் எத்தனையோ விதமாக வருகின்றன. சில பதில்கள் குதர்க்கமாகக் கூட வருகின்றன. எனது கணவரின் நண்பர் ஒருவர் சொன்னார். "ஏதோ ஒரு தேவை கருதித்தான் ஒவ்வொருவரும் எழுதுகிறார்கள். தம்மை வெளிக்காட்டிக் கொள்ளவோ அல்லது தமக்கான ஒரு அங்கீகாரத்தைப் பெறவோதான் எழுதுகிறார்கள். ஏதாவது ஒரு லாபமில்லாமல் யாரும் எழுதுவதில்லை..." என்று.

இக்கருத்தில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை. தேவைகருதியும், தம்மை வளர்த்துக் கொள்வதற்காகவும், லாபம் கருதியும் எழுதுபவர்கள் இல்லாமல் இல்லை. அதற்காக எழுதுபவர்கள் எல்லோருமே லாபம் கருதித்தான் எழுதுகிறார்கள் என்று ஒரு போதும் சொல்ல முடியாது.

மீனாக்ஸ் எழுத்தைத் தவம் என்கிறார்.

மனுஷ்யபுத்திரன் எழுத்து எனக்கு தொழிலுமல்ல, தவமுமல்ல. அது ஒரு வாதை. ஒரு கனவின் திடுக்கிடல். தற்செயலாக வந்து சேரும் காதலின் ஸ்பரிஸம்... என்கிறார்.

உங்களுக்கு எழுத்து எப்படி..?
எதற்காக எழுதுகிறீர்கள்..?

ஒரு சிவராத்திரி


ஆணடுகள் சில கழித்து தாயகம் சென்ற போது

கொழும்பு றோட்டில்
கொஞ்சத் தூரந்தான் போயிருப்பேன்

"வீட்டை போன உடனை
பொலிஸ்ரிப்போர்ட் எடுக்கப் போகோணும்."
மாமாதான் சொன்னார்

வீட்டுக்குப் போனவுடன்
குளித்துச் சாப்பிட்டு
40ரூபா ஓட்டோவுக்குக் கொடுத்து
கண்ணாடிகளோ கதவுகளோ இல்லாத
அதன் வேகத்தில்
தலை கலைந்து உடல் குலுங்கி
உண்டதெல்லாம் வெளிவரும் உணர்வுடன்
பொலிஸ்ஸ்ரேசன் போனால்
"லேற்றாகி விட்டது.
சில்வா போய் விட்டார். "
சிங்களத்தில் ஒருவன்
சிரிக்காமல் தடுத்தான்
நரசிம்மராவிடம் பயிற்சி பெற்றானோ...!

சிங்களத்தில் மாமா
சிரித்துக் கதைத்து
என் யேர்மனியப் பாஸ்போர்ட் காட்ட
மெல்ல அவன் முகமிளகி
துப்பாக்கியை விலத்தி
உள்ளே போக வழி விட்டான்

தென்னைகள் குடையாக விரிந்திருக்க
குரோட்டன்கள் அழகாய் பரந்திருக்க
கூரிய கண்கள் பல
என்னையே உற்று நோக்க
தூக்கிய துப்பாக்கிகள் மட்டும்
என் கண்களுக்குத் தெரிய
படபடக்கும் நெஞ்சுடன் படியேறி
பல் இளித்து
பத்திரங்களை நிரப்பி
பவ்வியமாய் சிங்களப் பெண்களிடம் கொடுத்து
வெளி வருகையில்

"இண்டைக்கு வவுனியாக்குப் போகேலாது
நாளைக்குத்தான் பொலிஸ்ரிப்போர்ட் கிடைக்கும்"
மாமாதான் சொன்னார்.

ஆளுடன் ஆளுரச
அவசர நடைபோடும் வெள்ளவத்தை றோட்டில்
இரண்டு இடத்தில் செக்கிங்
பாஸ்போர்ட் காட்டி
Flight time சொல்லி
வீடு திரும்புகையில்
யேர்மனியிலும் இல்லாமல்
வவுனியாவிலும் இல்லாமல்
வீணான நாளை எண்ணி
மனசுக்குள் சலிப்பு

இரவும் வந்தது...

யேர்மனிக்கும் வவுனியாவுக்குமாய்
மனசு அலைய
தூக்கம் என்பது தூர விலகி நிற்க
கட்டிலில் புரள்கையில்
"டொக்.. டொக்.. டொக்.. "

ஜன்னலினூடு இராணுவத்தலைகள்..!

நெஞ்சுக்குள் பந்து உருள
"ஆமி.. ஆமி.." என்று
மாமி கிசுகிசுக்க
இரவின் நிசப்தம்
இராணுவத்தால் குலைக்கப்பட்டு
வேண்டாமலே ஒரு சிவராத்திரி
வீடு தேடி வந்திருந்தது

மீண்டும்
பாஸ்போர்ட் காட்டி
Flight time சொல்லி...
சோதனை என்ற பெயரில்
வீடு குடையப் படுகையில்
குளிர்ந்த நிலவிலே
இரவுடையுடன் நிறுத்தப்பட்டு
அப்பாடா....
கூச வைத்தன இராணுவக் கண்கள்
மனம் குலுங்கி அழுதது
என் தேசப்பெண்களை எண்ணி...

சந்திரவதனா
3.1.1998

ஒரு சாகரமோ..!


தமிழ்வலைப்பதிவுகளின் வளர்ச்சி ஒரு பெரு விருட்சமாகியுள்ளது. சில சமயங்களில் ஒரு சமுத்திரமோ என்று கூட எண்ணும் படி இவ்வளர்ச்சி எம்மைப் பிரமிக்க வைக்கிறது. அறிவியல், தொழில்நுடப்பம், விஞ்ஞானம், இலக்கியம், சமையற்கலை, வரைகலை என்று எல்லாவற்றையும் தனக்குள்ளே நிரப்பி வைத்திருக்கின்றன வலைப்பதிவுகள். இவ் வலைப்பதிவுகள் பற்றிய செய்தியை என் போன்றவர்களுக்கு முதலில் அறிமுகப் படுத்திய பெருமை திசைகளுக்கே.

இம்மாத திசைகளில் வலைப்பதிவுகளுக்ப் பரிசு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்துள்ளது. அதில் இப்படிக் குறிப்பிடப் பட்டுள்ளது.
தமிழ் வலைப்பூக்கள் என்கிற கருத்தாக்கத்தையும் திசைகள்தான் முதலில் அறிமுகப்படுத்தியது. திசைகள் இதழ் வெளிவந்த ஐந்து மாதங்களுக்குள் ஜூலை 2003 இதழில் 'வலைப்பூக்கள்' என்று வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தி, மாவின் வார்த்தைகளில் " நூறு பூக்கள் மலரட்டும்" என்று வாழ்த்தியது. இன்று 300 வலைப்பதிவுகளுக்கு மேல் மலர்ந்திருக்கின்றன. அவற்றில் அலசப்படும் கருத்துக்கள் பல துறையைச் சார்ந்தவை. சில மூத்த எழுத்தாளர்கள் கருதுவது போல அவை 'கையெழுத்துப் பத்திரிகை' அல்ல. தமிழர்களின், குறிப்பாக இளைய தலைமுறையின் சிந்தனைப் போக்குகளை நேரிடையாக அறிந்து கொள்ள உதவும் சாதனம்.

உண்மைதான் வலைப்பதிவுகளில் வயது பேதமின்றிப் பலரும் எழுதுகின்றனர். இளையதலைமுறையினர் தமது சிந்தனைகளையும் கருத்துக்களையும் தயக்கமின்றிப் பகிர்நது கொள்கிறார்கள். இதை விட இலைமறைகாய்களாக இருந்த எத்தனையோபேர் எழுத்துலகில் தம் தடங்களையும் பதித்துள்ளார்கள். தனிமைப் படுத்தப்பட்ட சூழலிலிருந்து தம்மைத் தாமே மீட்டெடுத்திருக்கிறார்கள். எந்த ஊடகங்களையும் காத்திராமல் தாமே தமது கருத்துக்களை துணிவோடு வெளியில் சொல்லியிருக்கிறார்கள். கூடவே முகந்தெரியாதவர்களுடன் நல்ல நட்பையும் வளர்த்துக் கொண்டுள்ளார்கள். சமூகச்சீரழிவாளர்களைப் புடம் போட்டுக் காட்டியுள்ளார்கள். இந்த வலைப்பதிவுகளை செழுமைப் படுத்தும் நோக்கோடு செயற்பட்டு கணினி பற்றியதான பலதொழில்நுட்பங்களைக் கூடக் கற்றுக் கொண்டுள்ளார்கள்.

இலக்கியச் சந்திப்புக்களும் நடக்கின்றன. முன்னர் ஒருமுறை ஈழநாதன் தனது பதிவில் சிங்கப்பூரில் வலைப்பதிவாளர்கள் சிலர் சந்தித்தது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். வேறுசில சந்தோசமான சந்திப்புகள் பற்றியும் வலைப்பதிவுகளில் வாசித்த ஞாபகம். இன்று மூர்த்தி நேற்று சிங்கப்பூரில் வலைப்பதிவாளர்களில் சிலர் சந்தித்தது பற்றி மிகவும் அழகாகவும் விளக்கமாகவும் எழுதியுள்ளார். (கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கிறது.)

உயிரோடு திரும்புவேனா..?


இன்று நாம் நினைத்ததும் தாயகம் சென்று திரும்புகிறோம். அப்படிச் செல்ல முடியாத ஒரு நிலை அன்று இருந்தது. அந்தப் பொழுதில் நான் என் குழந்தைகளை யேர்மனியில் விட்டுவிட்டு போர்முகம் காட்டி நிற்கும் என் தாயகத்தை நோக்கிப் பயணித்த போது என்னுள் எழுந்த உணர்வுகளில் ஒரு துளி.
1997 மார்கழியில் தாயகம் சென்ற போது...

யேர்மனிய மண்விட்டு மேலெழுந்து
விண்ணோக்கி முன்னேறும் விமானத்துள்...
"உயிரோடு திரும்புவேனா - நான்
உயிரோடு திரும்புவேனா...?"
அலைமோதும் எண்ணங்கள்
நெஞ்சில் சதிராட நான்...

கருவோடு உருவாகி
உயிரோடு உறவாடும் - என்
உதிரத்து உறவுகளை
யேர்மனியில் விட்டு வரும் பரிதவிப்பு
அவர்கள் சிறகிழந்து விடுவார்களோ
என்ற பதைபதைப்பு

சின்ன வயசிலே
சிட்டாகப் பறக்கையிலே
தொட்டுப் பார்க்க ஆசைப்பட்ட
பட்டு மேகங்களினூடே
விமானம் வட்டுமிட்டுப் பறக்கையிலே
மேகத்தைத் தொட்டுப் பார்க்கவோ
ஒரு மெட்டுக் கட்டவோ
சொட்டுக்கூட ஆசையின்றிய படபடப்பு
"உயிரோடு நான் - என்
உதிரத்து உறவுகளிடம் திரும்புவேனா...!"
என்ற பயத்துடிப்பு

கருக்கொண்ட நாள் முதலாய்
கர்ப்பப்பையில் காத்து
வெளிவந்த பின்னாலும்
அன்புச் சிறகுகளினால் அணைத்த
அம்மாவையும்
உயிரோடு போராடும் கனமான வேளையிலும்
என் முகங்காண ஏங்கி நிற்கும்
அப்பாவையும் பார்க்க
விழி சிவந்து
மனம் கசிந்து
பயணிக்கும் என்னுள்ளே படபடப்பு
"என் உதிரத்து உறவுகளிடம்
உயிரோடு திரும்புவேனா...!"
என்ற பரிதவிப்பு

கடல் தாண்டி மலை தாண்டி
பனி தாண்டி வெண்முகில் தாண்டி
தரையிறங்கும் விமானத்துள் சலசலப்பு
கரை வந்த அலை வந்து
மனம் தொட்ட சிலுசிலுப்பு
அங்கோடி இங்கோடி
வயிற்றிற்கோர் வழிதேடி
மீண்டும் தாயின் இறகுக்குள்
ஒழிந்து கொள்ளும் உயிர்த்துடிப்பு

இருந்தும்...
"உயிரோடு திரும்புவேனா - நான்
உயிரோடு உயிரோடு திரும்புவேனா...?"
அலைமோதும் எண்ணங்கள்
என் நெஞ்சோடு...

சந்திரவதனா
12.12.1997

Thursday, February 10, 2005

விருட்சமாய்...


முன்னரெல்லாம் அடிக்கடி வலைவலம் வந்து ஒரு சில பதிவுகளைப் பற்றியாவது எழுதுவேன். இப்போதெல்லாம் அதற்கு அவசியமே இல்லாது காசி எல்லா வேலைகளையும் தமிழ்மணத்திலேயே செய்து வைத்திருக்கிறார். தலைபத்து ஆக்கங்கள், மறுமொழியப்பட்ட இன்றைய ஆக்கங்கள், மறுமொழியப்பட்ட முந்தைய நாள் ஆக்கங்கள் , இன்று புதிதாய் எழுதப்பட்டவை... என்று எல்லாவற்றையும் சுலபமாகப் பார்க்க முடிகிறது. (ஆனாலும், எனக்கு யாராவது மறுமொழிந்தாலும் அது அங்கே காட்டப்படுவதில்லை. அதன் காரணம் தெரியவில்லை.) சரி விடயத்துக்கு வருகிறேன்.

இந்த வாரம் நான் வலைப்பூ நட்சத்திரமாக இருந்து கொண்டு ஒரு வலைப்பதிவைப் பற்றியாவது எழுதாவிட்டால் நன்றாக இருக்காதே என நினைத்துக் கொண்டு, தினமும் காலை எழுந்ததும் தேநீரையும் தயாரித்துக் கொண்டு வந்து கணினிக்கு முன்னால் இருந்து கொண்டு வலைப்பதிவுகளை வலம் வருகிறேன். ம்கும்... விருட்சமாய் விரிந்திருக்கிறது வலைப்பூ உலகம்.

எத்தனை தரம் சுற்றி விட்டேன். அதில் ஒரு கடி இதில் ஒரு கடி என்று கடித்து, ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவி, எங்கிருந்து தாவினேன் என்பதை மறந்து, அப்படியே சுற்றித் திரிந்து விட்டு நேரத்தைப் பார்த்தால் அது எங்கே எனக்காக நிற்கப் போகிறது. வழக்கம் போல் அது ஓடி விடுகிறது. சுவையான பல விடயங்களை மனசுக்குள் அசை போட்டுக் கொண்டு போனால் மீண்டும் வந்து கணனி முன் அமர்ந்து..... வழக்கம் போல் அதில் ஒரு கடி இதில் ஒரு கடி என்று கடித்து, ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவி...

பார்ப்போமே..! எனது இந்த வாரம் முடியுமுன்னர் ஒன்றிரண்டு பதிவைப் பற்றியாவது எழுதுகிறேனா என்று..

சிரிக்க முடிஞ்சால் சிரியுங்கள்.
பாலாவை வலைஉலகத்திலிருந்து வெளியில் அனுப்ப பலர் காத்திருக்கிறார்களாம்.

இதையும் கண்டிப்பாகப் பாருங்கள்

செட்டை கழற்றிய நாங்கள்


இது 2002 இல் எழுதப்பட்டு 17.2.2002 இல் IBC தமிழில் ஒலிபரப்பானது

"செட்டை கழற்றிய நாங்கள்" எனது பார்வையில்


95 இல் பதிவாக்கப் பட்ட ஒரு கவிதைத் தொகுதி ஆறு வருடங்கள் கடந்து ஏழாவது வருடம் என் கரம் வந்து குந்தியதில் எனக்கு நிறையவே மகிழ்ச்சி.

செட்டை கழற்றிய நாங்கள் - கவிதைத் தொகுப்பின் தலைப்பே ஒரு கவிதை போல - ஆனால் சோகத்தைத் தனக்குள்ளே நிரப்பி வைத்திருப்பது போன்றதொரு பிரமையை எனக்குள் தோற்றுவித்தது.

சிறிய தொகுப்பு ஆனாலும் தனக்குள்ளே புலம்பெயர் அவலங்களையும், புலம் பெயர மறுத்த நினைவுகளையும் நிறைத்து வைத்திருக்கிறது தொகுப்பு.

இக்கவிதைத் தொகுப்பு இருப்பை இடம் பெயர்த்து சுவிசுக்கு மாற்றி விட்டு, அங்கு விருப்போடு அமர முடியாது தவிக்கும் பாலமோகன் எனப்படும் ரவியின் கவிதைகளால் தொகுக்கப் பட்டுள்ளது.

1995 இல் பதிக்கப் பட்ட இத் தொகுப்புக்கான முகவுரையை அ.மார்க்ஸ் அவர்கள் எழுதியுள்ளார்.

தற்போதைய புலம்பெயர் தமிழர்களின் நிலையை விட ஆரம்பகாலப் புலம் பெயர் தமிழர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாகவே இருந்தது. அதை நான் முன்பும் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தேன்.

அந்தப் பரிதாபத்துக்குரிய புலம் பெயர் தமிழர்களில் இந்தக் கவிதைத்தொகுப்பின் கவிதைகளைப் புனைந்த பாலமோகன் ஆகிய ரவி அவர்களும் ஒருவர் என்றே எனக்குத் தோன்றுகிறது. புலம் பெயர்வு அவருக்குள் ஒரு புயலையே ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

சொந்த மண்ணின் நினைவுகள் அவரை மிகவும் அலைக்கழித்திருப்பது அவர் வடித்த கவிதைகளின் வீச்சில் தெரிகிறது. மிகவும் தரமான கவிதைகள். இன்னதென்று பிரித்துச் சொல்ல முடியாத படியான ஒரு ஆழ்ந்த தேர்ச்சியும் நிறைவான வளமும் அவர் கவிதை நடையில் தெரிகிறது.

அவர் கவிதைகளை வாசிக்கும் போது, நீண்ட நாட்களாகக் கவிதை எழுதுவதையே மறந்து உறங்கியிருந்த எனது கற்பனைப் பறவை மெல்ல இறகு விரிக்க எத்தனிக்கிறது. உறைந்து போயிருந்த என் பேனாமை மீண்டும் ஊற்றெடுக்கத் தொடங்குவது போல ஒரு ஆனந்தம் எனக்குள்.
ஏதோ ஒரு சக்தி அவர் கவிதைகளுக்குள் இருப்பதை என்னால் உணர முடிகிறது. அதை எழுத்தில் வடிக்கத்தான் என்னால் முடியவில்லை.
எழுத்தார்வமும் வாசிப்புத்தாகமும் கொண்டவர்கள் கண்டிப்பாக இத் தொகுப்பை வாசித்துப் பார்க்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

ரவி தன்னுரையில் இப்படிச் சொல்கிறார்.-

இது எனது முதல் கவிதைத் தொகுதி. சுமார் ஐந்து ஆண்டு கால இடைவெளிக்குள்ளான கவிதைகள் இவை. கடந்தகால கசப்பான சமூக அனுபவங்கள் - இதன் தாக்கங்கள், வேரறுந்த இன்றைய அகதி வாழ்வு என்பன உணர்வு நிலையில் - இந்நிலைமையிலுள்ள எல்லோரையும் போலவே - என்னைப் பாதிக்கிறது. இவற்றைக் கவிதையில் பதிவு செய்வது திருப்தி தருகிறது.

என்று தொடங்கி .....தொடர்ந்து

கவிஞனின் உணர்வு நிலை உயர்ந்தது. அதை அர்த்தப் படுத்துவதற்கு வாழ்வியல் விதிமுறைகள் மீதான புரிதல்கள், தேவையாயின் அதன் மீதான தாக்குதல்கள் கூடத் தேவை. ஆதிக்க சக்திகள் மறறும் அதன் நிறுவனங்களால் (அரசு, மதம், குடும்பம், பாடசாலை.....) கட்டமைக்கப் பட்ட கருத்தியல்கள் - புனைவுகள் மற்றும் வாழ்வியல் விதிமுறைகள் எல்லாவற்றையும் இயல்பானது என்று ஏற்றுக் கொள்ளும் ஒருவனின் உணர்வு நிலை கவலையையும் விரக்தியையும் தாண்டிவிடப் போவதில்லை. எனது கவிதைகளும் இவற்றை முழுமையாய்த் தாண்டியதாயில்லை.

என்று முடித்திருக்கிறார்.

இவரின் கவிதைகளில்
சிறுவயது நினைவுகள், கனவுகள், இளமைக்கால பசுமையோடு பின்னிப் பிணைந்திருந்த தாயக ஏக்கங்கள், புலம்பெயர் மண்ணில் அந்நாட்டு மக்களது அந்நியன் என்றதான பார்வைகளை எதிர் கொள்ள முடியாத தவிப்பு,
நிறம் ஒரு குறையாக அவர்கள் பார்வைக்குள் தான் குறுகிப் போனதிலான இயலாமையுடனான கோபம்....... என்று பலவிதமான ஆற்றாமைகள் புதைந்து கிடக்கின்றன. அவைகளை எழுதிய விதம் மிகவும் அழகாக, கவிதைக்கே உரிய கவர்ச்சியுடன் மீண்டும் மீண்டும் அவைகளை வாசிக்கத் தூண்டுகின்றன.

புலம்பெயர்ந்தவர்கள் ஊரில் உள்ளவர்களுக்குப் பணமனுப்ப வேண்டிய ஒரு கட்டாய அவஸ்தையில் தம்மைத் தொலைப்பதைக் கூட அவர் கவிதையாக்கத் தவறவில்லை. அது பற்றியதான யாரொடு நோக..... என்ற கவிதையிலிருந்து ஒரு சில வரிகள் -

நித்திரைப் பாயில் வைத்தே அமத்தும்
இந்த கொழும்பு ரெலிபோன் க்கு
விவஸ்தையே கிடையாது.
தனது காலில் தட்டுப் படும் எல்லாவற்றையும்
உதைத்து நொருக்கி
இருளில்
என்னை வந்து உலுக்கி எழுப்புகிறது.
மொட்டவிழும் போலிருக்கும்
என் சின்னச் சின்ன ஆசைகளைக் கூட
நுனிவிரலால் கிள்ளி எறிந்த படி
கைவீசி வருகிறது - ஒரு குழந்தைபோல்!
என்னால் கோபிக்கக் கூட முடிவதில்லை.
கடைவாயால் ஒழுகும் சிரிப்பும்
தேவைகளும்
எனது உழைப்பை அதிகம் கேட்டு
சுற்றி நின்று தொந்தரவு செய்யும்...........

சிலவேளைகளில் அது
நிதானமாய் வருவது போல
குரல் கொடுத்த படி வரும்.
எனக்கும் எனது அத்தான்மாருக்குமிடையில்
கால் மீது கால் போட்டு
அனுபவஸ்தன் போல் அமர்ந்து கொள்ளும்.
அத்தான்மாரின் புதியவிலை கேட்டோ
அல்லது பாக்கி விலை கேட்டோ
பேச்சைத் தொடங்கும்.
போதாததிற்கு தன்னுடன் யதார்த்தத்தை
அழைத்து வருகிறது,
தலையாட்டுவதற்காக.
எனது நியாயங்களை
இருவருமாய்த் தின்றுதீர்ப்பது
அத்தான்மாருக்கு மகிழ்ச்சியளிக்கிறது -
எனது சகோதரிகளுக்குங் கூடத்தான்!

காலைப் பொழுது என்னை எடுத்துப்
பிணைத்துக் கொள்வதில் அவசரப்படுத்தும்
நானோ இவர்களுக்கு வழி சொல்லியாக வேண்டும்.
இந்த இழுபறியில்
எனது இடைவெளி நேரங்களும்
விழுந்து நொருங்கும்.


30 கவிதைகளைத் தன்னகத்தே கொண்ட இக்கவிதைத் தொகுதியில்
ஒவ்வொரு கவிதைக்குள்ளும் உயிரோட்டமான ஒவ்வொரு விதமான உணர்வுகளும் நெகிழ்வுகளும் நிகழ்வுகளும் இருக்கின்றன.

மெழுகுதிரியில் அமர்ந்திருக்கும் தீபத்தைக் கூட அவர் விட்டு வைக்கவில்லை. அந்தத் தீபத்தின் மீதான அவரது பிரசவிப்புகள் என்ற கவிதை சுவையானது. சுகமானது. ஆனால் ஆழ்ந்து கருத்தை உணர்ந்து வாசிக்கும் போது இருப்பை இழந்த அவரது சோகம் தெரிகிறது.
(பக்கம் - 39-40)

பிரசுரமாகும் கடிதம் என்ற கவிதை - 83 யூலைக் கலவரத்தில் தமிழர் கப்பலேற்றப் பட்ட போது - ஒரு சிங்களப் பெண்ணுடனான சினேகமான உறவும் கப்பலேற்றப் பட்டதைச் சொல்கிறது.

இப்படியே இவரது ஒவ்வொரு கவிதையும்.... அர்த்தங்களுடன் கவிதைநயம் குன்றாமல் அருமையாகப் புனையப் பட்டுள்ளது.

இருந்தாலும், இத்தொகுப்பைப் பற்றியதான எனது அபிப்பிராயத்தின் ஒரு துளியையே என்னால் இங்கு தரமுடிந்தது. அது ஒரு குறையாக அமையாது என்ற நம்பிக்கையுடன் தற்போதைக்கு முடிக்கிறேன்.

சந்திரவதனா
யேர்மனி

காதுக்க முணுமுணுக்காதே


அந்த வீட்டுக்கு விருந்தினர் வந்திருந்தனர். உரையாடிக் கொண்டிருந்த தந்தையின் காதுக்குள் மகன் எதையோ கிசுகிசுத்தான்.

தந்தை:
காதுக்குக் கிட்ட வந்து முணுமுணுக்காதேடா
கெட்ட பழக்கம.; என்ன விசயம் எண்டு உரக்கச் சொல்லு.

மகன்:
(சத்தமாக) கோப்பி குடியுங்கோ எண்டு அவரைக் கேட்க வேண்டாமாம். வீட்டிலை பால் இல்லையாம்..... அம்மா சொல்லச் சொன்னவ.
- மதன் ஜோக்ஸ் -

மனிதநேயம்

சில வாரங்களுக்கு முன்பு, சுனாமி அனர்த்தங்களின் பின்பு, என் வீட்டு அழைப்புமணி ஒலித்தது. போய்ப் பார்த்த போது நான்கு யேர்மனியச் சிறுவர்கள் உண்டியலுடன் நின்றார்கள். "சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப் பட்ட சிறீலங்கா மக்களுக்கு காசு சேர்க்கிறோம்." என்றார்கள்.

தமது வயதிற்கேயுரிய விளையாட்டுக்கள், கேளிக்கைகளை விடுத்து அவர்கள் மனித நேயத்துடன் பணம் சேர்த்ததைப் பார்த்த போது சந்தோசமாக இருந்தது.

அவர்கள் மட்டுமல்ல. சுனாமி அனர்த்தங்களின் பின்னர் அனேகமான யேர்மனிய மக்கள் நடந்து கொண்ட விதம் அவர்களது இரக்க சுபாவத்தையும், மனிதநேயத்தையும் எடுத்துக் காட்டியது.

எங்கு சென்றாலும் - வீதிகளில், பேரூந்திகளினுள், வேலையிடத்தில்... என்று அவர்களது அனுதாபமான விசாரிப்புகளும், பணம் சேர்த்து அனுப்பும் செயற்பாடுகளும் மனதைத் தொட்டன. வீடு தேடி வந்து கூட துக்கம் விசாரித்துச் சென்றார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னான எமது நகரப் பத்திரிகையில் அந்தச் சிறுவர்கள் இரண்டாயிரத்துச் சொச்ச யூரோக்களைச் சேர்த்து ஒரு தேவாலயத்தினூடாக சிறிலங்காவுக்கு அனுப்பியுள்ளார்கள் என்ற செய்தி இருந்தது.

தொடர்ந்தும் சுமத்திரா இந்தியா போன்ற இடங்களுக்கும் சேர்க்கப் போகிறார்களாம்.

போதுமானவை


இது எனது கவிதை அல்ல.
1998 இல் ஆனந்தவிகடனில் பிரசுரமான இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருந்ததால் இதை பத்திரப் படுத்தி வைத்திருந்தேன். படித்துப் பாருங்கள் சிலசமயம் உங்களுக்கும் பிடிக்கலாம்.


அவர் இவர் என்று ஆட்களைப் பற்றி
உதட்டைத் திறந்து உட்கார வராதீர்கள் என்னிடம்......!

பூக்களைப் பற்றிப் பேசத் தெரிந்தால் வாருங்கள்!
நமது நேரமும் மணக்கும் - அன்றியும்
பொய்கள் சொன்னதாய் பூக்களைப் பற்றிக்
குறை கூற முடியாது உங்களால்!

அவர் இவர் என்று நபர்களைப் பற்றி
நாக்கை அசைக்க வாராதீர்கள் என்னிடம்......!
நல்லபடி தொடங்கி - மூன்றாவது வாக்கியத்தில்
முட்களை மூடி வைப்பீர்கள்

வானவில் பற்றி உங்கள் வசம் வார்த்தைகள் உண்டா?
அப்படியானால் அள்ளி வாருங்கள்!
நம் உரையாடலுக்கும் வண்ணங்கள் கிடைக்கும் - அன்றியும்
கட்சி மாறியதாய்க் கட்டாயம் உங்களால்
அதன் மேல் களங்கம் கற்பிக்க முடியாது!

அவர் இவர் என்று எவர் பற்றியும்
பேச வராதீர்கள் என்னிடம்......!
ஆரோகணத்தில் அவரை ஆலாபனை செய்து
அவரோகணச் சேற்றில்
மூச்சுத் திணறப் புதைத்து விடுவீர்கள்.

அருவியை நதியை கடலை அறிவீர்களா?
உரையாட இவை பற்றிக் கருத்திருந்தால் வாருங்கள்!
நம் அனுபவ நரம்புகளும் குளிரும் - அன்றியும் அவை
இளிச்சவாயர்கள் கால்களை இடறி விட்டு ஏற்றம் பெற்றதாய்
புகார் செய்ய முடியாது உங்களால்!

ஆகவே........
அவர் இவர் என்று ஆசாமிகள் பற்றியல்லாது
பேச முடியாதெனில்
வராதீர்கள் என்னிடம்........

- தமிழன்பன் -
நன்றி - ஆனந்தவிகடன்

பூவரசு போட்டி முடிவுகள்

கடந்த வருடம் யேர்மனியிலிருந்து வெளியாகும் பூவரசு இனியதமிழ்ஏடு நடாத்தும் போட்டி பற்றி அறிவித்திருந்தேன். புதியவர்கள் பலரும் உலகளாவிய ரீதியில் இப்போட்டியில் கலந்து கொண்டதை அறிய முடிந்தது. சந்தோசமான விடயம்தான்.

6.2.2005 அன்று யேர்மனியின் பிறேமன் நகரில் பூவரசின் 15வது ஆண்டு மலர் வெளியிட்டு வைக்கப் பட்டுள்ளது.

போட்டி முடிவுகள்



Wednesday, February 09, 2005

தத்துவம்


"உன்னைக் கொடு
என்னைத் தருவேன்"
காதலிக்கையில்

"உன்னைக் கட்ட
என்ன தருவாய்"
கல்யாணத்தில்

"உன்னைக் கட்டி
என்ன கண்டேன்"
தொடரும் வாழ்வில்

சந்தோசமான சம்பவம்

காதலர்தினத்துக்காக காதல் கொண்ட மனங்கள் பூக்களுடனும் கவிதைகளுடனும் காத்திருந்த வேளையில் இங்கு யேர்மனியில் ஒரு சந்தோசமான சம்பவம் நிகழ்ந்தது. காதலர்தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 2000இல் நடந்த அந்த சம்பவம் எனது நினைவில் வந்துள்ளது. அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.

Schweiz எல்லைக்கு அருகாமையில் யேர்மனியின் Badzeckingen என்ற நகரிலே வாழ்ந்து கொண்டிருந்த இலங்கையரான சுதந்திரராஜா என்பவருக்கு ஒரு சந்தோச அதிர்ச்சி கிடைத்தது.

சுதந்திரரராஜா 5 வருடங்களாக மனைவி குழந்தைகளைப் பிரிந்து தனியே Badzeckingen இல் வாழ்ந்துகொண்டிருந்தார். அவர் தனது சகவேலையாட்களுடன் மிகவும் நட்பாகப் பழகுவது மட்டுமல்லாது, தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு எந்த வித பிரதியுபகாரத்தையும் எதிர்பாராது எப்போதும் உதவி செய்து கொண்டும் இருப்பாராம். அவரது இந்த நல்ல குணத்தினால் அவர் மேல் பிரியம் வைத்திருந்த அவரது சகவேலையாட்கள், அவரது மனதில் உள்ள கவைலையத் தீர்க்க விரும்பினார்கள்.

அவரது கவலை - குடும்பத்தைப் பிரிந்த எல்லா இலங்கையர் போலவும் தன் மனைவி குழந்தைகளை தன்னிடம் அழைக்க வேண்டுமென்பதே. அதற்கு அவருக்கு தடையாக இருந்தவை வீடும், பணமுமே. அதாவது இங்கு யேர்மனியில் ஒருவர் தனது மனைவி குழந்தைகளை தன்னிடம் அழைக்க வேண்டுமென்றால், அவரிடம் அவர்கள் வாழ்வதற்குப் போதுமான அளவைக் கொண்ட (வாடகை வீடே போதும்) வீடும், அவர்கள் வாழ்க்கைச் செலவுக்குத் தேவையான அளவு உழைப்பும் இருக்க வேண்டும். அவை அவரிடம் இருக்கவில்லை.

அவரது இந்த இக்கட்டையும், மனத்துயரையும் கண்டு அவர் துயர் நீக்க விரும்பிய அவரது சகவேலையாட்கள்(யேர்மனியர்), அவருக்குத் தெரியாமலே யேர்மனியின் தொலைக்காட்சிச் Channel களில் ஒன்றான SAT-1 நடத்தும் Nur die liebe zaehlt என்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு இவரைப் பற்றி எழுதிப் போட்டார்கள்.

கிடைத்ததே அதிர்ஸ்டம் சுதந்திரராஜாவுக்கு.

நிகழ்ச்சித்தயாரிப்பாளர்களின் ஏற்பாட்டின் படி காதலர்தினத்துக்கு முதல்நாள் சக வேலையாட்களால் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு இவர் அழைத்து வரப் பட்டார்.
வெறும் பார்வையாளராக வந்திருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த சுதந்திரராஜாவை அவர்கள் திடீரென முன்னுக்கு அழைத்து, அவருடன் சிறிது உரையாடிவிட்டு சகலவிதமான புதிய தளபாடங்களும் போட்ட வீடு ஒன்றைக் கொடுத்தார்கள். சில நிமிடங்கள் கழித்து அவரது மனைவி குழந்தைகளை அழைத்து அவர் முன் நிறுத்தினார்கள். ஏதிர்பாராது அந்த சந்தோச அதிர்ச்சியில் நெக்குருகிப் போனவர்கள் சுதந்திரராஜாவின் குடும்பத்தவர்கள் மட்டுமல்ல பார்வையாளர்களும்தான்.

அது மட்டுமா!
காதலர்தினத்திலிருந்து இரு வாரங்களுக்கு வேலையிலிருந்து விடுப்பும் எடுத்துக் கொடுத்திருந்தார்கள்.

சுதந்திரராஜா அந்நிய நாட்டில் அன்பானவராயும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவராயும் வாழ்ந்ததற்கான பயனை உடனேயே பெற்றுக் கொண்டார்.

இப்போது எப்படி இருக்கிறார் என்று அறிவதில் எனக்கு ஆர்வம் இருக்கிறது.
அவராக வந்து சொன்னால்தான்.....

ஒரு சின்ன அதிசயம்

எங்கள் வீட்டுக்குள் ஒரு சின்ன அதிசயம் நடந்தது.
உங்களுக்கு எப்படியோ...? எனக்கு இது அதிசயம் போலத்தான்.

அதாவது
எனது அண்ணன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
அண்ணி பிறந்தநாள் டிசம்பர் 10ந் திகதி.

7வருடங்கள் கழித்து தம்பியின் திருமணம்.
அம்மா அப்பா பெண் பார்த்து (பேச்சுத் திருமணம்) திருமணம் நடந்தது.
தம்பியின் மனைவி பிறந்தநாளும் டிசம்பர் 10ந் திகதியே.

அது மட்டுமா..!!!
இருவரின் பெயரும் மஞ்சுளா.

பெயரும் பிறந்தநாளும் ஒன்றாக மருமகள்கள் எங்கள் வீட்டில்.

Tuesday, February 08, 2005

இது சுயநலமா?


அண்ணி தொலைபேசியில் அழைத்து "பரதன் இயக்கத்துக்குப் போய் விட்டான்" என்ற போது சுயநலமாக மனசு அழுதது. அவன் எனது அண்ணனின் மூன்றாவது மகன்.

"பன்னிரண்டே வயசுதானே! ஏன் போனான்? நன்றாகப் படிப்பானே! அண்ணி அனுப்பி வைக்கும் படங்களிலிலெல்லாம் துருதுருவென்ற விழிகளுடன் என்னைப் பார்ப்பானே! எனக்கு அழுகையாக வந்தது. இப்ப என்ன அவசரம் வந்து போனான்..?" மனசு கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டது.

அண்ணியை நினைக்கத்தான் பாவமாக இருந்தது. என் வயதுதான். அதற்கிடையில் அண்ணனையையும் இழந்து பிள்ளைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் தனியாக நிற்கிறா. அவவின் தழுதழுத்த குரல் அடிக்கடி மனசில் மோதியது.

இரண்டு கிழமைகளாக இதே நினைவுகள் என்னுள் அலைமோதி மனசை அலைக்கழித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் அண்ணியின் தொலைபேசி "அவன் திரும்பி வந்திட்டான்." சந்தோசம் கலந்த அழுகை பீறிட்டது.

"எப்பிடி வந்தவன்? போய்க் கூட்டிக் கொண்டு வந்தனிங்களோ...? "

"இல்லை அவையள்தான் திருப்பி அனுப்பீட்டினம். 12வயசிலை சேரேலாது..." எண்டு சொல்லி.

எனக்கு போன நிம்மதி திரும்பி வந்தது.

இதையும் விட கடுமையாக...

அன்று 26ந் திகதி. சுனாமி அலைகளோடு வந்த செய்திகளில் வற்றாப்பளை தேவாலயத்துக்குச் சென்ற அத்தனை பேரையும் கடல் கொண்டு சென்று விட்டது என்ற செய்தி மனதை இடித்தது. அண்ணி ஒவ்வொரு ஞாயிறு காலையும் தனது பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு அந்தத் தேவாலயத்துக்குப் போவது நாமறிந்த விடயம். அன்றும் அவ போயிருப்பா என்ற எண்ணம்தான் என்னையும் எனது குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரையும் நிலைகுலைய வைத்தது.

தொலைபேசியோடு போராடினோம். தொடர்புகள் கிடைக்கவேயில்லை. அம்மா செய்வதறியாது மலைத்துப் போய் இருந்தா.

இரண்டுநாள் கழித்துத்தான் தொடர்பு கிடைத்தது.
அன்று(26ந் திகதி) மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அண்ணி தேவாலயத்துக்குப் போகாமல் மருத்துவரிடம் சென்றிருந்தா.

அத்தனை அனர்த்தங்களின் மத்தியிலும் ஒரு அசாதாரண நிம்மதியில் மனது குதூகலித்தது.

சமையல்

சமையல் என்பது ஒரு கலை என்ற எண்ணத்திலிருந்து வழுவி அது பெண்களின் தலையில் திணிக்கப் பட்டு சமையலும் அட்டில்கூடமும் பெண்களுக்குச் சொந்தமான விடயங்கள் போன்ற பிரமை ஏற்படுத்தப் பட்டு பலபெண்கள் தமது திறமைகளை காலங்காலமாய் அட்டில்கூடத்துக்குள்ளேயே முடக்கி விட்டார்கள்.

இன்றைய காலகட்டத்தில் இந்த நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டு ஆண்களும் சமையலில் மனதோடு ஈடுபடுகிறார்கள். ஆனாலும் அது பெண்களின் வேலையாகவே கருதப் படுகிறது.

உண்மையில் சமையல் என்பது ஒரு கலை. முந்தைய காலங்களில் ஆண்கள்தான் இக்கலையில் சிறந்து விளங்கியதாகப் பலர் கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த வரையில் நளபாகம் என்பது ஆண்களின் சமையல் திறனுக்குச் சாட்சியாக இருக்கிறது.

சமையல் என்பது, "இது உனது வேலை" என்று சொல்லாமலே சொல்லி, ஒரு பெண்ணிடம் திணிக்கப் படும் போதுதான் அதன் சுவை குறைகிறது. கைக்குக் கை ருசி வேறுபட்டாலும் மனஈடுபாட்டுடன் செய்யும் போதுதான் சமையல் சமையலாகிறது.

எனக்கு சமைப்பதை விட ருசிப்பதில்தான் ஆர்வம் அதிகம். ஆனாலும் சில உணவுகளை வலைப்பதிவுகளிலிருந்து எடுத்து செய்து பார்த்துச் சுவைத்திருக்கிறேன். (குறிப்பாக இனிப்பு வகைகளை)

எத்தனை விதமான Chocolatesதான் இங்கு ஐரோப்யியாவில் இருந்தாலும் எங்கள் ஊர் சர்க்கரை போட்டுச் செய்யும் இனிப்பு வகைகளின் சுவைக்கு இந்தச் Chocolates ஈடாக மாட்டா.

அந்த வகையில் நான் வலைப்பதிவிலிருந்து கண்டெடுத்து சுவைத்தவற்றில்
இந்துராணி கருணாகரனின் வட்டிலப்பம் மிகவும் தித்திப்பானது.

இன்று காசி முட்டையில்லாத வாழைப்பழகேக் செய்யும் முறையைத் தந்துள்ளார். செலவு அதிகமில்லாத கைவசமுள்ள பொருட்களோடு செய்யக் கூடிய உணவு என்பதால் செய்து பார்க்கும் (பார்ப்பதல்ல சுவைப்பது.)எண்ணமும் உடனேயே வந்துள்ளது.

இளவரசி டயானா


(diana)தனிப்பட்ட வாழ்க்கையைக் கிளறித்தான் சாதனைகளை அளவிட முடியுமா?

இளவரசி டயானா இளவரசியாக மட்டும் இராது ஒரு சமூகசேவகியாகவும் இருந்தார். அவரை சாதனைப்பெண்கள் பட்டியலில் ... நான் சேர்த்தேன். அது தவறு என எல்லாளன் தனது கருத்தைப் பதித்துள்ளார்.

எல்லாளனின் கருத்து
டயனா குறித்து எனக்குத் தவறான அபிப்பிராயம் எதுவும் கிடையாது. ஆனால் அவர் நீங்கள் காண்பிக்கும் அளவிற்கு இரக்கப்படவேண்டியவர் அல்ல என்பது என் கருத்து! 'சார்ள்ஸ்" தாழ்வு மனப்பான்மை உடையவர் (இதுவும் என் கருத்து). அதனால்த்தான் டயனா மக்களுக்குள் அழகு தேவதையானதை அவரால் சகிக்க முடியவில்லை. இந்த நேரத்தினை கமிலா சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டார். இருப்பினும் டயானா விவாகரத்துப் ""பெற முன்னரே"" பலருடன் 'மன்னிக்கவும்" சிலருடன் 'நெருக்கமாக" இருந்தவர் (சார்ள்ஸ் நல்லவரோ என்பது இங்கே தேவை இல்லாத பேச்சு.) அதனால்த்தான் மகன் Harryயின் தலைமுடியினை இரண்டு வருடங்களுக்கு முன் D.N.A பரிசோதனைக்கு அனுப்பினது 'ராணிமாளிகை" (உள்ளுர்ப் பத்திரிகையில்ப் படித்தேன்). ஆக மறுபடியும் சொல்லுகிறேன். எனக்கு டயானா மீது தவறான அபிப்பிராயம் இல்லை, வெள்ளைப் பெண்மணி என்ற வரையறைக்குள் பார்க்கிறபோது மட்டும் (குறிப்பிட நினைப்பது 'நெருக்கமான உறவுகளை"). ஆனால் எங்களுக்கு (தமிழர்) அவரை சாதனை படைத்தவர் என்று உதாரணத் தாரகை ஆக்குவதில்த்தான் உடன்பாடு இல்லை.
எனது கேள்வி
சாதனை படைத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கிளறிப் பார்த்துத்தான் அவர்களின் சாதனைகளை அளவிட முடியுமா?
(டயானாவின் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்மையானவைதானா அல்லது பொய்யானவையா என்பது ஒரு புறமிருக்க... அவை உண்மையாயினும் அவை குற்றந்தானா, இல்லையா என்பதும் அதற்கான தீர்வுகளும் எனக்கு அப்பாற் பட்டவை. குற்றமேயாயினும், அக்குற்றங்களுக்கான காரணிகளும் கவனத்தில் எடுக்கப் பட வேண்டியவை.)

எனது பதிலை நான் எல்லாளனுக்குக் கொடுப்பதற்கு முன் உங்கள் பதில்களை எதிர் பார்க்கிறேன்.

ஏற்கெனவே இருமுறை பதிந்து காணாமற் போனதை மீண்டும் பதிந்துள்ளேன்..

இன்று நான்காவது தரம்

நாடகப்போட்டி முடிவுகள்

ஐ.பி.சி தமிழின் - சமுத்திரா - நிகழ்ச்சியினூடாக நடாத்தப்பட்ட நாடகப்பிரதிகள் போட்டி-2004 பற்றிய முடிவுகள்

1ம் பரிசாக தங்கப்பதக்கம் பரிசு பெறும் நாடகப்பிரதி- "அம்மாவே எல்லாமாய்"
பிரதியை யார்த்தவர்:- திலகன், ஜேர்மனி.

2ம் பரிசாக லண்டன், வெம்பிளி -சரஸ்வதிபவன்- உணவகத்தினர் வழங்கும் 20 பவுண்கள் பெறுமதியான வவுச்சரையும் கலையக விருதினையும் பெற்றுக்கொள்ளும் நாடகப்பிரதி- "எங்கடை பிள்ளைகள்"
பிரதியை யார்த்தவர்:- என்.கிருஸ்ணசிங்கம், நோர்வே.

3ம் பரிசாக ஈழத்து இலக்கிய நூல் ஒன்றினையும் மற்றும் கலையக விருதினையும் பெற்றுக்கொள்ளும் நாடகப் பிரதி- "தமிழ்ச்செல்வி"
பிரதியை யார்த்தவர்:- எஸ்.பாலச்சந்திரன், ஜேர்மனி.

4ம் பரிசாக கலையக விருதினைப் பெற்றுக்கொள்ளும் நாடகப்பிரதி- "நினைவுகளின் ஊர்வலங்கள்"
பிரதியை யார்த்தவர்:- அரியாலையூர் மாலினி வசந்த், ஜேர்மனி.

5ம் பரிசாக கலையக விருதினைப் பெற்றுக்கொள்ளும் நாடகப்பிரதி- "வேர்கள்"
பிரதியை யார்த்தவர்:- கே.எஸ்.அதுல்யகுமாரன், சுவிஸ்

தகவல்:- ஐ.பி.சி யின் ~சமுத்திரா- நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.


Monday, February 07, 2005

இதமான பொழுதுகளில் ஒன்று.

சனி நீராடு என்று சொல்லி ஊரில் சனிக்கிழமைகளில் நீராடுவதும் அதற்கு முன் எண்ணெய் தேய்த்து உடலை மசாஜ் செய்விப்பதுவும் ஆண்களுக்குரிய விடயங்களாகவே இருந்தன.

மசாஜ் செய்விப்பதற்கென்று ஆண்கள்தான் உரிய இடத்துக்குப் போய்வருவதை நான் கண்டிருக்கிறேன். வீடுகளில் கூட காலை அமுக்கி விடுவதும் கையைப் பிடித்து விடுவதும் ஆண்களுக்கே செய்யப் பட்டன.

பெண்களுக்கு இந்த சுகங்கள் தேவையில்லை என்று கருதி விட்டார்களோ என்னவோ..?

தப்பித்தவறி ஒரு ஆண் அதாவது ஒரு கணவன் தனது மனைவிக்கு கால் கை பிடித்து, அதையும் யாராவது பார்த்து விட்டால் போதுமே. ஊர் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரித்தான். மென்று தள்ளி விடுவார்கள்.

ஆனால் வெளிநாடுகளில் அப்படியல்ல. பெண்களுக்கு மசாஜ் அவசியம் என்பது மருத்துவர்களின் கருத்து. ஆண்களுக்கும் கிடைக்கும்தான். ஆனால் பெண்களைத்தான் அடிக்கடி மசாஜ் செய்விக்க அனுப்புவார்கள்.

கணினிக்கு முன் அதிகமாக இருப்பவர்கள், நிறைய எழுதுபவர்கள்... என்பதில் தொடங்கி மனஅழுத்தத்துக்கு ஆளானவர்கள் வரை என்று பலரும் தோள்மூட்டுகளிலும், கழுத்துப் பகுதியிலும் ஏற்படும் இறுக்கத் தன்மையால் பாதிக்கப் படுகிறார்கள். இந்தப் பாதிப்புகள் பெண்களைத் தாக்குவதற்கான காரணிகள்தான் அதிகம் என்பது மருத்துவர்களின் கருத்து. இதற்கு மருத்துவரீதியான உடற்பயிற்சியோடு மசாஜ்யும் அவசியம் என்பதுவும் அவர்களின் கருத்து.

இந்த மசாஜ் செய்விப்பது இருக்கிறதே மிகமிக இதமான ஒரு விடயம். இதற்கென்றே படித்த பெண்கள் (ஆண்களும் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள்தான் இதில் வல்லுனர்கள்) கைவிரல்களினால் மெதுமெதுவாக எமது தோள்களிலும், முதுகிலும் லாவகமாக அழுத்தி குறிப்பிட்ட நரம்புகளையும் மசில்ஸ்களையும் கண்டு பிடித்து.... அது மிக மிக இதமான விடயம்.

இந்தச் சலுகையை நான் தவற விடுவதே இல்லை. அடிக்கடி வைத்தியரிடம் சென்று எனது தோள்மூட்டு இறுகி விட்டதைச் சொல்லி மசாஜ் செய்விப்பதற்கான அனுமதியை எடுத்து விடுவேன். மருத்துவரின் அனுமதியுடன் செய்விக்கும் போது மருத்துவக் காப்புறுதி நிறுவனமே இதற்கான செலவை ஏற்றுக் கொள்ளும். ஒரு சிறுதொகையை மட்டுமே நான் கட்ட வேண்டி இருக்கும். (ஒரு தடவை மருத்துவர் எழுதித் தந்தால் ஆறு தடவைகள் மசாஜ் கிடைக்கும். ஆறு தடவைக்குமாக நான் கொடுக்கும் பணம் ஒரு தடவைக்கான பணத்தை விடக் குறைவாகவே இருக்கும்.) ஆனால் இந்த சலுகைகளை எங்கள் தேசத்துப் பெண்கள் அவ்வளவாகப் பயன் படுத்துவதில்லை. நானோ அந்தப் பொழுதுகளை மிகுந்த ஆத்மார்த்தமான உணர்வுடன் அனுபவிப்பேன்.

இந்த மசாஜ்யை கணவன்மார்கள் கூட மனைவியருக்குச் செய்யலாம். கற்றவர்கள் போலச் செய்ய முடியாவிட்டாலும் களைத்துப் போயிருக்கும் மனைவியின் தோள்களை இதமாக அழுத்தி விடுவது மனைவியின் உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் மிகவும் இதமாக இருக்கும்.

சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு மருத்துவர் சொன்னார் இந்தத் தொடுகைகளே உடலின் முக்கால்வாசி வருத்தங்களைத் துரத்தி விடும் என்று.

இதற்கென்று கற்றவர்கள் அன்றி வேறுயாரும் இப்படியான மாசஜ்களை செய்யக் கூடாது என்று சொல்வார்கள். உண்மைதான். கற்றவர்கள் போல நரம்புகளைத் தேடி அழுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சில சமயங்களில் எலும்புகள் அழுத்தப் பட்டு விடும்.

மௌனமாக..

மனஓசை இன்று முழுக்க மௌனமாகவே இருந்து விட்டது.
ஒரு முக்கிய வேலை இருந்ததால், சில தடவைகள் முயன்றும், மனதை ஒரு நிலைப்படுத்தி இங்கு எதுவும் எழுத முடியாது போய் விட்டது.

அது மட்டுமா இந்த டயானாவின் பதிவு மீண்டும் மீண்டுமாய் என்னுடன் சவால் விட்டுக் கொண்டே இருக்கிறது. அப்பதிவுக்கு பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை. சரியென்று மனஓசையைப் பதிந்து உள் நுழைந்தால் அப்பதிவையே காணவில்லை. இந்த இலட்சணத்தில் இனி நான் பதியப் போகின்றவை என்ன ஆகுமோ..?

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite