Wednesday, March 31, 2004

நாட்டாமை

இன்று எதேச்சையாக நாட்டாமையின் பக்கம் போக நேர்ந்தது.
ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ஒவ்வொரு வலையாகப் பார்த்து இங்கு குறிப்பிட்டிருக்கின்றார்.
நல்ல பணிதான்.

பஞ்சாயத்து எல்லாம் நடத்துவார் போல இருக்கு.

Monday, March 29, 2004

பிரபு ராஜதுரை வலைப்பூக்களில்.........

எனது படித்தவை பகுதியை மேலோட்டமாக இல்லாமல் சற்று ஆழ்ந்து வாசித்து தனது கருத்துக்களை பிரபு ராஜதுரை வலைப்பூக்களில் பதித்திருக்கிறார். அவருக்கு முதலில் நன்றி.

பிரபு ராஜதுரை போலவே இந்தச் சிறுமியின் கஷ்ட நிலையின் போது மருத்துவகாப்புறுதியின் அவசியம் பற்றியே நானும் சிந்தித்தேன். உரியவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதுதான் எனது ஆதங்கம்.

மற்றும் படித்தவை பகுதியில் பதியப் பட்டுள்ள படங்கள் எவ்வகையில் எனக்குப் பிடித்தன அல்லது எவ்வகையில் என்னைப் பாதித்தன என்று குறிப்பிட்டிருந்தால் நல்லது எனவும் குறிப்பிட்டிருந்தார். உண்மைதான். எனது மன உணர்வை அங்கு குறிப்பிடத் தவறி விட்டேன்தான்.


இது எனது மகன் துமிலன் எடுத்த புகைப்படம். பத்திரிகைக்கான ஒரு கட்டுரைக்காக எடுத்திருந்தார். நிலக்கீழ்ப்பாதையின் சுவர்களிலும், தெருவோரச் சுவர்களிலும் பொலிசாருக்கு டிமிக்கி விட்டு விட்டு தெளிக்கப்படும்(spray) இவ் வர்ணங்கள் என்னை எப்போதும் கவர்வனவாகவே இருந்துள்ளன. தெருவோரச் சுவர்களில் இப்படி வர்ணம் தீட்டுவதற்கு யேர்மனியில் சட்டப்படி அனுமதி இல்லை. ஆனாலும் சில ஆர்வலர்கள் பணம் செலவழித்து வர்ணம் வாங்கி, நேரம் செலவழித்து இதைச் செய்கிறார்கள். அவர்களில் ஒருவருடன் எனது மகன் துமிலன் நேர்காணல் ஒன்றைச் செய்திருந்தார்.

இதில் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் இந்த நபரை எந்தக் கட்டத்திலும் பொலிசாருக்கு இனம் காட்டக் கூடாது.

இது பற்றியதான துமிலனின் கட்டுரை பத்திரிகையில் வெளியான பின் அதையொட்டிய பல எதிர்வினைகள் பத்திரிகைக் காரியாலயத்துக்கு வந்து சேர்ந்து அவையும் பிரசுரமாகின. எதிர்வினை அனுப்பியவர்களில் பலர் புதுமதில் கட்டிய பின் எப்போதோ ஓர் இரவில் அதில் வர்ணம் தெளிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்தவர்களே.


இந்த நபர் யாரென்பதை அறிந்து கொள்வதற்காக பொலிசும் துமிலனை பல தடவைகள் விசாரித்ததுதான். ஒரு பத்திரிகையாளனுக்குரிய தர்மத்தை காரணம் காட்டி துமிலன் இந்நபரைக் காட்டிக் கொடுக்கவில்லை.

ஆனாலும் ஒரு துயரம் நடந்து விட்டது. கடந்த வருடம் ஒரு விளையாட்டுக் குறூப்புடன் ஸ்பெயினுக்குச் சுற்றுலா சென்ற இந்த நபர் விளையாட்டாக ஒரு பந்தயத்துக்காக நச்சுக்காயொன்றை தனது நண்பர்களுக்குச் சாப்பிட்டுக் காட்டி உயிரை மாய்த்துக் கொண்டு விட்டார்.

துமிலனின் கமாரவுக்குள் பிடிபட்ட இவரது மேலும் சில வர்ணத் தெளிப்புகள்.(Graffitie)
---------------------------------------------------------------------------------------------------
அடுத்து

மரத்தை ஒரு முகவடிவில் பக்குவமாக வெட்டிப் பராமரித்திருக்கும் முகம் தெரியாத ஒரு கலைஞனின் நேர்த்தி என்னைக் கவர்ந்திருந்தது. இதைப் புகைப்படம் ஆக்கியவர் யாரென்பது கூட எனக்குத் தெரியாது. அருட்சோதியின் இணையத்தளத்தில் இருந்து பெற்றேன்.

Friday, March 26, 2004

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென.......

(படம்: நீ வருவாயென, பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், இசை:ராஜ்குமார்)

காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிசமும் வருசமடி..

என்கிறார் ஒரு கவிஞர்.
(காதலன் படத்தில் என்னவளே.. அடி என்னவளே..)

உண்மைதான். காத்திருத்தல் என்பது மிகவும் கடினமான விடயம்தான். ஆனாலும் அந்தக் காத்திருத்தலில் ஏக்கம், தவிப்பு, ஆசை இவைகளையும் மீறிய ஒரு இனிமையும் கண்டிப்பாக இருக்கும்.

பிரசவிக்கப் போகும் குழந்தையை எதிர் பார்த்திருக்கும் தாயின் காத்திருத்தல். பிரசவ அறையில் மனைவியை விட்டு வெளியே காத்திருக்கும் கணவனின் காத்திருத்தல், பரீட்சையை எழுதி விட்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்களின் காத்திருத்தல், வேலைக்குப் போய் விட்ட அம்மா திரும்பி வரும் வரை வழிமேல் விழி வைத்து வாசலில் தவமிருக்கும் குழந்தையின் காத்திருத்தல், இரு வேறு நாடுகளிலாய்ப் பிரிந்து போய்விட்டு தாம் சந்திக்கப் போகும் நாளுக்காய் காத்திருக்கும் கணவன், மனைவியரின் காத்திருத்தல், ஒரு பார்வைக்காய், ஒரு சிரிப்புக்காய், ஒரு ஹலோவுக்காய் காத்திருக்கும் காதலர்களின் காத்திருத்தல், என்று இந்தக் காத்திருத்தல் பல்வேறு பட்ட விடயங்களுக்காக இருந்தாலும் உணர்வுகள் அதாவது காத்திருப்பவர்களின் மனங்களின் உணர்வுகள் - தவிப்பு, ஏக்கம், இனிமை, கனவு என்று எல்லாம் கலந்ததாகவே இருக்கும்.

இவற்றில் காதலர்களின் காத்திருப்பைக் கவிஞர்கள் கூறும் விதங்கள் மிக அழகாக அமைந்துள்ளன.

ஊரில் அதாவது தாயகத்தில் காத்திருப்புகள் படுத்திருந்து முகட்டைப் பார்த்த படியோ அல்லது மாமரத்தின் கீழோ வேப்பமரத்தின் கீழோ.... ஏகாந்தத்தில் இருக்கும். ஆனால் இங்கு வெளிநாட்டில் ஐரோப்பிய இயந்திர அவசரத்தில் காத்திருத்தலும் ஏகாந்தமும் வேறு விதத்தில் அமைந்திருக்கும். பல பேர் கொண்ட ஓர் இடத்தில் இருந்து வேலை செய்து கொண்டிருக்கும் போதும் மனம் மட்டும் ஏகாந்தத்தில் எங்கோ சென்று நிற்கும்.

எங்கு நின்றாலும் என்ன செய்தாலும் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் காதல் மனங்களின் காத்திருப்பும, தவிப்பும், ஏக்கமும் ஒன்றாகவே இருக்கும்.

இரவிலே புரண்டு படுக்கையில் ஏற்படும் சிறு விழிப்பில் கூட காத்திருக்கும் மனம் ஏங்கித் தவிக்கும். தூக்கம் கலைந்த பின்னும் ஏக்கத்துடன் தண்ணீரையும் ஊற்றிக் குளித்து, சாப்பாட்டுடன் ஏக்கத்தையும் மென்று விழுங்கி வேலைக்கு ஓடுகையிலும் ஏக்கத்துடன் நினைவுகளையும் கொண்டோடி காத்துக் காத்து யாருக்காக அந்தக் காத்திருப்போ அவரையே மனம் சுற்றிச் சுற்றித் தொட்டு மகிழ்ந்து, சிலிர்த்து, ஏங்கி, துவண்டு............... காதலர்களின் காத்திருப்பு இப்படியே அலுக்காமல் சலிக்காமல் தொடரும்.

பக்கத்தில் நீயும் இல்லை.
பார்வையில் ஈரம் இல்லை.
சொந்தத்தில் பாஷை இல்லை.
சுவாசிக்க ஆசை இல்லை.....
கன்னி உன்னைக் காத்திருப்பேன்
கால் கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும் வரை
தேகம் போல நான் கிடப்பேன்..
என்கிறார் இன்னொரு கவிஞர்.

(படம்:சிகரம், பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம்)

இங்குதான் கவிஞர்களின் திறமைகள் எம்மை வியக்க வைக்கின்றன. ஏக்கங்களும் காத்திருப்புகளும் எமக்குள்ளே வியாபித்து நின்றாலும் இந்தக் கவிஞர்கள் போல் எம்மால் அதை இத்தனை அழகாக வெளிப்படுத்த முடிவதில்லையே!

நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம் பெற்ற பாடலில் கவிஞர் காத்திருந்ததை இன்னுமொரு விதமாக மிகவும் அழகாகச் சொல்கிறார்.

What a waiting..
What a waiting
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காதல் மனம் நோகும் வரை......
நாற்று வைத்துக் காத்திருந்தால்
நெல்லுக் கூட முளைத்திருக்கும்........
என்ன ஒரு அருமையான கற்பனை!


ம்... இவையெல்லாம் வெறும் கற்பனைதானா..?
அல்லது உண்மையிலேயே காதலர்களின் மனசு காத்திருப்புகளின் போது இவ்வளவு உணர்வு பூர்வமான அவஸ்தைகளைக் கொண்டு தவிக்கிறதா..? என்று பார்த்தால்....... இந்த மனசு இருக்கிறதே! அது உண்மையிலேயே மிகமிக விசித்திரமானதுதான். இந்தப் பிரிவை என்னால் தாங்க முடியுமா...? என்று நினைத்து நினைத்தே சஞ்சலப்பட்டு, தவித்து, ஏங்கி, நாட்களை எண்ணி, மலைத்து உள்ளுக்குள் உருகி மாயும். ஆனாலும் வருடங்களாக நீண்ட அந்தக் காத்திருப்பு, காலத்தின் ஓட்டத்துடன் ஓடி ஒரு நாளாகக் குறுகிய பின்னர் அந்த ஒரு நாளைக் கடக்க இந்த மனசு கஷ்டப் படுமே! அந்தக் கஷ்டம் மகா பெரியது. அந்த நாளின் ஒவ்வொரு கணமுமே இந்த மனசுக்கு ஒவ்வொரு யுகமாகத்தான் தெரியும். ஒவ்வொரு கணத்தையும் இந்த மனம் காலப் பெரிய யுகமாகக் கடக்கும்.

ஒரு கவிஞர் இப்படிச் சொல்கிறார்.
காத்திருக்கும் வேளையெல்லாம் கண்ணிமையும் பாரம்
காதல் வந்து சேர்ந்து விட்டால் பூமி வெகு தூரம்.......

(படம்:சொல்லாதே, பாடியவர்:ஹரிஹரன்)

இப்படியாக கவிஞர்களால் அழகாகவும் வியப்பு ஏற்படுத்தும் வகையிலும் சொல்லப் பட்டவை, காத்திருக்க வேண்டிய தேவை வராத சிலருக்கு இதென்ன கவிஞர்கள் தத்துப் பித்தென்று உளறுகிறார்கள் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கலாம். ஆனால் அதை அனுபவித்தவர்களுக்கும், அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும்தான் அப் பாடல் வரிகளின் கற்பனையும் மகிமையும் புரிந்து கவிஞர்களின், கற்பனைத் திறனில் ஒரு லயிப்பு ஏற்படும்.

நீ வருவாயென..! படத்தில் இடம் பெற்ற இப்பாடல் கூட காத்திருப்பவரின் மனசைப் படம் பிடித்துக் காட்டும் ஒரு அழகிய கவிதையாகியுள்ளது. S.A.ராஜ்குமாரின் இசையும் S.P.பாலசுப்பரமணியத்தின் குரலும் பாடலுக்கு இன்னும் இனிமையையும் அழகையும் சேர்த்துள்ளன.

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென


இந்தப் பாடலுக்கு நிறைய விளக்கங்கள் சொல்லத் தேவையில்லை. அர்த்தங்கள் ஒழித்து வைக்கப் படாமல் வெளிப்படையாக ஆனால் கவிதை நயம் குறையாமல் காத்துக் காத்து கண்கள் பூத்துப் போனது சொல்லப் படுகிறது.

வைதேகி காத்திருந்தாள் படத்துக்காகக் கூட
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி


என்ற பாடல் எழுதப் பட்டு.. அது பலரது மனதையும் பலகாலமாக தன்வசப் படுத்தியிருந்தது.

காத்திருக்கும் போது கண்ணிமையே பாரமாகுமென்றால்
காத்திருப்பதில் கண் பூத்திருப்பது வாஸ்தவம்தான்.

தென்றலாக நீ வருவாயா யன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதையாகிறேன்


காத்துக் காத்து கண்கள் பூத்திருக்கும் மனசின் ஆசையை இப்படி சுலபமாக அழகாக கவிதை நயத்துடன் சொல்ல எல்லோராலும் முடியாது.

கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென
தினம் தினம் சேகரித்தேன்.
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென
வாசகனாகி விட்டேன்.
கவிதை நூலோடு கோலப் புத்தகமும்
உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்


இவ்வளவும் பொய்யில்லை. உண்மையாக நடக்கும் விடயங்கள். ஒருவரைப் பிடித்து விட்டால் அவருக்காக தமது பழக்கங்களையே மாற்றிக் கொள்பவர்கள் பலர். அதிலும் காதலர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. காதலனோ காதலியோ எந்த வழியால் போவார்களோ அந்த வழிக்குத் தேவையின்றிச் செல்வதும், பேரூந்துக்காகக் காத்திருக்கும் போது எதில் அவர் இருந்திருப்பாரோ அதில் போய் இருந்து பார்ப்பதும், வாசிப்பு ரசனையே இல்லாதவர்கள் கூட தேடித் தேடி புத்தகங்களை வேண்டி வாசிப்பதுவும்......... காதல் உலகில் சர்வசாதாரணம். அதை எழுத்தில் வடிக்கத்தான் பலருக்கு முடிவதில்லை. ஆனால் மனசுக்குள் மென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒரு காகம் "கா" வெனக் கரைந்தாலும்
என் வாசல் பார்க்கிறேன்.


இங்கு ஐரோப்பியாவில் காகம் கரைந்து காத்திருப்பு நடக்கவில்லையானாலும் ஊரிலே காகத்தையும் தபாற்காரனையும் காத்திருந்து களிப்புறுபவர் நிறையப்பேர்.

சருகாய் அன்பே காத்திருக்கின்றேன்
எங்கே உன் காலடி!


நீயில்லாத நான் சருகாய்.. உன் காலடிக்குள் மிதிபட இந்தச் சருகு காத்திருக்கிறது என்று சொல்வதாய் இந்த வரிகள்.

மணி பார்த்து தினம் வழி பார்த்து...........

மீண்டும் வருகிறது. மணி பார்த்து.... தினம் வழி பார்த்து.............. அதுதான் காத்திருப்பின் உன்னத பணி.... மணி பார்ப்பது.. செக்கன் கம்பியின் ஒரு அசைவே ஓராயிரம் யுகத்தை உணர்த்தும் காதலர்களின் இந்தக் காத்திருப்பும், காதல் உள்ளங்களின் ஏக்கமும் எங்களையும் தொட்டு விடுகிறது.

Tuesday, March 23, 2004

நினைவு நதியில் மனதின் ஜதி -3

இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)

புளியடி புங்கடி!


இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)

புளியடி புங்கடி!

எனது இரண்டு உள்ளங் கைகளையும் நான் ஒட்டியபடி வைத்திருக்க அதிலே மண் போட்டு ஒரு தடி குத்தப் பட்டது. கண்கள் அப்பாச்சியின் பழைய சேலை ஒன்றின் தலைப்பில் இருந்து கிழித்தெடுக்கப் பட்ட துண்டால் கட்டப் பட்டது.
சித்தப்பாதான்(பரமகுரு) மெயின். இன்னும் எனது அண்ணன் அக்கம் பக்கத்துப் பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து அப்பாச்சி வீட்டுக்கு முன்னுள்ள அந்தப் பெரிய காணியின் மூலைப் பக்கத்திலிருந்து விளையாட்டைத் தொடங்கினோம்.

அதுதான் எமது விளையாட்டுக்களுக்கான மையப்புள்ளி. அப்பாச்சி வீட்டுக்காணி போலவே அந்தக் காணியும் பென்னாம் பெரிசு. ஆனால் அப்பாச்சியின் காணியில் பூட்டப்பாவின் மூன்று பெண்களுக்குமெனக் கட்டப் பட்ட மூன்று வீடுகள் முறையே அடுக்காக அமர்ந்திருந்தன. வீடுகளுக்கிடையேயும் பின்னுக்கும் பெரிய பெரிய முற்றங்கள். வீடுகளைப் பிரிக்கும் எல்லைகளாக ஓரிரு செம்பருத்தியும் ஒரு நெல்லியும்தான். படுக்கையும் சமையலும் மட்டும் அவரவர் வீடுகளுக்குள் நடக்கும். மிச்சமெல்லாம் பனம் பூக்களைச் சொரிந்து கொண்டும், நொங்குகள் தொங்கிக் கொண்டும் ஆங்காங்கு நிமிர்ந்து நிற்கும் பனைகள் நிரவி நிற்கும் அந்த முற்றங்களில்தான்.

அப்பாச்சி வீட்டின் களைக்கு முற்றும் எதிரான தோற்றத்துடன்தான் முன் காணி. எருக்கலை பூத்திருக்கும். பிரண்டை படர்ந்திருக்கும். கற்றாழை ஆங்காங்கு துண்டுகள் வெட்டி எடுக்கப் பட்ட இதழ்களுடன் சற்று விறைப்பாக விரிந்திருக்கும். ஊமத்தை பூத்திருக்கும். சில காலங்களில் பருத்தி வெடித்துப் பஞ்சுகள் பறந்து கொண்டிருக்கும். குவித்து வைக்கப் பட்ட கற்கள் எங்கள் உழக்கல்களால் சிதறி காணி முழுவதும் பரவியிருக்கும். பின் மூலையில் ஒரு மலசலகூடம் தீண்டுவாரின்றி தனியாக இருக்கும்.

பூட்டப்பா இருக்கும் வரை அந்தக் காணியின் மதிப்பு அதிகமாயிருந்தது. அவரின் மருந்துத் தேவைகளுக்கெல்லாம் அங்கிருந்துதான் அனேகமான மூலிகைகள் எடுக்கப்படும். மூலவருத்தக் காரருக்கு கற்றாழை தெய்வம் போல. கற்றாழையின் தோலை நீக்கித் துண்டு துண்டாக வெட்டி - மணம் போவதற்கு - ஏழு தண்ணீரில் கழுவி கோப்பையில் போட்டால் மிகவும் அழகாக பளிங்குக் கற்கள் போல் பளபளக்கும். அதை மூலவருத்தக்காரர் காலை எழுந்தவுடன் வெறு வயிற்றில் சாப்பிட வேண்டும். வாய்க்குள் போட்டால் அப்படியே வழுக்கிக் கொண்டு போகுமாம். ஆனால் அதன் சுவையில் முகந்தான் அவர்களுக்குக் கோணலாகிப் போகும். என் முகமோ மணத்தில் கோணலாகி விடும்.
சொல்லி வைத்து மூன்று மாதத்தில் வருத்தம் மாறி விடுமாம். மூலவருத்தக்காரர் வந்தால் பூட்டப்பா இந்தக் கற்றாழையை சுத்தப் படுத்தி இரு கோப்பைகளில் போடுவார். ஒன்று வெறுவயிற்றில் சாப்பிடவாம். மற்றது வீட்டுக்குக் கொண்டு போய் வெங்காயமும் போட்டு நல்லெண்ணெயில் பொரித்து சோற்றுடன் மதியச் சாப்பாடாகச் சாப்பிட வேண்டுமாம். பிரண்டந்தண்டும் கற்றாழை போல ஒரு முக்கியமான மருந்துதான்.

இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)

புளியடி புங்கடி!

இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)

புளியடி புங்கடி!

எல்லோரும் நடந்து கொண்டிருந்தோம். எனது கண்கள் மட்டும் கட்டப் பட்டிருந்தது. வாய் ஓயாது இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)
கேட்கப் படும்.

நானும் சொல்லுவேன். புளியடி புங்கடி!

இராசம்மா பாட்டி வீட்டைத் தாண்டும் போது எள்ளு வாசம் வரும். அவர்கள் எள்ளு ஆட்டி நல்லெண்ணெய் விற்பவர்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் காணிகளுக்கும் ஒவ்வொரு வாசம். எந்த வாசமுமின்றி மல்லிகைப்பூ வாசம் கூட இன்றி; சில வீடுகள் மிகவும் அமைதியாகவும் இருக்கும். எல்லோரும் சொந்தக் காரர்கள்தான். கண் கட்டியிருந்தாலும் நான் எங்கே நிற்கிறேன் என்பதை இந்த வாசங்களினூடே கண்டு பிடித்து விடுவேன்.

அரசடிச் சந்தி ஒரு முச்சந்தி. சித்தப்பா(பரமகுரு) என்னை ஒருதரம் சுழற்றி விடுவார். தலை சுத்தும். பாதை தடுமாறும். கொஞ்ச நேரம் நான் எங்கே நிற்கிறேன் என்று யோசிக்க வேண்டி இருக்கும். ஆனாலும் சிவக்கொழுந்துப் பாட்டி வீடு தாண்டும் போது எதிரேயுள்ள பனங்காணிக்குள் இருந்து வரும் பனம்பூவினதும் பனம்பழத்தினதும் வாசத்தில் இடத்தைப் பிடித்து விடுவேன். அப்படியே மல்லிகைக் கலட்டிப் பக்கம் போய் விடாமல் திரும்பி...... அடுத்த திருப்பத்திலும் பண்டாரி கோயில் பக்கம் திரும்பி விடாமல்....... நடந்தால் சுத்தியும் சுத்தியும் சுப்பற்ற கொல்லைக்குள்ளைதான். புதியாக்கணக்கனுக்கே வந்து விடுவோம்.

இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)

புளியடி புங்கடி.

இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)

புதியாக்கணக்கன்.

நான் வென்று விடுவேன்.

வீட்டுக்குள்ளிருந்து வெளியே வராது உள்ளிருந்தே எங்களை வழி அனுப்பி வைத்த எனது மாமிமார் என்னைத் தூக்கிக் கொஞ்சுவார்கள். கற்கண்டு அல்லது பனங்கட்டி பரிசாய்க் கிடைக்கும். பனம்பழக் காலமென்றால் பனங்காய்ப் பணியாரம் கிடைக்கும்.

எனக்கு நான்கு மாமிமார். எனது அப்பாவுக்கு ஒரு தங்கை. அவ மூத்தமாமி. அதை விட அப்பாச்சியின் மூத்த தங்கையான முரசு மோட்டை அப்பாச்சிக்கு இரண்டு மகள்கள். அவர்கள் நாகரத்தினமாமி. தங்கரத்தினமாமி. மற்றைய தங்கையான சின்னப்பாச்சிக்கு ஒரு மகள். அவ ராணிமாமி. ராணிமாமி நல்ல வடிவு. உண்மையிலேயே ராணி மாதிரித்தான்.

திடீரென்று ஒரு நாள் இந்த மாமிமார் ஓலமிட்டார்கள். முரசுமோட்டையில் தோட்டம், துறவு, வயல், விளைச்சல் என்று வாழ்ந்த அவர்களின் அப்பா இறந்து விட்டாராம். பூட்டப்பாவின் குடும்பம் ஆட்டம் காணத் தொடங்கியது. நாகரத்தினமாமியும், தங்கரத்தினமாமியும், நாதச்சீனையாவும், சண்முகக்குஞ்சையாவும் அப்பா இல்லாத பிள்ளைகளாகினார்கள்.

அடிக்கடி முரசு மோட்டைக்குப் போய் வந்த முரசுமோட்டை அப்பாச்சி புதியாக்கணக்கனிலேயே முடங்கி விட்டா. மாமிமார் இருவரதும் கண்கள் எப்போதும் குளமாகவே இருந்தன. இடையிடையே நிரம்பி கன்னங்கள் வழியே வழிந்தோடின. அடிக்கடி ஐயா ஐயா என்று அவர் பற்றியே அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

(தொடரும்)

Thursday, March 18, 2004

நினைவு நதியில் மனதின் ஜதி -2

(பூட்டப்பா - பரமு)

அடுத்து மஞ்சள் நிற நூல் சேலையுடன் எனது பூட்டாச்சி என் நினைவில் அடிக்கடி வலம் வருவா. அவவின் இறப்பு ஏனோ என் ஞாபகத்தில் இல்லை. ஆனால் பூட்டப்பா அவரது நினைவு சாவு எல்லாமே பளிச்சென்று இன்னும் நினைவாக இருக்கின்றன.

எனக்கு அப்போ 4 வயது இருக்கலாமென நினைக்கிறேன். பூட்டப்பா ஒரு பரியாரி. அவரிடம் எப்போதும் நோயாளிகள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். அவரது மருந்துப் பொருட்கள் வைப்பதற்கென்றே ஒரு பெரிய பெட்டகமும் சிறு சிறு மருந்துப் பெட்டிகளும், ராக்கைகளும் அடங்கிய படி தனியாக இரு அறைகள். அவர் வாசம் மருந்துகளின் வாசம் நிறைந்த அந்த அறைகள்தான்.

தும்புகள் நீக்கப்பட்டு வழுவழுப்பாக்கப்பட்ட சிரட்டைக்குள் அவர் மருந்துக்குளிகைகளை உரைத்துக் நோயாளிகளுக்குக் கொடுக்கும் போது எழும் அந்த வாசம் அல்லது மணம் இன்னும் என் மூக்கினுள் இருக்கிறது. அவரை நினைத்தாலே அந்த மணம் ஓடி வந்து என் மூக்கினுள் குந்திக் கொள்ளும். அனேகமான நோயாளிகளுக்கு தாய்ப்பாலில் உரைத்துச் சாப்பிடும் படி சிறிய வட்டக் குளிகைகளைக் கொடுத்து விடுவார். சிலருக்குப் பூவரசம் இலையில் வைத்து தேனில் குழைத்துச் சாப்பிடும் படியும் சொல்லி விடுவார். சிலருக்கு ஒழுங்காக மருந்தைச் சாப்பிடவில்லை என்று நல்ல பேச்சும் கொடுப்பார். பரமுப் பரியாரி என்றால் அந்த நேரம் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

அவர் வருத்தமாகப் படுக்கையில் வீழ்ந்த போது கார்த்திகேசுப் பரியாரி வந்து பார்த்துப் போனார். ஆனாலும் அவர் இறந்து விட்டார். பரியாரி வேலையைப் பரம்பரையாகத் தொடரும் படியாக ஆண்வாரிசுகள் யாரும் அவருக்கு இல்லை. மூன்று பெண்பிள்ளைகளும் பெற்றுக் கொடுத்தவர்களில் எனது அப்பாதான் மூத்த பேரன்.

பூட்டப் பிள்ளைகள் நாங்கள் தடியில் துணி கட்டி தேங்காய் எண்ணெய்யில் தோய்த்தெடுத்த நெருப்புப் பந்தங்களை அவருக்குப் பிடித்தோம். நான் சின்னப்பிள்ளை என்றும், விழுத்தி விடுவேன் என்றும் சொல்லி ஒரு பெரிய மாமா எனது கையோடு சேர்த்து எனது பந்தத்தைப் பிடித்திருந்தார்.

பூட்டப்பாவின் இறப்பு எனக்கு சோகத்தை விட பயத்தைத்தான் தந்தது. எல்லாத்துக்கும் காரணம் அப்பாவின் கடைசித் தம்பியான எனது சித்தப்பாதான். அவர் எந்த நேரமும் பேய்க்கதைகள் சொல்லுவார். அவர் இறந்தவர்கள் பேயாக அந்த வீட்டில் அலைவார்கள் என முழுவதுமாக நம்பினார் போலும். நானும் அந்த நேரத்தில் நம்பினேன். சித்தப்பா அண்ணன் நான் மூவருமே பூட்டப்பா செத்ததன் பின் பூட்டப்பாவின் அந்த இரு அறைகளுக்குள்ளும் போவதே இல்லை. ஏதாவது தேவைக்கு அதனருகில் போக வேண்டி வந்தாலும் நெஞ்சு பயத்தில் கிடு கிடுக்க ஓடி வந்து விடுவேன். பார்க்காதே பார்க்காதே என மனம் தடுத்தாலும் இரவில் அப்பாச்சியின் அறை யன்னலால் கண்கள் அந்த இரு அறைகளையும் பார்க்கும். பார்க்கும் போது எனக்குப் பயமும் நடுக்கமும் வரும்.

எட்டு முடியுமட்டும் நாங்கள் அப்பாச்சி வீட்டில்தான் தங்கினோம். இரவுகளில் கனவுகள் என்னைத் தொல்லை பண்ணும். பூட்டப்பாவின் உடலெல்லாம் ஒரு நெருப்புப் பிழம்பு போல இருக்க அவர் அறைக்குள் இருந்து மருந்தை உரைப்பது போலக் கண்ட கனவை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

எட்டு நடந்த அன்று பேய்க்குக் கழிக்க என்று குங்குமம் போட்டு நீத்துப்பூசணிக்காய் தேசிக்காய் எல்லாம் பாதியாக வெட்டப் பட்டுச் சந்தியில் இருந்தன. அதில் என் காலைப் பட விட்டு விட்டேன். அதனால் என் கால் அழுகி விடும் என்று சித்தப்பா சொன்னதால் பல மாதங்களாக காலில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா எனப் பயத்துடன் அவதானித்துக் கொண்டே இருந்தேன்.

எட்டின் அன்று சோறு கறி பலகாரங்கள் என்று படைத்து விட்டு பூட்டப்பா வந்து சாப்பிடுவார் என அவரது மூன்று பெண்பிள்ளைகளுமான எனது அப்பாச்சிமார் சொன்னார்கள்.
நான் அவர் எப்போ வருவாரென படையலையே அவதானித்துக் கொண்டிருந்தேன். படையல் அன்று முழுக்க அப்படியே திறந்த படியேதான் இருந்தது. யாரும் வந்து சாப்பிட்டதைத்தான் நான் காணவில்லை.

எட்டு முடிய பூட்டப்பாவின் உடைகளோடு சேர்ந்து அவரது மருந்துகளும் சில பெட்டிகளும் தீயில் கருக்கப் பட்ட போது ஏதோ ஒரு கவலை தெரிந்தது.

(தொடரும்)

Wednesday, March 17, 2004

நினைவு நதியில் மனதின் ஜதி -1

எம் வாழ்வில் நடந்து முடிந்து போன சில விடயங்களோ அல்லது நாம் சந்தித்த சில விடயங்களோ அடிக்கடி எமது நினைவுகளுக்குள் வலம் வந்து கொண்டே இருக்கும். அவை சந்தோசமான விடயங்களாக எம்மைக் குதூகலிக்க வைப்பதாகவோ அல்லது மிகத் துயரமான விடயங்களாக எம்மைப் மிகவும் பாதிப்பதாகவோ இருக்கலாம்.

இழப்புகள் எல்லோருக்கும் வருவதுதான். இதில் மனித இழப்புக்கள் ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை நான் மிகவும் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன்.


இதில் நினைவு தெரிந்து நான் முதல் முதல் சந்தித்த மரணம் எனக்கு மூன்று வயதாக இருக்கும் போது நடந்தது. நேற்றும் அம்மாவைத் தொலைபேசியில் அழைத்து அது எனக்கு மூன்று வயதாக இருக்கும் போது நடந்ததுதான் என்பதைத் திடப் படுத்திக் கொண்டேன். எனது மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடிச் சில தினங்களின் பின் அதாவது 1962 டிசம்பரில் நடந்தததாம்.

பிறேமா மாமியை எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. எங்கள் வீட்டையும் அவர்கள் வீட்டையும் ஒரு செம்பருத்தி வேலிதான் பிரித்தது. அம்மாவின் தாய் மாமன் மகள். மச்சாள் என்ற உறவையும் விட அவர்களுக்குள் நட்புத்தான் பலமாக இருந்ததாம். அம்மாவை விட வயதில் குறைந்தவர். அப்போதுதான் அவவுக்குத் திருமணமாகிக் குழந்தை பிறந்திருந்தது. குழந்தையை எனக்கு ஞாபகமில்லை.

திடீரென அந்த வீடு அன்று ஒப்பாரிக் கோலம் கொண்டது. எல்லோருமே அழுதார்கள். பிறேமா மாமியும் கணவனும் குழுந்தையுடன் இலங்கையின் தென்பகுதிக்குப் பயணமாகிக் கொண்டிருக்கையில் காரின் பின் பக்கக் கதவு திறபட்டு அவவும் குழந்தையும் வழியிலே வீழ்ந்து விட்டார்களாம். அதை உடனே சாரதியோ முன் இருக்கையில் இருந்த அவர் கணவனோ கவனிக்க வில்லையாம். நீண்ட தூரம் போன பின்தான் ஏதோ பிசகி விட்டதை உணர்ந்து வந்த வழி திரும்பிய போது மாமியும் குழந்தையும் வீதியோரத்தில் தூக்கி எறியப் பட்டு இறந்து போயிருந்தார்களாம்.

மூன்று ஆண் பிள்ளைகளுக்கு ஒரு அக்காவாக ஒற்றைப் பெண்ணாக இருந்த அவவின் இழப்பு அந்தக் குடும்பத்தை எவ்வளவு பாதித்தது என்பதை வருடங்கள் வருடங்களாக நான் உணர்ந்தேன். ஆனால் அன்று அந்த இழப்பு என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. எனது அம்மாவும் அழுதா என்பதால் சாவின் கனமோ துயரோ தெரியாத அந்த வயதில் அம்மாவும் அழுகிறா என்பதால் எனக்கும் அழுகை வர நானும் ஒப்பாரி செய்பவர் கூட்டத்தின் அருகில் உள்ள கப்பைக் கட்டிப் பிடித்த படி அழுது கொண்டு நின்றேன்.

நேரம் காலம் எதுவுமே பார்க்காமல் மனசுக்குள் அடிக்கடி வலம் வரும் பல நினைவுகளில் இதுவும் ஒன்று.

(தொடரும்)

Monday, March 15, 2004

முகவரி மாற்றம்

பெண்களுக்கான வலைப்பூவின் முகவரி மாறியுள்ளது.
புதிய முகவரி:http://womankind.yarl.net/

Saturday, March 06, 2004

பெண்களுக்காக ஒரு தளம்

பெண்களே..........!
உங்கள் விருப்புக்கள், வெறுப்புக்கள், அபிலாசைகள், பிரச்சனைகள்...........
எதுவாயினும் மனந்திறந்து பேச.. மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள.......
ஆலோசனைகளைப் பெற.......... இங்கே ஒரு தளம். இன்றைய பெண்கள்

Monday, March 01, 2004

காலமிட்ட விலங்கையும் உடை


பொல்லெடுத்து
உனை அடித்தார்களா..!
சொல்லெடுத்து
மனம் சிதைத்தார்களா..!
மெல்லியவள் என்று சொல்லி
மெல்லவே பின்னே
தள்ளியவர் முன்னே
கல்லுடைத்து....
வாழ்வின்
வளம் பொருத்த முனையும்
பெண்ணே..!
உடை
கல்லோடு சேர்த்து
காலமிட்ட விலங்கையும் உடை
வெல்வாய்!

சந்திரவதனா - யேர்மனி
10.3.2003

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite