Monday, October 20, 2008

அந்த நாட்கள்

பொன்னிலும், பளிங்கிலும் ஜேர்மனி பளபளக்கும் என்ற சிறுவயதிலான மேலைநாடுகளைப் பற்றிய கனவு ஐந்து நாட்களுக்கு முன் மொஸ்கோவில் இருந்து திருப்பி அனுப்பப் பட்ட போது கலைந்து போய் விட்டது. ஏஜென்சியைப் பிழை சொல்லி என்ன பயன். மீண்டுமான முயற்சியில் மீண்டுமாய் பணத்தைக் கொட்டி விட்டு இன்னொரு ஏஜென்சியை நம்புவதுதான் அப்போதைக்குச் செய்யக் கூடிய காரியமாக இருந்தது. பணம் போய் விட்டதையும் விட முதல் தர பயணத்துக்கு காசு கொஞ்சம் குறைகிறது என்ற போது தம்பி செய்து தந்த சங்கிலியை அவசரமாய் ராணிநகை மாளிகையில் விற்ற போதிருந்த கவலை அடிமனதின் ஒரு ஓரத்தில் இன்னும் உரசியது. பொன் போய் விட்டதில் கவலை இல்லை. தம்பியின் அன்பினால் பின்னப்பட்ட ஒன்று போய் விட்டது என்பதில்தான் கவலை. கைமாறிய போது கண்களில் எட்டிப் பார்த்த துளிகளை யாருக்கும் தெரியாமல் சட்டென்று துடைத்து விட்டேன். மனதை அப்படித் துடைத்தெறிய முடிவதில்லைத்தானே.

விமானம் ஃபிராங்ஃபேர்ட்டில்(Frankfurt) தரையிறங்குகிறது என்ற போது அத்தனை சோர்விலும் மனம் படபடத்தது. எல்லாவற்றையும் சரியாகச் சொல்லி சமாளித்துக் கொள்வேனா என்ற பயமும் கூடவே வந்தது. "மூன்று பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு தன்னந்தனியாக விமானம் ஏறப் போகிறாளோ?" என்று முகத்தைச் சுளித்தவர்களும், நாடியைத் தோள்பட்டையில் இடித்தவர்களும் அந்த நேரத்திலும் மனசுக்குள் எட்டிப் பார்த்தார்கள்.

எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் பிள்ளைகளைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற சுயநலம் மற்றைய எல்லாவற்றையும் அடித்துப் போட்டு விட்டிருந்தது. பெற்றவர்களையும், உடன் பிறப்புகளையும், உற்றவர்களையும், விட்டு விட்டு போர் சூழ்ந்த நாட்டில் இருந்து ஓடி வருவதில் உள்ள சரி, பிழைகளையெல்லாம் ஆழமாகச் சிந்தித்து, ஆராய்ந்து கொண்டிருக்க அப்போது அவகாசம் இருக்கவில்லை. அன்றைய பொழுதில் எனக்கு அயோத்தி ஜேர்மனிதான். புறப்பட்டு விட்டேன்.

துவண்டு போயிருந்த மூன்று குழந்தைகளையும் உஷார் படுத்தி விட்டு தலைக்கு மேலிருந்த கதவைத் திறந்து ஹான்ட்லக்கேஜை இழுத்தெடுத்தேன். மூத்தவன் அப்படியே விமான இருக்கையில் தன்னைக் குறுக்கிக் கொண்டு இன்னும் தூக்கக் கலக்கத்தில் இருந்தான். சின்னவனைத் தூக்கிக் கொண்டு ஹான்ட்லக்கேஜையும் இழுத்துக் கொண்டு வரிசையில் நகர மகளும் பின்னால் வந்தாள். சின்னவனையும், லக்கேஜையும் வெளியில் விட்டு விட்டு மீண்டும் வந்து மூத்தவனைக் கூட்டிச் செல்லும் எண்ணத்தில் விமானப் படிகளில் இறங்கி லக்கேஜை வைத்து விட்டு நிமிர்ந்த போது விமானப் பணிப்பெண்களில் ஒருத்தி மூத்தவனை கையில் பிடித்து அணைத்த படி கீழே இறங்கிக் கொண்டிருந்தாள். மிகவும் நன்றியாக இருந்தது.

சில்லென்ற காற்று உடைகளையும் தாண்டி மேனியைத் தீண்டியது. மே மாதம் குளிராது என்றுதான் சொல்லியிருந்தார்கள். ஆனாலும் ஜேர்மனி குளிர்ந்தது. ஃபிராங்போர்ட் விமான நிலையம் பெரிதாக இருந்தது. உள்ளே போய் அகதி அந்தஸ்து கோருவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. கேள்விகளால் துளைத்தார்கள். அவர்களது ஜேர்மனிய மொழியில் ஒரு சொல்லேனும் எனக்குத் தெரியவும் இல்லை. புரியவும் இல்லை. பாடசாலையில் படித்த ஆங்கிலம் தான் அப்போது கை கொடுத்தது.

மூன்று குழந்தைகளும் எனது குழந்தைகள்தான் என்பதை அவர்களுக்கு நம்ப வைப்பதே பெரும்பாடாக இருந்தது. அதிசயப் பூச்சிகளைப் பார்ப்பது போல எம்மைப் பார்த்து, ஸ்ரேற்மென்ற் (Statement) எடுத்து, புகைப்படம் எடுத்து சில மணிகளின் பின் விமான நிலையத்தின் இன்னொரு அறையில் விட்டார்கள். அந்த அறை எட்டு இரண்டடுக்குக் கட்டில்களால் நிறைந்திருந்தது. அனேகமான கட்டில்களில் போர்த்திய படி வேற்று நாட்டவர்கள் படுத்திருந்தார்கள். எமக்காகக் கதவு திறக்கப் பட்ட போது எழுந்த சத்தத்தில் சிலர் ஆமை போலத் தலையை நீட்டிப் பார்த்து விட்டு மீண்டும் போர்வைக்குள் முடங்கிக் கொண்டார்கள்.

எனக்கும் மூன்று பிள்ளைகளுக்குமாக ஒரு கட்டில் தரப்பட்டு அரைமணியில் சாப்பாடு வந்தது. சாப்பாடு எதுவும் எனக்கோ பிள்ளைகளுக்கோ பிடிக்கவில்லை. ஆளுக்கொரு அப்பிளை மட்டும் எடுத்துச் சாப்பிட்டோம்.

அது அர்த்தஜாமம் என்று அங்கிருந்த ஒரு ஆப்ஃகானிஸ்தான் பெண் சொன்னாள். எங்களைப் படுத்து விடும்படியும் சொன்னாள். எங்களால் படுக்க முடியவில்லை. அதனால் வெளியில் போனோம். சந்நிதி, திருக்கேதீஸ்வரம்... போன்ற ஆலய மடங்களில் தங்கியிருப்பவர்கள் சுருண்டிருப்பது போலப் பலர் விமான நிலையத்தின் வாங்கில்களிலும், நிலங்களிலும் சுருண்டு படுத்திருந்தார்கள். ஏதோ ஒரு விமானம் அன்று பறக்கவில்லையாம்.

அன்றைய அந்த இரவை ஜேர்மனியுடன் ஒட்ட வைப்பது என்பது எனக்கோ, பிள்ளைகளுக்கோ முடியாத காரியமாகவே இருந்தது. இரவு நீண்டிருந்தது. உதடுகள் வெடித்தன. கால்கள் பொருக்குப் பூத்தது போல குளிரில் வெளிறின.

அடுத்தநாள் விமான நிலையத்துக்கு அருகிலேயே உள்ள அகதிகள் முகாமொன்றில் எங்களைக் கொண்டு போய் விட்டார்கள். அங்கும் பிடித்தமான சாப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை. தஞ்சம் கோரி வந்த எங்களுக்கு மீண்டும் ஒற்றை அப்பிள்தான் தஞ்சம். ஊரில் சுண்டக் காய்ச்சிய பாலையே குடிக்கப் பஞ்சிப்படும் என் பிள்ளைகள் அவர்கள் தந்த பச்சைப் பாலைத் தொடக் கூட மறுத்து விட்டார்கள்.

இதற்கிடையில் நான் தொலைபேசியில் என் கணவருக்கு நாம் வந்து சேர்ந்து விட்டதைத் தெரிவிக்க, அவர் ஸ்வெபிஸ்ஹால் நகரிலிருந்து இரண்டாம் நாள் இரவு எம்மிடம் வந்து சேர்ந்தார். ஸ்வெபிஸ்ஹால் நகரிலிருந்து வேறெங்கும் செல்ல அவருக்கு அனுமதியில்லை. பிடிபட்டால், உடனடியாகப் புகைவண்டியில் ஏற்றி ஸ்வெபிஸ்ஹால் நகருக்கே திருப்பி அனுப்பி விடுவார்கள். அதுமட்டுமல்ல தண்டனையாக 400ஜேர்மனிய மார்க்குகளைக் கட்டவும் சொல்வார்கள். 350 மார்க் சமூகநல உதவிப் பணத்துடன் வாழும் எனது கணவரின் அப்போதைய நிலை அது.

அடுத்தநாள் காலை, - மூன்றாம் நாள் - எங்களுக்கு அகதி அந்தஸ்து கோரியுள்ளார் என்பதற்கான தற்காலிக அகதி அடையாள அட்டை தந்து, இன்னொரு அகதி முகாமுக்கு அனுப்புவதற்காக பேரூந்தில் ஏற்றினார்கள். கூடவே இன்னும் சில தமிழ்ப்பெண்கள். எனது கணவரும் அவரைப் போலவே அனுமதியின்றி வந்த இன்னொரு கணவரும் செய்வதறியாது நிற்க, எங்களை ஸ்வல்பாஹ்(Schwalbach) அகதி முகாமுக்கு அனுப்பி விட்டார்கள். பேரூந்தில் சில மணி நேரங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது.

அந்த முகாமில் ஓரளவு தமிழர்கள் இருந்தார்கள். ஆனால் என்னைப் போல மூன்று பிள்ளைகளுடன் வந்தவர்கள் யாரும் அங்கில்லை. களைத்துப் போன எனதும், பிள்ளைகளதும் முகங்கள் அவர்களுக்கு எங்கள் மீது இரக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கிட்ட வந்து அன்பாகவும் உதவும் நோக்குடனும் கதைத்தார்கள். எம்மைச் சாப்பிட வரும் படி அழைத்துச் சென்று ஒரு பெரிய ஹோலில் விட்டார்கள். அது கன்ரீனுடன் சேர்ந்த ஹோல். ஹோல் நிறைய பலவித மொழி பேசும் பல விதமான மக்கள் கசா முசா என்று கதைத்தபடி இருந்தார்கள்.

நானும் பிள்ளைகளும் இன்றைக்காவது சாப்பிடுவோம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்க அந்தத் தமிழர்களே எமக்கான சாப்பாட்டை எடுத்து வந்து தந்து விட்டுப் போனார்கள். ஆவலுடன் சாப்பாட்டுக்காகக் காத்திருந்த எனது மூத்தவனின் முகம் சாப்பாட்டைக் கண்டதும் ஏமாற்றத்தில் துவண்டு போனது. வந்த சாப்பாடு நாம் வாழ்க்கையில் முதல் முதலாகச் சந்திக்கும் பிற்சா(Pizza). சிப்பி சோகியெல்லாம் அதன் மேல் போட்டிருந்தார்கள்.

"இதையெப்பிடிச் சாப்பிடுறது..?" கோபம், ஏமாற்றம், அழுகை எல்லாம் கலந்த கேள்வி அது.

ஏற்கெனவே ´எனது கணவர் எப்படி இங்கே வந்து சேரப் போகின்றார்?` என்ற யோசனையும், கவலையும் எனக்குள். அதை மிஞ்சிய வயிற்றுப் புகைச்சல். என் மகனும் இப்படிக் கேட்க உடனேயே எனக்கு, எங்கள் மேல் தாங்க முடியாத பச்சாத்தாபம் ஏற்பட்டது. ´திரும்பிப் போய் விடுவோம்` என்ற அங்கலாய்ப்பு வந்தது. போய் ´அம்மாவின் கையால் அம்மாவின் சமையலைச் சமையலைச் சாப்பிட வேண்டும்` என்ற அவா எழுந்தது. எல்லாமாய் அழுகையே வந்தது. ´மூன்று நாள் ஜேர்மனிய வாழ்க்கை போதும்` என நினைத்துக் கொண்டேன்.

அந்த நேரம் எனது மகன் என்ன செய்தான் தெரியுமா..? அவர்கள் மெனக்கெட்டு பக்குவமாகத் தயாரித்த பிற்சாவின் மேலே இருந்த எல்லாவற்றையும் ஒரேயடியாகக் கோப்பைக்குள் வழித்துக் கொட்டி விட்டு கீழேயுள்ள ரொட்டித்துண்டைச் சாப்பிடத் தொடங்கினான்.

´அட இவனுக்கு எப்படி இப்படியொரு மூளை வந்தது!` வியந்தேன். மற்றைய மூன்று பிற்சாக்களிலும் இருந்த எல்லாவற்றையும் என் கண்ணீரோடு சேர்த்து வழித்துக் கொட்டி விட்டு ஒன்றுமில்லாத வெறும் ரொட்டியை மற்றப் பிள்ளைகளுக்கும் கொடுத்து சாப்பிடத் தொடங்கினேன்.

சந்திரவதனா
பிரசுரம் - யுகமாயினி (ஒக்ரோபர் 2008)

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite