பிரபு ராஜதுரை போலவே இந்தச் சிறுமியின் கஷ்ட நிலையின் போது மருத்துவகாப்புறுதியின் அவசியம் பற்றியே நானும் சிந்தித்தேன். உரியவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதுதான் எனது ஆதங்கம்.
மற்றும் படித்தவை பகுதியில் பதியப் பட்டுள்ள படங்கள் எவ்வகையில் எனக்குப் பிடித்தன அல்லது எவ்வகையில் என்னைப் பாதித்தன என்று குறிப்பிட்டிருந்தால் நல்லது எனவும் குறிப்பிட்டிருந்தார். உண்மைதான். எனது மன உணர்வை அங்கு குறிப்பிடத் தவறி விட்டேன்தான்.
இது எனது மகன் துமிலன் எடுத்த புகைப்படம். பத்திரிகைக்கான ஒரு கட்டுரைக்காக எடுத்திருந்தார். நிலக்கீழ்ப்பாதையின் சுவர்களிலும், தெருவோரச் சுவர்களிலும் பொலிசாருக்கு டிமிக்கி விட்டு விட்டு தெளிக்கப்படும்(spray) இவ் வர்ணங்கள் என்னை எப்போதும் கவர்வனவாகவே இருந்துள்ளன. தெருவோரச் சுவர்களில் இப்படி வர்ணம் தீட்டுவதற்கு யேர்மனியில் சட்டப்படி அனுமதி இல்லை. ஆனாலும் சில ஆர்வலர்கள் பணம் செலவழித்து வர்ணம் வாங்கி, நேரம் செலவழித்து இதைச் செய்கிறார்கள். அவர்களில் ஒருவருடன் எனது மகன் துமிலன் நேர்காணல் ஒன்றைச் செய்திருந்தார்.
இதில் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் இந்த நபரை எந்தக் கட்டத்திலும் பொலிசாருக்கு இனம் காட்டக் கூடாது.
இது பற்றியதான துமிலனின் கட்டுரை பத்திரிகையில் வெளியான பின் அதையொட்டிய பல எதிர்வினைகள் பத்திரிகைக் காரியாலயத்துக்கு வந்து சேர்ந்து அவையும் பிரசுரமாகின. எதிர்வினை அனுப்பியவர்களில் பலர் புதுமதில் கட்டிய பின் எப்போதோ ஓர் இரவில் அதில் வர்ணம் தெளிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்தவர்களே.
இந்த நபர் யாரென்பதை அறிந்து கொள்வதற்காக பொலிசும் துமிலனை பல தடவைகள் விசாரித்ததுதான். ஒரு பத்திரிகையாளனுக்குரிய தர்மத்தை காரணம் காட்டி துமிலன் இந்நபரைக் காட்டிக் கொடுக்கவில்லை.
ஆனாலும் ஒரு துயரம் நடந்து விட்டது. கடந்த வருடம் ஒரு விளையாட்டுக் குறூப்புடன் ஸ்பெயினுக்குச் சுற்றுலா சென்ற இந்த நபர் விளையாட்டாக ஒரு பந்தயத்துக்காக நச்சுக்காயொன்றை தனது நண்பர்களுக்குச் சாப்பிட்டுக் காட்டி உயிரை மாய்த்துக் கொண்டு விட்டார்.
துமிலனின் கமாரவுக்குள் பிடிபட்ட இவரது மேலும் சில வர்ணத் தெளிப்புகள்.(Graffitie)
---------------------------------------------------------------------------------------------------
அடுத்து

மரத்தை ஒரு முகவடிவில் பக்குவமாக வெட்டிப் பராமரித்திருக்கும் முகம் தெரியாத ஒரு கலைஞனின் நேர்த்தி என்னைக் கவர்ந்திருந்தது. இதைப் புகைப்படம் ஆக்கியவர் யாரென்பது கூட எனக்குத் தெரியாது. அருட்சோதியின் இணையத்தளத்தில் இருந்து பெற்றேன்.