
இந்தப் பெரிய பெரிய அரச கதைகளை நான் வாசிக்கத் தொடங்குவதற்கு முன்னமே 60வதுகளின் இறுதிப் பகுதியிலோ, அல்லது 70வதுகளின் ஆரம்பத்திலோ தெரியவில்லை. எங்கள் வீட்டில் தமிழ்வாணனின் கல்கண்டு அறிமுகமாகியது. அப்போதுதான் அது வெளிவரத் தொடங்கியதோ அல்லது அம்மாவுக்கு அப்படியொரு சஞ்சிகை வெளிவருவது அப்போதுதான் தெரிய வந்ததோ என்பது எனக்குத் தெரியாத விடயம்.
கல்கண்டு எங்கள் வீட்டில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதில் வரும் தொடர்கதைகளை வாசித்து விட்டு, அடுத்த கிழமைக்காகக் காத்திருப்பது சிறுவர்களான எங்களுக்கு யுகங்களைக் கடப்பது போலிருந்தது. அண்ணன், நான், பெரியதம்பி மூவருமே போட்டி போட்டு வாசித்தோம். யார் முதலில் என்று சண்டை பிடித்தோம். விலக்குத் தீர்ப்பதே அம்மாவுக்குப் பெரும் பாடாய் இருந்தது. துப்பறியும் சங்கர்லால், நம்பூதிரி.. போன்ற கல்கண்டுக் கதைகளின் நாயகர்கள், வில்லர்கள் எல்லோருமே எங்களுடன் மிகவும் ஐக்கியமாகி விட்டார்கள். குளிக்கும் போதும், சாப்பிடும் போதும் அவர்கள் பற்றிப் பேசினோம். கதைகளை அலசினோம். வில்லன் வெளிக்கேற்றில் வரும் போதே, உள்ளிருக்கும் அறையிலிருந்து சங்கர்லால் அவர் வருகையைக் கண்டு பிடிப்பதைப் பற்றி நிறையக் கதைத்தோம். வியந்தோம். அப்போது தமிழ்வாணன் எங்கள் வீட்டில் பிரியமாகப் பேசப்படும் ஒருவராக இருந்தார். கல்கண்டில் வரும் துணுக்குச் செய்திகளைக் கூட நாங்கள் விட்டு வைப்பதில்லை. நாங்கள் மட்டுமென்ன அம்மாவும் கல்கண்டுக்காய் காத்திருப்பா.
அப்பாச்சி வீட்டுக்குப் போனால், அங்கே எனது சித்தப்பாமாரின் கேத்திரகணிதம், தூயகணிதப் புத்தகங்களுக்கிடையே பொம்மை அம்புலிமாமா.. போன்ற புத்தகங்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். எனக்கு அம்புலிமாமாக் கதைகளில் அவ்வளவான ஈடுபாடு இல்லாவிட்டாலும் "தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினான்" என்ற சித்தப்பாவின் வாய்ப்பாட்டைக் கேட்டுக் கொண்டு அவைகளை வாசித்து முடித்து விடுவேன். குட்டிச்சித்தப்பா ஒரு எம்.ஜி.ஆர் பைத்தியம். வீடு முழுக்க அது முத்திரை குத்தப் பட்டிருக்கும். ஆனாலும் சினிமாப் படங்களைப் பார்த்த அளவுக்கு சினிமாச்செய்திகளை வாசிப்பதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. பொம்மையில் உள்ள படங்களைப் பார்த்து விட்டு, ஏதாவது சினிமாப்பாடல்கள் இருந்தால் அவைகளையும் மனப்பாடம் செய்து விடுவேன். மேற்கொண்டு சினிமா சம்பந்தமாக நான் வாசிப்பதில்லை.
இதை விட எங்கள் வீட்டிலும் சரி, அப்பாச்சி வீட்டிலும் சரி ரொபின்சன் குரூசோ சிந்துபாத்.. போன்ற ஆங்கிலக் கதைப்புத்தகங்கள் நிறைய இருக்கும்.
சுந்தரியும் ஏழு சித்திரக்குள்ளர்களும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மாயவிளக்கு, சிந்திரில்லா... போன்ற கதைப்புத்தகங்கள் முதலில் ஆங்கிலத்திலேயே கிடைத்தன. பின்னர் அவை பாடசாலையிலும் தமிழில் சொல்லப் பட்டன.
பஞ்சதந்திரக்கதைகள் பெரிய புத்தகமாக வீட்டில் இருந்தது. அக்கதைகளை நான் வாசிக்க முன்னரே அப்பா ஒரு புறமும், அம்மா இன்னொரு புறமுமாகச் சொல்லி விட்டார்கள். ஆனாலும் மீண்டும் அவைகளை வாசித்தேன்.
ஐந்தாம் ஆறாம் வகுப்புகளில் திருக்குறள் மனனப்போட்டி, எழுத்துப் போட்டி இரணடிலுமே பரிசில்களைப் பெற்றுக் கொள்ளுமளவுக்கு திருக்குறளை முழுமையாக மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.
மகாபாரதம், இராமாயணம் இரண்டையுமே எனது அப்பாவிடம்தான் வாசித்தேன். அவ்வப்போது துண்டுதுண்டுகளாக எங்காவது தட்டுப் பட்டவைகளை புத்தகம் வழியே வாசித்திருந்தாலும், முழுமையாக அக்கதைகளை அப்பாதான் கொஞ்சங் கொஞ்சமாகச் சொல்லி முடித்தார். கூடவே ஊரில் நடைபெறும் சப்பறத் திருவிழாவிலோ, அல்லது சிவராத்திரி இரவுகளிலோ நடைபெறும் கதாகலாட்சேபம், வில்லுப்பாட்டு போன்றவைகளுக்கு என்னையும் எனது சகோதரர்களையும் அழைத்துச் சென்று மகாபாரத, இராமாயணக் கதைகளை மனதில் பதிய வைத்தார். அப்பா எப்போதுமே இராவணன் பக்கம்தான்.
இது ஒரு புறம் தன்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபுறத்தில் பாடசாலை வாழ்க்கையோடு கதைப்புத்தகங்களும் உலாவின. பாடசாலையில் கதைப் புத்தகங்கள் வாசிப்பதற்கு ஆசிரியர்களின் அனுமதி என்பது இருந்ததில்லை. அளவுக்கதிகமான எந்தக் கட்டுப்பாடுகளும் யாரையும் கட்டிப் போடுவதில்லைத்தானே! எல்லா மாணவர்களையும் போலவே நானும் களவாகக் கதைப்புத்தகங்களைத் தாராளமாக வாசித்தேன்.
பண்டமாற்றுப் போல மாணவிகள் மாற்றி மாற்றிப் படித்த புத்தகங்களில் அதிகப் படியான எண்ணிக்கைக்குரியவை இந்தியாவிலிருந்து வரும் இந்திய எழுத்தாளர்களின் படைப்புக்களைக் கொண்ட ராணிமுத்து வெளியீடுகளும் எமது தாய்மண்ணில் வெளியாகும் தாயக எழுத்தாளர்களின் படைப்புக்களைக் கொண்ட வீரகேசரி மித்ரன், வெளியீடுகளுமே. இந்த வெளியீடுகளினூடு நான் வாசித்துத் தள்ளி விட்டவை ஏராளம். இப்படி ஒரு பிரசுரமாகத்தான் செங்கைஆழியானின் வாடைக்காற்றும் என் கைக்கு வந்தது.
- தொடரும் -
சந்திரவதனா
13.6.2005