Tuesday, March 18, 2014

யாருக்கும் பெருமைப்படத் தோன்றவில்லையா?

எங்களை நாங்களே தூற்றிக் கொள்வதில் எமக்கு நிகர் நாமே என்ற நிலையில்தான் தமிழர் நாம் இன்னும் இருக்கிறோம். ஒரு ஜேர்மனியப் பெண் தமிழை அதுவும் எமது பேச்சுத்தமிழைக் கதைக்கும் போது ஆச்சரியமாகவும், மகிழ்வாகவும்தான் இருக்கிறது. அதற்காக எம்மை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டுமா?

12வயதில் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த எங்கள் குழந்தைகள் அந்தந்த நாட்டு மொழிகளுடன் எந்தளவு தூரம் போராடியிருப்பார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு புலம்பெயர்ந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஓரளவேனும் அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருந்தது. ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க்... போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த பெற்றோருக்கு அந்நாட்டு மொழியில் இருந்து ஒரு சொல்லுக் கூடத் தெரியாமலே இருந்தது. வீட்டில் அவர்கள் தனித்தமிழே கதைத்தார்கள். அவர்கள் குழந்தைகள் எல்லோருமே வெளியில் அந்நாட்டு மொழியைப் பேசவேண்டிய நிர்ப்பந்தத்தில் மிகவும் கஸ்டப்பட்டார்கள். பேசுவது மட்டுமல்ல மொழியையும் படித்து அதனூடு கல்வியையும் கற்க வேண்டிய ஒரு கடினமான சூழல் அவர்களுக்கு இருந்தது.

ஆனாலும் சாதித்தார்கள். வீட்டில் தனித்தமிழ். மிஞ்சினால் ஆங்கிலக் கலப்புடனான சில சொற்கள். வெளியில் டொச், டெனிஸ், இத்தாலி, பிரெஞ்... இந்த நிலையிலும் அந்தந்த நாட்டுப் பிள்ளைகளை விட நல்ல மார்க்குகள் அந்தந்த நாட்டு மொழிகளுக்கே எங்கள் பிள்ளைகள் பெற்று இன்று நல்ல பதவிகளில் கூட இருக்கிறார்கள். அனேகமான புலம்பெயர்ந்த தமிழ்பிள்ளைகள் எல்லோருமே பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்கள். இதையிட்டு நாம் பெருமைப்பட வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வயதின் பின் புலம்பெயர்ந்த எங்கள் பிள்ளைகளால் நாம் வாழும் நாட்டின் மொழியை மிகச்சரளமாகப் பேசமுடியும், கூடவே ஆங்கிலமும் நன்கு தெரியும். அதை விட இன்னும் ஏதாவது ஒரு மொழி - உதாரணமாக ஜேர்மனியில் வாழ்பவருக்கு பிரெஞ் அல்லது ஸ்பானிஷ் தெரியும். இவ்வளவோடு தமிழைச் சரளமாகப் பேசவும் தெரியும்.

அதே நேரம் இங்கு மிகக்குழந்தைகளாக வந்த பிள்ளைகளுக்கோ அன்றி இங்கு பிறந்ந பிள்ளைகளுக்கோ வேறு பிரச்சனைகள் உள்ளன. வீட்டில் தமிழ். வெளியில் அந்த நாட்டுமொழி. அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்றில்லை. எப்படித்தான் வீட்டில் தமிழ் கதைத்தாலும் வெளியில் முழுக்க முழுக்க வேற்றுமொழி. கல்வி வேற்றுமொழியில்.

தமிழா அந்நாட்டு மொழியா சிறந்தது என்பதில் அவர்களுக்குத் தடுமாற்றம். அவர்கள் தமது நண்பர்களுடன் தமிழில் பேசமுடியாது. அவர்களது உச்சரிப்பில் தமிழ் கலந்திருந்தால் பாடசாலையில் அவர்களுக்குச் சில பின்னடைவுகள் வரும். நாள் முழுக்க அந்நாட்டு மொழியுடன் ஊடாடி விட்டு வீட்டுக்கு வந்ததும் தமிழுக்கு அவர்கள் மாறுகிறார்கள். சில பிள்ளைகளால் அது முடிவதில்லை. எப்படித்தான் தமிழ் முக்கியம் என்று பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தாலும் அந்நாட்டு மொழி அக்குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமானதாக இருக்கிறது. அவர்கள் கதைக்க, விளையாட, படிக்க, வேலை செய்ய.. என்று, அம்மொழி இல்லாமல் அவர்களுக்கு அவர்களது எதிர்காலம் இல்லை.

ஆனால் அவர்களும் அந்த ஜேர்மனியப் பெண் சொல்வது போல தேவை வரும் போது கதைப்பார்கள். அவர்களுக்குத் தமிழே விளங்காது என்றில்லை. எங்காவது விதிவிலக்காக யாராவது இருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்தத் தமிழரையுமே கேலி செய்ய வேண்டியதில்லை.

நான் எப்போதுமே எங்கள் பிள்ளைகளை நினைத்துப் பெருமைப்படுகிறேன். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எமது பிள்ளைகள் தமிழையும் பேசிக்கொண்டு வேற்றுநாட்டு மொழியொன்றில் படித்து, நல்ல முறையில் சித்தியடைந்து, நல்ல நல்ல பதவிகளில் அந்நாட்டவகளையும் விட மேலானநிலைகளில் கூட இருக்கிறார்கள்.

அந்த ஜேர்மனியப் பெண்ணை நான் பாராட்டுகிறேன். எமது நாட்டு மொழியைப் பேசுகிறார் என்பதால் மகிழ்கிறேன். அதையும் விட எங்கள் பிள்ளைகளை நினைத்து மிகமிகப் பெருமைப் படுகிறேன்.

ஏன் நாங்களே எத்தனை வயதுகளின் பின் புலம் பெயர்ந்தோம். தமிழோடு அடி நுனி கூடத் தெரியாத ஒரு மொழியைப் பேசுகிறோம். எழுதுகிறோம். அந்நாட்டு மக்களோடு வாழ்கிறோம். யாருக்கும் பெருமைப் படத் தோன்றவில்லையா?

சந்திரவதனா
18.3.2014


White Lady Speaks Jaffna Tamil - யாழ்ப்பாணத் தமிழ் பேசு

Monday, March 17, 2014

அஞ்சல்தலைகளும் நானும்

நினைவுகளோடான பயணங்கள் தவிர்க்க முடியாதவை. நாம் விரும்பியோ விரும்பாமலோ அவை எம்மைத் துரத்திக் கொண்டும், பற்றிக் கொண்டும் எம்மோடு பயணித்துக் கொண்டே இருக்கின்றன. எந்தெந்த நேரத்தில் எவை எம்மைத் தொற்றிக் கொள்ளும் என்றோ அவை எப்படியெல்லாம் எம்மை ஆட்டிப்படைக்கும் என்றோ, அல்லது அடித்துப் போடுமென்றோ எமக்குத் தெரிவதில்லை. 
 
சிறுதுரும்பு போதும் ஏதோ ஒரு நினைவு எம்மை ஆட்கொள்ளவும், அது சங்கிலித் தொடராய் எம்மை எங்கெல்லாமோ அழைத்துச் செல்லவும்.

அஞ்சல்தலைகள், அவைகள் கூட என் வாழ்வில் மறக்கமுடியாமல் சிலரை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. எனது 12வது வயதில் நான் அஞ்சல்தலைகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தில் அதுவே எனது தியானமாக இருந்தது என்று சொல்லுமளவுக்கு மிகவும் ஈடுபாட்டுடன் அச்சேகரிப்பில் நான் ஒன்றியிருந்தேன். 

ஆரம்பகாலத்தில் அஞ்சல் சேகரிப்புக்கான அல்பங்கள் எனக்குக் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் அதாவது இற்றைக்கு 42வருடங்களின் முன்னர் 1972இல் அப்படியான அல்பங்கள் கடைகளில் இருந்தனவா என்பது கூட எனக்குத் தெரியவில்லை. எனது சேகரிப்புக்காக அம்மாவிடம் கேட்டு கறுப்புதாள்களிலாலான ஒரு கொப்பி(வரைதல்கொப்பி) வாங்கி அதிலேதான் எனது முத்திரைகளை ஒதியம்பிசின் போட்டு ஒட்டினேன். 

இலங்கை அஞ்சல்தலைகள் மிகவும் அழகானவை. கூடவே மாலைதீவு, நிப்பன்.. போன்ற இடங்களிலிருந்து வருகின்ற அஞ்சல்தலைகளும் மிகஅழகானவை. இந்த அஞ்சல்தலைகளுக்காகவே தபால்காரனின் மணிச்சத்தம் கேட்டதும் விரைந்து முன்கேற்றுக்கு ஓடுவேன். வரும் கடிதத்தில் ஒட்டப்பட்டிருக்கும் முத்திரையே குழந்தைத்தனம் இன்னும் ஒட்டியிருந்த எனது பால்யபருவத்து நினைவுகளில் முட்டியிருக்கும். ஆனால் எனது பால்யபருவம் மட்டுமே தெரிகின்ற பெரியோர்க்கு எனது ஓட்டம் அசாதாரணமானதாய்தான் தெரியும். அதனால் குதிக்காதே.. குமர்ப்பிள்ளை நீ.. என்று குறிப்பாக எனது பாட்டாவிடம்(அம்மாவின் தந்தை) அடிக்கடி பேச்சு வாங்கிக் கொள்வேன். 

இப்போதைய 10 - 12 வயதுப் பெண்பிள்ளைகளைப் பார்க்கும் போதெல்லாம், ஓடுவதற்கும், வாய் விட்டுச் சிரிப்பதற்குமே யோசிக்க வேண்டிய எனது அந்தவயதுப் பருவம் நினைவில் வராமல் போவதில்லை. நல்லவேளையாக எனது அம்மாவும், அப்பாவும் எனக்கு அவ்வளவான கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. ஆனாலும் சுற்றியிருந்த எல்லாப் பெரியவர்களுமே நெருப்பை மடியில் கட்டிக்கொண்டிருப்பவர்களைப் போல் என் அசைவுகள் ஒவ்வொன்றையும் அவதானித்துக் கொண்டேயிருந்தார்கள்.
 
பாட்டா எம்மில் மிகவும் அன்பானவர். அதனால் அவரது அன்பான கண்டிப்புகளை உதாசீனப்படுத்த என்னால் முடிவதில்லை. கலங்கி வழிகின்ற கண்ணீரோடு என் சின்னச்சின்னக் கனவுகளில் சிலதையும் தொலைத்து விட்டு அவர் விருப்பம் போலவே நடந்து கொள்வேன். அவர் முன்னிலையில் ஓடுவது, வாய்விட்டுச் சத்தமாகச் சிரிப்பது, துள்ளுவது.. போன்றவைகளைத் தவிர்த்துக் கொள்வேன்.

மாலையில் பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்தால் அம்மா தரும் ஆட்டுப்பால் தேநீரைக் குடித்து விட்டு, தம்பியையும் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு பாட்டா வீட்டுக்குப் போய் விடுவது எனது வழக்கம். கூடவே அப்பா அனுப்பும் தினபதி, சிந்தாமணி.. போன்ற பத்திரிகைகளையும் எடுத்துக் கொண்டு போவேன். 

பாட்டாவும், பெத்தம்மாவும் எப்போதும் எனக்காக ஏதாவது வைத்திருப்பார்கள். அவர்கள் வீட்டு முன்றலில் உயர்ந்து, நெடுத்து நின்றிருந்த ஒற்றைப்பனையின் சலசலப்போடு நுங்கோ, பூரானோ இல்லையென்றால் மள்ளாக்கொட்டை சுவீற்றோ ஏதோ ஒன்று எனக்காகக் காத்திருக்கும்.. பாட்டாவும் சரி, பெத்தம்மாவும் சரி இருவருமே மேனை, மேனை என்றுதான் அன்பாகக் கதைப்பார்கள். ஆனால் ஒழுக்கம் என்பது பாட்டாவுக்கு மிகவும் முக்கியம். அதனால் அவரது அன்போடு கண்டிப்பும் கண்டிப்பாகக் கலந்தே இருக்கும். 

அவர்களது வீட்டின் முன்விறாந்தையில் நான் தம்பியுடன் இருந்த பொழுதுகள் அவர்களுக்கும் இனிமையான பொழுதுகளாகத்தான் இருந்திருக்க வேண்டும். அப்பொழுதுகளில் பாட்டாவிடம் அன்புதான் மேலோங்கியிருக்கும். மிகவும் இதமாகக் கதைப்பார். அப்படியான ஒரு பொழுதில்தான் எனது முத்திரை சேகரிப்பு பற்றி அவரிடம் சொல்லி கோர்ட்டில் உறுதி எழுதும் பொழுதுகளில் முத்திரைகள் கிடைத்தால் எனக்குத் தரும்படி கேட்டேன். உடனேயே அவர் மலர்ந்த முகத்துடன் என்னைத் தனது அறைக்குள் அழைத்து, அவரது மேசை லாச்சிக்குள் இருந்து ஒரு கட்டுக்கடிதங்களை எடுத்துப் போட்டார். முழுவதும் ஜேர்மனியில் இருந்து வந்த கடிதங்கள். அவற்றைப் பொக்கிஷம் போலத்தான் வைத்திருந்தார் போல் ஞாபகம். அக்கடித உறைகள் ஒவ்வொன்றிலுமே ஒன்றோ, இரண்டோ ஜேர்மனிய முத்திரைகள் ஒட்டப்பட்டிருந்தன. எல்லா உறைகளையுமே எனக்குத் தந்து விட்டார்.

அப்போது எனது சிந்தனைகள் முத்திரைகளின் மேலேயே இருந்ததால், அக்கடிதங்கள் என்னவாக இருக்குமென நான் ஆராயவில்லை.  அந்த முத்திரைகளை ஆவியில் பிடித்தும், தண்ணீரில் போட்டும் உறையில் இருந்து கழற்றி எடுத்துக் காயவைத்து, புத்தகங்களுக்குள் வைத்து நேராக்கி எனது அல்பத்தில்(கொப்பியில்) ஒட்டினேன். பிறிதொரு சந்தர்ப்பத்தில் அந்த முத்திரைகளையெல்லாம் அக்கொப்பியில் இருந்து கவனமாகக் கழற்றி எடுத்து இப்போது சரியாக ஒரு அல்பத்தில் போட்டு வைத்திருக்கிறேன். 

அந்த அஞ்சல்தலைகள் வெறும் அஞ்சல்தலைகள் மட்டுமல்ல. எனது பாட்டாவையும், பாட்டா, பெத்தம்மாவுடனான அந்தச் சிறிய வீட்டின் ஞாபகங்களையும் அவர்களது அன்பையும் சுமந்து நிற்பவை.

சந்திரவதனா
17.3.2014

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite