Tuesday, April 27, 2004

சிந்து
சிந்து வந்திருக்கிறாள்.
ஒரு கிழமைக்கு இங்கு எழுத முடியாது போகலாம்.

Saturday, April 24, 2004

களிக்கும் மனங்களே கசியுங்கள்உப்பளக் காற்றிலே
உயிரைக் கலைய விட்ட
எங்கள் பிள்ளைகளின்
குருதி வெள்ளத்தில்
ஏற்றி வைத்த
வெற்றிக் கொடியை
பற்றி
பரவசப் பட்டு
மனம்
ஆனந்தக் கண்ணீர் வடித்தது!

நியம் தந்த களிப்பில்
அவசரமாய் வந்த
ஆனந்தக் கண்ணீர்
அது நியமானது!
பிறகேன் போலியாய்
பார்ட்டியும்..!
படாடோபமும்..!

போர்க்களத்திலே வீழ்ந்தும்
குருதி வெள்ளத்திலே சாய்ந்தும்
போனவர்களின் தியாகமும்
அவர்கள்
ஈன்றவர்கள் மனதை
பற்றி நிற்கும் சோகமும்
நாம் இங்கு
பாடி நிற்கவும்
பார்ட்டி வைக்கவுமா..?
இல்லை!
வாடி நிற்கும் எம்மவர்
வாழ வேண்டும்
கூடிழந்த எம்மவர்க்கு
கூரை வேண்டும்
ஓடி ஓடிக் களைத்தவர்க்கு
ஓய்வு வேண்டும்
போலியாய்
எதுவும் வேண்டாம்..!

களிக்கும் மனங்களே
கசியுங்கள்
வெற்றி கண்ட மண்
வற்றி நிற்கிறது
பற்றோடு கை கொடுங்கள்.

சந்திரவதனா- யேர்மனி- 29.4.2001

ஆனையிறவு

240 ஆண்டு கால அடிமைச்சின்னம் அழிக்கப் பட்டு
ஆனையிறவு கைப்பற்றப் பட்டது - 22.4.2000


எனது டயறியிலிருந்து

பல்கணி கதவையும் திறந்து விட்டு வந்து, சமைப்பதற்காகக் குசினி யன்னலையும் திறந்து விட்டதில் காற்று ஊ.... ஊ.... என்று வீட்டுக்குள்ளேயே அடித்து மேசையிலிருந்த பேப்பர்கள் சிறகடித்தன. வசந்தம் வர்ணங்களாய் பூத்திருக்க, குழந்தைகள் பலர் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் உப்பளக் காற்றைப் பற்றி எதுவுமே நினைக்கவில்லை.

எங்கெல்லாமோ அலைந்து எதையெதையெல்லாமோ தொட்டு வந்த நினைவில் பள்ளிக்கூடமாக உப்பளம் வரை போனதோ, கரையொதுங்கியிருந்த உப்பை கை நிறைய அள்ளி நக்கிப் பார்த்ததோ வரவில்லை.

உலை வைத்து அரிசி போட்ட போதோ, கறி கொதித்து இறக்கிய போதோ மனம் அலைந்து கொண்டுதான் இருந்தது. பிரியமானவர்களைத் தொட்டு மகிழவோ, அக்கா என்று கதைத்து விட்டு அடுத்த நாள் சில்லாகிப் போன மாவீரர்களைத் தொட்டுக் கலங்கவோ அது தவறவில்லை. ஆனாலும் உப்பளத்தை மறந்திருந்தது. ஆனையிறவுக் காற்று அதன் நினைவில் வரவேயில்லை.

அப்போதுதான் காற்றோடு வந்தது
240 ஆண்டு கால அடிமைச்சின்னம் அழிக்கப் பட்டு ஆனையிறவு கைப்பற்றப் பட்ட செய்தி.

சந்திரவதனா
22.4.2000

Thursday, April 22, 2004

எம்மை விட்டுப் போயின


தோழியர் பகுதியில் சுரதா தனது இனிய நினைவுகளைக் கிளற தான் பரணைக் கிளறியதாக உஷா எழுதி என்னையும் கிளறியிருக்கிறார். உண்மையிலேயே கட்டிய கதைப்புத்தகங்களைப் பற்றிக் கதைக்கும் போது மனசுக்குள் ஏதோ ஒரு சோகம் புகுந்து கொள்ளும். நான் யேர்மனிக்கு வந்த போது தமிழில் வாசிப்பதற்கு எதுவுமே கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் எனது வீட்டில் குவிந்திருந்த புத்தகங்களையே நினைத்துக் கொள்வேன். சிலதையாவது கொண்டு வந்திருக்கலாமே என மனதுக்குள் ஆதங்கப் படுவேன். ஆனாலும் எல்லாம் வீட்டில் பத்திரமாக இருக்கிறதுதானே..! ஒரு காலத்தில் போய் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொள்வேன்.

ஆனால்...
1987 இலிருந்து 1989 வரை எனது தம்பியைத் தேடி வந்த இந்திய இராணுவத்தினர் வீட்டிலிருந்த பொருட்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு போகத் தொடங்கி விட்டனராம். தளபாடங்களை அவ்வப்போது வாகனங்களுடன் வந்து ஏற்றிச் சென்றார்களாம். கதைப்புத்தகங்களையும் புகைப் படங்களையும் கொண்டு போகவில்லையாம். தூக்கித் தூக்கி எறிந்தார்களாம். நினைத்தால் வயிறெரியும் எனக்கு.

குமுதம், கல்கி........ என்று எல்லாப் புத்தகக் கதைகளையும் கிளித்தெடுத்துச் சேர்த்து வட்டாரியால் ஓட்டை போட்டு தொசன் நூலை பெரிய ஊசியில் கோர்த்து புத்தகங்களாகக் கட்டிக் கட்டி வைப்பா அம்மா. பொன்னியின் செல்வன்.. போன்ற புத்தகங்களை பெரிய பெரிய புத்தகமாகவே வாங்கி வைத்திருப்பா. எனது கணவர் சுஜாதாவின் புத்தகங்களில் ஒன்றையும் தவற விடாமல் வாங்கி விடுவார். இப்படியே அப்பா ஒரு பாடு. அண்ணன் ஒரு பாடு என்று எத்தனை புத்தகங்கள். அத்தனையும் ஒன்று விடாமல் எம்மை விட்டுப் போய் விட்டன.

உஷா குறிப்பிட்ட உடல் பொருள் ஆனந்தியும் எங்கள் வீட்டில் இருந்தது.
அக்கதையை எத்தனை வயதில் வாசித்தேன் என்பது ஞாபகம் இல்லை.
ஆனால் கதையில் வரும் திலீபனின் உடலுக்குள் இன்னொருவரின் ஆவியோ உயிரோ ஏதோ ஒன்று செலுத்தப்பட்டு.......... ஒரு வித்தியாசமான கதை.

Friday, April 16, 2004

திசைகளில் வெளியான கதையில் பிரதேசவாதம்

திசைகளில் வெளியான எனது பயணம் சிறுகதைக்கு ஜீவமுரளி யாழ்ப்பாணக் கிடுகுவேலிச் சமாச்சாரம் என எதிர்வினை தர அதற்கு நான் பதிலளிக்க.......
எதையும் கரவாகக் கொள்வாது ஒரு யதார்த்தத்தை நான் கதையாக்க அது இப்படி நீண்டுள்ளது.

என்மூக்கு சுந்தர் பசுபதியின் பார்வையில் --


Wednesday, April 07, 2004
திசைகள் - ஏப்ரல்
................

திசைகள் இதழ் நல்ல கனமாக வ்ந்திருக்கிறது. சூடாகவும் இருக்கிறது.

சேவியர் கவிதை 'ஊர்ப்பேச்சை ' எள்ளல் செய்கிறது. நம்பியின் கவிதை இணையத்தமிழை வம்புக்கு இழுக்கிறது.இரண்டுமே வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் ரகம்.

எம்.கே.குமார் வலைப்பதிவிலும், மடற்குழுவிலும் இட்ட ஆட்டோகிராஃப் விமர்சனததை திசைகளிலும் மாலன் பதிப்பித்து இருக்கிறார். நம்பியின் கவிதையும் அவ்விதமே என்று கொசப்பேட்டை குப்ஸாமி சொல்கிறார். திசைகளுக்காகவே பிரத்தியேகமாக எழுதப்பட்ட படைப்புகளை பிரசுரிப்பது நலம்.

வாசகர் கடிதம் பகுதியில்தான் காரம் ஜாஸ்தி.

தன் படைப்புக்கு பின்னூட்டமாய் வந்த ஜீவமுரளியின் கடிதத்தை, சந்திரவதனா பிரசுரித்து, அதற்கு தன் பதிலையும் அளித்துள்ளார். அவருடைய கதையை நான் படிக்கவில்லை ஆயினும், அவர் கடித்திலிருந்து என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க் முடிகிறது. பொதுவாகவே அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை இந்தியர்கள் சற்று இளக்காரமாக்த்தான் பார்க்கிறார்கள் என்று நானும் கருதுகிறேன். வளர்ப்பு சார்ந்தும், படிப்பு சார்ந்தும்தான் குணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று நாம் என்னதான் தத்துவம் பேசினாலும், ஒருவருடைய முகத்தையும், உடலமைப்பையும், நிறத்தையும், பார்த்துத்தான் பெரும்பாலானவர்கள் பற்றிய முடிவுக்கு வருகிறோம். 'மிஸ்ஸிஸிபி மசாலா ' என்ற படத்தில் உள்ள ஒரு இந்தியப் பெண் கதாபாத்திரத்தை பார்த்து டென்ஸல் வாஷிங்டன் ஒரு கேள்வியைக் கேட்பார். பளாரென்று அறையும் கேள்வி அது.

தமிழ்நாட்டில் கூட சாதி ரீதியான பாகுபாடுகள் பார்ப்பதாக, பிராமணர்களை சாடும் பெரும்பாலானோர் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக இழைக்கும் கொடுமைகளை வச்தியாக மறந்து விடுகின்றனர். தான் ஒரு தாழ்ததப்பட்ட சாதியை சேர்ந்தவரை எப்படி அணுகுகிறோமோ , அதைப் போலத்தான் பிராமணர்கள் தன்னை அணுகுவார்கள் ' என்று ஒரு பிள்ளைக்கோ, தேவருக்கோ, வன்னியருக்கோ, முதலியாருக்கோ தோன்ற வேண்டும். அது தோணாதவரை, குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்தவர்களை குறை சொல்லி பிரயோசனம் இல்லை. ஜாதி தரும் அந்தஸ்து தனக்கு, வேண்டுமென்றால் , அது எல்லாருக்கும் வேண்டும் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

ஜீவமுரளியின் கடிதத்தில் இருந்த 'யாழ்ப்பாண கிடுகுவேலி மனோபாவம்தான் கறுப்பர்களை வெறுக்கச்செய்கிறது ' என்ற வரிகள் யாழிலும் இத்தகைய தமிழ்நாட்டு மனோபாவம் நிரம்பிக் கிடப்பதை குறிப்பதாகக் காண்கிறேன். அந்த வரியின் முழு அர்த்தம் விளங்காவிடினும், ' யாழ்ப்பாணத் தமிழர் மலையக / கொழும்புத் தமிழர்களை சற்று இளக்காரமாகத்தான் நினைக்கிறார்கள் ' என்று நான் ஏற்கனவே கேள்விப்பட்ட விஷயத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில்தான் இருக்கிறது.

உன்னிப்பாகப் பார்த்தால் , உலகமெல்லாம் நீக்கமற இறைவன் நிறைந்திருக்கிறானோ இல்லையோ,
இம் மாதிரியான சாதி, இன, மத , நிற ரீதியான வேறுபாடுகள் நிறைந்து காணப்படுவது தெளிவாகத் தெரியும்.

இதன் தொடர்பில் நான் முன்பொருமுறை கிறுக்கியது இங்கே.....

நாட்டாமையின் பார்வையில்..............


Saturday, April 10, 2004
A-Z

வேதம் ஓதற வேதாள நந்திக்கு ஆப்படிச்சுட்டாங்க. ரஜினிக்கு ஆப்பு வச்சா உனக்கு ஆப்பு வக்கறோம்னு மெரட்றாங்க நெறயப் பேரு. பத்ரி லாஹூரு போயி கிரிக்கட்டுப் பாக்கறாரு. ஹரப்பால்லருந்து நமக்கு ஏதாவது வாங்கிட்டு வாய்யா.

ஏய்யா இன்னமு(ம்) வெள்ள கருப்புன்னு பாக்கறீங்க, வெள்ளக்காரன்ட்டருந்து நல்ல விசயத்தக் கத்துக்கங்கய்யான்னு கோபபடறாங்க சந்திரவதனா. நமக்கு பயமாப் போச்சு, நாம எலங்க மொரளிக்குச் சப்போர்ட்டு பண்ணதப் பத்திக் கேள்விப்பட்டா நம்மயும் திட்டுவாங்களோன்னு. கருப்பு வெள்ளயப் பத்திச் சந்திரவதனா சொன்னதுக்கு எதிர்கொரல் கொடுக்கறாரு சு.பசுபதி .

அதை

BBC யாழ் கருத்துக்களத்தில்

பிரசுரிக்க...........


எழுதப்பட்டது: புதன் சித்திரை 07, 2004 11:21 am - BBC

சந்திரவதனா தான் எழுதிய பயணம் என்ற கதையை திசைகள் பெண்கள் சிறப்பிதழில் மறுபிரசுரம் செய்திருந்தார். அந்த கதையையும் பிரதேசவாதத்தையும் இணைத்து வாசகர் ஒருவர் எழுதிய கடிதத்தையும் அதற்கு சந்திரவதனா எழுதிய பதிலையும் கீழே படியுங்கள். - BBC

திசைகளில் வெளியான கதையில் பிரதேசவாதம்?

அதற்கு ஈழவனின்

பதில்

கட்டுரையின் விடயம் சந்திரவதனா அக்காவிற்கும் வாசகருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடாக இருப்பினும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய கருத்து ஒன்றுள்ளது

இந்தக் கிடுகுவேலி என்ற பதம் இந்தக் களத்தில் கூட சிலரால் உபயோகிக்கப்பட்டுள்ளது கள நிர்வாகத்தினரை யாழ்ப்பாணத்துக் கிடுகுவேலிக் கலாச்சாரத்தின் எச்சங்கள் என்று கேலிபண்ணியதால் அக்கருத்தினை விவாதத்திற்கு எடுக்க விரும்பவில்லை ஆயினும் இப்போது நல்லதொரு சந்தர்ப்பம் வந்துள்ளது

சில பெரிய மனிதர்களுக்கு ஒரு நல்ல பண்புள்ளது யாரவது தங்களை விடப் பெரியவர்கள் எனத் தாங்கள் நினைப்பவர்கள் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அதனை மேற்கோளிட்டு காலத்துக்குக் காலம் சொல்லித்திரிவது

இந்தக் கிடுகுவேலி என்ற பதம் முதலில் உபயோகிக்கப்பட்டது யாரால் என்று தெரியவில்லையாயினும் அதனைப் பிரபலப் படுத்தியது யாழ் எழுத்தாளர் செங்கை ஆழியான் தனது கிடுகுவேலி என்ற நாவலின் மூலம் யாழ் மண்ணில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தின் கதையைச் சொல்லி அதன் மூலம் வெறும் வாயை மெண்டவர்கள் மெல்லுவதற்கு அவலையும் விட்டுச்சென்றுள்ளார்

கந்தபுராணக்கலாச்சாரம் என்றழைக்கப்பட்ட யாழ்ப்பானத்துக் கலாச்சாரம் கிடுகுவேலிக் கலாச்சாரம் எண்றாகிப்போனதில் செங்கை ஆழியான் நிச்சயம் மகிழவில்லை அதனை தனது கதையின் மூலமும் அதனது முகவுரை மூலமும் தெளிவு படுத்தியுள்ளார்

அதனைத் தமக்குச் சார்பாக்கி அதன் மூலம் யாழ் மக்களை மட்டந்தட்டி மகிழ்பவர் யார் எனப் பார்த்தால் அது கிடுகுவேலிக் கலாச்சாரம் என்ற இப்பதத்தின் தொனிப்பொருளை முழுதாக விளங்கிக் கொள்ளாதவர்களே

யாழ் மக்கள் மட்டுமல்ல எந்தவொரு சமூகத்தைச் சார்ந்தவர்களும் தான் தனது குடும்பம் என்று வாழ்வதையே விரும்புவர் இது வரவேற்கத்தக்கதொரு அம்சமே ஒவ்வொருத்தரும் தனது குடும்பத்தில் கவனம் செலுத்தினால் அது வெறுமனே அக்குடும்பத்தின் வளர்ச்சிக்கன்றி அவரது சமுதாயத்தின் வளர்ச்சிக்கே வழிகோலும்

இவ்வாறு தான் தனது என்பதில் மட்டும் கவனம் செலுத்தத் தலைப்பட்ட சமுதாயத்தின் மக்களது போக்கில் தலைதூக்கிய சுயநலத்தைச் சாடும் முகமாகவே செங்கை ஆழியான் இக்குறியீட்டுப் பெயரை உபயோகித்தார்

ஒவ்வொருத்தரும் தமது குடும்பவிடயங்கள் வெளியே தெரியாதவாறு மறைப்பதற்காக அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த கிடுகுவேலிகள் உதவின என்ற கருத்துப்பட அவர் இதனைக் கூறினாலும் வெறுமனே கிடுகுவேலிகளால் சமுதாயத்திலுள்ள ஓட்டைகள் மறைக்கப்பட முடியாது என்பதே அதன் தொனிப்பொருள்

அவ்வாறு ஓட்டைகள் உள்ள சமுதாயம் தான் இன்று எங்கும் நிறைந்துள்ளது அது யாழ் மண் என்றால் என்ன மட்டக்களப்பு என்றால் என்ன கொழும்பு என்றால் என்ன புகலிட நாடுகள் என்றால் என்ன எவ்வளவுதான் சமூகத்தோடு ஒட்ட ஒழுகினாலும் எமது நிர்வாணம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதில்தான் எல்லோரும் முனைப்புக் காட்டுகின்றார்கள்

இதுதான் மனித நியதியும் கூட நிர்வாணம் தான் உண்மை என்றாலும் உள்ளே இருப்பது என்னவெண்று எல்லோருக்கும் தெரியும் தான் என்றாலும் அதனை மறைப்பதற்கு எல்லோருக்கும் ஒரு துண்டுத்துணி தேவைப்படுகின்றது அல்லவா?

அதுதான் யாழ்ப்பானத்தவர்களுக்கு கிடுகுவேலி தீவுப்பகுதி மக்களுக்கு பகிறு வேலி கொழும்பிலும் புகலிட நாடுகளிலும் உள்ளவர்களுக்கு தொடர்மாடிக்கட்டங்களின் சுவர்கள்

நான் எனது என்று கிடுகுவேலிகட்டி வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட யாழ் மண்ணில் சமூகக் கட்டமைப்புகள் எவ்வாறு இறுக்கமாக இருந்தன அந்தக் கிடுகுவேலிகளைக் கூட ஊர் கூடிச் சேர்ந்துதான் அடைத்தனர் ஓவொரு குடும்பத்தவர்களுடைய வேலைகளும் ஊர்மக்கள் கூடிச் செய்தனர் அப்படியிருக்க கிடுகுவேலி அடைத்ததற்கு சொல்லப்பட்ட காரணம் எட்டப்பட்டதா?

ஒரு வகையில் பார்த்தால் கிடுகுவேலிகள் கூட நியாயமானதுதான் எனது வீட்டு அசிங்கம் வெளியில் போகவேண்டாம் உனது வீட்டு அசிங்கம் எனது வீட்டுக்குள் வரவேண்டாம் என அடைப்புக்கட்டிய வாழ்க்கைக்கு கிடுகுவேலி வாழ்க்கை முழுமையான வெற்றியை அழிக்காவிட்டாலும் நிறைந்த பங்களித்ததை மறுக்க முடியாது

அப்படியிருக்க தன் வீட்டு வளவு எல்லைக் கோடு எதுவுமின்றி ஊரவன் யாராவது வந்து மேய்ந்துவிட்டுப் போகும் தரத்தில் இருக்க இவ்வசிங்கம் தன் வீட்டுக்குத் தொற்றிவிடக் கூடாது என்று உயரமாகக் கிடுகுவேலி அடைத்த எதிர்வீட்டுக்காரனைப் பார்த்தால் பொருமல் வரத்தான் செய்யும் அதுதான் தம்மை நியாயப்படுத்தும் யாழ்ப்பாணத்து கிடுகுவேலிக் கலாச்சாரம் என்ற நகையாடல்.

சினிமாப் பாடல்கள் - 2

என்னைக் காணவில்லையே நேற்றோடு
இன்னும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு........


தமிழ் ஓவியத்தில்

Thursday, April 15, 2004

மகரந்தங்களினால் ஒவ்வாமையா...?

தூசிகளில் வாழும் staubmilbe யினால் ஏற்படும் ஒவ்வாமைகளை விட பூக்களினால் கூட ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன. யேர்மனியில் ஏறக்குறைய பத்து மில்லியன் மக்கள் கைக்குட்டையுடன் திரிகிறார்கள். இவர்கள் குளிரினால் பாதிக்கப் பட்டவர்கள் அல்ல. மிகமிகச் சிறிய அதாவது 0.001மில்லிமீற்றரிலிருந்து 0.003மில்லிமீற்றர் அளவுள்ள பூந்தாதுக்களினால் பாதிக்கப் பட்டவர்கள்.

யேர்மனியில் அனேகமாக மாசி கடைசியிலிருந்து புரட்டாதி கடைசி வரை பூந்தாதுக்கள் பறக்கின்றன. இந்தப் பூந்தாதுக்கள் காற்றினால் ஏறக்குறைய 300கிலோமீற்றர் தூரம் வரை எடுத்துச் செல்லப் படுகின்றன.

இவை அழையா விருந்தாளியாக மூக்கினுள் நுழையும் போது, பாதுகாப்புச் ஷெல்கள் இவைகளுக்கு எதிராக antibody யைத் தயாரிக்கின்றன. இதன் பாதிப்பு ஒரு பாரதூ ரமான தொற்றுநோயைப் போல கடினமாக இருக்கும். இதனால் வாயும் மூக்கும் புண்ணாகிச் சளி உண்டாகும்.

Pollenallergie எனக் குறிப்பிடப்படும் இந்த ஒவ்வாமை உள்ளவர்கள் உடனடியாகத் தம்மைக் கவனித்துக் கொள்ளாமல் விட்டால் மார்புச்சளியினாலும் அதனால் ஏற்படும் அஸ்மா இழுப்பு நோயினாலும் பாதிக்கப் படும் அபாயம் ஏற்படும். ஏனெனில் இந்த ஒவ்வாமை மூக்கிலிருந்து சுவாசக் குழாயின் உட்புறச் சவ்விற்கு நகரத் தொடங்கி விடும்.

இதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள எந்தப் பூந்தாதுக்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

தை மாதத்தில் இருந்தே உங்களுக்கு இந்த ஒவ்வாமை ஏற்பட்டால்
உங்களுக்கு உள்ள ஒவ்வாமை Graeserpollen ஒவ்வாமை என அழைக்கப் படும்.

சித்திரையிலிருந்து ஆவணி வரையுள்ள காலப் பகுதியில் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் உங்களுக்கு உள்ள ஒவ்வாமை Wildkraeuterpollen ஒவ்வாமை என அழைக்கப் படும்.

கால நிலைக்கும் வெப்ப தட்ப நிலைக்கும் ஏற்ப இந்த மாத எல்லைகள் ஒன்றிலிருந்து இரண்டு கிழமைகள் முன்னுக்குப் பின் மாறுபடலாம்.

மாசியும் பங்குனியும் Erle, Hasel என்பன பூக்கும் காலங்கள். இதே காலத்தில்தான் Weide, Pappel, Ulme, Esche, என்பனவும் பூக்கத் தொடங்குகின்றன.

தெற்கு யேர்மனியில் பங்குனி கடைசியில் Birken பூக்கும். Birken, Karle, Hasel இம் மூன்றினதும் பூந்தாதுக்கள் மிகவும் கடுமையான ஒவ்வாமையைத் தரக் கூடியவை.

உங்களுக்கு எந்தெந்த மாதங்களில் ஒவ்வாமைச் சிக்கல் ஏற்படுகின்றது என்பதை அவதானித்து, மேற்குறிப்பிட்டவைகளையும் கவனத்தில் கொண்டு எந்தப் பூவின் மகரந்தம் உங்களுக்கு ஒவ்வாமையைத் தருகிறது என்பதைக் கண்டு கொள்ளலாம். அல்லது மருத்துவரிடம் ஒவ்வாமைக்கான பிரத்தியேகப் பரிசோதனையைச் செய்தும் அறிந்து கொள்ளலாம்.

இப்படியான பூந்தாதுக்களினால் ஏற்படும் ஒவ்வாமைக்கான அறிகுறிகள் - தும்மல், மூக்கினுள் அரிப்பு, எரிச்சல், - சளி - தொண்டையில் அரிப்பு, எரிச்சல் - கண்ணில் கடி, எரிச்சல், - போன்றவை.

இவ்விதமான ஒவ்வாமையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில வழிகள்.

பகல் பொழுதுகளில் வீட்டுக்குள் வரும் காற்றைக் குறைத்து இரவில் மட்டும் யன்னலைத் திறந்து வீட்டுக்குள்ளே காற்றோட்டத்தை ஏற்படுத்துங்கள்.

வீட்டினுள்ளே உள்ள காற்று ஈரலிப்புத்தன்மை உள்ளதாக இருக்கும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். (இதற்கு பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி படுக்கையறையினுள் வைக்கலாம்)

வெயில் நேரத்தில் புற்கள், செடிகள் நிறைந்த பகுதிகளிலோ, வயல் வெளிகளிலோ உலாப் போவதையும், சைக்கிள் ஓடுவதையும் தவிர்த்து மழை பெய்து ஓய்ந்த பின் உலாப் போங்கள்.(மழை நேரத்தில் மிகக் குறைந்த மகரந்தத்துகள்களே காற்றோடு உலாப்போகும்.)

மோட்டார் வாகனங்களில் செல்லும் போது கண்ணாடிகளை மூடி விடுங்கள். ஒரு காற்று வடிகட்டியை வாகனத்துள் பொருத்தி வையுங்கள்.

இரவில் தெளிவான சுத்தமான நீரில் தலையைக் கழுவுங்கள்.

வெளியில் போகும் போது அணிந்த உடைகளை படுக்கையறையில் நின்று களையவோ, படுக்கையறையில் கொழுவவோ வேண்டாம். (ஏனெனில் உடைகளில் இருக்கும் மகரந்தத் துகள்கள் படுக்கையறையில் வீழ்ந்திருந்து இரவு முழுவதும் உங்களைப் படுக்க விடாது தொந்தரவு செய்யும்.)

வீட்டில் உள்ள தூசிகளை ஈரத்துணி கொண்டு துடையுங்கள்.

படுக்கையறையில் நில விரிப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மெத்தைகளும், தலையணைகளும் மிருகங்களின் உரோமங்களினாலோ, பறவைகளின் இறகுகளினாலோ செய்யப் படாதவைகளாக பார்த்து வாங்கிப் பாவியுங்கள்.

இந்த ஒவ்வாமைப் பிரச்சனைகள் உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு
முக்கிய விடயம்

சில மருந்துகள் இவ் ஓவ்வாமையினால் வேறு விதமான பாரிய பக்க விளைவுகளைக் கொடுக்கும் அபாயம் இருப்பதால் - உங்கள் உங்கள் நாடுகளில் உங்களது மருத்துவக் காப்புறுதி நிறுவனங்களால் விநியோகிக்கப் படும் ஒவ்வாமைக்குரிய பிரத்தியேக அட்டையைப் பெற்று - அதை நிரப்பி எப்போதும் உங்களோடு வைத்திருங்கள்.

பிற்குறிப்பு - தகவல்கள் யேர்மனிய மருத்துவப் பத்திரிகையொன்றிலிருந்து எடுக்கப் பட்டதால் மரங்களினதும், பூக்களினதும் பெயர்களை யேர்மன் மொழியிலேயே தந்துள்ளேன்.

சந்திரவதனா செல்வகுமாரன்.
யேர்மனி
வைகாசி - 1997

Wednesday, April 14, 2004

நினைவு நதியில் மனதின் ஜதி - 5


சித்திரைப்புத்தாண்டு என்றால் என்ன..? வேறு என்ன பண்டிகை என்றால் என்ன...? இலங்கையின் எந்த மூலையில் கடமையில் இருந்தாலும் அப்பா விடுப்பு எடுத்துக் கொண்டு வந்து விடுவார். ஆனால் சில சமயங்களில் வேலை காரணமாக இரவு யாழ்தேவியில் பயணித்து விடியத்தான் வீடு வந்து சேர்வார். அப்பா வந்து விட்டால் வீட்டில் ஒரு தனிக் கலகலப்புத்தான். அதுவும் கொண்டாட்ட தினங்களில் சொல்லவே தேவையில்லை. சீனவெடி, அனுமார்வெடி, ஈக்கில்வெடி......... என்று பழங்கள், சொக்கிளேட்ஸ்சோடு நிறைய வெடியும் கட்டாயம் கொண்டு வருவார்.

மார்கழியிலேயே உயரத் தடியில் தென்னோலை கட்டி வீடெல்லாம் தூசு தட்டி, ஈக்கில் வார்ந்து விளக்குமாறு கட்டி வீடெல்லாம் கழுவி பழையன எறிந்து, புதியனவோடு தைப்பொங்கலைக் கொண்டாடியிருந்தாலும், அப்பா வர முன்னமே அம்மா மீண்டும் ஒரு தரம் சித்திரைப் புத்தாண்டுக்காய் வீட்டை மூலைமுடுக்கு விடாமல் கூட்டித் துப்பரவாக்கி மஞ்சள் தெளித்து விடுவா. அத்தோடு சித்திரைக்குப் பொங்க என்று பயறு வறுத்துத் திரித்து, சேரல் பச்சை அரிசி வாங்கி பிடைத்துத் துப்பரவாக்கியும் விடுவா. அது மட்டுமல்லாமல் எங்களுக்கும் சித்தப்பாமார், மாமிமார், அப்பாச்சிமார் எல்லோருக்கும் புது உடுப்பு வாங்கியும் தைத்தும் வைத்து விடுவா. அண்ணன் சித்தப்பாவோடு சேர்ந்து மாவிலை பிடுங்கி ஒவ்வொரு அறை வாசல் நிலையிலும் கட்டியிருக்கும் கயிற்றில் மாவிலைத் தோரணத்தைக் கொழுவி விடுவார். நானும் உதவி செய்வேன்.

அப்பா விடியத்தான் வந்தாரென்றால் வந்ததும் தோய்ந்து, புதிய வேட்டியைக் கட்டிக் கொண்டு சூரியன் தெரியக் கூடிய இடமாகப் பார்த்து, முற்றத்தில் மூன்று கல்லு வைத்து பொங்கல் பானையை அடுப்பில் வைத்து விட்டு அம்மாவுக்குத் தேங்காய் துருவிக் கொடுத்து, பொங்கலை ஆரம்பித்து வைப்பார். அரிசையைப் பிடைத்தது, கழுவியது, எல்லாம் அம்மா என்றாலும் பால் பொங்கும் போது அரிசியைப் போடுவது அப்பாதான். பொங்கல் பானையைச் சுற்றி மாவிலை கட்டுவதும் அப்பாதான். குத்துவிளக்கை அம்மாவே ஏற்றி விடுவா.. வழமையாக வெள்ளிக்கிழமைகளில் ஒரு திரிதான் சுடர் விடும். புத்தாண்டு என்றால் மூன்று அல்லது ஐந்து திரிகள் ஏற்றப்படும். குத்துவிளக்கு கூடு பத்தி எரிந்து விடாமல் இருக்க அடிக்டி கவனித்து தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்வதுவும் அம்மாதான்.

வறுத்த ஏலத்தின் தோலை உடைத்துக் கொடுப்பதும், முதலில் அம்மா பயறு உடைக்கும் போது அம்மாவின் கையோடு சேர்ந்து என் கையையும் வைத்து திருகணையை சுழற்றுவதும் எனக்குப் பிடித்த வேலைகள்.

அப்பா தேங்காய் துருவும் போது சில்வர் சட்டியில் வெள்ளை வெளேரென்று விழும் பாலும் இனிப்பும் கலந்த முதற் பூவையும், வெட்டும் போது கஜூவையும், முறிக்கும் போது கரும்பையும் எடுத்துச் சாப்பிட ஆசை வரும். ஆனால் சுவாமிக்குப் படைக்கும் முன் எதையும் சாப்பிடக் கூடாது. சுவாமி கோவிப்பார். என்று அம்மாவும் அப்பாவும் ஏற்கெனவே சொல்லியுள்ளார்கள். அதனால் மனசைக் கட்டுப் படுத்திக் கொள்வேன். வீடெல்லாம் தேங்காய்ப்பாலில் சர்க்கரை கொதிக்கும் பயறு கலந்த ஒரு இனிமையான வாசம் நிறைந்து பசி வயிற்றைக் கிள்ளும். ஆனால் தலைவாழை இலையில் மூன்று அகபபை பொங்கல் போட்டு, தயிர் விட்டு, வாழைப்பழம் வைத்து, கற்பூரம் கொழுத்தி, சாம்பிராணித் தட்டுள் கொதிக்கும் தணலில் புகைக்கும் சாம்பிராணியின் நடுவே சுவாமிப் படத்துக்கு ஆரத்தி எடுத்து அப்பாவுடன் சேர்ந்து நாங்களும் தேவாரம் படித்து கா.. கா... என்று கத்திக் கூப்பிட்டு காகமும் வந்து சாப்பிட்ட பின்தான் நாங்களும் பொங்கலைச் சாப்பிடலாம்.

இந்தக் கொண்டாட்ட நாட்களில் மேசையில் வைத்து கதிரையில் இருந்து சாப்பிடுவதெல்லாம் நடக்காது. சுவாமி அறையில் வாழை இலை போட்டு, சப்பாணியில் குடும்ப அங்கத்தவரில் ஒருவர் கூடத் தப்பாது ஒன்றாக அமர்ந்திருந்து சாப்பிடுவோம். மிகவும் சந்தோசமாக இருக்கும்.

பின்னர் எங்கள் வீட்டுப் பொங்கல் பக்கத்து வீடுகளுக்கும், பக்கத்து வீட்டுப் பொங்கலுகள் எங்கள் வீட்டுக்கும் வரும். நல்ல நேரம் பார்த்து புது வருசத்திலன்றே போக வேண்டிய வீடுகளுக்கு ஊர்ச் சொந்தக்காரர் எல்லோரும் மாறி மாறிப் போய் கண்டிப்பாகத் தேநீர் அல்லது கோப்பி குடித்துச் செல்வார்கள். அது ஒரு வியாழனாக இருந்தால் கள்ள வியாழன் கழுத்தறுக்கும் என்ற பயத்தில் காத்திருந்து அடுத்த நாள் ஒவ்வொரு வீடுகளாய்ப் போய் ஒரு வாய் தண்ணியாவது குடித்து வருவார்கள்.

முக்கியமான விசயத்தை மறந்து விட்டேன். கைவிசேஷம். இன்று எந்த நேரம் நல்ல நேரம் என்று பார்த்து கைவிஷேசம் வாங்குவார்கள். கொடுப்பார்கள்.
அம்மாவுக்கு எப்போதும் அப்பாதான் கைவிசேசம் கொடுப்பார். சுவாமிப் படத்துக்கு முன்னால் நின்று கும்பிட்டு அப்பா வெற்றிலைக்குள் வைத்துக் கொடுக்கும் பணத்தை அம்மா கண்ணில் ஒற்றி விட்டு கவனமாக சுவாமி அறை அலுமாரிக்குள் வைப்பா. அந்தக் காசை அடுத்த புதுவருடம் வரும் வரை செலவழிக்க மாட்டா.

இந்தக் கைவிஷேச நேரம் இரவானால் அன்று முழுக்க அம்மா காசெதையும் கையால் தொடவே மாட்டா. கடைக்குப் போக வேண்டிய தேவையோ, அதனால் காசைத் தொட வேண்டிய தேவையோ ஏற்படாதபடி முதலே எல்லாம் வாங்கி வைத்து விடுவா.

புத்தாண்டன்று எங்கள் முதல் விசிற் அப்பாச்சி வீட்டுக்காய்த்தான் இருக்கும். அதன் பின் அம்மம்மா வீடு. இரவு கோயில். காவடியும் பொங்கலும் என்று பட்டுப் பாவாடை சரசரக்க.............

(தொடரும்)

Tuesday, April 13, 2004

நினைவு நதியில் மனதின் ஜதி - 4


உலாந்தா(நிலஅளவையாளர்-சேவையர்) வீட்டு இலந்தைக் காணிக்குள் யாரும் சொல்லாமல் போக முடியாதாம். அவர்கள் பொல்லாதவர்களாம். பெரீய்ய்ய்ய்..ய வீட்டில் தாயும் இரு முதிர் கன்னிகளையும் தவிர வேறு ஆண்கள் யாரையும் நான் காண்பதில்லை. பணம் அவர்கள் பிரச்சனையில்லையாம். குணம் - அது - இலந்தைக் காணிக்குள்ளேயே யாரையும் விடாத அளவுக்குக் கஞ்சர் என்பதைத் தவிர வேறெதுவும் எனக்குத் தெரியவில்லை. பணம் வேறிடம் போகக் கூடாது என்பதற்காக பத்துக்குடி என்றழைக்கப் படும் தமக்குள்ளேயேதான் மணம் செய்து கொள்வார்களாம். அதனால்தான் அந்த வீட்டுக்குள் மாப்பிள்ளைப் பஞ்சம்.

மல்லிகைக்கலட்டி பாட்டி வீட்டுக்குப் போகும் வழியெல்லாம் இலந்தைக் காணிகள். அலம்பல் வேலிகள்தான் அவைகளின் அரண்கள். ஆனால் அதற்குள் முள், கல், ஊத்தை..... எல்லாம் இருக்கும் என்பதனால் அங்கெல்லாம் போகக் கூடாது என்பது அம்மாவின் கட்டளை. என்றாலும் வேலியோரம் எட்டிப் பார்க்கும் கொப்புகளில் இலந்தைக்காய் தொங்கினால் பார்த்துக் கொண்டு சும்மா போவோமா? சித்தப்பா(பரமகுரு) கல்லெறிந்து விழுத்தி விடுவார். சில வேளைகளில் பல தடவைகள் எறிந்து இலந்தைப் பழத்தைக் காணிக்குள்ளேயே விழுத்தி விட்டு வாய் பிளந்ததும் உண்டு. எப்படியாயினும் வெளியில் கொஞ்சமாவது விழும். உள்ளே போனால் நிறையப் பொறுக்கலாம். அம்மாவின் கட்டளையை விட காணிக்களுக்கு அங்கால் தெரியும் கொட்டிலுக்குள் பேய் வாழ்கிறது என்பதுதான் நாம் அந்தக் காணிகளுக்குள் துப்பரவாகவே கால் வைக்காததற்கான முக்கிய காரணம். சித்தப்பாவுக்கு எந்தெந்த வீடுகளுக்குள்ளும் கொட்டிலுகளுக்குள்ளும் பேய்கள் வாழ்கின்றன என்பது அத்துபடி.

அம்மாவுக்கு இன்னொரு பயம். ஒதுக்குப் புறமாக இருக்கும் இலந்தைக் காணிகளுக்குள் கள்ளர், காடையர் யாராவது நின்று எமக்கு ஆபத்து விளைந்து விடுமோ என்று. அதனாலோ என்னவோ எனக்கு எனது ஆத்தியடி வீட்டிலிருந்து தம்பசிட்டிப் பக்கமாக இருக்கும் புதியாக்கணக்கனில் இருக்கும் அப்பாச்சி வீடுவரை மட்டுந்தான் தனியப் போக அனுமதி. அந்த வழியெல்லாம் சொந்தக் கார வீடுகள். திலகம் அக்கா வீட்டுப் பின் காணிக்குள்ளும் தேன்இலந்தை, புளி இலந்தை எல்லாம் இருக்கிறது. இலந்தைக்காய்களில் ஒவ்வொரு மரத்துக் காய்க்கும் ஒவ்வொரு சுவை. அப்பா பயணத்தால் வந்தால் சந்தைக்குப் போய் பெட்டியாக இலந்தைக் காய், பழம் எல்லாம் கலந்து வாங்கிக் கொண்டு வருவார். அதை சுத்தம் செய்து பொடியாக்கிய செத்தல், உப்பு, மிளகு, கொஞ்சம் சீனி எல்லாம் கலந்து உரலுக்குள் போட்டு அம்மா ஒரு துவையல் செய்வா. ஆளுக்கு தோடம்பழ அளவிலான இரு உருண்டைகள் கிடைக்கும். உறைப்பு, இனிப்பு, மெல்லிய புளிப்பு எல்லாம் கலந்த அதற்கு ஒரு தனிச்சுவை. உறைப்பில் கண்களில் கண்ணீர் ஓடும்.

அதை விட எல்லா வீடுகளிலும் விலாட், கறுத்த கொழும்பான், வெள்ளைக் கொழும்பான், கிளிச்சொண்டு.......... என்று மாமரங்கள். சித்தப்பாவோடு போனால் ஏதாவதொரு வீட்டு மாங்காய் பிடுங்கப் பட்டு விடும். சித்தப்பா சாரத்தைச் சண்டிக் கட்டாக கட்டிப் போட்டு அதுக்குள்ளை ஒளிச்சுக் கொண்டு வருவார். கள்ள மாங்காய் பிடுங்கினது அப்பாச்சிக்கோ அல்லது அம்மாக்கோ தெரிஞ்சால் போதும். நல்லாக வாங்கிக் கட்டுவார். சின்னப் பிள்ளையளுக்கு நல்ல பழக்கம் பழக்கிறாய் எண்டு உபரியாய் இன்னும் கொஞ்சப் பேச்சும் கிடைக்கும்.

அவர்கள் காணாவிட்டால் எங்கள் பாடு படு குஷிதான். மாமியவை ஒருத்தருக்கும் சொல்ல மாட்டினம். ராணி மாமிக்கும் என்னைப் போல மாங்காய் என்றால் நன்றாகப் பிடிக்கும். அவ சின்னப்பாச்சிக்குத் தெரியாமல் தூள் உப்பு எல்லாம் கலந்து கொண்டு வருவா. சித்தப்பா மாங்காயைச் சுவரிலை எறிஞ்சு உடைப்பார். பிறகென்ன ஆளுக்கொரு துண்டு.. உப்பையும் தூளையும் தொட்டுத் தொட்டு. .......ம் இப்பவும் வாயூறுகிறது.

(தொடரும்)

Monday, April 12, 2004

விடுதலை வேண்டி.........!

காற்றோடு கை கோர்த்து
ஊர்க்கோலம் போகின்ற
மகரந்தத் துகள்களுக்கு
என் நாசித்துவாரமும்
பாதையாகிப் போனதில்
தொண்டைக்குழி வரை
மசமசத்தது

விடுப்புப் பார்ப்பதே
வேலையாக இருந்ததில்
விழிகளும் சிவந்தன

“அக்கா!
சித்திரைக்குப் பொங்கியாச்சே?”

பாதையில் ஒரு தமிழன்
பாசமாய் கேட்டான்

„...ம்ம்ம்...“
காலைப் பரபரப்பில்
பாணைக் கடிக்கவே
மறந்தேன் என்றால்
நம்புவானா...!

பாதி இரவில் விழித்திருந்து
ஊரில் வாழும் உறவுக்காய்
அழுதேன் என்றால்
நம்புவானா...!

கற்தரையில் எம்மவர்
நித்திரை கொள்வதை
ஊர்க்கடிதம்
சொன்னதில் தொடங்கி

இந்திய வல்லூறுகள்
எம்மவரை
உயிர் வதம் செய்வதில்
தொடர்ந்து

செம்மணிப் புதைகுழியில்
எம் பெண்மணிகள்
புதைந்தது வரை

துரையப்பா விளையாட்டரங்கிலும்
புதை குழிகள்
தொடர்வது வரை

சத்தியமாக நான்
சித்திரைக்கு
பொங்கவில்லை என்றால்
நம்புவானா...!

„ஓம் தம்பி பொங்கியாச்சு „

என் பொய்யில்
முகம் மலர்ந்து
முன்னேறிப் போறவனும்
மூக்கைத்தான் தேய்க்கிறான்
கண்களையும் கசக்குகிறான்

அழகிய மலர்களின்
நுண்ணிய மகரந்தக்களுக்கு
இவன் மூக்கும் பலிதானோ.....!

காற்றோடு கை கோர்த்து
ஊர்க்கோலம் போகின்ற
மகரந்தத் துகள்களிடமிருந்தாவது
அந்நிய மண்ணில்
அடைக்கலம் தேடும்
எங்கள்
மூக்குகளுக்கும் கண்களுக்கும்
விடுதலை வேண்டுமென
இயற்கையை வேண்டிநின்றேன்.

சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி
பிரசுரம் - எரிமலை - மே - 2000

Sunday, April 11, 2004

சினிமாப் பாடல்கள் - 7


நதி எங்கே வளையும் கரை இரண்டும் அறியும்
மதி எங்கே அலையும் ஆகாயம் அறியும்....
விதி எங்கே விளையும்.............???
அது யாருக்குத் தெரியும்...!

(உயிரோடு உயிராக படத்தில் இடம் பெற்ற பாடல்)

நதி எங்கே வளையுமென்பது கரைக்கும்
மதி எங்கே அலையும் என்பது ஆகாயத்துக்கும் தெரியும்
ஆனால் விதி............? அது எங்கே, எப்போது, எந்த ரூபத்தில் வரும் என்பது யாருக்கும் தெரியாது.

விரும்பி யாரும் பிறப்பதுமில்லை.
விரும்பிப் பாத்திரம் கிடைப்பதுமில்லை
முடிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோசமில்லை.


எந்த வித ஆர்ப்பாட்டமுமின்றி மிகவும் அமைதியான முறையில் பாடப்படும் இப்பாடலைக் கேட்கும் போதே மனதில் ஒரு கேள்வி எழும்.
வாழ்க்கை அதை நாம் வாழ்கிறோமா...?

உண்மையில் வாழ்க்கை அதை நாம் வாழ்கிறோமா...?
இதென்ன கேள்வி...! வாழாமல் வேறென்ன செய்கிறோம் என்ற இளக்காரமான கேள்வி தொக்கிய பதில் உங்கள் மனதிலும் எழலாம்.

எம்மில் எத்தனை பேர் மனதில் எதையிட்ட சலனமும் இன்றி வாழ்க்கை என்னும் மேடையில் எமக்குக் கிடைத்த பாத்திரத்தை சந்தோசத்துடன் ஏற்று வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தெளிவுடன் வாழ்கிறோம்.

"இப்பிடிச் செய்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருப்பமே! என்னோடுதானே அவன் படிச்சவன். அவனைப் போல என்னாலை முடியாமற் போச்சே.........! சா... பேய்த்தனம் பண்ணீட்டனே..! " என்று வருத்தப் பட்டு எமது நிலையில் நாமே திருப்தி கொள்ளாது எத்தனை தரம் சலனித்திருப்போம். அத்தனை தரமும் எமது சந்தோசங்களை நாங்கள் தொலைத்து விடுகிறோம் என்பதை மட்டும் மறந்து போகிறோம். எமக்குக் கீழே உள்ளவர் கோடி... என்று எப்போதாவது எண்ணிப் பார்க்கிறோமா? உயர்ந்தவர்களைப் பார்த்து தாழ்மை கொள்வதுதான் எமது பணியென்று கிடப்போம். மிஞ்சினால் பொறாமை கொள்வோம்.

நல்லவர்கள், மற்றவர் மேல் அனுதாபம் கொண்டவர்கள், எவர் மேலாவது பிரியம் கொண்டவர்கள், எமக்கென உறவுகளைச் சேர்த்துக் கொண்டவர்கள்.......... என்ற வரிசையில் நாம் இருந்தோமானால், "அது சரியா, இது சரியா, அவனுக்கேதாவது நடந்து விடுமா, இவன் மனதைப் புண் படுத்தி விட்டேனா........" என்பது போன்றதான உணர்வுச் சிந்தனைகளால் எம்மைக் குழப்பிக் கொள்வோம்.

ஒரு தாயாக இருந்தால் மகவை பாடசாலைக்கு அனுப்பி விட்டு அவனோ அவளோ வீட்டுக்குத் திரும்பி வரும் வரை சதா அதே நினைவாய் "சரியாகப் பாடசாலை போய்ச் சேர்ந்திருப்பானோ... அங்கு யாருடனும் சண்டை பிடிக்காமல் இருப்பானோ....... பரீட்சையை சரியாக எழுதியிருப்பானோ.. காலையில் சரியாகச் சாப்பிட்டிருப்பானோ... நல்ல படி வீடு வந்து சேருவானோ..." என்பது போன்றதான கேள்விகளால் மனசைக் குழப்பிக் கொண்டிருப்பதுவும் அந்த மகவு வீடு வந்து சேர்ந்ததும் அப்பாடா என்று நிம்மதியடைந்த கையோடு அடுத்து இன்னொன்றுக்காய் குழம்ப ஆரம்பிப்பதுவும் வழமையான விடயங்கள். தந்தையாயின் அவருக்கு இன்னுமொரு விதமான குழப்பம்.

இப்படியே......... சங்கிலித் தொடராய் உறவுகளைப் பிணைத்துக் கொண்டு.... சந்தோசங்களை மட்டும் தொலைத்துக் கொண்டு எதுக்காய் அலைகிறோம். வாழ்வின் அர்த்தத்தைப் புரிகிறோமா........?

இவ்வளவு மட்டுந்தான் என்றால் பரவாயில்லை. எங்கள் எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்துள்ள மிகப்பெரிய பயம் சாவைப் பற்றியது. நாம் இறந்து விடுவோம் என்ற பயத்தை விட எமக்குப் பிரியமானவர்களை இழந்து விடுவோம் என்ற பயம்தான் எமது மனதின் ஆழத்தில் அமுங்கிக் கிடந்து சதா மனதைப் பதைக்க வைக்கிறது.. பிறப்பவர் இறந்துதான் ஆக வேண்டும் என்பது நியதியென்றாலும் அதை எதிர் கொள்ள மட்டும் எமது மனம் தயாராக இருப்பதில்லை. ஏதாவது ஏடாகூடமாக நடந்திடுமோ..? என்றே எப்போதும் பயந்து கொண்டிருப்போம். எட்டு நாள் வாழும் பட்டாம் பூச்சி அநுபவிக்கும் அந்தச் சந்தோசத்தைக் கூட, இப்படியான பயம் நிறைந்த துன்பச் சலனங்களால் அறுபது வருடங்கள் வாழும் மனிதராகிய நாம் அநுபவிக்கத் தவறி விடுகிறோம்.

அதைக் கவிஞர்
எட்டுநாள் வாழும் பட்டாம் பூச்சி
இறப்பைப் பற்றி நினைப்பதுமில்லை
அறுபது வயதில் ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழ்வதுமில்லை

என்று மிகவும் சாதாரணமான வார்த்தைகளைக் கோர்த்துச் சொல்லி விடுகிறார்.

உண்மையில் நாளைக்கு என்ன நடக்கும் என்று யோசித்து யோசித்தே இன்றைய பொழுதை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை.
எந்த நிலையிலும் துவண்டு விடாது, நாளையை எண்ணிப் பயந்து கொண்டிராது இன்றைய வாழ்வை நாம் வாழ வேண்டும். அதற்காக எல்லாம் விதி என்று சொல்லி விட்டு, நாம் முயற்சி செய்யாதும் இருந்து விடக்கூடாது.

அதைக் கவிஞர் சொல்லும் விதம் மிகவும் அழகு.

நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர் துளியை கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து...


இவ் வரிகளைக் கேட்கும் போதே துன்பம் என்னும் ஆடையை களைந்து ஒரு புறம் வைத்து விட்டு இன்பத்தை அணிந்து வாழ வேண்டும் என்றதொரு துணிவும், எதிலும் மகிழ்வைத் தேட வேண்டுமென்ற மகிழ்வான எண்ணமும் நெஞ்சில் தோன்றுகிறது.

வாழ்வில் மரணம் என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த இழப்புக்கும் நாம் அஞ்சத் தேவையில்லை. எதை இழந்தாலும் மனம் தளர்ந்து போகாது மீண்டும் முயற்சித்தோமானால் அதைத் திரும்பப் பெற முடியாவிட்டாலும் வேறொன்றில் வெற்றியைப் பெற முடியும். இப் பாடலைக் கேட்கும் போது மனதில் அந்த அந்த நம்பிக்கையும் தைரியமும் எழுகிறது.

கனவு காண்பது கண்களின் உரிமை
கனவு கலைவது காலத்தின் உரிமை
சிதைந்த கனவைச் சேர்த்துச் சேர்த்து
அரண்மனை கட்டுவது அவரவர் திறமை
ஒவ்வொரு நொடியிலும் உன்னதம் காண்பது
உலகில் பிறந்த உயிர்களின் உரிமை


பாடலின் வரிகள் அர்த்தங்களில் மட்டும் அழகு கொண்டிராமல், அதைக் கவிதையாக்கிச் சொல்லிய விதத்திலும் மிகுந்த அழகைக் கொண்டுள்ளது.

சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி

Saturday, April 10, 2004

ஈழமண்ணில் மீண்டும் போர்க்கோலம்
எம் நெஞ்சங்களில் சோக ராகம்


Thursday, April 08, 2004

திசைகளில் வெளியான கதையில் பிரதேசவாதம்?

திசைகள் மின்னிதழில் வெளியான எனது பயணம் சிறுகதைக்கு
ஜீவமுரளியின் எதிர்வினையும் அவருக்கான எனது பதிலும் இம்முறை திசைகளில் வெளியாகியுள்ளது.
அதை இங்கேயும் பதிக்கிறேன்.


தோழமையுடன் சந்திரவதனாவிற்கு

ஒரு ஆப்பிரிக்க ஆண்தனத்திற்கும், வெள்ளைக்கார ஆண்தனத்திற்கும் வித்தியாசங்கள், அல்லது ஆசிய மதிப்ணபீடுகளின் பெறுபேறுகள் என்னவென்றால் எங்களின் வெள்ளைத்தோல் அடிமை மனநிலைதான்.

ஒரு ஆணின் புத்தி என்ற வகையில் உங்களின் மதிப்பீட்டுடன் உடன்படுகிறேன்.;ஒரு ஆபிரிக்கன் என்ற உங்களின் இனவாத உணர்வுப்புத்தியின் கீழ் வெளிப்படுவனவெல்லாம் யாழ்ப்பாண கிடுகு வேலி விசயங்களே.

இனவாதமும் சாதிவெறியும் எந்த இலக்கியவாதியையும் விட்டுவைப்பதில்லை

அன்புடன்
ஜீவமுரளி


------------------------------------------------------------------------------------

வணக்கம் ஜீவமுரளி!

உங்கள் தோழமை நிறைந்த கருத்துக்கு மிகவும் நன்றி.

இனம், மதம், தேசியம், நாடு என்ற பேதமின்றி எங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்தம் குணங்களும் இந்நாட்டவர் நல்லவர் என்றோ அல்லது இந்நாட்டவர் கெட்டவர் என்றோ சொல்ல முடியாதபடிக்கு எல்லோரும் மனிதர்கள் என்பதற்கமைய பல்வேறு இயல்புகளைக் கொண்டுள்ளது.

ஆனால் பழக்கவழக்கங்களும், பண்புகளும் அந்தந்த நாட்டுக்கேற்ப, நகருக்கேற்ப, கிராமத்துக்கேற்ப, மதத்துக்கேற்ப......... என்று மாறுபடுகிறது.

திடீரென்று புரியாத பாசையில் கதைக்கும் பெரிய சத்தம் கேட்டது. ம்...... புகையிரதம் நின்றது கூடத் தெரியாமல்........நான். அதற்கிடையில் அடுத்த தரிப்பு நிலையம் வந்து விட்டது. ஏறுவோரும் இறங்கியோரும் தத்தமது திசைகளில் வெளியில் விரைய.. ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த சில பெண்களும் ஒரு ஆடவனும் தமது உயர்ந்த குரல்கள் மற்றவர்களைத் தொந்தரவு செய்யுமே என்ற எந்தவிதப் பிரக்ஞையுமின்றி அடிக்குரலில் உரத்துப் பேசியபடி நானிருந்த பெட்டியினுள் ஏறினார்கள்.

இவன் ஆப்பிரிக்க நாட்டவன் என்பதாலோ என்னவோ எனக்கு விருப்பமில்லையென்று சொன்ன பின்னும் - தொலைபேசி இலக்கத்தைத் தருகிறாயா..? முகவரியைத் தருகிறாயா..? - என்று கரைச்சல் படுத்திக் கொண்டே இருந்தான்.

எனது கதையில் வந்த இந்த வரிகளில் ஆபிரிக்க நாட்டவரின் பண்போ அன்றிப் பழக்கவழக்கமோதான் சுட்டப் படுகிறது. ஆபிரிக்க நாட்டவன் கூடாதவன் என்ற தொனி எந்தக் கட்டத்திலும் இல்லை.

இதற்குள் பிரதேசவாதத்தையோ அல்லது இனவாதத்தையோ பார்க்க முனைந்த உங்கள் மனதுள்தான் இனவாதம் தொனிக்கிறது. யாழ்ப்பாணக் கிடுகுவேலி என்ற உங்கள் வார்த்தையில் தொனிக்கும் கடுப்பில் உங்கள் பிரதேசவாதமும், வெள்ளைத்தோல் அடிமைநிலை என்ற உங்கள் வார்த்தையில் தொனிக்கும் எரிச்சலில், வெள்ளைத்தோலின் மேல் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பும் கறுப்புத்தோலின் மேல் நீங்கள் கொண்டுள்ள தாழ்வு மனப்பான்மையும் அதனால் ஏற்பட்ட அடிமை மனப்பான்மை உணர்வுகளும் தெரிகின்றன.

ஐரோப்பியர்களை இனத்துவேசம் பிடித்தவர்கள் என்றும் கலாச்சார சீரழிவாளர்கள் என்றும் சொல்லித் திட்டும் பல ஆசியரை நான் சந்தித்துள்ளேன். உண்மையில் இந்த இனத்துவேசம் என்பது இப்படித் திட்டும் ஆசியர்களிடம்தான் குறிப்பாக எமது இனத்திடம்தான் அதிகமாக உள்ளது என்பதை நான் அடித்து வைத்துச் சொல்லுவேன்.

ஓரு ஐரோப்பியனின் நல்ல பண்புகளை நல்ல கண் கொண்டு பார்க்கத் தெரியாதவர்கள்தான் இப்படி வெள்ளைத்தோல், கறுப்புத்தோல் என்று பேச முற்படுவார்கள்.

ஒரு ஐரோப்பியனுக்கு உள்ள பண்புக்கும் ஆப்பிரிக்கனுக்கு உள்ள பண்புக்கும் இடையில் நிறைய வித்தியாசம் உண்டு. அதை நீங்களோ நானோ மறுக்க முடியாது. ஐரோப்பியன், ஆபிரிக்கன் என்று மட்டுமல்ல நான் மேலே குறிப்பிட்டது போல பழக்கவழக்கங்களும், பண்புகளும் அந்தந்த நாட்டுக்கேற்ப, நகருக்கேற்ப, கிராமத்துக்கேற்ப, மதத்துக்கேற்ப......... வளர்ந்த சூழ்நிலை, வளர்க்கப் பட்ட விதம், பிறந்ததிலிருந்தே அவர்களோடு ஊறிய சில நடைமுறைகள் என்பவற்றைப் பொறுத்து மாறுபடும்.

ஐரோப்பியரிடம் ஒரு பொது இடத்தில் பேசும் போது மற்றவர்களைத் தொந்தரவு பண்ணாத விதமாக மெதுவாகப் பேசும் தன்மை உண்டு. ஆப்பிரிக்கரிடமும், துருக்கியரிடமும் மற்றவர்கள் பற்றிய பிரக்ஞை இன்றி பொது இடங்களில் தமது பாசைகளில் உரத்துப் பேசும் தன்மை உண்டு. விதிவிலக்காக இவர்களில் ஒரு சிலர் இருந்தாலும் பெரும்பான்மை சமூகத்திடம் திருத்திக் கொள்ளப்பட வேண்டிய இந்தக் குறைபாடுகள் நிறைந்த தன்மைகள் நிறையவே உள்ளன. இதே போல ஆசியர்களிடமோ அன்றி, ஆப்பிரிக்கர்களிடமோ உள்ள நல்ல பண்புகளில் சில ஐரோப்பியர்களிடம் இல்லாமல் இருக்கிறது. இங்கு இனவாதமோ நிறபேதமோ கருத்தில் கொள்ளப் படத் தேவையில்லை. பிறப்பிலிருந்தே அவரவர்களோடு கூட ஒட்டி வந்த சில பழக்க வழக்கங்கள் அவர்களைப் பண்புகளால் பிரிக்கிறது.

உதாரணத்துக்கு எங்களுக்கு முந்தைய தலைமுறை எமது தலைமுறையை அடித்துத்தான் படிக்க வைத்தார்கள். - அடியாத மாடு படியாது - என்று சொல்லி கண்டிப்பாக அடித்துத்தான் வளர்க்க வேண்டும் என்பது போன்றதொரு மாயையை எம்முள் கூட ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். இதன் காரணமாக இன்றும் கூட ஐரோப்பியாவில் கூட எம்மவர் தமது பிள்ளைகளின் பிரச்சனைகளின் போது முதல் ஆயுதமாக - அடி - யைத் தான் கையாள்கிறார்கள். இதுவே ஒரு ஐரோப்பியனாக இருந்தால் பிரச்சனை என்றதும் பிள்ளை பாடசாலையால் வந்ததும் முதலில் அவனைச் சாப்பிட வைத்து அதன் பின் இன்று உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும் என்று சொல்லி அதற்கொரு நேரத்தைக் குறித்து அதன் பின் வீட்டிலோ, அல்லது வெளியில் நடந்தோ, அல்லது ஒரு பூங்காவிலோ மிகவும் அமைதியாகவும், ஆறுதலாகவும் பேச்சைத் தொடங்கி... பிரச்சனையைப் பற்றிப் பேசி, பிள்ளையின் மனநிலையை அறிந்து.... பிரச்சனை தீர்க்கப் படுகிறது. (100வீதமான ஐரோப்பியப் பெற்றோர்களும் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்றோ இது விடயத்தில் பிழை விடமாட்டார்கள் என்றோ சொல்வதற்கில்லை. விதிவிலக்குகள் எங்கும் உண்டு.) இதுவே ஒரு தமிழன் வீட்டில் என்றால் இது ஒரு பிரளயமாகி விடும். இந்தப் பண்பு அதாவது பிள்ளைகளின் பிரச்சனைகளைக் கையாளும் பண்பு கூட நாட்டுக்கு நாடு வேறு படுகிறது.

இதே நேரம் ஒரு ஆப்பிரிக்கனோ அன்றி ஒரு ஆசியனோ சிறு வயதிலிருந்தே ஐரோப்பியாவில் வாழும் நிலை ஏற்படும் போது அவனது பண்பு இன்னும் வேறு விதமாக இருக்கும். தந்தையைப் போல பொது இடத்தில் சத்தம் போட்டுப் பேச மாட்டான். ஏனெனில் அவன் ஐரோப்பியரின் பண்பையும் பார்த்துக் கொண்டே வளர்கிறான். அவனது பண்புகள் அவன் வீட்டுக்குள் நடைமுறையில் இருக்கும் சில பண்புகளும், ஐரோப்பியப் பண்புகளும் கலந்து தனது வசதிக்கேற்ப தெரிவு செய்யப் பட்டு நல்லதோ கெட்டதோ வேறுபட்டதாகவே இருக்கும்.

இதே போலத்தான் பெண்களை அணுகும் முறையிலான பண்புகளும் ஆணின் குணம், அல்லது பெண்ணின் குணம் என்பதோடு மட்டும் நின்று விடாது இனம் மதம் இடத்துக்கேற்பவும் வேறுபடுகிறது.

உதாரணத்துகுக்கு ஒன்று சொல்கிறேன்.

இது சில மாதங்களின் முன் லண்டனில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம். கணவனை இழந்த அந்தத் தமிழ்ப்பெண் 12 வருடங்களாக அந்த அலுவலகத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். அங்கு அதுவரை கடமையில் இருந்த அனைத்து ஆங்கிலேயர்களும் அப்பெண்ணின் நிலையையும், நல்ல குணத்தையும் கவனத்தில் கொண்டு அவரோடு மிகவும் கண்ணியமாகவும், நட்பாகவும் பழகி வந்தார்கள். கணவன் இல்லை என்ற காரணமோ அல்லது பெண் என்ற காரணமோ அப் பெண்ணுக்கு அதுவரை அங்கு ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தவே இல்லை. 12 வருடங்களின் பின் முதன் முதலாக அங்கு ஒரு திருமணமான தமிழன் வேலைக்கு வந்து சேர்ந்தான். அந்தப் பெண் நட்பாகத்தான் அவனைப் பார்த்துச் சிரித்து வைத்தாள். அடுத்த நாளே அந்தத் தமிழன் இடைவேளையின் போது அவள் மேசைக்கு வந்து கதை கொடுத்து கணவன் இல்லாமல்தானே இருக்கிறாய் இரவுகளுக்கு நான் துணையாகிறேன் என்ற கருத்துப் படப் பேசினான். அந்தப் பெண் எவ்வளவோ சொல்லியும் அவன் அவளைத் தொந்தரவு செய்வதை நிறுத்தவேயில்லை................ இப்படி நடந்து கொண்டவன் ஆயிரத்தில் ஒரு தமிழன் அல்லது லட்சத்தில் ஒரு தமிழன் என்று நீங்கள் கூறலாம். ஆனால் ஐரோப்பியர்களை விட, கலாச்சாரம் பற்றி வாய்கிழியப் பேசும் எமது தமிழர்களிடம்தான் இந்தப் பண்பு அதிகமாய் உள்ளது.

இது போலத்தான் எனது கதையில் நான் குறிப்பிட்ட பண்பும். ஆண் பெண் மனிதன் என்பதற்கு மேலால் இடத்தோடும் வளத்தோடும் ஒட்டிய பண்பும் நிட்சயமாக ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கிறது.

கறுப்புத்தோல் வெள்ளைத்தோல் என்ற பாகுபாடு வெள்ளையர்களை விட கறுப்பர்களிடம்தான் நிறைய உண்டு. கறுப்புத்தோலுக்கு அவர்கள் தரும் மதிப்பை வெள்ளைத்தோலுக்கு உங்கள் போன்ற எம்மவர்கள் கொடுப்பதில்லை.

இதற்குள் அவர்களுக்குத் துவேசம் என்ற கூற்று வேறு. வெள்ளையர்களின் நல்ல பண்புகளைப் பற்றிப் பேசினாலே மனசு பொறுக்காத எம்மவர்கள்தான் உண்மையில் சரியான துவேசம் பிடித்தவர்கள்.

நட்புடன்
சந்திரவதனா செல்வகுமாரன்

ஓடையிலிருந்து ஒரு கவிதை

சுவாசித்தலுக்கான நியாயங்கள் - சகாரா

ஓடை + தங்கமணி

தங்கமணி எதை எழுதினாலும் அதில் ஒரு கவித்துவம் தெரிகிறது. மிகவும் நன்றாக எழுதுகிறார்.

ஓடையில் கவிதையாகக் கொட்டிக் கிடக்கிறது.
அருமையான பல கவிதைகள்.

Wednesday, April 07, 2004

தொட்டில் மரணம் என்பது என்ன?

சத்தமே இல்லாமல் வந்து கைக்குழந்தைகளின் உயிர்மூச்சை, அமைதியாக நிறுத்தி கொடூரம் செய்யும் தொட்டில் மரணம் என்பது என்ன? எப்படி இது நிகழ்கிறது? என்ற பல தாய்மார்களின் பதற்றமான கேள்விக்கு விளக்கம் தருகிறார் குழந்தைகள் நிபுணரான டாக்டர் பாலச்சந்திரன்.

Tuesday, April 06, 2004

முத்தம் என்ன செய்யும்?

இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற மேரி க்யூரி

பிரசவத்தின் மூன்று முக்கிய கட்டங்கள்

மனம் ஒரு குரங்கு

மனம் ஒரு குரங்கு என்றாலும்
பொதுவாக ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவ எனக்கு மனம் ஒப்புவதில்லை.
ஒன்றில் கால் வைத்து விட்டால் தகுந்த காரணமின்றி அதிலிருந்து நான் வெளிநடப்புச் செய்வதில்லை.

இப்படியிருக்க yarl.net இன் அறிமுகம் கிடைத்ததால் அதிலே Comments பகுதியும் சுலபமாக உருவாவதால் அதில் எனக்கு ஒரு வலைப்பூவைத் தயாரித்துப் பார்த்தேன்.
இந்த இடையில் நேற்றுத்தான் மதி Comments பகுதியை எப்படி Blogs இல் இணைக்கலாம் என்ற வித்தையை எனக்குக் காட்டித் தந்தா.

இப்போ எதற்காக நான் இந்த blog ஐ விட்டு விட்டு yarl.net க்குப் போக வேண்டும் என்று மனசு கேட்கிறது. அப்படியென்றால் அதை என்ன செய்வது? குழப்பம் தான். மனம் ஒரு குரங்குதான்.

Friday, April 02, 2004

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா செளக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் செளக்கியமே
கருடன் சொன்னது.......
மிகுதி தமிழ்ஓவியத்தில்

Thursday, April 01, 2004

Car accident

கடந்தவருடம் காலையில் நான் வேலையில் நின்றபோது எனது கைத்தொலைபேசி சிணுங்கியது.
எனது மகன் துமிலன்தான் எடுத்திருந்தான்.

மிகவும் அனுக்கமான குரலில் -
"அம்மா..! நான் மருத்துவமனையில் நிற்கிறேன். Car(கார்) அக்சிடெண்ட் ஆகி விட்டது.
என்னை வந்து abholen செய்யுங்கோ.(கூட்டிக் கொண்டு போங்கோ)"


ஒரு கணம் மனம் பதறியது.
"உனக்கு.... ஏதும் பாரதூரமாக...?"

"இல்லை. nicht so schlimmm(அவ்வளவு பாரதூரமில்லை).
கழுத்தில் கொஞ்சம் நோ. Bandage போட்டிருக்கிறார்கள்.
Car(கார்)தான் சப்பளிந்து விட்டது.
Total schaden.(பாவிக்க முடியாதபடி முழுவதுமாகச் சிதைந்து விட்டது)"

"யாரில் பிழை?"


"என்னில்தான். நான் recht vor links(வலது இடது) பார்க்கவில்லை. வலப்பக்கமிருந்து வந்த காருடன் மோதி விட்டேன்."

ம்......... கார் வாங்கி ஒரு வருசம்தான். இன்னும் புதுத்தன்மை குறையாமல் இருந்தது. சிதைந்து விட்டதென்றால்...........?
காப்புறுதி நிறுவனம் புதுக்காருக்குப் பணம் கொடுக்கும். ஆனால் அடுத்த வருடம் காப்புறுதியின் கட்டுத்தொகை தலைக்கு மேல் ஏறிவிடும்.
எப்படிச் சமாளிப்பதோ....?
இப்ப எப்படி மருத்துவமனைக்குச் செல்வது? அனுங்கிறதைப் பார்த்தால் எலும்பெல்லாம் நல்லாக் குலுக்குப் பட்டிருக்கும் போலை இருக்கு. பாவம். எனது காரையும் கணவர் கொண்டு சென்று விட்டார். தலைமை அதிகாரியிடம் கேட்டு உடனடி விடுப்பு எடுத்தாலும் எப்படி அங்கு போய்ச் சேர்வது...? கணத்துக்குள் மனசு கனக்க எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்த அந்தக் கணத்துள்தான் நினைவு வந்தது. இன்று ஏப்ரல் ஓராந்திகதி.

"ஏய்...........? என்ன... விளையாடுறியோ...?
இன்று ஏப்ரல் 1st. "


எதிர் முனையில் அவன் சிரித்தான்.
எனக்குப் பெரிய நிம்மதி

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite