![]() |
Thileepan & Me |
நாம் இங்கு ஜேர்மனியில் வந்திறங்கிய போது திலீபனுக்கு ஒன்பது வயதுகள்தான் நிரம்பியிருந்தன. அந்த வயதே அவனுக்கு ஒரு பிரச்சனையாக இருந்தது. குழந்தையும் அல்ல. வாலிபனும் அல்ல. இடைப்பட்ட வயதில் இன்னொரு நாட்டோடு ஒன்ற முடியாது மிகவும் அவதிப்பட்டான். மனதால் நொந்தான். விரக்தி அவனோடு கூடவே தொடர்ந்தது. எமது நாட்டுக்குத் திரும்பி விட வேண்டுமென்பதே அவனது குறியாக இருந்தது.
மற்றைய எனது இரு குழந்தைகளும் வயதில் குறைந்தவர்களாக இருந்ததால் அவர்களிடம் இவ்வளவு தூரமான பாதிப்பு இருக்கவில்லை. அவர்கள் விளையாடிக் கொண்டு திரிந்தார்கள். அம்மாவும், அப்பாவும் அருகில் இருந்தால் போதும் என்ற மாதிரி வாழ்ந்தார்கள்.
ஆனால் திலீபன் ஊர் நினைவுகளை இறக்கி வைக்கவும் முடியாமல், ஜேர்மனிய வாழ்வோடு ஒட்டவும் முடியாமல் மனதுக்குள் மிகவும் போராடினான். வந்த உடனேயே 3ம் வகுப்பில் சேர்ந்ததால் மொழியோடும் போராடினான்.
இன்று அவன்தான் ஒரு பொறுப்பாளர் பதவியில் அமர்கிறான்.
![]() |
Bausparkasse Schwäbisch Hall |
அங்கு எனது மகனுக்கு வேலை கிடைத்த போதும் சரி, பின்னர் நான் அங்கு போய் அவனைச் சந்தித்த பொழுதுகளிலும் சரி எனக்குள் ஒருவித பிரமை ஏற்பட்டதுண்டு.
ஆனால் அவனுக்கு அது போதவில்லை. அதை விட உயர வேண்டும் என்ற அவா. அதற்காக அவன் செலவுசெய்தது கிட்டத்தட்ட இரண்டு வருடப் பொழுதுகள். பரீட்சை, பரீட்சை, பரீட்சை.
ஒரு பொறுப்பாளனாவதற்கு அவர்கள் செய்த பரீட்சைகள் பல. அறிவு, ஆளுமை, பொறுமை, நிர்வாகத்திறன், சினேகத்தன்மை,.. என்று எத்தனையோ விதமான சோதனைகள். சில நாட்களில் ஒரு நாள் முழுவதும் பல பெரியவர்களின் நடுவே நின்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுக்க வேண்டும். சில நாட்களில் ஒவ்வொரு விதமான வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளின் போதும் எப்படி அவர்களைச் சமாளிப்பது என்பதை நடித்துக் காட்ட வேண்டும். இப்படி எத்தனையோ!
அவனது அயராத உழைப்பும் , முயற்சியும், தன்னம்பிக்கையும் இன்று அவனை இன்னும் சில படிகள் உயர்த்தியுள்ளன.
Bausparkasse யில் ஒரு பிரிவுக்கு இன்றிலிருந்து அவன் பொறுப்பாளன். பெரிதுவக்கிறது மனது.
சந்திரவதனா
1.10.2014
Thileepan at work place