
நீட்டி முழக்காமல் சொல்ல வந்தததை ஒரு குறும்படம் போல இரத்தினச் சுருக்கமாகச் சொல்லி விட்ட அருமையான படம். சாதாரணமாகவே சிவசங்கரியின் கதைகள் சமூகப் பிரக்ஞை நிறைந்தனவாகவும், வாசித்து முடிந்ததும் மறந்து போய் விட முடியாத படி மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவனவாகவும் இருக்கும். இந்தக் கதையும் சோடை போகவில்லை. படத்தைப் பார்த்த பின் மனசு கனத்தது.
குட்டி படம் வறுமையான குடும்பத்தில் பிறந்த பெண்குழந்தையான கண்ணம்மா, சமூகத்தின் சீர்கேடுகளுக்குள் சிக்கிப் போவதை மிகவும் அருமையாகப் படம் பிடித்திருக்கிறது. வழமையான படங்கள் போல ஆபாசமோ, அளவுக்கதிகமான அடி தடிகளோ இல்லாமல் படத்தைத் தந்திருக்கிறார்கள் ரமேஷ் அருணச்சாச்சலமும், ஜானகி விஸ்வநாதனும்.
வறுமையின் நிமித்தமோ, அன்றி வேறு காரணங்களுக்காகவோ குழந்தைகளை வேறு யாரிடமாவது அனுப்பிப் படிக்க வைக்கும், அல்லது வேலை பார்க்க வைக்கும் செயல் எத்துணை கொடுமையானது என்பதை படம் தெட்டத் தெளிவாகக் காட்டுகிறது. சின்னக் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதே ஒரு கொடுமையான செயல் என்றால் அந்தப் பிள்ளைகளை வேலைக்காக இன்னொரு வீட்டுக்கு அனுப்பி வைப்பது இன்னும் எத்துணை கொடியது..?
பெற்றோரின் கண் முன்னே அவர்களது அன்பிலும் அணைப்பிலும் வளர வேண்டிய குழந்தைகள், வெளியில் அனுப்பப் படும் போது, எந்தளவுக்கு உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் வதை படுகிறார்கள் என்பதை மனதைப் பிசைய வைக்கும் விதமாகக் காட்டுகிறது படம்.

திடீரென ஒரு நாள் - சட்டி பானைகளை விற்று வர என்று சந்தைக்குப் போன நாசர், லொறி ஒன்று மோதி இறந்து விடுகிறார். குடும்பத்தை வறுமை சூழ்ந்து கொள்கிறது. தந்தையின் அன்பை மட்டுமல்லாது, சோற்றைக் கூட இழந்து விடுகிறாள் கண்ணம்மா. வேலை வெட்டியின்றித் திரிந்தவள் தாயுடன் வேலை செய்யத் தொடங்குகிறாள். ஆனாலும் வறுமையின் கொடுமை பற்றி அறியாது வளர்ந்தவள்தானே. சோற்றுக்குக் கூட தாயிடம் சண்டை போடுகிறாள். கூழ் குடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள்.
என்ன செய்வதென்று தெரியாது தாய் அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்தான் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தான் வேலை பார்க்கும் அலுவலகத்து முதலாளி வீட்டிலே குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆள் தேவை என்று சொல்லி இவளைக் கேட்கிறாள். தாய் தயங்கித் தடுமாறிய போது அது வசதியான குடும்பம் நல்ல உணவும், உடையும் கிடைக்குமென்று சொல்லிச் சம்மதிக்க வைக்கிறாள்.
கண்ணம்மா வீட்டு வேலை செய்ய என்று பட்டணத்துக்குச் செல்கிறாள். இவளை வீட்டு வேலைக்கு எடுத்தவர்களான ரமேஷ் அரவிந்தும், கௌசல்யாவும் நல்லவர்கள். ரமேஸ் அரவிந் ஒரு முதலாளி. மனைவி கௌசல்யா ஒரு ஆசிரியர். இவளைச் சொந்தப் பிள்ளை போலவே அன்போடு பார்க்கிறார்கள்.
ஆனால் ரமேஸ் அரவிந்தின் தாய் எம்.என்.ராஜம். பொல்லாதவர். படத்தில் வில்லி அவர்தான். அவரும் இவர்களின் மூத்த மகனும் இவளை ஒரு வேலைக்காரி போலவே நடத்துகிறார்கள். பழைய சோற்றைக் கொடுப்பதுவும், அதைச் செய் இதைச் செய் என்று பாடாய்ப் படுத்துவதும் மனித நேயத்துக்கு மிகவும் அப்பாற்பட்ட விடயங்கள். சொன்னது போல இல்லாமல் பிள்ளையைப் பராமரிக்கும் வேலைக்கு மேலால் இன்னும் பல வேலைகளைக் கொடுக்கிறார்கள்.உணர்வுகளை மிதிக்கிறார்கள். கண்ணம்மாவைக் குட்டி ஆக்கியதே எம்.என்.ராஜம்தான்.
எம்.என்.ராஜத்தின் கொடுமைக்குள் சிக்கியிருக்கும் கண்ணம்மா அங்கு பட்டணத்தில் இன்னும் சில வீட்டு வேலை செய்யும் பெண்களைச் சந்திக்கிறாள். அவளது எதிர் வீட்டு வேலைக்காரப் பெண் இவள் போலக் குழந்தையல்ல. பருவப் பெண். அவள் அந்த வீட்டு ஆணால் பலாத்காரப் படுத்தப் படுவதைக் காணும் போதும், அந்தப் பெண் தற்கொலை செய்து விட்டாள் என்பதை அறியும் போதும், இவளிடம் தெரியும் மிரட்சி, முகபாவங்கள் ஒவ்வொன்றுமே மிக இயல்பு.
இந்த இடத்தில் வீட்டு வேலைகளுக்கு என்று செல்லும் குழந்தைகளின் வாழ்வு மட்டுமல்ல பெண்களின் வாழ்வின் அவலமும் வெளிச்சத்துக்கு வருகிறது.
பெற்றோர்களின் கண்களில் இருந்தும், கவனத்தில் இருந்தும் தள்ளிப் போகும் சிறுமிகளின் வாழ்வு எந்தளவுக்குச் சீரழிந்து போகும் என்பதை நறுக்கென்று நான்கு வார்த்தையில் சொல்லி விட்ட நல்ல படம்.
கண்ணம்மாவின் தாயாக வந்தவர் ஈஸ்வரி ராவ். நாசரும், ஈஸ்வரிராவும் கிராமத்துக்கேயுரிய இயல்பான பண்பட்ட நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். இலவசமாகவும் உயிரோட்டத்தோடும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் விவேக்குக்கு வழமைக்கு மாறாக சற்றுச் சீரியஸான பாத்திரம்.சீரியசோடு சேர்ந்த நகைச்சுவைகள் அவ்வப்போது வந்து விழுந்தாலும் கண்ணம்மா உதவி என்று கேட்குமளவுக்கு நல்லவனான பாத்திரம். விவேக்கினது உதவியுடன்தான் கண்ணம்மா தப்பியோட முனைகிறாள்.
அவள் புகையிரதத்தில் ஏறியதும் தப்பி விட்டாள் என்று மனசு அவளோடு சேர்ந்து குதாகலிக்கும் போதுதான் அவள் இன்னுமொரு சமூகச் சீரழிவாளனால் சிவப்பு விளக்குப் பகுதிக்குகாக விற்கப் பட்டு அழைத்துச் செல்லப் படுவது புரிகிறது. எதுவுமே புரியாது அம்மாவைக் கட்டியணைக்கும் கனவுகளோடு தனது கிராமத்தை நோக்கிய நினைவுகளோடு கண்ணம்மா புகையிரதத்தினுள் பயணிக்கிறாள். அத்தோடு படம் முடிகிறது. மனசு கனக்கிறது.
சந்திரவதனா
யேர்மனி
7.10.2004