Wednesday, December 17, 2008

மனஓசை (நூல் விமர்சனம்)

- Dr.எம்.கே.முருகானந்தன் -

உறங்காத மனமொன்று உண்டு' எனப் பாடினார் கவிஞர் ஒருவர். உண்மையில் அந்த ஒரு மனம் மட்டுமல்ல எந்தவொரு மனமுமே உறங்குவதில்லை.

சூழலில் நடக்கும் ஒவ்வொன்றும் அதனைப் பாதிக்கவே செய்கின்றன. தூக்கத்தில் கூட மனம் உறங்கி விடுவதில்லை. அது அன்றாட நிகழ்வுகளை அசை போட்டு கனவுகளாக அரங்கேற்றுகின்றன.

மனம் உறங்கிவிட்டால் மனிதன் மரணித்துவிட்டான் என்றே கருத வேண்டும். ஆனால் பெரும்பாலும் மனங்கள் உயிர்ப்பின்றி வெறுமனே வாழாதிருந்து விடுவதில்லை. அவை அன்பில் நெகிழ்கின்றன. துன்பத்தில் கலங்குகின்றன. கலாசார சீரழிவுகளைக் கண்டு மனம் குமுறுகின்றன. பண்பான செயல் கண்டு பெருமிதம் அடைகின்றன. அநீதியைக் கண்டு பொருமுகின்றன. அக்கிரமத்தைக் கண்டு பொங்கி எழுகின்றன.

ஆனால் ஒரு சிலரே தமது அனுபவங்களை படைப்பின் ஊடாகப் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

சந்திரவதனாவும் அத்தகையவர்தான். 'எந்த வார்த்தைகளாலும் ஆற்ற முடியாத பொழுதுகளை எனது எழுத்துகளாற்றான் தேற்றியிருக்கிறேன்.' என அவரே தனது முன்னுரையில் சொல்கிறார். துன்பங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதில் அதன் சுமையைக் குறைக்கிறார். மகிழ்ச்சியான கணங்களை பிட்டுத் தருகிறார்.

சந்திரவதனாவின் படைப்புலகம் எளிமையானது, அதன் நிகழ்வுகள் வாழ்வோடு ஒன்றியது. நாளந்தம் தம் வாழ்வில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் அவரின் மனத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை கற்பனை மெருகூட்டாது, அப்பட்டமாகப் பதிவு செய்கிறது.

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, நாகொல்லாகம், வவுனியா, மொஸ்கோ, ஜேர்மன், லண்டன், கனடா எனப் பயணப்பட்டுத் தேடப்பட்டு அவரது ஆழ்மனத்தில் உறைந்திருந்து மீட்கப்பட்ட புதையல்கள்தான் 'மனஓசை' என்ற சிறுகதைத் தொகுப்பு.

அங்கெல்லாம் சந்திக்கும் மக்களது, முக்கியமாக தமிழர் வாழ்வினைப் பதிவு செய்கிறது. ஆய்வாளனாக, சமூகவியலாளனாக, விஞ்ஞானியாக மனிதவாழ்வை சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளாக்கி பிய்த்துப் பார்க்கும் பார்வை அல்ல. ஒரு குடும்பப் பெண்ணின் பார்வை இது. அவளின் உள்ளுர் வாழ்வின் நினைவுகளையும், அதன் எதிர்மறையான புலம்பெயர் வாழ்வின் கோலங்களையும் தெளித்துச் செல்கிறது.

ஆத்தியடி வீட்டில் இருக்கும் பிச்சிப் பூவின் மணத்தில் கிறங்கும் அதே மனம் ஜேர்மனியின் பனியில் உறைந்த மரங்களிலும் லயிக்கிறது.

'காய்த்துக் குலுங்க பச்சைப் பசேலென்று இலைகளுடன் இருந்த காசல் நட்ஸ் மரம்';. பின்னர் 'இலைகள் மஞ்சளாகி ... இலைகளே இல்லாமல் மொட்டையாகி,' பின் 'பனியால் மூடப்பட்டு ஒவ்வொரு கொப்பிலும் பனித்துளிகள் குவிந்து பரந்து அழகாக....' என்கிறர் ஓரிடத்தில்.

ஆம் அவருக்கு வாழ்வை ரசிக்கத் தெரிகிறது. மனசு பூரித்து போதையாக நிறைந்து வழிகிற நேரங்களில் மட்டுமின்றி மனசுக்குள் சோகம் சுமையாக அழுத்தி துயர் சொரியக் கரையும் கணங்களிலும் கூட இயற்கையின் மேலான வாஞ்சையை, மனித உறவுகள் மீதான அக்கறையையும் பரிவையும் அவரில் காண முடிகிறது. இந்த வாலாயம் அனைவருக்கும் கை கூடுவது அல்ல.

யாழ்ப்பாணச் சமூகம் எவ்வளவு தூரம் தாங்க முடியாத சுமைகளையும் சுமந்த போதும் அவ்வளவு தூரம் அதிலிருந்து மீண்டு வாழவும் செய்கிறது.

தந்தையை இழந்தவர் எத்தனை பேர்?

தாயை, சகோதரங்களை, உற்றார் உறவினர்களை, நண்பர்களை என எவர் ஒருவரையாவது இழக்காதவர் அம் மண்ணில் இருக்கிறார்களா?.

அங்கங்களை இழத்தல், வீட்டை இழத்தல், தொழில் இழத்தல் என மற்றொரு பக்கம்.

அதற்கு மேலாக தமது உயிருக்கும் ஆபத்து ஏற்படும்போது? தாய் மண்ணிலிருந்து பிரிந்தேனும் புதுவாழ்வு பெற விழைகிறது.

அதற்காக அச் சமூகம் கொடுத்த, கொடுக்கிற விலை என்ன? 'சொல்லிச் சென்றவள்' சிறுகதை முதல் சந்திராவின் அனுபங்களாக விரியும் பக்கங்களுக்கு ஊடாக பயணப்படும்போது அந்தத் துயரங்களில் மூழ்கித் திணறும் நிலை ஒவ்வொரு வாசகனுக்கும் ஏற்படவே செய்யும்.

காதல் கல்யாணமே இன்றைய யதார்த்தம்.
உலகம் அதற்கு மேலும் சென்று விட்டது.

கல்யாணமின்றி சேர்ந்து வாழ்வதும், திருமணமாகாமலே குழந்தைகள் பெறுவதும், விரும்பங்கள் மாறினால் கட்டியவனை அல்லது கட்டியவளை பிரிந்து செல்வதும், ஒற்றைப் பெற்றாருடன் குழந்தைகள் வாழ்வதும் இன்று மேலைத் தேச வாழ்வுக்கு அன்னியமான செயற்பாடுகள் அல்ல.

இவ்வாறு இருக்கையில் 'புகைப்படத்தைப் பார்த்துவிட்டு எங்கோ வாழும் ஒருவனுக்கு மனைவியாவதற்கு தயாராவதும், ..... கண்ணாலே காணதவனை நம்பி வெளிநாட்டுக்கு ஏறிப் போக அங்கு அவன் சட்டப்படி கலியாணம் செய்யாது அல்லாட வைப்பதும், திருப்பி அனுப்ப முனைய அவள் நிரக்கதியாவதும் இப்படி எத்தனையோ அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்கிறார்.

'பாதை எங்கே', 'விழிப்பு', 'வேசங்கள்', போன்றவை அத்தகைய படைப்புகள்.

'புலம் பெயர் வாழ்வின் பெண்கள் சார்ந்த அவலங்களை இவ்வளவு ஆழமாகப் பதிவு யாரும் பதிவு செய்யவில்லை' என்ற கருத்துப்பட இராஜன் முருகவேள் கூறியிருப்பதுடன் நானும் ஓம் படுகிறேன்.

அதே நேரத்தில் புலம் பெயர் வாழ்வின் இன்னொரு பக்கமாக, 'தீரக்கதரிசனம்' கதையில் வரும் ஒரு வயதான பாட்டாவின் வாழ்வில் மூழ்கும்போது எம் மனமும் கனடாவின் பனிபோல உறைந்து விடுகிறது.

'தாங்கள் காலமை வேலைக்குப் போற பொழுது தகப்பனை வெளியிலை விட்டு கதவைப் பூட்டிப் போட்டு போயிடுவினம்' மத்தியானம் சாப்பிடுறது, ரொயிலட்றுக்கு போறது எல்லாம் அவர்கள் வந்தாப் போலைதானாம்.

வீதியோரக் கல்லில் பனியில் உறைந்து, பசியில் துவண்டு, பேசுவதற்கும் ஆள் இன்றி ஒரு பிச்சைக்காரனைப் போல பரிதாபமாக அமர்ந்திருந்த யாரோ ஒரு பாட்டாவைப் பற்றிய தகவல் இது.

'அப்ப அவர் ஏன் இங்கை இருக்கிறார். நாட்டுக்குப் போகலாம்தானே' கதாசிரியர், கூட வந்த பிள்ளையிடம் கேட்கிறார்.

'அவையள் விட மாட்டினம். அவற்றை பெயரிலை வெல்ஃபெயர் வருகிதில்லோ'.

'சத்தமில்லாமல் ஒரு கொடுமை நடந்து கொண்டிருப்பதாக' கதாசிரியர் கூறுகிறார்.

'வீட்டு காவல் நாய்கள் போல இருக்கிறம்' என அவுஸ்திரேலியா சென்ற ஒரு முதியவர் என்னிடம் முன்னொரு போது கூறியபோது மனம் வருந்தினேன்.

இவை யாவும் வெறும் கொடுமை அல்ல. பணத்தின் முன், சொகுசு வாழ்க்கைக்கு முன் மனித உணர்வுகளே இவர்களுக்கு மரணித்துவிட்டதன் வெளிப்பாடு.

நெஞ்சை உலுக்கும் நிலை இது.

பெண்ணியம் அவரது படைப்புகளில் கருத்துநிலை வாதமாகத் துருத்திக் கொண்டு நிற்பதில்லை. முக்கியமாக ஜேர்மனி நாட்டில் சில தமிழ்ப் பெண்கள் படும் அவலங்களை மிகவும் யாதார்த்தமாகச் சித்தரித்துள்ளார்.

'தாலியை நிதானமாகக் கழற்றி வைக்கும்' 'விலங்குடைப்போம்' கதையின் சங்கவி,

'என்னோடை ஒரு நாள் கோப்பி குடிக்க வருவியோ' என்ற கேள்வியோடு அதற்கு மேலானா சம்மதத்தைத் தேடும் ஆபிரிக்காரனை உறுதியோடு மறுக்கும் 'பயணம்' கதையின் கோகிலா ஆகியோர் சற்றுத் துணிச்சல்காரர்கள்.

ஆனால் அதே நேரம் 'என்னப்பா இன்னும் வெளிக்கிடேல்லையோ?', 'ஏன்தான் பெண்ணாய்' போன்ற கதைகளில் வரும் பெண்கள் சாந்தமானவர்கள்.

குடும்ப வாழ்வில் தாம் தினசரி அடக்கப்பட்போதும் அதிலிருந்து வெளி வராமல் பொறுத்துக் கொள்ளும் பேதைகள். தங்களை மட்டும் யோசிக்காது குழந்தைகளையும் குடும்பத்தையும் நினைத்துப் அடங்கிப் போகும் அப்பாவிகள்.

உண்மையில் இது ஒவ்வொரு வீட்டிலும் நடப்பதுதான்.

கதைகளைப் படித்துவிட்டு உங்கள் வீட்டையும் சற்றுத் திரும்பிப் பாருங்கள்.

'டொமினிக் ஜீவா அவர்களின் எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து ...' என ஆரம்பிக்கும் இந் நூலின் தலைப்புக் கதையான பொட்டு கிளாஸ் சாதீயம் பற்றியது. தாழ்த்ப்பட்ட சாதியினர் மீதான உயர்சாதிப் பெண்ணின் பரிவை எடுத்துச் சொல்கிறது.

சந்திரவதனா செல்வகுமாரன், மற்றும் அவரது சகோதரி சந்திரா ரவீந்திரன் ஆகியோரை 80களின் ஆரம்பத்திலிருந்து அறிந்திருக்கிறேன். இவரது உலகின் ஒரு பகுதி எனது உலகமும் கூட.

அவரது வீடு எனது பருத்தித்துறை டிஸ்பென்சரியிலிருந்து எனது சொந்த ஊரான வியாபாரிமூலைக்கு போகும் பாதையில் இருக்கிறது.

அவரது படைப்புகளில் வரும் பாத்திரங்களான அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள் எனக்கும் பழக்கமானவர்களே.

ஏனைய பல பாத்திரங்களும் எனக்கு அறிமுகமானவர்களே.

பல நிகழ்வுகளும் எனக்கும் அன்னியமானவை அல்ல.

இதனால் இவரது இந்த நூலைப் படிக்கும்போது அக் காலத்தில் நடந்த பல நிகழ்வுகளை மீள அசைபோடும் வாய்ப்பு கிட்டியது.

ஆத்தியடி பிள்ளையார் கோவில், நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவில்.இவ்வாறு எவ்வளவோ!

நினைக்கும்போது எவ்வாறு எமது வாழ்வு சிதைந்து விட்டது. வாலறுந்த பட்டமாக, வேரறுந்த மரமாக அல்லாடுகிறோம் என்பது மனத்தை உறுத்துகிறது.

அவரது 'மன ஓசை' என்னையும் அல்லற்படுத்துகிறது.

யாழ் மண்ணோடு உறவு கொண்ட அனைவரையும் அவ்வாறே அல்லற்படுத்தும் என்பது நிச்சயம்.

சந்திரவதனா செல்வகுமாரன் இன்று இணையத்தில் மிகவும் பிரபலமானவர். பல இணைய இதழ்களில் அவரது பல படைப்புகள் வெளியாகின்றன. தனக்கென பல வலைப்பதிவுகளையும் வைத்திருக்கிறார்.

மேலும் பிரகாசமான படைப்புலகம் அவர் பேனாவிலிருந்து ஊற்றெடுக்கக் காத்திருக்கிறது எனலாம்.

முப்பது கதைகளை அடக்கி 195 பக்கங்கள் நீளும் இத் தொகுப்பை குமரன் பிரின்ரேர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள்.

எம்.கே.முருகானந்தன்

நன்றி:- தினக்குரல்- 14.12.2008
நன்றி:- எம்.கே.முருகானந்தன்

Friday, December 05, 2008

கரண்டி

'அக்கா, அக்கா...'

மெல்லிய, இனிய அந்தக் குரல் மணிமேகலையினுடையதுதான்.

நான் அவசரமாய் எழுந்து எனது அறை மேசையில் ஆயத்தமாக எடுத்து வைத்திருந்த நீள் சதுரத் தட்டை (TRAY) எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.

என்னவனும், குழந்தைகளும் இன்னும் கட்டில்களிலேயே. மணிமேகலை வர முன் ஆயத்தமாகி விட வேண்டுமென்பதால் நான் அரை மணி முன்பதாகவே எழுந்து எமது அறையிலிருந்து எட்டு அறைகள் தள்ளியிருக்கும் குளியலறைக்குச் சென்று பல் துலக்கி முகம் கழுவி வந்து விட்டேன். அதிகாலையில் வெறிச்சோடிக் கிடக்கும் ஐந்தாவது மாடியின் அந்த நீண்ட கொரிடோரில் தனியாக நடந்து போய் வரும் போது சற்றுப் பயமாகத்தான் இருக்கும். குளியலறை இன்னும் அதீத பயத்தைத் தரும். அதற்குள்ளே ஒரே நேரத்தில் ஆறுபேர் குளிக்கக் கூடியதாக ஆறு சவர்களும், 12 பேர் முகம் கழுவக் கூடியதாக 12 சிங்குகளும் உள்ளன. அந்தப் பெரிய குளியல் அறையில் அந்த அதிகாலையில் நான் மட்டும் நின்று முகம் கழுவும் போது ஏதோ ஒரு அசாதாரணத்தில் உடல் சில்லிடும். மூச்சைப் பிடித்துக் கொண்டு அவசரமாய் முகத்தைக் கழுவிக் கொண்டு ஓடி வந்து விடுவேன்.

அது மே மாதம். வசந்தகாலம். ஆனாலும் எனக்குக் குளிர்ந்தது. என்னவனும், என் குழந்தைகளும் என்னருகிலேயே இருந்தாலும் மனசு அமைதி கொள்ள மறுத்து அலைந்து கொண்டிருந்தது. என்னைப் பெற்றவர்கள், எனது உடன் பிறப்புகள் அத்தனை பேரையும் விட்டு வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஓடி விட்டிருந்தன. அகதி அந்தஸ்து இன்னும் தரப்படாவிட்டாலும் நான் இப்போது ஐரோப்பிய அகதி.

ஜேர்மனியின் ஸ்வல்பாஹ் நகரில் அழகாக வீற்றிருக்கும் அந்தப் பெரிய அகதி முகாம் முன்னர் ஒரு அரண்மனையாக இருந்திருக்க வேண்டும். பென்னாம் பெரிய வளாகத்தில், காவல் அரண்களும், பல அடுக்கு மாடிகளும், சுற்றி வளையும் பாதுகாப்புப் பாதைகளும், மேடைகளும் என்று பரந்து விரிந்திருந்த அந்தக் கோட்டை அப்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற பல அகதிகளால் நிறைந்திருந்தது. அவர்களுள் குழந்தைகளும், பெரியவர்களுமாய் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஈழத்தவர்களும் இருந்தார்கள். அகதிகளுக்கு உதவுவதற்கென்றே அங்கு பல சமூகநல உதவிகளில் அக்கறையுள்ளவர்கள் சிரித்த முகங்களோடும், கனிவான பார்வைகளோடும் திரிந்தார்கள். அலுவலக அறைகளில் அமர்ந்திருந்து உதவினார்கள். தெரியாத பாஷையில் தடுமாறும் ஒவ்வொருவரோடும் சைகைகளாலும், வார்த்தைகளாலும் பிரயத்தனங்கள் செய்து பரிவோடு பேசினார்கள்.

இத்தனை பேரில் யாரேனும் ஒருவரேனும் அந்த அதிகாலையில் பல் துலக்குவதற்காகவோ அன்றிக் குளிப்பதற்காகவோ அந்தக் குளியலறைப் பக்கம் வந்து நான் காண்பதில்லை. இலங்கையர்கள் எமக்கு காலை எழுந்ததும் பல் துலக்கி முகம் கழுவுவதுதான் முதல் வேலையாக இருக்கும். ஐரோப்பியருக்கோ அன்றி அங்கு அகதிகளாக வந்தேறியவர்களுக்கோ அதிகாலைப் பல்துலக்கல் என்பது அர்த்தமற்ற விடயம் போன்றது. காலை உணவுக்குப் பின்னரே அவர்கள் பல் துலக்குவார்கள். சிலர் அப்போது கூட இல்லை. சூயிங்கத்தை மென்று மென்றே பல் துலக்காமல் தவிர்ப்பார்கள்.

மணிமேகலை புகைப்படத்தில் மட்டுமே பார்த்த ஆடவன் ஒருவனை கணவனாக்கிக் கொள்ளும் எதிர்பார்ப்புடன் ஜேர்மனிக்கு வந்திருக்கிறாள். ஒன்றரை வருடப் பிரிவுக்குப் பின் எனது கணவரைச் சந்திக்க இருந்த எனது எதிர்பார்ப்புகளுக்கும், என்றைக்குமே காணாத ஒருவனை மணாளனாக்கப் போகும் அவளது எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் கண்டிப்பாக நிறைய வித்தியாசங்கள் இருந்திருக்கும். ஆனாலும் அவளுக்கும் எனக்கும் இடையில் எப்படியோ ஒருவித இனிமையான நட்பு உருவாகியிருந்தது. அவள் அவளுக்குக் கணவனாகப் போபவனின் அக்கா சாம்பவியோடுதான் பயணித்திருந்தாள். சாம்பவி அதிகம் கதைக்க மாட்டாள். அவளது கணவனும் எனது கணவரைப் போல ஜேர்மனிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டிருந்தது.

நானும், மணிமேகலையும் ஆளுக்கொரு தட்டோடு ஐந்தாவது மாடியில் உள்ள அந்தக் கொரிடோரில் நடந்து மூன்று அறைகள் தள்ளியுள்ள ராசாத்தியின் அறைக்கதவைத் தட்டினோம். அவளும் ஏற்கெனவே ஆயத்தமாகி இருந்து தட்டோடு வெளியில் வந்தாள். அவளுக்கு ஒரு குழந்தை. அவளது கணவருக்கும் எனது கணவரைப் போலவே அங்கு வர அனுமதியில்லை. ஆனாலும் வந்திருந்தார்.

இன்னும் சில அறைகளையும், கீழிறங்கும் மாடிப்படியையும் தாண்டி ஜெயந்தியின் அறையைத் தட்டினோம். ஜெயந்தி தட்டுடன் ஓடி வந்தாள். அவள் கணவனுடன் சேர்ந்தே ஜேர்மனிக்கு வந்திருக்கிறாள். திருமணமாகி சில மாதங்கள்தான் ஓடியிருக்கின்றனவாம். கொஞ்சம் ஹனிமூன் மூட்டில்தான் அவள் எப்போதும் இருந்தாள்.

பல படிகள் ஏறி இறங்கி கன்ரீனுக்குப் போய்ச் சேர்வதற்கிடையில் நானும், மணிமேகலையும், ராசாத்தியும் நிறையவே கதைத்து, வயிறு குலுங்கச் சிரித்து, சோகங்களைத் தற்காலிமாக மறந்திருந்தோம்.

கன்ரீனில் கரண்டிகளினதும், கத்திகளினதும், கோப்பைகளினதும் சத்தங்களையும் மீறிய பலமொழிகள் கலந்த கசமுசாச் சத்தம். அனேகமான வேற்று நாட்டவர்கள் சாப்பாடுகளை வாங்கி அங்கேயே இருந்து சாப்பிட்டு விட்டுச் செல்வார்கள். இலங்கையர் நாம் அப்படியல்ல. நீண்ட வரிசையில் காத்திருந்தோம்.

எனது முறை வந்த போது தட்டைக் கொடுக்க எனக்கும், மூன்று பிள்ளைகளுக்குமாக நான்கு பணிஸ்கள், நான்கு சிறிய பட்டர் துண்டுகள், நான்கு சிறிய ஜாம் பக்கற்றுகள், நான்கு சிறிய சீஸ் பக்கற்றுகள் நான்கு அப்பிள்கள், நான்கு தேநீருடானாள கோப்பைகள் வைத்துத் தட்டைத் திருப்பித் தந்தார்கள். மணிமேகலை, தனதும் சாம்பவியினதும் பாஸைக் கொடுத்ததால் அவளுக்கு எல்லாவற்றிலும் இரண்டு. ராசாத்திக்கு குழந்தை சிறிது என்பதால் எல்லாவற்றிலும் ஒன்று கொடுத்து குழந்தைக்குப் பாலும் கொடுத்தார்கள். திரும்பும் போது தேநீர் தளம்பி ஊற்றுப் பட்டு விடாமல் மிகுந்த அவதானமாகத் தட்டுகளை ஏந்திக் கொண்டு திரும்பினோம்.

எனது அறைக்குள் நான் நுழைந்த போது பிள்ளைகளும், கணவரும் சாப்பிடுவதற்கு ஆயத்தமாக இருந்தார்கள். நான்கு பேருக்கான உணவுகளையும், பழங்களையும் 5 பேருமாகப் பகிர்ந்து உண்டோம்.

மதியத்துக்கும் மீண்டும் தட்டுடன் போக வேண்டும். மதிய உணவை எம்மால் சாப்பிட முடிவதில்லை. உறைப்பு, புளிப்பு.. என்று எதுவுமே இல்லாத அந்த உணவால் இந்த இரண்டு கிழமைகளிலும் பல தடவைகள் மனமும், கண்களும் கலங்கி விட்டன. ஆனாலும் கூடவே கிடைக்கும் பழங்களுக்காக அந்தச் சாப்பாடுகளை வாங்கி வந்து அரையும் குறையுமாகச் சாப்பிட்டு விட்டு எறிவோம். பிள்ளைகளும் நானும் சாப்பிட முடியாமல் படும் அவஸ்தையைப் பார்த்து விட்டு எனது கணவர் அங்குள்ள இன்னும் சில ஆண்களுடன் சில மைல்கள் நடந்து சென்று ஒரு மின்சார ஒற்றை அடுப்பும், தூளும் வாங்கி வந்தார். அது பச்சைத் தூள். ஊரில் போடுவது போல சரக்குகள் எதுவும் போடப்படாத, வறுக்கப் படாத மிளகாய்த்தூள். ராசாத்தியின் கணவரும் ஒரு ஒற்றை அடுப்பும், பிட்டு அவிப்பதற்கு ஏற்ற கணணுள்ள சட்டியொன்றும் வாங்கி வந்தார்.

அதன் பின் மதியம் கிடைக்கும் அவித்த அல்லது அரைப்பதமாகப் பொரித்த பெரிய இறைச்சித்துண்டுகளை தூள் போட்டு, தேங்காய்பால் இல்லாமல் மீண்டும் ஒரு முறையாகச் சமைத்தோம். சமையல் முடிந்த கையோடு மின்சார அடுப்பைக் கட்டிலுக்குக் கீழ் ஒழித்து வைத்தோம். சமைப்பது தெரிந்தால் அடுப்பையே தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்.
இரவில் ராசாத்தி எப்படியோ தேங்காய்ப்பூ போடாத பிட்டு அவித்து விட்டு எங்களுக்கும் கொண்டு வந்து தந்தாள். அடிக்கடி கரண்டி தேவைப்படும் போது மணிமேகலை தனது அறையிலிருந்து ஒரு சில்வர் தேக்கரண்டி கொண்டு வந்து தருவாள். பின்னர்தான் தெரிந்தது அது சாம்பவியின் கரண்டி என்பது. ஐந்தாவது கிழமை இன்னும் ஒரு வாரத்தில் எம்மை வேறொரு முகாமுக்கு அனுப்பப் போவதாக அறிவித்தார்கள். 'போகும் போது கரண்டியை மறக்காமல் தந்திடுங்கோ' என்று சாம்பவி இரண்டு மூன்று தடவையாக ஞாபகப் படுத்தினாள்.

ஆறாவது கிழமையில் நாங்கள் அத்தனை பேரும் வெவ்வேறு முகாம்களுக்கு அனுப்பப் பட்டோம். மணிமேகலை அவளது கணவன் இருக்கும் நகரத்தை ஒட்டிய முகாமுக்கு. அதே போல ராசாத்தி அவளது கணவன் இருக்கும் நகரத்தை ஒட்டிய முகாமுக்கு. சாந்தி இன்னுமொரு இடத்துக்கு. நானும் பிள்ளைகளும் கார்ள்ஸ்றூகே முகாமுக்கு. எனது கணவருக்கு எமக்கான பேரூந்தில் வர அனுமதி இல்லை. அதற்குப் பொறுப்பாக இருந்த பெண் பல தடவைகள் எண்ணிப் பார்த்து ஒரு ஆள் கூட இருக்கிறதே என்று குழம்பி பின் நிலைமையைப் புரிந்தவளாய் கண்டும் காணாதவள் போல் எம்மோடு பயணிக்க விட்டாள்.

ஆனாலும் கார்ள்ஸ்றூகே முகாமில் எனது கணவர் தங்குவதற்கு அவர்கள் அனுமதி தரவில்லை. இரண்டு கிழமைகளை பல்லைக் கடித்துக் கொண்டு அங்கே கழித்து விட்டு எனது கணவர் ஏற்கெனவே வாழும் ஸ்வெபிஸ்ஹால் நகரில் எமக்கென தந்த வீட்டுக்கு நாம் போய்ச் சேர்ந்தோம்.

மெதுமெதுவாக அந்த வீட்டோடு பழகுவதற்குப் பிரயத்தனம் பண்ணிக் கொண்டு முகாம்களில் இருந்து கொண்டுவந்த பொருட்களை அடுக்கும் போதுதான் மீண்டும் அந்தக் கரண்டி என் கண்களில் தென்பட்டது. சாம்பவி அத்தனை சொல்லியும் நான் அந்தக் கரண்டியை என்னோடு கொண்டு வந்து விட்டேன். மிகுந்த சங்கடமான உணர்வு எனக்குள். அதை எடுத்துப் பத்திரப் படுத்தி வைத்தேன். எப்படியாவது சாம்பவியின் முகவரியைக் கண்டு பிடித்து அந்தக் கரண்டியை அனுப்பி விட வேண்டும் என்பதே என் எண்ணம். "ஜேர்மனியிலை உந்தக் கரண்டி ஒண்டும் பெரிய விசயமில்லை. உதுக்காக வீணாக் கவலைப் படாதை" என்று எனது கணவர் சில தடவைகள் சொல்லியும் என்னால் அந்தக் குற்ற உணர்வில் இருந்து மீளமுடியவில்லை. `அந்தக் கரண்டியை அவள் ஊரில் இருந்து கொண்டு வந்திருக்க வேண்டும். ஒரு நினைவுச் சின்னமாக வைத்திருக்க விரும்பியிருக்கிறாள்` என்பதே என் எண்ணமாக இருந்தது.

என்னோடு முகாமிலிருந்தவர்களின் முகவரிகளைக் கண்டுபிடிக்க சில முயற்சிகளும் செய்து பார்த்துத் தோற்று விட்டேன். மொழி பிரச்சனையாக இருந்ததால் நினைத்தவைகளைச் செயற் படுத்தவும் முடியவில்லை. வருடங்கள் பல ஓடின. ஆனால் அவர்களில் யாரது தொடர்பும் எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு முறை வீடு மாறும் போது, பொருட்களை அடுக்கும் போது மீண்டும் அந்தக் கரண்டி என் கரங்களில் தவழ்ந்தது. அப்போதுதான் கவனித்தேன். அந்தக் கரண்டியில் Lufthansa என எழுதப் பட்டிருந்தது. அவள் Lufthansa விமானத்தில்தான் ஜேர்மனியை நோக்கி பயணித்ததாக மணிமேகலை சொன்னது ஞாபகத்தில் வந்தது.

இப்போது அந்தக் கரண்டி எனது சமையலறை லாச்சிக்குள் இருக்கிறது. எப்போது லாச்சியைத் திறந்தாலும் நினைவுகள் சிட்டுக்குருவிகளாய் அந்த முகாமுக்குப் பறந்து விடுகிறது.

சந்திரவதனா
30.9.2008

பிரசுரம் - யுகமாயினி (நவம்பர் 2008)

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite