Wednesday, September 27, 2006

ஏகாந்தக் கனவுகள்

வார்த்தைகளுக்குள்
பிடிபடாத உணர்வுகள்
வந்து விழ முடியாமல்
அந்தரிக்கின்றன

வந்து போகும் காலங்களில்
லயிக்க மறந்து
வரப் போகும் காலத்துக்காய்
தவம் கிடக்கிறது மனசு... more

மனதை மிகவும் பாதித்த பதிவு


மீண்டும் மீண்டுமாய் வந்து மனதை வாட்டுகிறது.

யாழ்பாணத்தில் பட்டினி சாவு

பசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.... more

Tuesday, September 26, 2006

உவருக்கு வேறை வேலை இல்லை.


உவருக்கு வேறை வேலை இல்லை.
உதைச் செய்யிற நேரத்துக்கு உவர் வேறை வேலையைச் செய்யலாந்தானே!
உது என்ன பிரயோசனம் எண்டு இவர் எழுதிக் கொண்டிருக்கிறார்?
உந்த நேரத்துக்கு வேறையேதும் பிரயோசனமா எழுதலாந்தானே!


இப்படிக் கதைப்பவர்கள் பலர் எம் மத்தியில் இருக்கிறார்கள்.

இப்படிக் கதைப்பதிலேயே அவர்களது பாதி நேரங்களும் போய் விடுகின்றன.
மற்றவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதிலும் அதைக் குறைந்தது பத்துப் பேருக்காவது சொல்வதிலும் தாம் செய்ய வேண்டிய பிரயோசனமான வேலைகளை அவர்கள் கோட்டை விட்டு விடுகிறார்கள்.

ஒருவருக்கு அவருக்கான நேரத்தில் என்ன செய்யப் பிடிக்கிறதோ, அதை அவர் செய்யலாம். அது யாரையும் பாதிக்காத வரை... அதனால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராதவரை... அவர் அப்படிச் செய்வதில் எந்தப் பிரச்சனையும் யாருக்கும் இல்லை. அவருக்குப் பாட்டுக் கேட்கப் பிடித்தால் கேட்கலாம். வாசிக்க விருப்பமாக இருந்தால் வாசிக்கலாம். இல்லை இவை ஒன்றுமே இல்லாமல் நித்திரை கொள்ள விருப்பமாக இருந்தால் நித்திரை கொள்ளலாம். இது ஒரு மனிதனுக்கான சுதந்திரங்களில் ஒன்று. இந்த மனித சுதந்திரத்துக்குள் யாராவது மூக்கை நுழைத்து ஏன் நீ நித்திரை கொண்டாய்? இந்த நேரம் முழிச்சிருந்திருக்கலாமே! என்று கேட்பதோ அல்லது ஏன் இதை எழுதுகிறாய்? அதை எழுதலாமே! என்று கேட்பதோ அர்த்தமற்ற அநாகரீகமான செயல்.

இந்த அர்த்தமற்ற செயலைப் பலரும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

பாடல்களிலிருந்து சில வரிகள் - 9


மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!

கேணல் சங்கர்



வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம் - யாழ்

வீரமரணம்-26.9.2001

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற் றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அன்றைய தினத்தில் தியாகி திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகளில் தமிழீழ மக்களும், போராளிகளும் உணர்வுபூர்வமாக சங்கமித்திருந்த வேளையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட அநாகாPகச் செயலானது சிறீலங்கா அரசின் போர்மீது உள்ள விருப்பைக் காட்டுவதுடன், தமிழீழ மக்களினதும், போராளிகளினதும் நெஞ்சங்களில் அனலை மூட்டிவிட்டிருக்கின்றது.

பதின்நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் தமிழீழம் முன்பொருமுறையும் நெஞ்சில் அனல் சுமந்து பொங்கிப் பிரவாகித்தது. சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்குள் சிக்கிச் சின்னாபின்னப்பட்ட தமிழீழ மக்களுக்கு வசந்தத்தின் வாசலைத் திறந்துவிடுவதாகக் கூறி அமைதிப்புறா வேடமணிந்து எம் மண்ணில் காலூன்றியது இந்தியப்படை. ஆனால், காக்கவந்தவர்கள் தம்மைத் தாக்கத் தயாரானபோது ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தண்ணீருமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்து, பாரத அரசின் உண்மை முகத்தை உலகறியச் செய்து காவியமானான் தியாகி திலீபன். அவனது உயிர்பிரிந்தபோது வரலாற்றில் என்றுமில்லாதவாறு, நெஞ்சில் அனல் பற்றியெழ பொங்கி எழுந்தது ஈழத் தமிழினம். அங்கே பிரகாசிக்கத் தொடங்கியது மக்கள் புரட்சி என்னும் புதிய விடுதலை ஒளி.
14 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் அதே தினத்தில் தான் மேற்கொண்ட அநாகாPகச் செயலால் தமக்கெதிராகப் போராடும் ஈழமக்களது உணர்வுகளையும், போரிடும் வீரியத்தையும் இன்னும் இன்னும் அதிகரிக்கச் செய்திருக்கின்றன சிங்களப் படைகள்.

தலைவனுக்கு உற்ற தோழன். போராளிகளுக்கு நல்ல ஆசான். பழகுவதற்கு பண்பானவன். மக்களுக்கு அரசியல், இராணுவ அணுகுமுறைகளில், எதிரிக்கு ஒரு சவால் என இருபது வருடம் நன்கு செழித்து வேர்விட்டு விழுதெறிந்த ஆலமரம் கேணல் சங்கர்.

வல்வெட்டித்துறை மண் தந்த வீரப்புதல்வர்கள் வரிசையில் வழிவந்தவர்தான் கேணல் சங்கர். 1981இன் ஆரம்பகாலங்களில் தனது சகோதரன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப்பாதையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சங்கர் அவர்கள் 1983இல் தன்னை முழுமையாக போராட்டத்துடன் இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து தனது இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலைப் போராட்டப் பாதையில் விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டார். தேசியத் தலைவர் அவர்களது எண்ணப்படி விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய புதிய பரிமாணங்களுக்கும், கட்டுமானங்களிற்கும் செயல்வடிவம் கொடுத்து விடுதலைப் போராட்ட போரியல் வரலாற்றில் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியவர் கேணல் சங்கர்.

ஈழப்போரில் கடற்பரப்பின் முக்கியத்துவம் கருதி தலைவரின் சிந்தனைப்படி 'கடற்புறா' என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, முதன்முதலில் சிறீலங்காக் கடற்படையின் பாரிய யுத்தக் கட்டளைக் கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்காக கடற்புலிகளான காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகியோரைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர். இதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர். சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகளின ஒவ வொரு அங்குலங்களையும் அணுவணுவாகக் கற்பித்து, மரம், செடி, கொடி, விலங்குகள் என்பன பற்றிய தகவல்களை தெளிவுபடுத்தி பயிற்றுவித்த நல்லாசிரியர் கேணல் சங்கர். இறுதியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற ஓயாத அலைகள் நடவடிக்கையில் தலைவருடன் அருகில் நின்று இராணுவ அசைவுகளுக்கேற்ப போராளிகளின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி சமர்களை, வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உதவியவர். இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமன்றி, அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள். அமைதியாக இருந்தவாறு தனது ஆளுமையால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் கேணல் சங்கர் அவர்கள்.

இவர் மட்டுமன்றி இவரது குடும்பமும் தன்னை முழுமையாக விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்து நிற்கின்றது.
1986இல் நாவற்குழி இராணுவ முகாம் மீதான தாக்குதல் முயற்சியில் இவரது சகோதரன் சித்தாத்தன், லெப். கேணல் பொன்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவரே சங்கர் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவருடன் தொடர்புபடுத்தியவர். இவரின் இன்னொரு சகோதரன் கப்டன் கரன் இந்திய-சிறீலங்கா கூட்டுச் சதியால் லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளில் ஒருவராக 'சயனைட்' அருந்தி வீரச்சாவை அணைத்துக்கொண்டார். 2000ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைவீச்சில் மேலும் இரு சகோதரர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட, மற்றொரு சகோதரன் கொழும்பில் தமிழ்த் துரோகக் கும்பல் ஒன்றினால் அழிக்கப்பட்டார். இவ வாறு கேணல் சங்கர் அவர்களது குடும்பம் தமிழீழ விடுதலைக்காய் இரத்தம் சிந்தி தன்னை முழுமையாக அர்ப்பணித்து நிற்கிறது.

தேச விடுதலைக்காய் தன்னால் மட்டுமன்றி, தன் குடும்பத்தாலான முழுவதையும் தந்து நிற்கும் இவ வீரமறவன் மீது சிங்கள ஊடுருவல் படை மறைந்திருந்து தாக்குதல் நடத்தி மண்ணில் சாய்த்ததானது, தமிழீழ மக்களினதும் போராளிகளினதும் நெஞ்சங்களில் என்றும் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும். இதற்கான பதிலை சிறீலங்கா வெகு விரைவில் பெற்றுக்கொள்ளும் நாட்கள் வரும்.

Quelle: எரிமலை(2004-செப்ரெம்பர் மாத இதழ்)

Thursday, September 21, 2006

ஆணிவேர் - AANIVAER


தமிழீழத்தின் முதலாவது வெண்திரைக்காவியம் ஆணிவேர்

- தேவபுத்திரன்

ஈழத்தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு இரண்டு ஆதங்கங்கள் இருக்கின்றன. ஒன்று, நாற்பது வருடங்களுக்கு முன்னர் தோற்றம் பெற்ற நம்மவர் திரைப்படத்துறை சர்வதேச தரத்துக்கு இல்லாவிட்டாலும் சிங்கள திரைப்படங்களின் தரத்திலாவது ஒரு படத்தை தராதா? மற்றயது, வியட்நாம் போரை, கம்பூச்சிய உள்நாட்டு யுத்தத்தை, அங்கு மக்கள் பட்ட அவலங்களை திரைப்படங்கள் மூலம் வெளியுலகுக்கு தெரியப்படுத்தியது போல் கலைப் படைப்புக்களின் வாயிலாக எம்மக்களின் துயரங்களை உலகமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டாதா? என்பது. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை என்றில்லை. எனினும் காத்திரமான படைப்பு எதுவும் இதுநாள்வரை வரவில்லை. திரைப்படத்துறை வளர்ச்சி பெற்றுள்ள இந்தியாவிலிருந்து எமது அவலங்களை கருப்பொருளாய் எடுத்து ழுநிசத்தை சிதைத்து வியாபார திரைப்படங்கள் மட்டுமே வெளிவந்தன.

தமிழ்த்திரை ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் ஒரு திரைப்படம் ஈழத்திலிருந்து வெளி வந்திருக்கிறது. அத்திரைப்படத்தின் தலைப்பு ஆணி வேர் குறித்துக் கொள்ளுங்கள் தமிழத் திரைப்படத்துறையில் இது ஒரு பெரும் பாய்ச்சல்.

கடந்த வார இறுதியில் லண்டலிலுள்ள சோகோ (soho) திரையரங்கில் இத்திரைப் படத்தின் பிரத்தியேக காட்சி ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப் பட்டது. பிரத்தியேக காட்சிகளுக்கென சிறப்பாக அமைக்கப் பட்ட திரையரங்கினை தேர்ந்தெடுத்து தமிழ் ஊடகவியலாளர்களையும் ஆர்வலர்களையும் அழைத்து திரைப்படம் பற்றிய விபரங்களுடன் காட்சியை ஒழுங்கு செய்தமை ஆணிவேர் திரைப்படத் தயாரிப்பாளர்களான தமிழ் திரைக்கண் நிறுவனத்தின் துறைசார் முதிர்ச்சியை எடுத்துக்காட்டியது.

காட்சியின் இறுதியில் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து திரு. திலக் தனது தயாரிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டு நன்றியுரையாற்றினார்.முழுக்க முழுக்க வன்னி பெருநிலப் பரப்பில் படமாக்கப் பட்டுள்ள இந்த முழுநீளத் திரைப் படத்தை `உதிரிப்பூக்கள்', `நெஞ்சத்தை கிள்ளாதே' போன்ற பிரபலமான திரைப் படங்களை இயக்கிய இயக்குனர் மகேந்திரனின் புதல்வர் ஜோன் மகேந்திரன் இயக்கியுள்ளார். நந்தா, மதுமிதா, நீலிமா ஆகிய தமிழகக் கலைஞர்கள் முக்கிய பாத்திர மேற்று ஈழத்து கலைஞர்களுடன் இணைந்து திறம்பட நடித்துள்ளனர்.

இதுவும் ஒரு காதல் கதை தான். தமிழகத்தை சேர்ந்த பெண்பத்திரிகையாளர் சந்தியா (மதுமிதா) தனது பத்திரிகைக்கு செய்தி சேகரிக்க யாழ்ப்பாணத்துக்கு வருகிறாள். அங்கு கடமையே கண்ணாக மக்களுக்கு சேவை செய்யும் கோபக்கார இளம் மருத்துவர் நந்தாவை சந்திக்கிறாள், நட்புக் கொள்கிறாள். போரினால் மக்கள் படும் அவலங்கள் அவளையும் பாதிக்கிறது. அந்த மக்களுடன் ஒன்றிப் போகிறாள். வரலாற்று பதிவாகிவிட்ட யாழ்ப்பாண இடப்பெயர்வு அவர்களையும் பிரித்து விடுகிறது. அவள் தாயகம் செல்கிறாள். மீளவும் அவனைத் தேடியபடி வன்னிக்கு வருகிறாள். திரைப்படத்தின் பெரும்பகுதி பின்னோக்கிய கதையாக நகருகிறது.

பாடசாலை மாணவி கிருசாந்தி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் உட்பட தமிழர் வரலாற்றின் பல துன்பியல் நிகழ்வுகள், அன்றாடம் மக்கள் படும் இன்னல்கள் என்பன எந்த பொய்மைக்கும் இடமில்லாமல் படமாக்கப் பட்டுள்ளன. யாழ்ப்பாண இடப் பெயர்வு காட்சிக்கு இருபத்தி ஐந்தாயிரம் பேர் பயன்படுத்தப் பட்டு அந்த ழநிகழ்வு மிகவும் தத்துரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எங்கள் தேசம் இத்தனை வனப்பு மிக்கதா எனப் பிரமித்துப் போகிறோம். ஒவ்வொரு காட்சியையும் அழகியல் உணர்வுடன் படச் சட்டங்களுக்குள் அடக்கியுள்ளார் இத் திரைப் படத்தின் ஒளிப்பதிவாளர் சஞ்சை. தமிழக கவிஞர் முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு குரல் கொடுத்துள்ளார் சின்னக்குயில் சித்திரா. இசையமைத்திருப்பவர் சதீஸ்.

நடைமுறை வாழ்வில் கலந்துள்ள அரசியல் தவிர பிரச்சார நோக்கம் எதுமின்றி படத்தை நெறிப்படுத்தியுள்ளார் ஜோன் மகேந்திரன். முற்றிலும் வன்னியில் படமாக்கப் பட்டுள்ள போதும் புலி என்ற சொல் ஒரிரு தடவைகள்தான் பாவிக்கப் பட்டுள்ளது என்றால் பார்த்துக்
கொள்ளுங்களேன்.

கதாநாயகன் நந்தாவும், நாயகி மதுமிதாவும் ஏற்கனவே சில தமிழ்த் திரைப் படங்களில் நடித்திருந்த போதும் இந்த திரைப்படத்தில் புதுப் பிறப்பு எடுத்துள்ளார்கள் என்றே கூற வேண்டும். மாணவி சிவசாந்தியாக வரும் நீலிமா சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப் பட்ட கிருசாந்தியை கண் முன்னே கொண்டு வருகிறார். ஈழத்தில் தயாரான பல குறும்படங்களில் நடித்த முல்லை ஜேசுதாசன் சிறிய பாத்திரத்தில் நடித்தாலும் தனது இயற்கையான நடிப்பாற்றலை மீளவும் வெளிப் படுத்தியுள்ளார். அதுபோலவே கதாநாயகனின் பாட்டியாக வரும் நடிகையும் அந்த பாத்திரமாகவே மாறி விடுகிறார். "என்ர பேரனை நீங்கள் கலியாணம் செய்யிறிங்களா" என வெகுளித்தனமாக சந்தியாவை (மதுமிதா) கேட்குமிடத்தில், எங்களுர் ஆச்சிமாரை நினைவு படுத்துகிறார்.

மாங்குளத்தில் மலையைக் காட்டிய புருடாக்கள் போல் இல்லாமல், உள்ளதை உள்ளபடி சித்தரிக்கும் `ஆணி வேர்' ஓட்டுமொத்த தமிழ் திரையுலகையும் புது விசையுடன் முன் தள்ளியுள்ளது. பிரித்தானிய தணிக்கைப் பிரிவினால் 15வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானதாக தரப்படுத்தப் பட்டிருக்கும் இத் திரைப்படம் எதிர் வரும் 22ம் திகதி முதல் பிரித்தானியாவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் திரையிடப்பட விருக்கிறது.

வசதிகள் குறைந்த பிரதேசமொன்றிலிருந்து நவீன தொழில்நுட்பத்தை (HD to Cinema) பிரயோகித்து அந்த மண்ணின் மணம் மாறாமல் உருவாக்கப் பட்டிருக்கும் `ஆணிவேர்' உங்கள் மனங்களில் ஆழப்பதிந்து விடும் என்ப தில் ஐயமில்லை. நம்மவர் திரைப் படத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்ற வழமையான வேண்டுகோளினைக் கடந்து, பொருத்தமான காலகட்டத்தில் வெளியிடப் பட்டிருக்கும் தரமான படைப்பு ஒன்றை சுட்டி நிற்பதனையிட்டு மகிழ்வடைகிறேன்.

- தேவபுத்திரன்
Quelle - Orupaper



AANIVAER—ஆணிவேர்
“TAP ROOT”
A Brief Eye View
(மின்னஞ்சல் வழி கிடைக்கப் பெற்றது)

“AANIVAER” which is a full length film shot and produced in the Tamil homeland of Sri Lanka. It unfolds a love story through which courses turbulent and continuing scenes of political current seriously affecting the very existence of the indigenous Tamils of Sri Lanka.

“AANIVAER” is a “Must- See” - Movie for those that are concerned with human rights as the film makes a bracing of the real socio – political situation in Sri Lanka. Any person who views the film with equanimity will agree that it undeniably stands out for its honesty and sincerity.

“AANIVAER” film has a touch of political theme and it is welcomed by non-partisan people and non governmental organisations as they portray the urgency and evoke a reflection of the times we live in. “AANIVAER” belongs to that category of films.

Sri Lanka which once was praised as a Pearl of the Indian Ocean is now a pool of serious problems. The countries of the West are not unaware of the ever unfolding tragedies of the Tamils in Sri Lanka, nor about the inhuman and degrading treatment do the Tamils suffer in Sri Lankan. Still western countries continue to be deaf and blind to the miseries and tragedies of the Tamils though the Tamil Diaspora who are now scattered all over the world continue to knock at the doors of the corridors of power in the West.
The recent involvement of international governments and peace loving organisations in the monitoring of peace between the Sinhalese and the Tamils has internationalized the Sri Lankan ethnic conflict. The presence of Western representatives in Sri Lanka as peace monitors has exposed the duplicity and pretensions of the Sri Lankan government to the rest of the world which hitherto willfully refused to listen to the cries of the oppressed Tamils of Sri Lanka, branding all and sundry as terrorists.
“AANIVAER” is being released at a time when the West, thanks to the honest and bold utterings of the Norwegian representative in Sri Lanka, has started to realize the reality and ground situation in Sri Lanka.

Though the movie ““AANIVAER”” is not political, yet it artistically succeeds in telling the world at large that it is high time the West heeds to the whimpers of the Tamils whose necks are wrung mercilessly by the brutal security forces with the connivance of the Sinhalese government.

The love story of ““AANIVAER”” begins with the arrival in Omantai in Vanni of a female journalist from South India, who had visited Sri Lanka previously to gather information and photographs for a cover story for an Indian magazine. During her first visit, which lasted for a couple of months, she witnessed the happenings in the Sri Lanka and during her interviews with people and authorities developed a love affair with a Tamil Doctor cum social worker in the trouble stricken region of Tamil homeland.

Having personally experienced the pitiful plight of the Tamils in Sri Lanka, she goes back to South India with a heavy heart.
The love lorn journalist from South India returns to Vanni for the second time with a view to meeting the Doctor cum social worker whom she had met and loved on her first visit. Her initial enquiries to find out the whereabouts of the Doctor friend prove difficult. But she continues. The events that unfold in the movie thereafter are flash backs, and those flash backs vividly and picturesquely portray the scenes of how the school girl Krishanthy was abused, raped and bumped off as well as the pathetic scenes of Tamil exodus from Jaffna to Kilinochchi and Vanni reminiscent of the great exodus of the Biblical times.

The most revealing aspect of the movie is what it says indirectly about the political and social attitude of the Sinhalese race towards the Tamil race. Although this is the first full length film filmed in the home land of Tamils with the barest of facilities and technology the director of the film has successfully ploughed a far- from –typical furrow on the firmament of cinematography.
“AANIVAER” has brilliantly proved that films can impart telling messages while appearing to be doing something entirely different. It is a brilliant film by all standards.
This is a “Must-See” movie that should be seen by all and sundry.

(மின்னஞ்சல் வழி கிடைக்கப் பெற்றது)

ஆணிவேர் திரைப்படத்தின் இணையத்தளம் -http://www.aanivaer.com/aanivaer_flash/

பாடல்களிலிருந்து சில வரிகள் - 8

மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்

பிறந்தாலும் பாலை ஊற்றுவார், இங்கே
இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான்!
ஊர்போவது நாலாலதான்!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
மெய் என்று மேனியை யார் சொன்னது?

Tuesday, September 19, 2006

பன்னிரு நாளாய் தீ வளர்த்தீரோ!

திலீபன் மாமா திலீபன் மாமா
தண்ணியை மறந்து தவித்தது ஏனோ!
புண்ணிய ஈழம் மலர்வதற்காக
பொன்னுடல் தன்னை வெறுத்தீர்தானோ!

அந்நிய நாய்கள் அலட்சியம் செய்ய
பன்னிரு நாளாய் தீ வளர்த்தீரோ!
மண்ணினை மீட்கும் புனிதப் போரில்
நின்னுடல் எரித்து நிலைத்து நின்றீரோ!

தேசங்காக்கும் வீரப்போரின்
பாதை ஒளிர விளக்கானீரோ!
பாச மக்கள் நெஞ்சந் தொட்டு
தேச வழியில் திருப்பி வைத்தீரோ!

வேசம் கலைந்த மாற்றான் படைகள்
தேசம் அகன்று செல்ல வைத்தீரோ!
வீசும் தென்றல் காற்றில் கூட
தியாக ஒளியை மிளிர வைத்தீரோ!

நினைவில் என்றும் நிலைத்தீர் மாமா
ஈழப் படகின் கலங்கரை விளக்காய்
காலம் முழுதும் ஒளிர்ந்திடும் உம்மை
மானத் தமிழர் மனதில் நிறைத்தோம்.

தீட்சண்யன்
1992

Monday, September 18, 2006

உளவியல் - சூசி


இவள் சூசி. வயது 24. இவளைத் தினமும் காண்பேன். நான் வேலை முடிந்து திரும்பும் போது எனது பஸ் தரிப்பிடத்துக்கு முதல் தரிப்பிடத்தில் பேரூந்தில் ஏறுவாள். இரவு எட்டுமணியளவில் அவள் பேரூந்தில் ஏறும் போது ஆரம்பத்தில் நண்பனைச்(காதலன்) சந்திக்கவோ அன்றி டிஸ்கோவுக்கோ செல்கிறாள் என்றுதான் நினைத்தேன். பின்னர்தான் ஒருநாள் ஒரு ரெஸ்ரோறண்ட் டில் உணவு பரிமாறிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.

மிகவும் அழகானவள் என்று சொல்ல முடியாவிட்டாலும் மிக அழகாக ஒரு குழந்தை போலச் சிரிக்கக் கூடியவள். குண்டாக இருந்தாலும் ஆசைப்பட வைக்கும் குழந்தைத்தனமான முகம். இவள் நூர்ஜான் போலவோ அன்றி அனெக்கிரேட் போலவோ என் பக்கத்துக்கு வரமாட்டாள். ஆனால் என்னைக் கண்டதுமே மிகவும் நட்பாகச் சிரித்து ஹலோ என்பாள். அந்தச் சிரிப்பும் பார்வையும் வார்த்தைகளையும் விட அர்த்தமானவை.

இவளும் என் கடைசி மகனுடன் கின்டர் கார்டனிலிருந்து படிக்கத் தொடங்கினாள். ஆனால் நான்காம் வகுப்பில் தரம் பிரிக்கும் போது வேறு வகுப்புக்குப் போய் விட்டாள். ஆனாலும் ஒரே பாடசாலைதான். முன்னர் இவளை எப்போதுமே இவளது தந்தையுடன்தான் காண்பேன். அவரும் மிகவும் நட்பாகச் சிரித்து கொண்டு ஹலோ சொல்வார். சூசியைக் காணும் போதெல்லாம் முதலாம் வகுப்பில் நடந்த அந்த சம்பவம் என் நினைவில் வந்து போகும்.

அப்போது, எனது மகனின் வகுப்பு மாணவர்கள் எல்லோரையும் பட்டம் விளையாட அழைத்துச் செல்லப் போவதாக அவனின் வகுப்பு ஆசிரியர் அறிவித்திருந்தார். அதற்கான பட்டத்தைக் கட்டுவதற்கு முதல்நாளே பெற்றோரும் வந்து உதவ வேண்டுமெனவும், பட்டம் விடும் நாளில் அங்கு பார்பிக்கிய+வும் செய்வார்கள் என்றும் குறிப்பிட்டும் இருந்தார். முதல் நாள் பாடசாலைக்குச் சென்று மகனுடன் சேர்ந்து பட்டம் கட்டினேன். பெற்றோர்கள் பலருடன் கதைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சந்தோசமாக அன்றைய பொழுது கழிந்தது. அடுத்தநாள் பட்டம் கட்டியது பற்றி எமது நகரப் பத்திரிகையிலும் புகைப்படங்களுடன் வந்திருந்தது.

பார்பிக்கியூவுக்கான உணவுகளுடன் நானும் மகனும் பாடசாலைக்குச் சென்று உரிய இடத்துக்கு ஆசிரியர் மாணவர் பெற்றோர்களுடன் பயணமானோம். அது ஒரு குதூகலமான பயணம். இடம் மலைக்குன்றுகளைக் கொண்ட சோலைகள் போல அடர்ந்த அழகான இடம். சிலரது தாய்மார், சிலரது தந்தைமார் என்று அனேகமான ஒவ்வொரு மாணவருடனும் பெற்றோர்களில் ஒருவர் வந்திருந்தார்கள். அப்போது எனக்கு டொச்(ஜேர்மனிய மொழி) ஒரு பெரிய பிரச்சனையான விடயமாக இருந்தாலும் ஆங்கிலமும் கலந்து முடிந்தவரை அவர்களுடன் உரையாடினேன்.

பட்டம் விட்டு, பார்பிக்கியூ முடித்து எல்லோரும் ஓய்வாக அமர்ந்த போது பெற்றோர்கள் ஒரு இடத்திலும், மாணவர்கள் எல்லோரும் ஒரு இடத்திலும் என்று கூடினார்கள். சிறிது நேரத்தில் எனக்கு பெற்றொரோடு இருப்பதை விட மாணவர்களிடம் போனால் நல்லாயிருக்கும் போலிருந்தது.

நான் எழுந்து அவர்கள் பக்கம் போன போதுதான் சூசி என் பார்வையில் பிரத்தியேகமாகப் பட்டாள். ஒரு சிறிய குன்றின் மேல் ஒரு நீண்ட சுள்ளித் தடியுடன் நின்ற அவளைச் சுற்றி கீழே மற்றைய மாணவர்கள் நின்றார்கள். அவள் தனது முகத்துக்குத் துளியும் ஒவ்வாத பாவனையில் ஒரு கோபக்காரி போல நின்றாள். "நான்தான் உங்களின் அம்மா" என்றாள். இடையிடையே மாணவர்களில் யாராவது ஒருவரின் பெயரைக் கூப்பிட்டு "நீ சரியில்லாத பிள்ளை. நீ படிக்கவில்லை. நான் உன்னை அடிப்பேன்...." என்றெல்லாம் பலவாறாகத் கத்திக் கத்தித் திட்டினாள். சிலரைத் தன்னிடம் கூப்பிட்டு அடிப்பது போலப் பாவனை பண்ணினாள். தலைமயிரைப் பிடித்து உலுப்பினாள். ஒரு மாணவனைக் கூப்பிட்டு "இன்று நீ உனது கட்டிலில் படுக்க முடியாது. வெளியில்தான் படுக்க வேண்டும"; என்று கோபமாகச் சொன்னாள். தடியை சுழற்றிச் சுழற்றிக் கொண்டு குன்றிலே அங்கும் இங்குமாய் திரும்பினாள். தொங்கினாள்.

அது ஒரு விளையாட்டு என்றாலும் என்னால் அதை ரசிக்க முடியாதிருந்தது. அவளது குழந்தைத் தனமான முகத்துக்கு ஒவ்வாத அந்த விளையாட்டை அந்த மாணவர்கள் அத்தனை பேரும் ரசித்தார்கள்.

வீடு திரும்பிய பின்னும் அவளது அந்த விளையாட்டு என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. ஒரு சில நாட்கள் கழித்து எனது மகனிடம் "சூசி எப்படியான பிள்ளை?" எனக் கேட்டேன். நல்ல பிள்ளை. ஆனால் அவ்வளவு படிக்க மாட்டாள்" என்றான்.

சிறிது நேரம் கழித்து "அவளது அம்மா எப்படி?" என்றேன். "அவளின்ரை அம்மா அவளையும் அவளின்ரை அப்பாவையும் விட்டிட்டுப் போட்டாவாம். சேர்ந்து இருந்த போதும் நல்லாக் குடிப்பாவாம். சூசியை அடிப்பாவாம். அப்பாவோடை எப்பவும் சண்டை போடுவாவாம்... அவ வேறை அப்பாவோடை போட்டாவாம்...." அவன் சொல்லிக் கொண்டே போனான்.

சந்திரவதனா
18.9.2006

Sunday, September 17, 2006

பாடல்களிலிருந்து சில வரிகள் - 7


மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்

Saturday, September 16, 2006

திலீபன்-சிறப்புக்கவிதாஞ்சலி


விடுதலை வேட்கை சுடராய் விழிகளில் நடனமாட
பறந்திடும் கேசத்தோடும் புன்னகை வதனத்தோடும்
நடந்தவன் நல்லூர் வீதி மேடையை நாடிச்செல்ல
திரண்ட எம் மக்கள் கூட்டம் - தெய்வமே! - என்றழைக்க
பஞ்சென வெண்மைக் கேசம் கொண்டதோர் பக்தி மாது
பையவே திலீபன் முன்னால் பாதையை மறித்து வந்து
கையிலே தாங்கிவந்த அர்ச்சனைத் தட்டைத் தொட்டு
விரலிலே வபூதி அள்ளி எம் வீரனின் நுதலில் பூச
பௌர்ணமித் திங்களாய் எம் திலீபனோ முகம் ஜொலித்தான்.- more

Thursday, September 14, 2006

அப்பாவின் பாதிப்பு - Annegrate


அன்று எனது பேரூந்துப் பயணத்தில் என்னோடு இணைந்து கொண்டவள் அனெக்கிரேட். இவளை நான் கடைசியாகச் சந்தித்தது நூர்ஜானைச் சந்திப்பதற்குச் சில மாதங்கள் முன்பு.

அனெக்கிரேட் எனது கடைசி மகனுடன் முதலாம் வகுப்பிலிருந்து இறுதி ஆண்டுவரை ஒன்றாகப் படித்தவள். இறுதிப் பரீட்சையில் நல்ல புள்ளிகளைப் பெற்றிருந்தாள். ஆனாலும் அவள் விரும்பிய இசைத்துறைக்கான இடம் பல்கலைக்கழகத்தில் அவளுக்குக் கிடைக்கவில்லை. அதனால், அவளோடு படித்தவர்கள், நண்பர்கள் என்று அனேகமான எல்லோருமே வேலை, மேற்படிப்பு என்று வேறு வேறு இடங்களுக்குச் சென்று விட இவள் கொஞ்சம் தனிமை உணர்வோடு எமது நகரிலேயே இருந்தாள். அந்த நேரத்தில் அவளை அடிக்கடி நான் சந்திப்பேன். எப்போதும் ஒரு இசைக்கருவியை தன்னுடன் கொண்டு திரிவாள். இசை வகுப்புக்குப் போகிறேன் என்பாள்.

அவளோடான சந்திப்பு எப்போதுமே மிக இனிமையாக இருக்கும். சிரித்துச் சிரித்து நிறையக் கதைப்பாள். பாடசாலைக் காலங்களில் பெற்றோர்களுக்கான ஒன்றுகூடலிலும், பிள்ளைகளோடான பிக்னிக் குகளிலும் அவளது தாயும் பங்கு கொள்வதால் தாயோடும் எனக்கு ஓரளவு பழக்கம் இருந்தது. தாயும் இவளைப் போலவே சந்தோசமாகப் பழகக் கூடியவள்.

ஒரு நாள் அனெக்கிரேட்டை பேரூந்தினுள் சந்தித்த போது தனக்கு வடக்கு ஜேர்மனியில் ஒரு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்திருப்பதாகவும் , ஒரு மாதத்தில் போய் விடுவேன் என்றும் மிகவும் சந்தோசமாகச் சொன்னாள். பின்னர் சற்றுக் கவலையாக "அம்மாதான் தனித்து விடுவாள்" என்றாள்.

"ஏன்... உனது அப்பா...?" என்றேன்.

"எனக்கு நான்கு வயதாக இருக்கும் போதே அப்பா அம்மாவை விட்டிட்டுப் போயிட்டார்" என்றாள். அப்போதுதான் எப்போதுமே அவளது அம்மா தனித்து வருவது என் சிந்தனையைத் தொட்டது.

"உனக்கும் உனது அப்பாவுக்கும் தொடர்பிருக்கிறதுதானே" என்றேன்.

அவள் முகத்தில் ஒரு ஏமாற்றம் கலந்த வெறுப்பு தோன்ற "எனக்கு ஏழு வயதா இருக்கிற போதே அப்பாவை மெயின்ரோட்டிலை இருக்கிற அவற்றை வீட்டுக்கு முன்னாலை ஒரு குழந்தையோட பார்த்தனான். என்ரை அப்பா இன்னொரு குழந்தையைத் தூக்கி வைச்சிருக்கிறது எனக்கு சகிக்கேல்லை" என்றாள். தொடர்ந்த கதையில் அவள் அதன் பிறகு அவளது அப்பாவைக் காணவோ, அவரோடு பேசவோ விரும்பவில்லை என்பது தெரிந்தது.

வழமைக்கு மாறாக அன்றைய அவளோடான சந்திப்பு சற்று மனதைச் சங்கடப் படுத்த நாங்கள் விடை பெற்றோம். அவள், அப்பா இல்லாமலே வளர்ந்திருக்கிறாள் என்ற உண்மை அத்தனை வருடங்களில் எனது கவனத்துக்கு எட்டாதது எப்படி என்ற ஆச்சரியம் எனக்குள்ளே தொடர்ந்து இருந்தது.

அதன் பின் அவளது அம்மாவைச் சந்தித்த ஒரு பொழுதில் "அவள் அடிக்கடி இங்கு வரமாட்டாள். நியாயமான தூரம்" என்றாள். அப்படி இடையிடையே அவள் எமது நகருக்கு வந்த போதும் எதேச்சையாகத்தான் என்றாலும் அவளை நான் சந்திக்கும் வாய்ப்புக்களை எனது பேரூந்து எனக்குத் தந்து கொண்டுதான் இருந்தது.

ஒரு கட்டத்தில் அவளை ஒவ்வொரு மாதமும் சந்தித்தேன். இன்னும் சில காலங்களில் ஒவ்வொரு வாரமும் சந்தித்தேன்.

"என்ன...! இப்படி அடிக்கடி வருகிறாய்?" என்ற போது மிகுந்த சந்தோசமாக "எனக்கு இப்ப ஒரு நண்பன்(காதலன்) இங்கே இருக்கிறான்" என்றும், "அவனைச் சந்திக்காமல் இருக்க முடியவில்லை" என்றும் சொன்னாள்.

"அப்படியா...? சந்தோசம்" என்று அவளை வாழ்த்தி விட்டு வேறு கதைத்தேன்.
விடைபெறும் போது "நீ எனது நண்பனைப் பார்க்கவில்லையே! பொறு! நான் அவன்ரை புகைப்படத்தைக் காட்டுறன்" என்று சொல்லி தனது கைப்பையில் இருந்து எடுத்தாள்.

நான் அதிர்ந்து போனேன். அந்தப் புகைப்படத்தில் இருந்தவன் அவளின் அப்பாவின் வயதை ஒத்த 45 வயதுடைய ஒரு மெக்சிக்கன் ஆண்.

சந்திரவதனா
14.9.2006

பாடல்களிலிருந்து சில வரிகள் - 6


கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும்
கரை இரண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய் அன்பு போகும்
மெய்யன்பு வாழும்

Tuesday, September 12, 2006

நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட


மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற
(பாடல்களிலிருந்து) சில வரிகள் - 5


மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்

மனவீணை என நாதமீட்டி
கீதமாகி நீந்துகின்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா

நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

உன் நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

பாடல்களிலிருந்து சில வரிகள் - 4
பாடல்களிலிருந்து சில வரிகள் - 3
பாடல்களிலிருந்து சில வரிகள் - 2
பாடல்களிலிருந்து சில வரிகள் -1

Monday, September 11, 2006

அன்று ஏன் கேட்டேன் ? - Noorjan


பகலில் என்றால் எட்டிலிருந்து பத்து நிமிடங்களும் இரவில் சுற்றுப் பாதையால் வருவதால் 15இலிருந்து 20நிமிடங்களும் எடுக்கும் வேலைக்கான அந்தப் பேருந்துப் பயணத்தின் அந்தச் சில நிமிடங்களுக்குள் எத்தனையோ பேரைச் சந்திப்பேன். சில நேரங்களில் எதிர் பாராதபடி தெரிந்தவர்கள் யாராவது பயணத்தில் இணைவதால் அவை இனிய சந்திப்புக்களாகி என்னை மகிழ்சியில் ஆழ்த்தியும் இருக்கின்றன.

அன்று வந்தவள் நூர்ஜான். அவள் எனது மகளுடன் சின்ன வகுப்பில் படித்தவள். எமது வீட்டுக்கு அருகிலேயே அவளது வீடும் இருந்ததால், வளர்ந்து வேறு வேறு பாடசாலைகளில் படிக்கும் போதும் அவளும் எனது மகளும் நண்பிகளாகவே இருந்தார்கள்.

தற்போது பல வருடங்களாக அவளுக்கும் எனது மகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையாயினும் என்னைப் பேருந்தினுள் கண்டால் அவள் வந்து என்னருகில் அமர்ந்து விடுவாள். ஏதோ, எனது நண்பி போல மிக உற்சாகமாக என்னுடன் கதைத்துக் கொண்டு வருவாள். இம்முறை சந்திப்பு கிட்டத்தட்ட ஐந்து மாத இடைவெளிகளின் பின்னேயே நடந்தது.

நாங்கள் சந்தோசமாகக் கதைத்துக் கொண்டு வந்தோம். அவள் தனது வேலையிடத்து அனுபவங்களைச் சொல்லிக் கொண்டு வந்தாள். பேரூந்து உரிய இடத்துக்கு வருவதற்கு சற்று முன்பாக வழமைக்கு மாறாக "உனது அப்பா எப்படி இருக்கிறார்?" என்று கேட்டேன். ஒருநாளுமே நான் அவளது அப்பாவைப் பற்றி அவளிடம் கேட்டதில்லை. அன்று ஏனோ கேட்டு விட்டேன். அப்படியே அவள் கண்கள் குளமாகி விட்டன.

"அப்பா போன நவம்பரில் இரத்தப் புற்றுநோய் வந்து இறந்து விட்டார்" என்றாள். நான் அதிர்ந்த போது "நாங்களுந்தான் அதிர்ந்தோம். சும்மா காய்ச்சல்தான் வந்தது. குடும்பவைத்தியரிடம் போன போது மருத்துவமனைக்கு அனுப்பினார். இரண்டு கிழமை மருத்துவமனையிலேயே இருந்த அப்பா வீடு திரும்பவில்லை. இறந்து விட்டார்" என்றாள். சொல்லி முடிக்கும் போது அவள் குமுறி அழத் தொடங்கி விட்டாள்.

பேரூந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு நடக்கும் போது என் மனதும் கனத்துப் போயிருந்தது. அவளது அப்பாவைப் பல தடவைகள் கண்டிருக்கிறேன். ஆனாலும் அவளோடு அவர் பற்றி ஒரு போதும் பேசியதில்லை. அன்று ஏன் கேட்டேன் என்று எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. அவளது சோகத்தைக் கிளறியதால் வருத்தமாகவும் இருந்தது.

சந்திப்பு நடந்து சில மாதங்கள் கடந்து விட்டாலும் சோகத்தையும் மீறிய ஒரு ஆச்சரியம் என்னுள் கேள்வியாகி நிற்கின்றது.

சந்திரவதனா
11.9.2006

பாடல்களிலிருந்து சில வரிகள் - 4

பெற்றவரும் அந்நாளில் பிள்ளைகள்தானே - மனம்
பித்தாகிப் போகு முன்னே கல்லுகள்தானே!
பிள்ளைகளும் பின்னாளில் பெற்றாராகலாம் - அவர்
கல்லான மனங்களெல்லாம் பித்தாய் மாறலாம்!

அம்மா அப்பா ஆனபின்தான் அனுபவம் விளங்கும் - பெற்ற
அன்னை தந்தை செய்வதெல்லாம் அறிவுக்குத் துலங்கும்!
சும்மா சொன்னாப் புரிவதில்லை இந்தத் தத்துவம் - இதை
சொல்லாமலே புரிய வைக்கும் வாழ்க்கைத் தத்துவம்.
´
மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்

Sunday, September 10, 2006

புலவன் தமிழ் அகராதி


புலவன் தமிழ் அகராதி பற்றி அறிந்திருக்கிறீர்களா? சில நாட்களுக்கு முன் நான் அறிந்து கொண்டேன். இது தமிழ் தமிழ் அகராதி.

பாவித்துப் பார்த்தேன். பயனுள்ளதே. எழுதுவதில்தான் ஒரு சிக்கல். நாம் சாதாரணமாக எழுதும் போது குற்றையோ அல்லது விசிறியையோ எழுத்தின் பின்னரே சேர்த்துக் கொள்வோம். இங்கு விசிறியை அல்லது குற்றை முதலில் தட்டி, பின்னரே குறிப்பிட்ட எழுத்தை எழுத வேண்டும். ஆனாலும் பயனுள்ளதே.

Thursday, September 07, 2006

முடிசூடும் தலைவாசல் - தாயகம்FM இல்


தாயகம்FM இணையத்தளத்தில் புதிய இறுவட்டு இணைக்கப் பட்டுள்ளது.
1) முடிசூடும் தலைவாசல்

விரைவில் இணைக்கப்பட உள்ளமை
வெல்லும் வரை செல்வோம்,
வரலாறு வந்த வல்லமை,
அன்னைத் தமிழ்

Wednesday, September 06, 2006

கவிதைகள்


கவிதைகள் எந்த வரைவிலக்கணத்துக்குள் அடங்குகின்றன என்று எனக்குப் புரியவில்லை. எதுகை, மோனை... நயம்.. என்று எத்தனையோ விடயங்கள் கவிதைகளை அழகு படுத்தினாலும், எனக்கு அதெல்லாமுமாய் எழுதவும் தெரியவில்லை. யாராவது அதையெல்லாம் சேர்த்து எழுதினால், என்னால் அவைகளை நன்கு ரசிக்க முடிகிறது. எதுகை மோனை... என்று எதுவுமே இல்லாதவை கூடச் சில சமயங்களில் எனக்குப் பிடிக்கின்றன.

இவை எந்த வரையறைகளுக்குள்ளும் அடங்காத, எந்த வரைவிலக்கணங்களுக்குள்ளும் உட்படாத எனது உணர்வுகளின் வடிகால்கள்.

Saturday, September 02, 2006

பாடல்களிலிருந்து சில வரிகள் - 3


மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்

மண்வெட்டி கையில் எடுப்பார்
சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்

பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?

பாடல்களிலிருந்து சில வரிகள் - 2
பாடல்களிலிருந்து சில வரிகள் - 1

Friday, September 01, 2006

பாடல்களிலிருந்து சில வரிகள் - 2


மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்

பள்ளம் சிலர் உள்ளம் என
ஏன் படைத்தான் ஆண்டவன்.

பாடல்களிலிருந்து சில வரிகள் - 1


சில பாடல்களின் சில வரிகள் மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்றன
அப்படியான வரிகளில் ஒன்று.


கடவுள் ஒரு நாள் உலகைக் காணத் தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்

ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்

படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite