Monday, July 31, 2006

தாயகம் நோக்கி - 2


தாயகம் நோக்கி - 1

ஒரு சின்னக் குளியல் செய்து விட்டு, முடிந்தால் சுடச் சுட ஒரு தேநீர் அருந்தி விட்டு பயணத்தைத் தொடரலாம் என்ற நினைப்போடுதான் வவுனியாவில் இருந்த வன்னிலொட்ஜ் இனுள் புகுந்து கொண்டோம்.

என்னவொரு ஏமாற்றம்..! வாழ்க்கையில் நான் சந்தித்த மிக மிக அருவருப்பான இடங்களில் ஒன்று அது. அறைக்குள் நுழைந்த பொழுதே அப்படியொரு நாற்றம். குளியலறைக்குள் நுழைந்தேன். வருடக்கணக்காகத் துப்பரவு செய்யப் படாதிருந்தது. போன வேகத்தில் வெளியில் வந்து விட்டேன். ஐந்து நிமிடங்கள் கூட அங்கு நிற்க முடியவில்லை. ஹொல்கெர் ஓடியோடி அந்த அசிங்கத்தைத் தனது கமராவுக்குள் திணித்துக் கொண்டிருந்தான். எனக்குச் சங்கடமாக இருந்தது. என்றாவது ஒருநாள் யேர்மனியத் தொலைக்காட்சியில் இது ஒளிபரப்புச் செய்யப் படலாம்.

எனது பயணத்தின் மணிப் பொழுதுகளில் இது ஒரு மாசு படிந்த பொழுது. ஒரு நாளைக்கான கட்டணப் பணத்தைக் கட்டி விட்டு வெளியேறினோம்.

வெளிப் பார்வைக்குப் பிரமாண்டமாகத் தெரிந்த அந்த லொட்ஜ் தன்னோடு வைத்திருந்த அருவருப்பு இப்போது என்னோடு ஒட்டிக் கொண்டு வந்து விட்டது போலிருந்தது.

கையோடு கொண்டு வந்த ஃபைபர்கிளாஸ் (Fiberglass) இல் கால் செய்வதற்கான மருந்துப் பொருட்களையும், உபகரணங்களையும் விளக்குவைச்ச குளத்தினூடே கொண்டு செல்வதில் சிக்கல் இருக்கலாம் என்ற எண்ணம் எமக்கு இருந்ததால், அவைகளை வவுனியாவில் ஒரு கடையில் வைத்து விட்டுப் போய் றெட்குறோஸ் (Red Gross) மூலம் எடுத்துக் கொள்ளலாம் என நேற்றுக் கடைசி நேரத்தில் தீர்மானித்ததை இன்று செயற்படுத்து முகமாகக் குறிப்பிட்ட ஒரு கடையைத் தேடினோம்.

அதிகாலை நான்கு மணி என்பதால் அனேகமான எல்லாக் கடைகளும் பூட்டியே இருந்தன. ஒரு சில கடைகளுக்கு உள்ளிருந்து பாடல்கள் மட்டும் கேட்டன.

தூங்கி வழிந்த மாடுகளுக்கும், தூங்கியே கிடந்த மாடுகளுக்கும் மத்தியில் காத்திருந்தோம். பொறுமை கெட்டு வாகனத்திலிருந்து இறங்கி வீதியில் நடக்கையில் வீதியோரங்களிலும் கட்டிடத் திண்ணைகளிலும் மனிதர்களும் உறங்கியும் உறங்காமலும் இருப்பதைக் கண்டோம். ஓட்டோக்களும் நின்றன.

ஐந்து மணியாகிக் கொண்டிருக்கையில் மோட்டார் சைக்கிள்களினதும் துவிச்சக்கர வண்டிகளினதும் வரவைத் தொடர்ந்து ஒரு சில கடைகள் திறக்கப் பட்டு சாம்பிராணிப் புகை வாசம் கமகமக்கத் தொடங்கியது. சுப்ரபாதம் மனசையும் காதையும் நிறைத்து புத்துணர்ச்சியைத் தந்தது. காத்திருப்புகளைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி குறிப்பிட்ட கடையைக் கண்டு பிடித்துப் பொருட்களை ஒப்படைத்து விட்டு வவுனியாவிலிருந்து புறப்பட்டோம்.

வாகனம் விளக்குவைச்ச குளத்தை நோக்கி விரையத் தொடங்கியது. யாரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. எல்லோரிடமும் ஒரு அவசரம். நேரத்துக்குப் போய் வரிசையில் நிற்க வேண்டும். இடையிடையே "கெதியாப் போனால்தான் லைனில் நின்று பாதை கடக்கலாம்." என்று சிவா மாஸ்டரும் கணவரும் முணுமுணுப்பது கேட்டது. ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பின் லைனைக் கட் பண்ணி ஆட்களைத் திருப்பி விடுவார்களாம்.

எமக்குள் பதட்டம். பதினாறு வருடங்களின் பின், சரியான முறையில் சிங்கள இராணுவத்தை இனித்தான் சந்திக்கப் போகிறோம். பாதை திறக்கப்பட்ட பின் விளக்குவைச்ச குளத்தில் செக்கிங் எப்படி இருக்கும் என்பது பற்றியதான சரியான தகவல்களை யாருமே எமக்குத் தரவில்லை. சிவா மாஸ்டரும் பன்னிரண்டு வருடங்களின் பின் இப்போதான் கொழும்பிலிருந்து தமிழீழத்தை நோக்கிப் பயணிக்கிறாராம்.

எப்படியான வரவேற்பு எமக்காகக் காத்திருக்கிறது என்று தெரியாமலே விளக்கு வைச்சகுளத்தின் செக்கிங் பொயின்ற் இலிருந்து ஒரு மைல் நீளமளவில் நீண்டிருக்கும் மனிதர்களும், வாகனங்களும் நிரைப் படுத்தப் பட்ட வரிசையை வந்தடைந்தோம். எட்டு மணிக்கு முன்னமே இப்படியொரு நீள்வரிசை. செக்கிங் இன்னும் தொடங்கவில்லையாம். எட்டிப் பார்த்தோம். இறங்கி நடந்து பார்த்தோம்.

ஒவ்வொரு பத்து யார் தூரத்துக்கும் மூட்டைகளை அடுக்கி முள்ளுக்கம்பிச் சுருள்களை வைத்துத் தடைமுகாம்களை அமைத்திருந்தனர் சிங்கள இராணுவத்தினர். அடிக்கடி அதன் பின்னிருந்த சிறு குடில்களுக்கு உள்ளிருந்து எட்டியும் பார்த்தனர். நட்பாகச் சிரித்தனர். போர் என்று வரும் போது இவர்கள்தானா பேய்களாக மாறுகிறார்கள்..? நம்ப முடியாதிருந்தது. குளித்து விட்டு ஈரத் துவாலையைத் தோளில் போட்டுக் கொண்டு வந்த குட்டையாகத் தலையை வெட்டியிருந்த அவர்களில் சிலர் சிரித்த படி கை காட்டினார்கள். இவர்களும் மனிதர்கள்தான். ஆனாலும் பணத்தைக் காட்டிப் பகடைக் காய்களாக்கப் படுகிறார்கள். யதார்த்தம் புரிந்தது.

காத்திருப்புகளில் எம்மவர்கள் களைத்துப் போயிருந்தார்கள். சுள்ளி வைத்து எரிக்கும் மணத்தைக் காற்று அள்ளி வந்தது. ஆங்காங்கு களையிழந்த வீடுகளின் முன்றலில் சிலர் அடுப்பின் மேல் பானை வைத்து தண்ணீர் சுட வைத்து தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். கொண்டு வந்த உணவுகளையும், அந்தத் தேநீரையும் சுவைத்துப் பலர் தமது பசியையும் களையையும் ஆற்றிக் கொண்டிருந்தார்கள். எமது வாகனத்தின் சிங்கள சாரதி ஓடியோடி ஒவ்வொரு தடைமுகாம்களுக்குள்ளும் புகுந்து சிரித்தபடி வெளியில் வந்தான்.

வரிசை நத்தையாக நகரத் தொடங்கியதும் நாங்களும் நகர்ந்தோம். எமது முறை வந்ததும் சிறீலங்கா அடையாள அட்டையைக் காட்டினோம். ஹொல்கரின் எம்ஓடீ(MOD) யைப் பார்த்து விட்டு, அதில் "இரு பிரதி தமக்கு வேணும்" என்றார்கள். "எமக்கு அதுபற்றித் தெரியாது. அதனால் நாம் ஒரு பிரதியும் எடுக்கவில்லை." என்றோம். ஒரு சிலர் எம்மைப் பாவமாகப் பார்த்தாலும் ஒரு சிங்களவன் "எம்ஓடீ யின் கொப்பி இல்லாமல் நாம் மேற்கொண்டு நகர முடியாது" என்று கடுமையாகச் சொல்லி விட்டான். அவன் முகத்தில் இனக்குரோதம், அதிகாரத்திமிர்... எல்லாமே அளவுக்கு அதிகமாகவே இருந்தன.

இனி நாங்கள் மீண்டும் வவுனியா வரை போய் கொப்பி(பிரதி) எடுத்து வந்து வரிசையில் நின்று... பயணம் தொடர்ந்த மாதிரித்தான். மனசுக்குள் சலிப்பும் கோபமும் வந்தன. சாரதி சிங்களத்தில் மீண்டும் அந்த அதிகாரியிடம் கேட்டுப் பார்த்தான். ம்கும்.. அதிகாரி சற்றும் இளகவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினோம். ஆனாலும் தடைமுகாம்களுக்குள் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களிடம் சாரதி ஆலோசனை கேட்ட போது அவர்களில் ஒருவன் எம்மை அவர்களது அலுவலகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பிரதி எடுத்துத் தந்து, எமது வாகனத்தில் ஏறி எம்மை மீண்டும் வரிசையில் முன்னுக்குக் கொண்டு வந்து விட்டு விட்டுப் போனான். அவனுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. கண்களால் சொன்னோம். சிரிப்பை உதிர்த்துச் சென்றான்.

ஒருவாறு பாஸ், எம்ஓடீ, ஐசி செக்கிங்குகள் முடிந்தால் இனி நாம் கொண்டு வந்த பொருட்களின் மீதான செக்கிங். அதற்கு வாகனத்தை அங்கிருந்த பரந்த காணிக்குள் இறக்க வேண்டி இருந்தது. மரநிழல்கள், வெயில்கள், இருக்கைகள் என்று பலதரப்பட்ட நிலைமைகள் அதற்குள். பொருட்களின் மீதான செக்கிங்கில் கடுமை இருக்கவில்லை. எமது உடமைகளில் சிலவற்றை அவர்கள் திறந்து கூடப் பார்க்கவில்லை. ஹொல்கெரின் கமராவைத்தான் கழற்றியும் பார்த்தார்கள். அத்தோடு முடியவில்லை. வாகனத்தையும் பதியவேண்டுமாம். அதனால் சாரதி அதற்குரிய இடத்துக்குச் சென்று விட நாம் காத்திருந்தோம்.

களைப்புக்கு நடுவிலும் அது ஒரு இனிமையான பொழுது. அங்கு காத்திருந்தவர்களில் பல உறவுகள் என்னை இனம் கண்டு வந்து பேசிச் சென்றார்கள். அவர்கள் உள்நாட்டிலேயே வாழ்ந்திருந்தாலும் 12, 15, 16.. வருடங்களின் பின் இப்போதான் வடக்கை நோக்கிச் செல்கிறார்களாம். அவர்களுடனான சந்திப்பு எதிர்பாராத சந்தோசம்.

வாகனமும் பதிந்து முடிய விளக்குவைச்சகுளத்தை விட்டுப் புறப்பட்டோம். "அப்பாடா" என்றதொரு உணர்வு மனத்துக்குள்.

நிம்மதியோடு தொடர்கையில் தமிழீழம் எங்களை வரவேற்றது. மனசு குதூகலித்தது. பெண் பொலிஸ்களும், எம் பெடியளும் என்று கண்டதில் மனசு துள்ளியது.

தமிழீழத்தில் ஆங்காங்கு ஓரிரு செக்கிங் பொயின்ற்ஸ் இருந்தாலும் மரையடிச்ச குளத்தில் எமக்கான செக்கிங். அங்கு பதிந்து வெளிநாட்டிலிருந்து வந்த காரணத்தால் 500 ருபா கட்டணம் செலுத்தி வன்னிக்குள் புகுவதற்கான பாஸைப் பெற்றுக் கொண்டோம். ஹொல்கெர் வெளிநாட்டவர் என்பதால் அவரிடம் எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப் படவில்லை. சிங்கள சாரதியை உள் விடுவதில்தான் சில தயக்கங்கள். எம்மை அழைத்துப் போக வெண்புறாவிலிருந்து இரு உறவுகள் வந்திருந்தார்கள். ஆனாலும் எமது பொருட்களை அவர்களது வாகனத்தில் வைக்க முடியவில்லை. அதனால்
இன்றே திரும்பி விட வேண்டுமென்ற உத்தரவுடன் சிங்களசாரதியை உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.

எமது பயணம் எமது மண்ணில் தொடர்ந்து... கிளிநொச்சியின் வெண்புறாசெயற்கை உறுப்பு பிராந்தியச் செயலகத்தை வந்தடைந்தது.

வைத்தியமே கேள்விக்குறியாகிப் போன நேரத்தில் செயற்கை அங்கங்களைப் பொருத்துவது, அதுவும் பணம் கொடுத்து, செயற்கை உறுப்புகளைப் பொருத்துவது என்பது சாதாரண மக்களுக்கு முடியாத காரியம். இந்த நிலையில் முற்று முழுதாக இலவசமாக தனது சேவையை தமிழ் மக்களுக்குத் தர 15.06.1994இல் யாழ்ப்பாணம் குளப்பிட்டி வீதியில் தோற்றம் பெற்றதுதான் இந்த வெண்புறா நிறுவனம்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையால் யாழ்ப்பாணம் குளப்பிட்டி வீதியிலிருந்து கிளிநொச்சி, கோணாவில், புதுக்குடியிருப்பு எனப் பறந்து வந்த வெண்புறா, தனது தலைமைச் செயலகம் இன்னும் புதுக்குடியிருப்பிலேயே இருந்தாலும் 15.6.02 இலிருந்து கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் வந்து கம்பீரமாக அமர்ந்திருக்கிறது.

தொழில் நுட்பவியலாளர், திட்ட இணைப்பாளர், நிர்வாக அலுவலகர், வரவேற்பாளர், தட்டச்சாளர், கணக்காளர், காசாளர், களஞ்சியக் காப்பாளர், காவலாளர், சமையலாளர், பராமரிப்பாளர், கள அலுவலகர், விழிப்புணர்வுப் பணியாளர்கள், மருத்துவர், கண்ணிவெடி அகற்றும் பிரிவினர்... என்று 32 பேர்கள் பணியாற்றும் வெண்புறாவின் உள்ளே வீசும் காற்றுக் கூட என்னை நேசக்கரம் நீட்டி வாவென வரவேற்றது.

எம்மை ஏற்றி வந்த வாகனச் சாரதிக்கு மிகுதிப் பணத்தையும் கொடுத்து அனுப்பி விட்டு, வெண்புறாவின் உறவுகளுடன் நான் கைகோர்த்துக் கொண்டேன். அது இறுக்கமான நேசமான அன்பான கைகோர்ப்பு.

கோர்த்த கைகளை இழுத்துப் பிரித்துக் கொண்டு மீண்டும் யேர்மனி திரும்பும் ஒரு நாள் வரும் என்பது பற்றிய பிரக்ஞைகள் எதுவுமின்றி நான் வெண்புறாவுக்குள் உலா வந்தேன்.

சந்திரவதனா
யேர்மனி
2002

- தொடரும் -

Friday, July 28, 2006

தாயகம் நோக்கி - 1

12.5.2002 இலிருந்து 9.6.2002 வரையிலான தயாகம் நோக்கிய பயண அனுபவங்கள்

மெல்லிய பய உணர்வுகள் என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க நான் இன்னும் கொழும்பு வீதிகளில்தான் திரிந்தேன்.

வன்னி நோக்கிய பயணத்தைப் பற்றித்தான் எனக்குப் பயம். வழியில் யாரும் வெடி வைப்பார்களா..?! நான் மாவீரர்களின் சகோதரி என்பதை இராணுவம் கண்டு பிடிக்குமா..?! என்பதை எல்லாம் விட, எம்முடன் நாம் கொண்டு வந்த ஃபைபர்கிளாஸ் (Fiber Glass) இல் கால் செய்வதற்கான உபகரணங்களும், மருந்துப் பொருட்களும்தான் இராணுவத்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற பயம்.

ஆனாலும் கொழும்பு வீதிகளில் திரிகிறேன். எம்மோடு நாம் கூட்டி வந்த செயற்கைக் கால் செய்வதற்கான யேர்மனியத் தொழில் நுட்பவியலாளரான திரு.ஹொல்ஹெர்.தாம் (Holger Thamm) க்கு வன்னிக்குச் செல்வதற்கான அனுமதியான எம்.ஓ.டீ (MOD) எடுப்பதில் தாமதம். அதுதான் அவரோடு என் கணவரும் ஓடிக் கொண்டு திரிகிறார். வழமைபோல் நான் தனியேதான். யேர்மனியப் பதினாறு வருட வாழ்க்கையில் தனிமை எனக்குப் புதிதில்லை. தனிமை என்னை ஒரு போதும் கொன்றதுமில்லை.

ஆனாலும் நாள் முழுவதும் ராஜசிங்க வீதியில் எமக்காக ஒதுக்கப் பட்ட வீட்டில் தனியே குந்திக் கொண்டிருப்பதை விட கொழும்பு வீதிகளில் திரிவது பரவாயில்லாமல் இருந்தது. வெயில்தான் கொளுத்தி எறிந்தது.

வீதி ஒழுங்குகள் வாகனங்களின் வேகங்களில் கரைய அங்கு பாதை கடப்பதே சாதனை. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பாதை கடப்பதில் சாதனை புரிந்தேன். இன்டர்நெட் கடை தேடி யேர்மனியில் விட்டு வந்த எனது பிள்ளைகளுக்கு மின்னஞ்சல் செய்தேன். இளநீர்க் கடைகளைக் கடக்கும் போதெல்லாம் ஒன்றுக்கு மூன்றாய் இளநீர் வெட்டுவித்துக் குடித்தேன்.

மதியமானதும் வீட்டுக்குச் சென்று உடை மாற்றி அதே ராஜசிங்கவீதியில் இரண்டு வீடுகள் தள்ளியுள்ள வீட்டுக்கு மதிய உணவுக்காகச் சென்றேன். அது எனது மைத்துனரின் (கணவரின் சகோதரனின்) வாசஸ்தலம். 1983 க் கலவரத்தின் வடுக்களைத் தாங்கி நிற்கும் அந்த வாசஸ்தலத்தில் எப்போதும் சாப்பாட்டில் குளியல்தான். கணவரின் அண்ணி உபசரிப்பதில் விண்ணி. இரண்டு மூன்று நாட்களில் உடல் உப்பி உடைகளெல்லாம் இறுக்கி....

ஹொல்கெருக்கும் உடைகள் வெடிப்பதற்குத் தயாராக இருந்தன. உறைப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு... என்று வியந்து வியந்து, குழந்தை போல விரல்களால் அளாவி, அள்ளி எடுத்து வாயில் திணித்து, ரசித்து, சுவைத்து, வியர்வை நெற்றியில் துளிர்த்து... பின் ஆறாய் ஓட "ஊ... ஆ.." என்று அவர் சாப்பிட்ட போது சிரிப்பாய் இருந்தது.

எம்.ஓ.டீ (MOD) க்கான காத்திருப்புக்கள் எரிச்சலைத் தந்தன. நானும் எனது கணவரும் 1981 இல் வழங்கப்பட்ட சிறீலங்கா அடையாள அட்டையை வைத்திருந்ததால் அதனுடன் வன்னி செல்லத் தீர்மானித்து இருந்தோம். ஆனால் ஹொல்ஹெருக்கு எம்.ஓ.டீ (MOD) கட்டாயம் என்பதால் 500 ரூபா லஞ்சம் கொடுத்து விட்டுக் காத்திருந்தோம்.

ஐந்தாம் நாள் 17.5.2002 அன்று எம்.ஓ.டீ (MOD) கிடைத்து விட்டதாகத் தொலைபேசி அழைப்பு வந்தது. அதை எடுத்து வருவதற்காகக் கணவரும் ஹொல்ஹெரும் சென்று விட மீண்டும் கொழும்பு வீதிகளில் திரிந்தேன். வெள்ளவத்தைத் தமிழருக்கு வணக்கம் என்பதன் அர்த்தம் தெரியுமோ? நுனி நாக்கு ஆங்கிலம்.... வீட்டுக்கு இரு வேலைக்காரர்கள்... நாட்டு நடப்புகள் பற்றி இவர்கள் அறிவார்களோ...? மனசுக்குள் ஏனோ எரிச்சலான கேள்வி எழுந்தது.

இரவு வன்னிக்குப் பறப்படுவதாகத் தீர்மானிக்கப் பட்டது. கொழும்பில் புதிதாகத் திறக்கப் பட்டிருக்கும் தமிழர் புனர்வாழ்வுக்கழக அலுவலகத்தினர் நாம் கேட்டுக் கொண்டதின் பேரில் தனியார் வாகனம் ஒன்றை ஒழுங்கு படுத்தித் தந்தார்கள். முற்பணம் கொடுத்தால்தான் தொடரும் என்று தொலைபேசி அழைப்பு வர பயணத்துக்கு 4 மணி நேரம் முன்பு மீண்டும் எனது கணவர் ஓடிச் சென்று 10,000ரூபா கொடுத்து வந்தார்.

இரவு 9மணிக்கு நாம் ஐந்து நாட்கள் தங்கியதற்கான வாடகையாக 15000ரூபாவை, வீட்டு உரிமையாளரிடம் கொடுத்து விட்டு ராஜசிங்க வீதியில் இருந்து புறப்பட்டோம். புறப்படும் போதுதான் அன்று எமது 26வது திருமணநாள் என்பதை வழியனுப்பியவர்களுக்குச் சொல்லி வாழ்த்தைப் பெற்றுக் கொண்டோம்.

வாகனத்தில் ஏறிய பின்தான் சாரதி சிங்களவன் என்பது தெரிந்தது. பயம் இரட்டிப்பானது. நாம் கதைப்பது அவனுக்கு விளங்குவது போலிருந்தது. அவன் சிங்களத்தில் மட்டுமே கதைத்தான்.

கொழும்பு தாண்டிய பின் வன்னியை நோக்கிய அந்த இரவுப் பயணம் எனக்குள் மிகுந்த திகிலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இயற்கை அழகின் மேல் போர்த்தியிருந்த இரவின் அமைதி அசாதாரணமாகவே தோன்றி என்னை அச்சப் படுத்தியது. போதாததற்கு சிங்கள சாரதி. மனசு அடிக்கடி அனர்த்தங்கள் ஏற்பட்டு விடக் கூடாது எனப் பிரார்த்தித்தது.

எம்மோடு தொற்றிக் கொண்டு வந்த தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் கொழும்பு அலுவலக அன்பர்களில் ஒருவரான சிவா மாஸ்டர், சிங்களவனை சாரதியாக நியமித்ததற்காக எனது கணவரது கண்டனதுக்கு ஆளானார். அவருக்கும் சிங்களவன் சாரதியாக வரப் போவது தெரியாது இருந்திருக்கிறது. தனியார் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் வாகனம் ஒழுங்கு படுத்தப் பட்டுள்ளது. சாரதியாக சிங்களவனும் கடமையாற்றுகிறான். எப்படியோ அந்தத் தவறு நிகழ்ந்து விட்டது. நல்லதுக்கா, கெட்டதுக்கா என்று தெரியாத குழப்பம் எம்மைப் பற்றிக் கொண்டது. பயணம் சிங்களப் பாடல்களுடன் தொடர்ந்தது.

சிங்கள சாரதிக்கு இது வன்னியை நோக்கிய முதற் பயணமாம். தேங்காய்ப் பூரானை நினைவு படுத்தும் குருநாகலில் திடீரென சாரதி இறங்கி ஒரு தேநீர்க் கடைக்குள் நுழைந்து கொண்டான். அது அர்த்த ஜாமம். அவன் ஏன் போகிறான்? கடைக்குள் என்ன கேட்கிறான்? என்பது தெரியாததால் பயம் என்னைச் சித்திரவதை செய்தது.

"வாகனத்துக்குள் தமிழர். வெட்டுங்கள்" என்பானா?! திகில் நினைவுகள் எனக்குள் தோன்றிய அடுத்த கணமே, சிறியவர்கள் பெரியவர்கள் என்று வயது வித்தியாசமின்றிய ஆண்கள் கும்பல் ஒன்று வாகனத்தைச் சூழ்ந்து கொண்டது. பார்த்தால் காடையர்கள் போலத் தெரிந்தார்கள். வாகனத்துக்குள் தலையை நுழைத்து ஏதோ சிங்களத்தில் கேட்டார்கள். தமிழ், வன்னி என்ற வார்த்தைகள் அவர்கள் கதைகளுக்குள் அடிக்கடி வந்தன. நான் பயத்தில் உறைந்து போனேன்.

சிவா மாஸ்டரும் கணவரும் சிங்களத்தில் பதில் சொன்னார்கள்.சாரதி வாகனத்துள் ஏறிய பின்னும் இழுத்துப் பிடித்து ஒருவன் சிங்களத்தில் கத்திக் கத்திக் கதைத்தான். அவன் உருவம் கூடப் பயத்தையே தந்தது. ஒருவாறு வாகனம் புறப்பட்ட பின்தான் எனக்கு சீரான மூச்சு வரத் தொடங்கியது. "என்ன பிரச்சனை..?" என்று கேட்ட போது "ஒன்றுமில்லை. அவர்கள் சும்மாதான் கதைத்தார்கள்" என சிவா மாஸ்டரும், எனது கணவரும் சொன்னார்கள். ஏனோ அவர்கள் சொல்வதில் முழுமையான நம்பிக்கை எனக்கு வரவில்லை. சாரதி பாதை கேட்கத்தான் கடைக்குள் போனானாம்.

ஒரு காலத்தில் அப்பா கடமையாற்றிய நாகொல்லகம, களனியா போன்ற இடங்களைத் தாண்டுகையில் பயங்களுக்கு நடுவிலும் குழந்தைப் பருவத்தில் அம்மா, அப்பாவுடன் அங்கு கழிந்த பொழுதுகளும் இளமைக்கால இனிய நினைவுகளும் மனசுக்குள் வந்து இனிய ராகமிசைத்தன. நாகொல்லகம ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகில் இருக்கும் ரெயில்வே குவார்ட்டர்ஸ் இல் நின்ற குண்டுமணிச் செடியும் புலம்பெயர்ந்த பின் ஐரோப்பிய ஈழமுரசில் பிரசுரமான என் குண்டுமணி மாலை சிறுகதையும் நினைவில் வந்து போயின.

அநுராதபுரத்தைத் தாண்டுகையில் நான் மட்டுமல்ல, தடைமுகாம்களின் தடங்களோடு இருந்த அதன் அமைதியில் சாரதி கூட அச்சப்பட்டான் போலத் தெரிந்தது. பாதை பிரிகையில் எந்தப் பக்கம் போவதென்று தடுமாறினான். தாண்டிய பின் சாரதிக்கு நித்திரை தூங்கியதால் வெள்ளை அப்பங்கள் நூற்றுக் கணக்கில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த ஒரு தேநீர்க்கடையின் முன் மீண்டும் வாகனத்தை நிறுத்தினான். நாங்களும் இறங்கிக் கடைக்குள் புகுந்து கொண்டோம். எல்லோரும் எங்களை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். சந்தோசமாக வரவேற்றார்கள். அவர்கள் சிங்களவர்களா தமிழர்களா என்பது இன்று வரை எனக்குத் தெரியாது. பாஷைகள் அதிகம் தேவைப்படவில்லை. ஆனால் பேசினோம் பார்வைகளால்.

சாரதி தேநீர் குடிக்க நாங்கள் சோடா குடித்தோம். (அதிகமான இனிப்பில் தாகம் அதிகரித்தது.) அப்போதுதான் சாரதியை நேராகப் பார்த்தேன். அவன் கண்களில் நட்புத்தான் தெரிந்தது. எந்த வித இனக்குரோதமும் தெரியவில்லை. சிநேகமாகச் சிரித்தான்.

தொடர்ந்த வவுனியா நோக்கிய பயணத்தில் சிக்கல் எதுவும் மட்டுமல்ல, எனக்குள் பயம் கூட இருக்கவில்லை. அவனோடு தேவைக்குத் தமிழில் பேசினேன். அவன் சிங்களத்தில் பதில் தந்தான். மதவாச்சி தாண்டியதும் தமிழ்ப் பாடல்கள் போட்டான்.

அதன் பின் தடைமுகாம்களின் அடையாளங்கள் வழி வழியே இருந்தாலும் அநாவசியப் பயங்கள் ஒளிந்து, மனசு எதையோ எதிர்பார்த்து இன்பராகம் இசைக்கத் தொடங்கியது. உணர்வுகள் கனவும் கற்பனையுமாய் இறகு கட்டிப் பறக்கத் தொடங்கியது. "விரை விரை, தமிழீழம் எமக்காகத் காத்திருக்கிறது." என்று எதுவோ என்னை அவசரப் படுத்தியது.

மனசு கேட்ட படி விரையாவிட்டாலும் வாகனம் தனக்கே உரிய விரைவோடு வவுனியாவுக்குள் புகுந்த போது வவுனியா தூங்கிக் கொண்டிருந்தது. வன்னி லொட்ஜில் தங்கி சற்று ஆறி, பயணத்தைத் தொடரலாம் என எண்ணியதில் வவுனியாவில் இருக்கும் வன்னி லொட்ஜினுள் புகுந்து கொண்டோம்.

சந்திரவதனா
யேர்மனி
2002

- தொடரும் -

Monday, July 24, 2006

அவர்கள் அவர்களாகவே...!


இது ஒரு நினைவுக்கோலம். எந்தவிதக் கற்பனையும் கலக்காத உண்மையின் வடிவம். பாதை திறந்த பின் எழுந்த தாயக தரிசன ஆசையில், இது அவசியந்தானா, என மனதின் ஒரு மூலையில் அச்சத்துடனான கேள்வி தொக்கி நிற்க.. வன்னி எப்படி இருக்கிறது? போர் எப்படி எமது மக்களைச் சிதைத்திருக்கிறது? நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்...? என்று பார்க்க வேண்டும், உதவ வேண்டும் என்ற ஆசையில் தொடங்கப் பட்ட பயணம் இது. அங்கு போன பின்தான் பயணத்தின் அவசியம் தெரிந்தது. 12.5.2002 இலிருந்து 9.6.2002 வரையிலான அங்கு கழிந்த பொழுதுகள் மிகவும் அர்த்தம் நிறைந்தவை. அந்த மணிப்பொழுதுகளில் ஒரு துளி இது..!

யேர்மனிய அவசரம் போல் விரையாமல் இங்கு பொழுதுகள் ஏ9 பாதை போல நீண்டிருந்தன. கிளிநொச்சியில் அமைந்திருக்கும் வெண்புறா செயற்கை உறுப்புத் தொழில் நுட்ப நிறுவனப் பிராந்தியச் செயலகத்தின் செயற்கை உறுப்புத் தயாரிக்கும் பட்டறையில் தகரங்களை "ணொங்.." "ணொங்.." கென்று செவிப்பறை அதிர அறையும் சத்தம் ஓய்ந்து அரை மணி நேரமாகியிருந்தது. சுட்டெரிக்கும் வெயில் மட்டும் விட்டுப் போக மனமின்றி இன்னும் கொளுத்திக் கொண்டேயிருந்தது.

முற்றத்தில் நான் அமர்ந்திருந்தேன். தனிமை என்று சொல்ல முடியாது. அடிக்கடி வெண்புறாவின் உறவுகளில் யாராவது வந்து "அன்ரி" என்றும் "அக்கா" என்றும் அன்போடு அழைத்து பாசத்தோடு பேசிச் சென்றார்கள்.

சற்று முன்தான் சுந்தரம் வந்தான். "அன்ரி..." என்று அவன் கூப்பிடும் போதே என் நெஞ்சுக்குள் பிசையும். வேதனை சுமந்த அவன் கண்களின் நோக்கலில் பாசம் பீரிடும்.

"என்ன..! சுந்தரம் சொல்லுங்கோ. தேத்தண்ணி குடிச்சிட்டிங்களோ?"

"ஓம் அன்ரி.. எனக்குக் கவலையா இருக்கன்ரி."

......

"என்ரை அம்மா அப்பா எல்லாரையும் பார்த்து ஏழு வருசமாச்சு அன்ரி.. அதுதான். அவையளை ஒருக்கால் பாத்தனெண்டால் ஆறுதலாயிருக்கும் போலை இருக்கு."

"கவலைப் படாதைங்கோ சுந்தரம். வழி கிடைக்கும்.."

"மற்றாக்களை எல்லாம் அம்மாமார் வந்து பாத்திட்டுப் போயிட்டினம்..."

அவனது வேதனையை என்னால் உணர முடிந்தது. பட்டறை வேலைகளை முடித்து விட்டு கரடிப் போக்குச் சந்தி வாய்க்காலில் குளித்து விட்டு வந்திருந்தான். எப்போதும் போல துப்பரவாக உடை அணிந்திருந்தான். ஏழு வருசத்துக்கு முதலே தொடையோடு ஒரு காலை இழந்து விட்டான். தகரத்தில் செய்த செயற்கைக் காலை அவன் அணிந்திருந்தாலும் இழுத்து இழுத்து அவன் நடப்பதைப் பார்க்கும் போது தொடையோடு கால் இல்லை என்பதை உடனேயே உணர்ந்து கொள்ளலாம்.

"உங்கடை கால் போனாப் போலை நீங்கள் இன்னும் அம்மாவைச் சந்திக்கேல்லையோ....?"

"இல்லை அன்ரி. இப்ப நாட்டிலை பிரச்சனை இல்லை எண்டாலும் அம்மாவையள் அம்பாறையிலை இருக்கிறதாலை போய் வாறதிலை கொஞ்சம் சிக்கல்"

"கால் போனதாலை இன்னும் கவலையா இருக்கிறீங்களோ..?"

"இல்லை அன்ரி. எனக்கு இப்ப ஒரு கால் இல்லை எண்ட நினைவே வாறேல்லை. எனக்கது பழகிப் போட்டுது. "

"கால் போன உடனை உங்கடை உணர்வுகள் எப்பிடி இருந்திச்சு சுந்தரம்?"

"போன உடனை எனக்கு சாகலாம் போலை இருந்திச்சு. இப்ப எனக்கு அப்பிடியான ஒரு உணர்வும் இல்லை. அம்மாவை அண்ணாவையை எல்லாம் ஒருக்கால் பார்க்கோணும்...!"

வேதனை அவன் முகத்தில் அப்பியிருந்தது. அவனது கண்கள் எனது கண்களுக்குள் நேசமாக ஊடுருவி எனது தாய்மையைச் சீண்டின. ஏனோ என் மனச் சுவர்கள் வேர்த்து கண்கள் பனித்தன.

இப்படித்தான் இவனுக்குள் உள்ளது போலத்தான் இந்த வெண்புறா செயற்கைக் கால் திட்ட பிராந்தியச் செயலகத்தில் கடமையாற்றும் 32 உறவுகளுக்குள்ளும் ஒவ்வொரு சோகக் கதை. சிலநாட்களாக மட்டும் அவர்களோடு பழகிக் கொண்டிருக்கும் என்னிடம் வந்து தமது துயர்களையும், சந்தோசங்களையும், தோல்விகளையும், சாதனைகளையும் ஒரு மகவு தனது தாயிடம் சொல்வது போல சொல்வார்கள். அவர்களுடனான அந்தப் பொழுதுகள் மிகவும் அர்த்தம் நிறைந்தவை.

எனக்குத் தனிமை தெரிவதில்லை. அவர்கள் விட்டுப் போகும் சமயங்களில் நான் வெண்புறாவின் முன்றலில் வாயிலோடு ஒரு ஓரமாக உயர்ந்து பருத்து அழகாக நிமிர்ந்திருக்கும் ஆண்பனையிடமோ அல்லது எனக்காக ஒதுக்கப் பட்ட அறையின் தகரக் கூரையின் மேல் கிளைகளைப் பரப்பி வைத்திருக்கும் பக்கத்துச் சிறிய கோயிலில் விழுதுகள் பதித்து நிற்கும் அரசமரத்திடமோ அல்லது பட்டறையின் முன் அசைந்தாடிக் கொண்டிருக்கும் சஞ்சீவி மரத்திடமோ அல்லது பட்டறையின் பின்னால் எட்டியும் ஒட்டியும் நின்று ஓராயிரம் கதை சொல்லும் புளிய மரத்திடமோ லயித்துப் போய் விடுவேன்.

இன்று எனது புளியமரத்தின் மீதான லயிப்பு, அதை புளியமரம் மீதான லயிப்பு என்று சொல்வதை விட, அந்தப் புளியமரத்தின் அசைவில் கிளறப்பட்ட எனது பாடசாலைப் பருவத்து வாழ்க்கை மீதான லயிப்பில் நான் எங்கோ சென்றிருந்தேன்.

நான் அரிவரியிலிருந்து "கபொத" உயர்தரம் வரை பயின்ற வடமராட்சி இந்துமகளிர் கல்லூரியிலும் பின்பக்க விளையாட்டு மைதானத்தில் கிளை பரப்பியபடி இப்படித்தான் ஒரு பெரிய புளியமரம். அதன் அடி வெள்ள வாய்க்கால் கடந்து அடுத்த காணிக்குள். முள்ளுக்கம்பியைப் பிரித்து வெள்ள வாய்க்காலுக்குள் இறங்கி அந்தப் புளிய மரத்தின் குருத்து இலையில் தொடங்கி பூ, பிஞ்சு, காய்கள் என்று சுவைத்ததும் "முனி..., பிள்ளைபிடிகாரன்... என்ற கூக்குரல்களினால் குடல் தெறிக்க ஓடியதும் ஒரு பருவம். வீட்டிலிருந்து களவாக உப்பும் தூளும் கொண்டு வந்து அதே புளியங்காய்களைச் சுவைத்தது இன்னொரு பருவம். எல்லாவற்றையும் விடப் பசுமையாக மனதில் பதிந்திருப்பது அதன் கீழ் இருந்து அரிவரியிலிருந்து என்னோடு கூடவே வந்த நால்வருடன் சேர்ந்து நாம் ஐவருமாகக் கதையளந்ததுதான்.

அந்த ஐவரில் அவளும் ஒருத்தி. நாங்கள் ஐவரும் எப்போதும் நட்பாகவே இருந்தாலும் அவள் எனக்கு எப்போதும் பிரத்தியேகமாகவே தெரிந்தாள். உயரத்தில் நாமிருவரும் கிட்டத்தட்ட ஒரேயளவு என்பதால் ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கைக்காக வரிசைப் படுத்தப் படும் போது நாம் பக்கத்துப் பக்கத்திலேயே வருவோம். இருப்போம்.

அவளுடனான அந்தப் பிரத்தியேகமான உண்மையான நட்பு, அது எப்போ எப்படி வந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவளுக்கு அப்பா இல்லை என்பது சாவைப் பற்றிய அதிக பிரக்ஞை இல்லாத வயதிலேயே எனக்குத் தெரிந்தது. சக்கடத்தாரின் மகள் என்று எல்லோரும் சொல்வார்கள். சக்கடத்தார் ஐந்து பெண்களைப் பெற்று விட்டு திடீரென்று ஒருநாள் அவள் அம்மாவை அம்போ என்று விட்டு விட்டு இறந்து விட்டார். இவள் கடைக்குட்டி.

எப்படியும் அவள் வீட்டில் கஸ்டம் இருந்திருக்கும். ஆனால் கஸ்டத்தின் ரேகையை அவள் ஒருபோதும் யாருக்கும் காட்டியதில்லை. கடைக்குட்டி என்ற செல்லம் அவள் முகத்தில் தெரிந்தாலும் அதை அவள் துர்ப்பிரயோகம் செய்ததில்லை. அவள் அக்காமார் அவளை அப்பா இல்லை என்ற குறை தெரியாமல் மட்டுமல்ல மிக நேர்த்தியாகவும் வளர்த்தார்கள் என்பது அவளைப் பார்த்தாலே தெரியும். காலையிலிருந்து மாலைவரை அவளோடு அருகமர்ந்துதானே எனது பாடசாலை வாழ்க்கையை அனுபவித்தேன். ஒருநாள் அவள் ஒரு பொய் சொல்லியோ அல்லது வகுப்பில் யாரையாவது ஏமாற்றியோ நான் பார்த்ததில்லை. அதையெல்லாம் அப்போது நான் நினைத்ததில்லை. இப்போ நினைத்துப் பார்க்கிறேன். அவளின் நற்குணம் தெரிகிறது. அவளின் திறமையைப் பார்த்து நேர்த்தியைப் பார்த்து பொறாமைப் பட்டவர்கள் உண்டு. அவள் யாரையாவது பார்த்துப் பொறாமைப் பட்டாளா..? அப்படியெதுவும் என் நினைவில் இல்லை.

சந்தி.....! நான் டொக்டரா வருவன். அப்படித்தான் எனக்குத் தெரிந்த நாளிலிருந்து அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். அதனால் "கபொத" உயர்தரத்தில் நான் பிரயோககணிதமும், தூயகணிதமும் படிக்கையில் அவள் எழுந்து உயிரியல் வகுப்புக்கும், தாவரவியல் வகுப்புக்கும் போய் வருவாள்.

அவளுக்குள் இருந்த இன்னொருத்தியை சிவகுமாரனின் மரணத்தின் போதுதான் பார்த்தேன். சிவகுமாரனின் மரணம் எங்கள் எல்லோரையும் பாதித்திருந்தது. ஆனால் அது அவளுள் ஏற்படுத்திய பாதிப்பு எனக்கு சற்று வித்தியாசமானதாக நியமாக அவளை வாட்டுவதாகத் தெரிந்தது. அவளுக்குள் எப்போதும் இருந்த உறுதி சற்று அதீதமாகத் தெரிந்தது. ஆனால் அவள் டொக்டராக வருவாள் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இருக்கவில்லை. அதே கனவோடுதான் அவள் தொடர்ந்தும் படித்தாள். பாடசாலை வாழ்க்கை முடியப் போகும் காலங்களில் அதே புளியமரத்தின் கீழ் இருந்தும், இன்னும் தள்ளி வந்து விளையாட்டு மைதானத்தின் அடுத்த பக்கத்தில் இருக்கும் அப்பா கடை வேலியோடுள்ள கல்லில் இருந்தும் வாய் சிவக்க அப்பா கடைச் சோளப் பொரியைச் சுவைத்த படி நிறையப் பேசினோம். பிரியப் போகும் சோகத்தை மறக்க பசுமை நிறைந்த நினைவுகளே... பாடினோம்.

பாடசாலை முடிந்து பிரிந்த போதும் அவள் டொக்டர்தான் என்ற கனவும் நினைவும் எனக்குள்ளும் இருந்தது. 1983 இல் அவள் உண்ணாவிரதம் இருக்கிறாள் என்ற செய்தி என் காதில் வந்த போதும் நான் என் கனவைக் கலைக்கவில்லை. அவளைச் சீரியஸான நிலையில் தூக்கிச் சென்று விட்டார்கள் என்றறிந்த போது தலை விறைப்பது போலிருந்தது.

பின்னர் ஒவ்வொன்றாகக் காற்றில் வந்த செய்திகள் எனக்குள் நம்ப முடியாததொரு பிரமையைத்தான் ஏற்படுத்தின. மதிவதனியின் திருமணத்தின் பின் அவளது இருப்பு பற்றிய தகவல்கள் வருவது குறைந்து போயின. ஆனால் அவளுடனான அவள் பற்றியதான நினைவுகள் என்னோடு வாழ்ந்தன. அவளது அம்மா வீதியில் என்னைக் கண்டு என் கைபற்றிக் கதறிய போது நானும் அழுதேன்.

நான் ஜேர்மனிக்கு வந்த பின் அவள் என்னைத் தேடி என் வீட்டுக்கு வந்தாளாம். பின்னர் 1987, 1988 களில் இந்திய இராணுவத்தின் அட்டகாசக் காலங்களில் மாறு வேடத்தில் ஒரு புலனாய்வாளியாக என் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாளாம். அம்மாதான் எல்லாம் எழுதினா. அவ்வப்போது அம்மா மூலம் அவளும் கடிதங்கள் எழுதி அனுப்பினாள். அம்மாவும் புலம் பெயர்ந்த பின் அவளுடனான கடிதத் தொடர்புகள் குறைந்து குறைந்து ஒரு கட்டத்தில் தொடர்புகள் அற்றுப் போயின. நினைவின் தொடுகைகள் மட்டும் என்னோடு எப்போதும் கூடவே இருந்தன.

இப்போ அவள் செஞ்சோலையின் பொறுப்பாளராம். என்னை ஒரு பொருட்டாக நினைப்பாளா? மனசு சந்தேகப் பட்டது. நேற்றிரவு வெண்புறாவின் உறவுகளில் ஒன்றான தினேஸ் புதுக்குடியிருப்புக்குப் போவதாகச் சொன்னான். ஒரு துண்டுக்கடிதம் "நான் இங்கு நிற்கிறேன்." என்பதைத் தெரியப் படுத்தி மூன்று வரிகளில் எழுதி, "இதை ஜனனியிடம் குடுத்து விடுங்கோ" என்று சொல்லிக் கொடுத்து விட்டேன்.

இன்று மத்தியானம்தான் அதை ஜனனியிடம் கொடுப்பதாகச் சொன்னான். கொடுத்திருப்பானா..? கொடுத்தாலும்...! அவளுக்கு எத்தனை சோலியிருக்கும். அதையெல்லாம் விட்டு விட்டு, சுயநலக்கரியாக ஜேர்மனிக்கு ஓடிவிட்டு, இப்போ நாட்டில் பிரச்சனை இல்லை என்றதும் வந்திருக்கும் என்னைப் பார்க்க வருவாளா..! அல்லது தேவையெண்டால் வந்து பார்க்கட்டுமன், என்று நினைப்பாளா..! நேரமில்லை என்று சொல்லி விடுவாளா..? மனசுக்குள் எத்தனையோ சஞ்சலமான சந்தேகமான கேள்விகள் எழுந்தன.

"அன்ரி என்ன யோசிக்கிறிங்கள்? இளநி ஒண்டு வெட்டித் தரட்டே..? " வெயில் விட்டுப் போன இந்த அந்திக் கருக்கலில் இப்போது என் தனிமையில் தன் தனிமையைப் போக்க வந்தவன் ஹரிகரன். எனக்கு இளநீர் மேல் அத்தனை மோகம் என்பது அவனுக்குத் தெரியும்.

"ஓம் ஹரிகரன். இளநி ஒண்டு குடிக்கலாம்தான்."

இவனுக்குச் சுந்தரம் போல் தொடையோடு கால் போகவில்லை. முழங்காலுக்குக் கீழேதான் இல்லை. தகரக் கால் போட்டிருந்தான். நேற்றுத்தான் Fiber Glass இல் கால் செய்வதற்காக அவனின் கால் அளவு எடுக்கப் பட்டது.

மெல்லிய நொண்டலுடன் நடந்தான். நானும் கூடவே சென்றேன். முற்றத்திலிருந்து சற்றுத் தள்ளி ஒதுக்குப் புறமாக கறுத்தக் கொழும்பான் மாமரத்துக்குக் கீழ் இருந்த மூலையில் வைத்து இளநீரை வெட்டித் தந்தான். அவனது களங்கமில்லாத அன்பைப் போலவே இளநீரும் இனித்தது.

நான் அதைக் குடித்துக் கொண்டிருக்கும் போதே "அன்ரி ஜனனி அக்காவுக்கு லெற்றர் அனுப்பினனிங்களோ?" கேட்டான்.

"ஓம் ஹரிகரன் தினேசிட்டைக் குடுத்துவிட்டனான். ஆனால் ஜனனி வருவா எண்டு எனக்கு நம்பிக்கையில்லை."

"இல்லை அன்ரி. ஜனனி அக்கா நல்லவ. கட்டாயம் வருவா. "

அவன் எனக்கு இரண்டாவது இளநீரையும் வெட்டித் தந்தான்.

நேரம் 7 மணியைத் தொட்டிருந்தது. 4.30 க்கே கால் தயாரிக்கும் வேலையை முடித்த வெண்புறா உறவுகள் மற்றைய வெளி வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஒவ்வொருவராக வந்து முற்றத்தில் கூடத் தொடங்கினார்கள். சிரிப்பு கதை ரேடியோ என முற்றம் கலகலத்தது.

எனக்குக் குளிக்க வேண்டும் போலிருந்தது. எழுந்து என் அறைக்குச் சென்றேன். திடீரென்று ஒலித்த மோட்டார் சைக்கிள் சத்தத்தைத் தொடர்ந்து "அன்ரி...!" சத்தமான கூப்பிடல்கள். "அன்ரி.....! ஜனனி அக்கா"

நம்ப முடியவில்லை. கண்களைக் கசக்கிப் பார்த்தேன். அவளேதான். குளுகுளுவென்று செல்லம் கொஞ்சும் முகத்துடன் எனக்குத் தெரிந்த ஜனனி இப்போ கறுத்து மெலிந்து... ஆனால் கண்களுக்குள் அதே பழைய கனிவுடன் மோட்டார் சைக்கிளை பிராந்தியச் செயலகத்தின் முற்றத்தில் நிறுத்தி விட்டு இறங்கினாள். என் கை கோர்த்து நடந்தாள். கிராவல் மண் அவள் உடைகளில் அப்பியிருந்தது. பள்ளிப் பருவத்தில் இருந்த அதே உறுதி பேச்சில் துள்ளி வந்தது.

எனக்குத்தான் சற்று நேரம் பேச்சு வர மறுத்தது. அது சற்று நேரம்தான். பின்னர் பேசினோம் நேரம் போவதே தெரியாமல். சரஸ்வதி பூசையின் போது சரம் கட்டப் பூ காணாது என்று சொல்லி ரீச்சரிடம் அனுமதி பெற்று பூப்பறிக்கப் போகும் சாக்கில் அவள் என் வீட்டுக்கு வந்தது பற்றி, அவள் கொண்டுவரும் கத்தரிக்காய் பொரியலும் பிட்டும் எனக்கு மதிய உணவாக, எனது தோசையும் சம்பலும் அவளுக்கு மதிய உணவானது பற்றி, புளியமரத்தின் கீழ் இருந்து கதையளந்தது பற்றி...! அவள் போராட்ட வாழ்க்கை பற்றி...., செஞ்சோலைக் குழந்தைகள் பற்றி.....! என்று கதைகள் பல் வேறு திசைகளில் நீண்டு விரிந்தன. வெண்புறா உறங்கிய பின்னும் நாம் பேசிக் கொண்டிருந்தோம். சேர்ந்து சாப்பிட்டோம்.

கடமைக்கு வந்தது போல் அந்த ஒரு நாளுடன் அவள் ஒதுங்கிக் கொள்ளாமல் தொடர்ந்தும் என்னைத் தேடி வந்தாள். தனது 109.. இலக்க மோட்டார் சைக்கிளில் என்னை ஏற்றிக் கொண்டு திரிந்தாள். குழந்தைகள் போலப் பேசினோம். சிரித்தோம். அவளும் என்னைப் போலவே என்னைத் தன் நினைவுகளால் தொட்டுக் கொண்டு வாழ்ந்திருக்கிறாள். செஞ்சோலைப் பிள்ளைகளுடன் என்னைப் பற்றிப் பேசியிருக்கிறாள்.

எந்த ஒரு போராட்டமும் அவள் நினைவுகளைப் பறிக்கவில்லை. அவளை அவள் இயல்பிலிருந்து மாற்ற வில்லை. அவள் அவளாகவே இருந்தாள். அதே நட்புடன் பேசினாள்.

"அன்ரி...! அப்பிடி நேரம் போறதே தெரியாமல் ஜனனி அக்காவோடை மணித்தியாலக் கணக்கிலை என்னதான் கதைக்கிறனிங்கள்?" வெண்புறா உறவுகள் என்னைச் செல்லமாகச் சீண்டினார்கள்.

அவளுடனான அந்தப் பொழுதுகள் அர்த்தம் நிறைந்தவை. நட்பின் ஆழத்தைச் சொல்பவை. ஆயுதந் தூக்கிய அவர்களுக்குள்ளும் ஈரம் இருப்பதை எனக்கு உணர்த்தியவை. இன்னும் பசுமையாய் எனக்குள் பதிந்திருப்பவை.

அவள் டொக்டராக வராவிட்டால் என்ன..? நான் மூன்று குழந்தைகளுக்குத்தான் அம்மா. அவள் செஞ்சோலையின் இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் அம்மா. அவளைப் பற்றிய நினைவுகள் இன்னும் எனக்குள் உயர்ந்து...!

சந்திரவதனா
யேர்மனி
August - 2002

Sunday, July 23, 2006

செல்வாவுடன்

பத்து மணிக்கு செல்வா வருவாள் என்பதால் சற்று அவசரமாய் இருந்தேன். அவளின் எலக்ரோனிக் கை செய்வதற்கு இன்று அளவெடுப்பதாக ஏற்பாடு.

நேற்று அண்ணன் பிரபாகரன் அவர்களிடம் போனபோது யேர்மனிய செயற்கை உறுப்புத் தயாரிக்கும் தொழில்நுட்பவியலாளர் ஹொல்கர் தாமும் எம்முடன் வந்திருந்தார்.

அண்ணையுடன் கதைக்கும் போது  தகரமல்லாத Fiberglass இல் செயற்கைக் கால்களைச் செய்வதிலுள்ள நன்மைகளையும், செயற்பாடுகளையும் பற்றி விளக்கினேன்.

அப்போதுதான் 1990 இல் பலாலித் தாக்குதலின் போது இரு கைகளையும் இழந்து விட்ட செல்வாவின் கதை வந்தது. BBCயின் விவரணம் ஒன்றின் போது உறுதியோடு பேசிய செல்வாவை சந்திக்க வேண்டுமென்றதொரு ஆர்வம் என்னுள் இருப்பதை அண்ணனுக்குத் தெரியப் படுத்தினேன். நவம் அறிவுக்கூடம் போயும் அவளைச் சந்திக்க முடியாது போனது பற்றி ஆதங்கப் பட்டேன்.

"அவ நவம் அறிவுக் கூடத்திலை இல்லை. இங்கை கிட்டத்தான் இருக்கிறா" என்று அண்ணை சொன்னார். அவவின் அந்த நிலை பற்றிப் பேசும் போது அவவுக்கு கை போட்டால் என்ன..? அது முடியுமா..? என்ற கேள்விகள் எம்முள் எழ அது பற்றி  ஹொல்கரிடம் கேட்டோம்.

கையில்லாத போதும் மனவலிமையோடு வாயாலும், காலாலும் எலக்ரோனிக் துறையில் வேலை செய்து கொண்டிருக்கும் செல்வா சில பொழுதுகளின் பின் அழைத்து வரப் பட்டாள். என் விருப்பத்துக்கு அமைய வாயால் ஒரு கவிதை எழுதித் தந்தாள். வியப்பாய் இருந்தது.

அவளை பரிசோதித்த ஹொல்கர் "இயலாது கஷ்டம் நிறைய செலவாகும்" என்று சொல்லி விட்டார். அண்ணை "செலவைப் பற்றிப் பிரச்சனையில்லை. அதை நான் தருகிறேன்" என்றார். அதன் விளைவாகத்தான் அவள் இன்று வருகிறாள். 

இன்று அளவெடுத்து அதைப்  Plaster of Paris இல் செய்து யேர்மன் கொண்டு சென்று அவளுக்கு அளவான கை செய்வதாகத் திட்டம்.  இரு கைகளும் அடியோடு இல்லாத நிலையில் கையைப் பொருத்துவதற்கு பிடிமானமாக ஒன்றுமில்லாத நிலையில் கையைச் செய்து முடிப்பதென்பது எவ்வளவு கடினமானது என்று அடிக்கடி ஹொல்கர் சொன்னார்.

ஆனாலும் ஒரு துணிந்த முயற்சி. அண்ணன் கேட்டு விட்டார் என்பதற்காக மட்டுமல்லாமல் 13 வருடங்களாக கை இல்லாமல் இருக்கும் ஒரு 25 வயதுப் பெண்ணுக்கு கை கொடுத்து உதவ வேண்டுமென்ற ஆர்வமும் எமக்குள்.

அதற்காக சனிக்கிழமை வன்னியிலிருந்து புறப்படுவதை திங்கள் வரைக்கும் தள்ளிப் போட்டோம்.

பத்து மணிக்குச் சற்று முன்னரே (1.6.2002) அவள் வந்தாள். போராளி இன்சுடர் துணைக்கு வந்தாள். அவர்களை ஏற்றி வந்தது ரேகாதான்.

இந்த அமளிக்குள்தான் எனக்கு டுபாய் புட்டவித்துக் காட்ட அண்ணன் புகழோவியனையும் நிமலனையும் அனுப்பியிருப்பது தெரிய வந்தது. பிட்டை இரவு அவிப்பதாகத் தீர்மானித்துக் கொண்டோம்.

அன்றைய பகற் பொழுது எனக்கு செல்வாவுடனே கழிந்தது. மாலை 4 மணியளவில் அரசியல் துறை அலுவலகத்துக்குச் சொந்தமான குசினிக்கு சாருவுடன் சென்றேன். செல்வாவும், இன்சுடரும் கூட வந்தார்கள்.

அங்கே நிமலனும் புகழோவியனும் எனக்காக எல்லாவற்றையும் வெட்டி வைத்து விட்டுக் காத்திருந்தார்கள். அடுப்பு கதகத வென்று எரிந்து கொண்டிருந்தது.

புகழோவியன் அடுப்போடு நின்றார்.  நிமலன் எனக்கு விளக்கத் தொடங்கினார்.

தலைவருடன் சில மணிப் பொழுதுகள்

நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! தூக்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன்.

கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப  இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும், போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம் இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பதையும் பார்த்த பின், இதையெல்லாம் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன்மிக்க அண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது.

´அண்ணன்` அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நாங்கள் வெளிநாடுகளில்  இருந்து கொண்டு மேதகு என்றும், மதிப்புக்குரிய என்றும், தலைவர் என்றும் எட்ட வைத்துப் பார்த்த அந்தத் தூய தாயகனை அவர்கள் கிட்ட நின்று அப்படித்தான் சொல்கிறார்கள்.

வாய்க்கு வாய் அண்ணை என்றும் அண்ணன் என்றும் அவர்கள் அப்படி உரிமையோடும் பாசத்தோடும் பேசும் போதெல்லாம், ஏற்கெனவே எனக்குள் முளைவிட்டிருந்த அந்த ஆசை துளிர்த்து, தளிர்த்து, சடைத்து பெருவிருட்சமாக விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. நானும் அண்ணனைப் பார்க்க வேண்டும். வன்னியைத் தன் கண்களுக்குள் வைத்து இத்தனை நேர்த்தியாக நிர்வகிக்கும் அந்த அண்ணனை ஒரு தரம் சந்திக்க வேண்டும். வன்னி மக்களின் மனதில் இத்தனை பிரியத்துக்குரியவராக இடம் பிடித்திருக்கும் அவரோடு ஒரு தரம் மனம் திறந்து பேச வேண்டும்.` எனக்குள்ளிருந்த ஆசை அவாவாக மாறத் தொடங்கியது.

என் தாய் வயிற்றில் பிறந்து, விடுதலை வேட்கையில் எம் மண்ணுக்காகத் தம் இன்னுயிரை ஈந்த என் தம்பிகளில் ஒருவனான மயூரன் கூட ஒரு காலத்தில் அவரோடு அவர் அருகில் இருந்தவன். அவன் பற்றியும் எனக்குக் கிடைக்காத சில விடயங்களை அவரோடு அளவளாவ வேண்டும். அந்த ஆசை கூட என் மனதின் ஆழத்தில் வேரூன்றி இருந்தது.

என் ஆசைக்கு அணை போட முடியாத கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன்.

நேற்று முன் தினம் மாலை நான்கு மணியளவில் வெயிலில் மூழ்கியிருந்த கிளிநொச்சி வெண்புறா நிறுவனத்தில் நிழலும், தண்மையும் தேடி வரவேற்பறையின் ஓர் மூலையில் நான் அமர்ந்திருந்த போதுதான் தமிழ்ச்செல்வன் ஆளனுப்பியிருந்தார். `எம்மைச்சந்திக்க விரும்புவதாகவும் ஏழு மணிக்கு வாகனம் அனுப்புவதாகவும்` சொல்லி விட்டிருந்தார்.

ஏழு மணிக்குச் சில நிமிடங்கள் முன்னரே வாகனம் வந்தது. போனோம். நட்பு நிறைந்த பார்வைகள் எம்மை வரவேற்க அரசியல்துறை அலுவலகம் தனக்கே உரிய பாணியில் உள்ளேயும் வெளியேயும் அழகாகக் காட்சி அளித்தது.

அதே சிரிப்பு..! எப்போதும் நாம் பத்திரிகைகளிலும், ஒளி நாடாக்களிலும் பார்த்த அதே சிரிப்புடன் தமிழ்ச்செல்வன் எம்மை வரவேற்றார். அக்கா..! அக்கா..! என்று உரிமையோடு அழைத்து அன்போடு பேசினார். களத்தில் காவியமான எனது தம்பிமாரைப் பற்றிக் கதைத்தார். முன்னர் பருத்தித்துறையில் புத்தக வெளியீடு செய்த தங்கை பற்றி விசாரித்தார். கதைகள் பல திசைகளிலும் விரிந்திருந்தன.

அவருடனான இரவு உணவு நளபாகம்தான். இறால், இறைச்சி, மரக்கறி... என்று சுவையாக இருந்தது. அங்கிருந்த உறவுகள் அதை நட்போடு பரிமாறிய விதம் மிகவும் இதமாக இருந்தது. அந்த இனிய உபசரிப்பில் மனசும் வயிறும் நிறைந்திருக்க நாம் விடை பெற எழுந்து கொண்டோம்.

அப்போதுதான் தமிழ்ச்செல்வன் என்னைத் தனியாகக் கூப்பிட்டு அந்த இனிய செய்தியைச் சொன்னார். "வியாழக்கிழமை (அண்ணன்) உங்களைச் சந்திக்க விரும்புறார்" என்றார். எனக்கு ஒரு தரம் மனம் சிலிர்த்தது.

அண்ணையைச் சந்திப்பது பற்றி தமிழ்ச்செல்வன் சொன்ன அந்தக் கணத்திலிருந்து நான் பதட்டமாகி விட்டேன்.

வெளியில் வந்து அவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்த போதோ, சமையல் செய்தவர்களிடமும், உணவு பரிமாறியவர்களிடமும் நன்றி கூறி விடைபெற்ற போதோ நான் ஒன்றிலும் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியாமல் பதட்டமாகவே இருந்தேன்.

உண்மைதானா..? மதிப்புக்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நான் சந்திக்கப் போகிறேனா..? சந்தோசம்..! சந்தேகம்..! பதட்டம்..! பரபரப்பு..! எல்லாம் என்னுள். இன்று காலை தமிழச்செல்வன் அவர்கள் வெண்புறா வரை வந்து "மாலை நாலுமணிக்கு வாகனம் வரும்" என்று சொன்ன போதும், எனது படபடப்புகள் குறைய வில்லை.

நான்கு மணிக்கு வருவதாகச் சொன்ன வாகனம் சற்றுத் தாமதமாகத்தான் வந்தது. போரின் அனர்த்தங்களால் குழி விழுந்து போயிருந்த வீதிகளில் வாகனம் ஏறி இறங்கிச் சென்ற போது நாங்கள் குலுங்கினோம். கூட வந்தவரின் சற்றலைற் தொலைபேசி சிணுங்கினாலே ´எங்கே.. இன்று எம்மால் அண்ணையைச் சந்திக்க முடியாது` என்று தகவல் சொல்லி விடுவார்களோ என்று மனசு பயப்பட்டது.

அண்ணனைச் சந்திக்கும் வரை எதையும் நம்ப மனசு மறுத்தது. வாகனம் எம்மை ஒரு இடத்தில் இறக்கிய போது அங்குதான் அண்ணன் நிற்பார் என நினைத்தேன். பின் அரை மணி நேரமாகக் காத்திருந்த போது அண்ணன் அங்கு வருவார் என்ற நினைப்பில் காத்திருந்தேன்.

ஆனால் வந்தது இன்னுமொரு வாகனம். போராளிகளின் மருத்துவரான, ரேகா ஓட்டி வந்தார். முதற் சந்திப்பிலேயே காலாகாலத்துக்கும் பரிச்சயமான ஒரு உறவு போல அக்கா.. அக்கா.. என்று உரிமையோடு இனிமையாகப் பேசினார்.

சில நிமிடங்களில் வாகனம் மரங்கள் குடை விரித்திருந்த ஒரு இடத்துக்குள் நுழைந்தது. முற்றத்தில் கதிரை போட்டுத் தமிழ்ச்செல்வன் அமர்ந்திருந்தார். அதே சிரிப்புடன் எம்மை வரவேற்றார். உள்ளே வீடா, அலுவலகமா தெரிய வில்லை. மின் விளக்கில் பல முகங்கள் தெரிந்தன.

சில நிமிட உரையாடல்களின் பின் இன்னொரு வாகனம் வந்தது. கேற்றடியில் சற்று இருள் சூழ்ந்திருந்தது. ஆனாலும் இறங்கியவர்களில் தலைவர் பிரபாகரன் அவர்களும் இருக்கிறார் என்பதை அவர் நடையிலேயே கண்டு கொண்டேன். இப்போதுதான் மனசு முழுதாக நம்பிக்கை கொண்டது.

சந்திப்புக்கான பிரத்தியேகமான, தனியாக இருந்த ஒரு கட்டிடத்துள் அவர்கள் நுழைய நாங்களும் அழைக்கப் பட்டோம்.

மதிப்புக்குரிய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நேரே கண்டதும் எப்போதும் என் வாயில் சரளமாக வரும் வணக்கம் கூட வரமறுத்தது. நா பேச மறந்து பின்னிக் கொண்டு பின் நின்றது. நம்ப முடியாதிருந்தது. சிரிப்பை மட்டும் உதிர்த்தேன்.

எல்லோரும் உள்ளே நுழைந்ததும் இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். அங்கும் தமிழ்ச்செல்வன் அவர்களுடனான சந்திப்பின் போது போலவே அழகாகவும் பண்பாகவும் உபசரித்தார்கள். சில நிமிடங்களில் தயக்கமும் தவிப்பும் தளர்ந்து இயல்பு நிலைக்கு வந்தேன். அண்ணன் பிரபாகரன் மிகவும் இயல்பாகப் பேசினார். உரிமையோடு எம்மோடு அருகிருந்து பேசினார். நான் சிரிக்கும் போது "மயூரனின் சிரிப்புப் போலவே இருக்கிறது" என்றார். "இதே சுருள் தலைமயிர்தான் மயூரனுக்கும்" என்றார். 

பூநகிரித் தவளைப் பாய்ச்சலில் உடலம் கூடக் கிடைக்காமற் சிதறிப் போன மயூரனின் குறும்புகள் பற்றி நிறையச் சொன்னார். தகடை மாற்றிக் கட்டிக் கொண்டு திரியும் அவனது விளையாட்டுத் தனங்களைப் பற்றிச் சொன்னார். மொறிஸ் பற்றிச் சொன்னார். "ஆனால் மொறிஸை கடைசியில் சந்திக்க முடியாமற் போய் விட்டது." என்றார். மொறிஸ் ஒரு கிழமையில் அவரிடம் வருவதாக இருந்தானாம். அதற்கிடையில் பருத்தித்துறையில் விதையாகி விட்டான். "மயூரன்ரை அந்த எழுதுற அக்கான்ரை கடிதங்களை எனக்கு நல்லாப் பிடிக்கும். எல்லாரும் விட்டிட்டு வா எண்டுதான் கடிதங்கள் போடுவினம். ஆனால் அவ மட்டும் அப்பிடி எழுத மாட்டா. நம்பிக்கையும் உறுதியும் கூறி எழுதுவா" என்றார். அவர் குறிப்பிட்டது சந்திரா ரவீந்திரனை. புலம் பெயர்ந்து விட்ட எனது தங்கையைக் கூட அவர் இத்தனை ஞாபகம் வைத்திருப்பது எனக்குள் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது. மறைந்த கவிஞர் தீட்சண்யன் பொட்டம்மானின் மகன் பார்த்திபனுக்கு ஆங்கில வகுப்புகள் எடுத்தது பற்றிச் சொன்னார்.

பலதரப்பட்ட உரையாடல்களின் மத்தியில் "சாப்பிடுவோம் வாங்கோ"  என அவர் அழைத்த போது ஆச்சரியப் பட்டுத்தான் போனேன். அரைமணி நேரம்தான் எமக்காக ஒதுக்குவார் என நினைத்தேன். ஏற்கெனவே கூடிய நேரம் கதைத்து விட்டோம். விருந்து வேறையா..! மனசு புளகாங்கிதமடைந்தது.

சாப்பாடு அந்த மாதிரி இருந்தது. டுபாய் பிட்டு மிகவும் மென்மையாக, சுவையாக இருந்தது. சாப்பிடும் போது நிறையக் கதைத்தோம். மனம் விட்டுச் சிரித்தோம். பெண்ணியத்திலிருந்து அரசியல் வரை அலசினோம்.

பெண்ணியம் பேசும் போதுதான் அண்ணன் பிரபாகரன் வன்னியில் வாழ்ந்தாலும் எத்தகையதொரு முற்போக்குச் சிந்தனையுடன் இருக்கிறார் என்பதும், செயற்படுகிறார் என்பதும் தெரிந்தது. அவர் பெண்களுக்கான எல்லா உரிமைகளையும் கொடுக்கிறார். பெண்கள் தாழ்ந்து போவதில் எந்தவிதமான இஷ்டமும் அவருக்கு இல்லை.

அங்கெல்லாம் அனேகமாக ஆண்கள்தான் சமைக்கிறார்கள். பெண்கள் சமையலில் முடங்கிப் போய்விடக் கூடாதென்பதில் அவர் மிகுந்த கவனம் கொண்டிருந்தார். பெண்களால் சமையல் தவிர்ந்த வேறு ஆக்க பூர்வமான பல வேலைகளைச் செய்ய முடியும் என்பதில் அவர் நிறைந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

"சில பெண்கள் சொல்லச் சொல்லக் கேளாமல் சாப்பாட்டைக் குறைத்து விட்டு களத்தில் விரைவில் களைத்துப் போய் விடுகிறார்கள்" என்று அக்கறையோடு கவலைப்பட்டார். நீச்சல் தெரிந்த பெண்நீச்சல்ஆசிரியர் இல்லாத ஆரம்ப கால கட்டத்தில் பெண்களுக்கு நீச்சல் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்த முயன்ற போது எழுந்த கஷ்டங்களை விளக்கினார்.

"சில போராளிகள் ´ஆங்கிலத்தைப் படியுங்கோ படியுங்கோ` என்று சொன்னாலும் அக்கறைப் படுகிறார்கள் இல்லை" என்று வருந்தினார்.

அவரோடு பேசும் போது ஆரோக்கியமான எதிர்காலத் தமிழ்சமூகத்தின் மீதான அவரது அக்கறை புரிந்தது.

பேச்சுத் திசைமாறித் திசைமாறி எனது கணவரின் நகைச்சுவைப் பேச்சுக்களினால் எழுந்த சிரிப்பலைகளோடு மீண்டும் சாப்பாட்டில் வந்து நின்றது. டுபாய் பிட்டும், கோழிக்கறியும் உண்மையில் சுவையாக இருந்தன. அண்ணனிடம் சொன்னேன். "டுபாய்புட்டு நல்லாயிருக்கு. எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு" என்று. அதை எப்படிச் சமைப்பதெனவும் கேட்டேன். "சமைக்கிறவையளைக் கூப்பிட்டுத்தான் சொல்லோணும்" என்றார்.

இப்படியே ஒரு விடயமென்றில்லாமல் குடும்பம், அரசியல், போராட்டம்... என்று பல் வேறுபட்ட கதைகளுடன் சில மணித்தியாலங்கள் களிப்போடு கழிந்தன. சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

விடைபெறும் போது என்னால் நம்பவே முடியவில்லை. நான் அண்ணையைத்தான் சந்தித்திருக்கிறேன் என்பதை. அதற்கு மேல் என்னால் தலைவர் என்று சொல்ல முடியவில்லை. அவருடனான பொழுதுகள் அவ்வளவு நெருக்கமாக இருந்தன.

"எனது வேண்டுக்கோளுக்கமைய என்னை இவ்வளவு விரைவாகச் சந்தித்து மகிழ்ச்சிப் படுத்தியதற்கும் உங்கள் இனிய உபசரிப்புக்கும் மிகவும் நன்றி" என்று அண்ணையிடம் சொன்னேன்.

உடனே அண்ணன் "இல்லை, இல்லை, இதற்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டாம். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும். உங்கடை குடும்பத்திலை மூன்று பேரை நாட்டுக்காகக் குடுத்திருக்கிறீங்கள். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும்" என்றார்.

அவரது அந்தப் பெருமிதமற்ற பேச்சில் உண்மையிலேயே நான் நெகிழ்ந்து போனேன். அந்த நெகிழ்ச்சியோடே, எனது பயணத்துக்கு அர்த்தம் சொன்ன அந்த இனிமையான பொழுதுகளை மனதுக்குள் நிறைத்த படி புறப்பட்டோம். வெண்புறா வந்த பின்னும் இனிய நினைவுகள் என்னுள் நிறைந்திருந்தன.

அடுத்தநாள், எனக்கு அந்த டுபாய்பிட்டை அவித்துக் காட்ட என நிமலனையும், புகழோவியனையும் அண்ணை அனுப்பியிருந்தார். எனக்கு நம்பவே இயலாமல் இருந்தது. எனக்கு அந்த ´டுபாய்பிட்டுப் பிடித்திருக்கிறது. அதை எப்படிச் சமைப்பது?` என்று ஒரு வார்த்தை கேட்டதற்காக அவர் இத்தனை அன்பாக நடந்து கொள்வார் என்று நான் துளியும் எதிர் பார்க்கவில்லை.

அண்ணை என்னோடும், என்னுடைய குடும்பத்தோடும் மட்டும் அப்படிப் பழகவில்லை. நாட்டுக்காக உயிரைக் கொடுத்த அத்தனை உறவுகளின் குடும்பங்களுக்கும் அவர் மதிப்புக் கொடுத்து, அவர்களை எந்தளவு தூரம் தனக்குள் பூஜித்து வைத்திருக்கிறார் என்பதை அவரோடு பழகிய அந்த சிலமணி நேரங்களில் புரிந்து கொண்டேன்.

அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் அவர் வெறுமனே ஒரு இராணுவத் தளபதியல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். அவரோடு கதைக்கின்ற ஒவ்வொரு கணத்திலும்  அவர் ஒவ்வொரு போராளிக்கும் எப்படியெப்படி தனது இதயத்துள் இடம் வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன். எல்லோரும் நினைப்பார்கள் ´ஆயுதந் தூக்கிப் போராடுபவர்கள் தானே` என்று. அவர்களுக்குள்ளும் ஈரம் இருப்பது அவரோடு நேரே பேசும் போதுதான் தெரிந்தது. போராளிகளின் மீது அவர் கொண்டிருந்த பாசமும் நெருக்கமும் என்னை வியக்க வைத்தன.

மாவீரர்கள் எல்லோரையும் அவர் மனதில் நிறுத்தி வைத்திருப்பதை, எந்த மாவீரன் பற்றிப் பேசினாலும் அந்த மாவீரனைத் தன் நினைவில் கொண்டு வந்து அந்த மாவீரன் பற்றி  அவன் இப்படி அவன் அப்படி என்று அவர் சொன்ன போது அறிந்து நான் வியந்து போனேன். தலைவர் என்பதன் அர்த்தத்தை அங்குதான் புரிந்து கொண்டேன்.

வன்னியின் நேர்த்தி மட்டுமா..! எது விடயத்திலும் அவர் காட்டும் ஒழுங்கு. தானே அந்த ஒழுங்கைக் கடைப் பிடிக்கும் கண்ணியமான அழகு. உண்மையான அர்த்தமுள்ள கட்டுப்பாடுகள். என்னுள் எல்லாமே ஆழ்ந்த அதிசயமான வியப்பைத்தான் ஏற்படுத்தின.

எல்லோரும் நினைப்பது போல போராட்டம் மட்டுந்தான் அவரது குறியல்ல. ஒரு சுதந்திர தமிழீழத்தையும், அங்கு ஒரு சுதந்திர சமுதாயத்தையும் உருவாக்குவதிலேயே அவர் கவனமும், செயற்பாடுகளும் இருக்கின்றன. பெண்களுக்கு அவர் கொடுக்கும் மதிப்பு. போராட்டக் களங்களுக்குள் எந்த தவறுகளும் ஏற்பட்டு களம் களங்கப் பட்டு விடாதபடி அவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் நடைமுறைகள்... சொல்லி முடியாத பிரமிப்பு என்னுள்.

அண்ணையுடனான அந்தப் பொழுதுகள் எதையுமே என்னால் மறக்க முடியவில்லை. இப்போது கூட அண்ணையைச் சந்தித்த அந்தப் பொழுதுகளும், அண்ணை எம்மோடு பழகியவிதமும் மிகவும் இனிமையாக பசுமையாக என்னுள்ளே பதிந்திருக்கின்றன.

சந்திரவதனா
ஜெர்மனி


30.5.2002 அன்று வன்னியில் தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்தித்த அந்த இனிய பொழுதுகளில் சில...

பிரசுரம்:
17-23 ஒக்டோபர் 2002 ஈழமுரசு
24-30 ஒக்டோபர் 2002 ஈழமுரசு

Monday, July 17, 2006

எனக்குப் பிடித்த ஆறு(6)


1) அன்பு

2) காதல்

3) நட்பு

4) சுதந்திரம்

5) இசை

6) அழகு



ஆறு விளையாட்டுக்கு என்னை அழைத்த
மலைநாடானுக்கும் குமரனுக்கும் நன்றி.

Sunday, July 16, 2006

இணையத்தளங்களால் வாசிக்கும் தன்மை குறைந்து விட்டதா?


ஐபிசி தமிழில் செவ்வாய்க்கிழமை இரவு இலக்கிய மாலை நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இம்முறை வாசிக்கும் பழக்கத்தை எப்படி அதிகரிக்கச் செய்யலாம் என்ற கருத்துப்படவே விடயங்களைக் கலந்துரையாடினார்கள்

நூலகவியலாளர் செல்வராஜா, வெளியான புத்தகங்கள் பற்றியும், வாசிப்பின் அவசியத்தைப் பற்றியும் அழகாகச் சொன்னார். தொலைபேசி அழைப்பில் வந்தவர்கள், இன்னும் பலவிதமான கருத்துக்களைச் சொன்னார்கள்.

பிறந்தநாளுக்கோ அன்றி வேறு விசேடங்ககளுக்கோ பரிசளிக்கும் போது, புத்தகங்களைப் பரிசுப் பொருட்களாகக் கொடுங்கள் என்று கௌரி.மகேஸ்வரன் சொன்னார். உண்மையிலேயே அது வரவேற்கப் படக் கூடிய நல்ல கருத்து. நூல்களைப் பரிசாக, அன்பளிப்பாகக் கொடுப்பதும், பெறுவதும் ஒரு இனிய விடயம்தான். ஆனாலும் நூல்களை அன்பளிப்பாகத் கொடுத்து விட்டால் மட்டும் வாசிக்கும் தன்மை அதிகரித்து விடுமா என்ற கேள்வியும் எழுகிறது.

இன்னுமொருவர் கருத்துக்களைத் தரும் போது, இணையத் தளங்கள் அதிகமானதால் வாசிக்கும் தன்மை குறைந்து விட்டது எனக் குற்றம் சாட்டியிருந்தார். அந்தக் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.கே.ராஜெனோ, நூலகவியலாளர் செல்வராஜாவோ ஏனோ அந்தக் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை.

இணையத்தளங்களில் உள்ள விடயங்களை வாசிக்காமல் எப்படிக் கிரகித்துக் கொள்வது, என்பது எனக்குப் புரியவில்லை. இணையத்தளங்களின் வரவு வாசிக்கும் தன்மையைக் கூட்டியிருக்கின்றது என்றே என்னால் சொல்ல முடிகிறது.

எனது கருத்து சரியா தவறா என்பதை அறிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

சந்திரவதனா
15.7.2006

Thursday, July 13, 2006

வாசிப்பதை வைத்து எடை போடலாமா?


ஒருவன் எதை வாசிக்கிறான் என்பதை வைத்து அவனை எடை போடலாமா?
கவிதாவின் பதிவு என்னைச் சிந்திக்கத் தூண்டியது.

வாசிப்பதை வைத்து ஒருவரின் தரத்தை உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ அன்றி நல்லவர் என்றோ, கெட்டவர் என்றோ முத்திரை குத்தி விட முடியாது. ஆனால் வாசிப்பதை வைத்து ஒருவரின் குண இயல்புகளை, ஆர்வங்களை, தொழில்ரீதியான நாட்டங்களை, தொழிலை... என்று ஓரளவுக்கேனும் கணித்துக் கொள்ளலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது.

உதாரணமாக எனது வீட்டுப் பிரஜைகளையே எடுத்துக் கொண்டால், எனது வீட்டில் எனது கணவர், குழந்தைகள், நான் ஐவருமே வாசிப்புப் பிரியர்கள். ஆனால் எல்லோருமே குறிப்பிட்ட ஒரே விடயங்களை மட்டுந்தான் வாசிக்கின்றோம் என்றில்லை. தமிழ், ஆங்கிலம், ஜேர்மன்.. என்று மும்மொழிகளிலும் தினமலர், வாரமலர், மாதமலர், சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள்... என்று பல விதமானவை எமது வீட்டில் குவிந்து இருந்தாலும் எல்லோரும் எல்லாவற்றையும் வாசித்து விடுவதில்லை. எல்லோராலும் எல்லாத் துறைகளையும் வாசித்து விடவும் முடியாது.

அரசியல் சம்பந்தமான விடயங்களுக்கு முதலிடம் கொடுத்து வாசிக்கும் எனது கணவர் அம்புலிமாமாக் கதைகளையும் வாசிப்பார். சின்னவயதிலேயே வெறும் கற்பனைக் கதைகள் என்ற ரீதியில் எனது ரசனைக்குள் அவ்வளவாக இடம் பிடிக்காத அம்புலிமாமாக் கதைகளை, எனது கணவர் வாசிக்கும் பொழுதுகளில் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. சிரிப்பாகக் கூட இருந்தது. ஒரு காலத்தில் "இது என்ன சின்னப் பிள்ளைகள் போல..." என நினைத்துக் கொண்டதுமுண்டு. ஆனால் இன்று அப்படி நினைக்கத் தோன்றவில்லை. கற்பனைக் கதைகளையும் ரசிக்க முடிந்த அவரால் ஒரு ஓவியனாக, ஒரு கார்ட்டுனிஸ்ராகப் பரிணமிக்க முடிகிறது. அரசியலோ அன்றிக் குடும்பமோ எதுவாயினும் ஒரு பிரச்சனையை அதன் போக்கில் சிந்தித்து, அதை ஓவியமாக்கும் இந்தக் கற்பனை எனது சிந்தனைக்குள் எட்டாத ஒன்று. சமூகப் பிரச்சனைகளை நாடகமாக்கும் போது எழுத்திற்குள் இயல்பாகவே நகைச்சுவையைக் கலந்து விடுவதும் எனக்குக் கடினமானதே.

அதனால்தான் நினைக்கிறேன், அரசியலிலும், விவரணப்படங்களிலும், ஆவணப்படங்களிலும் ஆர்வம் கொண்டிருந்த போதும், அம்புலிமாமாக் கதைகளையும், தொலைக்காட்சியில் பூனைக்கு டிமிக்கி விடும் மிக்கி மவுசையும் ரசிக்கும் ஒருவரின் சிந்தனைகளும், கற்பனைகளும் வேறு விதமானவை என்று.

இந்தளவு ரசனை உள்ள இவருக்கு தற்போதைய கவிதைப் புத்தகங்களைத் திறந்து பார்க்கவே பிடிப்பதில்லை. "இன்றைய கவிதைகளை ரசிக்க முடியவில்லை" என்பார். காசி ஆனந்தனின் கவிதைகள் போலவோ அன்றி வாலியின் கவிதைகள் போலவோ எழுதுபவர்கள் குறைந்து விட்டார்கள் என்று சலிக்கும் தன்மை அவரிடம்.

அடுத்து எனது பிள்ளைகளைப் பார்த்தால் வீட்டில் இத்தனை புத்தகங்கள் இருக்கும் போதும், தினமும், வாரமும்.. என்று புதிது புதிதாகப் பத்திரிகைகள் எம்மை வந்தடையும் போதும் Focus, Spigel, PC / Internet, Wirtschaft & Politik... என்று தேடி வாங்கி வாசிக்கும் எனது மூத்தவனின் ஆர்வத்தில் அரசியலும், உலகளாவிய சரித்திரமும் முக்கிய பங்கு வகிக்கின்றன.. சினிமாச் செய்திகளையும் விரும்பி வாசிக்கும் அவனுக்கு சிறுகதைகளை வாசிப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. அதை விட அவனது வேலை சம்பந்தமான பொருளாதாரம், ஒரு வங்கியின் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிதலினாலான ஆர்வத்தினூடான கவனங்கள், கணினி பற்றிய நுட்பங்கள்.. என்ற தேடலில், அப்படியான தகவல்கள் தாங்கிய புத்தகங்களை வாசிப்பதிலேயே அதிக ஆர்வம். இத்தனைக்கும் மத்தியில் குழந்தையை வளர்ப்பது எப்படி? என்ற புத்தகத்தையும் அவன் கையில் கண்டிருக்கிறேன்.

எனது மகளை எடுத்துக் கொண்டால் அவளிடம் அரசியல் ஆர்வம் குறைவு. அவளது புத்தக அலுமாரியில் அவளது வேலை தொடர்பான பிஸ்னஸ் சம்பந்தமான புத்தகங்கள் இருந்தாலும், பெண்கள் சம்பந்தமான, குழந்தை வளர்ப்புப் பற்றிய புத்தகங்களும் ஆங்காங்கு இடம் பிடித்திருக்கின்றன. "என்னதான் உலகம் வளர்ந்து விட்டாலும், பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்று சொன்னாலும் பெண்ணானவளுக்கு பிரச்சனை என்ற ஒன்று வரும் போது, அது ஒரு ஆணின் பிரச்சனை போல அல்லாது வேறு கோணத்தில் இருந்துதான் பார்க்கப் படுகிறது" என்று சொல்லும் அவளது வாசிப்பில் ஹரிபோர்ட்டரும், Gone with the wind டும்.. என்று இடம் பிடித்திருக்கின்றன. இவற்றிடையே மீண்டும் "மீண்டுமாய் என்னை வெட்டி வெட்டித் தைத்தார்கள்" என்று சொன்ன Waris Dirie யின் Desert Flower ம் இருக்கின்றன.

எனது சின்னவனைப் பார்த்தால் அவன் என்னைப் போல அனேகமான எல்லாவற்றையும் வாசிக்கும் ஒருவன். வழியிலோ, தெருவிலோ ஒரு துண்டுப் பேப்பரைக் கண்டாலும் வாசித்து விடும் இயல்பு. எத்தனைதான் களைத்து விழுந்து வீடு வந்து சேர்ந்தாலும் அது எத்தனை மணியாயினும் அவனுக்கு வாசிப்பதற்கு ஒரு புத்தகம் வேண்டும். அது கதையோ, அரசியலோ, விவரணமோ எதுவாயினும் பரவாயில்லை. ஆனாலும் அவன் ஒரு பத்திரிகையாளனாக இருப்பதால் அந்தத் துறையில் தன்னை இன்னும் இன்னும் முன்னேற்ற வேண்டும் என்று ஆர்வம் அவனுள் இருப்பதால் அவனோடும் Focus, Spigel, PC/Internet, Wirtschaft & Politik, Chip... என்பவற்றுடன் ஒரு பத்திரிகையாளன் எப்படி இருக்க வேண்டும்? ஒரு செய்தி மற்றவர்களைக் கவர எப்படி எழுத வேண்டும்? ஒரு பத்திரிகையின் எந்தப் பகுதி ஒரு வாசகனை முதலில் ஈர்க்கிறது? எந்தளவில் ஒரு கட்டுரை இருந்தால் அது வாசகனை வாசிக்கத் தூண்டும்.. என்பதான விடயங்களைத் தாங்கிய புத்தகங்களும் இடம் பிடிக்கின்றன.

இத்தனையையும் வைத்து இவர்களில் யார் உயர்ந்தவர் என்றோ யார் தாழ்ந்தவர் என்றோ தரம் பிரிக்க முடியாது. நல்லவர் கெட்டவர் என்று தீர்மானிக்கவும் முடியாது. ஆனால் இவர்களின் தொழில்களை, ஆர்வங்களை.. ஓரளவுக்கேனும் எடை போட முடிகிறது.

ஒருவர் வாசிப்பதை வைத்து அவரது ஆர்வங்களை, ரசனைகளை, தொழில் ரீதியான தேவைகளை எடை போடலாம் என்றே எனக்குச் சொல்லத் தோன்றகிறது. இது எனது எண்ணம் மட்டுமே.

13.7.2006

Monday, July 10, 2006

Archive Browser


எமது வலைப்பூவில், நாமே பதிந்த ஒரு விடயத்தை எப்போதாவது தேவை கருதித் தேடியிருக்கிறோம். அதைக் கண்டு பிடிப்பதில் சிரமமும் கண்டிருக்கிறோம். இப்போது அந்தளவு சிரமம் இல்லாமல் எமது பதிவை நாமே சுலபமாகத் தேடி எடுக்க வழி காட்டியிருக்கிறார் வெங்கட்ரமணி.

நீங்களும் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
http://www.anniyalogam.com/tamilblog/2006/07/archive-browser-showcase-do-not-miss.html

Sunday, July 09, 2006

கனவுகள்


கனவுகள் பற்றி நான் அடிக்கடி சிந்திப்பேன்.மறக்க முடியாத கனவுகளும், நினைத்துப் பார்க்க முடியாத அளவு சாத்தியமில்லாத விடயங்களைக் கொண்ட கனவுகளுமே என்னை அப்படிச் சிந்திக்க வைத்திருக்கின்றன
சில கனவுகள் கண்டு ஓரிரு நாட்களில் அதனோடு சம்பந்தமான சம்பவங்களும் நடந்துள்ளன.


இந்த நிலையில் இன்று உமா கதிரின் பதிவில் கண்ட கனவு பற்றிய சில தகவல்கள் என்னைக் கவர்ந்துள்ளன.

கனவுகளுக்கு ஜாதக ரீதியாக பலன்கள் உண்டோ, இல்லையோ, விஞ்ஞான ரீதியாக பலன்கள் உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒருநாள் இரவில் ஆறு கனவுகள் வருகிகின்றன. ஒவ்வொரு கனவும் குறைந்தது 10 நிமிடங்கள் நீடிக்கின்றன!. என்கிறார் தூக்கத்தை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள செம்டெக் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர் எர்னஸ்ட் ஹார்ட்மென்.

நமது தூக்க ஓய்வின் போது தசைகள் தூண்டி விடப் படுகின்றன. அதனால், மூளை லட்சக்கணக்கான நரம்பியல் தொடர்களை தூண்டி விடுகிறது. அவை பிம்பங்களாக தெரிகின்றன. நரம்பியல் சமிக்ஞைகளின் மூலம், தான்தோன்றித் தனமாகத் தோன்றும் பல்வேறு பிம்பங்களை நமது மூளை இணைத்து ஒரு கனவாக உருவாக்குகிறது.

விஞ்ஞான பூர்வமாக இப்படி 1973ல் கனவை பற்றிக் கூறினார்கள், ஆலன் ஹாப்ஸன் மற்றும் ராபர்ட் மெக்கார்லே எனும் விஞ்ஞானிகள்.

ஒரு பிரச்சினையில் சரியான தீர்வுக்கு வரமுடியவில்லையா? கவலையை விடுங்கள். அந்தப் பிரச்சினையைப் பற்றியே சிந்தித்தபடி தூங்கி விடுங்கள். அந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கலாம் என்கிறார் அமெரிக்காவின் அறிஞர் கார்பீல்டு. தினமும் ஏதேனும் பயங்கரமான கனவுகள் தோன்றினால் அவை உங்களுக்கு ஏதோ ஒன்றை உணர்த்த முயல்கின்றன என தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் கார்பீல்டு.

பிரபல விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், துப்பறியும் நிபுணர்களுக்கு, சில விஷயங்களில் அவர்கள் மண்டையை போட்டு உடைத்து கொண்ட போதெல்லாம் அவர்கள் கண்ட கனவுகள் மூலமே நல்ல தீர்வு கிடைத்தது என்கிறது வரலாறு.

டாக்டர் ஜக்கைல் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க ராபர்ட் லூயிஸ்ஸ்டீவன்சனுக்கு அவர் கணட கனவு கனவுதான் உதவியது.

தையல் இயந்திரம் கண்டு பிடிக்கும் போது, பல தவறுகள் செய்த படி இருந்தார் எல்லீஸ் ஹோவோ என்பவர். இறுதியில் அவர் கண்ட கனவின் மூலமே அந்த தவறுக்குச் சரியான தீர்வு கிடைத்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இரவில் நீங்கள் கண்ட கனவினை துல்லியமாக நினைவில் வைத்திருந்து திரும்ப நினைத்துப் பார்க்க முடியுமானால், அது உங்கள் வாழ்வில் நீங்கள் முன்னேற பல நல்ல உத்திகளைத் தெளிவு படுத்தும் என்கிறார் டாக்டர் கோல்டர் ரூல்.

Saturday, July 08, 2006

வானலையில் நூல் வெளியீடு


ஐபிசி தமிழ் வானொலியில் ஒரு புதிய நிகழ்ச்சி அறிமுகமாகி உள்ளது.

ஒரு புத்தகத்தை வெளியிட்டு, அதற்கு சிறப்புரை, ஆய்வுரை, ஏற்புரை என எல்லாம் நடாத்தி, புத்தகத்தின் விபரங்களையும் தந்து விடுகிறார்கள். இது வழமைதானே இதில் என்ன விசேசம் இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? தொடர்ந்து வாசியுங்கள். விபரங்கள் கிடைத்துவிடும். அந்தப் புதிய நிகழ்ச்சியின் புதுமைகள் தெரிந்து விடும். இலக்கிய மாலை, அதுதான் அந்த நிகழ்ச்சிக்குப் பெயர். செவ்வாய் தோறும் ஐரோப்பிய நேரம் இரவு பத்துமணிக்கு இந் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. ஈழத்துக் கலைஞர்கள் சம்பந்தமான பல நிகழ்ச்சிகளை வழங்கும் எஸ்.கே. ராஜென் அவர்களால் இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கப்படுகிறது.

நூல் வெளியிடுவதற்கான நாளைக் குறித்து, மண்டபம் எடுத்து, ஆய்வாளர்களை அழைத்து, முக்கியமாகப் பார்வையாளர்களை வருந்தி அழைத்து, பேச்சாளர்களின் மனம் நோகாமல் நடந்தொழுகி, "வருவீங்கள்தானே?" என்று ஒன்றுக்குப் பத்துத் தடவையாக தொலைபேசியில் அலுக்காமல் சிறப்பு விருந்தினர் வருவதை நிச்சயப் படுத்தி, வருபவர்களுக்கு விருந்து படைத்து.... இப்படி ஒருவர் தனது படைப்பை அறிமுகம் செய்வதற்குள் களைத்துப் போய் விடுகிறார். இதனால் தனது மற்றைய படைப்பைப் பற்றி சிந்திக்கவே மறந்து போகிறார். இவ்வகையான பின்னடைவுகளுக்கு படைப்பாளிகள் தள்ளப் படாமல் இருக்கும் விதமாக, சிரமமில்லாத முறையில் தளம் அமைத்திருக்கிறது ஐபிசி தமிழ். எங்களது தொகுப்புக்களை ஐபிசி தமிழிடம் கொடுத்து விட்டு அமைதியாக அடுத்த படைப்புக்களைப் பற்றிய சிந்தனைகளில் ஆழ்ந்து விடலாம். எல்லாவற்றையும் இலக்கிய மாலை பார்த்துக் கொள்ளும்.

நூல்களின் ஆய்வுகளை வெவ்வேறு நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள் ஊடாகச் செய்து வானலைகளில் தவழ விட்டு விடுகிறார்கள். அதுவும் ஒரு மேடையில் நடப்பது போன்று நேரடியாகவே கதைத்து, கருத்துக்களைப் பரிமாறி சிறப்பாகத் தருகிறார்கள்.

இனி வெயிலில் அலைந்து மழையில் நனைந்து, பனியில் குளிர்ந்து புத்தக வெளியீடுகளுக்குப் பல கிலோ மீற்றர்கள் ஓடத் தேவையில்லை. அறையில் இருந்து கொண்டே நூல் விமர்சனத்தைக் கேட்கலாம். படைப்பாளியோடு வானலையில் உறவாடலாம். ஏதாவது மேலதிகத் தகவல்கள் தேவையென்றால் வானொலி நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.கே.ராஜென் அவர்களைக் கேட்கலாம்.

படைப்பாளிகள், ஒவ்வொரு நாடாகா அலைந்து திரிந்து தங்கள் நூல் வெளியீடுகளை நடாத்த வேண்டிய சிரமங்களில்லை. புத்தகங்களை அச்சிட்டு விட்டு சரியான முறையில் மக்களை அணுக முடியாமல், வீட்டுக்குள்ளேயே புத்தகங்களை அடுக்கி வைத்து விட்டு சோர்ந்து போயிருப்பவர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு வரப்பிரசாதம்.

மேலும் இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும். இலக்கியமாலையில் விமர்சனம் செய்வதால் வானலையில் இலவசமாக ஒரு பெரிய விளம்பரமும் அந்த நூலுக்குக் கிடைத்து விடுகிறது.

இலக்கியம், இலக்கணம் என்று வரும்போது அது பலரிடம் போய்ச் சேருமா என்ற கேள்வி எழுந்தாலும், கண்டிப்பாக இந்தத் துறையில் உள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பிக் கேட்பார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒரே விமர்சகர்கள் வரும்போதும், வருபவர்கள் தங்களது மேதாவித் தனங்களைக் காட்டும் போதும், நிகழ்ச்சி மெதுவாக சோம்பலைத் தரத் தொடங்கிவிடும். ஆகவே நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.கே. ராஜென் இந்த விடயங்களையும் கவனத்தில் கொண்டு இலக்கியமாலையை நடாத்துவாராயின், படைப்பாளிகளும் பயன் அடைவார்கள். நிகழ்ச்சியும் சிறப்புறும்.

இலக்கிய மாலை ஒரு நல்ல நோக்கோடு ஆரம்பமான நிகழ்ச்சி. அது நன்றாக நடைபெற வாழ்த்துவதோடு, ஐபிசி தமிழ் வானொலிக்கும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.கே. ராஜென் அவர்களுக்கும் படைப்பாளி என்ற நிலையில் இருந்து எனது நன்றி.

சந்திரவதனா
ஜேர்மனி
7.7.2006

Thursday, July 06, 2006

எதிர்பார்ப்பு இல்லையென்றால்...


எதிர்பார்ப்புகளுடன்தான் வாழ்க்கை நகருகிறது. எவ்வளவுதான் பிழைத்துப் போனாலும் சரிவந்து விடும் என்ற நம்பிக்கையுடனான எதிர்பார்ப்பே ஒவ்வொருவரையும் வாழ வைக்கிறது. அந்த நம்பிக்கையும் பிழைத்துப் போகும் கட்டத்தில்தான் மனம் வேறொன்றை நாடத் தொடங்குகிறது. அங்கும் மீண்டும் எதிர்பார்ப்பு. ஏதோ ஒன்றுக்கான எதிர்பார்ப்பு இல்லையென்றால் அடுத்து வரப்போகும் பொழுதின் மீதான சுவாரஸ்யமே அற்றுப் போய் விடும். அந்த வகையில் எதிர்பார்ப்பு என்ற ஒன்று வாழ்வில் அவசியம் என்பதை உணர முடிகிறது.

Wednesday, July 05, 2006

அழகு மாணிக்கங்கள் அல்ல, அத்திவாரக் கற்கள்



நாங்கள் அழகு மாணிக்கங்கள் அல்ல,
அத்திவாரக் கற்கள்
அழகான ஈழம் அமைவதற்காக
வெளியில் தெரியாமல் புதைந்து போனவர்கள.;

எங்கள் சிலரின்
முகங்களையும் முகவரிகளையும்
சுவரொட்டிகளில் தேடாதீர்கள்
நாங்கள்
உங்கள் பாதங்கள்
உரிமையுடன் நடப்பதற்காக
எங்கள் உடல்களைப்
பஸ்பமாக்கிக் கொண்டவர்கள்.

மண்ணின் விடிவுக்காக
மாற்றானின் அருகிற் சென்று
கூற்றுவனை வலிந்தழைத்து
குசலம் விசாரிப்பவர்கள்

மின்னல்க் கீற்று வெடி முழக்கத்துடன்
கண்ணில் படாமல் கரைந்து போன
எங்கள் கல்லறைகள்
வெளியில் தெரிவதில்லை.

அநேகமான சமயங்களில் நாங்கள்
அஞ்சலிக்கு வைக்கப் படாத
அநாமதேய வித்துடல்கள்.

- தீட்சண்யன் -

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய...

ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!


வென்றிடவே கரும் வேங்கைகளாகிய
வீரக் கொழுந்துகளே!
உம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில்
என்ன நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!

தாயகத் தாகங்கள் தாங்கிய நெஞ்சினில்
சாவைச் சுமந்தவரே!
உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில்
ஆரை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய
அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!


தாலாட்டுப் பாடியே தன் முலையூட்டிய
தாயை நினைத்தீரோ!
உங்கள் காலாற தோள் மீது தாங்கிய தந்தையின்
கையை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!


நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும்
நாயகனை நினைத்தீரோ!
உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன்
சோகம்தனை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!


நன்றி - தமிழீழ விடுதலைப்புலிகள்(சுவிஸ் கிளை)

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite