Wednesday, November 30, 2005

சவுதியில் பெண்கள் தேர்தலில்...


சவுதியில் பெண்கள் முதல்முதலாக வாக்களிக்கவும் போட்டிபோடவும் செய்யும் தேர்தல் ஒன்று நடந்துள்ளது.

சவுதிஅரேபியாவில் முதல்முறையாக பெண்கள் வாக்களிக்கவும் பெண்கள் வேட்பாளர்களாக போட்டியிடவும் செய்யும் ஒரு தேர்தல் நடந்து வருகிறது.நாட்டின் வியாபாரத் தலைநகரமான ஜெத்தாவின் வர்த்தக சபை நிர்வாக வாரியத்தின் உறுப்பினர் பதவிகளுக்காக 17 பெண்கள் போட்டியிடுகிறார்கள்.

இந்த தேர்தல் நிச்சயமாக ஒரு சின்ன விவகாரம்தான் என்றாலும் குறியீட்டளவில் இது மிகப்பெரிய முக்கியத்துவம் கொண்டது. இதற்கு முன்னால் சவுதியில் பெண்கள் தேர்தலில் வாக்களித்ததோ, போட்டியிட்டதோ கிடையாது.

பெண்களின் வாழ்வைச் சுற்றி பலவிதமான தடைகளும் கட்டுப்பாடுகளும் நிறைந்திருக்கும் பழமைவாத சவுதிஅரேபியாவில், இந்த தேர்தல் நடந்திருப்பது முன்னேற்றத்தின் சின்னம் என்று தாராளவாதிகள் கருதுகின்றனர்.

ஜெத்தா வர்த்தக சபை நிர்வாக வாரியத்திலுள்ள 12 இடங்களுக்கு மொத்தம் 71 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 17 பேர் பெண்கள். கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் பெண்கள் இந்த தேர்தலில் வாக்களித்திருந்தார்கள். இன்று திங்களன்றும் நாளை செவ்வாயன்றும் ஆண்கள் வாக்களிக்கிறனர். சனியும் ஞாயிறும் வாக்களிப்பு விகிதம் குறைவாக இருந்திருந்தாலும் பெண் ஆர்வலர்கள் தைரியம் இழந்துவிடாதவர்களாய் தோன்றுகின்றனர். ஆண் வாக்காளர்களிடம் இருந்து ஓரளவுக்காவது தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

சவுதிஅரேபியாவின் அளவுகோல்களைக் கொண்டு பார்க்கையில் வர்த்தக சபைகள் என்பவை நவீனமான, தாராளமயமான அமைப்புகள்தான். கடுமையான போட்டி நிலவும் உள்ளமைப்புத் தேர்தலை நடத்தும் இயக்கங்கள் என்று அவை நீண்ட நாட்களாக பெருமையும் திருப்தியும் கொண்டுள்ளன. ஆனால் பொதுவாகப் பார்த்தால், சவுதிஅரேபிய ராஜாங்கத்தில் வாக்களிப்பது என்பது ஒரு புதிய விஷயம்தான். மேலும் சீர்திருத்தத்தை விரும்பும் சவுதி மக்கள் பலருக்கு முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில்தான் வருகிறது என்ற வருத்தம்.

சவுதியில் எட்டு மாதங்களுக்கு முன் நகரசபை மன்றங்களுக்கு தேர்தல் நடந்திருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரசபை எதுவும் இதுவரை கூடியிருக்கவில்லை என்பதுதான் சவுதியின் யதார்த்த நிலை. இந்த நகரசபை தேர்தலில் பெண்கள் வாக்களிக்கவோ போட்டிபோடவோ இடம் இருந்திருக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

quelle - BBC 28 நவம்பர், 2005

படித்ததில் பிடித்தது - நூல் ஏணி


பெண்ணே நீ: ஓட்டல் ஆகாஷ் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல் ஏணி - சிறுகதையை நீலா என்பவர் எழுதியுள்ளார். கதையும் கருவும் நன்றாக அமைந்துள்ளன.

Tuesday, November 29, 2005

பெண்கள் சந்திப்புமலர் 2004 ஒரு பார்வை


சுயம், சுதந்திரம்... போன்றவற்றின் பொருள் சரியாக உணரப்படுகிறதா என்ற சந்தேகம் அடிக்கடி எழுகிறது. பெண்விடுதலை என்றால் என்ன என்பது பலருக்கும் புரியவில்லை.

"இவ்வளவு கொடுத்து விட்டோமே! போதாதா?" என்றும், "இதற்கு இதற்கு எல்லாம் அனுமதியளிக்கிறோமோ! திருப்தியில்லையா?" என்றும், "இதற்கு மேல் என்ன வேண்டும்?" என்றும் ஆணாதிக்க உலகிலிருந்து வெளிவர முடியாதவர்களும், வெளிவந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருப்பவர்களும் சற்றும் தயங்காமல் கேட்கிறார்கள். அளந்து தருவதற்கும் நிறுத்து வாங்குவதற்கும் சுயமும், சுதந்திரமும் என்ன கடைச்சரக்குகளா?

ஒரு பெண் வேலைக்குப் போனாலோ, அல்லது ஒரு ஆண் சமைத்தாலோ அந்தக் குடும்பத்துப் பெண்கள் விடுதலை பெற்று விட்டார்கள் என்று கூட்டாகப் பாடத் தொடங்கி விடுகிறார்கள். பெண்களுக்குள்ள பிரச்சனைகள், அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகள், சில உணர்த்துதல்கள், ஆலோசனைகள்... போன்றவற்றை யாராவது சொன்னாலோ அல்லது எழுதினாலோ போதும், அவளுக்கு பெண்ணியவாதி என்று முத்திரை குத்துவது மட்டுமல்லாமல் ஒரு இளக்காரப் பார்வை, கிண்டல் பேச்சு... என்று எதிர்க்குரல் கொடுக்கத் தொடங்கி விடுகிறது சமூகம்.


இத்தகையதொரு இக்கட்டான, புரிந்துணர்வற்ற சமூகச் சூழ்நிலையில் 39க்கு மேற்பட்ட பெண் படைப்பாளிகளின் படைப்புக்களுடன், பெண்கள் சந்திப்புக் குழுவினரால்(றஞ்சி-சுவிஸ், தேவா-ஜேர்மனி, உமா-ஜேர்மனி, விஜி-பிரான்ஸ், நிருபா-ஜேர்மனி) எட்டாவது பெண்கள் சந்திப்புமலர் அழகாகவும் நேர்த்தியாகவும் வெளியிட்டு வைக்கப் பட்டுள்ளது.

"பெண்கள் சஞ்சிகையா?" என்று முகம் சுளித்தவர்களும், "பெண்களுக்கு என்று தனியாக வெளிவரும் சஞ்சிகையில் நான் எழுதவில்லை. எனது எழுத்தின் மதிப்பை அது குறைத்து விடும்..." என்று தயங்கியவர்களும், இப்போது தாமாகவே முன் வந்து படைப்புக்களைத் தருவதற்கும், குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள்ளேயே நின்றவர்கள் துணிந்து பல்வேறு விடயங்களிலும் கால் வைத்திருப்பதற்கும் இப்படியான வெளியீடுகள் பெரிதும் துணை நிற்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று.

அச்சு, பதிப்பு, வெளியீடு... போன்ற பெரும்பான்மையான வேலைகள் ஆண்களுடையதாகவே கருதப்பட்டு வந்த காலம் மாறி, இப்போது பெண்களாலேயே செய்யப் படுவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது. பெண்கள் சந்திப்பு மலரின் ஆக்கங்கள் மட்டுமல்லாமல் மலரின் வடிவமைப்பும் படிப்படியாக பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

பெண்கள் சந்திப்புமலர் 2004இன் அட்டைப்படம் அர்த்தமுள்ள அழகிய நவீனஓவியத்துடன் கண்களைக் கவருகிறது. முன் அட்டைப் படத்தை வாசுகியும் பின் அட்டைப் படத்தை அருந்ததியும் வரைந்துள்ளார்கள். மலரில் இடம் பெற்ற ஆக்கங்களுக்கு வலுவும் அழகும் சேர்ப்பனவையாக மோனிகா, சுகந்தி சுதர்சன், சௌந்தரி, ஆரதி, அருந்ததி, வாசுகி... போன்றோரின் ஓவியங்கள் மலரினுள்ளே பொருத்தமாக நிறைந்திருப்பது மலரின் இன்னொரு சிறப்பம்சம்.

குறிப்பிட்டுச் சொல்லும் விதமாக, மலரில் 10 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பத்தையும் வெவ்வேறு கோணங்களிலிருந்து பத்துப் பெண்கள் எழுதியுள்ளார்கள். பத்துமே நன்றாக அமைந்த கதைகள்.

பாமாவின் - அந்தி - கதை இவைகளுள் பிரத்தியேகமாக நிற்கிறது. அவருக்கேயுரிய வட்டார வழக்குச் சொற்கள் பலதின் அர்த்தம் புரியாவிட்டாலும் கதையின் ஓட்டமும், கதை சொல்லும் விதமும் ஒரு பிசகலின்றி அமைதியாக, நேர்த்தியாக எம்மை கதையோடு அழைத்துச் செல்கின்றது. குழந்தை, குட்டி என்று பெற்று அவர்களை வளர்த்து, ஆளாக்கி அவர்களுக்கென்று வாழ்வுகளை அமைத்துக் கொடுத்து விட்டு, தான் என்ற வீம்போடு தனியாக வாழும் தவசிப் பாட்டியின் கதை சாதாரண கதைதான். வெள்ளம் வருமளவு பெய்து விட்ட மழை நிறைந்திருக்கும் ஒரு குழியில் ஒரு அந்திப் பொழுதில் தவசிப்பாட்டி அநியாயமாக ஆனாலும் தான் நினைத்தது போலவே யாருக்கும் பாராமாக இல்லாமல்... இறந்து விட்டதை, மனசை விட்டு அகலாத படி பாமா சொன்ன விதம் அருமை. வாசித்துப் பல நாட்களாகியும் அகலாமல் மனசுக்குள்ளேயே உருண்டு கொண்டிருந்த கதை.

நிருபாவின் - மழை ஏன் வந்தது - பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு அல்லது பாலியல் சுரண்டலுக்குள் தன் பால்ய காலத்து இனிமைகளை எல்லாம் தொலைத்து நிற்கும் ஒரு சிறுமியின் பரிதாபக்கதை. மிகவும் தத்ரூபமாக நிரூபா அதை எழுதியுள்ளார். பாலியல் துன்புறுத்தலை மட்டுமல்லாது, அந்த வயதில் துளசியோடு பின்னியிருக்கும் வாழ்வின் அசைவுகளையும், அதனூடே இடையிடையே நாகம் போலப் படம் விரித்தாடும் பாலியல் தொல்லை ஒரு சிறுமியின் வாழ்வை எத்தனை தூரம் இம்சைப் படுத்துகிறது என்பதையும் நிரூபா சொன்ன விதம் யதார்த்தமாக அமைந்துள்ளது. பேச்சுத்தமிழ்தான் என்பதால் ஒரு இயல்புநிலை தெரிகிறது. யாரது...? அப்பாவா..! அண்ணாவா...! மாமாவா...! என்று தெரியாமல் குழம்பும் அந்தச் சிறுமி துளசி தன் வயசுக்குரிய சந்தோசங்களையெல்லாம் அந்த அருவருப்புக்குள் தொலைத்து விட்டு தன்னைக் குற்றவாளியாக நினைத்தோ என்னவோ பெற்றதாயிடம் கூட சொல்லாமல் மறுகுகிறாள்.

நண்பியிடம் கூட மனம் விட்டுப் பேசத் தைரியமின்றிய துளசியின் இயலாமை, எமது சமூகத்தில் பல குழந்தைகளுக்கும் உள்ள அவலந்தான். இந்த நிலை எமது சமூகத்தில் மட்டுந்தானென்றில்லை. ஐரோப்பிய சமூகங்களிலும் கூட குழந்தைகளோடு மனம் விட்டுப் பேசாத பெற்றோரின் குழந்தைகள் இப்படியான கொடுமைகளை வெளியில் சொல்லும் தைரியமின்றி மிகுந்த இம்சைக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது வாழ்வு இந்தப் பருவத்தில் மட்டுமல்லாது தொடரும் காலங்களிலும் இதன் பாதிப்பை பிரதிபலிப்பதாய் அமைந்திருப்பது ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இப்படியான கதைகளை வாசிக்கும் போது தமது பெண்குழந்தைகளுக்கு இப்படியொரு நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் இந்த உலகில் இருக்கிறது என்பதை தாய்மார் கண்டிப்பாக உணர்ந்து கொள்வார்கள்.

"இவ இப்பிடியான கதை மட்டுந்தான் எழுதுவா" என்று ஒரு சாரார் குரல் கொடுப்பது கேட்காமல் இல்லை. இவைகள் வெறுமே கதைகளல்ல. நியத்தின் வடிவங்கள். சமூகப் பிரச்சனைகளை வெளியில் கொண்டு வரும் இப்படியான எழுத்துக்களால் எத்தனையோ குழந்தைகள் இந்தத் தொல்லைகளிலிருந்து காப்பாற்றப் படுகிறார்கள் என்ற உண்மையை நாம் தயங்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். நிரூபாவின் எழுத்துக்களில், அதாவது ஒரு சமூகப் பிரச்சனையை எடுத்துச் சொல்லும் விதத்தில் ஒரு தனித்துவம் இருப்பதை மறுக்க முடியாது.

சுமதியின் - நாகதோஷம் - அருமையான கருப்பொருளைக் கொண்ட கதை. எந்த யுகத்திலும் அழகுக்குத்தான் முதலிடம். நல்ல வெள்ளையா... சிவப்பா... வடிவான... என்ற ரீதியில் பெண் தேடும் படலம் இன்னும் நின்ற பாடில்லை. காலாகாலத்துக்கும் இந்தப் பெண் தேடுதல் வேட்டையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் இல்லை. வைப்பாட்டியாக... ஆசைநாயகியாக... அவசரத்துக்காக... என்று எந்தக் கோணங்கியோடும் இணைந்து இச்சை தீர்த்துக் கொள்பவர்கள் மனைவி மட்டும் சுத்தமாக... அழகாக... வெள்ளையாக வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இங்கேயும், வரப்போறவன் எப்படி இருந்தாலும் அவன் ஆம்பிளை என்பதை மட்டுந்தான் பெண்ணானவள் கவனிக்க வேண்டும். ஆனால் பெண் மட்டும் அழகாக லட்சணமாக இருக்க வேண்டும். தப்பித்தவறி கறுப்பாய் இவர்கள் வகுத்து வைத்த லட்சணங்களுக்குள் அடங்காதவளாய் இருந்து விட்டால் போதும் அவள் உணர்வுகளும், ஆசைகளும் தனிமைக்குள் தீய்ந்து போய் விடும். இதனோடு சாத்திரம் சம்பிரதாயம் என்ற பெயரில் தோஷங்கள் வேறு அவளைப் பொசுக்கி விடும்.

இப்படியான அவலத்தில் மனசு பொசுங்கிப் போன ஒரு பெண் இன்றைய வசதிகளைப் பயன் படுத்தி செயற்கையாய் தன்னை அழகு படுத்திய போது அவளது பருவ வயதில் அவளை அழகில்லையென்று விட்டுச் சென்ற அதே ஆடவன் அவளைச் சுகிக்க வருகிறான். அப்போது அவளும் அவனிடம் அவனது ஆண்மையைக் குறைத்துக் கூறுவது பழிதீர்ப்பதாய் வக்கிரமானதாய்த் தெரியலாம். காதலித்தவன் அல்லது காதலிப்பது போல நடித்தவன் அவளுக்கு மார்பு போதவில்லை என்பதற்காகவும், கறுப்பாய் இருக்கிறாள் என்பதற்காகவும் மணமுடிக்காது போன போது எவருக்கும் அது வக்கிரமாயோ பாலியல் சார்ந்ததாகவோ தெரியவில்லைத்தானே!

பெண்களை, பாலியல்தேவையை பூர்த்தி செய்யும் இச்சைப்பொருளாக மட்டுமே நோக்கும் ஆண்களுக்கு சாட்டையடி கொடுப்பது போல அமைந்த கதை நாகதோஷம்.

கமலா வாசுகியின் - கண்டறியாத பிள்ளை - கதை ஒரு பெண்ணுக்கு முதலில் ஏற்படும் சூல் முட்டைகளின் வெளியேற்றத்தை, பெருவிழாவாக்கும் எம்மவரிடையே உள்ள அறியாமையையும், அது அப்பெண் குழந்தையின் மனதை எந்தளவுக்குப் பாதிக்கிறது என்பதைப் பல பெற்றோர்கள் இன்னும் உணர்ந்து கொள்ளாமல் இருப்பதையும், சிலர் உணர்ந்தாலும் மற்றவர்கள் போலச் சடங்கு சம்பிரதாயம் செய்யாவிட்டால் தாம் சமூகத்தில் இருந்து ஒரு படி இறங்கி விடுவோம் என நினைத்து செயற்படுவதையும், பெண்குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத உறவுகளின் தன்மையையும் அதனால் ஒரு பெண்குழந்தையின் மனதில் ஏற்படுத்தும் விசனத்தையும் சொல்கிறது.

ஜெயந்தியின் - தையல் - குழந்தை பெற்றுக் கொண்ட பச்சை உடலோடு வலியும், உணர்வுமாய் தவிக்கும் ஒரு பெண்ணின் கதை. குழந்தை பெறுவதை விடத் தையல் போடுவதுதான் அதிகமாய் வலிக்கும் என்பார்கள். கதையின் நாயகி சுதா வலியோடு கணவனுக்காய் காத்திருக்கும் போது புண்ணியாஜனத்துக்கு வந்தவன் அவள் உணர்வுகளை மதிக்காமல் போனது கூட மனதைப் பாதிக்கவில்லை. அன்பாய் ஆதரவாய் பேச வருவான் என்று அவள் காத்திருக்க, நடுஇரவில் தன் உடற்சுகத்துக்காக அவளைத் தேடி வருவது மனதை நெருட வைக்கிறது.

விஜயலட்சுமி சேகரின் - குற்றமில்லை - சிறுகதை நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்த பெண் சுவர் ஏறிக்குதித்து கொலை செய்ய வரும் காமுகன் முன்னே ஆபரணம் ஆவதா ஆயுதம் ஆவதா? என்று கேட்கிறது. ஆயுதம் ஆவதுதான் சரியென்று நாம் சொன்னாலும் சட்டமும் சமூகமும் கொலைகாரியென்றும் நடத்தை கெட்டவள் என்றும் பாதகமாக அவள் மீது பழி சுமத்தியுள்ளன.

சாந்தினி வரதராஜனின் - வீடு - புலம்பெயர்ந்து வாழும் சுகந்தி சொந்த நாட்டை நோக்கிப் பயணிப்பதையும், அங்கு தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீட்டுக்கு சோகங்களையும் சுகங்களையும் நினைவுகளில் சுமந்து கொண்டு செல்வதையும் உணர்வுகளோடு சொல்கிறது. புலம்பெயர்ந்த எல்லோரின் மனதுக்குள்ளும் பிரிவும், துயரும் எந்தளவுக்குப் படிந்து போயிருக்கிறது என்பதை நெகிழ்வோடு சொல்லியுள்ள கதை.

சந்திரா ரவீந்திரனின் - பனிமழை - சுப்பர்மார்க்கெட்டில் வேலை செய்யும் புலம் பெயர்ந்த ஒரு தமிழ்குடும்பப் பெண்ணின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாய் அமைந்துள்ள கதை. பனிமழையின் குளிரையும், அழகையும் அவர் வர்ணித்திருந்ததையும் விட அவர் கடமையாற்றும் சுப்பர்மார்க்கெட்டினுள்ளான வேலைகளையும், அனுபவங்களையும், நடைமுறைகளையும் எங்கள் கண்முன்னும் அழகாகக் கொண்டு வந்திருந்தார்.

வேலையிடத்தில் தனது கடமைகளை அதற்கேயுரிய சிரத்தையுடன் செய்து விட்டு ஒரு மனைவியாக, தாயாக வீடு திரும்பும் போது வீட்டின் கோலங்கள் ஒரு குடும்பப்பெண்ணின் மனதை எந்தளவுக்கு நெகிழச் செய்யும் என்பதை நன்றாகச் சொல்லியிருந்தார். இருந்தாலும் சந்திரா ரவீந்திரனின் கதை என்ற எனது எதிர்பார்ப்புக்கு ஈடாக அக்கதை அமையவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

உமாவின் - மரியானா - கதை மருத்துவமனைக் கட்டிலில் வலியுடன் படுத்திருக்கும் போது வைத்தியத்துக்காக அவள் அறையைப் பங்கு போட வந்த ஒரு ஜேர்மனியப் பெண்ணுடனான உரையாடல். மிகவும் இதமாக, படிக்கும் போது மனதை வருடும் உணர்வைத் தரக் கூடிய விதமாக நன்றாக அமைந்துள்ளது. வயதானாலும் வயதை ஒரு பொருட்டாக்காமல் அறிவோடு பேசும் தொண்ணூற்றைந்து வயதுச் சிறுமியின் பேச்சுக்களும் அதை உமா சொன்ன விதமும் மிகவும் நன்றாக உள்ளன.

ஷாமிலாவின் - சிறகிழந்த பறவையாய் - நாட்டு நிலைமையை உத்தேசித்து வெளிநாட்டில் பெரியப்பாவோடு இருந்து படிக்கச் செல்லும் ஒரு சிறுமியின் வாழ்வு எப்படி சிதைக்கப் படுகிறது என்று சொல்லும் கதை. ஐம்பது வயதைத் தாண்டிய, அப்பா ஸ்தானத்தில் இருக்க வேண்டிய பெரியப்பாவே அவளைப் பாலியல் இச்சைக்கு பலியாக்க முயல்வதும், அவள் இணங்காத பட்சத்தில் வற்புறுத்துவதும் பாலியல் சுரண்டல் என்பது எமது சமூகத்தில் எந்தளவுக்குப் புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

சிறகுகளை விரித்துக் கொண்டு தன் வீட்டை விட்டுப் பறக்கத் தொடங்கும் அந்தச் சிறுமியின் கண்களில் கனவுகளும், வானத்தைத் தொடும் நினைவுகளும் மட்டுமே இருந்தன. வீட்டை விட்டு போகும் போது இன்னும் எத்தனை விடயங்களை இழக்கப் போகிறேன் என்பது மட்டும் நினைவுக்குள் சிக்கவில்லை. அவள்தான் சின்னப்பிள்ளை என்றால் அவள் பெற்றோருக்குக் கூட சில விடயங்கள் விளங்கவில்லை. பெற்றோர்கள் தவிர்ந்த வேறு உறவுகளுடன் (அவர்கள் மிக நெருங்கிய உறவுகளாய் இருக்கும் பட்சத்திலும் கூட) வாழ நேரிடும் பெண்குழந்தைகளுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல்களைப் பல பெற்றோர்கள் அறிந்து கொள்வதில்லை. இக்கதையிலும் அதேதான். நம்பிக்கைக்குரியவர்கள் என்று நினைத்து அவர்களிடம் தமது குழந்தைகளை ஒப்படைக்கும் பெற்றோர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கதைகளில் ஒன்று இது.

இது ஒரு உண்மைக் கதை என்பதால் அதிகம் சொல்ல முடியவில்லை. மொழிபெயர்ப்பு சரியாக அமைய வேண்டுமானால் தன்னிச்சையான சுருக்குதல் அல்லது நீட்டுதலைத் தவிர்க்க வேண்டும். அதைத்தான் செய்துள்ளேன். கதை பின்னுக்கு சற்று நீண்டு விட்டது போலவே தோன்றுகிறது. கதையில் பின்னுக்கு வரும் கணவனின் தந்தையின் செயற்பாட்டை இன்னொரு கதையாகச் சொல்லியிருக்கலாம்.

கதைக்காக றஞ்சி தேர்ந்தெடுத்த படம் கதைக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருப்பது குறிப்பிடப்பட வேண்டியதொன்று.

அடுத்து மதனி ஜெக்கோனியாஸ் மொழி பெயர்த்துத் தந்த - கைவிடப்பட்டவளாய்.... - மனதை மிகவும் பாதித்த இன்னொரு உண்மைக்கதை. 13வயதுச் சிறுமியான நூரியாவின் சோகக்கதை. ஒரு தந்தை தனது பெண்குழந்தையை அவளது மூன்றாவது வயதிலேயே பெரியப்பாவிடம்(தனது சகோதரனிடம்) கொடுப்பதுவும் அந்தப் பெரியப்பா அவளை அவளது 12வது வயதிலேயே, அவளது சம்மதமோ அன்றி அவளது விருப்பு வெறுப்பு பற்றிய பிரக்ஞையோ இன்றி ஒரு 62வயதுக் கிழவனுக்கு விற்பதுவும் நம்ப முடியாவிட்டாலும் உண்மையான கதை என்னும் போது மனதை வருத்துகிறது. இன்றைய காலகட்டத்திலும் இப்படியான அடிமைத்தனமான வேலைகளுக்கு பெண்குழந்தைகள் பலியாவது மிகச் சோகமான விடயம். அவள் கொலைக்குற்றம் சாட்டப் பட்டு சிறையில் இருப்பது இன்னும் துன்பமானது.

கட்டுரைகளைப் பார்க்கும் போது ஆறு கட்டுரைகள் இடம் பிடித்துள்ளன. இவைகளில் இன்றைய காலகட்டத்தில் மிகுந்த பிரபலமாகியுள்ள, பலராலும் பாவிக்கப்படுகின்ற, உயர்ந்த இடங்களில் கூட அவதானிக்கப் படுகின்ற, பயனுள்ள... இணைய உலகிலான வலைப்பதிவுகள் பற்றியதான மதி கந்தசாமியின் - இணையத்தில் குடில் போடலாம் வாருங்கள் - தவிர்ந்த மற்றைய ஐந்து கட்டுரைகளும் பெண்களின் பிரச்சனைகள், முன்னேற்றம் குறித்த ஆலோசனைகள், ஆணாதிக்க சிந்தனைகள்.. பற்றிக் கூறுகின்றன.

இவைகளில் இந்தியாவைச் சேர்ந்த வைகைச்செல்வியின் - பெண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - கட்டுரை சகலவிதத்திலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட அன்றைய காலத்தில் படைக்கப் பட்ட பெண் எழுத்துக்களில் இருந்த வலிமையும், வீரியமும், உயிர்ப்பும், காலத்தை வென்று நிற்கும் தன்மையும் இன்றைய பெண்படைப்பாளிகளின் படைப்புக்களில் இல்லையோ! என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது. அன்றைய பெண்படைப்பாளிகள் பற்றிய பலதகவல்களோடு ஒளவையார், சரோஜினி, வை.மு.கோதைநாயகி... என்று அன்றைய பெண் படைப்பாளிகளிகளையும் அதற்கு உதாரணமாக ஒப்பிட்டுச் சுட்டியுள்ளார் வைகைச்செல்வி. ஆனாலும் வைகைச்செல்வி குறிப்பிட்டது போன்ற ஆளுமை மிக்க பெண்படைப்பாளிகள், இன்றும் இருக்கிறார்கள். அதுவும் அன்றைய படைப்பாளிகளை விடக் கூடிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அன்று ஒரு குறிப்பிட்ட அளவான பெண் படைப்பாளர்களே இருந்தார்கள். அவர்கள் பளிச்சென்று எல்லோர் கண்களுக்கும் தெரிந்தார்கள். இன்று உலகளாவப் பெண் படைப்பாளிகள் இருக்கிறார்கள். அதனால் அந்தப் பளிச்சென்ற வெளித்தெரிவு இல்லை. மற்றும் படி பன்முகத்தன்மை கொண்ட எழுத்துக்களை மட்டுமல்லாமல், அதைச் செயற்படுத்தும் திறனோடும் பல ஆளுமை மிக்க பெண்கள் இன்று எம்மிடையே உள்ளார்கள் என்பதுதான் உண்மை.

மும்பையைச் சேர்ந்த புதியமாதவியின் - என்று தணியும் எங்கள் சுதந்திரதாகம் - என்ற கட்டுரை இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறியிருந்தாலும் இன்னும் ஏன் பெண்ணியல் சிந்தனையில் புரட்சிகள் ஏற்படவில்லை என்றும், ஆணாதிக்கம் இல்லாத சுதந்திரக்காற்று இன்னும் ஏன் அவள் சுவாசத்துக்கு எட்டவில்லையென்றும் ஆய்ந்துள்ளது. ஊடகங்களில் பெண்கள் எப்படிச் சிறுமைப் படுத்தப் படுகிறார்கள், விளம்பரங்களில் பெண்கள் எப்படி மலிவு படுத்தப் படுகிறார்கள், அரசியலில் எந்த நிலையில் பெண்கள் நுழைகிறார்கள், இல்லங்களில் பெண்களின் வேலைகள் எப்படிக் கணிக்கப் படுகின்றன என்றெல்லாம் அருமையாக விளக்கி, அதிகம் படித்த பெண்ணென்றால் என்ன? ஐரோப்பியப் பெண் என்றால் என்ன? பெண் என்பதால் அவள் இன்னும் வன்முறைக்கு உட்படுத்தப் படுகிறாள் என்ற உண்மையை புள்ளி விபரங்களுடன் தந்துள்ளது.

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின் - இன்னும் இருபது வருடங்களில் - புலம்பெயர்ந்த தமிழ்ப்பெண்களின் நிலை எதிர்காலத்தில் என்னவாயிருக்கும் என்ற ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அரசியல், பொருளாதாராம், மேற்படிப்பு போன்ற காரணங்களால் ஏற்பட்ட புலம் பெயர்வு தமிழ்பெண்களை பொருளாதார ரீதியில் சற்று முன்னேற்றி இருக்கிறது என்றாலும், அதற்கப்பால் என்ன முன்னேற்றத்தைத் தமிழ்ப்பெண்கள் கண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி இக்கட்டுரையினூடே எழுகிறது.

சின்னத்திரைத் தொடர்களும், பெரியதிரை தரும் படங்களும் பெண்களை இன்னும் எவ்வளவு தூரத்துக்கு பின்னுக்குத் தள்ளுகின்றன என்பதையும், இவைகளின் பாதிப்புக்கள் எமது தமிழ்ப்பெண் குழந்தைகளின் மனவளர்ச்சியில் எத்தகையதொரு பாதிப்பை எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகிறது என்பதையும், இதனால் எதிர்காலக் குழந்தைகளின் அறிவுவளர்ச்சி எந்தளவுக்குக் குன்றும் என்பதையும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் கட்டுரையினூடே வருத்தத்தோடு தெரிவிக்கிறார். சின்னத்திரைகளோடு மாரடிக்கும் புலம்பெயர் பெண்கள் கண்டிப்பாகக் கவனத்தில் எடுக்க வேண்டிய கட்டுரை இது.

அவுஸ்திரேலியாவிலிருந்து சந்திரலேகா வாமதேவாவின் - கற்பு நிலை சொல்ல வந்தார் - என்ற கட்டுரை மூலம் கற்பு என்பதன் பொருள் பற்றியும், அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என்ற போதும் அன்றைய காலத்திலிருந்து இன்றைய வரைக்கும் பெண்களின் கோட்பாடாகவே கருதப்படுவது பற்றியும் ஆய்ந்துள்ளார். கூடவே இலக்கியங்களில் உள்ள கற்புக்கரசிகள் பற்றிய கதைகளை உதாரணங்களாகக் காட்டி, அவைகளெல்லாம் ஆண்களாலேயே எழுதப் பட்டிருப்பதைச் சுட்டியும் உள்ளார்.

தயாநிதி மொழிபெயர்த்துத் தந்த கிரிஸ் கிராஸ்சின் - ஆணாதிக்கத்திற்கு முகம் கொடுப்பது பற்றிய சில தனிப்பட்ட பிரதி பலிப்புகள் - மிகவும் அருமையானதொரு கட்டுரை. "ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டம் என்பது ஒரு விவாதத்தில் பெண்களுடன் நேருக்கு நேர் பார்த்து உரையாடுவது போன்றதல்ல. இது ஒரு அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, உளவியல் ரீதியான பலம் வாய்ந்த கட்டமைப்புக்கு எதிரான போராட்டம். அத்துடன் எனது உட்புறமுள்ள மேலாதிக்கம் என்பது பனிமலையின் முனைப்பகுதி போன்றது. இது சுரண்டலாலும் அடக்கு முறையினாலும் கட்டப் பட்டது" என்கிறார் கிரிஸ் கிராஸ்.

ஆணாதிக்க சமூகத்தில் உள்ள ஒருவரே ஆணாதிக்கத்தைப் பற்றிச் சிந்திப்பதென்பதும் அது பற்றி கூறுவதென்பதும் மிகவும் வித்தியாசமானது. என்னதான் விடுதலை அமைப்புக்களில் அங்கத்தவர்கள் ஆனாலும் தந்தைவழிச் சமூக அமைப்புகளினோடு வளர்ந்த ஆண்களின் உள்ளே திமிறும் மேலாதிக்கம் அவர்களை ஆக்கிரமிப்பது அவர்களைப் பொறுத்த வரையில் தவிர்க்க முடியாத ஒன்றே. இந்த நிலையை ஒரு குற்ற உணர்வோடு நோக்கும் ஒரு ஆணே இது பற்றி எழுதியது ஒரு வகையில் சுவாரஸ்யமாகக் கூட உள்ளது. மொழி பெயர்த்துத் தந்த தயாநிதிக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்.

கவிதைகளைப் பார்க்கும் போது

அவுஸ்திரேலியாவிலிருந்து
ஆழியாளின் - விடுதலை,
பாமதியின் - யுத்தம்,
சௌந்தரியின் - இளமைக்காலம்,

இலங்கையிலிருந்து
அனாரின் - இருப்பின் பின்னால் வாழ்வின் வெளி,
முகைசிரா முகைடீனின் - நான், நான் பேச நினைப்பதெல்லாம், பாலறஞ்சனியின் - நிஜங்களும் நிகழலாம், தீக்குள் விரலை வைத்தால், விஜயலட்சுமி.சேகரின் - நானும் ஓர் காவியம்தான்,


இந்தியாவிலிருந்து
மாலதி மைத்ரியின் - மனநோயின் முன் பின் நிகழ்வுகள், விதைச்சொல், திலகபாமாவின் - நகல்கிறது நதி, கட்டுடையும் நகரம்,
புதியமாதவியின் - கவிஞனின் மனைவி(தெலுங்கில் மந்தரப்பு ஹேமாவவதி), புதியமாதவி கவிதைகள்,

கனடாவிலிருந்து
எதிக்காவின் - இன்னமும் ஏதோவொன்றிற்காய்...,
துர்க்காவின் - துர்க்கா கவிதைகள்,

சுவிசிலிருந்து
நளாயினி தாமரைச்செல்வனின் - தலைப்பில்லாத கவிதை, நமக்கான நட்பு,

ஜேர்மனியிலிருந்து
பாரதியின் - நலங்கெடப்புழுதியில்
சுகந்தினி சுதர்சனின் - பிரச்சனைகளுக்கு முகவரியிடுவோம்,
கோசல்யா சொர்ணலிங்கத்தின் - தீர்ப்பெழுதும் கரங்கள் பெண்களாகட்டும்,
விக்னா பாக்யநாதனின் - துளிப்பாக்கள்,


என்று 23க்கு மேற்பட்ட கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவைகள் பெண்களின் விடுதலையை, அடக்கப் படுகிறோம் என்று தெரிந்தும் விட்டு வெளியேற முடியாத இயலாமையை, அடைந்து கிடந்தாலும் மனதால் சுதந்திரமாகப் பறக்கத் துணிந்த பெண்களின் தன்மையை, விட்டு விடுதலையாகி விடுவோம் என்ற நம்பிக்கையை, இருப்பின் அவசியத்தை..., யுத்தத்தின் கோலங்களை, இயற்கையின் சீற்றங்களை... என்று பல விடயங்களை உணர்வுகள் கலந்து சொல்கின்றன. இக் கவிதைகளைத் தனியாக ஒரு தரம் அலசலாம் போலுள்ளது.

அடுத்து, உரையாடல் வடிவில் - மல்லிகா எம்மிடையே உள்ள சில பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

சமைத்துப் போடும் கணவனின் மனைவியும், அதிகாலை வேலைக்குப் போகும்போது தானே தேநீரைத் தயாரித்துக் குடித்து விட்டுச் செல்லும் கணவனின் மனைவியும் விடுதலை பெற்றவர்கள் என்பதான அறியாமை நிறைந்த பேச்சு கூடுதலாகப் பெண்களிடையேதான் உலாவுகிறது.

கதையில் வந்த மாயாவுக்கு தான் விரும்பியவனை மணம் முடிக்கவோ, முடித்த ஒருவன் சரியில்லை, குடிகாரன், இவளை அடித்துத் தொந்தரவு செய்கிறான் என்ற போது அவனை விட்டு விலகிச் செல்லவோ உரிமையில்லை. தன் வாழ்வைத் தானே நிர்ணயிக்கும் அவளது சுதந்திரம் பற்றி பெண்ணான அவள் அண்ணிக்கே கவலையில்லை. பெண்ணே பெண்ணை விளங்கிக் கொள்ள முடியாத அல்லது விளங்கிக் கொள்ள விரும்பாத இப்படியான நிலைமைகளையும் சமூகம், கலாசாரம் என்பதன் அர்த்தம் புரியாத அர்த்தமற்ற செயற்பாடுகள் கொண்ட எமது பெண்களின் பார்வையில் ஜேர்மனியப் பெண்கள் மீதான கணிப்புகளையும்.... என்று சொல்ல வந்த விடயத்தை கச்சிதமாகச் சொல்லியுள்ளார் மல்லிகா.

ஓவியர் வாசுகியுடனான றஞ்சியின் செவ்வியொன்றும் மலரில் இடம் பெற்றுள்ளது. மலருக்கு மிகவும் பொருத்தமான ஒருவரோடான செவ்வி இது. பெண்களது வெளிப்பாடுகளை ஓவியப்பயிற்சி மூலம் கொண்டு வரும் இந்த வாசுகிதான், முன் அட்டைப்படத்தை வரைந்து, மலருக்கு அழகும் வலுவும் ஊட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தின் சாதாரண ஒரு பெண்ணுக்குக் கிட்டாத பல வெளிகள் ஓவியம் மூலம் தனக்கு சாத்தியமாகின என்று சொல்லும் வாசுகியினுடனான செவ்வி மிகவும் சுவாரஸ்யமானது.

"பெண்கள் சந்திப்போ...! உங்கை என்ன நடக்குது?. உதுக்கு நாங்கள் ஆம்பிளையள் வரக்கூடாதோ?"

"ம்... பெண்டுகள் சந்திச்சு என்ன செய்யப் போறிங்கள்? குடுமிச் சண்டையோ பிடிக்கப் போறிங்கள்?"

"இஞ்சைபார்...! பெண்கள் சந்திப்பு, இலக்கியம் எண்டெல்லாம் சொல்லிக் கொண்டு கூடுறது இலக்கியங்கள் பேச இல்லை."

இவைகளெல்லாம் என்னவென்று யோசிக்கிறீர்களா? பெண்கள் சந்திப்புக்கு ஒரு தடவையேனும் செல்லாத சில ஆண்களால் அவர்களைச் சுற்றியுள்ள பெண்களின் மீது எறியப் படும் எள்ளல் கருத்துக்கள் இவை. தமது மனைவியரோ சகோதரிகளோ இதைச் சாட்டிக் கொண்டு வெளியில் போய் விடக்கூடாதே என்ற அங்கலாய்ப்பில் அவசரமாய் கொட்டப்படும் வார்த்தைகள் இவை.

கருத்து மோதல்களும் முரண்களும் ஆண்கள் ஒன்று கூடலில் ஒரு போதுமே நிகழ்வதில்லையா? கேட்பதற்குத் திராணியற்றவர்களாக இன்னும் பெண்கள் இருக்கிறார்கள்.

இவைகளுக்கெல்லாம் பதில் கூறும் விதமாக பெண்கள் சந்திப்பதில்..., ஒன்று கூடுவதில்... உள்ள நன்மைகள்.... தமது பிரச்சனைகளை மனந்திறந்து கலந்துரையாடுவதின் மூலம் பெண்களுக்குள் ஏற்படும் தன்னம்பிக்கை... இவை பற்றி தேவா விளக்கமாகச் சொல்கிறார் பெண்கள் சந்திப்பு சிறுகுறிப்பு என்ற கட்டுரை மூலம்.

இத்தனை விடயங்களும் இந்தப் பெண்கள் சந்திப்பு மலருக்குள் அடங்கியிருக்கின்றன என்னும் போது உண்மையிலேயே வியப்பாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது. எத்தனையோ பிரச்சனைகள், அவசரங்கள், அவசியங்கள், தடைகளின் மத்தியில் மீண்டும் பெண்கள் சந்திப்பு மலர் இத்தனை கனமாக வெளிவந்தது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விடயமே. வெளியிட்டு வைத்த பெண்கள் சந்திப்புக் குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். கூடவே ஆக்கங்களைத் தந்துதவி பெண்கள் சந்திப்பு மலருக்கு வலுவூட்டி, உறுதுணையாக நின்ற சகோதரிகளுக்கும் மனதார்ந்த நன்றி.

சந்திரவதனா
ஜேர்மனி
18.8.2005

Sunday, November 27, 2005

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர்நாள் உரை 2005


நியாயமான தீர்வுத் திட்டத்தை சிறிலங்கா விரைந்து முன்வைக்க வேண்டும்- இழுத்தடித்தால் அடுத்த ஆண்டு சுதந்திரப் போராட்டம்: பிரபாகரன் பிரகடனம்


எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் வகையில் வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள் ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைப் புதிய அரசாங்கம் முன்வைக்க வேண்டும். காலத்தை இழுத்தடிக்கப் புதிய அரசாங்கம் முற்படுமானால் நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை, எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேசச் சுதந்திரப் போராட்டத்தை அடுத்த ஆண்டில் தீவிரப்படுத்துவோம் என்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பிரகடனப்படுத்தியுள்ளார்.

தமிழீழ மக்களுக்கு இன்று மாலை தமிழீழத் தாயக நேரம் 5.32 மணிக்கு தேசியத் தலைவர் அவர்கள் ஆற்றிய மாவீரர் நாள் உரை:

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

இன்று வணக்கத்துக்குரிய நாள்.

சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள்.

இன்றைய நன்னாளில், அந்த மகத்தான மனிதப் பிறவிகளின் நினைவாக நாம் ஏற்றும் தீபங்களில், அந்த அக்கினி நாக்குகளின் அப+ர்வ நடனத்தில், எமது மாவீரர்களின் சுதந்திரத் தாகம் அணையாத சுடராக ஒளிவிட்டு எரிவதை நாம் எமது நெஞ்சில் நினைவு கொள்வோமாக.

சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.

மாவீரர்களே, உங்களது ஒப்பற்ற தியாக வரலாறுகளின் ஒன்றிணைப்பாகவே எமது தேசத்தின் வீர விடுதலைக் காவியம் படைக்கப்படுகிறது.

எமது விடுதலை இயக்கத்தின் முதலாவது மாவீரன், எனது பிரியமான தோழன் சத்தியநாதன் எனது மடியில் உயிர்நீத்து இன்றுடன் இருபத்துமூன்று ஆண்டுகளாகக் காலநதி ஓடிவிட்டது. இந்தக் கால நீட்சியிற் கட்டவிழ்ந்த போராட்ட வரலாற்றில் பதினேளாயிரத்துத் தொள்ளாயிரத்து மூன்று (17,903) மாவீரர் தேச விடுதலைக்காகக் களமாடி வீழ்ந்திருக்கிறார்கள். இந்தப் பெருந்தொகைப் போராளிகளைவிடப் பலமடங்கு தொகையில் பொதுமக்களும் எதிரியால் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள். ஒட்டுமொத்தத்தில் எமது தேசத்தின் விடுதலைக்காக நாம் கொடுத்த உயிர்ப்பலி மிகப் பெரியது. அளப்பரியது.

தமிழீழத் தேசத்தின் விடுதலைக்காகத் தமிழ் மக்கள் புரிந்துள்ள மாபெரும் தியாகத்தை, அதன் ஆன்மீக மகத்துவத்தை, அதன் வரலாற்று முக்கியத்துவத்தைச் சிங்களத் தேசம் மட்டுமன்றிச் சர்வதேசச் சமூகமும் உணர்ந்து கொள்ளாதது எமக்கு ஏமாற்றத்தையும் வேதனையையும் தருகிறது.

அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை.

சிங்களத் தேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில், அந்தப் புராணக் கருத்துலகிற் புதைந்து போய்க் கிடக்கிறது. இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையிற் சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள். அடிமனதில் ஆழமாக உறைந்து, அசைவற்றதாக இறுகிப் போன இந்தப் புராணக் கருத்து நிலையிலிருந்து சிங்களத் தேசம் விடுபடப்போவதில்லை. இந்தக் கருத்தியற் குருட்டுத்தனத்தால் இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாய மெய்ந்நிலைகளையும் சிங்கள மக்களாலும் அவர்களது அரசியல், மதத் தலைமைகளாலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தைத் தாயகத் தேசமாகக் கொண்டு, தமிழீழ மக்கள் என்ற வரலாற்றுத் தொன்மைமிக்க ஓர் இனம் இருப்பதையும் அவர்கள் ஒரு தனித்துவத் தேசமாக வாழ்ந்து வருவதையும் அவர்களுக்கு அடிப்படையான அரசியல் உரிமைகள், சுதந்திரங்கள் உள்ளன என்பதையும் சிங்களவராற் புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. தமிழரது இருப்பு நிலைபற்றிய உண்மையைக் கிரகித்து, அவர்களது அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொள்ளச் சிங்களத் தேசம் மறுத்து வருவதாலேயே தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினை தீர்வின்றி, முடிவின்றிச் சிக்கலடைந்து இழுபட்டு வருகிறது.

சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள - பௌத்த மேலாண்மை வாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது. தென்னிலங்கை அரசியற் களத்தில் அதன் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. இப்படியான புறநிலையில், தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குச் சிங்களத் தேசத்திலிருந்து ஒரு நீதியான, நியாயமான தீர்வு கிட்டுமென அன்றும் சரி, இன்றும் சரி, நாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. எமக்கே உரித்தான எமது அடிப்படை உரிமைகளை நாமாகவே போராடி வென்றெடுக்க வேண்டுமே தவிர, சிங்கள அரசியல்வாதிகளின் காருணியத்தில் பெற்றுக்கொள்ளலாம் என நாம் என்றுமே கருதியதில்லை.

இதுவே, அன்றும் இன்றும் எமது விடுதலை இயக்கத்தின் உறுதியான இலட்சியமாக இருந்து வருகிறது.

சிங்கள அரசியல் தலைமைகளிடமிருந்து நீதி கிடைக்கப்போவதில்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து, எமது உரிமைகளை நாமாகவே போராடி வென்றெடுக்க வேண்டும் என உறுதிப+ண்டிருந்தபோதும் தவிர்க்கமுடியாத வரலாற்றுச் சூழ்நிலைகள் காரணமாகச் சிங்கள அரசுடன் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்ற நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். பிரதேச வல்லரசான இந்தியாவின் தலையீடு ஒரு கால கட்டத்திலும், சர்வதேச நாடுகளின் அழுத்தம் இன்னொரு கட்டத்திலுமாகச் சமாதான முயற்சிகளில் எம்மை ஈடுபடச் செய்தன. அத்தோடு பேச்சுக்களில் நாம் பங்குபற்றியதற்கு வேறு காரணங்களும் இருக்கவே செய்தன.

சமாதானப் பேச்சு என்பது எமது விடுதலைப் போராட்டப் பாதையில் வைக்கப்பட்ட பொறி

தமிழீழ மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்ற ரீதியில் எமது அமைப்புக்குச் சட்டரீதியான அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் பேச்சுவார்த்தை ஒரு சாதனமாக அமைந்தது. அதுமட்டுமன்றி, எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை உலகமயப்படுத்தி, சர்வதேசச் சமூகத்தின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொள்வதற்கும் இது அவசியமாக இருந்தது. அடுத்ததாக நாம் ஆயுத வன்முறையிற் காதல்கொண்ட போர் வெறியர் அல்லர் என்பதையும் சமாதான மென்முறையில் நாம் பற்றுறுதி கொண்டவர்கள் என்பதையும் உலகுக்கு உணர்த்திக் காட்டவேண்டிய தேவையும் எழுந்தது. இறுதியாக, எல்லாவற்றிலும் முக்கியமாகத் தமிழீழ மக்களின் அடிப்படையான அரசியற் கோரிக்கைகளை ஏற்று ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைச் சிங்கள இனவாத ஆட்சியாளர் முன்வைக்கப் போவதில்லை என்ற உண்மையைச் சர்வதேச சமூகத்திற்கு நிரூபித்துக் காட்டுவதும் எமது நோக்கமாக இருந்தது. இப்படியான குறிக்கோள்களுடனேயே நாம் பேச்சுக்களிற் பங்குகொண்டோம்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாகத் தொடரும் எமது தேச விடுதலைப் போராட்டத்தில், வெவ்வேறு கால கட்டங்களில், வெவ்வேறு வரலாற்றுச் சூழ்நிலைகளில், நாம் போருக்கு ஓய்வு கொடுத்துச் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றினோம். எதிரியானவன் கபட நோக்கும் வஞ்சக நெஞ்சும் கொண்டவன் என்பது எமக்குத் தெரியும்.

அத்தோடு சமரசப் பேச்சுக்களால் பயன் எதுவும் கிட்டப் போவதில்லை என்பதும் எமக்குத் தெரியும். சமாதானப் பேச்சு என்பது எமது விடுதலைப் போராட்டப் பாதையில் வைக்கப்பட்ட பொறி என்பதையும் நாம் நன்கு அறிவோம். இத்தனையையும் தெரிந்தும் நாம் நேர்மையுடனும் நேரிய நோக்குடனும் சமாதானப் பாதையில் பயணித்தோம். ஆயினும் நாம் மிகவும் விழிப்புடனும் விவேகத்துடனும் செயற்பட்டோம். சமாதானப் பயணத்தின் போது - சமரசப் பேச்சுக்களின் போது சிக்கலான பல சவால்களையும் நெருக்குவாரங்களையும் நாம் எதிர்நோக்க நேரிட்டது.

எமது விடுதலைப் போராட்டத்திற்குப் பங்கம் ஏற்படும் வகையிற் பொறிகள் வைக்கப்பட்டன. சதிவலைகள் பின்னப்பட்டன. ஆனால் நாம் நிலைமையைப் புரிந்து சாதுரியமாகக் காய்களை நகர்த்தியதால் பொறிகளுக்குள் மாட்டிக் கொள்ளவுமில்லை சதிவலைப் பின்னல்களுக்குட் சிக்கிவிடவுமில்லை. சிங்கள ஆட்சியாளரும் அவர்களுக்கு முண்டுகொடுத்து நின்ற வல்லரசுகளும் எமது விடுதலைப் போராட்டத்திற்கும் எமது மக்களின் நலனுக்கும் விரோதமாகச் செயற்பட எத்தனித்த போதெல்லாம் எமது இயக்கம் அம்முயற்சிகளை வன்மையாக எதிர்த்து நின்றது.

இந்தியத் தலையீடு நிகழ்ந்த காலத்தில், எமது மக்களின் நலனுக்கும் எமது தேசச் சுதந்திரப் போராட்டத்திற்கும் அச்சுறுத்தல் எழுந்தபோது இந்திய வல்லரசையும் அதன் இராணுவ இயந்திரத்தையும் எதிர்த்துப் போராடவும் நாம் துணிந்தோம் என்பதை எமது மக்கள் அறிவார்கள்.

எமது விடுதலை இயக்கம், திம்புவில் தொடங்கிப் பல்வேறு கட்டங்களில், பல்வேறு சமாதான முயற்சிகளிற் பங்குபற்றியபோதும் இம்முறையே எமது போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஒரு நீண்ட கால இடைவெளியை - கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகால இடைவெளியைச் சமாதானத்திற்கு நாம் அர்ப்பணித்தோம். இந்த நீண்ட கால விசாலத்தில் எமது மக்களின் பிரச்சினைகளுக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் அயராது மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே அர்த்தமற்றுப்போயின.

இம்முறை நிகழ்ந்த சமாதானப் பேச்சுக்கள் சாராம்சத்தில் வித்தியாசமானவை, முக்கியத்துவமானவை. மூன்றாம் தரப்பு உலக நாடொன்றின் அனுசரணையில், சர்வதேசச் சமூகத்தின் கண்காணிப்பில் இந்தப் பேச்சுக்கள் நிகழ்ந்தன. முதலில் ரணில் விக்கிரமசிங்காவின் அரசுடனும் பின்னர் சந்திரிகாவின் ஆட்சிபீடத்துடனும் நிகழ்ந்த பேச்சுக்களின்போது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், தீர்மானங்கள், உடன்பாடுகள் எவையுமே செயல்வடிவம் பெறவில்லை.

நாம் பொறுமையின் எல்லையைக் கடந்து சகிப்புத்தன்மையின் சிகரம்வரை சென்றோம். எத்தனையோ விடயங்களில் விட்டுக்கொடுத்து, சகல வாய்ப்புக்களையும் நாம் வழங்கியபோதும் சிங்களப் பேரினவாத ஆட்சிப்பீடங்கள் எமது மக்களுக்கு நீதி வழங்க மறுத்துவிட்டன.

ரணிலின் சதிவலை

2001ஆம் ஆண்டு, டிசம்பர் 24ஆம் நாளன்று, நாமாகவே தன்னிச்சையாகப் போரை நிறுத்திச் சமாதானக் கதவுகளைத் திறந்துவிட்டோம். வன்னி மாநிலத்தை மீட்டெடுத்து, ஆனையிறவுப் படைத் தளத்தை துவம்சம் செய்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாக நிலைநிறுத்தி, பலத்தின் அத்திவாரத்தில் நின்றவாறே சிங்களத் தேசத்திற்கு நாம் நேசக் கரம் நீட்டினோம்.

நோர்வே அரசு நடுநிலை வகிக்க ரணில் விக்கிரமசிங்காவின் அரசுடன் உலகத் தலைநகர்களில் நிகழ்ந்த பேச்சுக்கள் பற்றி நான் இங்கு விபரித்துக்கூறத் தேவையில்லை. எமது மக்கள் எதிர்கொண்ட அவலமான வாழ்க்கைப் பிரச்சினைகளையும் அவசர மனிதாபிமானப் பிரச்சினைகளையுங்கூட ரணிலின் ஆட்சிபீடத்தால் தீர்த்துவைக்க முடியவில்லை.

ரணிலின் அரசாங்கமானது பேச்சுக்களை இழுத்தடித்துக் காலத்தைக் கடத்தியதோடு, உலக வல்லரசு நாடுகளுடன் இரகசியக் கூட்டுச் சேர்ந்து எமது விடுதலை இயக்கத்திடமிருந்து ஆயுதங்களைக் களைந்துவிடும் ஒரு சூழ்ச்சிகரச் சதிவலையைப் பின்னுவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தியது.

இந்தச் சதித்திட்டத்தின் ஒரு முக்கிய ஏற்பாடாகவே 2003ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில் டோக்கியோ மாநாடு அரங்கேறவிருந்தது. இதனை அறிந்து கொண்ட நாம் டோக்கியோ மாநாட்டைப் பகிஸ்கரித்ததுடன் பேச்சுக்களிலிருந்தும் விலகிக் கொண்டோம்.

சமாதான முயற்சியில் எதையுமே சாதிக்காது ரணிலின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

சந்திரிகாவின் அரசு

இதனையடுத்து, சமாதானத்திற்கு விரோதமான இனவாத சக்திகளுடன் கூட்டுச்சேர்ந்து புதிய அரசை அமைத்தார் சந்திரிகா. நாம் ஏற்கெனவே முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டம்பற்றிப் பேசுவதற்கு எமது இயக்கம் இணக்கம் தெரிவித்தபோதும் சந்திரிகா அதற்கு இணங்காது காலத்தை இழுத்தடித்தார்.

இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, அரசியல் வெறுமைக்குட் காலம் ஓடியது. இந்த அரசியற் சூனியத்திற்குள், இந்த நிச்சயமற்ற வெறுமைக்குள் எம்மைச் சிக்கவைத்து, எமது விடுதலைப் போராட்டத்தைத் திசை திருப்பி மழுங்கடிப்பதே சிங்கள ஆட்சியாளரின் வஞ்சக நோக்கம் என்பதை நாம் உணர்ந்து கொண்டோம்.

இனித் தொடர்ந்தும் சமாதான மாயைக்குள் செயலற்று இருப்பது அபத்தம் என எண்ணிய நாம் எமது தேச விடுதலைப் போராட்டத்தைக் காலதாமதமின்றி முன்னெடுக்கத் தீர்மானித்தோம்.

அதற்கான செய்திட்டத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்த வேளையிலேயே, அதாவது சென்ற ஆண்டுக் கடைசியில், இயற்கையின் அந்தக் கோரத்தாண்டவம் நிகழ்ந்தது.

சுனாமிக் கட்டமைப்புக்குச் சாவுமணி

திடீரென எவருமே எதிர்பாராத் தருணத்தில் இந்தப் பேரவலம் நிகழ்ந்தது. எமது தாயகப் பூமியின் கிழக்குக் கரையோரக் கிராமங்கள், குடியிருப்புகள் மீது சுனாமிப் பேரலைகள் தாக்கி என்றுமில்லாத பேரழிவுகளை ஏற்படுத்தின.

இயற்கையின் இரக்கமற்ற இந்த ஊழிக்கூத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் இருபதினாயிரம் பேர் கொன்றொழிக்கப்பட்டனர். மூன்று லட்சம் பேர்வரை வீடுகள், சொத்துக்களை இழந்து அகதிகளாக அல்லற்பட்டனர்.

ஏற்கெனவே யுத்தத்தினாற் சிதைந்து போயிருந்த தமிழர் தேசம்மீது இன்னொரு பேரழிவு ஏற்பட்டதால், சுமக்க முடியாத துன்பப் பளுவைச் சுமக்க எமது மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

உடனடியாகவே இப்பேரவலத்திற்கு முகங்கொடுக்க எமது விடுதலை இயக்கம் முடிவெடுத்தது. எமது இயக்கத்தின் படைத்துறைப் பிரிவுகளும் மற்றும் நிர்வாக, சமூக சேவைக் கட்டமைப்புகளும் களத்தில் இறங்கிப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மனிதாபிமான, நிவாரணப் பணியில் ஈடுபட்டன.

ஆழிப்பேரலை அனர்த்தம் உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டதால், பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணத்திற்கெனப் பெரும் தொகையில் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு உலக நாடுகள் முன்வந்தன.

அதேசமயம், எமது விடுதலை இயக்கத்துடன் கூட்டுச்சேர்ந்து, ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்குச் சந்திரிகா அம்மையார் விருப்பம் தெரிவித்தார். பேரவலத்திற்கு ஆளாகி நிற்கும் தமிழ் பேசும் மக்களின் அவசர மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய தேவை அன்று எமக்கு எழுந்தது. இதனால் சந்திரிகா அரசாங்கத்துடன் பேசி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் பெற்றுக்கொடுக்க முடிவெடுத்தோம். நோர்வேயின் அனுசரணையுடன் இரு தரப்புச் சமாதானச் செயலகங்கள் மட்டத்திற் பேச்சுக்கள் நிகழ்ந்தன. முடிவின்றி, நீண்ட காலத்திற்கு இப்பேச்சுக்கள் இழுபட்டுச் செல்வதை நாம் விரும்பவில்லை. ஆகையால் நாம் மென்போக்கைக் கடைப்பிடித்து, சில முக்கிய விடயங்களில் நெகிழ்ந்து கொடுத்து, ஒரு நிர்வாகக் கட்டமைப்பை நிறுவுவதற்கு இணங்கினோம். இதற்கான உடன்பாடும் கைச்சாத்தாகியது.

சிறீலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் இணைந்து உருவாக்கிய இந்த நிவாரணக் கட்டமைப்புக்கு அனைத்துலக நாடுகளும் தமது நல்லாதரவை வழங்கின. முரண்பட்டு நின்ற இரு தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படும் நல்லெண்ணச் சூழ்நிலை பிறந்துள்ளதாக நம்பிக்கை தெரிவித்தன. ஆயினும் இந்த நல்லெண்ணச் சூழ்நிலை உருவாகுவதையோ, தமிழருக்கு நிவாரண உதவிகள் கிடைப்பதையோ சிங்கள - பௌத்த இனவாதச் சக்திகளாற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஜே.வி.பி நிவாரணக் கட்டமைப்புக்குக் கடுமையான ஆட்சேபம் தெரிவித்து அரசிலிருந்து விலக்கிக்கொண்டது. ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற தீவிர இனவாதக் கட்சிகள் இந்த நிவாரண உடன்பாடு சிறீலங்கா அரசியலமைப்புக்கு விரோதமானதென உயர்நீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்தன. சிங்கள இனவாதச் சக்திகளுக்குச் சார்பான முறையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சுனாமிக் கட்டமைப்பை முழுமையாக முடக்கிச் செயலிழக்கச் செய்தது.

சுனாமிக் கட்டமைப்புக்குச் சாவுமணி அடிக்கப்பட்டதுடன் தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த இறுதி நம்பிக்கையையும் சிங்களப் பௌத்தப் பேரினவாதம் சாகடித்துவிட்டது. சர்வ அதிகாரம் படைத்த ஜனாதிபதி சந்திரிகாவினாற்கூட, சிங்கள இனவாதச் சக்திகளை மீறித் தமிழ் மக்களுக்கு ஒரு நிவாரணத் திட்டத்தைத்தானும் நிறைவுசெய்ய முடியவில்லை. நிலைமை இப்படி இருக்கும்பொழுது பேரினவாதச் சகதியில் மூழ்கிக் கிடக்கும் சிங்கள அதிகார வர்க்கத்திடமிருந்து நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

சுனாமி நிர்வாகக் கட்டமைப்பானது எந்தவிதமான அரசியல் அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. அத்துடன் அதற்கு உருப்படியான நிர்வாக வலுவும் இருக்கவில்லை. மிகவும் வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட ஒரு தற்காலிக ஒழுங்கமைப்புக்கே தென்னிலங்கையில் இத்தகைய எதிர்ப்பு என்றால் தமிழர் தாயகத்தில் தன்னாட்சி அதிகாரமுடைய ஆட்சியமைப்பைச் சிங்கள அரசியல் தலைமைகளுடன் பேசிப் பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பது வெறும் பகற் கனவு.

கடந்த நான்கு ஆண்டுகாலச் சமாதான முயற்சியின் பயனாக நாம் பட்டுணர்ந்துகொண்ட மெய்யுண்மை இது. இந்தச் சமாதான நாடகத்தை மிகவும் உன்னிப்பாக அவதானித்துவந்த உலக நாடுகளுக்கும் இந்த உண்மை தெளிவாகியிருக்கும் என்றே நாம் நம்புகிறோம்.


எனது அன்பான மக்களே,

சிங்கள ஆட்சியாளரின் நயவஞ்சக அரசியலுக்கு நல்லதொரு எடுத்துக் காட்டாக இன்னொரு பாரதூரமான விடயத்தையும் நான் இங்கு எடுத்துக்கூற விரும்புகிறேன்.

நிழல் யுத்தம்

சமாதானத்தின் திரைக்குப் பின்னால், மறைமுகமாக, எமது இயக்கத்திற்கு எதிராக நிகழ்த்தப்படும் ஓர் இரகசிய யுத்தம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். எமது விடுதலை இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, எமது போராட்டத்திற்குப் பங்கம் விளைவிக்கும் நோக்குடன் இந்த நாசகார நிழல் யுத்தம் ஏவிவிடப்பட்டது. எமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள், முக்கிய போராளிகள், ஆதரவாளர்கள் எமக்கு ஆதரவான அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் என்ற வகையில் பெருந்தொகையானோர் மிகவும் கோழைத்தனமாகக் கொன்றொழிக்கப்பட்டுள்ளனர். இந்த நிழல் யுத்தத்தின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது எமக்கு நன்கு தெரியும். இராணுவப் புலனாய்வுத் துறையின் வழிநடத்தலில் இந்த வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றபோதும் இதன் பின்புலத்திற் சிங்கள இனவாத அரசியல்வாதிகளின் அரூப கரங்கள் செயற்படுவதையும் நாம் அறிவோம். அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில், அரச படையினரின் பாதுகாப்புக் கவசத்துடன் ஒட்டுப் படைகளான தமிழ் ஆயுதக் குழுக்களை கருவிகளாகக் கொண்டு இந்த மறைமுக யுத்தம் நடத்தப்படுகிறது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிராயுதபாணிகளாக நின்று அரசியற் பணிகளில் ஈடுபட்ட எமது போராளிகள் கொலை செய்யப்படுவதையும், எமது அரசியற் செயலகங்கள் தாக்கியழிக்கப்படுவதையும் நாம் கடுமையாக ஆட்சேபித்தோம். ஆனால், சிங்கள அரசு எமது ஆட்சேபனைகளைப் பொருட்படுத்தவில்லை. இதனால் இறுதியில் எமது அரசியற் போராளிகளை எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் மீள அழைக்க நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

போருக்கு ஓய்வு கொடுத்ததால் உருவாகிய சமாதானச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஒரு வித்தியாசமான மென் தீவிர யுத்தம் எம்மீது தொடுக்கப்பட்டிருக்கிறது. போர்நிறுத்த விதிகளுக்கு அமையத் தமிழ்க் கூலிப் படைகளின் ஆயுதங்களைக் களைய வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடு. இந்த முக்கிய கடப்பாட்டை நிறைவுசெய்யத் தவறிய சிங்கள அரசு, இந்த ஆயுதக் குழுக்களையே கருவிகளாகப் பயன்படுத்தி எமது விடுதலை இயக்கத்திற்கு எதிராக வன்முறையை ஏவிவிட்டிருப்பது ஒரு பாரதூரமான போர்க் குற்றமாகும். ஒரு கையால் அரவணைப்பது போல நடித்து மறுகையாற் குத்தும் நம்பிக்கைத் துரோகச் செயலிது. சமாதான முயற்சியிலும் சமரசத் தீர்விலும் சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு உண்மையான ஆர்வமும் அக்கறையும் இருக்கவில்லை என்பதையே இச்செயற்பாடு எடுத்துக்காட்டுகிறது. இராணுவ அணுகுமுறையை இவர்கள் இன்னும் கைவிட்டதாகத் தெரியவில்லை. சமாதானச் சூழலிலும் ஒரு புதிய வடிவிற் போரை உருமாற்றம் செய்து இராணுவப் பயங்கரவாதத்தைத் தொடர்கிறது சிங்கள அரசு. இந்த நிழல் யுத்தத்தின் நிஜ வடிவத்தையும் அதன் அசிங்கமான முகத்தையும் அந்தரங்க நோக்கத்தையும் சர்வதேச சமூகம் கண்டுகொள்ளும் என நாம் நம்புகிறோம்.

சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பன எல்லாம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அர்த்தமற்ற சொற்பதங்களாக, யதார்த்த மெய்ந்நிலைக்குப் பொருந்தாத வார்த்தைப் பிரயோகங்களாக மாறிவிட்டன. சமாதானச் சூழலில் நிகழ்த்தப்படும் மறைமுக யுத்தம், போர்நிறுத்த விதிகளுக்கு முரணாகத் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, சமரசப் பேச்சுக்களைப் பயன்படுத்திப் பின்னப்படும் சர்வதேசச் சதிவலைப் பின்னல் - இப்படியாக அமைதி முயற்சி திரிவுபடுத்தப்பட்டுத் தவறான முறையிற் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எமது மக்களுக்கு எல்லாவற்றிலுமே நம்பிக்கை இழந்துவிட்டது.

நிலையான அமைதியையும் நிம்மதியான வாழ்வையும் பெற்றுத்தராத சமாதானத்தில், வாழ்விடங்களை ஆக்கிரமித்து நிற்கும் இராணுவத்தை அகற்ற முடியாத போர்நிறுத்தத்தில், தீராது தொடரும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடித்தராத பேச்சுக்களில், எமது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

நிலையற்ற வாழ்வையும், நிச்சயமற்ற எதிர்காலத்தையும் இனியும் எமது மக்கள் பொறுத்துக்கொள்ளத் தயாராகவில்லை.

சர்வதேச சமூகம் இனியும் அசட்டை செய்யமுடியாது

பொறுத்துப் பொறுத்து பொறுமையிழந்த தமிழ் மக்களின் பொங்குணர்வாகவே அவர்களது அரசியல் அபிலாசைகளின் ஆவேச வெளிப்பாடாகவே தமிழீழத் தாயகமெங்கும் வெகுசனப் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

சமீப காலமாக, தமிழ் மாவட்டங்கள் தோறும் மாறி, மாறி அரங்கேறிவரும் தமிழ்த் தேசிய எழுச்சி நிகழ்வுகளிற் சமுத்திரமாக மக்கள் திரண்டெழுந்து உரிமை முழக்கம் செய்து வருகிறார்கள்.

சுயநிர்ணய உரிமைகோரி, தம்மைத் தாமே ஆட்சிபுரியும் அரசியற் சுதந்திரங்கோரி, தமிழீழ மக்கள் எழுப்பும் உரிமைக் குரலானது உலக மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ளது.

ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட தேசமாக அணிதிரண்டு நிற்கும் தமிழினத்தின் உரிமைக் குரலைச் சர்வதேசச் சமூகம் இனியும் அசட்டை செய்யமுடியாது. தமது அரசியல் தகைமையைத் தாமாகவே நிர்ணயித்துக்கொள்ள எமது மக்கள் விரும்புகிறார்கள். காலங்காலமாக அரச ஒடுக்குமுறைக்கு ஆளாகிய ஒரு தேசிய மக்கள் சமுதாயம் என்ற ரீதியில், தமது அரசியல் அபிலாசைகளைச் சர்வதேசச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே எமது மக்களின் அறைகூவலாகும்.

எமது சுயநிர்ணயப் போராட்டப் பயணத்தில் நாம் இன்று ஒரு தீர்க்கமான வரலாற்றுத் திருப்புமுனையை அடைந்துள்ளோம்.

தென்னிலங்கை அரசியல் அதிகார வர்க்கம் தமிழரின் சுயநிர்ணய உரிமையை என்றுமே அங்கீகரிக்கப் போவதில்லை. சிங்களப் பௌத்தப் பெரும்பான்மை மக்களின் நலன்களைப் பேணிப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்திலும், அந்தச் சட்டத்தின் அத்திவாரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆட்சியமைப்பிலும் தமிழினத்தின் சுயநிர்ணயத்திற்கு என்றுமே இடமிருக்கப் போவதில்லை.

நாமாகவே போராடி, எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்பதை எமது மக்கள் இன்று உணர்ந்து விட்டார்கள். சுயநிர்ணயம் என்பதே சுயமாக, சுதந்திரமாக, மற்றவர்களின் தலையீடின்றி, எமது அரசியல் வாழ்வை நாமாகத் தீர்மானிப்பதுதான்.

அந்தக் காலமும் சூழலும் இப்போது கனிந்துவிட்டது.

தேர்தல் புறக்கணிப்பு

தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரித்து, அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்தளித்து, அவர்களை அரவணைத்து வாழச் சிங்களத் தேசம் மறுத்து வருகிறது.

இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு, கடந்த 57 ஆண்டுகளாக இந்த அரசியற் புறக்கணிப்புத் தொடர்கிறது. வேண்டப்படாத இனத்தவராக, ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, புறந்தள்ளி வைக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து சலித்துப்போன தமிழர், சிங்கள ஆட்சியமைப்பையும் அதன் அதிகாரபீடத்தையும் ஒதுக்கிப் புறக்கணிக்கத் தீர்மானித்து விட்டனர்.

சிறீலங்காவின் அரச அதிபர் தேர்தலில், பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாக்களிக்காதமை இந்தப் புறக்கணிப்பின் காத்திரமான வெளிப்பாடாகும்.

சிங்களத்தின் அரச அதிபரைத் தீர்மானிக்கும் வாக்குப் பலம் இருந்தபோதும் அந்த வாய்ப்பினைப் பயன்படுத்த எமது மக்கள் விரும்பவில்லை. வேட்பாளர்கள் மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்பாகவோ அவர்களது கட்சிகள், கொள்கைகள் மீதான தீர்ப்பாகவோ இதனைக் கருதுவது தவறு. ஒட்டுமொத்தமாகச் சிங்கள ஆட்சியமைப்பில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆழமான விரக்தியினதும் நம்பிக்கையீனத்தினதும் வெளிப்பாடாகவே இத்தேர்தற் புறக்கணிப்பு நிகழ்ந்துள்ளது. தமிழரின் அரசியற் போராட்ட வரலாற்றில் இதுவொரு பாரதூரமான திருப்பத்தை சுட்டிக்காட்டுகிறது. சிங்கள அரசியல் ஆட்சிமுறையில் நம்பிக்கையிழந்த தமிழீழ மக்கள், தனிவழி சென்று தமது அரசியல் தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கத் துணிந்துவிட்டனர் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

சிங்களத் தேசமானது ஒரு புதிய தேசத் தலைவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அந்தத் தலைவனின் கீழ் ஒரு புதிய ஆட்சிபீடம் பதவி ஏறியுள்ளது. இந்த ஆட்சியமைப்பானது பிரத்தியேகமாகச் சிங்களப் பெரும்பான்மை மக்களால், அவர்களது வாக்குப் பலத்தால் நிறுவப்பட்டிருக்கிறது.

இந்த ஆட்சியமைப்பிற் சிறுபான்மைத் தேசிய இனத்தவரின் பங்களிப்பு இருக்கவில்லை. இது முற்று முழுதாகவே ஒரு சிங்களப் பௌத்த ஆட்சிபீடமாகும். இதனால் மகிந்த ராஜபக்சா இலங்கை வாழ் மக்கள் சமூகங்கள் அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

அவர் சிங்கள - பௌத்த மக்களின் நலனைப் பேணும் அரச அதிபராகவே ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அரச அதிபர் மகிந்தாவின் சிந்தனைகளையும் கொள்கைகளையும் நாம் நன்கறிவோம்.

தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக அவரது அரசியல் தரிசனத்திற்கும் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கும் மத்தியிலான இசைவற்ற இடைவெளிகளையும் இணங்காத முரண்பாடுகளையும் நாம் அறிவோம்.

இவை பற்றி நான் இங்கு ஒப்பீட்டு மதிப்பாய்வு செய்ய விரும்பவில்லை.

சமீபத்திய அரச அதிபர் தேர்தலும் அதனை எமது மக்கள் புறக்கணித்ததால் ஏற்பட்ட ஆட்சிமாற்றமும் தமிழ், சிங்கள தேசங்கள் மத்தியில், அரசியல் ரீதியாக, ஆழமான ஒரு பிளவை ஏற்படுத்தியுள்ளன.

தென்னிலங்கையில், சிங்கள - பௌத்தம் மேலாண்மை பெற்றுள்ள அதே சமயம், தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியம் நிலைப்பட்டு, பலப்பட்டு, எழுச்சிபெற்று வருகிறது.

சிங்களத்தில் மகிந்த ராஜபக்சாவின் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.

தமிழீழத்திலும் தமிழ்த் தேசிய எழுச்சியின் திண்ணிய வடிவமாக எமது விடுதலை இயக்கத்தின் ஆட்சியமைப்பு விரிவடைந்து, வலுவடைந்து இயங்கி வருகிறது.

சிங்கள இராணுவ ஆதிக்கத்திலிருந்து எமது தாயக நிலத்தின் பெரும் பகுதியை நாம் மீட்டெடுத்து, அங்கு தன்னாட்சி அதிகாரமுள்ள ஆட்சியமைப்பை நிறுவி, அதனை நேர்த்தியாக நிர்வகித்து வருகிறோம் என்பது இன்று உலகறிந்த உண்மை.

பெருந்தொகை மக்கள் வாழும் நிர்வாகக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும் அதனைக் கட்டிக்காக்க பலம்பொருந்திய படைத் துறையையும் சட்டம் ஒழுங்கைப் பேணக் காவல்துறையையும் நீதித்துறையையும் அத்தோடு ஒரு நிழல் அரசாங்கத்திற்குரிய அடித்தளக் கட்டுமாணங்களையும் கொண்டதாக பிரமாண்டமான நிர்வாக அமைப்பை நாம் இயக்கி வருகிறோம்.

பெரும் தொகையான எமது மக்கள் இன்னும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த போதும், உணர்வாலும் இலட்சியத்தாலும் அவர்கள் எமது விடுதலை இலட்சியத்திற்குப் பின்னால் அணிதிரண்டு நிற்கிறார்கள்.

இந்தக் கள யதார்த்தத்தை, அரசியல் மெய்ம்மையைச் சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன், எமது விடுதலை இயக்கத்தை ஒரு 'பயங்கரவாதக் குழு' என உலகத்திற்குச் சிறுமைப்படுத்திச் சித்திரித்துக்காட்ட முனைந்து வருகிறார்கள்.

உலக நாடுகளின் நிலைப்பாடுகள்...

இந்தப் பொய்யான பரப்புரைகளை நம்பி, உலக நாடுகள் சில எமது இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் தொடர்ந்தும் வைத்திருப்பது எமக்கு வேதனையையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

சமாதான முயற்சியின் பாதுகாவலர் என உரிமை கோரி, இலங்கையின் இனப்பிரச்சினையில் ஆர்வமும் அக்கறையும் காட்டிய உலக வல்லாதிக்க நாடுகள், ஒரு தரப்பினரான எமது விடுதலை இயக்கத்தைப் 'பயங்கரவாதிகள்' என ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு, மறுதரப்பினரான சிறீலங்கா அரசின் நலன்களுக்குச் சார்பாக நிலைப்பாடு எடுத்தன. இது பேச்சுக்களிற் பங்கு கொண்டோரது சமநிலை உறவை வெகுவாகப் பாதித்தது.

அத்தோடு எமது அரசியல் தகைமையை நாமே தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் பாதித்தது.

இந்நாடுகளின் ஒருதலைப்பட்சமான நிலைப்பாடும் குறுக்கீடும் சமாதானப் பேச்சுக்கள் முறிந்துபோவதற்கும் ஒரு காரணமாக அமைந்தன.

பயங்கரவாதம் என்ற சொற்பதத்திற்கு ஒரு தெளிவான, தீர்க்கமான வரைவிலக்கணம் இல்லாததால் தர்மத்தின் வழிதழுவி நிகழும் நியாயமான அரசியற் போராட்டங்களும் பயங்கரவாதமாகத் திரிவுபடுத்தப்படுகின்றன. இந்தவகையில் இனவாத ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும் சுதந்திர இயக்கங்களுக்கும் பயங்கரவாதச் சேறு பூசப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இன்றைய சர்வதேச எதிர்ப்பியக்கத்தில் அடக்குமுறை அரசுகளின் இராணுவப் பயங்கரவாதம் மூடிமறைக்கப்படுகிறது. ஆயினும் அந்த அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பவர்கள் மீதே பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது. இந்தத் துர்ப்பாக்கிய நிலைதான் எமது விடுதலை இயக்கத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது.

நோர்வே நாட்டின் அனுசரணையுடனும் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் கடந்த நான்கு ஆண்டுக் காலம்வரை இழுபட்ட சமாதான முயற்சியின்போது சிங்கள அரச தரப்பினால் ஏற்பட்ட சிக்கல்கள், போடப்பட்ட முட்டுக்கட்டைகள், இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகங்கள் எல்லாவற்றையுமே உலகம் நன்கறியும்.

எத்தனையோ இம்சைகள், ஆத்திரமூட்டல்கள் மத்தியிலும் நாம் பொறுமையை இழந்து, சமாதானக் கதவுகளை மூடிவிடவில்லை என்பதையும் சர்வதேசச் சமூகம் அறியும். நான்கு ஆண்டுக்கால அமைதிப் பயணத்திற் சமாதானத்தின் மீதான எமது பற்றுறுதியை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துக் காட்டிவிட்டோம்.

எனது அன்பான மக்களே,

எமது போராட்ட இலட்சியத்தை அடையும் அணுகுமுறை குறித்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கவேண்டிய காலத்தை நாம் நெருங்கிவிட்டோம்.

இந்த வரலாற்றுத் திருப்புமுனையான கட்டத்தில், எமக்கு ஒரு புதிய சவாலாக, சிங்களத் தேசத்தில் ஒரு புதிய அரச அதிபரின் தலைமையில், ஒரு புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது.

இந்தப் புதிய அரசு எமக்கு நேசக் கரம் நீட்டுகிறது. எமது விடுதலை இயக்கத்துடன் பேசுவதற்கு விருப்பம் தெரிவிக்கிறது. போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து அமைதி பேணப் போவதாகச் சொல்கிறது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் ஒரு புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்து வருகிறது.

ஜனாதிபதி மகிந்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட சிந்தனைகளை ஆழமாக அலசிப் பார்க்கும் பொழுது தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளையோ அதன் மூலக் கோட்பாடுகளையோ அவர் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

கொள்கை ரீதியாக எமக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளி மிகப்பெரிது.

எனினும் அவர் நடைமுறை அரசியலில் நம்பிக்கை கொண்ட யதார்த்தவாதி என்று கருதப்படுவதால், சமாதான வழிமுறையை எவ்விதம் கையாளப் போகிறார் என்பதையும், தமிழ் மக்களுக்கு எவ்விதம் நீதி வழங்கப் போகின்றார் என்பதையும் முதலில் நாம் அறிந்து கொள்வது அவசியம்.

ஆகவே, ஜனாதிபதி ராஜபக்சாவின் நகர்வுகளை, அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைச் சிறிது காலம் நாம் பொறுத்திருந்து பார்ப்பதென முடிவு செய்துள்ளோம்.

பொறுமையிழந்து, நம்பிக்கையிழந்து, விரக்தியின் விளிம்பை அடைந்துள்ள எமது மக்கள் இனியும் பொறுத்துப் பொறுத்துக் காத்திருக்கத் தயாராக இல்லை.

ஆகவே, வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள், எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் வகையில், ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைப் புதிய அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

இது எமது இறுதியான, உறுதியான, அவசர வேண்டுகோளாகும்.

எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, கடும்போக்கைக் கடைப்பிடித்து, காலத்தை இழுத்தடிக்கப் புதிய அரசாங்கம் முற்படுமானால் நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை, எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேசச் சுதந்திரப் போராட்டத்தை அடுத்த ஆண்டில் தீவிரப்படுத்துவோம்.

எமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும், எமது மண்ணின் விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான தியாகங்களையும் நினைவுகூரும் இப்புனித நாளில், எத்தகைய இடர்களையும் எத்தகைய துன்பங்களையும் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுப்போமென உறுதிபூணுவோமாக.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!

மாவீரன் துயிலும் இல்லம்

மக்கள் வாழ
மக்கள் வாழும் மண்ணது மீள
கற்கை மறந்தவன்
தாயின் தழுவல்
பொற்கை மறந்தவன்
சொந்த வீட்டுப்
படுக்கை மறந்தவன்
புதுத் தளிர்க்கை மறந்தவன்
பந்த பாசம் எல்லாம் ஒன்றாய்
வெந்து மாளும்
வேட்கை நிறைந்தவன்
மண்ணிலே தவழ்ந்து
மண்ணிலே நடந்து
மண்ணையே குருதியால் நனைத்து
மண்ணுக்காய் உரமாகி
கண்ணொத்த விடுதலைக்காய்
விண்ணையே அளந்தவன் - more

மறப்போமா நாமும்மை...


மறப்போமா நாமும்மை மாவீர நாயகரே,
கிடப்போமா கண்தூங்கி நினைவலைகள் மீட்டாமல்;
இரப்பான்கள் சென்றாங்கே இரந்து கிடக்கட்டும்;
பறப்பான்கள் ஊர்பறந்து பிரச்சாரம் செய்யட்டும்;
கரப்பான்கள் அவர்களென கழித்தெறிந்து கடாசிவிட்டு
சுரப்பான்கள் எம்முளத்தில் சுதந்திர-நெய் ஊறலிட
வரப்பால் வழிநடந்தும் உரைப்பால் உளங்கவர்ந்தும்
நெருப்பாய் நிலையுணர்த்தி நித்திலத்தின் புரவலராய்
பரப்புரையும் செய்வோம் படைநடப்பும் செய்வோம்.
கரப்பால் மூடிய குஞ்சுகளாய் நாம் இருப்பதினி நடவாது - more

Tuesday, November 22, 2005

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்


வீரமரணம் - 11.04.2000

ஆண்குரல்:- “அம்மா.... எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக.... என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ.... அதைத்தான் நான் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு இது ஜீரணிக்க முடியாத வேதனையாய்த்தான் இருக்கும். எனவே எங்களின் சாவுக்காக கண்ணீர் வடித்து கவலையடைவதைவிட நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதே எனக்கு நீங்கள் செய்யும் இறுதிக்கடனாய் ஆத்மாசாந்தியாய் இருக்கும் அம்மா..... உங்கள் மகன் நினைவுக்கல்லில் நிமிர்ந்து நிற்பான்.. நீங்கள் சுவாசிக்கும் காற்றில் நனையும் மழைத்துளியில் எல்லாம் உங்கள் மகன் கலந்திருப்பான்....”

கரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் அன்புசுமந்த வரிகள் இவை... தன்தாயை நேசித்தது போலவே... தன் தாயகத்தையும் பூசித்த தேசப்பற்றாளன்...மிகுதி

நவம்பர் மாத வடலி


நவம்பர் மாத வடலி வழமை போலவே புலவர் மணவை தங்கவேலனின் பண்பாடு என்றால் என்ன?, த.சிவபாலுவின் பிஞ்சு உள்ளத்தில் நற்சார்பான உளப்பாங்கு வளர்க்கப்பட வேண்டும் (உளவியல் தொடர்பான தொடரின் இரண்டாவது அங்கம்,) ஏ.ஜே.ஞானேந்திரனின் எங்கேதான் ஓடி ஒளிந்து கொள்வது? (பறவைக்காய்ச்சல் சம்பந்தமானது,) சி.மாசிலாமணியின் உப்பில்லாப் பண்டடம் குப்பையிலே! (உப்பின் நன்மை தீமைகள் பற்றியது), ம.ஜோசப்பின் நியாயமற்ற எதிர்பார்ப்புகள் துன்பத்திற்கு வழி கோலுகின்றன! (பெற்றோரின் நியாயமற்ற எதிர்பார்ப்புகளும் அதனாலான அழுத்தங்களும் ஒரு குழந்தையின் மனதை எந்தளவுக்கு பாதிக்கின்றன... அதனால் அக்குழந்தையின் எதிர்காலம் எப்படிப் பாதிக்கப் படுகிறது என்பது பற்றியதானது.) வைத்திய கலாநிதி ஆ.விசாகரத்தினம் அவர்களின் மெய்ஞானமும் அறிவியலும் (மனம் என்னும் கருமம்), செ.சிறீக்கந்தராஜாவின் புறநானூற்றில் இடம் பெறும் இலக்கியக் காட்சிகள் மீதான பார்வை.... என்று பலவிதமான கட்டுரைகளுடன் வெளி வந்துள்ளது.

கட்டுரைகளோடு சுவாரஸ்யமான பல துணுக்குச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன.

Friday, November 18, 2005

கடற்கரும்புலி மேஜர் சந்தனா


வீரமரணம் - 20.06.2000

அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, தனது நீண்டநாள் கனவு, இலட்சியம் இம்முறை எந்தத் தடையும் இன்றி வெற்றியடையும் என்று. அந்த நம்பிக்கையின் நிறைவோடு தன்னைப் பெற்றவளை, தன் உறவுகளை இறுதியாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருவதற்காய் வீடு செல்கிறாள்.

"அடிக்கடி வீட்டை வா மோனை" என்று கூறிய தன் தாயிடம் சொல்கிறாள் "கிட்டடியில வந்திடுவன் அம்மா" அவள் கூறியதன் அர்த்தம் புரியாது கண்ணீரோடு கட்டியணைத்து முத்தமிட்டு விடைகொடுக்கின்றாள் அந்தத் தாய். இன்னும் சில நாட்களில் நிழற்படமாகத்தான் தன் மகள் தன்னிடம் வரப்போகிறாள் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை அத்தாயுள்ளம். - மிகுதி

Sunday, November 13, 2005

கேள்வி நேரம் - 4


1)பத்துக்கோடி என்பது எத்தனை பூச்சியங்களைக் கொண்டது?
அது தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

2) உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட புத்தகம் எது?
எந்த ஆண்டில் விற்கப் பட்டது?
எவ்வளவு பணத்துக்கு விலை போனது?
எந்த நாடு வாங்கியது?
எந்த நாட்டிடமிருந்து வாங்கியது?

Friday, November 11, 2005

கப்டன் மயூரன்(சபா)


திருமதி சிவா தியாகராஜாவின் நினைவில்

அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு.

எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான்.

எனது இன்னொரு மகன் - கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான்.

வயிற்றில் அல்சர் இருப்பதால்தான் வைத்தியம் செய்வதற்காக ஒன்றரை மாத லீவில் வந்திருப்பதாகச் சொன்னான். வைத்தியசாலைக்குச் சென்று ஏதோ மருந்துகள் எடுத்து வருவான். ஆனால் சாப்பாட்டில் எந்த விதக் கட்டுப்பாட்டையும் கடைப் பிடிக்க மாட்டான்.

அவன் வந்திருக்கிறான் என்று அவனது பாடசாலைத் தோழர்களும் போராளித் தோழர்களும் மாறி மாறி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். மிகுதி

கப்டன் மயூரன்


விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி
பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென
விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே
பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா
தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு
தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த
கதைகள் பல இங்கு காதில் அடிபடுது
ஆனாலும் மயூரா உன்
உடலைக் காணவில்லையடா
விழுப்புண்கள் பெற்ற உன் வித்துடலை காண்பதற்கு
விதி எமக்கு இல்லையடா-அதனால்தான்
உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது
சடலம் என்ற பெயர் உனக்கு இல்லையடா மிகுதி

Thursday, November 10, 2005

ஓடிப்போனவள்


தோளில் என் சின்னவனைப் போட்டுக் கொண்டு ஒழுங்கைகள் தாண்டி குறுக்கு வழியால் எனது மாமி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதுதான் அவளைக் கண்டேன். அவளது பெயரைக் குறிப்பிடாமல் இருப்பதே நல்லது என நினைக்கிறேன். ஆனால் அது அவள்தானா என்று எனக்குச் சந்தேகமாகவும் இருந்தது.

என்னோடு அவள் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது அவளை அழகி என்று சொல்ல முடியா விட்டாலும் அவள் கூந்தல் அழகு. நீளக் கூந்தலை நேர்த்தியாகத் வாரி இழுத்து அழகாகப் பின்னியிருப்பாள். அவள் அம்மாதான் அவளுக்குப் பின்னி விடுவாளாம். ஒற்றைப் பெண்பிள்ளை.

நான் ஐந்தாம் வகுப்புக்குப் போன போது அவள் ஆறாம் வகுப்புக்குப் போயிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை. எங்களோடு இருந்தாள். வரிசையெடுத்துப் பார்த்து இருந்த போது அவள் எங்கள் எல்லோரையும் விட உயரமாக இருந்ததால் வகுப்பில் கடைசி வாங்கில்களின் வரிசையில் கடைசி மூலையில் அவளுக்கு இடம் கிடைத்தது.

அவளுக்கு அந்த நீண்ட கூந்தலும் இல்லையென்றால் நாங்கள் அவளை ஒரு பொருட்டாகவே கருதியிருக்க மாட்டோம்.

திடீரென்று ஒருநாள் அவள் பாடசாலைக்கு வரவில்லை. ஓடிப்போய் விட்டாளாம். அதுவும் பக்கத்து வீட்டுக்காரனோடு ஓடிப் போய் விட்டாளாம். வகுப்பறையில் கடைசி மூலையில் இருந்தவள் "நடுச்சாமத்திலை பாத்ரூம் போகோணுமெண்ட, தாய் கூட்டிக் கொண்டு போனவவாம். "ஏனணை கூட வாறாய். நீ அதிலை இரு. நான் ஆறுதலாப் போயிட்டு வாறன்" எண்டு சொல்லிப் போட்டுப் போனவள் அப்பிடியே போயிட்டாளாம்." என்று பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல சந்து பொந்துகளில் கூடப் பேசப் பட்டாள். பக்கத்து வீட்டுக்காரனுக்கு இவளை விடப் பதினைந்து வயது கூடவாம்.

பத்து வயது கூட நிரம்பாத எனக்கு அப்போது ஓடிப்போவதன் தாத்பர்யமே புரியவில்லை. ஏன் படிக்காமல் போனாள்? என்ற ஒன்றுதான் எனக்குள் பெரிய கேள்விக்குறியாய் நின்றது. வகுப்பில் ஒரே அவள் கதையாய் இருந்ததால் அவளைப் பற்றியும் அவள் குடும்பத்தைப் பற்றியும் பல தகவல்கள் கேட்காமலே கிடைத்தன. அவளுக்கு எங்களை விட மூன்று நான்கு வயது கூட என்ற தகவலும் கொசுறாய்க் கிடைத்தது.

ஒருநாள், "இனி அவளைப் பற்றி ஒருத்தரும் வகுப்பிலை கதைக்கக் கூடாது" என்று முருகேசம்பிள்ளை ரீச்சர் பிரம்பை மேசையிலை ஓங்கி அடித்துச் சொன்னதோடு அவள் பற்றிய கதை குசுகுசுப்பாய் மாறி ஒரு கட்டத்தில் முழுவதுமாய் நின்று போனது. இடைக்கிடை எப்பவாவது அவள் நினைவு வந்தாலும் அது அப்படியே என் மனசோடு அடங்கி விடும்.

அந்த அவளைத்தான், 1969இல், "ஓடிப்போன ..." என்று எல்லோராலும் அடைமொழி போட்டு அழைக்கப் பட்ட அவளைத்தான் குட்டிமணி, தங்கத்துரை.. எல்லோரும் கொல்லப்பட்டு, நாடு அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்த 1983இன் ஒரு நாளில் கண்டேன்.

நீண்ட கூந்தல் எலிவாலாகி, சோகம் முகத்தின் இருப்பிடமாகி.... உருக்குலைந்து நின்றாள். அவள் காலுக்குள் ஒரு சிறுமியும், இரு சிறுவர்களும். என்னைக் கண்டதும் சிரிக்கவா விடவா என்ற யோசனையோடு சங்கோஜித்தாள். நானாவது ஏதாவது கேட்டிருக்கலாம். சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டுப் போய் விட்டேன். பின்னர் மாமியிடம்தான் "அது அவள்தானா!" என விசாரித்தேன்.

அவளேதானாம். கூட்டிக் கொண்டு போனவன் சில வருசங்களில் இவளையும் பிள்ளைகளையும் நடுத்தெருவிலை விட்டிட்டு இன்னொருத்தியோடை போயிட்டானாம். சாப்பிடவே வழியில்லாமல் பல்லைக் கடிச்சுக் கொண்டு வாழ்ந்தவள் `இனியும் இயலாது` என்ற நிலையில் 14வருசங்கள் கழிச்சு தாயைத் தேடி வந்திருக்கிறாளாம்.

எனக்கு அப்போதெல்லாம் அவளை நினைக்க ஒரு புறம் பாவமாக இருந்தது. இன்னொரு புறம் ஏன் மொக்கு மாதிரி ஓடிப்போனவள்? என்றிருந்தது.

பலவருடங்களின்பின்தான் அவள் போனால் ஓடிப்போனவள். அவன் போனால் கூட்டிக் கொண்டு போட்டான். என்ற அவள் அவனுக்கான சமூகத்தின் பார்வை விளங்கியது.

இன்னும் சில வருடங்களின் பின்தான் 13வயதுச் சிறுமியை 28வயதுகள் நிரம்பிய ஒருவன் பாலியல் துர்ப்பிரயோகத்துக்குப் பயன் படுத்தியிருந்த கொடுமை புரிந்தது.

சந்திரவதனா
10.11.2005
தோளில் என் சின்னவனைப் போட்டுக் கொண்டு ஒழுங்கைகள் தாண்டி குறுக்கு வழியால் எனது மாமி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதுதான் அவளைக் கண்டேன். அவளது பெயரைக் குறிப்பிடாமல் இருப்பதே நல்லது என நினைக்கிறேன். ஆனால் அது அவள்தானா என்று எனக்குச் சந்தேகமாகவும் இருந்தது.

என்னோடு அவள் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது அவளை அழகி என்று சொல்ல முடியா விட்டாலும் அவள் கூந்தல் அழகு. நீளக் கூந்தலை நேர்த்தியாகத் வாரி இழுத்து அழகாகப் பின்னியிருப்பாள். அவள் அம்மாதான் அவளுக்குப் பின்னி விடுவாளாம். ஒற்றைப் பெண்பிள்ளை.

நான் ஐந்தாம் வகுப்புக்குப் போன போது அவள் ஆறாம் வகுப்புக்குப் போயிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை. எங்களோடு இருந்தாள். வரிசையெடுத்துப் பார்த்து இருந்த போது அவள் எங்கள் எல்லோரையும் விட உயரமாக இருந்ததால் வகுப்பில் கடைசி வாங்கில்களின் வரிசையில் கடைசி மூலையில் அவளுக்கு இடம் கிடைத்தது.

அவளுக்கு அந்த நீண்ட கூந்தலும் இல்லையென்றால் நாங்கள் அவளை ஒரு பொருட்டாகவே கருதியிருக்க மாட்டோம்.

திடீரென்று ஒருநாள் அவள் பாடசாலைக்கு வரவில்லை. ஓடிப்போய் விட்டாளாம். அதுவும் பக்கத்து வீட்டுக்காரனோடு ஓடிப் போய் விட்டாளாம். வகுப்பறையில் கடைசி மூலையில் இருந்தவள் "நடுச்சாமத்திலை பாத்ரூம் போகோணுமெண்ட, தாய் கூட்டிக் கொண்டு போனவவாம். "ஏனணை கூட வாறாய். நீ அதிலை இரு. நான் ஆறுதலாப் போயிட்டு வாறன்" எண்டு சொல்லிப் போட்டுப் போனவள் அப்பிடியே போயிட்டாளாம்." என்று பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல சந்து பொந்துகளில் கூடப் பேசப் பட்டாள். பக்கத்து வீட்டுக்காரனுக்கு இவளை விடப் பதினைந்து வயது கூடவாம்.

பத்து வயது கூட நிரம்பாத எனக்கு அப்போது ஓடிப்போவதன் தாத்பர்யமே புரியவில்லை. ஏன் படிக்காமல் போனாள்? என்ற ஒன்றுதான் எனக்குள் பெரிய கேள்விக்குறியாய் நின்றது. வகுப்பில் ஒரே அவள் கதையாய் இருந்ததால் அவளைப் பற்றியும் அவள் குடும்பத்தைப் பற்றியும் பல தகவல்கள் கேட்காமலே கிடைத்தன. அவளுக்கு எங்களை விட மூன்று நான்கு வயது கூட என்ற தகவலும் கொசுறாய்க் கிடைத்தது.

ஒருநாள், "இனி அவளைப் பற்றி ஒருத்தரும் வகுப்பிலை கதைக்கக் கூடாது" என்று முருகேசம்பிள்ளை ரீச்சர் பிரம்பை மேசையிலை ஓங்கி அடித்துச் சொன்னதோடு அவள் பற்றிய கதை குசுகுசுப்பாய் மாறி ஒரு கட்டத்தில் முழுவதுமாய் நின்று போனது. இடைக்கிடை எப்பவாவது அவள் நினைவு வந்தாலும் அது அப்படியே என் மனசோடு அடங்கி விடும்.

அந்த அவளைத்தான், 1969இல், "ஓடிப்போன ..." என்று எல்லோராலும் அடைமொழி போட்டு அழைக்கப் பட்ட அவளைத்தான் குட்டிமணி, தங்கத்துரை.. எல்லோரும் கொல்லப்பட்டு, நாடு அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்த 1983இன் ஒரு நாளில் கண்டேன்.

நீண்ட கூந்தல் எலிவாலாகி, சோகம் முகத்தின் இருப்பிடமாகி.... உருக்குலைந்து நின்றாள். அவள் காலுக்குள் ஒரு சிறுமியும், இரு சிறுவர்களும். என்னைக் கண்டதும் சிரிக்கவா விடவா என்ற யோசனையோடு சங்கோஜித்தாள். நானாவது ஏதாவது கேட்டிருக்கலாம். சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டுப் போய் விட்டேன். பின்னர் மாமியிடம்தான் "அது அவள்தானா!" என விசாரித்தேன்.

அவளேதானாம். கூட்டிக் கொண்டு போனவன் சில வருசங்களில் இவளையும் பிள்ளைகளையும் நடுத்தெருவிலை விட்டிட்டு இன்னொருத்தியோடை போயிட்டானாம். சாப்பிடவே வழியில்லாமல் பல்லைக் கடிச்சுக் கொண்டு வாழ்ந்தவள் `இனியும் இயலாது` என்ற நிலையில் 14வருசங்கள் கழிச்சு தாயைத் தேடி வந்திருக்கிறாளாம்.

எனக்கு அப்போதெல்லாம் அவளை நினைக்க ஒரு புறம் பாவமாக இருந்தது. இன்னொரு புறம் ஏன் மொக்கு மாதிரி ஓடிப்போனவள்? என்றிருந்தது.

பலவருடங்களின்பின்தான் அவள் போனால் ஓடிப்போனவள். அவன் போனால் கூட்டிக் கொண்டு போட்டான். என்ற அவள் அவனுக்கான சமூகத்தின் பார்வை விளங்கியது.

இன்னும் சில வருடங்களின் பின்தான் 13வயதுச் சிறுமியை 28வயதுகள் நிரம்பிய ஒருவன் பாலியல் துர்ப்பிரயோகத்துக்குப் பயன் படுத்தியிருந்த கொடுமை புரிந்தது.

சந்திரவதனா
10.11.2005

படித்ததில் பிடித்த ஒரு கதையும் கருத்தும்.


கோ.கணேஷின் பதிவிலிருந்து

முன்னொரு காலத்தில் ஐக்கிய குடியரசில் ஒரு பிரபு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஊர் சுற்றி பார்க்க கிளம்பினார். தன் குதிரை வண்டியில் ஊர் சுற்றும் பொழுது ஒரு இடத்தில் ஒரு ஏழை விவசாயி புற்களைத் தின்று கொண்டிருந்தான். உடனே அந்த பிரபு அவனிடம் போய் அவன் புற்களைத் தின்பதற்கான காரணத்தைக் கேட்டார். அவனும் தன் ஏழ்மை நிலை காரணமாக புற்களைத் தின்பதாக சொல்கிறான். உடனே அவனை தன் வண்டியில் ஏற சொல்கிறார்.

வண்டியில் செல்லும் பொழுது அந்த விவசாயி தன் வீட்டில் தன் மகனும் மனைவியும் புற்களைத் திண்று கொண்டிருப்பதாக சொல்கிறான். அதற்கு அந்த பிரபு அவர்களையும் வண்டியில் ஏற்றிக் கொள்வோம் என்று சொல்கிறார். உடனே அந்த விவசாயி தன் அண்ணனும் அவன் மனைவி மக்களும் புற்களைத்தான் தின்று கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறான். அவர்களையும் வண்டியில் ஏற்றிக் கொள்வதாக பிரபு உறுதியளிக்கிறார்.

பூரிப்படைந்த விவசாயி "உங்கள் வீட்டில் இத்தனை பேருக்கு வேலை இருக்கும் பொழுது ஏன் முன்னமே பணியாட்களை அந்த வேலைகளுக்கு அமர்த்தவில்லை?" என்று கேட்கிறான். அதற்கு அந்த பிரபு "என் வீட்டு தோட்டத்தில் புற்கள் இடுப்பளவு உயரத்திற்கு வளர்ந்து நிற்கின்றன அவைகளை நீக்குவதற்காகவே உங்களை அழைத்துச் செல்ல சம்மதித்தேன்"
என்று சொல்கிறார்.

வேடிக்கைக்காக சொல்லப்பட்ட விஷயம் தான் என்றாலும் அதிலுள்ள கருத்து ஆழமானது. பிறரது கஷ்டத்தைத் தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்பவர்கள் இந்த உலகத்தில் அநேகம் பேர் இருக்கிறார்கள்.

Wednesday, November 09, 2005

தமிழில் கணிதம்


பழைய கணக்கீட்டு முறைகள் பற்றி எனக்குத் தெரிந்த ஒன்றை கடந்தவாரம் எழுதிய போது திரு.பத்மனாபஐயர் அவர்கள் "தமிழில் கணிதம் தொடர்பான ஒரு தகவலைத் தருவதாகச்" சொன்னார். சொன்னபடி அனுப்பியும் உள்ளார்.

குறுந்திரைப்பட விழா - 2005


எழுத்தாளர் சந்திப்பு


கேணல் ராயு

அம்பலவாணன் நேமிநாதன்
யாழ்-மாவட்டம் சுன்னாகம்

மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ் வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத் தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச் சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக் கொணர்பவர்கள் ஒருசிலரே. ஈழ விடுதலைப் போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவும் ஆளுமை வீச்சுக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து தம்மை தேசவிடிவுக்காக அர்ப்பணித்துள்ளனர். இவ வரிசையில் கேணல் ராயு அவர்களின் வாழ்வு ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் ஆழமான வரலாற்றுத்தடத்தை பதித்து நிற்கின்றது. மிகுதி

Monday, November 07, 2005

தடம்பதித்தவர்கள் - லxxல்

எமது வாழ்வில் நல்ல விதமாகவோ அன்றிக் கெட்ட விதமாகவோ மனதில் தடம் பதித்துப் போனவர்கள் பலர் இருப்பார்கள். இவர்கள் அடிக்கடியோ அன்றி எப்போதாவதோ எமது நினைவுக்குள் முகம் காட்டிச் செல்வார்கள். அப்படியாக எனக்குள் முகம் காட்டுபவர்களில் லxxxம் ஒருவன்.

லxxல்
அவன் பற்றிய பூர்வீகம் எதுவுமே எனக்குத் தெரியாது. நான் Tuitoryக்குப் போகும் ஒவ்வொரு பொழுதிலும், அவன் வகுப்பு நடக்கும் அறையின் வாசலில் நின்று என்னைப் பார்த்துக் கொண்டே இருப்பான். அந்த வாசல் Tuitoryயின் வாசலைப் பார்த்த படியே இருப்பதால் உள்ளே நுழைவது யாராக இருந்தாலும் அவனைத் தரிசிக்காது செல்ல முடியாது. நான் வரும் நேரங்களில் மட்டுந்தான் அதில் அவன் நிற்கிறானா என்பது எனக்குத் தெரியாத விடயம்.

இப்போதென்றால் ஒரு தெரிந்தவரைக் கண்டால் ஒரு "ஹலோ"வோ அல்லது ஒரு "வணக்கமோ" அதையும் விட்டால் ஒரு புன்னகை சிந்தலோ இல்லாமல் நகர மாட்டோம். அப்போது (31வருடங்களுக்கு முன்) அதுவும் ஒரு பதின்னான்கு வயதுப் பெண் ஒரு ஆணைக்கண்டு தெரிந்தது போல் பாவனை பண்ணிக் கொள்வது விபரீதமான விளைவுகளையே தரும். இதற்கு மேலால் அவன் மீது எனக்கு எந்த விதமான ஈடுபாடும் இருக்கவும் இல்லை. அதனால் எந்தவித பாவனையுமின்றி நான் அவனைத் தாண்டி விடுவேன்.

நிட்சயம் அவன் என்னை விட வயதானவனாக இருப்பான். ஆனாலும் ஆங்கில வகுப்புக்கு மட்டும் எனது வகுப்பில் வந்தமர்வான்.

அவனது பெயர் லxxல் என்பதை ஆங்கில வகுப்பில் ஆங்கில ஆசிரியர் கூப்பிடும் போதுதான் நான் அறிந்து கொண்டேன். அவனது பிறப்பிடம் மட்டக்களப்போ அல்லது திருகோணமலையோ அல்லது வேறு இடமோ தெரியவில்லை. ஆனால் எங்கோயோ இருந்து பருத்தித்துறைக்கு வந்து அந்த ரியூற்றரியிலேயே ஒரு அறையில் தங்கியிருந்து படிக்கிறான் என்பது மட்டும் அரசல் புரசலாக என் காதிலும் வந்து விழுந்திருந்தது.

Tuitoryயில் ஒரு பாடம் முடிந்து வரும் இடைவேளையின் போது பெண்கள் Toilet பக்கம் செல்வதாயின் அவனது அறையைக் கடந்துதான் செல்ல வேண்டும். நான் அந்த அறையைக் கடக்க வேண்டிய ஒவ்வொரு பொழுதிலும் அவன் ஓடி வந்து அறை வாசலில் நின்று என்னையே பார்த்துக் கொண்டு நிற்பான். ஒரு நாளேனும் அவன் என்னுடன் கதைக்க முயற்சித்ததாய் எனக்குத் தெரியவில்லை. ஆனால் எப்போதுமே அவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை கவிந்திருக்கும்.

இது ஒரு புறம் இருக்க எங்களுக்கு பத்தாம் வகுப்புப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. பிரியப் போகிறோம் என்ற நினைப்பில் எனது சக மாணவிகள் Autograph களுடன் திரிந்தார்கள்.

"ஆழக்கடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றக் கூடாது." என்பதில் தொடங்கி எத்தனையோ சினிமாப் பாடல்களின் வரிகளால், பழமொழிகளால்... என்று தொடர்ந்து "என்னை மறந்து விடாதே..." என்பது வரை எழுதி எழுதி Autographஐ நிறைத்தார்கள்.

நானும் என் பங்குக்கு எனது Autographஐ ஒவ்வொருவரிடமும் நீட்டி வாழ்த்துக்களையும், கையெழுத்துக்களையும் வாங்கிக் கொண்டேன். இத்தனையும் சக மாணவிகளிடந்தான். மருந்துக்குக் கூட சக மாணவர்களிடம் கையெழுத்தை வாங்கும் பழக்கம் அப்போது இல்லை.

அன்று Chemistry வகுப்பு முடிய 5நிமிட இடைவேளை. அவசரமாக வகுப்பறையை விட்டு வெளியில் எமக்கான அறைக்குச் சென்று தண்ணீர் குடித்து... மீண்டும் ஆங்கில வகுப்புக்குத் திரும்பிய போது எனது மேசையில் எனது புத்தகங்களுடன் இருந்த எனது Autographஐக் காணவில்லை.

எல்லாமாணவிகளையும் மட்டுமல்லாது, Tuitory பொறுப்பாளரையும் கேட்டு விட்டேன். `ம் கூம்...` அது எங்கே யார் கைக்குப் போயிருக்குமென்று யாருக்குமே தெரியவில்லை. "பெடியன்களில் யாரோ எடுத்து விட்டாங்கள் போலை." சில மாணவியர் கருத்துத் தெரிவித்தனர். பார்த்துப் பார்த்து வேண்டிய கையெழுத்துக்களும், வாழ்த்துக்களும் தொலைந்து போய் விட்டதில் எனக்கு வருத்தந்தான். என்ன செய்வது...?

ஒரு வாரத்துக்குள் அம்மாவிடம் கேட்டு இன்னொரு Autograph வாங்கி, மீண்டும் ஒவ்வொருவரிடமாக நீட்டிக் கொண்டிருந்தேன். இப்படியே Tuitoryயின் இறுதிவாரமும் வந்து விட்டது. அந்த வாரத்தில் ஒருநாள், இடைவேளைக்கு வெளியில் போய் வந்த போது, தொலைந்த எனது Autograph எனது புத்தகங்களின் மேல் வைக்கப் பட்டிருந்தது. எனக்கு அளவிலா மகிழ்ச்சி. கூடவே பயமும், யார் யார் என்ன கிறுக்கியிருப்பார்கள் என்ற குழப்பமும் இருந்தது.

ஆங்கில வகுப்பு முடிந்து வீடு சென்றதும் Autographஇன் பக்கங்களைப் புரட்டினேன். எனது எண்ணம் சரியாகவே இருந்தது. மூன்று பக்கங்களில் ஒரே கையெழுத்தில் யாரோ ஒருவர் அழகாக எழுதியிருந்தார்.

அவற்றில் ஒரு பக்கத்தில்
கோட்டையிலே பெண் பிறந்தாலும்
தலையில் கொட்டியபடியேதான் நடக்கும்
என்ற வாக்கியங்கள் இருந்தன.

அந்த ஒரு வாரத்துக்குள் எனது நண்பிகள் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டதில் அதை எழுதியது லxxல் ஆக இருக்கலாம் என்ற பதில் எனக்குக் கிடைத்தது. அவர்கள் தந்த தகவல்களின்படி அவனது கையெழுத்துத்தான் அது என என்னால் ஊர்ஜிதம் செய்து கொள்ளவும் முடிந்தது.

ஆனால் எனது பத்தாம்வகுப்புப் பரீட்சை முடிந்து, முடிவுகளுக்காகக் காத்திருந்து, மீண்டும் நான் பதினோராம் வகுப்பில் அதே Tuitoryயில் போய்ச் சேர்ந்த போது அவன் அங்கு இல்லை. "நீயா எழுதினாய்?" என்றோ, அல்லது "ஏன் அந்த வாக்கியங்களை எனக்கு எழுதினாய்?" என்றோ கேட்பதற்குக் கூட எனக்கு ஒரு வாய்ப்புத் தராமல் அவன் தனது சொந்த ஊருக்குப் போய்விட்டான் என்பது தெரிந்தது.

அந்த Autographம் இந்திய இராணுவத்தின் அத்துமீறலில் எனது வீட்டுக்குள்ளிருந்து வீசி எறியப்பட்டு விட்டது. ஆனால் இரக்கமா, விருப்பமா என்று தரம் பிரித்தறிய முடியாத அவனது பார்வையையும், அவன் எழுதிய அந்த வசனங்களையும் என் மனதுள் இருந்து தூக்கியெறிய முடியவில்லை.

சந்திரவதனா
7.11.2005

Saturday, November 05, 2005

கேள்வி நேரம் - 3


பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே...!
அந்தப் பத்தும் என்னென்னவென்று தெரியுமா?

Friday, November 04, 2005

கேள்வி நேரம் - 2


விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
பரிசாக நீங்கள் விரும்பிய ஒரு பாடல் தரப்படும்.
நீங்கள் விரும்பிய பாடல் இல்லாவிட்டால்
நான் விருமப்பிய பாடலொன்றைத் தருவேன்.


முதல் உலகக்கிண்ணக் காற்பந்து எந்த ஆண்டில் நடைபெற்றது?
எந்த நாட்டில்...?

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக்கிண்ணக் காற்பந்து போர் காரணமாக இரு தடவைகளை நடைபெறவில்லை.
அவை எந்த ஆண்டுகள்?

முதல் முதல் பிரித்தானியாவில் எப்போது உலகக்கிண்ணக் காற்பந்து நடைபெற்றது? (பிரித்தானியாதான் அந்த ஆண்டு உலகக்கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது)

கேள்வி நேரம் - 1


விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
பரிசாக நீங்கள் விரும்பிய ஒரு பாடல் தரப்படும்.
நீங்கள் விரும்பிய பாடல் இல்லாவிட்டால்
நான் விருமப்பிய பாடலொன்றைத் தருவேன்.

ஜானகி முதல் முதல் பாடிய திரைப்படம் எது?

ஜானகி பாடிய முதற் பாடல் எது?

ஜானகிக்கு விருது வாங்கிக் கொடுத்த திரைப்படம் எது?

Wednesday, November 02, 2005

உப்பைக் கொட்டினால்...?

சின்ன வயதில் எனக்குப் பல மதத்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு இருந்தது. எனது சித்தி வீட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தினர் வாடகைக்கு இருந்தார்கள். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள். அவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டு பாண்டி. மாலை வேளைகளில் ஆண் பெண் பேதமின்றி எல்லோருமாகக் குழுமியிருந்து பாண்டி விளையாடுவார்கள். ஆண்களும் முகத்துக்கு அந்தப் பவுடர், இந்தப் பவுடர் என்று பூசி அழகு பார்ப்பார்கள். தேநீருக்கு ஏலம் தட்டிப் போட்டு நல்ல இனிப்பாகத் தந்து குடிக்கும் படி வற்புறுத்துவார்கள். அன்பாகவும் இதமாகவும் பேசுவார்கள்.

ஒரு நாள் அவர்கள் வீட்டில் உப்புக் கொட்டுப் பட்டு விட்டது. உடனேயே எல்லோர் முகமும் மாறி விட்டது. நடக்கக் கூடாத எதுவோ நடந்து விட்டதாக எல்லோரும் வருந்திப் பயந்து உப்பை அள்ளி எடுத்தார்கள். வாப்பா பார்த்து விடக் கூடாது என்ற அவசரம் அவர்கள் செயலில் தெரிந்தது.

ஆனால் இன்று வரை அதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை. நானும் தெரிந்த முஸ்லீம் நண்பர்களிடமெல்லாம் இது பற்றிக் கேட்டு விட்டேன். அவர்களுக்கும் இந்த உப்புப் பிரச்சனை பற்றி எதுவும் தெரியவில்லை.

எந்தப் பொருளையும் கொட்டிச் சிந்துவது நல்லதில்லைத்தான். உப்பைக் கொட்டினால் அதில் உள்ள பிரத்தியேகமான தீமையோ அல்லது சம்பிரதாயக் கெடுதலோ என்ன?

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite