Friday, February 08, 2008

அம்மா

ஐனவரி மாத யுகமாயினியில் பிரசுரமாகியது

கதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும் குளிர் வெளிக்குள் கவின் நுழைந்து விட்டான். சந்தியாவுக்கு மனம் விறைத்தது. சுந்தரேசனோ எந்தவித அலட்டலுமின்றிப் படுக்கையறையுள் புகுந்து படுக்கையில் சாய்ந்து கொண்டான்.

கவின் அமெரிக்காவுக்குப் போக வேண்டுமாம். அதுதான் இப்போது சில வாரங்களாகவே வீட்டில் புயல். இன்று உச்சக் கட்டம். மகன் அமெரிக்காவுக்குப் போவதில் சந்தியாவுக்கும் எந்தவித உடன்பாடும் இல்லைத்தான். அதற்காக அப்பா சுந்தரேசனும், மகன் கவினும் இத்தனை வாக்குவாதங்களும், சண்டைகளும் போட்டுக் கொள்ள வேண்டுமா?

பிள்ளைகளுக்கும், அப்பாவுக்கும் இடையில் சண்டைகள் வந்து விடக் கூடாதென்று எத்தனை விடயங்களைப் பக்குவமாகச் சமாளித்திருப்பாள். இந்த விடயம் தவிர்க்க முடியாததாய், அவள் கையை விட்டு நழுவி முற்று முழுதாகச் சுந்தரேசனிடம் சென்று விட்டது. அதுவும் கவின் இப்படி கதவை அடித்துச் சாத்தி, வீட்டை விட்டு வெளியில் போகுமளவுக்கு வந்து விட்டதே என்பதில் அவளுக்கு நியமாகவே வருத்தம். அவளால் அதைத் தாங்க முடியவில்லை.

எல்லாம் இந்த இணையத்தால் வந்ததுதான். சட், எஸ்.எம்.எஸ் என்று எல்லாப் பிள்ளைகளையும் போலத்தான் கவினும் கணினியோடும், கைத் தொலைபேசியோடும் திரிவான். படிப்பிலும் படு கெட்டிக்காரன் என்பதால் அவன் கணினியோடு மினைக்கெடும் போது சந்தியாவோ அன்றி சுந்தரேசனோ அவ்வளவான கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை. ஆனால் அது
இப்படி முகம் தெரியாத ஒருத்தி மீது காதலை ஏற்படுத்தும் என அவர்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை.

´இங்கை, ஜேர்மனியிலை இல்லாத பொம்பிளையையே கொம்பியூட்டருக்குள்ளை கண்டிட்டான்´ என சந்தியா சலித்துக் கொள்வதும் உண்டு. ஆனாலும் அது இணையத்தோடே போய்விடும் என்றுதான் நினைத்திருந்தாள். இந்தளவு தூரம் வரும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

“அண்ணாவை மட்டும் அவுஸ்திரேலியாவிலை ஒரு வருசம் போயிருந்து படிக்க விட்டீங்கள். ஏன், நான் போனால் என்ன? என்னையும் விடுங்கோ" இதுவே அவன் அடிக்கடி பாவிக்கும் ஆயுதமாக இருந்தது.

“அண்ணாவுக்குப் பதினெட்டு வயசாகீட்டுது. அவனாலை இப்பத் தனிய இருந்து படிக்கேலும். அதாலை பயமில்லாமல் விட்டம். உனக்கு இப்பத்தானே பதினாறு வயசு. உனக்கும் பதினெட்டு வயசு வரக்கை பார்ப்பம்." என்று எத்தனையோ தடவைகள் சுந்தரேசன் சொல்லி விட்டான்.

கவினும் விடுவதாயில்லை. “உங்களுக்கு அண்ணனிலைதான் பாசம். என்னிலை இல்லை. அவன் என்ன கேட்டாலும் விடுவீங்கள். செய்வீங்கள். நான் கேட்டால்தான் உங்களாலை ஏலாது." என்பான்.

“அவுஸ்திரேலியா போலையோ அமெரிக்கா. அங்கை ஒரு நாளும் உன்னைத் தனிய விடேலாது." சந்தியாவும் முந்திக் கொண்டு கத்துவாள்.

வாக்குவாதங்களும், கருத்து முரண்பாடுகளின் வெளிப்பாடுகளும் இப்படித்தான் சில வாரங்களாகத் தொடர்ந்து கொண்டிருந்தன. இன்றோ, எப்படியாவது அப்பாவைச் சம்மதிக்க வைத்து விடுவது என்ற முடிவோடுதான் கவினும் ஆரம்பித்திருக்கிறான். அவனுக்கு அங்கு அமெரிக்காவில் இருக்கிற யூலியா என்ற பெண்பிள்ளை மேல் காதலாம். அந்தப் பிள்ளை பாவமாம். அதுன்ரை அம்மா கான்சர் வந்து இறந்து விட்டாவாம். அது அம்மம்மாவோடைதான் வாழ்கிறதாம். அதுவும் இவனைப் பார்க்கத் துடியாய்த் துடிக்கிறதாம். கணினியூடு வந்த அந்தப் பிள்ளையின் படங்களை இவன் பிறின்ற் பண்ணி தன் அறைச் சுவர் முழுவதும் கொழுவி வைத்திருக்கிறான்.

சுந்தரேசனுக்குத் தெரியாத காதலே. அவன் அதைப் பற்றி ஒன்றுமே கதைக்க மாட்டான். “நீ, அமெரிக்காவுக்கு இப்போதைக்குப் போகேலாது. முதல்லை இங்கை படிச்சு முடி. பிறகு பார்ப்பம்." என்று அடித்துச் சொல்லி விடுவான்.

சந்தியாதான் “அவள், சும்மா ஒரு படத்தை அனுப்பியிருப்பாளடா. உன்னை விட வயசு கூடவாயும் இருக்கும். வீணா அவளை நினைச்சுக் கொண்டிராதை" என்று அவனைச் சமாதானம் செய்யப் பார்ப்பாள்.

எப்படியோ இன்றைய சுந்தரேசனுக்கும், கவினுக்குமான வாக்குவாதம் சற்றுக் காரமாகவேதான் இருந்தது. சுந்தரேசன் என்னவோ அமைதியாக, நிதானமாகத்தான் கதைத்தான். கவின்தான் வீட்டின் மேற்கூரையில் போய் முட்டாத குறையாகத் துள்ளிக் குதித்தான். “நீங்கள் ஒரு அப்பாவோ?" என்று வாய்க்கு வாய் கேட்டான். சுந்தரேசன் அசையவில்லை. “முடியாது" என்று திடமாகச் சொல்லி விட்டான்.

அந்தக் கோபந்தான். தான் வீட்டை விட்டுப் போகிறேன், என்று சொல்லி, கவின் அந்த இரவில் விறைக்கும் குளிருக்குள் வெளியில் போய் விட்டான்.

அவன் இப்படி விறைக்கும் குளிருக்குள் போக, சுந்தரேசன் தன்பாட்டில் போய்ப் படுத்துக் கொண்டது சந்தியாவை இன்னும் கோபத்துக்கும், கவலைக்கும் ஆளாக்கியது. கவினின் வேண்டுதல் நியாயமற்றதுதான். என்றாலும் இந்த நிலையில் சுந்தரேசனின் பாராமுகம் அவளைக் குமுற வைத்தது. படுக்கையறைக்குள் ஓடிச் சென்று “நீங்கள் ஒரு அப்பாவே? அவன் இந்தக் குளிருக்குள்ளை விறைச்சுச் சாகப் போறான். நீங்கள் நிம்மதியாப் படுப்பிங்களோ? போய் அவனைக் கூட்டிக் கொண்டு வாங்கோ!" கத்தினாள்.

சுந்தரேசன் மிகவும் அமைதியான சிரிப்புடன் “உனக்கு வேணுமெண்டால் நீ போய்ப் பார். கூட்டிக் கொண்டு வந்து உன்ரை அன்பு மகனைப் படுக்க வை. எனக்கு நாளைக்குக் காலைமை வேலை. நான் படுக்கப் போறன்." என்று விட்டு, இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்து விட்டான்.

சந்தியாவுக்கு மனங் கொள்ளவில்லை. அழுகை அழுகையாக வந்தது. ஓடிச் சென்று ஜன்னலாலும், பல்கணியாலும் எங்காவது அவன் தெரிகிறானா என எட்டிப் பார்த்தாள். குளிர் மட்டுமே உறைந்து கிடந்தது. வேறு எந்த அசுமாத்தமும் இல்லை.

சுந்தரேசனை எட்டிப் பார்த்தாள். அவன் தூங்கி விட்டான் போலிருந்தது. மெதுவாக ஜக்கற்றை எடுத்துப் போட்டு, சப்பாத்தையும் போட்டுக் கொண்டு வெளியில் இறங்கினாள். குளிர், செவிப்பறையை அறைந்தது. சப்பாத்தையும் தாண்டி கால்விரல்களில் ஊசியாகக் குத்தியது. அவளோ தன் குளிரைப் பொருட்படுத்தாது ´கவின் இந்தக் குளிரில் எங்கு உறைந்து கிடப்பானோ´ என்ற பதைப்போடு வீட்டைச் சுற்றியுள்ள எல்லா இடங்களையும் ஓடி ஓடித் தேடினாள். இளைப்பாறுவதற்கென ஆங்காங்கு வைக்கப் பட்டிருக்கும் வாங்கில்கள், கதிரைகள்... என்று எல்லாவற்றையும் பார்த்தாள்.

12மணியாகப் போகும் அந்த நடுநிசியில் அவள் தனியாக அலைந்தாள். இடையிடையே ஒளி பாய்ச்சிச் செல்லும் மோட்டார் வாகனங்கள், குருவியோ, கோட்டானோ எழும்பும் ஓசைகள், அவ்வப்போது அவளைத் தாண்டிச் செல்லும் ஓரிரு மனிதர்கள் தவிர வேறெதையும் அவளால் காண முடியவில்லை. குளிரையும் விட தூரத்து இருள்களே அவளை அடிக்கடி அச்சத்தில் சில்லிட வைத்தன. ஒரு தரம் கவினின் நண்பன் ஒருவன் அவளைத் தாண்டிய போது மனதில் நம்பிக்கை ஒளி வீச ஓடிச் சென்று “கவினைக் கண்டாயா?" என்று கேட்டாள். அவனும் “இல்லை" என்ற போது அப்படியே ஏமாற்றத்தில் மனம் துவண்டாள்.

அவனைக் கண்டு பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை தளர, கூடவே இனி அந்தக் குளிரில் முடியாது என்று கால்களும், கைகளும் கெஞ்ச… வீடு திரும்பினாள்.

சுந்தரேசன் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். ´எப்படி இந்த மனுசனால் முடிகிறது?´ என்ற வியப்பும், கோபமும் மனதை விள்ள கதிரையில் அமர்ந்தாள். அவளால் முடியவில்லை. அழுகையும், பயமும் அவளின் அமைதியைக் குலைத்தன. ´இந்தக் குளிரில் அவன் எங்கே போவான்! சொந்தம் என்று சொல்ல யாரும் இல்லாத ஊர். நண்பர்கள் வீடுகளுக்கும் இந்த நடுநிசியில் எப்படிப் போவது? குளிரில் உறைந்து விடுவானோ?´ அவளுக்கு நடுங்கியது. மீண்டும் சப்பாத்தையும், ஜக்கற்றையும் போட்டுக் கொண்டு வெளியில் படியில் இறங்கினாள்.

ஏதோ ஒரு நப்பாசையில் வெளிக்கதவைத் திறவாமல் கெலருக்கான(நிலவறை) படிகளில் இறங்கி, கீழே போனாள். அங்கும் அவர்களுக்கான அறையின் திறப்பு அவனிடம் இல்லை. ஆனாலும் ஒரு தரம் திறந்து பார்த்தாள். இல்லை. அவன் இல்லை. ஏமாற்றம் இன்னும் ஒரு படி அவளைச் சோர வைக்க அந்த வீட்டின் பிளாற்றுகளில் வசிக்கும் எல்லோருக்கும் பொதுவான சைக்கிள்கள் வைக்கும் அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தாள். அங்கும் ஒருத்தரையும் தெரியவில்லை. ஏதோ ஒரு உந்துதலில் இன்னும் உள்ளே போய்ப் பார்த்தாள்.

ம்.. உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு. அவன் இருந்தான். கூனிக் குறுகி குளிர் தாங்க முடியாமல் கைகளைக் குறுக்காகப் போட்டு தன்னைத் தானே கட்டிப் பிடித்த படி, கவின் நடுங்கிக் கொண்டு இருந்தான். இவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகை அடக்க முடியாமல் பீறிட, சந்தியா குமுறிக் கொண்டு அவனைக் கட்டிப் பிடித்தாள்.

“ஏனடா, ஏனடா இப்பிடியெல்லாம் செய்யிறாய். இந்தக் குளிரிலை இப்பிடிக் கெலருக்கை(நிலக்கீழ் அறை) இருக்கிறது உனக்கு நல்லாயிருக்கோ? வா. மேலை வா."

“ம்.. நான் வர மாட்டன். நான் அமெரிக்காவுக்குப் போப்போறன்." வார்த்தைகள் இன்னும் திமிறலோடே வெளி வந்தன.

“முதல்லை மேலை வா. அங்கை போயிருந்து கதைப்பம்"

“இல்லை, அந்தாள் இருக்கிற இடத்துக்கு வரமாட்டன்."

“டேய், அவர் உன்ரை அப்பாவடா. அவர் உன்ரை நல்லதுக்குத்தான் சொல்லுறார்."

“அவர் அப்பாவே?"

“அதைப் பிறகு கதைப்பம். முதல்லை வா."

ஒருவாறு அவனை மேலே கூட்டிக் கொண்டு போய் படுக்க வைப்பதற்குள் சந்தியாவுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது.

அடுத்த நாள் காலையில் சுந்தரேசன் “என்ன, மோன் வந்திட்டாரே?" என்றான்.

“ம்..." என்றாள் சந்தியா. அவளுக்கு சுந்தரேசன் அப்படிப் பாராமுகமாகப் படுத்து விட்டதில் மெலிதான கோபம்.

“வேறையெங்கை போறது? வருவார் என்று எனக்குத் தெரியும். நீதான் சும்மா தேவையில்லாமல்..."

சந்தியா பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் வந்தது காணும் என்றிருந்தது அவளுக்கு.

சந்திரவதனா
3.4.2007


பிரசுரம் - ஐனவரி யுகமாயினி

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite