மறைந்த கவிஞர் தீட்சண்யனின் இறுதி ஊர்வலத்துக்காக நாட்டுப்பற்றாளர் நாவண்ணன் அவர்கள் புலிகளின் குரல் வானொலியில் தானே தனது குரலில் வழங்கிய அஞ்சலிப்பாவின் ஒரு பகுதி
கவிஞர் தீட்சண்யன் 13.5.2000 இல் காலமானார்.

உடைமைகள் எல்லாம் கருகிப் போனது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் மட்டுமல்ல. கொழும்புத் தமிழர் பலருக்கும்தான்.
அவன் பிறந்த பலன்தான் எல்லாம் அழிந்து போய் விட்டது என்று சில வாய்கள் முணுமுணுத்தாலும் அவன் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் முத்தானான். மூத்த பிள்ளை. மூத்த பேரப்பிள்ளை. மூத்த மருமகன். மூத்த பெறாமகன்... இப்படியே எல்லாவற்றிலும் அவன் மூத்தவனாய், முத்தானவனாய் மிளிர்ந்தான்.
எனக்கும்தான் அவன் மூத்தவன். அவன் இருந்த கருப்பைக்குள்தான் அவனுக்கு அடுத்து நானும் இருந்தேன். அவன் சுவைத்த அம்மாவின் மார்பகங்களைத்தான் நானும் சுவைத்தேன். அவன் கிடந்த மடிகளில்தான் நானும் தவழ்ந்தேன். அவன் சாய்ந்த தோள்களில்தான் நானும் தூங்கினேன். அவன் ஓடிய எனது வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் நானும் கால் பதித்தேன்.
அவன் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ராஜா. பிறேமராஜன் எனப் பெயரிட்டிருந்தாலும் ராஜன் என்றே அம்மா அவனை வாஞ்சையுடன் அழைப்பாள். அன்போடு அணைப்பாள். எல்லோருக்கும் அவன் ராஜன்தான். சிரிப்பும், துடிப்பும், அறிவும், குறும்பும், அழகும் அவன் கூடவே பிறந்தவை.
நேற்றுத் தோசை சுடும் போதும் வழமை போலவே அவன் பற்றிய சில நினைவுகள். இலுப்பெண்ணெய் காரன் எப்போது வருவான் என்று பார்த்திருந்து அம்மா அவனுக்காக இலுப்பெண்ணெய் வாங்குவாள். இலுப்பெண்ணெய் தோலில் ஏற்படும் பொருக்கு போன்ற தன்மையைப் போக்கி விடுமாம். இந்த விடயங்களிலெல்லாம் அம்மா கவனம். ஒவ்வொரு சின்ன விடயங்களையும் கவனிப்பது போலவே அண்ணனின் கால்களும், தோலும் வழவழப்பாக இருக்க வேண்டும், பொருக்கு வந்து விடக் கூடாது என்பதிலும் அவளுக்கு அதீத கவனம்.
இலுப்பெண்ணெய்யை சும்மா சாப்பிடவோ குடிக்கவோ முடியாதுதானே. கசக்கும். அதுவும் ஊர் இலுப்பெண்ணெய் நேரடியாகக் கையால் பிழிந்தெடுக்கப் பட்ட எண்ணெய். தடிப்பாயும், அதீத கசப்பாயும் இருக்கும். அதனால் அம்மா கையாளும் உத்தி தோசைக்கு இலுப்பெண்ணெய் ஊற்றி மொருமொருக்கச் சுடுவது. அப்படிச் சுட்டால் அண்ணனும் விரும்பிச் சாப்பிடுவான்.
அடுப்புக்குள் சுள்ளி முறித்து முறித்துப் போட்டு எரித்து, மொருமொருத்த தோசை சுடும் போது எங்கள் வீடு முழுக்க உழுந்துத் தோசையின் வாசம் கமகமக்கும்.
எண்ணெய் ஊற்றிச் சாப்பிடும் போது சுடச்சுடச் சாப்பிட்டால்தான் சமிக்கும் என்பதால் அம்மா ஒவ்வொருவராகக் கூப்பிட்டு சுட்டுச் சுட்டுப் போட்டுக் கொண்டிருப்பாள்.
முதல் உபயம் அண்ணனுக்குத்தான். முதல் இரண்டு தோசை சும்மா தோசை. அடுத்த ஒரு தோசை நல்லெண்ணெய்த் தோசை. அடுத்து இரண்டோ, மூன்றோ அவரவர் கொள்ளளவுக்கு ஏற்ப இலுப்பெண்ணெய்த் தோசை. கடைசியாக ஆசைக்கு ஒரு நெய்த்தோசை. அண்ணன் ஒரு பிடிபிடித்து விட்டு வருவான்.
இலுப்பெண்ணெய் தோசையை விட நெய்த்தோசைக்கு சுவை அதிகம். ஆனாலும் அம்மா இலுப்பெண்ணெய் தோசையைத்தான் அண்ணனை அதிகம் சாப்பிட வைப்பாள். அதுதான் உடலுக்கும், தோலுக்கும் நல்லது என்பாள்.
அண்ணனின் கால்களும், தோலும் எப்போதும் ஒரு பளபளப்புடன்தான் இருக்கும்.
அம்மா பார்த்துப் பார்த்து வளர்த்த அவனது அந்தக் கால்களில் ஒன்றைத்தான் எங்கள் நாட்டுப் போர் ஒரு நாள் பறித்து விட்டது. இன்னொரு நாள் அவனது உயிரையும் பறித்து விட்டது.
நானே ஏமாந்து போனேன். எனக்குள்ளே சிதைந்து போனேன். ஏன் ஏன்..? என்ற விடை கிடைக்காத கேள்வியோடு மாரடித்து மாரடித்துத் துடித்துப் போனேன். சமயங்களில் துவண்டு போயும் கிடந்தேன். எனக்கே அப்படியென்றால் அவனைப் பத்து மாதம் சுமந்து, தன் உதிரத்தையே பாலாக்கி அவனை மனிதனாக்கிய எனது அம்மா எப்படித் துடித்திருப்பாள்? இன்னும் அவள் மனம் என்ன பாடுபடும்?
அவள் மட்டுமா? இன்னும் எத்தனை அம்மாக்கள்!
சந்திரவதனா
13.5.2008