Thursday, February 10, 2005
விருட்சமாய்...
முன்னரெல்லாம் அடிக்கடி வலைவலம் வந்து ஒரு சில பதிவுகளைப் பற்றியாவது எழுதுவேன். இப்போதெல்லாம் அதற்கு அவசியமே இல்லாது காசி எல்லா வேலைகளையும் தமிழ்மணத்திலேயே செய்து வைத்திருக்கிறார். தலைபத்து ஆக்கங்கள், மறுமொழியப்பட்ட இன்றைய ஆக்கங்கள், மறுமொழியப்பட்ட முந்தைய நாள் ஆக்கங்கள் , இன்று புதிதாய் எழுதப்பட்டவை... என்று எல்லாவற்றையும் சுலபமாகப் பார்க்க முடிகிறது. (ஆனாலும், எனக்கு யாராவது மறுமொழிந்தாலும் அது அங்கே காட்டப்படுவதில்லை. அதன் காரணம் தெரியவில்லை.) சரி விடயத்துக்கு வருகிறேன்.
இந்த வாரம் நான் வலைப்பூ நட்சத்திரமாக இருந்து கொண்டு ஒரு வலைப்பதிவைப் பற்றியாவது எழுதாவிட்டால் நன்றாக இருக்காதே என நினைத்துக் கொண்டு, தினமும் காலை எழுந்ததும் தேநீரையும் தயாரித்துக் கொண்டு வந்து கணினிக்கு முன்னால் இருந்து கொண்டு வலைப்பதிவுகளை வலம் வருகிறேன். ம்கும்... விருட்சமாய் விரிந்திருக்கிறது வலைப்பூ உலகம்.
எத்தனை தரம் சுற்றி விட்டேன். அதில் ஒரு கடி இதில் ஒரு கடி என்று கடித்து, ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவி, எங்கிருந்து தாவினேன் என்பதை மறந்து, அப்படியே சுற்றித் திரிந்து விட்டு நேரத்தைப் பார்த்தால் அது எங்கே எனக்காக நிற்கப் போகிறது. வழக்கம் போல் அது ஓடி விடுகிறது. சுவையான பல விடயங்களை மனசுக்குள் அசை போட்டுக் கொண்டு போனால் மீண்டும் வந்து கணனி முன் அமர்ந்து..... வழக்கம் போல் அதில் ஒரு கடி இதில் ஒரு கடி என்று கடித்து, ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவி...
பார்ப்போமே..! எனது இந்த வாரம் முடியுமுன்னர் ஒன்றிரண்டு பதிவைப் பற்றியாவது எழுதுகிறேனா என்று..
சிரிக்க முடிஞ்சால் சிரியுங்கள்.
பாலாவை வலைஉலகத்திலிருந்து வெளியில் அனுப்ப பலர் காத்திருக்கிறார்களாம்.
இதையும் கண்டிப்பாகப் பாருங்கள்
செட்டை கழற்றிய நாங்கள்
இது 2002 இல் எழுதப்பட்டு 17.2.2002 இல் IBC தமிழில் ஒலிபரப்பானது
"செட்டை கழற்றிய நாங்கள்" எனது பார்வையில்
95 இல் பதிவாக்கப் பட்ட ஒரு கவிதைத் தொகுதி ஆறு வருடங்கள் கடந்து ஏழாவது வருடம் என் கரம் வந்து குந்தியதில் எனக்கு நிறையவே மகிழ்ச்சி.
செட்டை கழற்றிய நாங்கள் - கவிதைத் தொகுப்பின் தலைப்பே ஒரு கவிதை போல - ஆனால் சோகத்தைத் தனக்குள்ளே நிரப்பி வைத்திருப்பது போன்றதொரு பிரமையை எனக்குள் தோற்றுவித்தது.
சிறிய தொகுப்பு ஆனாலும் தனக்குள்ளே புலம்பெயர் அவலங்களையும், புலம் பெயர மறுத்த நினைவுகளையும் நிறைத்து வைத்திருக்கிறது தொகுப்பு.
இக்கவிதைத் தொகுப்பு இருப்பை இடம் பெயர்த்து சுவிசுக்கு மாற்றி விட்டு, அங்கு விருப்போடு அமர முடியாது தவிக்கும் பாலமோகன் எனப்படும் ரவியின் கவிதைகளால் தொகுக்கப் பட்டுள்ளது.
1995 இல் பதிக்கப் பட்ட இத் தொகுப்புக்கான முகவுரையை அ.மார்க்ஸ் அவர்கள் எழுதியுள்ளார்.
தற்போதைய புலம்பெயர் தமிழர்களின் நிலையை விட ஆரம்பகாலப் புலம் பெயர் தமிழர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாகவே இருந்தது. அதை நான் முன்பும் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தேன்.
அந்தப் பரிதாபத்துக்குரிய புலம் பெயர் தமிழர்களில் இந்தக் கவிதைத்தொகுப்பின் கவிதைகளைப் புனைந்த பாலமோகன் ஆகிய ரவி அவர்களும் ஒருவர் என்றே எனக்குத் தோன்றுகிறது. புலம் பெயர்வு அவருக்குள் ஒரு புயலையே ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
சொந்த மண்ணின் நினைவுகள் அவரை மிகவும் அலைக்கழித்திருப்பது அவர் வடித்த கவிதைகளின் வீச்சில் தெரிகிறது. மிகவும் தரமான கவிதைகள். இன்னதென்று பிரித்துச் சொல்ல முடியாத படியான ஒரு ஆழ்ந்த தேர்ச்சியும் நிறைவான வளமும் அவர் கவிதை நடையில் தெரிகிறது.
அவர் கவிதைகளை வாசிக்கும் போது, நீண்ட நாட்களாகக் கவிதை எழுதுவதையே மறந்து உறங்கியிருந்த எனது கற்பனைப் பறவை மெல்ல இறகு விரிக்க எத்தனிக்கிறது. உறைந்து போயிருந்த என் பேனாமை மீண்டும் ஊற்றெடுக்கத் தொடங்குவது போல ஒரு ஆனந்தம் எனக்குள்.
ஏதோ ஒரு சக்தி அவர் கவிதைகளுக்குள் இருப்பதை என்னால் உணர முடிகிறது. அதை எழுத்தில் வடிக்கத்தான் என்னால் முடியவில்லை.
எழுத்தார்வமும் வாசிப்புத்தாகமும் கொண்டவர்கள் கண்டிப்பாக இத் தொகுப்பை வாசித்துப் பார்க்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
ரவி தன்னுரையில் இப்படிச் சொல்கிறார்.-
இது எனது முதல் கவிதைத் தொகுதி. சுமார் ஐந்து ஆண்டு கால இடைவெளிக்குள்ளான கவிதைகள் இவை. கடந்தகால கசப்பான சமூக அனுபவங்கள் - இதன் தாக்கங்கள், வேரறுந்த இன்றைய அகதி வாழ்வு என்பன உணர்வு நிலையில் - இந்நிலைமையிலுள்ள எல்லோரையும் போலவே - என்னைப் பாதிக்கிறது. இவற்றைக் கவிதையில் பதிவு செய்வது திருப்தி தருகிறது.
என்று தொடங்கி .....தொடர்ந்து
கவிஞனின் உணர்வு நிலை உயர்ந்தது. அதை அர்த்தப் படுத்துவதற்கு வாழ்வியல் விதிமுறைகள் மீதான புரிதல்கள், தேவையாயின் அதன் மீதான தாக்குதல்கள் கூடத் தேவை. ஆதிக்க சக்திகள் மறறும் அதன் நிறுவனங்களால் (அரசு, மதம், குடும்பம், பாடசாலை.....) கட்டமைக்கப் பட்ட கருத்தியல்கள் - புனைவுகள் மற்றும் வாழ்வியல் விதிமுறைகள் எல்லாவற்றையும் இயல்பானது என்று ஏற்றுக் கொள்ளும் ஒருவனின் உணர்வு நிலை கவலையையும் விரக்தியையும் தாண்டிவிடப் போவதில்லை. எனது கவிதைகளும் இவற்றை முழுமையாய்த் தாண்டியதாயில்லை.
என்று முடித்திருக்கிறார்.
இவரின் கவிதைகளில்
சிறுவயது நினைவுகள், கனவுகள், இளமைக்கால பசுமையோடு பின்னிப் பிணைந்திருந்த தாயக ஏக்கங்கள், புலம்பெயர் மண்ணில் அந்நாட்டு மக்களது அந்நியன் என்றதான பார்வைகளை எதிர் கொள்ள முடியாத தவிப்பு,
நிறம் ஒரு குறையாக அவர்கள் பார்வைக்குள் தான் குறுகிப் போனதிலான இயலாமையுடனான கோபம்....... என்று பலவிதமான ஆற்றாமைகள் புதைந்து கிடக்கின்றன. அவைகளை எழுதிய விதம் மிகவும் அழகாக, கவிதைக்கே உரிய கவர்ச்சியுடன் மீண்டும் மீண்டும் அவைகளை வாசிக்கத் தூண்டுகின்றன.
புலம்பெயர்ந்தவர்கள் ஊரில் உள்ளவர்களுக்குப் பணமனுப்ப வேண்டிய ஒரு கட்டாய அவஸ்தையில் தம்மைத் தொலைப்பதைக் கூட அவர் கவிதையாக்கத் தவறவில்லை. அது பற்றியதான யாரொடு நோக..... என்ற கவிதையிலிருந்து ஒரு சில வரிகள் -
நித்திரைப் பாயில் வைத்தே அமத்தும்
இந்த கொழும்பு ரெலிபோன் க்கு
விவஸ்தையே கிடையாது.
தனது காலில் தட்டுப் படும் எல்லாவற்றையும்
உதைத்து நொருக்கி
இருளில்
என்னை வந்து உலுக்கி எழுப்புகிறது.
மொட்டவிழும் போலிருக்கும்
என் சின்னச் சின்ன ஆசைகளைக் கூட
நுனிவிரலால் கிள்ளி எறிந்த படி
கைவீசி வருகிறது - ஒரு குழந்தைபோல்!
என்னால் கோபிக்கக் கூட முடிவதில்லை.
கடைவாயால் ஒழுகும் சிரிப்பும்
தேவைகளும்
எனது உழைப்பை அதிகம் கேட்டு
சுற்றி நின்று தொந்தரவு செய்யும்...........
சிலவேளைகளில் அது
நிதானமாய் வருவது போல
குரல் கொடுத்த படி வரும்.
எனக்கும் எனது அத்தான்மாருக்குமிடையில்
கால் மீது கால் போட்டு
அனுபவஸ்தன் போல் அமர்ந்து கொள்ளும்.
அத்தான்மாரின் புதியவிலை கேட்டோ
அல்லது பாக்கி விலை கேட்டோ
பேச்சைத் தொடங்கும்.
போதாததிற்கு தன்னுடன் யதார்த்தத்தை
அழைத்து வருகிறது,
தலையாட்டுவதற்காக.
எனது நியாயங்களை
இருவருமாய்த் தின்றுதீர்ப்பது
அத்தான்மாருக்கு மகிழ்ச்சியளிக்கிறது -
எனது சகோதரிகளுக்குங் கூடத்தான்!
காலைப் பொழுது என்னை எடுத்துப்
பிணைத்துக் கொள்வதில் அவசரப்படுத்தும்
நானோ இவர்களுக்கு வழி சொல்லியாக வேண்டும்.
இந்த இழுபறியில்
எனது இடைவெளி நேரங்களும்
விழுந்து நொருங்கும்.
30 கவிதைகளைத் தன்னகத்தே கொண்ட இக்கவிதைத் தொகுதியில்
ஒவ்வொரு கவிதைக்குள்ளும் உயிரோட்டமான ஒவ்வொரு விதமான உணர்வுகளும் நெகிழ்வுகளும் நிகழ்வுகளும் இருக்கின்றன.
மெழுகுதிரியில் அமர்ந்திருக்கும் தீபத்தைக் கூட அவர் விட்டு வைக்கவில்லை. அந்தத் தீபத்தின் மீதான அவரது பிரசவிப்புகள் என்ற கவிதை சுவையானது. சுகமானது. ஆனால் ஆழ்ந்து கருத்தை உணர்ந்து வாசிக்கும் போது இருப்பை இழந்த அவரது சோகம் தெரிகிறது.
(பக்கம் - 39-40)
பிரசுரமாகும் கடிதம் என்ற கவிதை - 83 யூலைக் கலவரத்தில் தமிழர் கப்பலேற்றப் பட்ட போது - ஒரு சிங்களப் பெண்ணுடனான சினேகமான உறவும் கப்பலேற்றப் பட்டதைச் சொல்கிறது.
இப்படியே இவரது ஒவ்வொரு கவிதையும்.... அர்த்தங்களுடன் கவிதைநயம் குன்றாமல் அருமையாகப் புனையப் பட்டுள்ளது.
இருந்தாலும், இத்தொகுப்பைப் பற்றியதான எனது அபிப்பிராயத்தின் ஒரு துளியையே என்னால் இங்கு தரமுடிந்தது. அது ஒரு குறையாக அமையாது என்ற நம்பிக்கையுடன் தற்போதைக்கு முடிக்கிறேன்.
சந்திரவதனா
யேர்மனி
காதுக்க முணுமுணுக்காதே
அந்த வீட்டுக்கு விருந்தினர் வந்திருந்தனர். உரையாடிக் கொண்டிருந்த தந்தையின் காதுக்குள் மகன் எதையோ கிசுகிசுத்தான்.
தந்தை:
காதுக்குக் கிட்ட வந்து முணுமுணுக்காதேடா
கெட்ட பழக்கம.; என்ன விசயம் எண்டு உரக்கச் சொல்லு.
மகன்:
(சத்தமாக) கோப்பி குடியுங்கோ எண்டு அவரைக் கேட்க வேண்டாமாம். வீட்டிலை பால் இல்லையாம்..... அம்மா சொல்லச் சொன்னவ.- மதன் ஜோக்ஸ் -
மனிதநேயம்
சில வாரங்களுக்கு முன்பு, சுனாமி அனர்த்தங்களின் பின்பு, என் வீட்டு அழைப்புமணி ஒலித்தது. போய்ப் பார்த்த போது நான்கு யேர்மனியச் சிறுவர்கள் உண்டியலுடன் நின்றார்கள். "சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப் பட்ட சிறீலங்கா மக்களுக்கு காசு சேர்க்கிறோம்." என்றார்கள்.
தமது வயதிற்கேயுரிய விளையாட்டுக்கள், கேளிக்கைகளை விடுத்து அவர்கள் மனித நேயத்துடன் பணம் சேர்த்ததைப் பார்த்த போது சந்தோசமாக இருந்தது.
அவர்கள் மட்டுமல்ல. சுனாமி அனர்த்தங்களின் பின்னர் அனேகமான யேர்மனிய மக்கள் நடந்து கொண்ட விதம் அவர்களது இரக்க சுபாவத்தையும், மனிதநேயத்தையும் எடுத்துக் காட்டியது.
எங்கு சென்றாலும் - வீதிகளில், பேரூந்திகளினுள், வேலையிடத்தில்... என்று அவர்களது அனுதாபமான விசாரிப்புகளும், பணம் சேர்த்து அனுப்பும் செயற்பாடுகளும் மனதைத் தொட்டன. வீடு தேடி வந்து கூட துக்கம் விசாரித்துச் சென்றார்கள்.
இரண்டு வாரங்களுக்கு முன்னான எமது நகரப் பத்திரிகையில் அந்தச் சிறுவர்கள் இரண்டாயிரத்துச் சொச்ச யூரோக்களைச் சேர்த்து ஒரு தேவாலயத்தினூடாக சிறிலங்காவுக்கு அனுப்பியுள்ளார்கள் என்ற செய்தி இருந்தது.
தொடர்ந்தும் சுமத்திரா இந்தியா போன்ற இடங்களுக்கும் சேர்க்கப் போகிறார்களாம்.
தமது வயதிற்கேயுரிய விளையாட்டுக்கள், கேளிக்கைகளை விடுத்து அவர்கள் மனித நேயத்துடன் பணம் சேர்த்ததைப் பார்த்த போது சந்தோசமாக இருந்தது.
அவர்கள் மட்டுமல்ல. சுனாமி அனர்த்தங்களின் பின்னர் அனேகமான யேர்மனிய மக்கள் நடந்து கொண்ட விதம் அவர்களது இரக்க சுபாவத்தையும், மனிதநேயத்தையும் எடுத்துக் காட்டியது.
எங்கு சென்றாலும் - வீதிகளில், பேரூந்திகளினுள், வேலையிடத்தில்... என்று அவர்களது அனுதாபமான விசாரிப்புகளும், பணம் சேர்த்து அனுப்பும் செயற்பாடுகளும் மனதைத் தொட்டன. வீடு தேடி வந்து கூட துக்கம் விசாரித்துச் சென்றார்கள்.
இரண்டு வாரங்களுக்கு முன்னான எமது நகரப் பத்திரிகையில் அந்தச் சிறுவர்கள் இரண்டாயிரத்துச் சொச்ச யூரோக்களைச் சேர்த்து ஒரு தேவாலயத்தினூடாக சிறிலங்காவுக்கு அனுப்பியுள்ளார்கள் என்ற செய்தி இருந்தது.
தொடர்ந்தும் சுமத்திரா இந்தியா போன்ற இடங்களுக்கும் சேர்க்கப் போகிறார்களாம்.
போதுமானவை
இது எனது கவிதை அல்ல.
1998 இல் ஆனந்தவிகடனில் பிரசுரமான இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருந்ததால் இதை பத்திரப் படுத்தி வைத்திருந்தேன். படித்துப் பாருங்கள் சிலசமயம் உங்களுக்கும் பிடிக்கலாம்.
அவர் இவர் என்று ஆட்களைப் பற்றி
உதட்டைத் திறந்து உட்கார வராதீர்கள் என்னிடம்......!
பூக்களைப் பற்றிப் பேசத் தெரிந்தால் வாருங்கள்!
நமது நேரமும் மணக்கும் - அன்றியும்
பொய்கள் சொன்னதாய் பூக்களைப் பற்றிக்
குறை கூற முடியாது உங்களால்!
அவர் இவர் என்று நபர்களைப் பற்றி
நாக்கை அசைக்க வாராதீர்கள் என்னிடம்......!
நல்லபடி தொடங்கி - மூன்றாவது வாக்கியத்தில்
முட்களை மூடி வைப்பீர்கள்
வானவில் பற்றி உங்கள் வசம் வார்த்தைகள் உண்டா?
அப்படியானால் அள்ளி வாருங்கள்!
நம் உரையாடலுக்கும் வண்ணங்கள் கிடைக்கும் - அன்றியும்
கட்சி மாறியதாய்க் கட்டாயம் உங்களால்
அதன் மேல் களங்கம் கற்பிக்க முடியாது!
அவர் இவர் என்று எவர் பற்றியும்
பேச வராதீர்கள் என்னிடம்......!
ஆரோகணத்தில் அவரை ஆலாபனை செய்து
அவரோகணச் சேற்றில்
மூச்சுத் திணறப் புதைத்து விடுவீர்கள்.
அருவியை நதியை கடலை அறிவீர்களா?
உரையாட இவை பற்றிக் கருத்திருந்தால் வாருங்கள்!
நம் அனுபவ நரம்புகளும் குளிரும் - அன்றியும் அவை
இளிச்சவாயர்கள் கால்களை இடறி விட்டு ஏற்றம் பெற்றதாய்
புகார் செய்ய முடியாது உங்களால்!
ஆகவே........
அவர் இவர் என்று ஆசாமிகள் பற்றியல்லாது
பேச முடியாதெனில்
வராதீர்கள் என்னிடம்........
- தமிழன்பன் -
நன்றி - ஆனந்தவிகடன்
பூவரசு போட்டி முடிவுகள்
கடந்த வருடம் யேர்மனியிலிருந்து வெளியாகும் பூவரசு இனியதமிழ்ஏடு நடாத்தும் போட்டி பற்றி அறிவித்திருந்தேன். புதியவர்கள் பலரும் உலகளாவிய ரீதியில் இப்போட்டியில் கலந்து கொண்டதை அறிய முடிந்தது. சந்தோசமான விடயம்தான்.
6.2.2005 அன்று யேர்மனியின் பிறேமன் நகரில் பூவரசின் 15வது ஆண்டு மலர் வெளியிட்டு வைக்கப் பட்டுள்ளது.
போட்டி முடிவுகள்
6.2.2005 அன்று யேர்மனியின் பிறேமன் நகரில் பூவரசின் 15வது ஆண்டு மலர் வெளியிட்டு வைக்கப் பட்டுள்ளது.
போட்டி முடிவுகள்


Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
▼
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ▼ February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )