
ஆண்களில் சிலர் ஒரு தரம் அவளைத் திரும்பிப் பார்த்து விட்டு, எட்டாத கனி என்ற பாவனையுடன் அமைதியானார்கள். பெண்களில் கூடச் சிலர் திரும்பிப் பார்த்தார்கள். ஆடையின்றிய ஒரு பெண்ணின் முன் 100 வீதமான ஆண்களின் கண்களும் அகல விரிந்து கொண்டன என்று எங்கோ, எப்போதோ வாசித்த ஞாபகம். அதே புத்தகத்தில் இருந்த இன்னொரு செய்திதான் என்னுள் அதிகப்படி வியப்பை ஏற்படுத்தியது. ஆடையின்றிய பெண்ணின் முன் 80வீதமான பெண்களின் கண்களும் அகல விரிந்து கொண்டனவாம். குறிப்பாக பெண்களின் மார்பகங்கள் பெண்களையே வியக்க வைக்கின்றனவாம். இந்த செய்தி எந்தளவுக்கு உண்மையானது என்பதில் எனக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஆனால் இப்போது குட்டைப் பாவாடையின் கீழ் பளிச்சென்று தெரிந்த இவளது தொடைகள்தான் அந்த ஆண்களைத் திரும்ப வைத்தன என்றால், பெண்களை எது திரும்ப வைத்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
நானே ஒரு மனிதஜென்மமாக இருக்கும் போது, சில சமயங்களில் நான் தள்ளி நின்று மற்றைய மனிதர்களைப் பார்த்து எனக்குள்ளே நகைத்துக் கொள்வேன். இன்றும் அப்படியொரு நகைப்பு எனக்குள். இந்த மனிதர்கள்தான் எவ்வளவு பலவீனமானவர்கள். நான் மட்டும் இதற்கொன்றும் விதிவிலக்கல்ல. ஆனாலும் இன்று கொஞ்சம் அதிகமான நகைப்பும், மனிதர்கள் பற்றிய ஆய்வும் எனக்குள்.
அந்தக் குட்டைப் பாவாடைப் பெண் பன்னிரண்டு வயதுகள்வரை எனது கடைசி மகனுடன்தான் படித்துக் கொண்டிருந்தாள். இப்போதுதான் எனக்குள் எப்படித் தொடர்வது, என்ற குழப்பமான சிந்தனை குறுக்கிடுகிறது.
அப்போது பல தடவைகள் எங்கள் வீட்டுக்கும் வந்திருக்கிறான். சில தடவைகள் எனது சமையலைச் சுவைத்தும் இருக்கிறான். கடைசியாக வந்த போது நான் ஸ்பக்கற்றியும் (spaghetti), தக்காளி சோஸ் ம் செய்து கொடுக்க, சீஸ் துருவலை அதற்கு மேலே தூவி தனக்கு மிகவும் பிடித்த உணவு என்று சொல்லிச் சந்தோசமாகச் சாப்பிட்டு விட்டுச் சென்றான்.
அதற்குப் பின் இருவருடங்களாக அவ்வப்போது வீதிகளில் மட்டுந்தான் நான் அவனைச் சந்தித்தேன். படிப்பில் சற்று பின் தங்கி வகுப்பேற்றப் படாமல் எனது மகனை விட ஒரு வகுப்பு கீழே நின்று விட்டான். பின்னொரு சமயத்தில் மகன் சொன்ன அந்தச் செய்தி என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. வெறுமே புத்தகங்களிலும், பத்திரிகைச் செய்திகளினூடுந்தான் பிறப்பிலே ஆணான ஒருவன் சத்திர சிகிச்சைகள் மூலம் பெண்ணாவது பற்றி அறிந்து வைத்திருந்தேன். இவனுக்கும் ஆணாக இருப்பதில் இஸ்டமில்லையாம். பெண்ணாகப் போகிறானாம்.
இதெல்லாம் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்ற சிந்தனை என்னுள் ஒருவித நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்தியிருந்தது. ஆனால் ஆகும் என்பதற்கு அறிகுறியாக, முதற்படியாக, முதல் முதலாக அவனை மேக்அப்புடன் பெண்ணுடையுடன் கண்டேன். அப்போதும் கூட முழுவதுமான நம்பிக்கை எனக்கு வரவில்லை.
இப்போது அவன் பெண். கண்டவர்களைச் சுண்டி இழுக்கும் படியாகக் கவர்ச்சியாக உடையணிந்து, கண்ணுக்கு மை தீட்டி, உதட்டுக்கு சாயம் பூசி... இந்தக் குளிருக்குள்ளும் கால்கள் பளபளக்கும் படியான காலுறை அணிந்து... இனி இவன் என்றோ, அவன் என்றோ நான் விழிக்க முடியாத படி இவளாகி விட்டவன்.
அவனுக்கு 18வயதான போது சத்திரசிகிச்சை செய்து முழுவதும் பெண்ணாக மாறிக் கொண்டான். அவன் உணர்வுகள் அப்படி இருப்பதால் அவன் மாறியே ஆக வேண்டும் என்று அவனது மருத்துவரே சிபாரிசு செய்ய, மருத்துவத்திற்கான சலுகைகளை முழுவதுமாகப் பெற்றுக் கொண்டு பெண்ணானான்.
இப்போது 24வயதுகள் ஆகி விட்ட இவளது முன் சரித்திரம் பலருக்கும் தெரியாது. இவள் வேலை செய்யும் சுப்பர் மார்க்கட்டில் இவளைத் தாண்டிச் செல்லும் ஆண்களில் பலர் இவளது புன்சிரிப்பில் தடுமாறுவதும் அடிக்கடி நடப்பதுண்டு.
இருந்தும் ஸ்ரெபான் ஆக இருந்து தற்போது ஸ்ரெபானி ஆகி விட்ட இவளது குடும்ப வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பது, எப்போதும் போல என்னிடம் கேள்விக் குறியே!
சந்திரவதனா
25.10.2006