
வழமையாக குழுந்தைகளின் பார்வையோடும், சிரிப்போடும் செல்லம் கொஞ்சும் பேப்பரின் முன் பக்கம் இம்முறை புளியங்குளம் பேரூந்தோடு வந்தது. மழலைகளைப் பார்க்க யாருக்கோ கசக்குதாம். கடிதம் போட்டிருக்கிறார்கள். ஆசிரியரின் குசும்பு எனக்கு முதலில் விளங்கவில்லை. பேப்பரைப் பார்த்ததும் ஊருக்குப் போற ஆசையில் ஏறி இருந்திட்டன். அதுவும் ஓசியாம்.
ஓசிதானே என்று ஏனோதானோவாக இல்லாமல் பல்சுவை அம்சங்களோடு உள்ளே அமர்க்களமாகத்தான் இருக்கிறது.
"அடியேய் விட்டன்ரா ஒரு அறை" என்றதும்தான் கொஞ்சம் பயந்திட்டன். ஏன்..? இந்த ஆம்பிளையளுக்கு அறையிறதை விட்டால் வேறையொன்றும் தெரியாதோ என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் நல்ல விடயத்தைத்தான் போட்டிருக்கு. வீட்டு வன்முறைகளால் பாதிக்கப் படும் பெண்களோ, ஆண்களோ எவராயினும் தம்மைக் காத்துக் கொள்ள, நாட வேண்டிய இடம் வலம் பற்றி விரிவாக சுந்தரி எழுதியுள்ளார்.
அத்தோடு நாட்டு நடப்பு, வீட்டு நடப்பு, உலகநடப்பு.. என்று பல விடயங்கள் ஆங்கிலத்திலும்;, தமிழிலும் என்று.. வித்தியாசமாகத்தான் இருக்கிறது. என்றாலும் எல்லாளன் தனது மூக்கை கூடுதலாக நீட்டுகிறார் போல் இருக்கிறது. நாகரீகமும்.. அதனோடான உடை மாற்றங்களும் எமது நாட்டில் எமது முன்னோர்கள் மத்தியில் நடை பெறவில்லையா? எங்களது பாட்டாக்கள் போல எங்களது அப்பாக்கள் உடுத்தவில்லைத்தானே. தலை இழுப்பதும் அப்படித்தானே. அப்படியிருக்க இப்போதைய இளசுகளுடன் மல்லுக் கட்ட வேண்டுமா..?
இந்த ரெலிபோன் கார்ட் விடயத்தை நானும் பலபேருக்குச் சொல்லி விட்டேன். ஆனாலும் அவர்கள் அதை வாங்கி விட்டு "நேற்றுக் கதைச்சுப் போட்டு வைக்கக்கை 200 நிமிசம் இருந்தது. இண்டைக்கு 120 எண்டு சொல்லுது." என்று முணுமுணுப்பார்களே தவிர கார்ட்டை வாங்குவதை மட்டும் நிறுத்த மாட்டார்கள். ஒரு வேளை ஓரு பேப்பரை வாசித்தாலாவது கார்ட்டுக்குள் இருக்கும் உண்மைகளை அறிந்து விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
அன்பு கிடைக்குமா அன்பு? சிறுகதை கணினியின் நிலாச்சாரலில் இருந்ததுதான். வாசிக்க வேண்டும் என்று பலதடவைகள் நினைத்தேன். ஆனாலும் கணினிக்கு முன் இருக்கும் நேரங்களில் அதை வாசிக்க நேரம் போதாது போய் விட்டது. அதை கணினியின் முன் இருக்கும் போதான கதிர்வீச்சுக்களின் தொல்லைகள் எதுவும் இல்லாது, வசதியான ஒரு இடத்தில் ஒய்யாரமாக இருந்து வாசிக்க முடிந்த போது சந்தோசமாக இருந்தது. கதையை வாசித்த பின் இப்படியான குழுந்தைகளை எடுத்து எங்கள் அன்பைக் கொடுத்தால் என்ன என்ற ஒரு ஆசையும் எழுந்தது.
இன்னும் சினிமா.. அறுவை.. என்று நிறைய விடயங்கள். இருந்தாலும் 32 பக்கங்களையும் ஒரே மூச்சில் வாசித்து விட்டேன்.
"இதேன் முன் பக்கத்திலை விளம்பரம்?" என்று எனது மகன் குறை பிடித்தான்.
"அது ஓசியடா. விளம்பரம் இல்லையெண்டால் பேப்பரும் இல்லை." என்றேன்.
"அதுக்காண்டி முன் பக்கத்திலையோ..? போதாததுக்கு ஒரு பேப்பர் என்ற தலையங்கத்துக்குப் பக்கத்திலை பேப்பர் எறியிற வாளியையும் வைக்கோணுமே..? எங்கையாவது ஒரு மூலையிலை வைக்கலாம்தானே!" என்றான்.
இப்படித்தான் நாங்கள். தானமாகக் கிடைக்கிற மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்கிற பழக்கம் எங்களை விட்டுப் போறது பெரிய கஷ்டமான விடயந்தான்.
ஓசி என்ற பெயரில் சமூகத்தைக் கெடுக்கும் விடயங்கள் ஏதாவது பரப்புரை செய்யப் படும் பட்சத்தில் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டியது அவசியந்தான். ஒரு பேப்பர் அப்படியல்ல. சுவையோடு சுவாரஸ்யமும் கலந்து நல்ல பேப்பராகத்தான் வருகிறது. பாராட்டத்தான் வேண்டும்.
பேரூந்தில் ஏறிய எங்களை ஏமாற்றாமல் கிளிநொச்சி மழலைகள் பூங்காவரை ஒரு பேப்பர் எங்களை அழைத்துச் சென்றிருக்கிறது.
சந்திரவதனா
யேர்மனி
13.10.2004