மனசு பதைக்க.. கதிரையைத் தள்ளிக் கொண்டு எழுந்து ஓடினேன். அது வேறு யாரினதுமல்ல. மேல்வீட்டுப் பெண்குழந்தை டிலாராவினது அலறல். வீழ்ந்து விட்டாளா..? படியில் உருண்டிருப்பாளா..? கணத்துக்குள் மனசு பற்பல கேள்விகளை அடுக்கியது. அவளின் வீரிடல் ஓயவில்லை. படபடப்போடு கதவைத் திறந்து வெளியில் எட்டிப் பார்த்தேன்.

டிலாராவேதான். என் வீட்டு வாயிலிலிருந்து இறங்கும் மாடிப்படிகளின் கடைசிப் படியில் வீழ்ந்திருந்தாள். வாயைக் கூட்டி விரித்து அடித்தொண்டையால் கீச்சிட்டுக் கொண்டிருந்தவள் என்னைக் கண்டதும் சடாரென வீரிடலை நிறுத்தி என்னைப் பார்த்து ஒரு மென்சிரிப்பை உதிர்த்து.. ஒரு கண்ணையும் சிமிட்டினாள்.
என்னடா இது..? வீழ்ந்து கிடப்பவளின் சமிக்ஞை இப்படியா இருக்கும். அதிசயித்தவாறு அவளருகில் விரைந்து.. அமர்ந்து.. வீழ்ந்து விட்டாயா..? எங்கேயாவது அடி பட்டதா..? என்ற படி அவளை என்னோடு அணைத்துக் கொண்டேன்.
இல்லை. என்றாள். மெதுவாக, குசுகுசுப்பாக..
அப்படியானால்...?
மீண்டும் ஒரு கண் சிமிட்டலோடு அவள் படிகளின் பக்கச் சட்டங்களைப் பிடித்து எட்டிக் குனிந்து மேலும் கீழுமாகத் தொடரும் படிவரிசைகளின் நடுவே கீழே நிலத்தில் வீழ்ந்திருக்கும் ஒற்றைச் சப்பாத்தைக் காட்டினாள்.
என்ன..? புரியாமல் வினாவினேன்.
அண்ணா என்ரை சப்பாத்தை எறிஞ்சு போட்டான்.
ஓ... அதுவா..! சப்பாத்து வீழ்ந்த சத்தமா அது..! அதுக்கேன் நீ அழுகிறாய்..?
மீண்டும் ஒரு முறை செயற்கையாய் வீரிட்ட அவள்.. எறிஞ்சது அவன்தானே..! அவன்தான் அதை கீழை இறங்கிப் போய் எடுத்துக் கொண்டு வந்து தரோணும். நான் அழுதால்தான் அம்மா அவனை கீழே அனுப்பி எடுக்க வைப்பா.
எனக்குச் சிரிப்பாய் வந்தது. - சுட்டிப்பெண் - என்று சொல்லி அவள் கன்னத்தைத் தட்டி விட்டு நான் வீட்டுக்குள் வந்து கதவைச் சாத்திய கையோடு அவள் மீண்டும் வீரிடத் தொடங்கினாள். அவளது அம்மா தனது பெரிய உடம்போடு இழைத்து இழைத்து இறங்கி வந்து அவள் பிரச்சனை பற்றி ஆராயும் வரை அவள் ஓய மாட்டாள் என்பது எனக்குத் தெரியும்.
(இந்தப் பெண் வேறு யாருமல்ல. அழகு என்று காரணம் சொல்லி என்னைப் பொட்டு வைக்கச் சொன்ன அதே சுட்டிதான் இவள். பழைய வீட்டை விட்டு வந்து விட்டாலும்.. விடாது என்னோடு வந்து விட்ட நினைவுகளில் இதுவும் ஒன்று.)
Photo - Google.de