அவளுக்கு 35வயது. ஜேர்மனியப் பெண். ஏறக்குறைய மூன்று வருடங்களின் முன் ஒரு நாள். வேலைக்கு வந்தவள் சாதாரணமாக இருக்கவில்லை. பைத்தியம் பிடித்தவள் போல் நடந்து கொண்டாள். ஏதோ ஒரு துயரம் அவளை வாட்டுவதை அறிந்து கொண்டு அவளை நெருங்கினேன். மிகுந்த சோகமாகத் தெரிந்த அவளின் மனதைத் திறப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. நீண்ட பிரயத்தனங்களின் பின் சோகம் அணை உடைத்துக் கண்ணீராய்ப் பாய அவள் சொல்லத் தொடங்கினாள்.நேற்று நான் வேலை முடிந்து வீட்டுக்குப் போன போது வீட்டு வாசலில் பொலிஸ் கார்கள் நின்றன. என்னவோ ஏதோ என்று மனசு படபடக்க அவசரமாய் உள்ளே நுழைந்தேன்.
உள்ளே எனது கணவர் ஒரு குற்றவாளி போல நிற்க அவரிடம் இருந்து சில வாக்குறுதிகளைப் பொலிசார் பதிவு செய்து கொண்டிருந்தார்கள். இன்னும் இரண்டு பெண்களும் அங்கு நின்றார்கள். எனது ஏழு வயதுப் பிள்ளை மிகைலாவும், ஐந்து வயதுப் பிள்ளை தன்யாவும் அழுத விழிகளுடன் இருந்தார்கள். பயம் அவர்கள் முகங்களில் அப்பியிருந்தது. எனக்கு அங்கு என்ன நடக்கிறதென்றே விளங்கவில்லை. எனது மூத்த மகள் ஓடி வந்து "மம்மா மம்மா" என்ற படி என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். அங்கு நின்ற இரு பெண்களும் என்னை மிகவும் அநுதாபமாகப் பார்த்தார்கள்.
நான் என் மகளை அணைத்த படி மெதுமெதுவாக அவர்களை நெருங்கினேன். "என்ன இங்கே நடக்கிறது?" என்று கேட்டேன்.
அவர்கள் என் கைகளைப் பிடித்து மெதுவாக இருக்க வைத்தார்கள். பின்னர் "நீ ஒன்றுக்கும் பயப்படாதை. எல்லாம் நல்ல படியா நடக்கும். உனது கணவன் உனது பிள்ளைகளுடன் தவறான முறையில் நடந்துள்ளதாகச் சந்தேகிக்கிறோம். அதனால் இன்று உன் பிள்ளைகளை எம்முடன் அழைத்துச் செல்கிறோம். விசாரணைகள் முடிந்ததும் பிள்ளைகளைத் திருப்பித் தந்து விடுவோம்." என்றார்கள்.
நான் அதற்குச் சம்மதிக்க மறுத்தேன். "பிள்ளைகள் இல்லாமல் என்னால் தூங்க முடியாது" என்று கதறினேன். அவர்கள் என்னை ஆறுதல் படுத்திச் சென்றார்கள்.
ஆனால் என்னால் ஆறுதல் பட முடியவில்லை. அவர்கள் போன பின் "என்ன நடந்தது?" என்று கேட்டு எனது கணவனைக் கரைச்சல் படுத்தினேன்.
"பிள்ளைகள் மிகவும் கரைச்சல் தந்தார்கள். அதனால் அவர்களை அடித்து விட்டேன். பிள்ளைகள் கத்திய சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டுக் காரர் ரெலிபோன் பண்ணி பொலீசைக் கூப்பிட்டு விட்டார்கள்" என்று எனது கணவன் கூறி "நீ இப்போ அமைதியாகப் படு" என்றார். என்னால் தூங்க முடியா விட்டாலும் நான் எனது கணவனின் கூற்றை நம்பினேன்.
இன்று அதிகாலையே எழுந்து பொலிஸ்ஸ்டேசனுக்குப் போகத் தயாரானேன். "இப்ப என்னத்துக்குப் பொலிஸ் ஸ்டேசனுக்குப் போகோணும். பேசாமல் வீட்டிலை இரு" என்று சொல்லி என் கணவர் என்னை மூர்க்கத் தனமாகத் தடுத்தார். எனக்கு அடித்தார். அவரது செயல் எனக்கு சற்று வித்தியாசமாகவே பட்டது.
நான் அவரை எதிர்த்துக் கொண்டு போய் விட்டேன். பொலிஸ் ஸ்டேசனிலிருந்து என்னை குழந்தைகள் நலன் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர்கள் சொன்ன செய்தி என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது.
அவர்கள் "உனது கணவன், அதாவது உனது குழந்தைகளின் தந்தை தனதும் உனதுமான பிள்ளைகளைப் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு உட் படுத்தியிருக்கிறான். தினமும் நீ வேலைக்குச் சென்ற பின் உனது பிள்ளைகள் அவலமாகக் கத்துவதை பக்கத்து வீட்டார் அவதானித்துள்ளார்கள். நேற்றும் அது நடந்திருக்கிறது. உடனடியாகப் பக்கத்து வீட்டவர்கள் எம்மை அழைத்து விட்டார்கள். பிள்ளைகள் இருவரையும் நேற்றிரவே மருத்துவப் பரிசோதனைக்கு உட் படுத்தினோம். அவர்கள் சிதைக்கப் பட்டிருப்பது நிரூபணமாகியுள்ளது" என்றார்கள். அவர்கள் சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை.
"பொய்" என்று கத்தினேன். "எந்தத் தகப்பனும் தன் சொந்தப் பிள்ளைகளுடன் இப்படி நடந்து கொள்ள மாட்டான்" என வாதிட்டேன். "என் பிள்ளைகளை என்னிடம் திருப்பித் தந்து விடுங்கள்" என்று கதறினேன்.
அவர்கள் "உன் பிள்ளைகள் தற்சமயம் உடலால் மட்டுமல்ல. மனதாலும்
சிதைக்கப் பட்டுள்ளார்கள். அவர்களை எக் காரணம் கொண்டும் தற்சமயம் உன்னிடம் தரமுடியாது. முதலில் அவர்களுக்கு வைத்தியம் செய்ய வேண்டும். அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் குணமடைய வேண்டும். அடுத்து உன் கணவனால் உனது குழந்தைகளுக்கு ஆபத்து. ஆதலால் நீ உன் கணவனை விட்டுத் தனிய இருக்கும் பட்சத்தில் மட்டுமே
உனது குழந்தைகள் உன்னிடம் தரப்படுவார்கள்" என்று திட்டவட்டமாகச் சொன்னார்கள்.
மேலும் அவர்கள் சொன்னவற்றையெல்லாம் பார்த்த போது என் கணவன் தவறு செய்திருப்பது நிரூபணமாகியுள்ளது. எனது கணவன் லோயரை நாடியிருப்பதால் அவர்களால் எனது கணவனை உடனடியாகத் தண்டனைக்கு உட்படுத்த முடியவில்லை.
என்னால் எதையும் நம்ப முடியவில்லை. ஒரு தந்தை தனது பிள்ளைகளுடன் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வானா? இந்த சம்பவத்தின் பின் தான் நான் வீட்டில் நடந்த ஒவ்வொரு சம்பவங்களையும் அசை போட்டுப் பார்த்தேன். எனக்குத் தெரியாமலே என் வீட்டில் சதி நடந்திருக்கிறது. எத்தனையோ கதைகளில் வாசித்திருக்கிறேன். படங்களில் பார்த்திருக்கிறேன். அதுவே என் வீட்டுக்குள் என்ற போது நான் ஆடிப் போய் விட்டேன். அதுவும் என் கணவன், என் அன்புக்கும் ஆசைக்கும் உரியவன் இப்படியொரு செயலைச் செய்தானென்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. நான் என் கணவனை விட்டுப் பிரிவதென்பது உறுதியாகி விட்டது.
ஆனால் என் கணவனால் எனக்குக் கிடைத்த இந்த அதிர்ச்சி என்னை விட்டுப் பிரியும் என்று நான் நினைக்கவில்லை.
அவள் சொன்ன விடயங்கள் என்னையும் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தின. அவள் மனதைத் திறந்து பார்த்ததற்காக மிகவும் வருந்தினேன். என்னாலேயே அவளின் ஏமாற்றத்தைத் தாங்க முடியாதிருந்தது. அப்போது இவைகளெல்லாம் ஐரோப்பிய சமூகங்களில்தான் நடைபெற முடியும் என நினைத்துக் கொண்டேன். எமது சமூகத்தில் நடந்த இந்த சம்பவத்தைச் சந்திக்கும் வரை.