
அன்று கடந்த சனி, அவர்கள் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நான் சிந்துவுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் எனது கணவர் தனது கண்ணாடியைப் போட்டுக் கொண்டு அன்றைய பத்திரிகையை வாசிக்கத் தொடங்கினார். சிந்துவின் கவனம் பந்திலிருந்து எனது கணவரின் கண்ணாடியின் பக்கம் திரும்பியது. அதைத் தரும் படி கணவரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். எனது கணவரும் வேறு வேறு விளையாட்டுக்களைக் காட்டி அவளைத் திசை திருப்ப முனைந்தார். அவளோ கண்ணாடியின் மீதே கண்ணாக இருந்தாள். கணவரும் கொடுப்பதாக இல்லை. சற்று நேர முயற்சியில் கண்ணாடி கிடைக்காது என்பதிலான அதிருப்தி அவள் முகத்தில் தெரிந்தது. பந்தைச் சடாரென்று நிலத்தில் போட்டு விட்டு தத்தித் தத்தி நடந்து சென்று மாடிப் படிகளில் தவண்டு ஏறினாள்.
வீழ்ந்து விடுவாளே என்ற பயத்துடன் நானும் பின்னால் ஏறினேன். நேரே காந்திச் சிலை இருக்குமிடத்துக்குச் சென்று காந்தியின் கண்ணாடியை இழுத்து எடுத்தாள். அவளுக்கு படிகளில் ஏறத் தெரியும். இறங்கத் தெரியாது. நான் அவளை தூக்கி வந்து படிகளின் கீழ் விட்டேன். அவள் மீண்டும் தத்தித் தத்திச் சென்று கதிரையில் ஏறி என் கணவரின் அருகில் அமர்ந்து கொண்டாள். கண்ணாடியை சரியான முறையில் போடத் தெரியாது. அதனை எப்படியோ வாயடியில் சொருகிக் கொண்டு தானும் பத்திரிகையை வாசிக்க முயற்சித்தாள்.
இந்த விடயம் எனக்கு மிகுந்த ஆச்சரியமான சந்தோசத்தையே கொடுத்தது. சிறிய காந்தி சிலையின் கண்ணாடியையும், எனது கணவர் அணியும் கண்ணாடியையும் ஒப்பிடும் அளவுக்கு, அவ்வளவு தூரம் ஒரு பத்துமாதக் குழந்தையிடம் கிரகிக்கும் தன்மையும் சிந்திக்கும் ஆற்றலும் இருக்குமா என்பது என்னிடம் கேள்விக் குறியாகவே இருக்கிறது.
சரி இதை ஏன் எழுத நினைத்தேன் என்றால்:
சத்தியராஜ்குமாரின் துகள்களில் பாலூட்டிகள் என்றொரு கதை வாசித்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. எனது பேத்தி சிந்துவைப் பிரிவதே எனக்கு மிகுந்த கடினமான விடயமாக இருக்கும் போது, தான் சுமந்து பெற்ற மகவைப் பிரிய எந்தத் தாய் துணிவாள்.
பாலூட்டி கதையின் நாயகர்கள் பணமே குறியாகக் கொண்டு இப்படி ஒரு காரியத்தை எப்படிச் செய்வார்கள்..? இது மிக அதீதமான கற்பனையே என்றுதான் நான் எண்ணினேன். ஆனால் அது ஒரு உண்மைச் சம்பவத்தின் புனைவு என்று அறிந்த போது இன்னும் கூட அந்தத் தாய்க்காகவும், அந்தக் குழந்தைக்காகவும் என் மனது அசௌகரியப் படுகிறது.
ஒரு குழந்தையின் ஒவ்வொரு கணத்திலான அசைவுகளும், சத்தங்களும்.. அதனோடு சேர்ந்த படியான வளர்ச்சியும் சொல்லியோ, எழுதியோ புரிய வைக்க முடியாத சந்தோசம் கலந்த பொக்கிஷங்கள். அதைப் பார்க்க முடியாது பணம் சேர்த்து என்ன பயன்?
ஒரு குழந்தைக்குத் தாயின் அணைப்புக் கண்டிப்பாக வேண்டும். அந்தத் தொடுகை குழந்தையை உளரீதியாக எவ்வளவோ உவகைப் படுத்தும். விதிவசத்தால்.. போர்களால்.. எத்தனையோ குழந்தைகள் இந்தப் பாக்கியத்தை இழந்தார்கள் என்றால் தாயும் தந்தையும் உயிரோடு இருக்கும் போது இப்படியொரு கொடுமை அவசியமா?
இது தாய்க்கும் கூடாது.
குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும், வளர்ச்சியிலும் ஒரு தாய் குழந்தையே அவளது உலகமாகி உளரீதியாக எவ்வளவு இனிமையடைவாள். இந்த இனிமைகளையெல்லாம் காலுக்குள் போட்டு மிதித்து விட்டு, எதற்காகப் பணம்?