
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பொறுத்தவரையில் ஒரு புதிய சகாப்தமாய் அமைந்த அந்த நாட்கள் தந்த களிப்பில் பிறந்த கவிதைகள் இவை.
அது சிங்கள வான்படைகள் வான் உலா வந்து எம்மவரைக் கொல்லும் காலங்களில் ஒன்று.
அதை உதயலட்சுமி இப்படிச் சொல்கிறார்
விமானங்கள் வந்து தினம் வான் பரப்பிலோடும்
குண்டுகள் கொட்டிக் கொக்கரித்தாடும்
மேலெழும் புகையில் மேகங்கள் மறையும்
கந்தக மணத்திலே சந்தனங்கள் வாடும்
அந்திப் பொழுதிலும்
அதிகாலையிலும் இது நடக்கும்
நொந்த எம் தாயக வீதிகளில்
தோண்டப்பட்ட குழிகளெல்லாம்
குருதிக்களம் சுமக்கும்
மிகையொலிக் காற்றைச் சுவாசித்து
இதயம் வெடித்து இறந்தவர்களின்
இறுதிப் பயணமிங்கு அடிக்கடி நடக்கும்….
இப்படித் தமிழ் மக்களை அச்சுறுத்திக் கொண்டும், அவலத்துக்கு உள்ளாக்கிக் கொண்டும் திரிந்த அவ்ரோ விமானங்களில் ஒன்று யாழ்ப்பாண வான் பரப்பில் வைத்து 1995ம் ஆண்டு சித்திரை 28 திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு அணியினரால் பலாலித் தளத்தினுள் சுட்டு வீழ்த்தப்பட்டது. வான்படையின் உயர் அதிகாரிகள் உட்பட 40 படையினர் கொல்லப்பட்டனர்.29.041995 அன்று இன்னொரு அவ்ரோ விமானம் நவக்கிரியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த 50 வரையான படையினர் கொல்லப்பட்டனர்.
பெருந்துயரில் ஆழ்ந்திருந்த தமிழ் மக்கள் இந்தச் சாதனை கண்டு பெருமை கொண்டார்கள். பேருவகையில் திளைத்தார்கள். அவர்களின் அந்த மகிழ்ச்சித் திளைப்பே 29 ஈழத்துக் கவிஞர்களால் இத் தொகுப்பில் பதியப் பட்டுள்ளது.
மற்றொருவரின் இழப்பில் மகிழ்ச்சித் திளைப்பா என்றொரு கேள்வி எழுந்தால்… அதற்கு கருணாகரன் தன் கவிதையில் பதில் தருகிறார்.
பாவங்களின் கூடுகள் எரிவதைக் கண்டேன்
சாபங்களும் திட்டுதல்களும்
வாங்கிப் பெற்ற நரகப் பிறவிகள்
நிணமாகிச் சிதறிப் போன செயல் பார்த்தேன்
நாலு சிறகெழுந்து
பறந்து
பரவசமடைந்தேன்
ஒரு பிறவியின் சாவு கண்டுனக்கு மகிழ்ச்சியா
என்றென்னைக் கேட்கலாம்
கேள். நன்றாகக் கேள்
அது பற்றி எனக்குக் கவலையில்லை
நான் சாவில் வேகும் போதென்னை
கண்திறந்து பாராத உன் கேள்வி பற்றி
எனக்கென்ன கவலை?
நான் புளுகித் திரிவேன்
கெந்திக் கெந்தி நானோடும் போதெனது
உயிர் தேடித் தேடி வந்த பாவங்களின் கூடுகள்
இன்று அழியுண்டு போவதைப் பார்த்தேன்
அஸ்திரங்கள் ஏவிய என் தேவகுமாரர்களின்
வெற்றியின் கதைபற்றி உரத்துப் பாடினேன்
நன்றியின் உதிரம் கலந்த என் பாடல்
திசையெல்லாம் பரவியது
நான் பாடிப் பாடி மகிழ்ந்தேன்
வெற்றியின் பூரிப்பில் சிரித்தேன்
நரகப் பிறவிகளின் சாவில் நான் சிரித்தேன்
நானழுத காலங்களை விழுங்கும்
இந்தச் சிரிப்பு
இப்போது நான் சிரிக்கிறேன்
என்னுடைய சனங்களும் சிரிக்கிறார்கள்
பாவங்களின் கூடுகள் பற்றி யாருக்குக் கவலை?
யாருக்கடா கவலை?
தமிழ்த்தாய் வெளியீட்டகத்தினால் 28.5.1995 இல் வெளியிட்டு வைக்கப் பட்ட இத்தொகுப்பில் தில்லைச்சிவம், ந.வீரமணி ஐயர், ச.வே.பஞ்சாட்சரம், முருகையன், பண்டிதர் வீ.பரந்தாமன், நம்பியூரான், புதுவை இரத்தினதுரை, அ.யேசுராசா, சசிவர்ணன், ந.கிருஷ்ணசிங்கம், இளையவன், விவேக், கருணாகரன், இயல்வாணன், கி.சிவஞானம், சத்துருக்கன், ஆதிலட்சுமி சிவகுமார், சுதாமதி, உதயலட்சுமி, வேலணையூர் சுரேஷ், த.ஜெயசீலன், தெல்லியூர் ஜெயபாரதி, ஐ.தயாபரன், வெள்ளை, வி.பிரபாகரன், நாமகள், மயன்-2, மு.வே.வாஞ்சிநாதன், வளவை வளனவன் ஆகிய 29கவிஞர்களது கவிதைகள் இடம் பிடித்துள்ளன.
இவைகளுள் சில கவிதைகள் வெறுமே உரைநடை போல அமைந்திருந்தாலும், இக்கவிதைகள் பிறந்ததற்கான காரணமும், அவை தம்முள்ளே கொண்டிருக்கும் வெற்றிப் பெருமிதமும் அனேகமான ஒவ்வொரு ஈழத்தமிழனையும் உவகை கொள்ளச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
சந்திரவதனா
15.3.2007