நதி - 11.5.2006
சிலவாரங்களுக்கு முன் ஒரு நாள் நான் சமைத்துக் கொண்டிருந்த போது வரவேற்பறையில் பேப்பரையும் பென்சிலையும் வைத்து கிறுக்கிக் கொண்டிருந்த என் பேத்தி விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். வந்த வேகத்தில் எனது கால்களைக் கட்டிப் பிடித்து "அப்பம்மா..!" என்றாள். அவள் விழிகளில் பயம் குடி கொண்டிருந்தது.
எதையோ கண்டு பயந்து விட்டாள் என்பது எனக்குத் தெரிந்தது. எதுவாக இருக்கும் என்பதுதான் தெரியவில்லை. ஏதாவது சிறு பூச்சி வந்திருக்குமோ? யோசனையுடன் அடுப்பில் இருந்த எண்ணெய்ச் சட்டியைத் தூக்கித் தள்ளி வைத்து விட்டு, அவளையும் தூக்கிக் கொண்டு சமையலறையை விட்டு வெளியேறி வரவேற்பறையில் புகுந்து பார்த்தேன். ம்.. நான் தொலைக்காட்சியை கிண்டர் சணலுக்கு மாற்ற மறந்திருந்தேன்.
அவள் கண்களை இன்னும் பயத்துடன் விரித்து தொலைக்காட்சியைப் பார்த்த படி எனக்குக் காட்டினாள். சந்திரமுகி படத்துக்காக, ஜோதிகா கண்களை முழுசிய படி ஆடிக் கொண்டிருந்தாள். ராரா, சரசக்கு ராரா... பாடல் போய்க் கொண்டிருந்தது.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தப் பாடலா இவளைப் பயமுறுத்தியது? இந்தப் பாடலை தமது பிள்ளைகளின் விருப்பமாகப் பல பெற்றோர் உங்கள் விருப்பத்தில் வந்து கேட்பதை நான் பார்த்திருக்கிறேன். இவளுக்கு இரண்டு வயதுதானே.! அதுதான் பயந்தாளோ என்ற கேள்வி என்னுள் எழுந்தாலும் என்னால் அந்தப் பாடல்தான் அவளைப் பயமுறுத்தியிருக்கும் என்று முழுமையாக நம்ப முடியவில்லை. ஆனால் அன்று அதற்கு மேல் அவளை தாக்காட்டி விட்டு விட்டு தொடர்ந்து சமைக்க முடியவில்லை. அவளது அம்மா வரும்வரை அவள் எனது இடுப்பை விட்டு இறங்கவில்லை.
அதன் பின், எதற்காக அப்படிப் பயந்திருப்பாள் என்ற கேள்வியோடு, இடையிடையே கவனித்துப் பார்த்துக் கொண்டே வந்தேன். மீண்டும் அந்தப் பாடல் கடந்த வாரம் வந்தது. அதே மாதிரி அவள் விழுந்தடித்து ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். "ரீவீயை நிப்பாட்டுங்கோ "என்று பயத்துடன் சிணுங்கினாள்.
இப்போது திடப் படுத்திக் கொண்டேன், அவளது பயத்துக்குக் காரணம் அப்பாடல்தான் என்பதை.
பாடல் காட்சியை விடுத்து அப்பாடலைக் கேட்கும் போது எனக்கு அந்தப் பாடல் ரசிக்கக் கூடிய வகையில் பிடித்தே இருந்தது.
சந்திரவதனா
2.10.2006