2002 இல் நாம் வன்னிக்குச் சென்ற போது கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்திருந்த வெண்புறா செயற்கை உறுப்பு தொழில் நுட்ப நிறுவனத்தில்தான் தங்கினோம்.
வெண்புறா நிறுவனத்துக்கு அப்போது பொறுப்பாக இருந்தவர் வீரன். வெண்புறாவில் பணி புரிந்த, சிகிச்சை பெற்ற, தங்கியிருந்த அனைத்து உறவுகளையும் போலவே வீரனும் எங்களுடன் அன்போடு பழகினார். அந்த நிறுவனத்தில் இருந்த பல பேரையும் போல வீரனுக்கும் ஒரு கால் செயற்கைக்காலாகவே இருந்தது. ஆனாலும் செயற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன.
அந்த சமயத்தில்தான் வற்றாப்பளைப் பொங்கல். வெண்புறா உறவுகள் அத்தனை பேரும் அங்கு போவதாகத் தீர்மானித்தார்கள். ஒரு வான் பிடித்து எல்லோருமாகப் புறப்பட்டோம். கரடு முரடான ஏ9 பாதையில் ஆரம்பித்த அந்தப் பயணம் ஒரு இனிமையான பயணம். அந்தப் பயண அனுபவத்தைத் தனியாக எழுதலாம்.
போகும் போது முல்லைக் கடற்கரைக்குச் சென்று அங்கிருந்து வீரனின் வீட்டுக்குச் சென்று அவரின் மனைவியையும், குழந்தையையும் பார்த்து விட்டுப் போவதாகத்தான் தீர்மானித்திருந்தோம். அது வீரனின் விருப்பமும் கூட. முல்லைக் கடற்கரையில் சில மணி நேரங்களைக் கழித்து விட்டு வீரனின் வீட்டுக்குச் சென்ற போது அங்கு வீரனின் மனைவி எங்களைப் புன்னகையுடன் வரவேற்றார். அவரது இரு சகோதரர்கள் மாவீரர்கள்.
மதியஉணவு மரக்கறிகளுடன், பப்படமும் சேர்ந்து சுவைத்தது. வீரனின் மனைவி, குழந்தைகளுடனான பொழுதுகள் இனித்தன. வெண்புறா உறவுகள் எல்லோரும் ஆள் மாறி ஆள் மாறி வீரனின் குழந்தையைத் தூக்கிக் கொண்டு திரிந்தார்கள். கதை, சிரிப்பு,... என்று சில மணி நேங்களைக் கழித்து விட்டு மாலையில் வற்றாப்பளைக்குப் புறப்பட்டோம்.
வீரனின் மனைவி எப்போதுமே புன்னகை மாறாத முகத்துடன் இனிமையாகக் கதைத்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்.
ஜேர்மனிக்குத் திரும்பிய பின்னும் வீரனின் அந்த வீடும், பப்படம் மொருமொருக்க வீரனின் மனைவி மகிழ்வோடு பரிமாறிய அந்த விருந்தும், புன்னகை தவழ்ந்த முகத்தோடு எம்மோடு உறவாடிய வீரனின் மனைவியும் அவ்வப்போது என் நினைவுகளில் மிதந்து கொண்டே இருந்தார்கள்.
சில வருடங்கள் கழித்து வீரன் ஜேர்மனிக்கு வந்திருப்பதாக அறிவித்தல் வந்து, எம்மைக் கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று சொல்லி எமது வீட்டுக்கும் வந்தார்.
மனைவி, குழந்தைகளைப் பற்றி விசாரித்த போது 2004இல் ´கடலே எழுந்து வீழ்ந்த போது சுனாமி அலையோடு போய் விட்டார்கள்´ என்றார் வேதனையோடு.
மனைவியின் நினைவாக நிழற்குடை ஒன்றைக் கட்டியுள்ளதாகவும் சொன்னார். இப்போதெல்லாம் நிழற்குடைகளைக் காணும் போது பல நூறு நினைவுகளின் மத்தியில் வீரனின் மனைவியின் புன்னகையும், அந்தக் குழந்தையும முகம் காட்ட மறப்பதில்லை.
சந்திரவதனா
8.8.2008
சதீசு குமாரின் படம் தந்த நினைவு