"சந்திரா, மெதுவாக... ஏன் இவ்வளவு வேகமாக உழக்குகிறாய்? உனது காலுக்கு இது நல்லதல்ல."
மெலானியின் அன்பான அதட்டல் என்னை மீண்டும் உடற்பயிற்சி நிலையத்துக்குள் அழைத்து வந்தது. சைக்கிள்கள், ரெட்மில்லர்களுடன், இன்னும் ஏதேதோ சாதனங்கள் இரைந்து கொண்டிருந்தன. வேர்வைகள் வடிய காதுக்குள் ஐபொட்டின் வயரைச் சொருகி பாட்டுக்களை ரசித்தபடி எல்லோரும் தத்தமது உடலுக்கு ஏற்ற பயிற்சிகளுடன் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சில சிரிப்புகள், சில முகஸ்துதிகள், அனைத்தையும் மீறிய இரைச்சல்கள், கண்ணாடிச்சுவரினூடு தெரியும் கிம்னாஸ்ரிக் வகுப்பாரின் அசைவுகள்.. எல்லாமே என் கண் முன்னே நடந்து கொண்டிருந்தாலும் நான் வேறொரு உலகத்தில் இருந்தேன். அது 19.5.2009 இன் காலைப்பொழுது.
´எங்கள் தலைவர் கொல்லப்பட்டு விட்டாராம்.` அதை நான் நம்பவில்லை. ஆனாலும் மனதில் அமைதியில்லை. அவரது மகன் சார்ள்ஸ் என்று சொல்லி ஒருவர் கொல்லப்பட்டு விட்டார் என்றார்களே! அது உண்மையிலேயே சார்ள்ஸ்தானா? மனதுக்குள் பதிந்து வைத்த இரண்டு படங்களையும் மனம் மீண்டும் மீண்டுமாய் ஒப்பீடு செய்து பார்த்துக் கொண்டே இருந்தது.
´ஏன் எல்லோருமே பொய் சொல்கிறார்கள்? ஏன் எம்மையெல்லாம் கொல்லாமல் கொல்கிறார்கள்?`
சரியாக உடற்பயிற்சியைச் செய்ய முடியவில்லை. மெலானியும், குளோரியாவும் என்னை பல தடவைகளாக எச்சரித்து விட்டார்கள். ´இருப்பது, அசைவது, சைக்கிளை உழக்குவது என்று எல்லாவற்றையுமே நிதானமிழந்து செய்து கொண்டிருக்கிறேன்` என்றார்கள். "சந்திரா, உனக்கு இன்று என்ன நடந்தது?" என்று கேட்டார்கள். மெலானி வந்து சத்திரசிகிச்சைக்குள்ளான முழங்காலை அழுத்திப் பார்த்து விட்டு இன்று இன்னுமொரு புதிய பயிற்சி தொடங்க வேண்டுமென்று சொல்லி இன்னொரு இயந்திரத்திடம் என்னை அழைத்துச் சென்றாள். 70கிலோக்களை வைத்து விட்டு சில மாற்றங்களைச் செய்து விட்டு அந்த இயந்திரத்தில் படுத்தபடி காலை ஊன்றி அழுத்தச் சொன்னாள். எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வீட்டுக்குப் போய்விடலாம் போலிருந்தது.
70கிலோ... "என்னால் முடியாது. கொஞ்சம் குறைத்து விடு" என்றேன். 50கிலோ ஆக்கினாள். பரவாயில்லாமல் இருந்தது. Menuscus ஒப்பரேசன் செய்யப் பட்டதிலிருந்து தற்போது ஒரு வருடமாக இதே ரோதனை.
அவர்கள் அன்பும், சிரிப்பும் என்னைத் தழுவினாலும் அன்றைய பொழுதில் என்னால் எதையும் ரசிக்க முடியவில்லை. வீட்டுக்கு ஓடி விடவேண்டும் என்பதே நினைப்பாயும், முனைப்பாயும் இருந்தது.
பயிற்சி முடித்து, உடைமாற்றும் அறையில் பெண்களின் அரட்டைகளுக்கும், சிரிப்புகளுக்கும் நடுவில் குளித்து, வெளியில் வந்த போது வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. காரை புகையிரதநிலையத்தில் விட்டு விட்டு பேரூந்தைப் பிடிக்க வேண்டும். எனது கணவர் மாலை வேலையால் வரும் போது அவருக்குக் கார் வேண்டும்.
இடையிலே எந்த இடையூறுகளும் வராவிட்டால் 12மணி பேரூந்தைப் பிடித்து விடலாம். விரைந்தேன். ஒரு செக்கன் பிந்தியிருப்பேன் போலத் தெரிந்தது. நானும் காரை நிற்பாட்ட, பேரூந்து புறப்படுவதற்கான சமிக்ஞையைச் செய்தது. அடுத்த பேரூந்துக்கு 20நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.
ம்.. இந்த நேரத்தில் தொலைபேசியில் முடிக்க வேண்டிய சில விடயங்களை முடித்து விடலாம் என்று தோன்ற, கைத்தொலைபேசியினூடு வேலையிடத்துக்கு அழைப்பை மேற்கொண்டு அடுத்தநாள் வேலைக்கு வர ஒருமணிநேரம் பிந்தலாம், என்பதைச் சொன்னேன். அடுத்த சனிக்கிழமை குடும்ப நண்பர் ஒருவருக்கு எமது வீட்டில் சாப்பாடு என்பதை மீண்டுமொரு முறை உறதிப் படுத்தலாம் என்ற நினைப்பில் அவரை அழைத்தேன்.
அந்த ஜேர்மனிய நண்பர்தான் மீண்டும் அந்த இடியைத் தூக்கிப் போட்டார்.
"கேட்டனியா செய்தியை" என்றார்.
"என்ன, சார்ள்ஸ் அன்ரனியின் செய்திதானே? அது சார்ள்ஸ் இல்லை. இரண்டு போட்டோக்களையும் ஒப்பிட்டுப் பார்" என்றேன்.
"இல்லையில்லை உங்கள் தலைவர் இறந்து விட்டதாக எல்லாத் தொலைக்காட்சிகளும் அவர் உடலைக் காட்டுகின்றன."
"இல்லை, இருக்காது."
"இல்லை காட்டுகிறார்கள். இப்போதும் காட்டுகிறார்கள். அது உங்கள் தலைவரின் உடல்தான்."
சாப்பாட்டுக்கு வருவது பற்றிய உறுதிப்படுத்தலைச் செய்து கொண்டு தொலைபேசியை வைத்து விட்டேன்.
´இருக்காது. அவ்வளவு சுலபமாக எங்கள் தலைவரை.... இவர்களால் முடியாது.`
தலைவர் நாட்டில் இல்லை. அவர் என்றைக்கோ, வேற்று நாட்டுக்குப் போய் விட்டார்... என்றெல்லாம் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருந்தார்களே!
இப்போது...
என்ன நடந்தது...?
- தொடரும் -