Tuesday, August 31, 2004

என்னைப் பாதித்த மரணங்களில் ஒன்று

மன்னர் குலக் கன்னியரும் கண் கலங்க நேருமென்றால்
மண்டலத்தில் பெண்களுக்கே வாய்த்த விதி இதுதானோ
Prinzessin Diana 1.7.1961-31.8.1997

என்னைப் பாதித்த மரணங்களில் இளவரசி டயானாவினது மரணமும் ஒன்று. 1969 இல் என நினைக்கிறேன். அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் இறந்த போது நான் மிகவும் கவலையுற்றேன். வானொலியே தஞ்சமென அதனருகிலேயே நின்று அவரது இறுதி ஊர்வல விவரணத்தைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். கான்சர் ஏன் வருகிறது என்று மனதுக்குள் மிகவும் ஆதங்கப் பட்டேன். அவர் மீண்டும் உயிர் பெற வாய்ப்பில்லையா என அம்மாவிடம் பலமுறை கேட்டேன்.

இப்போது - ஏன் எனக்கு உருத்து உறவில்லாத ஒருவரின் அந்த இறப்பு என்னை அத்தனை தூரம் பாதித்தது என சிந்தித்துப் பார்க்கிறேன். எனது அம்மாவும் அப்பாவும் அவரைப் பற்றி அடிக்கடி வீட்டிலே கதைப்பதுவும், அவரது நல்ல செயற்பாடுகள் பற்றிய கட்டுரைகள் கதைகள்.. போன்றவற்றை எமது காது பட அம்மா வாசித்துக் காட்டுவதும் அவர் மீது ஒரு வித மரியாதையையும் பிரியத்தையும் எனக்குள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அந்த அவர் மீதான மரியாதையும் பிரியமும்தான் அந்த இறப்பு என்னைப் பாதிப்பதற்கு முக்கிய காரணிகளாக இருந்திருக்க வேண்டும்.

இதே போலத்தான் அல்லது இதைவிட அதிகமாக இளவரசி டயானாவின் மரணமும் என்னைப் பாதித்தது. இளவரசி டயானா பற்றிய கட்டுரைகள், டயானாவின் செயற்பாடுகள் என்று நான் இளவரசி டயானா வாழ்ந்த காலத்திலேயே ஒன்று விடாது வாசித்து வந்தேன். இளவரசி டயானா இளவரசர் சார்ள்ஸை மணந்து கொண்ட போது அந்தக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் போது இளவரசி டயானாவை ஒரு அழகு தேவதை என்றே நினைத்துக் கொண்டேன்.

ஆனால் அந்த அழகு தேவதையை விட்டு சார்ள்ஸ் கமிலாவுடன் உறவு கொள்வதை அறிந்த போது அதிர்ச்சியடைந்தேன். அரச குடும்பத்துக்குள் ஏற்பட்ட சலனங்களும் சச்சரவுகளும் - ஏன் இளவரசி டயானாவை இப்படிக் கஸ்டப் படுத்துகிறார்கள் என என்னை ஆத்திரப் பட வைத்தன.

வெளியூர் சென்று வரும் இளவரசி டயானா தனது குழந்தைகளை மீண்டும் சந்திக்கும் போது, ஓடிச் சென்று தழுவுவதையும், மற்றவர்களுக்குச் செய்யும் உதவிகளையும் பார்க்கும் போது, அவரது மனதில் அன்பையே கண்டேன்.

தொடர்ந்த காலங்களில் டயானா சார்ள்ஸ்ஸின் விவாகரத்து, டயானா டோடியின் உறவு....... என்று கடந்து இற்றைக்கு எழு வருடங்களின் முன் அது மரணத்தில் வந்து முடிந்த போது உலகமே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றதை மறுப்பதற்கில்லை. எத்தனையோ வீடுகளில் அன்று சமையலே நடக்கவில்லையாம். என் வீட்டில் எல்லாமே வழமை போல் அன்று நடந்திருந்தாலும் அந்த மரணம் என்னை வெகுவாகப் பாதித்தது என்பது உண்மை.


Goodbye England's rose
may you ever grow in our hearts
You were the grace that placed itself
where lives were torn apart
You called out to our country,
and you whispered to those in pain.
Now you belong to heaven
and the stars spell out your name.

And it seems to me you lived your life
like a candle in the wind:
never fading with the sunset
when the rain set in.
And your footsteps will always fall here,
along England's greenest hills;
your candle's burned out long before
your legend ever will.

Loveliness we've lost;
these empty days without your smile.
This torch we'll always carry
for our nation's golden child.
And even though we try
the truth brings us to tears;
all our words cannot express
the joy you brought us through the years.

Goodbye England's rose,
from a country lost without your soul,
who'll miss the wings of your compassion
more than you will
ever know.

Bernie Taupin and Elton John

Thursday, August 26, 2004

உள்ளே செல்ல வழி தெரியவில்லை


மரத்தடியில் உபயம் வைக்கும்படி சொல்லி விட்டு
மரத்தடிக்குச செல்வதற்கான வழியைச் சொல்லாது போய் விட்டா மதி.

Wednesday, August 25, 2004

Hang Around

ஒரு பத்திரிகையாளன் என்பவன்
தனக்காகப் பொழுதை ஒதுக்குவது என்பது
எத்துணை சிரமமானது என்பதைக் கண்டிருக்கிறேன்.

ஆனாலும் எனது மகன் துமிலன் இந்த வார இறுதியில்
சற்று நேரம் தனக்காக ஒதுக்கி
தன்னையே தான், படங்களாகப் பிடித்துத் தந்திருக்கிறான்.

படத்தை ஒறிஜினல் சைஸில் பார்க்க


Thumilan Selvakumaran Photo-Thumi

Tuesday, August 24, 2004

26.8.2004 அன்று மரத்தடியில்


நிறைய எழுத வேண்டும் என நினைத்தாலும் எழுத நினைக்கும் போது நேரம் இருப்பதில்லை. நேரம் இருக்கும் போது எழுதுவதற்கான ஏதோ ஒன்று இருப்பதில்லை. இப்படியே பல காலங்கள் உருப்படியாக எதுவும் எழுதாமலே ஓடி விட்டன. அதற்காக இதுவரை எழுதியதெல்லாம் உருப்படியானவை என்று சொல்ல நான் வரவில்லை. ஏதோ எனது திருப்திக்காக எனக்குத் தோன்றுபவைகளை, நான் பார்ப்பவைகளை, எனக்குப் பிடித்தவைகளை, என்னைப் பாதித்தவைகளை... என்று எழுதுவேன். எனது எழுத்துக்கள் எனது துயரங்களின் வடிகால்களாயும், எனது சந்தோசத்தின் பகிர்தல்களாயும் இது வரை எனக்குத் துணை நின்றுள்ளன.

பலர் ஏன் இப்போ எழுதுவதில்லை என்று என்னைப் பல தடவைகள் கேட்டு விட்டார்கள். முற்றாக எழுதாமல் நான் இல்லை. வெளியில் எங்கும் பதிக்கா விட்டாலும் எனது டயறியில் ஏதோ எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன்.

இப்போது மதி மரத்தடி ஆண்டுவிழாக் கொண்டாட்டத்துக்காக ஏதாவது எழுதும் படி கேட்டா. எனது உபயநாள் ஆவணி 26 என்றும் சொல்லி விட்டா.
எழுதுவதற்கான உந்துதல் பெரியளவாக இல்லாதிருந்த போதும், மதியின் சாட்டிலாவது எழுதுவோம் என்ற எண்ணத்தில் ஏதோ முயற்சித்து எழுதியுள்ளேன். இடைவெளிகள் கூடியதாலோ என்னவோ எழுத்தோட்டம் சிறப்பாக அமையவில்லை. விரும்பினால் 26.8.2004 அன்று வாசித்துப் பாருங்கள்.

மரத்தடியில் எனது பதிவுகளாக 26.8.2004 அன்று வரப் போவபை...

சிறுகதை - நட்பு
சிறுகதை - தகைமை
கவிதை - விசும்பல்
நினைவுகள் - அம்மா சொல்லைத் தட்டினேன்.
சினிமாப்பாடல் - பூக்கொடியின் புன்னகை

Monday, August 23, 2004

பார்வைகள்


வெளியில் இறங்கியபோதுதான் தெரிந்தது சூரியன் தனது இருப்பை இன்று சற்று அதீதமாகவே வெளிக்காட்டுவது. உடனேயே வீட்டினுள் நுழைந்து மின்குமிழ் வெளிச்சத்திலும், வெப்பமூட்டியின் வெப்பத்திலும் பச்சயத்தை மெதுமெதுவாக இழந்து இயல்பான பச்சையின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் எனது பூமரங்களில் சிலவற்றைத் தூக்கி வெளியில் வைத்து விட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு அவசரமாய் விரைந்தேன்.

ஆறு நிமிடத்தில் நடக்க வேண்டிய பேரூந்து நிலையத்தை, மூன்று நிமிடத்தில் அடைந்ததில் மூச்சு வாங்கியது.

"காலை வணக்கம்"(Guten Morgen) சொல்லி மாதப் பயணச்சீட்டை ஓட்டுனரிடம் காட்டி, இருக்கையில் அமர்ந்த போது மூச்சின் வேகம் சற்றுக் குறைந்திருந்தது. முழுவதுமாகச் சீரானதும் வாசிக்கலாமென கைப்பையிலிருந்த மாதசஞ்சிகை ஒன்றை எடுத்த போதுதான் அந்த மாது என் எதிரே வந்தமர்ந்தாள்.

தெரிந்த பாவனையுடன் சிரித்துக் கொண்டு காலை வணக்கம் சொன்னாள். பதிலுக்கு நானும் சொல்லிய போதுதான் அவள் சுமதி வீட்டுக்கு எதிர் வீட்டு மாது மரியானா என்பது ஞாபகத்தில் வந்தது. போனகிழமை ஒரு திருமணவைபத்தில்தான் சுமதி இவளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

"சுமதி யேர்மனிக்கு வந்து கொஞ்சக்காலந்தான். அதற்கிடையில் யேர்மனிய மனிசியைப் Friend பிடிச்சு, ஓரளவு டொச்சும்(Deutsch - யேர்மனிய மொழி) கதைக்கத் தொடங்கீட்டாள். அவள் கெட்டிக்காரி." இப்படித்தான் எமது நகரத் தமிழர்கள் பேசிக் கொள்வார்கள்.

"ரவுணுக்குப் போறியோ..?" மரியானா கேட்டாள்.

"ஓம். சில சாமான்கள் வேண்டோணும்."

"நல்ல வெதர்."

"ஓமோம். நல்ல வெதர். சந்தோசமாயிருக்கு."

சூரியச்சிரிப்பில் ஸ்வெபிஸ்ஹால் நகரம் மிகவும் அழகாயிருந்தது. வழி நெடுகலும் மரங்கள் கிளைகளைப் பரப்பி விரிந்து... சோலைகளினூடே பயணிப்பது போன்றதொரு பிரமையை ஏற்படுத்தின. வீடுகளின் முன் ரோஜாக்களும், செவ்வந்திகளும்.... என்று பூத்துக் குலுங்கியதிலான அழகு மனசைக் கொள்ளை கொண்டது.

"எப்பிடி இருக்கிறாய்?" மரியானா மீண்டும் கதை கொடுத்தாள்.

"இருக்கிறன். நல்லாயிருக்கிறன்.நீ எப்பிடி இருக்கிறாய்?

"எனக்கென்ன...? எல்லாம் நல்லாயிருக்கு."

பேரூந்து அடுத்த தரிப்பில் நின்று புறப்பட்டது. யன்னலினூடே தெரிந்த சந்தி வீட்டில் செர்ரி(cherry) மரம் குண்டு குண்டான கருஞ்சிவப்பு செர்ரி(cherry) பழங்களுடன் ஆடி அசைந்து கொண்டிருந்தது. முன்னர், புலம் பெயர்வு பற்றிய பிரக்ஞைகள் எதுவும் எம்மத்தியில் இல்லாத காலகட்டத்தில், பணம் தேட என்று ஐரோப்பியாவை நோக்கிக் கடல் கடந்தவர்கள் எழுதும் கதைகளின் தலைப்புகள் எல்லாம் "செர்ரி பழங்கள் காய்த்து விட்டன", "ப்ளம்ஸ் மரங்கள் பூத்து விட்டன..." என்று எங்களுக்கு ஒரு வித ஆவலைத் தூண்டுவனவாகவே இருந்திருக்கின்றன. இப்போ இவையெல்லாம் எமக்குக் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தாலும், அவைகளைப் பணம் கொடுத்து வாங்கி வாய்க்குள் போட்டுச் சுவைப்பதோடு அவைகளின் கதைகள் முடிந்து விடுகின்றன. பெரியளவாக யார் கதைகளிலும் இடம் பெறுவதில்லை.

"என்ன யோசிக்கிறாய்? வெளீலை அழகாய் இருக்கு என்ன..?" மரியானா மீண்டும் கதை கொடுத்தாள்.

"ஒண்டுமில்லை. வெளியில் அழகு....அது சரி சுமதி எப்பிடி இருக்கிறாள்?"
சுமதி மரியானாவுடன் நல்ல வாரப்பாடு என்பது எனக்குத் தெரியும். ஏற்கெனவே சுமதி சொல்லியிருந்தாள். தினமும் மரியானா சுமதி வீட்டுக்குப் போவதும், சுமதி மரியானா வீட்டுக்குப் போவதும், சுமதியின் உறைப்புக் கறிகளை மரியானா விரும்பிச் சுவைப்பதுவும் என்று அவர்கள் மிகவும் நெருக்கமாகப் பழகத் தொடங்கி விட்டார்களாம். மரியானாவுக்காக, சுமதியும் அவள் கணவன் அரவிந்தனும் உறைப்பைக் குறைத்துச் சமைத்துச் சாப்பிடவும் பழகி விட்டார்களாம்.

"அரவிந்தன் நல்ல பெடியன். நல்ல உழைப்பாளி." ஊருக்குள் தமிழரின் வீடுகளில் அவன் பெயர் இப்படித்தான் உருளும். உண்மையிலேயே அவன் யேர்மனிக்கு வந்ததிலிருந்து ஒரு சோலி சுரட்டுக்கும் போகாமல், தானுண்டு, தன் வேலையுண்டு என்றுதான் இருந்தான். குடி, சிகரெட் எதுவும் கிடையாது. அதிகாலையில் ஒரு தொழிற்சாலையில் வேலை தொடங்கும். முடிந்து வந்தால் இன்னொரு கடையில் கூட்டிக் கழுவும் பகுதி நேர வேலை. சனி, ஞாயிறுகளில் ஒரு உணவகத்தில் சலாட் கழுவும் வேலை. இப்படியே வேலை வேலையாகச் செய்து சொந்தமாய் ஒரு வீடும் வாங்கி விட்டான். நல்ல பிரயாசி. அதன் பின்தான் சுமதியைப் ஸ்பொன்சர் பண்ணிக் கூப்பிட்டான். சுமதியும் வந்து இரண்டு வருடங்களாகிறது.

"சுமதி குடுத்து வைச்சவள்." தங்கவேலின் மனைவி லலிதாவும், தேவதாசின் மனைவி மெலிண்டாவும் அடிக்கடி என்னிடம் சொல்லிப் பெருமூச்சு விடுவார்கள்.

தங்கவேல் பயங்கரக் குடிகாரன். இந்தப் பகுதிநேரவேலை செய்கிற பழக்கமெல்லாம் அவனிடம் இல்லை. வேலை நேரம் போக மற்றைய நேரமெல்லாம் வீட்டிலேயே குந்திக் கொண்டிருப்பான். பணப் பற்றாக்குறை வரும் போதெல்லாம் லலிதா புறுபுறுப்பாள். நல்லாக வாழும் சுமதியை நினைத்து ஏக்கப் பெருமூச்சு விடுவாள்.

தேவதாஸ் பெரிய குடி என்றில்லை. ஆனால் அவனுக்கு வாய்த்தது மக்டொனால்ஸ்(Mc Donals) வேலை. அதனால் பணப் பற்றாக்குறை என்பது மெலிண்டாவின் வாழ்வில் தவிர்க்க முடியாதது. இதற்குள் அவனுக்கு ஆயிரத்தெட்டு நண்பர்கள். அவர்களுக்குச் சமைத்துப் போடுவதிலேயே மெலிண்டாவுக்குப் போதும்... போதும்... என்றாகி விடும்.
இந்தத் தொல்லையொன்றும் இல்லாது, சொந்த வீட்டில், கார், நகை, வீடு......... என்று வாழும் சுமதி, இவர்கள் பார்வைகளில் அதிர்ஸ்டக்காரி. கொடுத்து வைச்சவள்.

"சுமதி நல்லாயிருக்கிறாள். இப்ப அவளைச் சந்திச்சிட்டுத்தான் வாறன். வேலையேதுமிருந்தால் எடுத்துத் தரச் சொல்லிக் கேட்டவள். புட்ற்சன் (Putzen –துப்பரவாக்கும் வேலை) எண்டாலும் பரவாயில்லையாம்."
புட்ற்சனோ...! புட்ற்சன் (Putzen) செய்ய நினைக்குமளவுக்கு சுமதிக்கு என்ன கஸ்டம்..? மனதுள் எழுந்த வியப்பில் என்னையறியமால் வார்த்தை வந்து வெளியில் வீழ்ந்தது.

மரியானா எனது ஆச்சரியத்தைப் புரிந்து கொண்டவளாய் "என்ன செய்யிறது அவளும்...? அரவிந்தன் நல்ல பெடியன்தான். நல்ல பிரயாசிதான். ஆனால் அவன் வேலை வேலையெண்டு காலையிலேயே போய் விடுவான். மாலையில் கூட அவள் துணையென்று யாருமின்றித் தனியேதான். என்னட்டை ஓடி ஓடி வருவாள். நானும் என்னத்தை அவளோடை கதைக்கிறது?. அவள் இருபது வயசுச் சின்னப் பெண். நான் அறுபது வயசுக் கிழவி. என்ரை கதையள் அவளின்ரை வயசுக்கு ஒத்துப் போகுமே..? வேறை வழியில்லாமல் வாறாள். ஆனால் தனிமை அவளைக் கொல்லுது எண்டு எனக்குத் தெரியும்...."

சற்று மூச்சு விட்டு மீண்டும் தொடர்ந்தாள். "வேலைக்குப் போனாள் எண்டாலும் பொழுதுகள் கெதியிலை போகும். டொச்(deutsch) வகுப்புக்குப் போனவள்தான். போட்டு வந்து வீட்டுக்குள்ளை இருந்தால் எப்பிடிக் கதைக்கப் பழகேலும்? ஏதாவதொரு வேலையெண்ட சாட்டிலையாவது வெளியிலை போய் நாலு பேரோடை கதைச்சு.. சிரிச்சு... வாழ்ந்தால்தான் பாசையும் தெரியவரும். வாழ்க்கையிலையும் ஒரு பிடிப்பு வரும்."

இப்போ அவள் பார்வை "என்ன இதுக்குச் சொல்லுறாய்..?" என்பது போல என்னை நோக்கியது.

அவள் சொல்வது அவளது பார்வையின் நோக்கலுடனான வெளிப்பாடு என்பது எனக்குத் தெரிந்தது. இதற்கு நான் என்ன சொல்லலாம். புலம் பெயர்ந்த எமது நாட்டுப் பெண்கள் பெரும்பாலானோரின் வாழ்வு இப்படித்தானே இங்கு தொடர்கிறது.

எனது மௌனம் அவளை என்ன செய்ததோ..?"பாவம் சுமதி. அவளுக்கு ஏதாவது வேலை எடுத்துக் குடுக்கோணும்." என்றாள்.

ரவுணுக்குள் எனது வேலைகளுடன் நான் விரைந்து கொண்டிருந்தாலும் மனசுக்குள் சுமதியும், அவள் மீதான மரியானாவின் பார்வையும், லலிதா, மெலிண்டா... போன்றோரின் பார்வைகளும் சுழன்று கொண்டே இருந்தன.
ரவுணில் இருந்து திரும்பிய போது வெளியின் அழகுகள் அவ்வளவாக என்னைக் கொள்ளை கொள்ளவில்லை. ரவுணுக்குள்ளேயான அலைச்சலும், அங்கொன்று இங்கொன்று என்று வேண்டி விட்ட சாமான்கள் ஒரு துணிப்பையில் நிரம்பி அது பாராமாய் என் கையில் தொங்குவதால் ஏற்பட்ட தோள்மூட்டின் வலியும்... சூரியன் உச்சிப் பகுதிக்கு வந்து விட்டதால் ஏற்பட்டு விட்ட அதீத வெப்பமும் என்னுள் ஒரு வித களைப்பையே ஏற்படுத்தியிருந்தன.

ஆனாலும் பேரூந்திலிருந்து இறங்கிய போது ஏதோ ஒரு உந்துதலில், எனது வழமையான பாதையை விடுத்து சுற்று வழியான சுமதியின் வீடிருக்கும் பாதையினூடு நடந்தேன். சுமதி அவள் வீட்டு வாசலில்தான் நின்றாள்.நீண்ட காலங்கள் அவள் வீட்டுப் பக்கமே போகவில்லை. வழியில் எங்காவது அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்புகள் கிடைப்பதால் வீட்டுக்கென்று போக வேண்டிய தேவைகளெதுவும் எனக்கு ஏற்படவில்லை.

வீட்டின் முன்றலில் பெரியதொரு செர்ரி (cherry) மரம் கிளைபரப்பி குடை போல விரிந்திருந்தது. சில கிளைகள் செர்ரி (cherry) பழங்களின் கனம் தாங்காமல் நிலம் நோக்கிச் சாய்ந்திருந்தன. இவள் வீட்டுச் செர்ரி(cherry) பழங்கள் சந்தி வீட்டுப் பழங்கள் போல் பெரிதாக இல்லாமல், எங்கள் ஊர் நாவற்பழ சைஸில் சிறிதாக இருந்தன. நன்கு பழுக்காதவைகள் இளஞ்சிவப்பு நிறத்திலும், பழுத்தவை கருஞ்சிவப்பு நிறத்திலும் அழகூட்டின. சுமதி அதன் கீழ் உள்ள நிலத்தைக் கூட்டிக் கொண்டு நின்றாள். என்னைக் கண்டதும் மிகவும் சந்தோசப் பட்டு, முகம் மலர "வாங்கோ... அக்கா வாங்கோ" என்று வரவேற்றாள். என் கைகளுக்குச் சிக்கிய கிளைகளில் ஒன்றில் இருந்து இரண்டு பழங்களை பிடுங்கி வாய்க்குள் போட்டுக் கொண்டேன். நாவற்பழ விதைகள் போலத்தான் இதன் விதைகளும். பழத்தின் சுவை மட்டும் மிகவும் வேறாய்.. தித்தித்தது.

சுமதியின் வீடு மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும், துப்பரவானதாகவும் இருந்தது. ஏற்கெனவே அவள் உள்ளி, வெங்காயம் எல்லாம் போட்டுச் சமைத்திருந்தாலும் மற்றைய தமிழ் வீடுகள் போல சமையல் மணம் வீட்டுக்குள் இருக்கவில்லை. யன்னல்களைத் திறந்து வைத்திருந்தாள்.
எனக்கென கேக், சொக்கலேட்... என்று உள்ளதெல்லாம் கொண்டு வந்து வைத்தாள். சாப்பிடுங்கோ.. சாப்பிடுங்கோ.. என்று அன்புத் தொல்லை கொடுத்தாள். அடிக்கடி கேட்டும் வராத என்னை வீட்டுக்குள் வரவழைத்து விட்டதிலான சந்தோசம் அவள் உபசரிப்பில் தெரிந்தது. கதையின் இடையே எனக்கு "விசராக்கிடக்கு அக்கா. பொழுதே போகுதில்லை. அவர் காலைமை நாலு மணிக்கே வேலைக்குப் போயிட்டார். இனிப் பின்னேரம்தான் வருவார். வந்த உடனே சாப்பிட்டிட்டு அடுத்த வேலைக்குப் போயிடுவார். வர இரவு பத்து மணியாகீடும்." என்றாள்.

வீட்டில் ரீரீஎன், வெக்ரோன், தீபம்... என்று பல தமிழ் தொலைக்காட்சிகளுக்கான இணைப்புகளும், ஐரோப்பியத் தமிழ் வானொலிகள் அனைத்தையும் கேட்பதற்கான இணைப்புகளும் இருந்தன. "எல்லாவற்றையும் தன்னந்தனியே குந்தியிருந்து எத்தினை நாளைக்கெண்டுதான் பார்க்கிறது." அலுத்தாள்.

"நீங்கள் வேறை தமிழாக்கள் வீட்டை போறேல்லையே..?"

"எங்கை அக்கா.! அவருக்கு நேரமில்லை. என்னெண்டு போறது..?தானில்லாமல் தனிய நான் தமிழாக்கள் ஆற்றையும் வீட்டை போனாலும் அவருக்குப் பிடிக்காது"

"......"

"சும்மா சொந்த வீடென்று சொல்லுறது. மாதக்காசு அதுக்குக் கட்டிறதே பெரும்பாடாக் கிடக்கு. அதோடை அவருக்கு இன்னும் இரண்டு தங்கச்சிமார் கலியாணம் செய்யாமல் இருக்கினம். அவையளின்ரை பிரச்சனையளும் முடியோணும்..... அதுதான் அக்கா நானும் ஒரு வேலை செய்வம் எண்டு பார்க்கிறன். ஏதாவது புட்ற்சன்(Putzen) அப்பிடியேதும் இருந்தாலாவது சொல்லுங்கோ.

என்னால் அதிக நேரம் அங்கு இருக்க முடியவில்லை. பிள்ளைகள் மதியச் சாப்பாட்டுக்கு வந்து விடுவார்கள். ஓடிப் போய்ச் சமைக்க வேண்டும். புறப்பட்டு விட்டேன். "அடிக்கடி வாங்கோ அக்கா." இரண்டு மூன்று தரங்களாகச் சொன்னதை நான் படியில் இறங்கும் போதும் சொன்னாள்.
திரும்பிப் பார்த்தேன். எப்படித்தான் உழைத்தாலும் விமோசனம் கிடைக்காத ஐரோப்பியத் தமிழர்களில் அவளும் ஒருத்தியாக... பாவமாக இருந்தது. கட்டாயம் அவளுக்கு ஒரு வேலை எடுத்துக் கொடுக்க வேண்டும். இடைக்கிடையாவது அவள் வீட்டுக்குப் போக வேண்டும். நினைத்துக் கொண்டே விரைந்தேன்.

சந்திரவதனா
யேர்மனி
1.7.2004

திண்ணையில் - (30.8.2004)

V.I.P.Pennkal

தனது பதினாறாவது வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’ தில்லையாடி வள்ளியம்மை

Sunday, August 22, 2004

3D கதைகள்

3D கதைகள் என்றால் எப்படி இருக்கும் என்று தெரியுமா உங்களுக்கு?
தமிழ்ஓவியத்தில் சத்யராஜ்குமார் சமூகம், க்ரைம், சயன்ஸ், - சந்தோசம், துயர், - சேர்தல், பிரிதல் - இறப்பு, வாழ்வு என்று அசத்தியிருக்கிறார். படித்துப் பாருங்கள் - கறுப்பு வெள்ளை கனவுகள்

இவரது என்னை எழுதியவர்களும் தொடர்கிறது.

Wednesday, August 18, 2004

தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம்


வலைப்பதிவுகளின் பட்டியல் அழகான முறையில் தமிழ் மணத்தில் தொகுக்கப் பட்டுள்ளது. உரியவர்கள் அறிமுகப் படுத்த முன் இவ்வார வலைப்பூ ஆசிரியர் சந்தோஸ்குரு முந்திரிக் கொட்டையாகி விட்டார்.

Tuesday, August 17, 2004

மனமுள் - குறும்படம்


சுமதி ரூபனின் மனமுள் படத்துக்கான விமர்சனங்கள் சில Thamilfilmclub இல் எழுதப் பட்டுள்ளன. வாசித்துப் பாருங்கள். முடிந்தால் உங்கள் கருத்துக்களையும் வையுங்கள்.

செருப்பு - குறும்படம்


யாழ் இணையத்திலும், அப்பால் தமிழிலும் இலங்கையில் உருவாக்கப்பட்ட
"செருப்பு" என்னும் குறும்படம் இணைக்கப்பட்டுள்ளது. பாருங்கள்.
முடிந்தால் உங்கள் கருத்துக்களையும் வையுங்கள்.

Saturday, August 14, 2004

ஈழத்தில் இந்திய இராணுவக்காலம்


அன்று ஈழத் தமிழ் மக்களை இரத்தக் கண்ணீர் வடிக்க வைத்த
ஈழத்தில் இந்திய இராணுவக்காலம்
இன்று மீண்டும் வலைத்தளங்களில் பெரும் பரபரப்பாகியுள்ளது.
நீறு பூத்திருந்த விடயம் மீண்டும் நெருப்பாகியுள்ளது.
இதையெல்லாம் வலைப்பதிவுகளில் தேடித் தொகுத்து
நண்பர் BBC யாழ் கருத்துக்களத்தில் பதிந்து கொண்டு

வருவது மிகப் பெரிய உதவியாக உள்ளது.

Thursday, August 12, 2004

ஈழத்தில் இந்திய இராணுவக்காலம்

ஈழத்தில் இந்திய இராணுவக்காலம் - ஒல்காரின் அறிவிப்பு

கனடாவிலிருந்து ஒல்கார் குழுவினர் கேட்டுக் கொண்டதற்கமைய அவர்களுக்கு உதவு முகமாக அவர்கள் தந்த அறிவித்தல் ஒன்றை எனது மனஓசையிலும் இன்னும் பல இடங்களிலும் பதித்தேன். இங்கே எனதான உதவும் நோக்கம் முழுமன ஈடுபாட்டுடனேயே இருந்தது. ஏனெனில் அவர்கள் ஈழத்தில் இந்திய இராணுவக்காலம் என்ற தலைப்பில் இந்திய இராணுவம் ஈழத்தில் இருந்த போதான ஒவ்வொரு அவலங்களையும் சேகரித்து ஒரு புத்தகமாகப் பதியப் போகிறார்கள்.

இந்த அறிவித்தலை எனது மனஓசையில் பதிந்த பின் அது பற்றியதான சர்ச்சைகள் வலைப்பதிவுகள் சிலவற்றில் இடம் பெற்றது பற்றி சுந்தரவடிவேல் எனது பதிவில் சுட்டும் வரை நான் அறியவில்லை. சமீபத்தில் எனக்கு வந்த சில மின்னஞ்சல்கள் கூட இந்திய இராணுவம் சம்பந்தமானதாக இருந்தது என்னுள் கேள்விக் குறியாகியதே ஒழிய விபரம் புரியாதிருந்தது.

முதலில் சுந்தரவடிவேலுக்கு நன்றி. சுந்தரவடிவேலின் சுட்டலின் பின்தான் நேற்று முன்தினம் வந்தியத் தேவனின் எல்லைகள் கடந்து எரிந்த சிறகுகள் பதிவைப் பார்த்தேன்.

வந்தியத்தேவனின் ஆதங்கத்துக்கு என்னால் அரசியல் பதில் அளிக்க முடியாது. ஏனெனில் நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. அரசியல் எப்போதும் அரசியல்தான். அதற்குள் நான் தலைப்போடவில்லை.

ஆனால் அந்தக் கவிதை....! அது என்னது அல்ல. அது ஒல்கார் குழுவினரால் எழுதப் பட்ட அறிவித்தலில் உள்ள கவிதை. அது அவர்களில் ஒருவரால் எழுதப் பட்டது.

அந்தக் கவிதையில் உள்ள வரிகள்

நாட்களின் நகர்வுகளில்
ஞாபகங்களின் உடைவில்
காயங்கள் ஆறுவதும்
ஆற்றப்படுவதும் இயல்பு

தேசத்தின் வேர்களில்
நெருப்பள்ளிக் கொட்டியவரை
வானத்தின் மீது
இருளள்ளிப் பூசியவரை
மறக்கவும் முடியவில்லை
மன்னிக்கவும் முடியவில்லை
இன்னும்..........

பொய்யில்லை. இந்த வரிகள் பொய்யில்லை.

எங்கள் தேசத்தின் மீது, எங்கள் வாழ்வின் மீது, எங்கள் சுயத்தின்... மீது இந்திய இராணுவமும் நெருப்பள்ளிக் கொட்டியது என்பது மறுக்கப் பட முடியாத, மறக்கப் பட முடியாத உண்மை.

வந்தியத்தேவனின் இந்தக் கேள்வி

இந்தியா நெருப்பள்ளி/இருளள்ளி போட்டதென்றால் தமிழ்நாடும் இந்தியாவின் அங்கமல்லவா? அப்படியென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் உங்கள் பார்வையில் குற்றவாளிகள் தானே?

அர்த்தமற்றதாகவே எனக்குப் படுகிறது.

இந்திய இராணுவத்தையும் இந்திய மக்களையும் ஒன்றாக ஏன் பார்க்க வேண்டும்.
சிங்கள இராணுவத்திடமிருந்து தமிழர்களைப் பாதுகாத்தவர்களில் சிங்கள மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. பதவியைத் துர்ப்பிரயோகம் செய்யும் இராணுவத்தையும், மனித நேயமிக்க சாதாரண பொது மக்களையும் எந்தக் காலத்திலும் ஒன்றாகப் பார்க்க முடியாது.

நாட்டுப் பற்றோடு போர் புரிய வந்தவன் எவனும் காட்டு மிராண்டித்தனமானவனாய்.. உடலிச்சை கொண்ட வெறித்தனமானவனாய்.... போர் தர்மத்தை மறந்த அதர்மவாதியாய் இருக்க மாட்டான். எந்த அரசியல் வலைகளில் அவர்களில் சிக்கியிருந்தாலும்... யாரது பகடைக்காய்களாக அவர்கள் ஆகியிருந்தாலும்.. அவர்கள் செய்தது அவர்களது தனிப்பட்ட இச்சையினாலான செயற்பாடுகள்.

தொடரும்

Tuesday, August 10, 2004

ஈழத்தில் இந்திய இராணுவக் காலம்


நினைத்தாலே மனசு குருதி வடிக்கும் விதமாக அமைதி காக்க என்று சொல்லி வந்திறங்கிய இந்திய இராணுவம் எம் மண்ணில் ஆடி விட்டுச் சென்ற அகோரத் தாண்டவம் பற்றியும், செய்து விட்டுச் சென்ற அநியாயங்களினாலான ஆறாத வடுக்கள் பற்றியும்,எழுதி முடிக்க முடியாது.

செய்ததையும் செய்து விட்டு தாம் எதற்காகப் போனோம் என்பதையோ, அதன் அரசியல் காரணங்களையோ, போன வேலையை இராணுவம் செய்ததா, இல்லையா, ஏன் இல்லை என்பதையோ சொல்லாமல், மாறாக எப்படி அவ்வூரிலிருந்த ஒரு பெண்ணை படிப்படியாக மயக்கிப் படுக்கை வரை அழைத்துச் சென்றனர் என்பது பற்றி வீரப்பிரதாபம் செய்திருக்கிறார்கள் என்பதை சுந்தரவடிவேலின் பதிவின் மூலம் அறிந்த போது இன்னும் மனசு கொதிக்கிறது.

இன்னும் இவர்களது வெறியாட்டம் பற்றி கரிகாலனும், ஈழநாதனும்
பதிந்துள்ளார்கள்.

Sunday, August 08, 2004

வலைவலம் - 8.8.2004


திருட்டுத்தனமா ஒரு கணவன் மனைவியின் டயறியைக் குறிப்பைப் படிச்சுப் பார்த்திருக்கிறார் ராசாதிராசா.செய்யிறதைத்தான் செய்தார். தவறுக்குத் துணையாக வள்ளுவரையும் அல்லவா அழைத்திருக்கிறார்

Nuernberg - Germany


30.4.2004

Saturday, August 07, 2004

Troya


இவ்வார வலைப்பூ ஆசிரியர் கார்த்திகேயன் சரித்திரங்களைத் தொட்டிருந்தார். சுவையாக இருந்தது. அவர் Troya படம் பார்த்து விட்டு அது பற்றி தனது பதிவில் எழுதியுள்ளார்.Troya படத்தை நானும் பார்த்தேன். எனக்கு நல்லாகப் பிடித்திருந்தது. எனது நாட்டிலும் போர் சூழ்ந்திருப்பதாலோ என்னவோ அப்படம் என்னை வெகுவாகப் பாதித்தது என்றே சொல்லலாம். அரச குடும்பம் என்கிறோம். அவர்களும் மனிதர்கள்தான். போர் என்ற ஒன்றால் அவர்கள் படும் துயர்.. பிரிவு.. எல்லாமே என்னைப் பாதித்தன. கதை வசனங்கள்.. அருமை. தமிழ்படங்களில் போல நீட்டி முழக்காது, நறுக்கென்று அவர்கள் சொல்லும் ஒரு வார்த்தைக்கு ஓராயிரம் பெறுமதி. தமிழ்ப்படங்களும் இப்படி எடுக்கப் படவேண்டும்.

கார்த்திகேயன் இரு கேள்விகள் கேட்டு விட்டு பதில் தராது போய் விட்டார்.

கேள்விகள்-
* 1960-களில் சைனா நம் மீது படை எடுத்தது. ஆனால் அதுக்கு முன்னாடியே ஒரு இந்திய மன்னர் சைனா மீது படை எடுத்திருக்கிறார். யார் அவர்?

* 1500-களில் உலகின் மிகப்பெரிய நகரங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை வகித்தது ஒரு இந்திய நகரம். அது எது?

Friday, August 06, 2004

வலைவலம் 6.8.2004


நான் சற்றுத் தாமதம். நேற்றுத்தான் சத்யராஜ்குமாரின் என்னை எழுதியவர்கள் 10வது அங்கம் வந்தது பற்றி எழுதினேன். இன்று தமிழ்ஓவியம் பக்கமாகப் போனால் 11வது அங்கமும் வந்து விட்டது. அதில் அவருக்குப் பரிசு கிடைத்த அந்நிய துக்கம் பற்றியும் குறிப்பிட்டுள்ள்ளார். கூடவே பராவின் பக்கமும் அழைத்துச் செல்கிறார். பாரா நாவல் எழுத.. சில ரிப்ஸ் தருகிறார்.

Thursday, August 05, 2004

வலைவலம் 5.8.2004


துகள்கள் சத்யராஜ்குமாரின் பிழைப்பு (கொஞ்சம் நியம் கொஞ்சம் கதை) சூரியன்.கொம் மிலும் பதியப் பட்டுள்ளது. இவரது என்னை எழுதியவர்கள் 10வது அங்கம் தமிழ்ஓவியத்தில் வந்து விட்டது.

ஜெயந்தியின் ஆக்கங்களையும் பல இடங்களில் காணக் கூடியதாகவுள்ளது. தமிழ் ஓவியத்தில் இவரது சுயம் சிறுகதை வந்துள்ளது. இம்மாத திசைகளும் வெளிவந்து விட்டது. அதில வந்திருக்கம் ஜெயந்தியின் ஈரம் கதை எனக்குப் பிடித்திருக்கிறது.
சிங்கப்பூரின் சட்டங்களையும் ஒழுங்குகளையும் பார்த்து வியந்த கதாநாயகி ஒரு தரம் சட்டத்தால் தண்டிக்கப் பட்ட போது தான் மதித்த சட்டமும், ஒழுங்கும் மனிதநேயமற்றதாக இருப்பதைக் கண்டு மனமுடைந்து போகிறாள். இது கதையின் கரு. அதை சிங்கப்பூர் வாழ்வோடு கலந்து சொல்வது நன்றாக இருக்கிறது.

ஐரோப்பாவில் 2 தாலி அணியும் கலாச்சாரமும் இருக்கிறதே.
வீட்டில் ஒரு தாலியும் வெளி இடங்களுக்கு போகும் போது அணிந்து கொண்டு தங்கள் அந்தஸ்தை காட்டுவதற்காக 100 அல்லது 150 பவுணில் இன்னொரு தாலியும் வைத்திருக்கின்றார்களே. இது தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாதிக்கவில்லையா? திவாகரன் கேட்கிறார் பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Wednesday, August 04, 2004

மூன்று முடிச்சு


மூக்குத்திப் பிரச்சனை ஒரு புறம் இருக்க இப்போ தாலியின் - மூன்று முடிச்சு பற்றிய காரணம் கேள்வியாய் எழுந்துள்ளது. நிர்வியாவின் நண்பி சொன்ன "அலைபாயுதே" படத்தில் வரும்
மூன்று முடிச்சுக்கான காரணம்
உரிமைக்காக முதல் முடிச்சு
உறவிக்காக இரண்டாம் முடிச்சு
ஊருக்காக மூன்றாம் முடிச்சு


இந்தப் பதிலில் திவாகரனுக்குத் திருப்தியில்லை.

நான் அறிந்த மூன்று முடிச்சுக்கான காரணங்களில் ஒன்றைக் கீழே தருகிறேன். இதுவும் எவ்வளவு தூரம் திரிபடைந்துள்ளது என்பது எனக்குத் தெரியாது.

மூன்றுமுடிச்சு


முதல் முடிச்சைக் கணவனும்
மற்றைய இரு முடிச்சுக்களையும் கணவனின் சகோதரி(கள்)யும் போடுவார்கள்.

முதல் முடிச்சு
பெண்ணே..! நான் பிழை விட்டாலும் நீ பிழை விடக் கூடாது.
என்று கணவன் சொல்லிப் போடுவது.

மறு இரண்டு முடிச்சுக்களும்
நான் பெண்ணாகப் பிறந்தேன்
நீ மாட்டுப் பெண்ணாக வந்தாய்
நான் மகளாகப் பிறந்தேன்
நீ மருமகளாக வந்தாய்
மகளாகவும் மருமகளாகவும் இருவரும் உள்ளோம்.
ஆனால் என் பெற்றோர் வயோதிபர்கள் ஆகும் போது நான் இன்னொரு வீட்டுக்கு மாட்டுப் பெண்ணாகப் போய் விடுவேன். அப்போது நீதான் மகளாக இருந்து அவர்களை அன்போடும் பாசத்தோடும் கவனிக்க வேண்டும். அன்பு எல்லோரிடமும் வரும். ஆனால் பாசம் இரத்த உருத்து உள்ளவர்களிடம் மட்டுந்தான் வரும்.

ஆனால் நீ அன்பாகவும் (இதற்கு ஒரு முடிச்சு)
பாசமாகவும்(இதற்கு இன்னொரு முடிச்சு)

அவர்களிடம் நடக்க வேண்டும், என்று கணவனின் சகோதரி(கள்) சொல்லிப் போடுவது.

Tuesday, August 03, 2004

மொய்


சமைச்சுக் கொண்டிருக்கிற நேரமாகப் பார்த்து தொலைபேசி அலறுகிறது.

"இந்தச் சனங்களுக்கு வேறை வேலையில்லை. சமைச்சுக் கொண்டிருக்கிற நேரமாப் பார்த்துத்தான் ரெலிபோன் பண்ணுங்கள். நேற்றும் வெங்காயம் எரிஞ்சு போட்டுது."
புறுபுறுத்த படி சமையலறையிலிருந்து வெளியில் வந்த செண்பகக்காவின் மனசு ஏதும் தொல்லைபேசியாக இருக்குமோ என்று தயக்கம் காட்டினாலும், கால்கள் விரைய கைகள் தொலைபேசியைத் தூக்க...

"வணக்கம் அக்கா. நான் சாந்தன் கதைக்கிறன்."

"எந்தச் சாந்தன்..? கறுத்தச் சாந்தனோ..?"

"இல்லையக்கா"

"அப்ப... எரிமலை சாந்தனோ..?

"இல்லை...யக்கா. நான் அண்டைக்கு.. மைக்டொனால்ட்ஸ் சிறீயின்ரை கலியாணவீட்டிலை உங்களோடை கதைச்சன்.."

"அட நீங்களே..? சொல்லுங்கோ தம்பி என்ன விசயம்..?"

"உங்கடை வீட்டுக்கு எப்பிடியக்கா வாறது? ஒருக்கால் வழியைச் சொல்லுவிங்களோ..?"

இவன் ஏன் இப்ப இங்கை...! சொந்தமும் இல்லை. நட்பும் இல்லை. எப்பவோ ஏதோ ஒரு கலியாண வீட்டிலை சந்திச்சது. அவ்வளவுதான். என்ரை கணவரை முந்தியே இடைக்கிடை றோட்டு வழியே கண்டு கதைச்சிருக்கிறானாம். அண்டைக்கும் கலியாண வீட்டிலை மொய் எழுதிற வரிசையிலை நிண்டு மைக்கை விழுங்கினவன் மாதிரி பெரிய சத்தமாகக் கதைச்சுக் கொண்டு நிண்டவன். எங்கடை இடத்திலையிருந்து 150கி.மீற் தள்ளியிருக்கிறான்.

"தம்பி..! என்ன விசயம்? இவ்வளவு தூரம் எங்களைத் தேடி வர..?"

"அது வந்து... மகள் சாமத்தியப் பட்டிட்டா. வாற சனிக்குத் தண்ணி வார்க்கிறம். அதுதான் கார்ட்டைக் கொண்டு வந்து நேரேயே தந்திட்டுப் போவமெண்டு....."

உந்தக் கார்ட் தாறதுக்கு பெற்றோல் செலவழிச்சு 150கி.மீற் கார் ஓடி வரப் போறிங்களே..? ஏன் தம்பி உங்களுக்கு வீண் அலைச்சல்? தபாலிலை அனுப்பி விடுங்கோ.
செண்பகக்கா ஏதோ அவன் அலைஞ்சு கஸ்டப்படுறதைப் பார்க்க தனக்கு விருப்பமில்லை என்பது போலக் கதைத்தாலும், உள்ளுக்குள் 150கி.மீற் தூரத்திலையிருந்து வாறவனைச் சும்மா அனுப்பேலுமே! சமைச்சுமெல்லோ கொடுக்கோணும்.. என்ற பயம்தான் இருந்தது.

"பிறகு நீங்கள் குறை பிடிக்க மாட்டிங்களே..?"

"இதிலை குறை பிடிக்க என்ன தம்பி இருக்குது? நான் ஒண்டும் குறை நினைக்க மாட்டன். நீங்கள் தபாலிலை அனுப்புங்கோ.

ம்.........
திரும்ப இண்டைக்கும்.. அடுப்பிலை வெங்காயம் எரிஞ்சு போட்டுது. நேற்றும் இந்த மனிசன் முகத்தைக் கோணி வைச்சுக் கொண்டு சாப்பிட்டது.

சனத்துக்கு வேறை வேலையில்லை. மகள் சாமத்தியப் பட்டிட்டுதாம். மகளையே நான் ஒரு நாளும் கண்ணாலை காணேல்லை. இப்ப உதுக்குப் போய் மொய் எழுதோணுமே! சா... யேர்மனியை விட்டிட்டு பேசாமல் செட்டி நாட்டிலை போய் இருக்கலாம் போலை இருக்கு. செட்டி நாட்டிலை கலியாணத்துக்கே மொய் 25பைசாதானாம்.

சந்திரவதனா
3.8.2004

Monday, August 02, 2004

வலைவலம் - 2.8.2004


வாலிப வயதும் பாலியலும்


பிள்ளைகள் ரீன்ஏஜ்ஜைத் தொட்டு விட்டாலே போதும்.
பருவவயதுக்கேயுரிய தவறுகளிலிருந்து அவர்களை எப்படிக் காப்பற்றலாம் என்று பெற்றொர்களின் மனதில் தோன்றும் பெருங்கவலையில் - பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளை விதித்து சும்மா இருக்கும் பிள்ளைகளிடம் கூட
விசனத்தை ஏற்படுத்துமளவுக்கு நடந்து கொள்கிறார்கள்.

நான் இப்ப அவனை வெளியிலையே விடுறதில்லை. தெரியும்தானே... யேர்மன் பெடியள் எப்பிடியெண்டு. அதுகளோடை சேர்ந்து இவனும் சிகரெட் குடிக்கப் பழகினால் என்ன செய்யிறது.?"
12 வயது மகனை பாடசாலை தவிர வேறெங்கும் செல்ல அனுமதியாது.. விளையாடக் கூட விடாது தடுத்து வைத்திருக்கும் ஒரு தாய் இவர். இந்தக் கட்டுப்பாடு இந்த 12 வயதுப் பையனை எந்தளவுக்கு மனமுடைய வைத்து குரோதமான பிழைகளைச் செய்ய வைக்குமென அந்தப் பெண்ணுக்குப் புரிய வைக்க முடியவில்லை.

"எனக்குப் பாருங்கோ. இப்ப எல்லாம் காலைமை எழும்பினால் வீட்டிலை ஒரே சண்டைதான். இவன் என்னடா எண்டால் தலைக்கு Gel பூசுறான். ரவுசரை தொழதொழா எண்டு போடுறான். பார்க்கச் சகிக்கேல்லை. இந்த ரவுசராலேயே எனக்கும் அவனுக்கும் சதா சண்டை. தலையிடி தாங்க முடியேல்லை."
இது பாடசாலையில் மிகுந்த கெட்டிக்காரனாக இருக்கும் 20 வயது மகனின் தாயார். ஊரிலே தலைக்கு எண்ணெய் பூசித் தலையைப் படிய வைக்கவில்லையா?
பெல்பொட்டம் வந்த காலத்தில் எம்மவர்கள் எல்லாம் பெல்பொட்டம் போடவில்லையா.
அது போலத்தான் இதுவும் ஒரு ஸ்ரைல். இது விடயங்களில் அளவுக்கதிகமான கட்டுப்பாடு அவசியம் இல்லை என்பதை அவளுக்குப் புரிய வைப்பது கஸ்டமாகத்தான் இருக்கிறது.

இதே போலத்தான் பாலியல் சம்பந்தமான பிரச்சனைகள், கேள்விகள், விளக்கங்களிலும் அனேகமான பெற்றோர் புரிந்துணர்வின்றி பிள்ளைகளுடன் நடந்து கொள்கிறார்கள்.

எடுத்ததற்கெல்லாம் அடி.. பிடி.. என்று அதிகாரமாக நடந்து கொண்டால் பிள்ளைகள் மனதில் ஒரு வெறுப்புணர்வே தோன்றும். இதைப் பெற்றோர்கள் கருத்தில் கொண்டு பிள்ளைகளுடன் ஆற அமர இருந்து நட்போடு பேச வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளுக்கு பெற்றோரின் மேல் இது சம்பந்தமாகப் பேசுதற்குரிய நம்பிக்கை பிறக்கும்.

இது வியடமாக இர.அருள் குமரன் சொல்கிறார்
பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பெண்ணுக்கு, அந்நிய ஆண் வழிமறித்து சாதாரணமாக பேசத்துவங்கினாலே அநியாயத்துக்கு நடுக்கம் வருகிறது, அவளின் பயம் அவனுக்கு ஊக்கம் தருகிறது. இயல்பாக பதிலளித்து சென்றால் அவனே அவளின் நண்பனாக மாறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது என்பதும், அவனுடைய நோக்கம் சரியானதல்ல என்றால் அவனிடமிருந்து எப்படி தன்னை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்பதும் அவளுக்கு தெரிவதில்லை
இர.அருள் குமரன் இது விடயமாக இன்னும் பலவற்றை வாலிப வயதும் பாலியலும் என்ற தலைப்பில் தனது பதிவில் விளக்கமாகவும் அழகாகவும் பதித்துள்ளார். பெற்றோர்கள் கண்டிப்பாக வாசித்துப் பயன் பெறுங்கள்.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite