
தீட்சண்யன்
இதயத்தின் ஓரத்தில் ஆறாத சோகம்
விழிகளின் ஈரத்தில் வடியாத ஏக்கம்
உறக்கத்தில் கூட உறங்காத நினைவு
இதையெல்லாம் தந்து நீ எங்கு சென்றாய்...?
அண்ணா..!
இப்போ நான் மிகவும் பலவீனமானவளாகி விட்டேன்.
அடிக்கடி அழுவதும், அர்த்தமின்றிக் கோபப் படுவதும்
நீண்ட இரவுகளிலும் சோர்ந்த பொழுதுகளிலும்
நீயில்லா நினைவுகளில் வீழ்ந்து போய்க் கிடப்பதுவும்
என் வாழ்க்கையாகி விட்டது.
எனக்குள்ளே ஒளிந்திருக்கும் அழுகை அருவியாகக் கொட்ட இன்ன இன்னதுதான் காரணமென்றில்லாமல், சிறு துரும்பு அசைவில் கூட துயர் என்னைத் தாக்க நிலை குலைந்து போகிறேன்.
இன்றைய இப்போதைய அணை உடைத்துப் பாயும் என் அழுகைக்குக் காரணம், உன் மகளின் பிறந்தநாள் புகைப்படம்.
உனக்கு நான் எழுதவென்று, எனக்குள் நான் எழுதி வைத்தவைகளை உனக்கு அனுப்ப முடியாத படி, உன் முகவரியைக் கூடத் தராது நீ எனை விட்டுப் போன ஒரு சோகமான பொழுதில்தான் அப் புகைப்படங்கள் என்னை வந்தடைந்தன.
கடித உறையில் கூட நீதான் உன் கைப்பட விலாசமெழுதியிருந்தாய். எப்படி என் நெஞ்சு படபடத்தது தெரியுமா..? உறை கசங்காமல் அவசரமாய்ப் பிரித்து, உள்ளிருந்த படங்களுக்குள் மனங் கலங்கியபடி உன் முகம் தேடினேன்.
ஒரு படத்தில் ஷெல்லிலே தொலைந்து போன உன் கால் பற்றி யாருமே காணாத படி எப்படியோ மறைத்து உன் பிள்ளைகளுக்கு நடுவில் அழகாக நீ அமர்ந்திருந்தாய். வாரி விடப்பட்ட நெளிந்த சுருண்ட உன் கேசமும், புன்முறுவல் பூத்த உன் முகமும் எப்போதும் போல் அழகாய்...........! அதுதான் உன் இறுதிப் புகைப்படம் என நினைக்கிறேன்.
அந்தப் புகைப்படங்களைத்தான் மீண்டும் இன்றெடுத்து ஒவ்வொன்றாகப் பார்த்தேன். ஒரு படத்தில் உன் மகள் அழகாக பரதநாட்டிய முத்திரைகளுடன் அபிநயித்த படி....! புகைப்படத்தை உற்றுப் பார்க்கும் போதுதான் அதைக் கண்டேன். ஒரு ஓரமாக உன் பாதம் நீண்ட படி...... பெருவிரல் இல்லாது..! ஓ.......வென்று அழுது விட்டேன். உன் கால் படத்தில் வராது என்ற நம்பிக்கையுடன்தான் நீ ஓரமாய் உட்கார்ந்திருந்திருப்பாய். உன் மகளைப் படம் பிடித்தவனும் சரியாகப் பார்க்கவில்லை. நான் பார்த்து விட்டேன்.
இப்படித்தான் அடிக்கடி ஏதவாது காரணங்கள், துயரத்துக்கு நான் போட்டு வைத்திருக்கும் அணையை உடைக்க வரும். அழுகை வெள்ளமாய்ப் பாயும்.
அழுகை ஓய்ந்த சில பொழுதுகளில் மூக்கை உறிஞ்சிய படியோ, சமைத்து முடிந்த பொழுதுகளில் கழுவிய கைகளைத் துடைத்த படியோ, வேலையால் வந்ததும் உடைகளை மாற்றிய படியோ, படுக்கைக்குப் போன பின்னும் தூக்கம் வராத பொழுதுகளிலோ நான் உன் புகைப் படங்களை எடுத்துப் பார்ப்பேன். துக்கம் நெஞ்சை அடைக்கும். பக்கம் பக்கமாக நீ எனக்குப் பிரியமாக எழுதிய கடிதங்களை எடுத்து வாசித்துப் பார்ப்பேன். அழுகை வரும்.
இன்றும் மூக்கை உறிஞ்சிய படி உனது ஒரு கடிதத்தை எடுத்தேன். அழுகை ஓய்ந்திருந்தாலும் விம்மலும் பெருமூச்சும் இன்னும் ஓயாதிருந்தன. கன்னத்தில் எச்சமாய்க் கண்ணீர் அரை குறையாகக் காய்ந்தபடி இருந்தது.
நான் வாசிக்கத் தொடங்கினேன்.
157/1 OLR Lane
Hospital Road
Jaffna
Srilanka
29.6.1991
பிரிய தங்கைக்கு,
உனது தொகுதி தொகுதியான கடிதம் இன்று - இப்போ கிடைத்தது. ஆற்றாமையினாலும், விரக்தியினாலும் இறுகிப் போயிருந்த என்னுள் எரிமலை வெடித்தது போன்ற கொந்தளிப்பு உருவாகி கண்ணீராய்ச் சொரிகிறேன்.
என்னையே மாய்த்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவேசம் வரும் கட்டங்களில் இப்படியான அன்புப் பிரவாகங்கள் தாக்கி - என்னுள் இருக்குமெல்லாம் பீறிட்டு வெளியேறுவதால் ஒரு விதமான களைப்பும் ஓய்வும் ஏற்படுகிறது.
20.12.90 அன்று எனது பாடசாலை ஆசிரியர்களுக்குரிய சம்பளப் பணத்தை எடுப்பதற்காக கொழும்பு சென்றேன். அவ்வேளை எமது தம்பி பார்த்திபன் யேர்மனி பயணமாகத் தயாராக நின்றான். சந்தோசமாக அவனை பயணமனுப்பினேன். வவுனியாவில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்ததால் கொழும்பில் 29ந் திகதி வரை நின்றேன். அங்கு நின்ற ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக எனது பிள்ளைகளுக்குத் தேவையான சில கல்வி உபகரணங்கள் உடைகள் போன்றவற்றை வாங்கினேன்.
29.12.90 அன்று வவுனியா வந்தும் - சீனி, சவர்க்காரம் போன்றவற்றிற்கு ஊரில் தட்டுப்பாடு என்பதால் - 30.12.90 வரை தங்கி நின்று அப்பொருட்களை வாங்கினேன். இதற்கிடையில் எத்தனையோ இராணுவத் தடைகளில் பார்த்திபன் பயணிக்கும் போது தந்து விட்ட மின்சார உபகரணங்களைப் பறிகொடுத்தேன்.
காலையில் ஒரு சூட்கேசுடனும், மூன்று பைகளுடனும் சைக்கிளில் கடைசித் தடையையும் தாண்டினேன். மிதிவெடி நிறைந்த வயல்களினூடு - தொடை வரை சேறு புரள சைக்கிளை முக்கி முக்கித் தள்ளினேன். இனியென்ன..! என்ற பூரிப்பில் முந்தி முந்தி வந்தேன். பூந்தோட்ட கிரவல் பாதையில் ஏறும் போது 100 யாருக்கப்பால் - எனது வலது புறமாக ஒரு பவல் Armoured car ம் இரண்டு Trucks ம் வருவதைக் கண்டேன். சனங்கள் இடது புறமாக ஓடினர். நானும் சைக்கிளில் ஏறி ஓடினேன்.
Firing தொடங்கி விட்டது. பல சைக்கிள்கள் விழுந்தன. பெரிய காயங்களில்லை. நானும் சைக்கிளை ஒரு மரத்துடன் சாத்தி விட்டு, பெரிய மரமொன்றின் பின்னால் படுத்தேன். தொடர்ந்து Firing. எனக்குப் பக்கத்தால் எல் 222....222 என்று குண்டுகள் பாய்ந்தன. ஓய்ந்தன. - பின் பாய்ந்தன. பின்னர் Armoured car இலிருந்து Canonshell முழங்கியது. பாரிய பயங்கரச் சத்தம். என்னருகில் ஒருவன் நின்றான். Canon தொடங்க - பாய்ந்து கிடங்கில் வீழ்ந்து ஓடி விட்டான். என்னால் அசைய முடியவில்லை. பயம் - எதுவும் நடக்காதென்ற நம்பிக்கை. படுத்திருந்தேன்.
மிகப் பாரிய ஓசையில் Canon குண்டுகள் பட்டுக் கொப்புகள் முறிந்தன. திடீரென மின்வெட்டும் அதிர்ச்சி. தலை நிமிர்த்தி என் உடலைப் பார்த்தேன்.
(மல்லாக்காகப் படுத்திருந்தேன்.) என் முழங்கால் இருந்த இடத்தில் கொழுப்பும், இரத்தமும், சதையுமாக ஒரு பள்ளம். வெள்ளையாக எலும்புகள். காலை அசைத்தேன். இரண்டு எலும்புகள் உரசி....... ஐயோ..... அம்மா.....! என்று என்னால் முடிந்தளவு பலமாகக் கத்தினேன். கண்ணீர் வந்தது. பதிலாக படபடவென குண்டுச் சத்தம் வந்தது.
எனது மற்றைய கால் பெருவிரல் போனதோ, கை முறிந்ததோ அந்தக் கணத்தில் எனக்குத் தெரியாது. நான் இப்படியே இருந்தால் செத்து விடுவேன் எனத் தெரிந்தேன். குருதி அருவியாகப் புல்லில் ஓடிக் கொண்டிருந்தது. நான் மயக்கமாவதை உணர்ந்தேன்.
கூடாது.... இது ஆபத்து...... என என்னறிவு உணர்த்தியது. திரும்பிப் பார்த்தேன். சைக்கிள் நிற்கிறது. எனது சக்தியெல்லாவற்றையும் கூட்டி - அண்ணை என்னைத் தூக்குங்கோ...! - என்று கத்தினேன். மீண்டும் புலன்கள் குறைகிறது. யாரோ ஒருவர்(நாட்டாண்மை) வந்து என்னைப் பார்த்தார். - ஐ..யே..யே - என்றார்.
- பொறுங்கோ வாறன். - என்றார்.
எங்கோ எப்படியோ போய் நால்வர் வந்தனர். என்னைத் தூக்கினார்கள். தொடர்ந்து A.K.47 Firing. - அண்ணை என்ரை சாமான்களும் சைக்கிளும். - என்றேன். - ஆளே முடியப் போகுது. சைக்கிளாம். - என்றார்கள்.
கால் புல்லில் தேய, குருதி ஆறாய் ஓட தூக்கி வந்து சாக்கில் கிடத்தி (இயக்கம் அல்ல) Tractor இல் ஏற்றினார்கள். ரக்ரர் பெட்டி முழுக்க இரத்தம். பெடியளின் சென்றிக்கு வர சனம் குவிந்தது புதினம் பார்க்க. எனக்குத் தெரிந்த பெடியள் யாரும் இல்லை.
ரக்றர் ஓட்டி மேற்கொண்டு பயணிக்க மறுத்தான். மினிவான்கள் ஏராளம் நின்றன. யாவரும் மறுத்தனர். என்னைக் கிட்டிய மருத்துவமனையான கிளிநொச்சிக்குக் கொண்டு போகக் கூட மறுத்தனர். - நான் செத்து விடுவேன். - என்று நம்பினர்.
யாரோ.... எனது மனைவியின் தூரத்து உறவினர் என்னுடன் வர ஒப்புக் கொண்டார். எனக்கு அவரைத் தெரியாது. அவருக்கு என்னைத் தெரியுமாம்.
- எனது சைக்கிளையும், சூட்கேசையும் எடுத்து வையுங்கோ. - என ஒரு அன்பரிடம் சொன்னேன். பத்திரிகை நிருபர்கள் முகவரி கேட்டனர். சொன்னேன். செஞ்சிலுவைச் சங்க வாகனம் வந்தது. உதவும் படி ஆங்கிலத்தில் கேட்டேன்.
அவன் எனது இடுப்புப் பட்டியை உருவி, ஒரு தடி முறித்து முறுக்கிக் கட்டினான்.(இரத்தம் போகாதிருக்க). ஒரு கோப்பை தேநீர் தந்தான். தான் அநுராதபுரம் போவதாயும் என்னை யாழ்ப்பாணம் போகும் படியும் சொன்னான். நல்லவன்.
இறுதியில் மினிவான்காரன் ஒருவன் கிளிநொச்சி போக 5000ரூபா கேட்டான். ஒப்புக் கொண்டேன். வழி வழியே வாகனத்தின் படிகளினூடு குருதி வடிந்ததாம். நான் ஏதேதோ கதைத்தேனாம். - மயங்கினேனாம். அது பெரிய கதை. பின் கிளிநொச்சி மருத்துவமனையில் டெக்ஸ்ற்றோஸ் ஏற்றினார்கள். இன்னும் பத்து நிமிடம் தாமதமானால் இறந்திருப்பேன் என்றார்களாம். (இறந்திருக்கலாமென இப்போதெல்லாம் நினைக்கிறேன்.)
மீண்டும் அங்கிருந்து பூநகரி ஜெற்றிக்கு வர செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்புலன்சுக்கு டீசலுக்குப் பணம் கேட்டார்கள். 3200ரூபா கொடுத்தேன். பின்னர் ஜெற்றியிலிருந்து யாழ்ப்பாணம் வர 1300ரூபா கேட்டார்கள். கொடுத்தேன்.
நடுநிசியில் யாழ் மருத்துவமனையில் வைத்தியர்கள் சொன்னார்கள் - நீரெண்ட படியால் வந்திருக்கிறீர். உமக்கு மனோதிடம் கூட.....! - என்று. (என் மனோ திடத்திற்காக வருந்துகிறேன்.)
ஆறுமாத காலமாக ஒரு கால் இல்லாமல், ஒரு கை இயங்காத நிலையிலிருக்கிறேன். போன சனிக்கிழமை எக்ஸ் றே எடுத்தேன். கை எலும்பு பொருந்தவில்லை. அதை மீள வெட்ட வைத்தியர்கள் விரும்ப வில்லை. முன்னைய மருத்துவ வசதிகள் இப்போ இங்கில்லை. கால் போட்டாலாவது ஏதாவது செய்யலாம். ஜெயப்பூர் கொம்பனியில் கால் இல்லை. கூட்டுப் படைத் தலைமையகம் கால் கொண்டு வர மறுக்கிறது...
எனது வீட்டுக் கேற்றைத் தாண்ட முடியாத நிலையில் பார்த்த முகங்களையே திரும்பத் திரும்பப் பார்த்த படி, யாரோ சொன்ன தகவல்களைக் கேட்ட படி முடங்கியிருந்த எனக்கு இப்போ ஆறுதல் தரும் ஒரு விடயம் பொட்டம்மான் அவர்களிடம் கடமையாற்றுவது ஒன்றுதான். அவர்களில் ஒருவர் காலையில் வந்து என்னை மோட்டார் வாகனத்தில் ஏற்றிச் சென்று மாலையில் எனது கடமை முடிந்ததும் என்னை வீட்டில் கொணர்ந்து விடுவார். அங்கு கடமையாற்றும் பொழுதுகளில் நான் மிகுந்த ஆத்ம திருப்தி அடைகிறேன்.
இது ஒரு துன்பியல் கடிதமாக அமையக் கூடாது என்பதற்காகப் பலவற்றைத் தவிர்த்துள்ளேன். என்னால் தாளமுடியவில்லையம்மா. எப்படியிருந்த நான் எப்படிக் கூட்டுப் பறவையாய்ப் போனேன். நீ வருந்தாதே.
உன் பிரிய
அண்ணன்.
இப்போது நான் அழவில்லை. மனசு பாரமாக இருக்கிறது. கடிதத்தை மூடி வைத்த பின்னும் படம் போல நினைவுகள். நீயும் நானும் எமது ஆத்தியடி வீட்டில் - விறாந்தை நுனியில் குந்தியிருந்து, பிச்சிப் பூப்பாத்திக்குள் காகிதக் கப்பல் விட்டதிலிருந்து..... எத்தனையோ நினைவுகள்..! எப்படி வாழ்ந்தோம் எமது பருத்தித்துறை மண்ணில்..! ஏன் இன்று இப்படியானோம்..?
பத்து வருடங்களாக ஒற்றைக் காலுடன் துயர்களைச் சுமந்த நீ.....
உனது ஒவ்வொரு நிலை பற்றியும் எனக்கு எழுதிக் கொண்டிருந்த நீ....
இப்போது மட்டுமேன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய்..?
போவதற்கு சில நிமிடங்கள் முன்பு கூட
- டொக்டர் என்னைக் கெதியாச் சுகப் படுத்தி விடுங்கோ. நான் புலிகளின் குரல் வானொலிக்குக் கவிதை எழுதோணும். - என்று சொன்னாயாமே...!
- தங்கைச்சி யேர்மனியிலையிருந்து ரெலிபோன் பண்ணினவளோ..? - என்று கேட்டு, டொக்டர் ஓமென்றதும் கண்களில் ஏதோ மின்னத் திருப்திப் பட்டாயாமே..!
பிறகேன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய்..?
முகவரியைக் கூடத் தராது சென்று விட்டாயே..! உனக்கு எழுத என்று நான் எனக்குள் எழுதி வைத்தவைகளை எங்கே அனுப்ப........?
13.5.2000 அன்று (தனது 42வது வயதிலேயே) காலமாகி விட்ட
எனது அண்ணன் கவிஞர் தீட்சண்யனின் - நினைவாக....
சந்திரவதனா
யேர்மனி
9.7.2000