Wednesday, March 28, 2007

கணவாய்க் கறியும் அப்பாவும்

பல இனிமையான நினைவுகள் எம்முள் பதிந்திருந்து அவ்வப்போது அவை மீட்டப் படுவது இயல்பானதே. இது என்னுள் மீட்டப்படும் ஒரு உவர்ப்பான நினைவு.

சமையலறையில் கணவனும் மனைவியும் சேர்ந்து சமைப்பது என்பது உண்மையிலேயே ஒரு மகிழ்வான விடயந்தான். தனியே எப்போதும் சமையலறையில் மாயும் மனைவியுடன் கணவனும் சேர்ந்து சமைக்கும் போது அந்தச் சமையலறைக்கே ஒரு தனிக் கலகலப்பு வந்து விடும். சமையலிலும் தனிச்சுவை தெரியும்.

எனது அப்பா விடுமுறையில் வீட்டுக்கு வந்து நிற்கும் போதெல்லாம் வீட்டின் ஒவ்வொரு வேலையிலும் அம்மாவுடன் இணைந்து விடுவார். அரிசியில் கல்லுப் பொறுக்குவதிலிருந்து கிணற்றடியில் அம்மாவுடன் இருந்து உடுப்புகளுக்கு சோப் தேய்த்து, உடுப்புகளை அலசிப் பிழிந்து கொடியில் காய விடுவது வரை வீட்டின் எல்லா வேலைகளிலுமே அவர் கைகளும் பட்டிருக்கும். இதில் சமையல் பக்கம் என்பது அவர் இன்னும் அதிசுவாரஸ்யத்துடன் ஈடுபடும் விடயமாக இருக்கும். தானே சைக்கிளில் போய் சந்தையில் மரக்கறி, மீன் என்று வாங்கி வந்து தானே அவைகளைச் சுத்தப் படுத்தி... அம்மாவுடன் சேர்ந்து சமைக்கத் தொடங்குவார்.

இப்படித்தான் அப்பாவின் 45வது பிறந்தநாள் அன்றும் சமையல் அமர்க்களமாய் நடந்து கொண்டிருந்தது. அன்று கணவாய்க்கறி. கணவாய்க் குழம்பு, கணவாய்ப் பொரியல், மரக்கறிகள்... என்று அடுப்புகள் நெருப்பும், கொதிப்புமாய் தளதளத்துக் கொண்டிருந்தன. அப்பா டெயிலிமிரறில் வந்த ஏதோ ஒரு செய்தி பற்றி அம்மாவுக்கு விவரித்துக் கொண்டு அடுப்புக்கும் வெளிக்குமாய் நடந்து கொண்டிருந்தார். இடையிடையே தேங்காய்ச்சொட்டையும் புளுக்கொடியலையும் சுவைத்துக் கொண்டும் இருந்தார். நட்டு, நொறுக்கு என்பது அவருக்கு அவசியமானது.

அது ஒரு சனிக்கிழமையோ அல்லது ஞாயிற்றுக்கிழமையாகவோ இருந்திருக்க வேண்டும். பிள்ளைகள் நாம் பாடாசாலைக்குச் செல்லாமல் வீட்டில் நின்றோம். சமையல் ஏலமும், கறுவாவும், கராம்பும், தேங்காய்ப்பாலும்... என்று வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் கமகமத்தது. ஏன், வீட்டுக்கு வெளியே வீதியிலும் கூட வாசம் வீசியது. எங்களுக்கு அந்த வாசமே பெரும் பசியாக உருவெடுக்க நாங்கள் குளித்து, உடைமாற்றி சாப்பிடுவதற்குத் தயாரானோம்.

குசினிக்குள் அப்பா வாய் ஓயாது அம்மாவுக்குக் கதைகளும், பகிடிகளும் சொல்லிக் கொண்டே இருந்தார். கறி கொதிக்கும் சத்தத்தை விடப் பெரிதாகச் சிரிப்பும், சந்தோசமும் அங்கு களை கட்டி இருந்தன.

திடீரென அப்பா "சிவா, இந்தக் கறியைப் பாரும்" என்றார். அம்மா கையில் அதை ஊற்றிச் சுவைத்தா. ம்... உப்பு. ஒரு பெரிய சட்டி நிறைந்த கணவாய்க்குழம்பு உப்பாய்க் கரித்தது.

கதையும், சிரிப்பும் கலந்த சந்தோசக் களிப்பில்… இருவருமே ஆளுக்கொருதரம் என்று கறிக்கு இரு தரம் உப்பைப் போட்டு விட்டார்கள். என்ன செய்வது, அவ்வளவு மினைக்கெட்டு சமைத்ததைக் கொட்ட முடியுமா? அப்பா அவசரமாக இன்னொரு தேங்காய் உடைத்துத் துருவினார். அம்மா பாலைப் பிழிந்து முதல் இரண்டு பாலையும் அப்படியே கறிக்குள் விட்டா.
இன்னும் கொஞ்சம் வெங்காயம்… இன்னும் என்னென்ன எல்லாம் உப்பைக் குறைப்பதற்கான பரிகாரமாக அமையுமே அவையெல்லாம் கறிக்குள் போடப் பட்டன. உப்புக் கரிப்பு கொஞ்சம் குறைந்தாலும் உப்புக்கறி என்பதை மறுக்க முடியவில்லை.

சரி, உப்புக்கணவாய் சாப்பிட்ட அப்பாவின் 45வது பிறந்தநாளை என்றைக்குமே மறக்க மாட்டோம் என்று சொல்லி நாமெல்லோரும் அந்தக் கறியைச் சாப்பிட்டு முடித்தோம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வந்த கவலை நாம் சாப்பிட்டு முடித்ததில் கொஞ்சம் ஆறி விட்டது.

ஆனாலும் இன்றைக்கும் அப்பாவின் அந்த 45வது பிறந்தநாள் என் நினைவு விட்டு அகலவில்லை. அவ்வப்போது ஞாபகத்தில் வந்து கொண்டே இருக்கும்.
பொன்ஸ் இன் புத்தக விமர்சனம் இன்று என்னை எழுதத் தூண்டியது.

Tuesday, March 20, 2007

ஐ.நாவின் கவனத்தை ஈர்க்க உங்களின் கையொப்பம்

அமெரிக்க செனட்டர்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளையும் சந்தித்து ஈழப் பிரச்சனை தொடர்பாக எடுத்துரைக்கும் முக்கிய பணியில் தமிழ்ப் புத்திஜீவிகள் இறங்கி இருக்கின்றனர்.

பத்தாயிரம் கையொப்பங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுவரை மூவாயிரத்திற்கும் சற்று அதிகமான கையொப்பங்களே பெறப்பட்டிருக்கின்றன. பெயர் மட்டும் போதுமானது. அதனைக்கூட விரும்பினால் நீங்கள் தவிர்க்கலாம். ஆனால் உங்கள் ஆதரவை வழங்கும் வகையில் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வது அவசியமானதும் அவசரமானதும் கூட.

தமிழ் மக்களின் கையொப்பம் அவசர தேவையாக உள்ளது. உலகத் தமிழர்களின் ஆதரவு ஈழப் பிரச்சனை தொடர்பாக எந்தளவுக்கு இருக்கிறது என்பதனை எடுத்துக்காட்ட இந்த விண்ணப்பபங்கள் இலக்க ரீதியான ஆதாரத்தை வழங்குகின்றன.

இதனால், தமிழர்கள் அனைவரும் இந்த இரு இறுதி நாட்களையும் பயன்படுத்தி, உங்கள் நண்பர்கள் உறவினர்களையும் இவ் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு, ஈழப் பிரச்சனையின் அனைத்துலக கவனத்தைத் திருப்பும் முயற்சிக்கு ஆதரவை வழங்குங்கள்.

CLICK HERE

Friday, March 16, 2007

இனி அவர்கள்

இப்படித்தான் அன்று நதியாவும் யாதவன் யேர்மனி செல்வது திண்ணமாகிய போது கண்ணீர் வெள்ளம் அப்பிள் கன்னங்களில் நதியாக ஓட சோகமே உருவாய் யாதவன் முன் நின்றாள்.

யாதவனுக்கு மட்டும் பிரிவதில் என்ன சந்தோசமா...? நாட்டு நிலைமை ´ஓடு ஓடு´ என்று துரத்த வீட்டு நிலைமையைச் சொல்லி யேர்மனியிலிருந்து அண்ணன் அழைக்க வேறு வழியின்றித்தான் புறப்பட்டான்.

நினைவுகளை நதியாவிடம் விட்டு விட்டு விமானமேறியவன் நேரே யேர்மனிக்கு வந்து சேர்ந்திருந்தால் நிகழ்வுகள் வேறு மாதிரித் தொடர்ந்திருக்கும். அவனுடன் சேர்ந்து விதியுமல்லவா விமானம் ஏறி விட்டது.

பாங்கொக்(Bankok) இல் இரண்டு கிழமைதான் நிற்க வேண்டி வருமென ஏஜென்சி கொழும்பில் வைத்துச் சொல்லியிருந்தார். ஆனால் ஏழு மாத காலங்கள், ´சீ...´ என்று யாதவன் அலுத்துப் போகுமளவிற்குப் போய் விட்டது. முள்ளின் மேல் போட்ட சேலை போல் அவன் நிலை ஆகி விட்டது.

அங்கு யாதவனுக்கென ஒதுக்கப் பட்டிருந்த விடுதி போன்ற வீட்டில் பழையவர்கள் போவதும் புதியவர்கள் வந்து சேர்வதுமாய் ஏறக்குறைய 24, 25 பேர் மட்டில் எப்போதும் நின்றார்கள். ஏஜென்சிதான் அங்கே ராஜா. அவர் வைத்ததுதான் சட்டம். அங்கே பெண்கள் வந்தால் முதலில் அந்தப் பெண்களுக்கு சகல வசதிகளுடன் ராஜமரியாதை கிடைக்கும். பின்னர் போகப் போக ஏஜென்சியின் இச்சைக்கு அவர்கள் போகப் பொருள் ஆவார்கள். இணங்காத பட்சத்தில் நாயிலும் கேவலமாக நடாத்தப் படுவார்கள். இணங்கியவர்கள் அவர்கள் மீதான ஏஜென்சியின் மோகம் தணிந்ததும் போக வேண்டிய நாடுகளுக்கு அனுப்பப் படுவார்கள்.

இந்த அநீதிகளைப் பார்த்தும் பாராதவர்கள் போல ஆண்கள் இருக்க வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம். யாதவனுக்கு அந்த சூட்சுமம் தெரியாமற் போனதால் வந்ததே வினை. ஆறு மாதங்கள்.. எந்த வித முன்னேற்றமுமின்றி ஓடி விட்டன. இனியும் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலை வந்த போதுதான் எந்த அநீதியையும் பார்த்தும் பார்க்காதவன் போல நடிக்கத் தொடங்கினான். பெட்டிப் பாம்பாய் ஒடுங்கி இருந்தான். நதியாவின் நினைவில் குளிர் காய்ந்தான்.

ஏழாம் மாதம் அவன் பக்கம் காற்று வீசியது. அவனும் அவனுடன் இன்னும் இருவரும் உக்ரைன் செல்வதென்பது முடிவானது. உக்ரைன் போய் விட்டால் பக்கத்தில்தானே யேர்மனி என நினைத்தான்.

ஆனால் உக்ரைன் குளிரில் சாப்பாடுகளும் சரியாக இல்லாமல் பனிக்குவியலுக்குள் ஏறி இறங்கிய போது பாங்கொக் பருப்புக்கறியும் சோறும் பரவாயில்லை என நினைத்துக் கொண்டான்.

இந்தா, எல்லையைக் கடந்து விடுவோம் என்ற நிலையிருக்கையில் அடிக்கடி தடைகள் வந்து பயணம் தடைப் பட்டுப் போய் அவனுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. மனம் தளர்ந்த போதிலெல்லாம் இதமாகத் தழுவியது நதியாவின் நினைவொன்றுதான்.

ஜெயில் வாசம் போன்ற கடினமான இரண்டு வருடங்கள் உக்ரைனில் கழிந்த பின்தான் அவனால் யேர்மனியை வந்தடைய முடிந்தது.

´இனியென்ன வாழ்க்கையில் ஜெயித்து விடுவேன்.´ என்ற நம்பிக்கையோடு யேர்மனியில் வாழ்க்கையைத் தொடங்கியவன் நதியாவுக்கும் கடிதங்களை எழுதத் தொடங்கினான். ஆனாலும் அவன் நினைத்தது போல யேர்மனிய வாழ்க்கை ஒன்றும் வசந்தத்தைக் கொட்டிக் கொண்டு அவனுக்காகக் காத்திருக்க வில்லை. மாறி மாறி அகதி முகாம்கள் விசாரணைகள் என்று ஒரு வருடங்கள் ஓடி விட்டன. நதியாவின் கடிதங்கள்தான் வரத் தவறி விட்டன.

நிரந்தரமான ஒரு முகவரி கிடைத்த பின் ´இனி என் நதியாவின் கடிதம் வரும்´ என்ற நம்பிக்கையோடு காத்திருந்தான். பிற்சேரியாவில் மாப் பிசைந்தான். மாலையில் சுப்பர் மார்கட்டில் கிளீனிங் வேலை செய்தான். அண்ணனுக்குக் கூப்பிட்ட காசையும் கொடுத்து, அம்மாவுக்கும் அனுப்பி, எப்படியாவது மிச்சம் பிடித்து நதியாவையும் கூப்பிட்டு விட வேண்டுமென்ற அவா அவனுள். நினைக்கின்ற அளவு வேகத்தில் பணத்தைச் சேர்க்க முடியாவிட்டாலும் முயன்றான்.

தினம் தினம் நதியாவின் கடிதத்துக்காகக் காத்திருந்து ஏமாந்தான். முடிவில் விடயத்தை அம்மாவுக்கு எழுதினான். அம்மாவின் பதில் கடிதம் அவனை ஆடிப் போக வைத்து விட்டது.

"இவ்வளவு காலமும் எங்கை போனவர்? யேர்மன் காரியோடை சுத்திப் போட்டு இப்ப அலுத்துப் போக என்னைத் தேடுறாரோ..?" என்று நதியா அம்மாவிடம் சண்டைக்குப் போயிருக்கிறாள். நதியாவுக்கு எத்தனை கடிதங்கள் எழுதியும் அவள் யாதவனின் உண்மை நிலையை உணர்ந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ தயாராக இருக்கவில்லை.

யாதவன் பணத்தைப் பாராது தொலைபேசி அட்டைகளை வாங்கி வாங்கி நதியாவுடன் கதைக்க முற்பட்டு ஒவ்வொரு தடவையும் அவள் சரியாகக் கதைக்காமல் கோபமாகத் திட்ட தோற்றுப் போனவனாய் நின்றான். இயலாமையில் மெது மெதுவாகக் குடிக்கத் தொடங்கினான். பல சமயங்களில் குடித்து விட்டு வீட்டுக்கு அண்ணனிடம் போகப் பயந்து அந்தப் பூங்கா வாங்கிலிலேயே தூங்கிக் கொண்டான். குளிரும் குடியும் அவனை நோயாளி ஆக்கியது. வேலையையும் தொலைத்தான். அண்ணன் கூட அவனைப் புரிந்து கொள்பவனாக இல்லாமல் இவனால் மானம் கப்பல் ஏறுகிறதே என்றுதான் கத்தினான்.

இறுதியாக ஒரு நாள் "வையடா ரெலிபோனை" என்றும் நதியா சொல்லி விட்டாள். அதோடு யாதவன் முழுக் குடிகாரன் ஆகி விட்டான். அந்தப் பூங்காவே கதியென்று ஆகி விட்டான். பிறகும் பிறகும் ஏதோ ஒரு நப்பாசையில் தொலைபேசியில் நதியாவை அழைப்பதுவும் அவள் திட்டுவதைக் கேட்டு விட்டு அழுவதுமாய் தொடர்ந்தான்.

அன்று நதியா அழுத போது ஆண் மகனாய் நின்று அவள் கண்ணீரைத் துடைத்து விட்டவன் இன்று தானிருந்து அழுதான். அவன் மனத்தில் படிந்து விட்ட சோகத்தையோ ஆற்றாமையையோ துடைத்தெறிய யாரும் அவன் அருகில் இல்லை.

சந்திரவதனா
ஜேர்மனி

பிரசுரம் - பூவரசு (பங்குனி-சித்திரை 2003)

ஒரு எழுத்தாளர் கதையை ஆரம்பித்து வைக்க வாசகர்கள் கதையை வளர்த்துச் செல்லும் முயற்சியில் உருவானது இனி அவர்கள் என்ற கதை. கதையை இராஜன் முருகவேல் தொடக்கி வைக்க முதலில் நான், அடுத்து சாந்தினி வரதராஜன், அடுத்து புஸ்பராணி ஜோர்ஜ் தொடர இந்துமகேஷ் அவர்கள் முடித்து வைத்தார்கள். அக்கதையின் இரண்டாவது அங்கமே இங்கு பதிவாகி உள்ளது.

Thursday, March 15, 2007

பாவங்களின் கூடுகள் பற்றி யாருக்குக் கவலை?

வானம் எம் வசம்

கவிதையின் வடிவம் பற்றியும், அதற்கான வரையறைகள் பற்றியும் இன்னும் எந்த முடிவையும் என்னால் எடுக்க முடியாத நிலையில் மீண்டும் ஒரு கவிதைத் தொகுப்பு என் வசம் வந்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பொறுத்தவரையில் ஒரு புதிய சகாப்தமாய் அமைந்த அந்த நாட்கள் தந்த களிப்பில் பிறந்த கவிதைகள் இவை.

அது சிங்கள வான்படைகள் வான் உலா வந்து எம்மவரைக் கொல்லும் காலங்களில் ஒன்று.

அதை உதயலட்சுமி இப்படிச் சொல்கிறார்
விமானங்கள் வந்து தினம் வான் பரப்பிலோடும்
குண்டுகள் கொட்டிக் கொக்கரித்தாடும்
மேலெழும் புகையில் மேகங்கள் மறையும்
கந்தக மணத்திலே சந்தனங்கள் வாடும்
அந்திப் பொழுதிலும்
அதிகாலையிலும் இது நடக்கும்
நொந்த எம் தாயக வீதிகளில்
தோண்டப்பட்ட குழிகளெல்லாம்
குருதிக்களம் சுமக்கும்
மிகையொலிக் காற்றைச் சுவாசித்து
இதயம் வெடித்து இறந்தவர்களின்
இறுதிப் பயணமிங்கு அடிக்கடி நடக்கும்….

இப்படித் தமிழ் மக்களை அச்சுறுத்திக் கொண்டும், அவலத்துக்கு உள்ளாக்கிக் கொண்டும் திரிந்த அவ்ரோ விமானங்களில் ஒன்று யாழ்ப்பாண வான் பரப்பில் வைத்து 1995ம் ஆண்டு சித்திரை 28 திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு அணியினரால் பலாலித் தளத்தினுள் சுட்டு வீழ்த்தப்பட்டது. வான்படையின் உயர் அதிகாரிகள் உட்பட 40 படையினர் கொல்லப்பட்டனர்.29.041995 அன்று இன்னொரு அவ்ரோ விமானம் நவக்கிரியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த 50 வரையான படையினர் கொல்லப்பட்டனர்.

பெருந்துயரில் ஆழ்ந்திருந்த தமிழ் மக்கள் இந்தச் சாதனை கண்டு பெருமை கொண்டார்கள். பேருவகையில் திளைத்தார்கள். அவர்களின் அந்த மகிழ்ச்சித் திளைப்பே 29 ஈழத்துக் கவிஞர்களால் இத் தொகுப்பில் பதியப் பட்டுள்ளது.

மற்றொருவரின் இழப்பில் மகிழ்ச்சித் திளைப்பா என்றொரு கேள்வி எழுந்தால்… அதற்கு கருணாகரன் தன் கவிதையில் பதில் தருகிறார்.
பாவங்களின் கூடுகள் எரிவதைக் கண்டேன்
சாபங்களும் திட்டுதல்களும்
வாங்கிப் பெற்ற நரகப் பிறவிகள்
நிணமாகிச் சிதறிப் போன செயல் பார்த்தேன்
நாலு சிறகெழுந்து
பறந்து
பரவசமடைந்தேன்

ஒரு பிறவியின் சாவு கண்டுனக்கு மகிழ்ச்சியா
என்றென்னைக் கேட்கலாம்
கேள். நன்றாகக் கேள்
அது பற்றி எனக்குக் கவலையில்லை
நான் சாவில் வேகும் போதென்னை
கண்திறந்து பாராத உன் கேள்வி பற்றி
எனக்கென்ன கவலை?
நான் புளுகித் திரிவேன்

கெந்திக் கெந்தி நானோடும் போதெனது
உயிர் தேடித் தேடி வந்த பாவங்களின் கூடுகள்
இன்று அழியுண்டு போவதைப் பார்த்தேன்

அஸ்திரங்கள் ஏவிய என் தேவகுமாரர்களின்
வெற்றியின் கதைபற்றி உரத்துப் பாடினேன்
நன்றியின் உதிரம் கலந்த என் பாடல்
திசையெல்லாம் பரவியது
நான் பாடிப் பாடி மகிழ்ந்தேன்
வெற்றியின் பூரிப்பில் சிரித்தேன்
நரகப் பிறவிகளின் சாவில் நான் சிரித்தேன்
நானழுத காலங்களை விழுங்கும்
இந்தச் சிரிப்பு

இப்போது நான் சிரிக்கிறேன்
என்னுடைய சனங்களும் சிரிக்கிறார்கள்
பாவங்களின் கூடுகள் பற்றி யாருக்குக் கவலை?
யாருக்கடா கவலை?

தமிழ்த்தாய் வெளியீட்டகத்தினால் 28.5.1995 இல் வெளியிட்டு வைக்கப் பட்ட இத்தொகுப்பில் தில்லைச்சிவம், ந.வீரமணி ஐயர், ச.வே.பஞ்சாட்சரம், முருகையன், பண்டிதர் வீ.பரந்தாமன், நம்பியூரான், புதுவை இரத்தினதுரை, அ.யேசுராசா, சசிவர்ணன், ந.கிருஷ்ணசிங்கம், இளையவன், விவேக், கருணாகரன், இயல்வாணன், கி.சிவஞானம், சத்துருக்கன், ஆதிலட்சுமி சிவகுமார், சுதாமதி, உதயலட்சுமி, வேலணையூர் சுரேஷ், த.ஜெயசீலன், தெல்லியூர் ஜெயபாரதி, ஐ.தயாபரன், வெள்ளை, வி.பிரபாகரன், நாமகள், மயன்-2, மு.வே.வாஞ்சிநாதன், வளவை வளனவன் ஆகிய 29கவிஞர்களது கவிதைகள் இடம் பிடித்துள்ளன.

இவைகளுள் சில கவிதைகள் வெறுமே உரைநடை போல அமைந்திருந்தாலும், இக்கவிதைகள் பிறந்ததற்கான காரணமும், அவை தம்முள்ளே கொண்டிருக்கும் வெற்றிப் பெருமிதமும் அனேகமான ஒவ்வொரு ஈழத்தமிழனையும் உவகை கொள்ளச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

சந்திரவதனா
15.3.2007

தாய்க்குப் பின் பெண்களுக்கு...?

தாய்க்குப் பின்
ஆண்களுக்குத் தாரம்.
பெண்களுக்கு...?

Wednesday, March 14, 2007

மரியாதை என்றால் என்ன?

எது சரி, எது பிழை, எது கூடாது என்பதற்கான அளவு கோல்கள் எமது மூளையில் சின்ன வயதிலேயே பதிக்கப் பட்டு விடுகிறது. பொய் சொல்லாதே, களவெடுக்காதே, பிச்சை எடுக்காதே, மது அருந்தாதே, புலால் உண்ணாதே... என்று எமக்கு அறிவு தெரிந்த நாளிலிருந்து, முதலில் அம்மா, பின்னர் ஆசிரியர், தொடர்ந்து புத்தகங்கள்... என்று எங்கள் மூளையில் சில விடயங்கள் பதிக்கப் பட்டு விடுகின்றன. அதனால்தான் அவைகளில் ஏதேனும் ஒன்றையேனும் நாம் செய்ய வேண்டிய கட்டாயநிலை வரும் போது எங்கள் செய்கைகளுக்கு நாமே நியாயங்களைத் தேடிக் கொள்கிறோம். அல்லது குற்ற உணர்வில் குறுகிக் கொள்கிறோம். பொய் சொல்லாதே என்று படிப்பித்த ஆசிரியரே பொய் சொல்வதைக் காண நேர்ந்தால் ஏமாற்றமும் கோபமும் ஏற்படுகிறது.

பதின்ம வயதுகளில் உணர்வுகளை எமது கட்டுக்குள் வைக்கவோ, பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கவோ எம்மால் முடிவதில்லை. சுற்றியுள்ள எதையும் கவனத்தில் கொள்ளாமல் எமது உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் அடிமையாகி விடுகிறோம். வயது ஏற ஏற ஒவ்வொன்றின் பின்விளைவுகளைப் பற்றியும் சிந்திக்கிறோம். மரியாதைக்குப் பயப் படுகிறோம். இது கூடாது என்று எம்மால் தீர்மானிக்க முடிகிறது. அதனால் நாமே எமக்கு ஒரு எல்லை போட்டு வாழப் பழகிக் கொள்கிறோம். ஆசைகள், தேவைகள்... என்று எது வரும் போதும் சுற்றி உள்ளவர்களைப் பாதிக்காத விதமாக அவைகளை நிறைவேற்றப் பார்க்கிறோம். முடியாத போது எமது ஆசைகளையே குழி தோண்டிப் புதைத்து விடுகிறோம்.

யாருக்காகவும் எங்கள் சுயங்களை இழக்க வேண்டிய அவசியமில்லைத்தான். ஆனாலும் பல சமயங்களில் தவிர்க்க முடியாமல் இழக்க வேண்டியும் வருகிறது. காரணம் எம்மைச் சுற்றியுள்ளவர்கள்.

எம்மைச் சுற்றியுள்ளவர்கள் என்று குறிப்பிடும் போது எம்மேல் அன்பு செலுத்துபவர்கள், நாம் அன்பு கொண்டவர்கள், எங்களோடு கூடப் பிறந்தவர்கள், நாமாக எம்மோடு சேர்த்துக் கொண்டவர்கள்... என்று பலர் அடங்குகிறார்கள். இவர்களோடு எம்மைச் சுற்றியுள்ள சமூகமும் அடங்குகிறது. சமூகம் என்றால் என்ன? நாமும் அதற்குள் ஒருவர்தானே. ஆனாலும் அந்தச் சமூகத்தில் எமது தலை உருளும் போது மரியாதை போகிறதே என்று பயப் படுகிறோம்.

அப்போதும் ஒரு கேள்வி எழுகிறது. மரியாதை என்றால் என்ன? மற்றவர்களிடம் நல்ல பெயர் எடுப்பதுதான் மரியாதையா?

மரியாதை என்றால் என்ன?

எது சரி, எது பிழை, எது கூடாது என்பதற்கான அளவு கோல்கள் எமது மூளையில் சின்ன வயதிலேயே பதிக்கப் பட்டு விடுகிறது. பொய் சொல்லாதே, களவெடுக்காதே, பிச்சை எடுக்காதே, மது அருந்தாதே, புலால் உண்ணாதே... என்று எமக்கு அறிவு தெரிந்த நாளிலிருந்து, முதலில் அம்மா, பின்னர் ஆசிரியர், தொடர்ந்து புத்தகங்கள்... என்று எங்கள் மூளையில் சில விடயங்கள் பதிக்கப் பட்டு விடுகின்றன. அதனால்தான் அவைகளில் ஏதேனும் ஒன்றையேனும் நாம் செய்ய வேண்டிய கட்டாயநிலை வரும் போது எங்கள் செய்கைகளுக்கு நாமே நியாயங்களைத் தேடிக் கொள்கிறோம். அல்லது குற்ற உணர்வில் குறுகிக் கொள்கிறோம். பொய் சொல்லாதே என்று படிப்பித்த ஆசிரியரே பொய் சொல்வதைக் காண நேர்ந்தால் ஏமாற்றமும் கோபமும் ஏற்படுகிறது.

பதின்ம வயதுகளில் உணர்வுகளை எமது கட்டுக்குள் வைக்கவோ, பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கவோ எம்மால் முடிவதில்லை. சுற்றியுள்ள எதையும் கவனத்தில் கொள்ளாமல் எமது உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் அடிமையாகி விடுகிறோம். வயது ஏற ஏற ஒவ்வொன்றின் பின்விளைவுகளைப் பற்றியும் சிந்திக்கிறோம். மரியாதைக்குப் பயப் படுகிறோம். இது கூடாது என்று எம்மால் தீர்மானிக்க முடிகிறது. அதனால் நாமே எமக்கு ஒரு எல்லை போட்டு வாழப் பழகிக் கொள்கிறோம். ஆசைகள், தேவைகள்... என்று எது வரும் போதும் சுற்றி உள்ளவர்களைப் பாதிக்காத விதமாக அவைகளை நிறைவேற்றப் பார்க்கிறோம். முடியாத போது எமது ஆசைகளையே குழி தோண்டிப் புதைத்து விடுகிறோம்.

யாருக்காகவும் எங்கள் சுயங்களை இழக்க வேண்டிய அவசியமில்லைத்தான். ஆனாலும் பல சமயங்களில் தவிர்க்க முடியாமல் இழக்க வேண்டியும் வருகிறது. காரணம் எம்மைச் சுற்றியுள்ளவர்கள்.

எம்மைச் சுற்றியுள்ளவர்கள் என்று குறிப்பிடும் போது எம்மேல் அன்பு செலுத்துபவர்கள், நாம் அன்பு கொண்டவர்கள், எங்களோடு கூடப் பிறந்தவர்கள், நாமாக எம்மோடு சேர்த்துக் கொண்டவர்கள்... என்று பலர் அடங்குகிறார்கள். இவர்களோடு எம்மைச் சுற்றியுள்ள சமூகமும் அடங்குகிறது. சமூகம் என்றால் என்ன? நாமும் அதற்குள் ஒருவர்தானே. ஆனாலும் அந்தச் சமூகத்தில் எமது தலை உருளும் போது மரியாதை போகிறதே என்று பயப் படுகிறோம்.

மரியாதை என்றால் என்ன? மற்றவர்களிடம் நல்ல பெயர் எடுப்பதுதான் மரியாதையா?

Wednesday, March 07, 2007

உன் பலம் உணர்ந்திடு

பெண் வலம் சமையல் புலத்திலென்ற
காலம் போயாச்சு
வெண்கலத்துடன் போராடிய அவள் கரங்கள்
சுடுகலன்கள் ஏந்தியாச்சு
இன்னுமா..?
புலம் பெயர்ந்த என்னகத்துத் தமிழ்ப் பெண்ணே..!
உன் பலம் தெரியாது
சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும்
ஒளிந்திருந்து
கண்கலங்குகின்றாய்!
உன் பலம் உணர்ந்திடு!

சந்திரவதனா
10.10.02

காலமிட்ட விலங்கையும் உடைபொல்லெடுத்து
உனை அடித்தார்களா..!
சொல்லெடுத்து
மனம் சிதைத்தார்களா..!
மெல்லியவள் என்று சொல்லி
மெல்லவே பின்னே
தள்ளியவர் முன்னே
கல்லுடைத்து....
வாழ்வின்
வளம் பொருத்த முனையும்
பெண்ணே..!
உடை
கல்லோடு சேர்த்து
காலமிட்ட விலங்கையும் உடை
வெல்வாய்!

சந்திரவதனா
யேர்மனி
10.3.2003

பெண்ணே!

பெண்ணே!
நெருப்பாயும் வேண்டாம்
செருப்பாயும் வேண்டாம்
உனது இருப்பு
உனது விருப்போடு
உனதாய் இருக்கட்டும்

சந்திரவதனா
8.3.02

பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்களே தவிர பரிதாபப்பட வேண்டியவர்களல்ல

(`நிலவே நீ மயங்காதே' (நாவல்) வெளியீட்டின் மூலம் வவுனியா மாவட்டத்தில் முதல் நாவலை வெளியிட்ட பெண் எழுத்தாளரான செல்வி சிவராமலிங்கம் யாமினி கவிதை, சிறுகதை எழுவதுதிலும் கணிசமாக பணியாற்றி வருகின்றார். ஈழத்து இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வவுனியா மாவட்டத்தில் இருந்து செய்து வரும் யாமினியை `தினக்குரல்'க்காக நேர்கண்டபோது பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.-கனகரவி- )

கேள்வி: நீங்கள் வெளியிட்ட முதல் நாவல் பற்றிக் கூறுங்கள்?
பதில்: இது ஒரு சமூக நாவல். இது சமூகத்தில் இருக்கின்ற கண்ணியமற்ற சில ஆண்களினால் ஏற்படுகின்ற பாதிப்புகளை முக்கியமாக இளம் பெண்களுக்கு எடுத்துச் சொல்கின்றது. அத்தகைய ஆண்கள், பெண்கள் மனதளவில் சோர்ந்துபோய் ஆதரவை எதிர்பார்த்திருக்கும் சந்தர்ப்பத்தைக் கூடப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி விடுவார்கள் என்பதால் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று பெண்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
கேள்வி: வவுனியா மாவட்டத்தில் முதல் நாவல் ஒன்றை வெளியிட்ட உங்களுக்கு எப்படி வரவேற்பிருந்தது?
பதில்: நாவலை வெளியிட்ட பின் என் உறவினர்கள், நண்பர்கள் என்னைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார்கள். எனது சிறிய தந்தையார் எனக்கு ஆயிரம் ரூபா பரிசளித்து என்னை உற்சாகப்படுத்தினார். ஆனால், எனது வீட்டில் நிலைமை வேறு மாதிரியிருந்தது. படிக்கிற காலத்தில் நான் கதையெழுதியதால் நான் பேனா, பேப்பர் எடுக்கிற நேரமெல்லாம் என்ற பெற்றோர் முறைத்துக் கொண்டேயிருந்தார்கள். பின் என் தாயார் எழுத்துத்துறையில் எனக்கிருந்த நாட்டத்தை புரிந்துகொண்டும் `இப்போது படி. உயர்தரப் பரீட்சை எடுத்த பின் எழுது' என்று கொஞ்சம் விட்டுக்கொடுத்தார். மீரா வெளியீட்டகத்தினரோடு தொடர்பு கொண்டு எனது நாவலை பிரசுரிப்பதற்காக அனுப்பியபோதும் எனது தந்தையார் சற்றும் இறுக்கம் குறையாமல் `சரி, இந்த ஒன்று போதும். இனிமேல் படி' என்று சொல்லிவிட்டார். எழுத்துத் துறையில் நாட்டமுள்ள எனது அம்மாவுக்கு உள்ளூர கொஞ்சம் சந்தோசமாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சற்று இறுக்கமாகவே இருந்தார். பெற்றோருக்கு விருப்பமில்லாத ஒரு விடயத்தைச் செய்கிறேனே என்ற தயக்கமும் சங்கடமும் எனக்குள் நிறையவே இருந்தது. இருந்தாலும், புத்தகமாக வெளியான என் நாவலை மிகுந்த சந்தோஷத்துடன் அம்மாவிடம் காட்டியபோது அவரின் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பெருமிதமும் எனக்குத் தந்த பூரிப்போடு புத்தகத்தை அப்பாவிடம் கொடுக்க, அவர் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் அதை வாங்கி மேசையில் வைத்துவிட்டு `பி.பி.சி.' கேட்பதற்கு ஆயத்தமானார். நான் வந்த சுவடு தெரியாமல் மெதுவாக அறைக்குள் மறைந்து கொண்டேன். சற்று நேரம் கழித்து மெதுவாக எட்டிப்பார்த்தபோது, வானொலி தன்பாட்டில் செய்தி சொல்லிக் கொண்டிருக்க கதை, கவிதை எதிலும் நாட்டமேயில்லாத அப்பா என் புத்தகத்தில் மூழ்கிப்போயிருந்தார். எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக நான் இதைக் கருதுகிறேன். இதைவிட, வேறென்ன பாராட்டு வேண்டும் எனக்கு!
கேள்வி: பக்தி இலக்கியங்கள் படைப்பதில் ஆர்வம் காட்டுவதனை அறிய முடிகின்றது. எவ்வகையான வெளியீடுகளைச் செய்துள்ளீர்கள்?
பதில்: `சக்திப்ரதாயினி', 'யாதுமாகி நின்றாய்' ஆகிய இரு பக்திக் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன். இரண்டிலும் உள்ள கவிதைகள் அம்பாளுக்காகவும் விநாயகருக்காகவும் எழுதப்பட்டவை. இக்கவிதைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் நான் மனதால் உணர்ந்து உருகி எழுதியவை.
கேள்வி: ஆன்மீகம் மீது ஆர்வம் ஏற்படுவதற்குக் காரணம் என்ன?
பதில்: என் பெற்றோர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள். அத்துடன், எமது வீடு ஆலயங்களின் அயலில் இருப்பதால் அடிக்கடி ஆலயத்திற்குச் செல்லவும் வழிபடவும் பூசை, புனஸ்காரம் என்றிருக்கிற ஆலயச் சூழலில் இருக்கவும் அதிக சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இவையெல்லாம் ஆன்மீகத்தின் மீது எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாகின.
கேள்வி: எழுத்துத் துறையில் ஈடுபாடுடைய நீங்கள், சமூகம் சார்ந்த விடயங்களை எவ்வளவு வெளிக்கொணர்ந்தீர்கள்?
பதில்: எனது முதல் நாவலிலேய சமூகம் சார்ந்த விடயங்களை வெளிக்கொணர்ந்திருக்கிறேன். பெண்களைப் போகப்பொருளாக நினைத்து அவர்களின் சந்தோஷத்தை, நிம்மதியை வாழ்க்கையைச் சின்னாபின்னப்படுத்தும் ஆண்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். வவுனியா இலக்கிய மலரான "கலைமருதத்தில்" பிரசுரமாகிய "தாலி" என்ற சிறுகதையில் விதவைப் பெண்களை ஒதுக்கி வைக்கின்ற இந்தச் சமூகத்தின் மீது கோபப்பட்டிருக்கின்றேன். `துவாரகா' என்கிற சிறுகதையில் மதவெறியைச் சாடியிருக்கிறேன்.
கேள்வி: குறிப்பாக, பெண் என்ற வகையில் பெண்களுடைய தேவைகள், பாதிப்புகள் போன்றவற்றை படைப்பிலக்கியங்களூடாக வெளியிட்டுள்ளீர்களா?
பதில்: ஆம், நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல `நிலவே நீ மயங்காதே'யில் தனது கண்ணியத்தைப் பற்றியோ, பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை பற்றியோ கொஞ்சம்கூடக் கவலைப்படாது பெண்களைப் போகப்பொருளாக நினைத்துக் கொள்ளும் ஆண்களினால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிக் கூறியிருக்கிறேன்.
தொடர்ந்தும் எனது எழுத்துகளில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், பெண்களின் தேவைகள் பற்றி மட்டுமன்றி, சமூகத்தின் சகல வர்க்கத்தினரினதும் தேவைகள், பாதிப்புகள் பற்றியும் எழுதுவேன் என்பதை இங்கே குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
கேள்வி: அரச திணைக்களத்தில் எத்தனை ஆண்டு காலம் கடமையாற்றினீர்கள். குறுகிய காலத்துக்குள் ஓய்வு பெற்றமைக்குக் காரணம் எதுவும் உள்ளதா?
பதில்: 13 வருட காலம் அரச திணைக்களத்தில் கடமையாற்றிவிட்டேன். இத்தனை காலமும் கோவைகளுடனும் பதிவேடுகளுடனும் கடமையாற்றிய எனக்கு உளவளத்துணையாளரானதும் உணர்வுக் குவியல்களாகவுள்ள மனிதர்களுடன் பணியாற்றுவதில் ஆர்வம் ஏற்பட்டது. அதற்கான சந்தர்ப்பம் அமைந்தபோது அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்.
கேள்வி: பழைமைகள் பேணப்பட வேண்டும் என்று பெண்களின் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள். குறிப்பிட்டுக் கேட்பதாக இருந்தால், விதவை என்று பெண்களை அடையாளப்படுத்துவது போல் ஆண்களுக்கு இல்லையல்லவா. எனவே, இவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: பழைமைகள் பேணப்பட வேண்டுமென்பதற்காக எந்தவொரு நல்ல விடயத்துக்கும் முட்டுக்கட்டை போடுவது சரியல்ல. விதவைப் பெண் என்று பொட்டில்லாது, பூவில்லாது ஏன் மேல் சட்டை (Blouse) கூட இல்லாது வெள்ளைச் சேலை கட்டிக்கொண்டு வீட்டினுள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்றிருந்த காலமும் இருந்தது. ஆனால், இப்போது நிலைமை அவ்வளவுக்கு மோசமாக இல்லை. குங்குமமும் பூவும் வைப்பதில்லையே தவிர, கலர்ப்புடவையுடன் எங்கு வேண்டுமானாலும் போய் வருகிறார்கள். சில பெண்கள் தைரியமாக குங்குமம், பூக் கூட வைத்துக் கொள்கிறார்கள். விதவைகள் மறுமணம் கூட நடைபெற்று வருகின்றன. அந்தளவுக்கு சமூகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது சந்தோஷப்படக் கூடிய, வரவேற்கத்தக்க விடயம். ஆனாலும், அன்றும் சரி இன்றும் சரி, சமூகம் கணவனை இழந்த பெண்கள் மீது செலுத்தும் அளவுக்கு மனைவியை இழந்த ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை. தபுதாரர்களையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்றோ அவர்கள் மீது நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்றோ, சொல்லவில்லை. விதவைகளை ஒதுக்கி வைக்காதீர்கள். அவர்களுக்கு நிபந்தனைகள் விதிக்காதீர்கள் என்றே சொல்கிறேன்.
கேள்வி: சீதனம் வாங்குவது, கொடுப்பது பற்றி எழுத்தாளர் என்ற வகையில் உங்கள் கருத்து?
பதில்: சீ- தனம் என்று சொல்லும் போதே இது விரும்பப்படாத தனம் என்பது தெளிவாகிறது. பிறகெதற்கு அதைக்கேட்டு வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்? பெற்றவர்கள் தங்களிடம் பணம், பொருள் இருக்கும் பட்சத்தில், பிள்ளைகளுக்குக் கொடுக்கத்தானே போகிறார்கள். அவர்கள் விருப்பப்பட்டதை, அவர்களால் முடிந்ததை அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கட்டும் என்று ஒதுங்கி விடுவது நாகரிகம். இதை விடுத்து, இவ்வளவு தர வேண்டும், தந்தால் தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்லி பெண்ணின் பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் ஓட ஓட விரட்டி அலைக்கழித்து, சீதனம் வாங்கி கல்யாணம் செய்தால் அந்தப் பெண்ணின் மனதில் இதெல்லாம் வேதனையாக, சங்கடமாக இருக்குமல்லவா. பிறகெப்படி அங்கே அந்நியோன்யமான குடும்ப வாழ்க்கை அமையும்? ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இது வெடிக்கத்தானே செய்யும். இருக்கின்ற ஒரேயொரு மகனுக்குக் கூட 15 இலட்சம், 20 இலட்சம் என்று சீதனம் வாங்கி தங்களது பெயரில் வங்கியில் போட்டுவிட்டு இருக்கிற பெற்றோரும் இருக்கிறார்கள்தானே. பெற்றவர்கள், இதைச் செய்யாதே. இதைச் செய் என்றால் கேட்டு நடக்காத ஆண்கள், இந்த ஒரு விடயத்தில் மட்டும் பெற்றோரின் சொல் மீற மாட்டேன் என்பது மிகவும் வேடிக்கையானதொரு செயலாக இருக்கின்றது.
ஆனால், இவ்வாறெல்லாம் சீதனம் வாங்கும்போது தமது நிலைமை தான் படுமோசமாகப் போய்விடுகிறது என்று எந்த ஆணும் புரிந்து கொள்வதில்லை. இதை நினைக்கும்போது ஆண்கள் மீது நான் பரிதாபப்படுகிறேன்.
என் பிள்ளை டொக்டர். எனவே, இவ்வளவு தர வேண்டும். என் பிள்ளை இஞ்ஜினியர் எனவே இவ்வளவு தர வேண்டும் என்று தங்களது பிள்ளையைப் படிக்க வைத்ததற்கும் வளர்த்ததற்கும் இதர செலவுகளுக்குமாகவென்று பெற்றோர் பேரம் பேசி விற்றுவிடுகிறார்கள். இது ஒரு ஆட்டையோ, மாட்டையோ வளர்த்து விற்பதைப் போன்றதுதானே. அதுவரை காலமும் என் அப்பா, என் அம்மா, என் சகோதரம் என்றிருந்த அத்தனை சொந்தமும் அவனை ஒரு விற்பனைப் பொருளாக்கும் அந்த நிமிடத்தில் உணர்வு ரீதியாக இல்லாமல் போகின்றது. அவன் அங்கே ஒரு பொருளாக நிற்கிறானேயன்றி, உறவாக இல்லை. இந்த நிலையில் அந்த ஆண்மகனை நினைத்து நான் மிகவும் கவலையடைகின்றேன். அவனது நிலைமையை நினைத்த அவன் மீது பரிதாபப்படுகின்றேன்.
இந்த இடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட்டுக்கொள்ள பிரிப்படுகின்றேன். என் சகோதரனை எந்தவொரு நிமிடத்திலும் நான் பேரம் பேசவில்லை. விற்பனை செய்ய முயலவில்லை. எப்போதும் நான் அவருக்கு சகோதரியாகவே இருக்கிறேன்.
கேள்வி: சமூகத்தில் ஆண்-பெண் சமமாக வாழ வேண்டுமெனின்; ஆண்களும் பெண்களும் என்ன செய்ய வேண்டும்?
பதில்: முதலில் பெண்களும் விருப்பு, வெறுப்பு, உணர்வுகள், திறமைகள் உள்ள மனிதர்கள் என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெண்களை மதிப்பதுவும் அவர்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுவும் நாகரிகமான செயலென்றும் அது ஒன்றும் தரக்குறைவான செயலல்ல என்பதையும் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தமக்குச் சமமானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை ஆண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தாம் ஆண்களுக்கு அடுத்த இடத்தில் (இரண்டாம் பட்சத்தில்) உள்ளவர்கள், ஆண்களை விடத் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை அடியோடு உதறி தங்களால் எதுவும் முடியும் என்பதையும் தாங்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்பதையும் சகல பெண்களும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண்கள் பல துறைகளிலும் மேலும் முன்னேற வேண்டும்.
கேள்வி: பெண் செல்வியாக இருக்கும்வரை தந்தையின் பெயர் முதலெழுத்தாக இருக்கும். திருமணம் செய்து விட்டால் கணவனின் பெயர் தான் முதலெழுத்தாக இருக்கிறது. இதுபோன்றதல்ல ஆண்களுக்கு. இது பற்றி சமூகத்தில் தர்க்கம் உள்ளது. இது விடயத்தில் தங்களின் கருத்தென்ன.
பதில்: இது நல்லதொரு கேள்வி. ஆனால், இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முன் செல்வி, திருமதி என்பதனால் குறிப்பிடப்படுவது என்ன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். செல்வி, திருமதி என்பவை ஒருவருடைய வாழ்வியல் நிலை மாத்திரமேயன்றி, இன்னாருடைய மகள் அல்லது இன்னாருடைய மனைவி என்பதைக் குறிப்பிடுவதல்ல. அத்துடன், ஒரு நபருக்கு எப்போதும் முதலெழுத்து என்பது ஒன்றாகத்தான் இருக்க முடியும். எனவே, பெண்கள் எப்போதும் தந்தையின் பெயரை முதலெழுத்தாகக் கொள்வது சரியென்றே நான் கருதுகிறேன். சிங்களப் பெண்கள் பலரும் திருமணத்தின் பின்பும் தந்தையின் பெயரையே முதலெழுத்தாகக் கொண்டிருப்பதைக் காணலாம்.
தவிர, குழந்தையின் பிறப்பத்தாட்சிப் பத்திரத்தில் தாயின் கன்னிப் பெயரே கேட்கப்படுகிறது. ஆனால், தற்போது இதைப் பற்றித் தெரிந்து கொள்ளாத சிலர், கன்னிப் பெயரைக் குறிப்பிடாமல் அவரது கணவனின் பெயரைச் சேர்த்தே குறிப்பிடுகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.
கேள்வி: ஆன்மீகத்திலும் ஈடுபாடு இருப்பதனால் இந்தக் கேள்வியைக் கேட்கலாமென்று எண்ணுகின்றேன். பசு வதை பற்றிப் பேசுகின்றவர்கள் பாலைக் கறந்தெடுத்துவிட்டு பசு பால் தருகிறது என்று சொல்வது பற்றி?
பதில்: பசு வதை என்பது பசுவை வதைப்பது. பசுவை அடித்தோ, பிறவழிகளில் வதைத்தோ அதன் கன்றுக்குப் போதிய பாலை வழங்காமல் முழுப்பாலையும் கறந்தெடுப்பதுதான் பசு வதை. பசுவையும் கன்றையும் நல்ல முறையில் பராமரித்து அவற்றுக்குப் போதிய ஆகாரத்தையும் வழங்கி கன்றுக்குப் போதிய பாலை வழங்கி மீதமுள்ள பாலைக் கறந்தெடுப்பது பசு வதையல்ல என்றே நான் கருதுகிறேன். இது வதையென்றால் மரங்கள், செடிகளிலிருந்து காய்களையும் கனிகளையும் இலைகளையும் பறித்தெடுப்பதை என்னவென்பது?
(ஆனாலும் பசு பால் தருகிறது என்பதை பசுவிடமிருந்து பாலைப் பெறுகிறோம் என்று திருத்திக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், பசு பாலைத் தராது ஒளித்து விட்டால், எம்மால் பெற்றுக் கொள்ள முடியாதே.)
கேள்வி: பெண்களின் கண்ணீர் ஓர் ஆயுதம் என்று சொல்வதைப் பெருமையாக நினைக்கிறீர்களா?
பதில்: நிச்சயமாக இல்லை. பெண்கள் அழுவதைப் பார்த்துப் பரிதாபப்பட்டு ஒரு காரியம் நிறைவேறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்களின் பக்கமிருக்கிற நியாயத்தால் அவர்களின் திறமையால் ஒரு காரியம் நிறைவேறுவதே மரியாதையான விடயம். பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்களே தவிர; பரிதாபப்பட வேண்டியவர்களல்ல.
கேள்வி: உளவளத்துணை கற்றவர் நீங்கள். தொலைக்காட்சித் தொடரில் கண்ணீர்க் காவியங்கள் பெரும்பாலும் அநேகரின் பொழுதுபோக்காக இன்றுள்ளது. இது சமூகத்தில் முன்னேற்றத்தையா, பின்னடைவையா ஏற்படுத்தும்?
பதில்: முன்னேற்றம், பின்னடைவு என்று ஒட்டுமொத்தமாக அத்தனை தொடர்களுக்கும் சொல்லிவிட முடியாது. தொலைக்காட்சித் தொடர்களை பார்க்கக் கூடியவை, சகிக்கக் கூடியவை, சகிக்க முடியாதவை என்று மூன்றாக வகைப்படுத்தலாம். இவற்றுள் முதலாவது பிரிவை எடுத்துக்கொண்டால் இவற்றுள் சமூகம் சார்ந்த விடயங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கும் என்பதோடு தைரியம், தன்னம்பிக்கை, பாசம், பொறுப்புணர்ச்சி போன்ற நல்ல விடயங்களையும் இவை எடுத்துச் சொல்கின்றன. அத்துடன், மதிக்கப்படக் கூடிய இயல்பான பாத்திரப் படைப்புகள் பார்ப்பவரின் ஆளுமையில் ஒரு நேர்க்கணிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். நீண்ட காலத்திற்குக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டிய நிலை இருந்தாலும் இவ்வகைத் தொடர்கள் சமூகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை.
இரண்டாம் வகையைப் பற்றிச் சொல்லவதானால் இவை தைரியம், தன்னம்பிக்கை, விடா முயற்சி, நட்பு என்று நல்ல விடயங்கள் சிலவற்றை எடுத்துச் சொன்னாலும் தொட்டதற்கெல்லாம் கண்ணைக் கசக்குவதும் படு மட்டமான சிந்தனைகள், செயல்கள் கொண்ட கதாபாத்திரங்களும் அவற்றின் பக்குவப்படாத முடிவுகளும் என்று பார்ப்பவர்களுக்குச் சற்று எரிச்சல் மூட்டிக் கொண்டிருக்கின்றன. இவற்றினால் சமூகத்திற்குச் குறிப்பிட்டுச் சொல்கின்ற அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்ல முடியாது.
சகிக்க முடியாதவை பற்றிச் சொல்வதென்றால் முட்டாள் தனமாக யோசித்துச் செயற்படும் கதாபாத்திரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள் என்று பார்ப்பவர்களை முட்டாள்களாக்குவதோடு எரிச்சல் மூட்டுபவனவாகவும் உள்ளன. இவற்றினால் சமூகத்தில் முன்னேற்றம் என்று எதுவும் இல்லை.
ஆனால், தொடர்களுக்காகத் தினமும் நீண்ட நேரம் செலவிடப்படுவதால் இவை சமூகப் பின்னடைவுக்கு வழிகோலுகின்றன.
கேள்வி: தங்களின் வழிகாட்டியாக யாராவது உள்ளனரா?
பதில்: எனது தாயார் இருந்தவரை சிறந்த வழிகாட்டியாவும் நண்பியாகவும் இருந்தார். 1997 இல் அவர் இறைவனடி சேர்ந்ததும் எனக்கு வழிகாட்டியென்று யாரும் இல்லை.
கேள்வி: எழுத்துலகில் இன்னும் எந்த மாதிரியான வெளியீடுகளை செய்யவுள்ளீர்கள்?
பதில்: கவிதைத் தொகுப்பு ஒன்று, சிறுகதைத் தொகுப்பு ஒன்று மற்றும் சில நாவல்களை வெளியிடுவதாக இருக்கிறேன்.
கேள்வி: எழுத்து சோறு போடுமா என்று கேட்பார்கள். உங்களுடைய படைப்புகளைப் படிப்பாளிகளிடம் முழுமையாக விநியோகிக்க முடிந்ததா?
பதில்: `நிலவே நீ மயங்காதே' நாவல் மீரா வெளியீடாக வெளிவந்ததால் அதன் விநியோகப் பொறுப்பு என்னைச் சார்ந்திருக்கவில்லை. `சக்திப்ரதாயினி', `யாதுமாதிரி' நின்றாய் என்பவை பக்திக் கவிகைதள் என்பதாலோ என்னவோ 95 சதவீதமானவை படிப்பாளிகளிடம் போய்ச் சேர்ந்துவிட்டன. ஆனால், இதை எல்லா வெளியீடுகளிலும் எதிர்பார்க்க முடியாது. ஒரு படைப்பை வெளியிடுவதென்பது இலகுவானதல்ல. இதில் பணம் என்பது ஒரு பெரிய பிரச்சினை. ஒரு படைப்பை வெளியிடுவதற்கே பெருந்தொகைப் பணம் தேவைப்படுகின்றது. இத்தனையையும் கடந்து புத்தகங்களை வெளியிட்டால் இவற்றை விநியோகிப்பது பெரும்பாடாக இருக்கிறது. இது சகல எழுத்தாளர்களுக்கும் பொதுவானதொரு பிரச்சினையாகும். இதனாலேயே பல எழுத்தாளர்களின் பல படைப்புகள் நூலுருப் பெறாமலேயே இருந்து விடுகின்றன. இது புதிய எழுத்தாளர்கள் உருவாவதற்கும் உருவாகியவர்கள் வளர்வதற்கும் பெரிய தடையாக இருக்கின்றது.
கேள்வி: இலக்கிய உலகில் ஆண், பெண் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது தான். ஆனாலும், பெண்களின் வரவு குறைவு. வந்தவர்களும் சிலர் ஒதுங்கி விடுவதனையும் காணக்கூடியதாகவுள்ளது. எனவே, புதியவர்களின் வரவு தேவை என்ற வகையில் இலக்கிய உலகிற்குள் பெண்களை உள்வரவழைக்க எப்படியான கருத்தைச் சொல்லலாம்?
பதில்: எழுத்துத்துறையில் நாட்டமுள்ளவர்கள் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். சமூகத்திற்குத் தாங்கள் சொல்ல விரும்புவனவற்றைத் தங்கள் எழுத்துகளின் மூலம் சொல்லிக் கொள்ளலாம். தங்கள் குடும்பச் சுமைகள், அலுவலகச் சுமைகள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் கடந்து உங்களால் முடியும் என்ற நம்பிக்கையோடு தைரியமாக எழுத்துலகில் பிரவேசிக்க வேண்டும்.

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite