
திடீரென யாரோ பின்னால் நிற்பது போன்ற உணர்வு. சட்டென்று திரும்பினேன். நந்தகுமார் மாஸ்டர் எனது கணவரின் தோள்களைத் தட்டினார். ரியூட்டரியில் கணித மாஸ்டர் வராத வேளைகளில் அவருக்குப் பதிலாக வரும் மாஸ்டர். நண்பி திலகத்தின் முறை மச்சான். அவர்களுக்குள் காதலும் கூட. அதனால் எங்கள் சீண்டல்களுக்கும் சில சமயம் ஆளாபவர். எனது கணவரின் நண்பர். ஐந்து வருடங்களின் பின் சந்திக்கிறேன். திலகத்துக்கும் அவருக்கும் திருமணமாகி குழந்தைகளும் இருப்பதாக ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தேன்.
எனது கணவரோடு இரண்டு கதை கதைத்து விட்டு என் பக்கம் திரும்பி "சந்திரவதனா...! றேடியோவிலை உங்கடை பெயர் வராத நாட்களே இல்லை. ஒரு நாளைக்கு மூன்று தரத்துக்குக் குறையாமல் உங்கடை ஏதாவது ஆக்கங்கள் போகுது. இண்டைக்கும் அந்தக் கவிதை நல்லாயிருந்தது." பாராட்டி விட்டு மீண்டும் கணவரோடு கதைக்கத் தொடங்கி விட்டார்.
அந்த வயசில் எனக்குக் கிடைத்த அந்தப் பாராட்டில், உச்சி குளிர்ந்ததில் சந்தோசத்தை அடக்க முடியாமல் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தேன்.
படம் முடிந்து சைக்கிளில் வீடு திரும்பும் போது கணவர் ஒரு வார்த்தை பேசவில்லை. மௌனமாய் சைக்கிளை உழக்கினார். "ஏன்...?" என்ற கேள்வியை வீட்டில் வந்து இறங்கும் போதுதான் கேட்டேன்.
சடாரென்று சூடாக வீழ்ந்தன வார்த்தைகள் "சும்மா அவனவன் வந்து, கவிதை நல்லாயிருக்கு, கட்டுரை நல்லாயிருக்கு எண்டுவான். நீரும் 32 பல்லையும் காட்டும்."
எனக்கு ஒருதரம் சப்தநாடியும் அடங்கி ஒடுங்கின.
சந்திரவதனா
28.7.2005