Monday, November 26, 2012

தமிழ் ஆவண மாநாடு 2013

நூலகம் நிறுவனம் தனது எட்டாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆவணமாநாடு ஒன்றினை நடாத்தவுள்ளது. இம்மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுவதாக நூலகம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அது பற்றிய விபரங்கள்.

*திகதி ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில், 2013
*இடம் கொழும்பு தமிழ்ச் சங்கம், இலங்கை
*மின்னஞ்சல் noolahamfoundation@gmail.com
*தொலைபேசி (இலங்கை) 0094 112363261

அறிமுகம்

இலங்கையின் தமிழ்பேசும் சமூகங்களின் மரபறிவுச்செல்வங்களை ஆவணப்படுத்தல் பேணிப்பாதுகாத்தல் மூலமாக, தற்போதைய , எதிர்கால தலைமுறையினருக்கான அறிவுப் பகிர்வுப் பணியை செவ்வனே செய்து வருகின்ற நூலக நிறுவனம், 2013ம் ஆண்டில் தனது எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தனது ஆண்டு விழாவுடன் கூடியதாக ”தமிழ் ஆவண மாநாடு 2013” ஐயும் நடாத்தவிருக்கின்றது. 'தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் பேணிப் பாதுகாத்தலும்' எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம் மாநாடு எதிர்வரும் 2013 ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறும்.

 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு

பல்வேறுபட்ட துறைசார்ந்த விடயங்களையும் ஆவணப்படுத்தல், பேணிப்பாதுகாத்தல் மற்றும் அறிவைப்பகிர்தல் ஆகிய பணிகளில், இதுவரைகாலமும் அடையப்பட்ட இலக்குகளையும் அடையத் தவறவிடப்பட்ட இலக்குகளையும் அடையாளம் கண்டு, வெளிப்படுத்துதலை இம் மாநாடு நோக்கமாக கொண்டுள்ளது. இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்தும் பல கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பங்குபற்றும் இம் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க விரும்புவோரிடமிருந்து கீழ்வரும் விடயப்பரப்புகளுக்கு அமைவான ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப் படுகின்றன. இக்கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருத்தல் வேண்டும்.

ஆய்வுக்கட்டுரைகளுக்கான விடயப்பரப்புகள்

  1. வரலாறு, தொல்லியல் ஆவணங்களும் மரபறிவுப் பதிவுகளும்
  2. ஒலி, ஓளி, புகைப்பட ஆவணங்கள்
  3. தனிமனித ஆளுமைகள், நிறுவனங்கள்
  4. சமூகத்தை ஆவணப்படுத்தல்
  5. மொழி இலக்கியப் பதிவுகள்
  6. அறிவுப்பகிர்வும் கல்வியும்
  7. ஆவணப்படுத்தலில் தொழினுட்பப் பயன்பாடுகள்
  8. எண்ணிம நூலகங்கள் [Digital Libraries], இணையத் தளங்கள், தரவுத் தளங்கள்
  9. நூல் விபரப்பட்டியலும் நூலகவியலும்
  10. கலை பண்பாடு நினைவுகளும் ஆவணப்படுத்தலும்
ஆய்வரங்குகளில் பங்குபெற்ற விரும்பும் ஆய்வாளர்கள், தாம் சமர்ப்பிக்க விரும்பும் ஆய்வுக் கட்டுரையின் சுருக்கமான முன்வரைவை 400 சொற்களுக்கு மேற்படாதவாறு அனுப்பி வைக்க வேண்டும். இம் முன்வரைவு 15-01-2013 அன்று அல்லது அதற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவை தமிழ் ஒருங்குறி [Unicode] எழுத்துருக்களில் தட்டச்சிடப்பட்டு மின்னஞ்சலில் noolahamfoundation@gmail.com அனுப்பப்படுவது விரும்பத்தக்கது. அதேவேளை தபால் மூலமாகவும் அனுப்பலாம். அனுப்பப்படும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான முன்வரைவுகள், நியமிக்கப்பட்ட ஆய்வறிஞர்களைக் கொண்ட குழுவால் பரிசீலிக்கப்பட்டு, தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட முன்வரைவுகள் பற்றிய விபரம் இரு வாரங்களுக்குள் அவற்றை அனுப்பியவர்களுக்கு அறிவிக்கப்படுவதோடு மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை சமர்ப்பிப்பதற்கான அழைப்பும் பதிவுசெய்தல் பற்றிய விபரங்களும் அறிவிக்கபடும்.

தெரிவு செய்யப்பட்ட முன்வரைவுகளுக்கான ஆய்வுக் கட்டுரைகள் தமது இறுதி வடிவத்துடன் 01-03-2013 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளின் இறுதிவடிவம் 5000 சொற்களுக்கு மேற்படாததாக இருத்தல் வேண்டும்.

மாநாட்டு அமர்வுகளில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் நூலக நிறுவனம் மாநாட்டின் ஆரம்ப நாள் அன்று வெளியிட உள்ள மாநாட்டுச் சிறப்பு மலரில் இடம்பெறும். கட்டுரையாளர்கள் மற்றும் பதிவு செய்த பங்குபெறுவோர் அனைவருக்கும் மாநாடு நடைபெறும் நாட்களில் மாநாட்டு சிறப்பு மலர், வெளியீடுகள், கோப்புக்கள் போன்றவை வழங்கப்படும்.

முழுப்பெயர், மின்னஞ்சல், வதிவிட முகவரி ஆகிய விபரங்களுடன் ஆய்வுக்கட்டுரைகளுக்கான முன்வரைவுகள், கட்டுரைகள் ஆகியவற்றை அனுப்புதலுக்கும் பிற தொடர்புகளுக்குமான முகவரி:

Noolaham Foundation
No 7, 57th Lane, (Colombo Tamil Sangam)
Colombo-06, Sri Lanka
Phone (Land): 0094 112363261

 http://noolahamfoundation.org/wiki/index.php?title=Main_Page
http://vallaivelie8.blogspot.com/2012/11/2013.html

Thursday, September 27, 2012

மூனாவுடன் ஒரு நேர்காணல்

ஒரு புதுச்சூழலில் எங்கள் பயணம் தொடங்குகிறது...
பொங்குதமிழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து ஒரு கருத்துப்பட ஓவியராக தொடர்ச்சியாக இயங்கிவருபவர் செல்வகுமாரன். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், புலம்பெயர்ந்து நீண்ட காலமாகவே ஜெர்மனியில் வசித்து வருகிறார்.

சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட செல்வகுமாரன் ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். ஓவியத்திற்கு அப்பால் நாடகம், கவிதை, கட்டுரை என பல்தளங்களில் இயங்கும் ஒரு முழுமையான படைப்பாளி.

பொங்குதமிழுக்காக இவர் வரைந்த கருத்துப்படங்கள் சமகால அரசியல் வரலாற்றின் ஓவியப் பதிவுகளாக பலரின் கவனத்தைப் பெற்று வருகின்றன. குறிப்பாக 1983, 2012 ஆண்டுகால சிறைச்சாலைப் படுகொலைகளை மையப்படுத்தி இவர் வரைந்த கருத்துப்படம் 150 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்களின் முகப் புத்தங்களில் பிரதிசெய்யப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது.

ஐம்பதிற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஐபிசி வானொலியில் ஒலிபரப்பாகி உள்ளன. ஆறு நாடகங்கள் ஜெர்மனியில் மேடையேறி உள்ளன. இவரின் 'தாயென்னும் கோயில்' நாடகம் உலகளாவிய தமிழர்களுக்கிடையே ஐபிசி வானொலி நடாத்திய நாடகப் போட்டியில் தெரிவாகி முதலாவது பரிசான தங்கப்பதக்கத்தை வென்றெடுத்திருக்கிறது.

செல்வகுமாரனின் முழுமையான படைப்பாற்றலை இந்நேர்காணல் வெளிக்காட்டும் என நம்புகிறோம்.

ஓவியத்துறையில் உங்களுக்கு எப்படி ஈடுபாடு வந்தது என்பது பற்றிச் சொல்லுங்கள்?
கல்கி, குமுதம், விகடன், ராணி சஞ்சிகைகளில் இருக்கும் சித்திரங்களைப் பார்த்து எனது அண்ணன்கள் தங்களது அப்பியாசப் புத்தகங்களில் கிறுக்கும்போது எனக்கும் வரையும் ஆவல் தொற்றிக் கொண்டது. அதுவே பாடசாலையில் ஓவிய வகுப்பில் எனது திறமையை வளர்க்கக் காரணமாயிற்று. பின்னாளில் எனது வரைதலுக்கு அறிவூட்டி, வழிகாட்டி, நெறிப்படுத்தியது ஓவியர் ஏ.மார்க் அவர்கள். எனது நகரில் உள்ள பிரபலமான ஹாட்லிக் கல்லூரியில்தான் அவர் ஓவிய ஆசிரியராக இருந்தார். அந்தப் பாடசாலையின் மாணவர் விடுதிக்கும் அவரே பொறுப்பாளராகவும் இருந்தார். அந்த விடுதியில் விசாலமான அறையொன்றில் மாலையில் ஆறிலிருந்து பத்துவரை அவரிடம் ஓவியம் பயில எனக்கு வாய்ப்புக் கிட்டியது. நிறையப் புத்தகங்கள் வைத்திருப்பார். வாசிக்கத் தருவார். அதில் உள்ள படங்களை வரையப் பயிற்சியும் தருவார். மரங்களையும், மாடுகளையும், மனிதர்களையும் அப்படியே கீறுவதில் அர்த்தமில்லை. அவற்றில் நவீனங்களைப் புகுத்தி பார்ப்பவர்களுக்குப் பலவற்றைச் சொல்லவைக்கும் சித்திரங்களை வரைய வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். மார்க் மாஸ்ரரிடம், ஓவியம் சம்பந்தமாக எத்தனை கேள்விகளைக் கேட்டாலும் ஆசையாகச் சொல்லியும் தருவார். எத்தனையோ நுட்பங்களைக் காட்டியும் தருவார். எல்லாவற்றுக்கும் மேலாக நான் College of fine arts இல் பயில வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். College of fine arts இல் நுளைவதற்கு எனக்கு எல்லாத் தகுதியும் இருந்தும் அங்கு சென்று படிப்பதற்கு எனது வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை.

எதற்காக உங்கள் வீட்டில் அனுமதி தர மறுத்தார்கள்?
ஓவியத்துறையில் பெரிதும் சாதிப்பதற்கோ, வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கோ இலங்கையில் வாய்ப்பில்லை என்பது எனது வீட்டாரினது கருத்தாக இருந்தது. ஒருவிதத்தில் அது உண்மையானதாகவே இருந்தது. தென்னிந்திய சஞ்சிகைகள், அதில் வரும் கதைகள் அவற்றிற்கான ஓவியங்கள் எல்லாமே அங்குள்ளவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. சாமி அறையில் இருக்கும் கடவுள் படங்கள், சிகை அலங்கார நிலையங்களில் தொங்கும் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்களின் படங்கள் எல்லாமே தென்னிந்தியாவில் இருந்து வந்து எம்மவர்களை ஆக்கிரமித்திருந்தபோது பெரிதாக இவன் என்ன சாதிக்கப் போகிறான் என்ற நிலையே அன்று மேவி இருந்தது. இதுவே என்னைப் போன்றவர்களுக்கு அன்றைய காலத்தில் பெரிதும் பின்னடைவாகப் போயிற்று.

கலை, விளையாட்டுகள் எல்லாம் சோறு போடாது என்ற அன்றைய தமிழரின் நிலைப்பாட்டில் நீங்களும் மாட்டிக் கொண்டீர்கள். இதனால் உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படவில்லையா?

நான் மேற்கொண்டு ஓவியத்துறையில் திறமையை வளர்க்க முடியாமல் போனதில் மார்க் மாஸ்ரருக்குத்தான் என்னை விட கவலைகள் அதிகமாக இருந்தது. தனது கவலையை என்னிடம் நேரடியாகவே அவர் பகிர்ந்து கொண்டார். ஆனாலும் பெற்றோருக்கும், பாதுகாவலர்களுக்கும் கீழ்படிதல் வேண்டும் என்று ஆசிரியர் நிலையில் இருந்து கொண்டு எனக்குத் தனது அறிவுரைகளையும் தந்தார்.

பின்னாளில் மார்க் மாஸ்ரர் மாற்றலாகி யாழ்ப்பாணம் போனதன் பின்னர், நானும் ஓவியன் எனும் எனது எண்ணத்தை மூடிவைத்து விட்டு எனது வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் நுளைந்து கொண்டேன்.

ஓவியர் மார்க் அவர்களைப் பற்றி உங்கள் பார்வை எப்படி இருக்கிறது?
அற்புதமான ஓவியர் என்பதையும் தாண்டி அவர் ஒர் அன்பான மனிதர். பேச்சாலோ, செயலாலோ எவரையும் நோகடிக்கத் தெரியாதவர். எவ்வித பாகுபாடுமின்றி எவருக்கும் ஓவியத்தைப் பற்றி தன்னால் முடிந்தளவுக்குச் சொல்லித் தந்தவர். பிக்காசோவின் ஓவியங்களில் மனதைக் கொடுத்தவர். விட்டால் பல மணி நேரம் பிக்காசோவின் ஓவியங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருப்பவர். நவீன ஓவியங்கள் பெரிதும் தமிழ் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் என்று நினைத்தவர். அதற்காகவே தனது படைப்புக்களைத் தந்தவர். போதுமான வசதிகள் கிட்டாத போதும் சளைக்காமல், தேயிலை அடைத்துவரும் பலகைப் பெட்டிகளைப் பிரித்தெடுத்து அதில் ஓவியங்களை வரைந்து வைத்தவர். அவருக்கு இருந்த திறமை பெரிது. இங்கு, வெளிநாடுகளில் வந்து பார்க்கும் போதுதான் மார்க் மாஸ்ரர் என்ற அற்புத ஓவியரின் மதிப்பு புரிகிறது.

ஓவியர் மார்க் அவர்களைப் பற்றி உங்கள் நினைவில் ஏதாவது...?
நிறையவே இருக்கின்றன. சொல்லப் போனால் அதற்காகவே ஒரு பதிப்பு போடலாம். எனது நினைவுக் குறிப்பில் அவரைப் பற்றி இரண்டு விடயங்களைப் பதிந்துள்ளேன். அதிலொன்று...
'அவருக்கு சிவப்பு வர்ணம் என்றால் அறவே பிடிக்காது. ஆனாலும் அவர் தீட்டிய அந்த நவீன ஓவியத்தில் சிவப்பே நிரம்பியிருந்தது. இதைப்பற்றி அவரிடமே கேட்டுவிட்டேன். அமைதியாக அவரிடமிருந்து பதில் வந்தது.

இது சிவனின் உருத்திர தாண்டவம். கோபத்தையும், பயத்தினையும் இணைத்துக் கொடுப்பதற்கு இந்த வர்ணம்தான் சிறந்தது. போதாதற்கு சிவனின் நடனத்தை ஒரு சுடலையில் நடப்பதாக வரைந்திருக்கின்றேன். பிணம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. ஆகவே இங்கே சிகப்புத்தான் சிறந்தது. ஆனாலும் எனக்கு சிகப்பு பிடிக்காது.

அமைதியாக ஆனாலும் விளக்கமாக அவரிடமிருந்து பதில் வந்தது. ஓவியர் ஏ.மார்க் அமைதியான மனிதர். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை.
பார்க்கும்போது முட்ட வரும் காளை மாதிரியிருக்கும் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் அந்தக் காளைக்குள் ஏ.மார்க் என்ற எழுத்துக்கள் இருக்கும். AM என்ற எழுத்துக்களின் மேற்பகுதி குத்தவரும் கொம்புகளாகவும் A யின் கீழ்ப்பகுதி இரண்டும் முன்னம் கால்களாகவும் இருக்கும். இறுதியாக வரும் M காளையின் வாலாகவும் பின்னங் கால்களாகவும் இடையில் வரும் AR கச்சிதமாக அதன் உடலாகவும் அமைந்து இருக்கும். இத்தனையும் அடக்கி அற்புதமாக மரத்தில் காளை ஓவியத்திற்குள் தனது பெயரை செதுக்கியிருந்தார். அதுவே அவரின் இலச்சினையாகவும் இருந்தது. தான் வரையும் ஓவியத்தில் அந்த முத்திரையையும் அப்போ அவர் பதித்து வந்தார். தனது புத்தகங்களின் முதற்பக்கத்திலும் இந்த காளை முத்திரையை பதித்திருப்பார்.

அப்பொழுது தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த நேரம். அந்த கிளர்ச்சி இளைஞர்கள் கன்னத்தில் கிருதாவும் குறுந்தாடியும் வைத்திருந்தார்கள். அது அந்த நேரத்து நாகரிகமாகவும் இருந்தது. தென்னிலங்கைக்கும் வடஇலங்கைக்கும் சம்பந்தமில்லாத போராட்டமது. ஆனாலும் முழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டமிருக்கும். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் விடுதியில் சனி, ஞாயிறுகளில் மாணவர்கள் தங்குவதில்லை. அதனால் மார்க் மாஸ்ரரும் வார விடுமுறைக்காக தனது ஊருக்குப் போய்விடுவார்.

ஒரு சனிக்கிழமை காலை, நகரம் களை கட்டியிருந்த நேரம், நகரத்தின் மத்தியில் இருந்த பஸ் நிலையத்தில் தனது ஊருக்குப் போவதற்காக மார்க் மாஸ்ரர் காத்திருந்தார். கூடவே நானும் அவருடன் நின்றிருந்தேன். அப்பொழுது ஜீப் வண்டியொன்று பஸ் நிலையத்துக்குள் வந்து சினிமா பாணியில் கிறீச்சிட்டு நின்றது. அதன் முற்பக்கத்தில் இருந்து காவல்துறை அதிகாரி இறங்கினான். இறங்கியவன் சுற்று முற்றுப் பார்த்தான். அவனுக்குத் தன் பெருமையை யாருக்காவது காட்டவேண்டும் அல்லது யாரையேனும் பயமுறுத்த வேண்டும் என்ற எண்ணமிருந்திருக்க வேண்டும். சிறிது நேர நோட்டத்துக்குப் பின் எங்கள் இருவரையும் நோக்கி வந்தான். எனக்கு அவனைப் பார்க்கப் பயமாக இருந்தது. பயப்படாதையும் என்று மார்க் மாஸ்ரர் எனக்கு ஜாடை காட்டினார். நேராக வந்தவன் மார்க் மாஸ்ரரை நெருங்கி நின்றான். அப்பொழுது மார்க் மாஸ்ரர் கன்னத்தில் நீளமாகக் கிருதா வைத்திருந்தார். அதைக் காட்டி என்ன என்று கேட்டான். மார்க் மாஸ்ரர் சிரிப்பால் பதில் சொன்னார். காவலதிகாரி அலட்சியமாக அவரைப் பார்த்தான். விபரீதமொன்று நிகழ வாய்ப்பிருப்பதாக மனது அச்சப்பட்டது.

காவலதிகாரி ஜீப்பிற்குப் சென்று திரும்பி வந்தான். அவனது கையில் இப்பொழுது குறடு ஒன்று இருந்தது. மார்க் மாஸ்ரரின் நாடியைப் பிடித்து ஒரு பக்கமாகத் திருப்பினான். குறட்டையெடுத்து மார்க் மாஸ்ரரின் கன்னத்து கிருதா மயிர்களைப் பற்றி இழுக்கத் தொடங்கினான். மார்க் மாஸ்ரர் எதுவித சலனங்களையும் காட்டாது பேசாமல் இருந்தார். ஒரு மயிரை இழுத்துப் பிடுங்கும் போதே எவ்வளவு வேதனையிருக்கும்.

அந்த மிருகம் எதுவுமே செய்யாத அந்த அமைதியான மனிதனை வேதனைப்படுத்தி இன்பம் கண்டு கொண்டிருந்தது. எனக்கு ஆச்சி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்தான் நினைவில் வந்தன.

'நக்கிற நாய்க்கு செக்கென்ன? சிவலிங்கமென்ன?'

’சேர்.. அவர் ஒரு மாஸ்ரர்’ என்னையறியாமல் வார்த்தைகள் வந்தன. சிறிது நேரம் எங்கள் இருவரையும் அந்தக் காவலதிகாரி பார்த்தான். பிறகு பேசாமல் போய்விட்டான்.

பஸ் வந்தது. ஒன்றுக்கும் யோசியாதையும் சொல்லிவிட்டு மார்க் மாஸ்ரர் பஸ்ஸில் ஏறினார்.

ஓவியர் ஏ.மார்க் அமைதியான மனிதர். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை.

நீங்கள் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் அங்குள்ள நிலைமைகளை எப்படி எதிர்கொண்டிர்கள்? எப்போது ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்தீர்கள்?
நிறையவே சிரமப்பட்டிருக்கின்றேன். படங்கள் வரைவதால் பெரியளவில் பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை. மாறாக நண்பர்கள் போராளிகளாக இருந்ததால் எப்பொழுதும் எனது நிலையில் அச்சமே மேலோங்கி இருந்தது.
அதில் குறிப்பாக கணேஸ் மாமாவைச் சொல்லலாம். கணேஸ் பொலிகண்டியைச் சேர்ந்தவன். அவன் இந்தியா இலங்கை என ஓடிக் கொண்டிருந்தான். ஊரில் இருப்பானாயின் என்னைச் சந்திக்க வந்து விடுவான். இவனது தொடர்பே என்னை பெரிதும் இயக்கத்துக்குள் இழுத்து விட்டது.

இராணுவத்திற்கு தகவல் தருவோர் எனக்கு அருகாமைலிலேயே குடியிருந்தார்கள். அவர்களில் இருவரை மாணவர் அமைப்பு போட்டுத் தள்ள, பிரச்சினை பெரிதாகிவிட்டது. எந்த நேரமும் இராணுவம் ஊருக்குள் நுளைந்து விடும் அபாயம் இருந்தது.

கணேஸ் சொன்னான், இந்தியாவுக்கு கொண்டு போய் விடுகிறேன் வந்து விடு என்று. சொன்னவன் அன்று அவசர வேலையாக அக்கரைக்குப் போய் விட்டான். தவித்துக் கொண்டிருந்த எனக்கு, எனது பாடசாலை நண்பன் சிறீராம் ஒரு வழி சொன்னான். கிழக்கு யேர்மனிக்கு விசா தேவையில்லை. அங்கு போனால் மேற்கு யேர்மனிக்கு ரயில் ஏறி விடலாம் என்ற அவனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டேன். அவனே ரிக்கெற் செய்தும் தந்தான். அவன் சொன்ன வழியில் யேர்மனிக்கு 1984 நவம்பரில் வந்து சேர்ந்தேன். இதையும் நான் இங்கே சொல்லியாக வேண்டும்.

அக்கரைக்குப் போன கணேஸ் திரும்பி வந்து நான் யேர்மனி போனதை அறிந்து பெரிதும் கவலைப்பட்டானாம். அடுத்த தடவை அவன் கடலில் பயணம் செய்யும்போது கடற்படை தாக்கியதில் 24 பேருடன் சேர்ந்து இறந்து போனான். அவன் இறந்ததை எனது மகனே எனக்கு அறிவித்திருந்தான்.

மூன்று மாவீரர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடியுள்ளீர்கள். அவர் குறித்தும் உங்கள் குழந்தைகள் தொடர்பிலும் சொல்லுங்களேன்?
நான் யேர்மனிக்கு வந்த பின்னரே அவர்கள் போராளிகளானார்கள். அவர்களது தந்தையார் 58 கலவரத்தில் தனது உடைமைகளை இழந்திருக்கிறார். 76இல் மீண்டும் உடைமைகள் இழந்து கப்பல் ஏறி காங்கேசன்துறையில் வந்து இறங்கியிருக்கிறார். 83 இல் கண்டியில் பணிபுரியும் போது தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். இவை எல்லாம் சேர்ந்து அவர்களை இயக்கத்தின் பால் இழுத்துச் சென்றிருக்கலாம்.
இதில் மூத்தவர் பிரேமராஜன் ஒரு போராளிக் கவிஞன்.

அடுத்தது எனது மனைவி சந்திரவதனா. பெண் விடுதலை பற்றி அதிகம் எழுதியவர். எழுதிக் கொண்டிருப்பவர். அவரின் தங்கை சந்திரகுமாரி அதிகம் பேசப்படும் ஒரு எழுத்தாளர். ஐபிசி வானொலி அறிவிப்பாளர் மற்றும் சமுத்திரா என்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.

எனது பிள்ளைகள் என்று பார்க்கையில், அவர்களுக்கும் தமிழரது நிலமைகள் தெரிந்திருக்கிறது. 2002இல் வன்னிக்கு சென்று சமூக சேவைகள் செய்திருக்கிறார்கள். அங்கு அவர்கள் சென்றதால் நிலமைகளை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். எனது மூன்று பிள்ளைகளும் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.

இதில் இளையவன் யேர்மன் பத்திரிகை ஒன்றில் நிருபராகவும், எடிட்டராகவும் பணியாற்றுகிரான். அவனுக்கும் கட்டுரைகள் நன்றாக எழுத வருகிறது.

எனது சகோதரன் நித்தியகீர்த்தி, நியூசிலாந்து, அவுஸ்திரெலியா தமிழ்ச் சங்கத் தலைமைப் பதவியில் இருந்திருக்கிறார். மேலும் அவர் ஒரு எழுத்தாளரும் கூட.

எனது சகோதரியின் மகன் போராளியாக இருந்திருக்கிறான். அவனை இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றுவிட்டது. இந்தச் சம்பவம் பற்றி எனது சகோதரன் நித்தியகீர்த்தியும், மனைவி சந்திரவதனாவும் தங்களது பார்வைகளில் சிறுகதைகளாகப் பதிந்திருக்கிறார்கள்.

எப்போது உங்கள் முதல் ஓவியத்தைதை வரைந்தீர்கள்?
எனது இளவயதிலேயே நான் ஓவியங்கள் வரையத் தொடங்கி விட்டேன். அவை ஈழத்துச் சஞ்சிகைகள், பத்திரிகைகளில் பிரசுரமாகியுமுள்ளன.

எப்போது உங்கள் முதல் கார்ட்டூனை வரைந்தீர்கள்? அதற்கான உந்துதல் எப்படி ஏற்பட்டது?
இதற்கு நான் ஐபிசி வானொலிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஐபிசி தமிழ் வானொலியில் முன்னர் பணியாற்றிய அறிவிப்பாளர்களை தட்டிக் கொடுக்க, அவர்கள் நடத்தும் நிகழ்ச்சி சம்பந்தமாக கருத்துக்களை கேலியாக வரைந்து அனுப்பிக் கொண்டிருந்தேன். இதைப் பார்த்த அன்றைய ஆங்கிலச் செய்தி வாசிப்பாளர் செல்வி.பவானி பாலசுந்தரம் (வினோ), ஏன் நீங்கள் பத்திரிகைக்கு வரையக்கூடாது என்று கேட்டதோடு மட்டுமன்றி இலண்டனில் இருந்து வெளிவரும் தமிழ் கார்டியனுடன் தொடர்பு ஏற்படுத்தித் தந்தார்.
தமிழ் கார்டியனில் அரசியல் துறையின் பொறுப்பை ஏற்றிருந்த திரு.சுதன் நடராஜாவின் அரசியல் கருத்துக்களுக்கு ஏற்ப எனது அரசியல் கிறுக்கல் ஆரம்பமானது.

இதில் ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அன்றைய காலத்தில் ஐபிசியில் பணியாற்றிய அத்தனை பேரையும் கேலிச்சித்திரங்களுக்குள் கொண்டு வந்திருக்கிறேன். பணிப்பாளர்களாக இருந்த திரு. தாசீசியஸ், திரு.றஞ்சித் அவர்களையும் நான் விட்டு வைக்கவில்லை. எல்லோரும் ஓட்டுமொத்தமாக அந்தக் கேலிச் சித்திரங்களை வரவேற்றார்கள். என்னைத் தட்டிக் கொடுத்தார்கள்.

ஆக மொத்தம் புலம்பெயர் தமிழரில் ஒரு கேலிச்சித்திரக்காரனை உருவாக்கிய பெருமை அன்றைய ஐபிசி வானொலிக்கே உரியது.

உங்களது படைப்புகளை ஊடகங்கள் தவிர்ந்த வேறு தளங்களில் மக்களின் பார்வைகளுக்கு வைத்துள்ளீர்களா?
ஜேர்மனிக்கு வந்த ஆரம்பகாலங்களில் எமது நாட்டின் அவலங்களை வெளிப்படுத்தக் கூடிய ஓவியங்களை நான் அவ்வப்போது வரைந்து கொண்டிருந்தேன். அந்த ஓவியங்களை நான் தங்கியிருந்த நகரிலும், எனது நகரத்தை ஒட்டிய மற்றைய நகர்களிலும் ஜேர்மனிய மக்களின் பார்வைகளுக்கு வைத்து கருத்தரங்குகளும் செய்துள்ளேன்.
ஆனாலும் அந்த நேரத்தில் அரசியல் தஞ்சம் கோரியோர்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளின் மத்தியில் வெளி நகரங்களுக்குந் சென்று பெரியளவான காட்சிப்படுத்தல்களை செய்ய முடியாதிருந்தது. பிற்பட்ட காலங்களில் அரசியல் அமைப்புகளின் செயற்பாடுகள் ஆரம்பித்து விட்டிருந்ததால் அவர்களின் நிகழ்வுகளில் எனது ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.

கேலிச்சித்திரங்களை வரைவதால் விமர்சனங்களுக்கோ, பாராட்டுதல்களுக்கோ ஆளாகியிருக்கிறீர்களா?
பெரியளவில் விமர்சனங்கள் எனக்கு வந்து சேரவில்லை என்பது உண்மை. பாராட்டுதல்கள் அவ்வப்போது வருவதுண்டு.
யேர்மனியில் ஒரு தடவை திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கலந்து கொண்ட அரசியல் கூட்டத்திற்குப் போயிருந்தேன். கூட்டத்திற்கு முன்னர் அவர் தங்கியிருந்த அறைக்குள் செல்லும் வாய்ப்பு எனக்கும் எனது மனைவிக்கும் கிட்டியது.
உள்ளே போனோம். அரங்கத்திற்குள் இருக்க வேண்டிய பாதிப்பேர் அங்கே நிறைந்திருந்தார்கள். ஆனாலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எனது மனைவியின் சகோதரனை அவருக்குத் தெரிந்திருந்தது. அவருடன் எனது மனைவி உரையாடும் போது இவர் எனது கணவர் ஒரு கார்டூனிஸ்ட் என்று அறிமுகம் செய்தார். உடனடியாக அவரின் வாயில் இருந்து வந்த வார்த்தை ’மூனா'. இவர் என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு நாள் உங்களையும் எனது கிறுக்கலுக்குள் கொண்டு வருவேன் என்றேன். 'ஏன், இப்பொழுதே கொண்டு வா' என்று பேப்பரையும் பேனாவையும் வரவழைத்துத் தந்தார். அப்பொழுது கிடைத்த இரண்டு நிமிடத்தில் நான் கிறுக்கித் தர அதற்குக் கையெழுத்திட்டு, பாராட்டி விட்டுப் போனார்.
அடுத்த முறை அவரைச் சந்திக்கும் போது நேரம் அதிகம் எடுத்து அவரை வர்ணத்தில் வரைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த எண்ணம் மட்டும் எனக்குக் கை கூடவில்லை. அவர் அமரத்துவம் அடைந்தபோது கறுப்பு வெள்ளையில் தமிழ்கார்டியனில் முழுப் பக்கத்தில் அவரை வரைந்த போது மனது பெரிதும் சிரமப்பட்டது.

போரும் படுகொலைகளும் நிகழ்ந்த காலத்தில் ஒரு ஓவியராக உங்கள் மனநிலை எப்படியிருந்தது? அந்த உணர்வுகளை எப்படி ஒவியங்களில் வெளிப்படுத்தினீர்கள்?
மற்றவர்களைப் போல் எனக்கும் கவலைகள் அதிகமாக இருந்தது. ஒவ்வொன்றாக இழக்கும் போதும், அவலங்களைக் கேட்கும்போதும் யாரேனும் சிங்கள அரசைத் தட்டிக்கேட்க மாட்டார்களா? இந்த அவலங்களை நிறுத்த மாட்டார்களா என்ற நப்பாசை என்னுள் இறுதி வரை இருந்தது. அதற்காகவே பல படங்களை வரைந்திருந்தேன். ஊர்வலங்களுக்கெல்லாம் நான் கீறிய படங்கள் போனது. ஆனால் எங்களுக்கான முடிவுதான் மாறிப் போயிற்று. அந்த அவலமான முடிவோடு நானும் ஒரு முடிவுக்கு வந்தேன்
'மூனா' வையும் இத்தோடு முடித்து விடுவதென்று. அதன்படி 'இணையில்லாதவன்' என்று தலைப்பிட்டு ஒரு படம் வரைந்தேன். அத்தோடு எனது கிறுக்கல் ப்ளாக்கையும் மூடிவைத்து விட்டேன்.

அதன் பிறகும் நீங்கள் கேலிச்சித்திரங்கள் வரைகிறீர்களே?
உண்மை. இது ஒருவருடைய வேண்டுகோளுக்காக. நண்பர் ஒருவர் பொங்குதமிழ் இணையத்துக்கு கேலிச் சித்திரங்கள் வேண்டும் என்றார். மறுக்க முடியவில்லை.

அத்தோடு புதிய வழியில் புதுச்சூழலில் எங்களது பயணம் தொடங்குகிறது. நானும் சேர்ந்து பயணிப்பதுதானே முறை. ஆனால் இம்முறை 'மூனா' போய் 'தூனா' வந்திருக்கிறார்.

ஒரே பொருளில் அமைந்த அனுபவங்களை வித்தியாசமாகப் படைப்பாக்குவதில் உங்களின் அனுபவங்கள் எப்படி இருக்கின்றது?
எப்பொழுதும் ஒரே பொருள்தான். சிங்கள அரசியல்வாதிகளுக்கு தமிழரை இல்லாதொழிக்க வேண்டும், என்பதுதான் பொருளாக இருக்கிறது. லலித் அத்துலத்முதலி தொட்டு கோத்தபாய ராஜபக்ச வரை ஒரே கொள்கையைத் தான் வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒரே பொருளை வைத்துக் கொண்டு வெவ்வேறு வடிவங்களில் வரும் போது நாங்களும் வெவ்வேறு முறையில் படைப்பாக்க வேண்டி இருக்கிறது.

இதற்காக நிறையவே சிந்திக்க வேண்டி இருக்கிறது. செய்திகளை, கட்டுரைகளை முழுவதுமாக உள்வாங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. வேலை நேரங்களில் கூட இதே சிந்தனையுடனே இருக்க வேண்டிய நேரங்களும் இருந்திருக்கிறது. ஆனாலும் ஒன்றை உருவாக்கி அதனை ஆசிரியர் குழு ஏற்றுக் கொள்ளும் போது ஒரு நிறைவு இருக்கிறது. அதுவே அடுத்த படைப்புக்கு தானாக அழைத்துச் செல்லகிறது.

ஓவியங்கள் தவிர உங்களுக்கு நாடகத்தறையிலும் ஈடுபாடு இருக்கிறதே? இருந்தது என்பதே சரியாக இருக்கும்.
திருமதி சந்திரா இரவீந்திரன் ஐபிசி வானொலிக்கு தயாரித்து வழங்கிய 'சமுத்திரா' நிகழ்ச்சியை பாராட்டி ஒரு கேலிச் சித்திரம் அனுப்பியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு சித்திரம் நகைச்சுவையாக இருக்கிறது. 'சமுத்திரா'வுக்கு ஆக்கங்கள் தேவை. நகைச்சுவையாக ஒரு நாடகம் எழுதிப் பாருங்களேன் என்று அவர் கேட்டு வைக்க, எழுத ஆரம்பித்தேன். ஐம்பதுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் எழுதி இருப்பேன் என நினைக்கிறேன்.

உங்கள் இலட்சியம், கனவு குறித்துச் சொல்லுங்கள்?
எல்லோரைப் போலவும் ஒரே கனவு, ஒரே நினைவுதான். தமிழருக்கு ஒரு தீர்க்கமான தீர்வு வர வேண்டும் என்பதே அது. அன்று ஆறுதலாக இருந்து மகிழ்ச்சியாக ஒரு படம் கிறுக்க வேண்டும். நிம்மதியாக இருக்கும்.

நேர்கண்டவர் : இளந்திரையன்
நன்றி : பொங்குதமிழ்

Wednesday, September 05, 2012

சமயங்களில் கனவுகள் கூட இனிமையானவை!

சில சமயங்களில் கனவுகள் கூட இனிமையானவை. 
நியத்தில் சந்திக்க முடியாத பலரை கனவுகளில் சந்திக்க முடிகிறது. 
அவர்களோடு உறவாட முடிகிறது. 
ஒன்றாக அமர்ந்திருந்து பேச முடிகிறது. சிரிக்க முடிகிறது.

Thursday, August 16, 2012

அம்மாவுடன்...

with amma in Mannheim Germany - 11.8.2012
ஒவ்வொருவரும் அவரவர் பாதையில் பிரிந்து செல்ல வேண்டிய அவசியம். அவரவருக்கு என்று குடும்பங்கள், தேவைகள், வாழ்க்கையின் அவசரங்கள்.

"தனியேதான் இருப்பேன்" என்ற அம்மாவின் பிடிவாதத்தில் அமைந்த அம்மாவின் அந்த சிறிய கூட்டுக்குள் ஒரு சில நாட்கள் மட்டுமே கிடைத்த அந்த சந்தோசம், எந்த மாளிகையிலும் கிடைத்து விடாது.

மீண்டும் எமது இயல்பு வாழ்க்கையுடன் நாம் ஒவ்வொருவரும் சங்கமித்து விட்டாலும், நாம் நால்வர் அம்மாவுடன் சேர்ந்திருந்த அந்த ஒரு சில நாட்கள் மீண்டும் மீண்டுமாய் அசை போட்ட படி மனதின் ஒரு ஓரத்தில் இனித்திருக்கிறது.

தங்கை சந்திரா இரவீந்திரன் மீண்டும் லண்டன் திரும்பி விட்டதில், தவிர்க்க முடியாமல் மனசின் இன்னோர் ஓரம் கனத்திருக்கிறது. 16.8.2012

Wednesday, May 02, 2012

கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகள்!

- எம்.கே.முருகானந்தன்

என்னை இன்று எமது கதைகளின் கதையைத்தான் பேச அழைத்துள்ளார்கள். நான் கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகளின் கதைச் சொல்கிறேன். ஊர்கள் சிறியன. பெருநாடுகளின் தள வள ஆளனி வலுக்குகளுடன் ஒப்பிடுகiயில் சிற்றூரிலும் சிறியது எமது நாடு. அதில் இலங்கை பூராவும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தமிழ்பேசும் சமூகங்கள் ஏனைய உலக சமூகங்களுடன் ஒப்பிடுகையில் கணக்கில் கொள்ள முடியாதவை. நுணுக்குக் கண்ணாடிகளால் தேட வேண்டியவை.

இருந்தபோதும் நாற்திசைகளிலிருந்தும் உலகளாவ எமது குரல் ஓங்காரமாக ஒலிக்கிறது. அதுவும் இனிய தமிழில் ஒலிக்கிறது. கதைகளாக, கவிதைகளாக, ஒலிப்பேளைகளாக, ஒளிச்சித்திரங்களாக சிறகடித்து வலம் வருகின்றன. தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு நீண்டகால வாசகன் என்ற முறையில் இது எனக்கு மகிழ்வைத் தருகிறது. ஆனால் இதற்காக எமது எழுத்தாளர்கள் நெடும்பயணம் செய்ய வேண்டியிருந்தது. கிடுகு வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடந்த எமது சிறுகதைகள் பெருவீதி கடந்து வான்வெளி எட்ட பெரு முயற்சிகள் தேவைப்பட்டன.

கனடாவிலிருந்து முத்துலிங்கமும், மறுபுறம் ஆஸ்த்திரேலியாவிலிருந்து ஆசி.காந்தராசாவும், மத்திய கிழக்கிலிருந்து ரிஸான் ஷெரிபும், ஜேர்மனியிலிருந்து கருணாகரமூர்த்தி, சந்திரவதனாவும் இங்கிருந்து உமா வரதராசன், ரஞச்குமார், ராகவன் போன்றோரும், இன்னும் ஏராளமான பலரும் எமது வாழ்வின் ஒளிந்து கிடந்த பக்கங்களை உலகிற்கு அலங்காரமாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்கள். 

இணையத்திலும், தமிழகம் உட்பட உலகளாவ அவர்களது படைப்புகளைச் சஞ்சிகைகள் வேண்டி வெளியிடுகின்றன. ஆனால் எமது மூத்த எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட களம் தேடியலைய வேண்டியிருந்தது.

இலங்கையில் சிறுகதை இலக்கியத்தின் ஆரம்பம்
ஈழத்தின் முதற் சிறுகதையை எழுதியவர் யார் என்ற சர்ச்சை ரப்பர் நாடாபோல இழுபட்டுக்கொண்டே போகிறது. இருந்தபோதும் மூலவர்கள் மூவர் என்பதைப் பலரும் ஏற்றுக் கொள்ளவே செய்கிறார்கள். இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியவர்களே அவர்கள். இவர்கள் ஆளுமைமிக்க சிறந்த சிறுகதையாசிரியர்களாக இருந்தார்கள். சிறுகதை என்ற புதிய இலக்கிய வடிவத்தை எமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். புராண இதிகாசக் கதைகளை பெரும்பாலும் கருவாகக் கொண்டு கற்பனை ரதத்தில் பயணித்து சுவையான வாசிப்பு அனுபவத்தைத் தந்தார்கள். அவற்றைச் செப்பமாகவும் செய்தார்கள். இருந்தபோதும் போதும், எமது மண்ணின் பிரச்சனைகளை பெரிதாக தமது படைப்புகளை வெளிப்படுத்தவில்லை. சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணி அவர்களுக்கானதாக இருந்ததால் அதன் வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டதில் வியப்பில்லை. கரு, களம் ஆகியவற்றைப்பொறுத்த வரையில் தாம் சார்ந்த சமூகத்தை முன்னிலைப்படுத்தவில்லை எனலாம்.

"இம்மூவரதும் கதைகள் பெரும்பாலும்(1) வரலாற்று இதிகாச சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. (11) தனிமனித அவலங்களையும் உணர்வுகளையும் (சமூக, யதார்த்த சூழலின்றி) வெளிப்படுத்தின. (111) மனோரதியப் பாங்கில் அமைந்திருந்தன." எனப் பேராசிரியர் செ.யோகராசா ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இருந்தபோதும் மண்வாசனையுள்ள, சமூக விழிப்புணர்வை நோக்கிய படைப்புகள் அக்காலத்தில் எழதப்படவில்லை எனக் கூறமுடியாது.

ஆனந்தன் என்ற புனைபெயரில் எழுதிய சச்சிதானந்தன் சாதிப்பிரச்சனையை மிகச் சிறப்பாக அக்காலத்திற்கு ஏற்றவாறு தண்ணீர்த் தாகம் என்ற சிறுகதையில் சொல்லியிருந்தார். நமது பாராம்பரியக் கிராமங்கள், அங்கு பிற்புறத்தில் இருக்கும் கிணறு, சாதித் திமிருள்ள வெள்ளாள சமூக பெரியார், தண்ணீர்த் தாகத்தில் அதில் நீர் அள்ளிக் குடிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் என அக் கதையை யதார்த்தமாக நகர்த்தியுள்ளார்.

மூலவர்களினதும் அதைத் தொடர்ந்த மறுமலரச்சி சஞ்சிகை காலகட்டத்துப் படைப்புகளான இலங்கையர்கோனின் 'வெள்ளிப் பாதரசம்', சம்பந்தனின் துறவி, சி.வைத்தியலிங்கத்தின் 'பாற்கஞ்சி' கனகசெந்திநாதனின் 'ஒரு பிடி சோறு', அ.செ.முருகானந்தனின் 'வண்டிச் சவாரி' போன்றவை இன்றும் பேசப்படுமளவிற்கு மிகச் சிறந்த படைப்புகளாக இருக்கின்றன.

குடாநாட்டுக்கு அப்பாலான முயற்சிகள்

மேற் கூறிய முயற்சிகள் யாழ்ப்பாணத்தில் கருக்கட்டிய வேளையில் மலையகத்திலும் சிறுகதை படைப்பாக்க முயற்சிகள் தோன்ற ஆரம்பித்தது. மலைநாட்டுத் தோட்டத் தெழிலாளர்கள் பற்றி திரு.கோ.நடேசஐயர் சில சிறுகதைகளை எழுதியாக அறிய முடிகிறது. திரு.கணேஷ் அவர்களும் இவ்வாறன முயற்சிகளில் எழுதியுள்ளார். 'சத்திய போதி மரம்' என்ற அவரது சிறுகதை அறம் வெல்லும் என்பதை உணர்த்தும் ஒரு நல்ல படைப்பாகும்.

மற்றொரு புறத்தில் கிழக்கு மாகாணத்தில் அதிலும் முக்கியமாக மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்தும் சிறுகதை எழுத்து விதைவிட ஆரம்பித்தது. வித்துவான் கமலநாதன், சிவா, மற்றும் புரட்சிக் கமால் ஆகியோரை முன்னோடிகளாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பித்தன் மற்றொரு சிறந்த சிறுகதையாசிரியர் ஆவார்.
மூதூர் பிரதேசத்திலிருந்து எழுதியவரான வ.அ.இராரத்தினத்தின் 'தோணி' இன்றளவும் போற்றப்படும் படைப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

1950 முற்பட்ட காலகட்டத்தில் அவ்வாறான சிறந்த சிறுகதைகள் ஈழத்துச் சுழலில் எழுந்தபோதும், அதற்குப் பிற்பட்ட காலத்தில்தான் எமது சிறுகதைத் துறையில் பாரிய துரித வளர்ச்சியைக் கண்டது எனலாம். இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். 

புதிய வீச்சுகள் 50களின் பின்
உலகளாவிய ரீதியில் தொழிலாளர் நலம் சார்ந்த உணர்வுகளும், உள்நாட்டில் தேசிய உணர்வு வலுப்பட்டதையும் காரணங்களாகச் சொல்லலாம். உலகளாவிய ரீதியில் ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரியா, போன்ற தேசங்களில் தோன்றிய விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள் அடக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்தன. பாஸிசத்திற்கு எதிரான உணர்வு வலுப்பெற்றமையும்,
பொதுமக்களிடையேயான அரசியல் விழிப்புணர்ச்சியும் காரணமாக இருந்தன.

இலங்கையிலும் பொதுவுடமை சார்ந்த கருத்துக்கள் 40, 50களில் மக்களிடையே செல்வாக்குச் செலுத்தின. தொழிலாளர் எழுச்சிகள் தோன்றின. இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு இளம் சமுதாயத்தினரிடையே பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. இவை படைப்புலகிலும் பிரதிபலித்தது.

உதிரி எதிரியாக எழுதிக் கொண்டிருந்து முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர்களை இணைக்க முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாகியது. வெறுமனே பொழுது போக்கிற்காக எழுதுவதை விடுத்து மக்கள் உள்ளங்களில் முற்போக்கு எண்ணங்களை விதைக்கும் எழுத்துக்களை எழுத வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.

இதனால் இன்றுவரை ஈழத்தில் படைக்கபடும் சிறுகதைகள் சமூக உணர்வோடும் அதன் மேம்பாடு நோக்கியுமே படைக்கப்படுகின்றன. வெறுமனே புகழுக்காவும், பொழுதுபோக்கிறாகவும், பாலியல் கவரச்சிக்குமாக எழுதப்படுவதைக் காண்பது அரிது.

மற்றொரு புறத்தில், இலங்கை அரசியலிலும் தேசிய உணர்வு ஏற்பட்டமையும் எமது சிறுகதை வளர்ச்சிக்கு அளப்பரிய வாய்ப்பாக அமைந்தது. எமது மண்ணின் பிரச்சனைகளை மண்வாசனையுடன் எழுதவேண்டும் என்பதை எமது எழுத்தளர்கள் முற்று முழுதாக ஏற்றுக் கொண்டனர்.

இதற்கு மறுபக்கம் ஒன்று உண்டு. இலங்கைத் தேசியம் என எமது முற்போக்கு எழுத்தாளர்கள் எண்ணியும் எழுதியும் வந்த அதே நேரத்தில் சிங்கள தேசியம் எழுச்சி பெற்றது. அதன் பூதாகரத்தன்மை தமிழர் வாழ்வில் அச்சத்தை ஏற்படுத்தின. தமிழ், தமிழர் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மையும் புறக்கணிப்பும் தமிழ்தேசிய உணர்வை ஏற்றம் பெறச் செய்தன. இவை எமது இலக்கியத்தில் பிரதிபலிக்க ஆரம்பித்தது. எனவே முற்போக்குக் கருத்துள்ளவர்கள் ஒரு புறமாகவும், முற்போக்கு அணியினருக்கு எதிரானவர்கள் மற்றொரு அணியினராகவும் செயற்பட ஆரம்பித்தனர். இவ்வாறு எதிரணியில் நின்றவர்கள் முற்று முழுதாக முற்போக்கு கருத்தியலை எதிர்த்தவர்கள் எனப் பொருள்படாது. அவர்களது செயற்பாடுகளை எதிர்த்தவர்கள் எனச் சொல்லாம்.

ஈழத்து இலக்கியப் பரப்பில் முக்கிய விமர்சகர்களாக வெளிப்பட்ட பேராசிரியர்கள் சிவத்தம்பி, கைலாசபதி போன்றவர்கள் முற்போக்காளர்களாக இருந்த காரணத்தால் தம் அணிசார்ந்த எழுத்தாளர்களையும்; முற்போக்கு அம்சங்கள் கொண்ட படைப்புகளை பாராட்டிச் சிலாகித்ததை மறுக்க முடியாது. இதனால்; புறக்கணிக்கபட்ட பலரும் இதில் அடங்குவர்.

இவ்வாறு எதிராக நின்றவர்களில் பலர் எந்தக் கருத்தியல் கோட்பாடுகளுக்குள்ளும் தம்மைப் பிணைத்துக் கொள்ளவில்லை என்ற போதும், இவர்களில் பலர் தமிழ் தேசியம் என்ற கருத்தியலோடு எழுதியமை குறிப்பிடத்தக்கது.

நந்தி, சாந்தன் போன்றவர்கள் ஆரம்பத்தில் முற்போக்கு அணியுடன் இருந்தபோதும், தமிழ் தேசிய உணர்வுடன் படைப்புகளைத தருவதில் பின்நிற்கவில்லை என்பதையும் சுட்ட வேண்டும்.

அணிகளாகப்  பிரிந்து நின்று ஒருவர் மீது மற்றொருவர் எனக் கண்டனக் கணைகளைத் தொடுத்தபோதும் இரு பக்கங்களிலிருந்தும் நல்ல படைப்புகள் வெளிவரவே செய்தன.

மேற் கூறிய இரண்டிற்கும் மாற்றாக மு.தளையசிங்கத்தின் மெய்யுள் அல்லது ஆத்மார்த்தம் சார்ந்த அணியும் எண்ணிக்கை அளவில் குறைந்திருந்தாலும் தனது பலமான பங்களிப்பை ஈழத்துச் சிறுகதை வளர்;சிக்கு அளிக்கவே செய்தது.

இவ்வாறு பல்வேறு பிரிவுகளாக நின்று தங்களுக்குள் மோதியபோதும் எமது மண்ணின், தேசத்தின் இலக்கியம் வளர்ந்து சென்றது.

முற்போக்கு இலக்கியம்
கணேஸ், அ.ந.கந்தசாமி, டொமினிக் ஜீவா, டானியல், என்.கே.ரகுநாதன், நீர்வை பொன்னையன், ஈழத்துச் சோமு, தெணியான், செ.யோகநாதன் போன்ற பலரையும் முற்போக்கு அணி சார்ந்த முக்கிய படைப்பாளிகளாக குறிப்பிடலாம்.

மண்ணின் மணத்தை தமது படைப்புகளில் முற்போக்கு அணிசார்ந்தவர்கள் எவ்வாறு கொண்டு வந்தார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு படைப்பை நோக்கலாம். இன்று நாம் நினைவு கூரும் ஈழத்துச் சோமு எழுதிய நிலவோ நெருப்போ என்ற சிறுகதை அது. சுமார் 60-70 வருடங்களுக்கு முன்னான ஒரு தோட்டத் தொழில் சார்ந்த ஒரு கிராமத்தை அப்படியே கண்முன் கொண்டு வருகிறது. தோட்ட நிலங்கள், அங்கு மண்ணின் வளத்தைப் பெருக்குதற்காகப் போடப்படும் உரமாக இலை குழைகள், அதை வெட்டி கட்டிக்கொண்டு வரும் பெண்கள், அதை விற்பதற்கு உதவும் தரகர்கள், தரகர்களது தில்லுமுல்லுத்தனங்கள், பாலியல் மனவக்கிரங்கள் என மிகவும் யாதார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ளது.

தரகனது இச்சைக்கு இணங்காத பெண்ணை உதாசீனம் செய்து அவளது குழைக்கட்டை விற்காது தடுப்பவனுக்கு எதிராகப் ஏனைய பெண்கள் எவ்வாறு எதிர்கொண்டு வெல்கிறார்கள் என்பது வெற்றுக் கோசங்கள் இன்றி இயல்பாக மண்வாசனையோடு சித்தரிக்கப்பட்டுள்ளது. சோமகாந்தனின் ஆகுதி மற்றுமொரு நல்ல படைப்பாகும்.

ஆனால் இதற்கு மாறாக மார்க்சிய கருதியலுக்கு அழுத்தம் கொடுத்து, கலை நயத்தைத் தொலைத்த எழுத்தாளர்களும் உண்டு. இரு வருடங்களுக்கு முன்னர் 'ஈழத்து இலக்கிய செல்நெறியில் முற்போக்குச் சிறுகதைகளின் சுவடுகள்' என்ற தொகுப்பு நூல் வந்தது. அது பற்றி விமரசித்த லெனின் மதிவாணம் இவ்வாறு கூறுகிறார். 'இத்தொகுப்பில், முற்போக்கு நோக்கிலான சிறுகதைகளாக இரத்த உறவு (அ. ந. கந்தசாமி), ஒரு புதிய ஆயுதம் (சி. வி. வேலுப்பிள்ளை), தண்ணீர் (மொஹிதீன்), வாய்க்கரிசி (டொமினிக் ஜீவா), பிரசாதம் (எஸ். அகஸ்தியர்), மண்பூனைகளும் எலி பிடிக்கும் (மருதூர்க்கனி), 47 வருடங்கள் (கே. விஜயன்), தேவ கிருபையை முன்னிட்டு வாழும்.... (காவலூர் ராசதுரை), ஊர் நம்புமா? (நந்தி), ஒரு கிராமத்து பையன் கல்லூரிக்கு செல்கின்றான் (செ. கதிர்காமநாதன்), பெருமூச்சு (ஏ. இக்பால்), எப்படியம் பெரியவன் தான் (தெணியான்), மாறுசாதி (திக்குவல்லை கமால்), நிலவோநெருப்போ?(என்.சோமகாந்தன்), என் நண்பன் பெயர் நாணயக்கார (சாந்தன்), அந்தக் கிழவன் (அ.ஸ. அப்துஸ் ஸமது), பகவானின் பாதங்களில் (மு. கனகராசன்) ஆகியன காணப்படுகின்றன.

மார்க்ஸிய நோக்கிலான சிறுகதைகளாக தண்ணீர்,(கே டானியல்), போர்வை(என். கே ரகுநாதன), சங்கமம்(நீர்வை பொன்னையன்), நேற்றைய அடிமைகள்(செ.யோகநாதன்)ஆகியன காணப்படுகின்றன. இதற்கு மாறாக சாயம் (செ. கணேசலிங்கம்), இங்கெவர் வாழவோ (யோ. பெனடிக் பாலன்) முதலானோரின் கதைகளில் கோட்பாட்டு தளம் வலிந்து புகுத்தப்பட்ட அளவிற்கு அழகியல் அம்சம் பேணப்படவில்லை.'

முற்போக்கு கருத்தியல் கொண்டபோதும் நந்தினி சேவியர் விமர்சகர்களால் பெரும்பாலும் கண்டு கொள்ளப்படுவதில்லை. மிகச் சிறந்த ஒரு முற்போக்குப் படைப்பாளியாக அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த மார்க்ஸிய கொள்கைப் பிடிப்புக் கொண்டவர். ஆயினும் அவரது படைப்புகளில் எந்தக் கோசமும் முனைப்படுவதில்லை. மிகுந்த கலைநயம் வாய்ந்த படைப்புகளை அவர் தந்திருக்கிறார்.

அண்மையில் அவரது 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்' என்ற தொகுப்பு வெளி வந்தது. அதற்கு முன்னுரை எழுதிய ரவிக்குமார் அவர்கள் 'குரலை உயர்த்தாமலே கொதிப்பை வாசகனுக்குக் கடத்த முடியும் என நிருபிப்பவை இவரது கதைகள்' என்கிறார்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் எழுத்தாளர்களை முற்போக்கான கருத்துக்களை தமது படைப்புகள ஊடாக பரப்புவதை ஊக்குவிப்பதிலும் அவர்களை ஒன்றிணைப்பதிலும் மட்டும் ஈடுபடவில்லை. தமிழ் மரபுகளையும் அறிஞர்களையும் பாராட்டிக் கௌரவிப்பது போன்ற செய்றபாடுகளிலும் ஈடுபட்டது.

இவற்றில் சோமு ஆற்றிய பங்கiளிப்புகளை குறிப்பிடாமல் விட முடியாது. பாரதியாரின் ஞானகுருவென யாழ்பாணத்துச் சுவாமி என்று அழைக்கப்பட்ட அருளம்பல சுவாமிதான் என அ.ந.கந்தசாமி நிறுவியபோது அதனை பெருவிழாவாக அவர் பிறந்த வியாபாரிமூலையில் கொண்டாடியதில் சோமுவின் பங்களிப்பு பலமானதாகும். அதே வியாரிமுலைச் சார்ந்த நான் ஒரு பாடசாலை மாணவனாக அக் கூட்டத்தில் பார்வையாளனாகப் பங்கு பற்றியது எனக்கு நேற்று நடந்தது போல ஞாபகம் இருக்கிறது.

அதேபோல பாரதி நூற்றாண்டு மலர், ஆறுமுகநாவலர் நூற்றாண்டு மலர் ஆகியன வெளியிடுவதற்கான குழக்களில் செயலாளராக பங்காற்றி அளப்பரிய பணியாற்றியதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

முற்போக்கு எழுத்தாளர் பலரது படைப்புகள் கருத்திற்கு அழுத்தம் கொடுப்பது என்பது வெறும் கருத்தாக மட்டுமின்றி கோசமாகவும் எழுந்தனால், படைப்புகளை செழுமைப்படுத்துவதில் அவர்களில் பலரும் அக்கறை காட்டாமல் காலத்திற்கு ஏற்ப கதை கட்டிக்கொண்டிருந்தனர்.

தமிழ் தேசியம்
இவற்றால் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்தவர்கள் மாற்றுக் குழுவினராக படைப்பின் செழுமையில் தங்களை ஈடுபடுத்த முயன்றனர். செம்பியன் செல்வன், செங்கைஆழியான், சொக்கன், தெளிவத்தை ஜோசப், சுதாராஜ், குந்தவை, கோகிலாமகேந்திரன், தாமரைச்செல்வி, போன்ற ஏரளமானோரை உதாரணம் காட்டலாம்.

குப்பிளான்.சண்முகம், சட்டநாதன், உமா வரதராஜன் (அரசனின் வருகை), ரஞ்சகுமார் (கோசலை), எஸ்.எல்.எம்.ஹனிபா (மக்கத்துச் சால்வை), ஓட்டாவடி அரபாத், திசேரா, திருகோவிலூர் கவியுகன். ராகவன், போன்றவர்களின் படைப்புகள் இவற்றுள் தனித்துவமான வாசிப்பு அனுபவங்களைத் தந்தவை.

எஸ்.பொ எப்பொழுதும் தனித்துவமான படைப்பாளியாக இருந்த அதே நேரம் இலக்கியத்தில் தூய்மை பேணுபவர்களின் கடும் விமர்சனங்களும் ஆளாக நேர்ந்திருக்கிறது.

படைப்புகள் செழுமையாக வரவேண்டும் என்பதில் அக்கறையோடு செயற்பட்டவர் அ. யேசுராசா. தனது படைப்புகள் ஊடாகவும், அலை சஞ்சிகை ஊடாகவும் ஈழத்து படைப்பிலக்கியத்திற்கு ஆற்றிய பணி அளப்பரியது.

முனியப்பதாசன் மற்றொரு தனித்துவமான படைப்பாளி. ஆன்மீகத் தேடல், அழிவும் தேய்வும், ஆணிவேர், துறவி போன்ற பல படைப்புகளை எடுத்துக் காட்ட முடியும். 'முனியப்பதாசனின் எழுத்துக்கு நிகரில்லை. நிகரெனக் குறிப்படுவதாயின் மௌனி, லா.சா.ராமாமிர்தம், பிச்சமூர்த்தி ஆகியோரையே குறிப்பட முடியும். ஆத்மிகத் துறவியாக வாழ்ந்து மறைந்த அறிஞன்' எனச் செங்கையாழியான் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

ஆனந்தமயில் மற்றொரு சிறந்த படைப்பாளி. இவரது "படைப்புகள் அனைத்துமே சுய அனுபவத்தின் வெளிப்பாடுகள். நாளாந்தம் காணும் நிகழ்வுகள். அத்தோடு முகம் காட்டும் கண்ணாடிபோல எமது வாழ்வின் தெளிவான பிரதிபலிப்பாகவும் இருக்கின்றன. இவற்றால் மிகுந்த நம்பகத்தன்மை கொண்டவையும் கூட. இருந்தபோதும் தகவல் களஞ்சியம் போன்ற அனுபவக் குறிப்புகளாகக் கணிக்கக் கூடிய கதைகளும் அல்ல. ஆழ்ந்த ரசனையும், கூர்ந்த அவதானிப்பும், மானிட நேயமும் கொண்ட ஒரு சாதாரண குடிமகனது உணர்வுகளின் கலாபூர்வமான சித்தரிப்பு என்றே சொல்ல வேண்டும்." என நான் இவரது 'ஒரு எழுதுவினைஞரின் டயறி" என்ற நூலுக்கு எழுதிய விமர்சனத்தில் எழுதியதை இங்கு பகிர்வது பொருத்தமாக இருக்கும்.

மு.தளையசிங்கம், மு.பொ, ஆகியோரின் ஆத்மார்த்தம் சார்ந்த தனித்துவமான பாதையில் பயணித்தனர். தளையசிங்கத்தின் கோவில்கள், அகல்யை, மு.பொ வீடும் பல்லக்கும், சீதை யுகங்களை விழுங்கிய கணங்கள், போன்ற பல சிறுகதைகளை உதாரணம் காட்ட முடியும். ஆத்மார்த்தத்தோடு தமிழ் தேசிய கருத்தியலோடு இணைந்தவை இவர்களது படைப்புகள்.

மு.த வின் பாதை நம்பிக்கைக்கு உரியதாகவும், தமிழக எழுத்தார்களின் கணிப்பைப் பெற்றிருந்தபோதும், இவ்வழியில் பின்தொடர்ந்து படைப்பாக்க முயற்சிகளில் இறங்குபவர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். கருத்தியல் ரீதியாக இவர்களது ஆத்மார்த்த வீச்சு கவிதைகளில் வெளிப்பட்ட அளவிற்கு சிறுகதைகளில் இல்லை என்றே தோன்றுகிறது.

ஆயுதப் போராட்ட காலம்

தமிழர்களின் அரசியல் போராட்டம் பின்தங்கி, ஆயுதப் போராட்டம் முனைப்புற்றபோது படைப்பாளிகள் ஒட்டுமொத்தமாக தமிழ்தேசிய உணர்வில் தெக்கிநின்றனர். போரும், அதனால் சாதாரண மனிதர்களின் பாடுகளும் பேசுகதைகளாயின. போராளிகளின் வீரமும், இனப் பற்றும் படைப்பாக்கம் பெற்றன. சங்ககாலத்திற்குப் பின்னர் தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த மிக வித்தியாசமான அனுபவங்கள் சிறுகதை, நாவல், கவிதை என யாவற்றிலும் பதிவாகின.

பார்வையாளர்களாகவும், பாதிப்புக்கு உள்ளாவர்களாகவும் இருந்தவர்கள் மட்டுமின்றி களத்தில் நின்று போராடியவர்களும் தம் அனுபவங்களை படைப்புலகில் விதைத்தனர். மாலதி மலரவன் போன்ற படைப்பாளிகள் கவனத்திற்குரியவர்கள்.

ஆனால் முற்போக்கு இலக்கியத்திற்கு நேர்ந்த அவலம் இங்கும் தன்கைவரிசையைக் காட்டியது. இது பற்றி திருக்கோயில் கவியுகன் '..ஆயுதப் போராட்டத்தின் பின் வந்த அவல வாழ்வை, அதாவது மரணம், கைது, ஊனம், காயம் இப்படியான அவல வாழ்வை தங்கள் படைப்புகளில் கருப்பொருளாய்க் கொண்டு, கதையில் வரும் பாத்திரங்களுக்குள்ளேயோ, கதை நகரும் புலத்திற்குள் நுழையாமல் எட்ட நின்று வெளிப்பார்வையில் பின்னிய பல அபத்தமான போலியான படைப்புகளும் வெளிவந்திருக்கின்றன.'

இப்படைப்புகள் பக்கம் சார்ந்தவையாக, அரசியலை விமர்சிக்க முயலாதவையாக இருந்தன என்பதை 'இயக்கங்களை விமர்சிக்காத வரைக்கும் ஆயுதப் போராட்டம் வேறுபல வழிகளில் (இலக்கியத்தை வளர்ச்சியடையச் செய்துள்ளது' என்கிறார் மு.பொ. ஆம் எந்தப் படைப்பும் நடுநிலையாக இருக்க முடியாது என்பதை இது சுட்டுகிறது. எமது பக்கத்தில் இல்லாதவற்றை பக்கம் சார்ந்தவை என ஒதுக்கித் தள்ளிப் பழகிவிட்டோம் நாம்.

பெண்ணியம்
பெண்ணியக் கருத்தியல் கொண்ட படைப்புகளைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கோகிலா மகேந்திரன், பத்மா சோமகாந்தன், பாலேஸ்வரி, கவிதா, சந்திரா தியாகராஜா, அன்னலட்சுமி ராசதுரை, ரூபராணி ஜோசேப், ராணி சீதரன் எனப் பலரையும் கூறலாம்.

இருந்தபோதும் பெண்ணியம் கவிதையில் கண்ட எழுச்சியைச் சிறுகதைகளில் தரிசிக்க முடியவில்லை.

புலம் பெயர் படைப்புகள்
 

புலம் பெயர் படைப்புகள் பெரும்பாலும் தாம் இழந்த வாழ்வின் துயரங்களை இரை மீட்பனவாகவே இருந்தன.

ஆனால் அவர்களுள் அ.முத்துலிங்கம், ஆசி.காந்தராஜா, பொ.கருணாகரமூர்த்தி ஆகியோர் புதிய தரிசனங்களைத் தந்தார்கள். வித்தியாசமான படைப்புலகுடன் தொடர்ந்து பயணிக்கின்றனர். அவர்களது களங்கள் புதியன. அப் புதிய களங்குடன் எமது பாரம்பரியங்களை கலந்து படைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

விமல் குழந்தைவேல், ராஜேஸ்வரி.பாலசுப்பிரமணியம், ஷோபா சக்தி, சுமதிரூபன், இரவி.அருணாசலம், சிறிதரன், ரமணீதரன்(சித்தாந்த சேகுவரா), சார்ல்ஸ் போன்றவர்களின் சிறுகதைகளும் அதிகம் கவனத்திற்குள்ளாயின.

தமிழ்நதி என்ற புனைபெயரில் எழுதிவரும் .... கவனத்தில் எடுக்க வேண்டிய படைப்பாளி. சிறுகதை, கவிதை, நினைவுப் பதிவுகள், நூல் விமரிசனமென 'இளவேனி'ல்' என்னும் தன் வலைப்பதிவில் படைப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார். தமிழ்நதியின் 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது' சிறுகதை தொகுப்பு அண்மையில் வெளிவந்தது. 'கவித்துவ மொழிதலுக்கு' தமிழ்நதி என்றும், 'அழகுத்தமிழில்  ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் படைப்புகள் எனவும் பாராட்டுக்களைப் பெற்றது இவரது தொகுப்பு.

சுமதி ரூபன் மற்றுமொரு அருமையான படைப்பாளி. யாதுமாகி என்ற சிறுகதைத் தொகுதி வந்துள்ளது. குணேஸ்வரன் இவை பற்றிக் கூறுகையில் 'இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் பெண்களின் ஒவ்வொரு பிரச்சினையை முன்வைக்கின்றது. சிறுவயதில் இருந்து பெண் என்ற காரணத்தினால் ஆணாதிக்க சமூகத்தின் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பல பெண்களை கதைகளில் இனங்காண முடிகின்றது.'

நாடு விட்டு புதிய தேசம் நோக்கிய நம்மவர்களின் பயணங்கள் துயரம் தோய்ந்தவை, பனிவயல்களையும், ஆழ்கடல்களையும் தாண்டி, பொருள் காவிகளினுள் ஒளிந்து பயணித்தவற்றைக் கேள்விப்பட்டுள்ளோம். அதில் ஆவி பிரிந்து உடல் சிதைந்து எங்கென்று அறியப்படாதவர்கள் பலபேர். இவை பற்றி வாசித்திருக்கிறோம்.

அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட ஆனால் வெளிப்படையாகப் பேசப்படாத அவலத்தை ஆவணப்படுத்தியுள்ளார் சுமதி ரூபன். பயண இடைவெளியின்போது பெண் உடல் சிதைக்கப்படல் அதிர்ச்சியளிப்தாக உள்ளது. மிலேச்சத்தனமான இராணுவத்தினரிடமிருந்தும் ஆயுததாரிகளிடமிருந்தும் தன்னைக் காக்க புலம்பெயரப் புறப்பட்டவள், தன்னைப் பயண வழியில் இழக்கும் துயரம் இங்கு பேசப்பட்டுள்ளது.

போருக்குப் பின்னான புதிய பயணம்
 
பரந்த வானம் எம் முன் விரிந்து கிடக்கிறது. இதில் எமது படைப்பாளிகள் பயணிக்க வேண்டிய திசை எது?

பயணிக்க வேண்டிய திசை

இது போருக்குப் பின்னான காலம். மேனியெங்கும் வடுக்களைச் சுமந்த சமூகம் எம்மது.

நம்பிக்கையோடு புதுவாழ்வைத் தேடுபவர்கள் பலருள்ளனர். இவ்வாறிருக்க, ஆறின புண்ணை மீண்டும் நோண்டி வலியை தூண்டும் வண்ணமே இன்னமும் பலரும் எழுதுகிறார்கள். பலரது படைப்புகள் எங்கள் சமூகத்தை இன்னமும் இருண்ட வாழ்வை நோக்கித் திருப்புவனவாக உள்ளன.
எமது அனைத்துத் துன்பங்களுக்கும் மற்றவர்களையே குறை கூறி நிற்கிறோம். படைப்பாளிகள் மட்டுமின்றி பத்திரிகைகளும், இலத்திரனியல் ஊடகங்களும் அதையே செய்கின்றன.  இனிவரும் காலங்களில் எமது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் படைப்புகளைத் தாருங்கள்.

எமது இனத்திற்கு நீதி கேட்பதில் தவறில்லை. அது அவசியமானதும் கூட.
ஆனால் எம்மிடையே ஊறிப்போன சமூக ஏற்றத்தாழ்வுகளையும் பேச முன்வாருங்கள்.

இன்று ஏராளமான எழுத்தாளர்கள் தமது சிறுகதைகளைத் தருக்கிறனர். பலர் நம்பிக்கை உரியவர்களாக உள்ளனர். மூத்தவர்கள் மற்றும் புதியவர்களான அனைவரையும் இக் கட்டுரையில் குறிப்பிடுவது சாத்தியமல்ல. பதச்சோறு போல சில உதாரணங்களையே காட்ட முடிந்தது.

இறவாத புகழுடைய புது நூல்கள் 


மற்றொரு விடயம். எமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை. இறவாத புகழுடைய புது நூல்கள் நம் நாட்டில் இயற்ற வேண்டும். திறமான புலமையெனில் வெளிநாட்டோர் வணங்குதல் செய்வர்.

அவ்வாறு பார் புகழ வேண்டுமெனில் எம் படைப்புகள் செழுமையுற வேண்டும்.  கருத்தியலோடு அழகியலும் மேம்படவேண்டும். 
ஒரு சிலரின் படைப்புகளே நல்ல இலக்கியத்தரம் வாய்ந்தவையாக உள்ளன.
ஏனைய பலரும் பாட்டி கதை சொல்வது போலவும், பத்திரிகைக்குச் செய்திகள் போலவும் கதையாடல் பண்ணுகிறார்கள்.  மொழியை வசப்படுத்தி கருத்தை மறைபொருளாக்கி, படைப்பை செதுக்கித் தரும் ஆற்றலை எம் எழுத்தாளர்கள் வளர்க்க வேண்டும்.  அப்பொழுதுதான் எங்கள் கதைக் குருவிகளுக்கு வானமும் வையகமும் ஒன்றுசேர வசப்படும்.

நோக்கிய ஆக்கங்கள்

முகங்கள் சிறுகதைத்த தொகுப்பு- ஜீவகுமாரன்
சுதந்திரன் சிறுகதைகள்- செங்கை ஆழியான்
நெல்லிமரப் பள்ளிக்கூடம் நந்தினி சேவியர்
திறனாய்வின் புதிய திசைகள் மு.பொ
ஈழத்து முற்போக்குச் சிறுகதைகள்
கடலும் கரையும் மு.பொன்னம்பலம்
மல்லிகை இதழ்கள்
ஈழத்து இலக்கிய செல்நெறியில் முற்போக்குச் சிறுகதைகளின் சுவடுகள் லெனின் மதிவாணம்
ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி கலாநிதி செ.யோகராசா
ஈழத்துச் சிறுகதைகள் எனது பார்வை முல்லை அமுதன்
'யாதுமாகி' தொகுப்பிற்கான க.குணேஸ்வரனின் விமர்சனம் இணையத்தில்
நா.சோமகாந்தன் நினைவுப்பரவல் நிகழ்வில் நான் வாசித்த கட்டுரை.

எம்.கே.முருகானந்தன்
kathirmuruga@hotmail.com

Quelle - Pathivukal

Saturday, March 24, 2012

"நிலவுக்குத் தெரியும்" நூல் அறிமுகவிழா/ஆய்வுரை/பதிலுரை

லண்டனில் சந்திரா இரவீந்திரனின்
'நிலவுக்குத்தெரியும்' நூல் வெளியீட்டு நிகழ்வும்,
ஆய்வுரை/பதிலுரையும்
ஆய்வுரை: தொகுப்பு: என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, 18.3.2011 அன்று லண்டன் என்பீல்ட் நகரில் Dugdale Centre மண்டபத்தில் அவை நிறைந்த நிகழ்வாகவும் நல்லதொரு குடும்ப நிகழ்வாகவும் சந்திரா இரவீந்திரனின் நிலவுக்குத் தெரியும் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு நிகழ்ந்தேறியது
  
வடமராட்சி-பருத்தித்துறையில் மேலைப் புலோலியூர், ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சந்திரா. 1991இல் பிரித்தானியாவுக்கு இடம்பெயரும்வரை யாழ்ப்பாண அரச செயலகத்தில் பணியாற்றியவர். இவர் 1981இல் (செல்வி) சந்திரா தியாகராஜா என்ற பெயரில் தனது கன்னிப்படைப்பான `ஒரு கல் விக்கிரகமாகிறது´ என்ற சிறுகதையை எழுதி எழுத்துலகில் நுழைந்தவர். வடமராட்சியில், பருத்தித்துறை யதார்த்தா இலக்கிய வட்டத்தினால் இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான நிழல்கள் 1988இல் வெளியிடப்பட்டது. ஈழமுரசு, ஈழநாடு ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்த 5 சிறுகதைகளினதும் 1984-85 இரசிகமணி கனக. செந்திநாதன் நினைவுக்குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள் என்ற குறுநாவலினதும் தொகுப்பாக நிழல்கள் முன்னர் வெளிவந்திருந்தது. லண்டன், .பீ.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 2009வரை, ஏழாண்டு காலமாக  இலக்கிய நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தார்.

நிலவுக்குத் தெரியும் என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாடு, காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக நவம்பர் 2011இல் வெளிவந்துள்ளது. இதில் பால்யம், தரிசு நிலத்து அரும்பு, அவர்கள் இல்லாத தேசம், என் மண்ணும் என் வீடும் என் உறவும், முறியாத பனை, நெய்தல் நினைவுகள், வல்லை வெளி தாண்டி, யாசகம், காற்று, கண்ணில் தெரியும் ஓவியங்கள் ஆகிய பத்துக் கதைகள், உமா வரதராஜனின் துயரத்தின் நெடும்பயணம் என்ற விரிவான முன்னுரையுடன் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.

லண்டனில் நிலவுக்குத் தெரியும் நூல்வெளியீடு லண்டன் நூல்வெளியீட்டு நிகழ்வுகளின் தாமதப் பாரம்பரியத்தை மீறி-குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மங்கள விளக்கேற்றலை அடுத்து, செல்வி தர்ஷியா இரவீந்திரகுமாரன் அவர்களின் வீணை இசை நிகழ்வுடன் நிகழ்ச்சி களைகட்டத் தொடங்கியது. அவருடன் இணைந்து குமரன் இரவீந்திரதாஸ் மிருதங்கம் வாசித்தார். இனிய இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஆசியுரையை என்பீல்ட் நாகபூஷணி அம்மன் ஆலய பிரதம குருவான சிவஸ்ரீ கமலநாதக் குருக்கள் வழங்கினார். ஆசியுரையைத் தொடர்ந்து வரவேற்புரையை செல்வி தர்ஷியா இரவீந்திரகுமாரன் நிகழ்த்தினார். 

நிகழ்வின் தலைமையை மாதவி சிவலீலன் ஏற்று மிக நேர்த்தியாகவும் கட்டுக்கோப்பாகவும் அதனைக் கொண்டுநடத்தினார். வரவேற்புரையையடுத்து, மாதவியின் தலைமையுரை இடம்பெற்றது. தனது உரையில் நிலவுக்குத் தெரியும் கதைத் தொகுதியில் சில கதைகளை மேலோட்டமாக அறிமுகம் செய்ததுடன் தனது மனதுக்குப் பிடித்த கதைகளாக முறியாத பனை, பால்யம் ஆகிய கதைகள் பற்றிய தன் இலக்கியப் பார்வையை தெளிவுபடுத்தினார். தொகுதியில் இடம்பெற்ற ஏழு கதைகள் போராட்டகால ஈழத்துத் தமிழரின் வாழ்நிலையைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சந்திராவின் மிக நுணுக்கமானதும் கவித்துவமானதுமான வர்ணனைகளை விதந்து பாராட்டினார். போராட்ட காலத்தில் பெண்களினால் வெளிப்படுத்த முடியாத பல மெல்லுணர்வுகளையும், சமூகத்தில் அவர்கள் எதிர்நோக்கியிருந்த சவால்களையும் துல்லியமாக ஒரு உள்வீட்டுப் பார்வையுடன் தனது கதைகளில் வெளிக்காட்டியிருப்பதை அவர் குறிப்பிட்டார். மேலும் கண்ணில் தெரியும் ஓவியங்கள் என்ற கதையில் மற்றவர்கள் பெரிதும் தொடாத ஒரு கோணத்தில் சந்திரா தன் பார்வையை பதித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

அறிமுக உரையை இலக்கிய ஆர்வலர்...முத்து அவர்கள் வழங்கினார். ..முத்து ஈழமுரசு பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளை எழுதுபவர். குறிப்பாக ஈழவிடுதலைப் போராளிகளின் வாழ்க்கை வரலாறுகளை தொடர்ச்சியாக ஒரு வரலாற்றுப் பதிவாக பத்திரிகையில் எழுதி வருபவர். ..முத்து, விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் வடபுலத்துக் களத்தில் இயங்கியவர் என்ற வகையில், அவரது பார்வையில் சந்திராவின் சிறுகதைகளின் களப்பின்னணி பற்றியும், பாத்திரங்களின் பின்புலம் பற்றியும் சுவையானதொரு அறிமுகத்தை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன. முதலாவது ஆய்வுரையை நளாயினி இந்திரன் வழங்கியிருந்தார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் செல்வி நளாயினி கணபதிப்பிள்ளையாக தமிழ்த்துறையில் பயின்றவர். கொழும்பு சுவடிகள் காப்பகத்தில் சிலகாலம் பணியாற்றித் தற்போது லண்டனில் பார்னட் பிரதேச நூலகமொன்றில் நூலகராகப் பணியாற்றுகின்றார். நளாயினி இந்திரன் தனது உரையில் சந்திராவின் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு, அதனதன் இயல்புகள் பற்றிய தனது கருத்தை அழகான விமர்சனமாக முன்வைத்தார். சந்திரா தன் கதாபாத்திரங்களினூடாக மானசீகமாக வாழ முற்பட்டிருப்பதாகத் தெரிவதை நளாயினி சுட்டிக்காட்டத் தவறவில்லை.

நளாயினியைத் தொடர்ந்து செல்வி துரைச்செல்வி பொன்னுத்துரை ஆய்வுரையை நிகழ்த்தினார். தமிழகத்தில் பட்டப்பின்கல்வியைப் பெற்ற துரைச்செல்வி, வேர்முகங்கள், ஏழாவது ஊழி ஆகிய நூல்களின் ஆசிரியரான பொ.ஐங்கரநேசனின் சகோதரியாவார். அவரது உரை பெரும்பாலும் சாதியக் கண்ணோட்டத்தில் நிலவுக்குத் தெரியும்  கதைகளைப் பார்ப்பதாகவே அமைந்திருந்தது. அக்கதைகளின் அடிநாதமாக அமைந்திருந்த போர்க்கால வாழ்வியல்பற்றி அவர் குறிப்பிடுவதைத் தவிர்த்துக் கொண்டதாக உணர முடிந்தது. அவரது பார்வைக்கோணம் வறுமையே பெண்களின் பாலியல் துன்புறுத்தலுக்குக் காரணியாகின்றது என்ற போக்கில் அமைந்திருந்தது.

அவரைத் தொடர்ந்து ஒருபேப்பர் பத்திரிகையின் ஊடகவியலாளரும், இலக்கியப் படைப்பாளியுமான அருணாசலம் இரவி தனது கருத்துரையைவழங்கினார். ஈழத்தின் குறிப்பிடத்தக்கதொரு தரமான பெண் எழுத்தாளராக சந்திராவை இனம்கண்ட அவர், சக படைப்பாளியாக நின்று நூலிலுள்ள கதைகளுள் தனது மனதுக்கு நெருக்கமான சிலவற்றைப் பற்றிய சில கருத்துக்களைத் தெரிவித்தார். .இரவி, தமிழகப் படைப்பாளிகளின் கதைகளுடன் இவரது கதைகளை ஒப்பிட்டு, சிறுகதை இலக்கண வரம்பிற்குள் அமையாது சில கதைகள் வெறும் விவரணங்களாகச் செல்வதாகக் குறிப்பிட்டார். கதைகளின் தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்ற அவர் சந்திராவின் முறியாத பனை என்ற கதையின் தலைப்பினை சிலாகித்துப் பேசியது முன்னுக்குப் பின் முரணாக அமைந்திருந்தது.

.இரவியின் உரையைத் தொடர்ந்து சம்பிரதாயமான நூல் வெளியீடு இடம்பெற்றது. திரு பத்மநாப ஐயர் வெளியீட்டுரை நிகழ்த்தினார். அவர் தனதுரையில் இந்நூலில் இடம்பெற்ற சில கதைகள் தனது யுகம்மாறும் தொகுப்பிலும் பிற TWAN வெளியீடுகளிலும் இடம்பெற்றதாகத் தெரிவித்தார். முதற்பிரதியை அவர் வோல்த்தம்ஸ்ரோ தமிழ்ப்பள்ளி அதிபர் குகச்சந்திரனுக்கு வழங்கியபின், சிறப்புப் பிரதிகளை வழங்கும் பணியை சந்திராவின் தாயார் சிவகாமசுந்தரி தியாகராஜா ஏற்றுக் கொண்டார். முக்கிய வர்த்தக, சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு சிறப்புப் பிரதிகள் திருமதி சிவா தியாகராஜாவால் வழங்கப்பட்டன.

நூல்வெளியீட்டைத் தொடர்ந்து திரைப்பட, கலைஇலக்கிய விமர்சகரும், Global Tamil News இணைய வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுள் ஒருவருமான ஊடகவியலாளர்  ஜமுனா இராஜேந்திரன் விமர்சன உரை நிகழ்த்தினார். சந்திராவின் கதைகளில்- பால்யம் என்ற கதையைத் தேர்ந்து அதனை மிக அழகாக விமர்சனம் செய்தார். பால்யப் பருவத்தை எட்டும் இரு சிறுமிகளின் பேசா மொழியாக அமைந்த மன உணர்வுகளை மிக அழகாகக் கதையில் பெண்மையுணர்வுடன் வடித்திருப்பதாக அவர் கூறினார்.  திரு. ஜமுனா இராஜேந்திரன் பால்யம் என்ற அக்கதையின் காட்சிப்படிமங்களை ஒரு குறும் திரைப்பட வர்ணனைபோன்று கச்சிதமாக எடுத்துரைத்தார். ஜமுனா ராஜேந்திரனும் முன்னதாகப் பேசிய .இரவியின் பாதையிலேயே பயணித்து, புனைகதையின் வரைவிலக்கணம் பற்றிய தனது கருத்துக்களை முன்வைத்தார். அவரது பார்வையிலும் சந்திராவின் பெரும்பாலான கதைகள்  விவரணங்களேயன்றி கதைகள் அல்ல. மண்ணையும், மக்களையும், மண்ணின் மணத்தையும் விபரிப்பது மட்டும் கதைகளாகிவிடா என்பதே ஜமுனாவின் வாதமாக இருந்தது. மேலும் கடந்தகால வரலாறுகளை விபரிப்பதைக் கதைகளில் தவிர்க்கவேண்டும் என்றார் அவர்.

ஈழத்துப் புனைகதை இலக்கியம் தனியானதொரு பரிணாம வளர்ச்சியைக் கண்டிருப்பதாகவும், தனித்துவமான அதன் போக்கு- தமிழகப் பாரம்பரியச் சிறுகதைகளின் இலக்கண வரம்புகளுக்கு அப்பாற்பட்டு தனித்துவம் மிக்கதாக, இரத்தமும் சதையுமான அனுபவவயப்பட்ட உணர்வு வெளிப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் நிலவும் கருத்து இன்று தமிழகத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகி விட்டது. இதை ஈழத்தின் முக்கிய படைப்பாளியான எஸ் பொ. தனது அண்மைக்கால நூல்களில் விபரமாகவே ஆராய்ந்துள்ளார். ஈழத்தமிழர்களின் புதியதான புலப்பெயர்வுகளின் விளைவாக முகிழ்த்துவரும் தமிழ் இலக்கிய வகையான புலம்பெயர்ந்தோர் இலக்கியம் தொடர்பாக எஸ்.பொ. தமிழ்நாட்டில் புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலத்திலே 22.3.2006 அன்று நிகழ்த்திய பேருரை, பின்னாளில் பனிக்குள் நெருப்பு என்ற நூலாகவும் வெளியிடப்பட்டது. (பார்க்க:  பனிக்குள் நெருப்பு: புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ஒரு வரலாற்றுப் பார்வை. எஸ்.பொன்னுத்துரை. சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 329 ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, ஜுன் 2006. ISBN:: 81-89748-17-3.)

மலேசிய, தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஈழத்துத் தமிழ் இலக்கியம் தனியானதொரு பாடமாக (Module) ஆய்வுசெய்யப்படுகின்ற இன்றைய நிலையில், பாரம்பரிய புனைகதை இலக்கண வரம்புகளுக்குள் நவீன ஈழத்துத் தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் நீட்சியாகக் காணும் புலம்பெயர் படைப்பிலக்கியங்களை மீண்டும் இந்த புனைகதை இலக்கண வரம்புக்குள் வலிந்து இழுத்துச்சென்று சேர்க்கும் தமிழகக் கனவின் ஒரு முயற்சியாகவே  இவ்விரு உரைகளையும் என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது.

ஜமுனா இராஜேந்திரனைத் தொடர்ந்து தனது விரிவான விமர்சனத்தை முன்வைத்தவர் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான சூ.யோ.பற்றிமாகரன் அவர்கள். அன்னையர் தினமான அன்று இரு மாவீரர்களின் அன்னையான திருமதி சிவா தியாகராஜாவை வாழ்த்தித் தன் உரையைத் தொடர்ந்த பற்றிமாகரன், சந்திரா இரவீந்திரனின் எழுத்துத்துறை வரலாற்றை அவரது ஆரம்பகாலப் படைப்புகளிலிருந்து அண்மைக்கால அறுவடைகள் வரை விபரமாக எடுத்துரைத்தார்.

கருத்துரை வழங்கியோரின் பதிலுரையை நிகழ்வின் நாயகியான சந்திரா இரவீந்திரன் வழங்கினார். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்ட சந்திராவின் உதட்டிலிருந்து வார்த்தைகள்  மிகுந்த சிரமத்தின் மத்தியில் வெளிவந்தன. அவரது சகோதரர்கள் இருவர் (மொறிஸ், மயூரன்) ஈழ  விடுதலைப் போராட்டத்தில் ஆகுதியானவர்கள். தமையன் பிறேமராஜன் வற்றாப்பளை மகா வித்தியாலயத்தின் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர். இராணுவ எறிகணைகளால் அவயவங்களை இழந்த ஒரு சாதாரண தமிழ்மகன். 1990இலிருந்து தீட்சண்யன் என்ற புனைபெயருடன் உலகெலாம் பரந்திருந்த விடுதலைப் போராட்டம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பங்களித்தவர். இயல்பாகவே கவிதையில் ஆற்றல் மிக்க இவர் புலிகளின் குரல் வானொலியில் 1990இலிருந்து கவிதைகளை அரங்கேற்றியிருந்தார். தீட்சண்யம் என்ற கவிதைத் தொகுப்பில் இவை பதிவுக்குள்ளாகியுள்ளன. (பார்க்க: தீட்சண்யம்: கவிதைகள். எஸ்.ரி.பிறேமராஜன் (மூலம்), சந்திரவதனா செல்வகுமாரன் (தொகுப்பாசிரியர்). ஜேர்மனி: மனஓசை, Manaosai verlag, 74523 Schwaebisch Hall, 1வது பதிப்பு, மே 2009).

இத்தகையதொரு ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின்புலத்தில் வளர்ந்த ஒருவராக, மாவீரர்களான தன் சகோதரர்களின் கண்களும், வாயுமாகச் செயற்படவிளையும் சந்திராவின் உணர்வுக் குவியல்களே  நிலவுக்குத் தெரியும் நூலில் இடம்பெற்றுள்ள படைப்புகள் என்பது எனது கருத்தாகும். இவை சத்திய தரிசனமானவை. மேற்பூச்சற்றவை. யாவும் கற்பனை என்று முடித்து வைக்கும் நவரசக் கதைகள் அல்ல இவை. போராட்ட வாழ்வின் அனுபவங்களை, அழிவுகளை, ஏக்கங்களை மட்டுமே அவை மொழிகின்றன. இயல்பு வாழ்வோடு ஒட்டாத கற்பனையில் வார்க்கப்பட்ட பாத்திரங்கள் எதுவும் அவரது கதைகளில் இல்லை. ஈழத்துப் போர்க்கால இலக்கியங்களாகக் கச்சிதமாகப் பொருந்துபவை இவை. தனித்துவமான ஈழத்துப் படைப்பிலக்கியங்கள் இவை. இவற்றுக்கான வரைவிலக்கண வரம்புகளை எதிர்காலம் தீர்மானிக்கட்டும். பாரம்பரிய இலக்கணச் சட்டங்களுக்குள் இவர்களைச் சிறைப்படுத்துவது சரியல்ல.

நிகழ்வின் இறுதியாக செல்வன் ரிஷியன் இரவீந்திரகுமாரன் நன்றியுரையை வழங்கி நிகழ்வினை நிறைவுசெய்தார்.

மே 2009இன் மௌனத்தின் பின்னர் அதிர்ச்சியில் உறைந்திருந்த புலம்பெயர் தமிழ் இலக்கிய உலகம் சற்றே சுதாரித்துக்கொண்டுள்ள ஆண்டாக 2011இன் பின்னரைப்பகுதி விளங்கியது. ஆங்காங்கே இலக்கிய நிகழ்வுகள் மிக அமைதியான முறையில் ஏற்பாடுசெய்யப்பட்டு வந்தன. 2012இன் ஆரம்ப நிலைமை சற்று வழமைக்குத் திரும்புவதாக உணர முடிகின்றது. நீறுபூத்த நெருப்பாக நிகழ்ந்த இந்நிகழ்வும் இலக்கியச் சுவைஞர்களுக்கு ஒரு நல்ல சந்திப்பாக அமைந்திருந்தது. லண்டனில் திக்கெட்டும் சிதறிவாழும் இலக்கியவாதிகள் பரஸ்பரம் சந்தித்து மகிழும் ஒரு நிகழ்வாக அமைந்தமையும் மனதுக்கு இதமாக இருந்தது


 பதிலுரை: சந்திரா இரவீந்திரன் 

1. எல்லோருக்கும் வணக்கம்

2. ஒரு பெரும் மழையின் பொழிவில் நனைந்து, தோய்ந்து ஒட்டிய உடைகளோடு வந்து நிற்கும் ஒரு சின்னப் பெண்ணின் மனநிலையோடு உங்கள் முன் இப்போ வந்து நிற்கிறேன். பேசுவதற்கான வார்த்தைகள் தொலைந்து போன ஒரு திகைப்பில் நிற்கிறேன். ஆயினும் சில வார்த்தைகளாவது பேசிவிட வேண்டிய நேரம் இது!

3.
இந்த 'நிலவுக்குத் தெரியும் நூலிலே இடம்பெற்றுள்ள 10 கதைகளும் வெவ்வேறு காலப்பகுதிகளில் எழுதப்பட்ட.... வெவ்வேறு மனநிலைகளைப் பிரதிபலிக்கிற... அதே நேரம் ஒரு குறிப்பிட்ட முக்கிய காரணியால் உருவாகிய கதைகள் என்பது மிகவும் உண்மையாக இருக்கும்.

4.
இவை பெரும் பாலும் இங்கு வந்திருக்கும் எமது ஆய்வாளர்களின் பார்வையில் நன்றாகப் பரிசீலிக்கப்பட்டு விட்டன. இதற்கப்பால் இவை பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டி எதுவுமில்லையென்றே நினைக்கிறேன்.

5. அதையும் மீறி....ஒரு வரியில் நான் சொல்வதென்றால், என்னுடைய இளமைக் காலத்திலிருந்து இப்போது வரையான காலப்பகுதியில் என்னை அதிகம் பாதித்த விடயங்கள் இங்கு படைப்புகளாக உருவாகியிருக்கின்றன என்று சொல்லலாம். ஆனால்... படைப்புகளாக உருவாகுவதற்கு ஏதுவான சூழ்நிலைகள் இல்லாமல், இன்னும் பல எழுதப்படாமல்.... எனக்குள் என்னை வதைத்துக் கொண்டு இன்னும் நிறையவே இருக்கின்றன. அந்தச் சுமை தாளாமல் நான் பல சமயங்களில் சோர்ந்து போய் என்னையே நொந்து கொண்டு இருக்கிறேன்.

6.
ஆனால்.... இன்றைய காலகட்டம்...... எங்கள் படைப்பாளிகளிடமிருந்து எதிர்பார்க்கும் முக்கிய விடயங்கள் இன்னும் எழுத்துருவில் வரவில்லை என்று தான் நான் சொல்வேன். நான் அல்லது நாங்கள் படைப்புகளாக.... எழுத்துருவில் பதிய வைக்க வேண்டிய கட்டாயமான விடயங்களை சரித்திரம் எமைப் பார்த்தபடி எதிர் நோக்கிக் காத்திருக்கிறது. ஆனால் நாங்கள் இன்னமும் வாய்விட்டு அழவில்லை! அதற்குரிய நேரமோ காலமோ இடமோ எமக்கின்னும் கிடைக்கவில்லை! நெஞ்சு முட்டிக் கிடக்கிறது! அது உடைப்பெடுக்கத் தொடங்கினால் ஒரு பிரளயமும் புதிய வரலாறும் உருவாகும் நிலை இருக்கிறது!

என்னுடைய தம்பிமயூரன்அண்ணருடன் வன்னியில் இருந்த காலத்தில் எனக்கு ஒரு மடல் வரைந்திருந்தான். அதில் அவன் நான்கு  வரிகள் தான் எழுதியிருந்தான்.

ஓன்று இளையக்கா, நலமாக இருக்கிறீர்களா?
இரண்டு உங்களைப் போன்றவர்கள் எங்கள் மண்ணை விட்டுப் போவது பெருங்கவலையைத் தருகிறது என்று அண்ணர் என்னிடம் சொல்லிக் கவலைப்பட்டார்.
மூன்று 'விழுதுகள்´ பகுதியில் எனது தோழர்களைப் பற்றி எழுத மறவாதீர்கள்.
நான்கு முக்கியமான சில விடயங்களைப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. முடிந்தால் ஒரு நல்ல கமரா வாங்கி அனுப்பி வையுங்கள்.

இவ்வளவும் தான் எழுதியிருந்தான். எனக்கு இவை தேவாரம் மாதிரி இப்பவும் மனப்பாடமாக இருக்கின்றன. ஏனென்றால், இந்த நான்கு வரிகளையும் ஆழ்ந்து நோக்கினால், நாங்கள் எங்களது மண்ணிற்காகச் செய்ய வேண்டிய, செய்யத் தவறிய.... முழுவிடயங்களும் இதற்குள் அடங்குவது விளங்கும்!

அவர்கள் எங்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்தார்கள். எங்களில் பலர் நினைத்தோம். பணத்தை அனுப்பினால் போதும்....; நாம் இழந்தவற்றையெல்லாம் திரும்பப் பெற்று விடலாம் என்று! அதற்கும் அப்பால்.... நிறைய விடயங்களை நாங்கள் செய்யத் தவறி விட்டோம் என்பது தான் உண்மை! அது உண்மையிலும் உண்மை! அதை யாராலும் மறுக்க முடியாது!
 
7. இந்தத் தொகுப்பிலே வரும் ' அவர்கள் இல்லாத தேசம்என்ற சிறுகதையை நான் உண்மையில் ஒரு நாவலாக எழுத உத்தேசித்துத் தான் தொடங்கியிருந்தேன். பின்னர் அதற்கான சூழலும் நேரமும் அதை சிறுகதையாக்கி விட்டிருக்கிறது! அது நாவலாகி வருமானால் நான் அழுதழுது தான் அந்த வரிகளைத் தொடர்ந்திருப்பேன். அவர்கள் யாருமில்லாத அந்த தேசத்தை  பார்ப்பதற்கு நான் உண்மையில் அஞ்சுகிறேன்! அதனை வெறுக்கிறேன்! என்னிடமே ஆயிரம் கேள்விகளைக் கேட்டு உடைந்து போகிறேன்! மனதிற்குள் சிதைந்து கொண்டிருக்கிறேன்!

அண்ணரைச் சந்தித்த போது ஒரு வசனம் சொன்னார் - தன்னைத் தானே சுட்டிக்காட்டிச் சொன்னார்.
'
நான் சொன்னபடி இன்னும் எதையும் செய்யேல்லை. ஆனால் மாவீரர்கள் சொன்னதைச் செய்திட்டினம்... அவர்களுக்கு கிட்ட நிற்கிற தகுதி எனக்கு இன்னும் இல்லை'  என்று. 

நான் ஊமையாகிப் போனேன். இந்த மனநிலை...... அல்லது இதனை வெளிப்படையாகச் சொல்கிற மனநிலை உள்ள ஒரு விடுதலைப் போராட்டத் தலைவன் எங்களிடமிருந்து எதனை எதிர்பார்த்திருப்பான்?!!

இது போதும், இவர்களையெல்லாம் இழந்த தேசத்தின் கதியை விளக்குவதற்கு இது ஒன்றே போதும் என்று நான் நினைக்கிறேன்.

படைப்பாளிகளான நாங்கள் இன்னும் சரியாக எங்களுடைய தேசத்தின், எங்களுடைய இனத்தின்  வரலாற்றை மிகச்சரியாகப் படைப்புகளில் கொண்டு வரவில்லை.
அண்மையில் ஒரு ஆங்கிலத் திரைப்படம் பார்த்தேன். 'The Boy in The Striped Pyjama . Irish எழுத்தாளர் Johnboyne  அவர்களால் எழுதப்பட்ட கதை. Mark Herman  தயாரிப்பில் உருவான படம். ஒரே காலப்பகுதியில்  2008ல் லண்டனிலும் அமெரிக்காவிலும் வெளியாகியிருந்த படம். அண்மையில் அது பற்றி திரு.மு.புஷ்பராஜன் அவர்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரை கூட 'காலச்சுவடு' இதழில் பார்த்தேன். ஜேர்மனியிலிருந்த நாசி சித்திரவதை முகாமில் யூத மக்களுக்கு நடந்த கொடுமைகளை ஒரு வித்தியாசமான பார்வையில் எழுதியிருந்தார். ஒரு 12 வயதுப் பையனை வைத்து ஒரு இனத்திற்கு நிகழ்ந்த கொடுமைகளை வெகு அற்புதமாகப் படைத்திருந்தார்மனசை அதிர வைக்கிற படைப்பு! அது வெகு இயல்பாகப் படமாகியும் இருக்கிறது. 
அவர்களின் பிரச்சனை வெளியில் வந்திருக்கிறது. இன்னமும் வந்து கொண்டிருக்கிறது! அதற்கு சாட்சிகள் அத்தாட்சிகள்...... டயறி வடிவிலும்..... தப்பி வந்தவர்கள் ஊடாகவும் உலகறியும் வாய்ப்பு அவர்களுக்கு நிறைய இருந்திருக்கிறது. ஆனால் எங்களுக்கு அது வெகு சொற்பமே! அந்த சொற்பத்தை நாங்கள் தேடிப் பயணிக்க வேண்டும் என்பதே என் அவா. எங்களுடைய மனித சாட்சிகள் தான் எங்களுடைய வரலாற்றை ஒரு நேர்மையான படைப்பாக உருவாக்குவதற்கு உதவ வேண்டியவர்கள். அவர்கள் எங்களுக்கு நேர்மையோடு உதவ வேண்டும். அந்த வகையில் தான் ஒரு காலத்தின்..... ஒரு இனத்தின்...... ஒரு மண்ணின் பதிவு உண்மையான வரலாற்றுப் பதிவாக உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. யாரும் கற்பனையில் புனைந்து விட்டுப் போகலாம். ஆனால் அது இப்போ எமக்குத் தேவையில்லை.... எமது அடுத்த தலைமுறைக்கும் அது தேவையில்லை. உண்மையான நேர்மையான..... ஒரு வரலாற்றுப் பதிவு தான் நாங்கள்...... படைப்பாளிகள் இப்போ அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க வேண்டிய விலைமதிப்பற்ற படைப்பு என்று நான் கருதுகிறேன். 

8.  இங்கே...இந்த 'நிலவுக்குத் தெரியும்' நூல் இன்றைய சூழலுக்கு முன்னரே வந்திருக்க வேண்டிய ஒரு நூல் என்று தான் நான் கருதினேன். ஏனென்றால், அதற்கப்பாலான விடயங்களை இப்போ எம்மிடமிருந்து உலகம் ஆவலோடு காத்திருக்கிறது! ஆனால் எனது இந்த நூல் வரவேண்டிய காலம் இதுவாக அமைந்தமை தவிர்க்க முடியாமலும் இருந்தது!

இங்கே இந்த நூல் பற்றி ஆய்வுரை செய்த இந்த இலக்கிய கர்த்தாக்கள், உண்மையில் போற்றப்பட வேண்டியவர்கள். ஒவ்வொருவரது பார்வையினதும் மிக நுணுக்கமான வெளிப்பாடுகளைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். இந்த நூலை அவர்கள் வாசிக்கும் போது இதிலுள்ள படைப்புகளோடு மட்டுமல்ல.... என்னோடும் சேர்ந்து பயணித்திருக்கிறார்கள். என் கைகளைப் பற்றிக் கொண்டு நடந்திருக்கிறார்கள். அல்லது என்னைத் திட்டிக்கொண்டும் பேசிக்கொண்டும் கூட நடந்திருக்கலாம். ஆனால் என்னோடு சேர்ந்து பயணித்திருக்கிறார்கள் என்பது நிச்சயம். அந்த வகையிலே வெகு அற்புதமான ஆய்வுகளையும் விமர்சனங்களையும் தந்த ஆய்வாளர்கள் திரு.பற்றிமாகரன், திரு.ஜமுனா ராஜேந்திரன், திருமதி.நளாயினி இந்திரன், திரு..இரவி, செல்வி.துரைச்செல்வி பொன்னுத்துரை மற்றும் ஒரு அழகான அறிமுக உரையைத் தந்த திரு...முத்து அவர்களுக்கும் எனது நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், முக்கியமாக இந்த நிகழ்வை மிக அருமையாகத் தொகுத்துத் தலைமை தாங்கி நடாத்திய திருமதி.மாதவி சிவலீலன் அவர்களை நான்  பெருமையுடன் பார்க்கிறேன். அவர் தமிழில் சிறப்புக்கலை கற்றவர். பேச்சாளர், ஆசிரியர். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பது போல... காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் மகள்.... என்றால் தமிழில் சளைத்தவர் ஆகிவிடுவரா என்ன என்று எண்ணத் தோன்றும் அளவிற்கு வெகு சிறப்பாக இந்த நிகழ்வை நடாத்தியிருந்தார். அவருக்கு எனது சிறப்பான நன்றிகள் பல.

மேலும் நான் நன்றி சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான நபர்  இந்த விழாவிற்கு வருகை தரமுடியாத ஒரு துயர் மிகுந்த தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். என் அன்பிற்கும் நட்பிற்குமுரிய எழுத்தாளர் உமா வரதராஜன் அவர்கள். என்னுடைய நூலிற்கு முன்னுரை எழுதியவர். அவரை நான் நேரில் இன்னும் சந்திக்கவில்லை. ஆனால் அவரது படைப்புகளினூடாக அவரை ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். என்னுடைய 'காற்று' என்ற சிறுகதையை எங்கோ வாசித்து விட்டு, மிகுந்த புல்லரிப்போடு அது பற்றிய ஒரு விமர்சனத்தை எனக்கு எழுதி அனுப்பியிருந்தார். அதனை தன்னுடைய 'வியூகம்' இணையத்தளத்திலும் என்னுடைய அனுமதி கேட்டு மகிழ்வோடு பிரசுரித்தார். அதனைத் தொடர்ந்து மிகுந்த ஆர்வத்துடன் என்னுடைய ஏனைய கதைகளையும் வாசிக்கப் பிரியப்பட்டு தேடிப்பெற்று வாசித்தார். அதன் விளைவே இந்த நூலின் உருவாக்கத்திற்கான அடிப்படைக் காரணம் என்றும் கூறலாம். என்னுடைய கதைகளைப் பற்றிய ஒரு கருத்துப் பரிமாற்றம் அங்கு நடைபெற்ற ஒரு சந்திப்பின் போது, காலச்சுவடு இதழ் ஆசிரியருடன் இடம்பெற்றமைக்கு என்னுடைய 'காற்று' என்கிற கதை ஒரு முக்கிய காரணமாய் இருந்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.

காலச்சுவடு பதிப்பகம், இவற்றை நூலாக்கப் போவதாக எனக்கு அறிவித்த போது நான் எதிர்பாராத மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் இவற்றிற்கு முன்னரே திரு.பத்மநாப ஐயர் அவர்கள் என்னுடைய கதைகளை நூலாக்குவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். அவர் என்னுடையது மட்டுமென்றில்லை ஈழத்தின் நல்ல படைப்புகளை நூல் வடிவம் ஆக்குவதில் அவருக்கு எப்பவுமே பேரின்பம் தான்! ஆனால் ஐயர் அவர்களின் முயற்சி ஆரம்பமாவதற்கு முன்னரே காலச்சுவடு அதனை தாமாக முன்வந்து நூலாக்கி விட்டிருக்கிறது! எப்படியும் இது நூலாகுவதற்கான காலம் கைகூடி வரும் வேளை இதுவாக இருந்திருக்கிறது என்றே நினைக்கிறேன்! காலச்சுவடு பதிப்பகத்தினருக்கும் திரு.கண்ணன் அவர்களுக்கும் என் நன்றிகள். மேலும் இந்த நூலிற்கு அழகுற அட்டைப்படம் வடிவமைத்துத் தந்திருக்கும் கவிஞர் றஷ்மி அவர்களிற்கும் நான் இச்சமயம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மேலும் இந்த விழாவை ஒழுங்கமைப்பதில் பெரிதும் உதவிகள் செய்து உற்சாகப்படுத்திய திரு.பத்மநாப ஐயர் அவர்களுக்கும், இந்த நூல்களை இந்தியாவிலிருந்து வருவிப்பதற்கு உதவிய 'தமிழர் தகவல்' ஆசிரியர்- திரு.சிவானந்தஜோதி அவர்களுக்கும்,  'நாழிகை' ஆசிரியர் - திரு.மாலி அவர்களுக்கும் என் நன்றிகளை இவ்வேளை கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மற்றும், இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு என்னோடு ஒத்துழைத்து உதவிகள் புரிந்த எனது கணவருக்கும் எனது குழந்தைகள் தரணியன், ரிஷியன், தர்ஷியா ஆகியோருக்;கும் இத் தருணம் நான் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் பலருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்த நன்றியுரையை வழங்க என் சின்னமகன் ரிஷியன் ஆயத்தமாக நிற்கிறான். அதற்கான நேரத்தை நான் இப்போ அவருக்கு விட்டுக் கொடுத்து இத்துடன் எனது சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்.

நன்றி
வணக்கம்.


http://manaosai.blogspot.de/2012/03/blog-post.html

Followers

Blog Archive