Saturday, November 27, 2010

இதயமலர்கள்

Tuesday, October 19, 2010

எனக்குப் பிடித்த ராகங்கள் - 1

அகிலன் கருணாகரன் - நியூசிலாந்திலிருந்து
எனக்குப் பிடித்த இராகங்களை பகிர்ந்து கொள்வதற்கு முன் ஒரு சிறிய அறிமுகம்.
தமிழ்த் திரையிசைப் பாடல்களை நான் மிகவும் விரும்பிக் கேட்பதுண்டு. இதில் மிகவும் என்கின்ற சொல் மிகவும் முக்கியமானது.
சிறு வயதில் இலங்கையில் வானொலியில் பாட்டுக்குப் பாட்டு மற்றும்  இசை நிகழ்சிகள், தொலைகாட்சியில் ஒளியும் ஒளியும்  அல்லது பொன்மாலைப் பொழுது போன்ற நிகழ்சிகள் மூலம் தமிழ் திரையிசை என் குடும்பத்தில் நுழைந்ததுஅன்று தொடங்கியது தமிழ் திரைப்படப் பாடல்களுக்கும் எனக்கும் இடையான ஒரு அளவு கடந்த, ஆக்ரோஷமான, அன்பான, சில வேளைகளில் ஆவேசமான ஒரு பயணம்.
இங்கே எனது தந்தையை நான் குறிப்பிடவேண்டும்.
என் இசைப் பிரயாணத்தில் என் தந்தைக்கும் பெரும் பங்கு உண்டு. அவர் முறையாகச் சங்கீதம் படிக்கவில்லை என்றாலும் அவருக்கு இசையில் அபார கேள்வி ஞானம் உண்டு. மேற்கத்திய இசை முறைகளை நன்கு தெரிந்து வைத்திருந்தார். பிரபல இசை மேதைகளின்  Symphonies . operas என்று ஒரு தனி collection கூட வைத்திருந்தார். ஒரு பாடலைக் கேட்டால் அது எந்த ராகத்தில் அமைந்தது, அதே ராகத்தில் உள்ள வேறு பாடல்கள் என்னென்னவென்று பட்டியலிட்டுக் கூறும் வல்லமை அவரிடம் இருந்தது. என்னை இசை படிக்க வைத்ததற்கும்,  இசை என்னும் ஒரு இன்னொரு உறவினை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்ததிற்கும் நான் எனது தந்தையிடம் மிகவும் நன்றியும், கடமைப்பாடுள்ளவனாயும் உள்ளேன்.
காலத்தை 20 வருடங்களுக்குப் பின்னால் தள்ளி வைக்கிறேன்.
1990
இலங்கையை விட்டு எமது குடும்பம் நியூசிலாந்திற்குப் புலம் பெயர்ந்த போது, அந்தப் புதுமையான் சூழலில், யாருமே தெரியாத அந்நியனாக இருந்தபோது, ஒரு வித மகிழ்ச்சியைத் தந்தது இந்தத் தமிழ்த்திரையிசைப் பாடல்கள் தான். அப்போது நாங்கள் எமது மாமாவின் (அம்மாவின் அண்ணா) வீட்டில் இருந்தோம். அவருக்கு ஜெர்மனியில் இருந்து இன்னனொரு மாமா (அம்மாவின் தம்பி) ஒலி நாடாக்கள் அனுப்புவார். எல்லாப் பாடல்களும் பழையதாகவே இருக்கும். (இங்கே எனது ஏமாற்றத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.)
அப்போது எனக்குப் பழைய பாடல்களில் அவ்வளவு நாட்டம் இருக்கவில்லை, இருந்தாலும் சில இடைக்காலத்துப் பாடல்களும் அந்தத் தொகுப்பில் வரும். அந்த ஒரு சில இடைக்காலத்துப் பாடல்கள் எனக்கு இளையராஜா என்னும் ஒரு இசைஞானியை அறிமுகம் செய்து வைத்தது.
வைதேகி காத்திருந்தாள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், பயணங்கள் முடிவதில்லை என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்)
1992
இதே ஜெர்மன் மாமா ஒரு பொழுது நியூசிலாந்து வந்த போது ஒரு வால்க்மன் (walkman) வாங்கித் தந்தார்.  பல வருடங்களுக்குப் பின்னால் (1999ல்)  ஒரு மினி டிஷ்கும் (Mini disc player) வாங்கித் தந்தார். இந்தக் கருவிகளினால் எனது பால்ய, மற்றும் இளமைக்காலத்துப் பாடல்களை என்னால் தொகுத்து வைக்க முடிந்தது. 
புத்தம் புதுப் பாடல்களைக் கேட்பதற்கு நான் வேட்டையாடிய சாகசங்களை வேறு ஒரு பதிவில் தனியாக எழுதவேண்டும்.
காலப்போக்கில் ஒலிநாடா இசைத்தட்டாக மாறியதுவெளி நாடுகளிலும் தமிழ் வானொலி ஒலிக்க ஆரம்பித்தது. இணையத்தளத்தில் பாடல்கள் தரவிறக்கம் செய்யும் வசதியும் வந்து விட்டது. எனது நியூசிலாந்து மாமாவுக்கு நானே பாடல்களைத் தெரிவுசெய்து, தொகுப்புகள் அனுப்பிய காலமும் இதில் அடக்கம்.
2010

இதோ எனக்கு பிடித்த இராகங்கள் என்று எனது முதல் பதிவைத் தொடங்குகிறேன்.

இதில் இன்று நான் தேர்வு செய்திருக்கும் இராகம் - வசந்தா
இதமான, சுகமான, அமைதியான ஒரு இராகம். ஆனாலும் இந்த இராகத்தைக் கேட்கும் போது, அதில் ஒரு ஏக்கமும்தவிப்பும்,  ஒரு வித சோகமும் கலந்திருக்கும். இங்கே மீண்டும் ´நான் முறையாக கர்நாடக சங்கீதம் படிக்கவில்லை` என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
கீழேயுள்ள இந்தத் தொகுப்பில் உள்ள பாடல்களைக் கேட்டால், ஏதோ ஒரு நாதம் அதனை எல்லாம் ஒன்றாக இழுப்பது போல் தெரியும். அதன் ஒற்றுமை இவை எல்லாம் வசந்தா ராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்.

தேசுலாவுதே ... மங்கையே மணாளனின் பாக்கியம்
இத்திரைப்படத்தை நான் முழுமையாகப் பார்த்ததில்லை,பொறுமை கொஞ்சம் இங்கே குறைவுதான். பாடல் பல இராகங்களுக்குள் புகுந்து விளையாடிச் சங்கமிக்கும். இப் பாடலின் தொடக்கம் வசந்தா இராகத்தில் அமைந்தது. 

மின்சார பூவே...  படையப்பா
 வசந்தா இசைப்புயலைச் சந்தித்தால் என்ன நடக்கும் என்பதற்கு இப் பாடல் சாட்சி. படையப்பா திரைப்படத்தின் பாடல்களில் இந்த ஒரு பாடலைத் தான் மீண்டும் மீண்டும் கேட்டிருப்பேன். பாடலின் இறுதியில் நித்யாஸ்ரீ, மகாதேவன் மற்றும் ஸ்ரீநிவாஸ் அமர்களப்படுத்தியிருப்பார்கள். மின்சாரம் பாய்ச்சும் அந்தப் பாடல் இதோ. 

மான் கண்டேன்...  ராஜரிசி
 வசந்தா ராகத்தில் உருவான இளையராஜாவின் ஒரு அற்புதமான் பாடல். படம் அவ்வளவு ஞாபகம் இல்லை. யேசுதாசுடன் பாடுவது வாணி ஜெயராம் என்று
நினைக்கிறேன். கணீர் என்ற குரல். 

அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை
இந்தப் பாடல் வசந்தா இராகத்தில் அமைந்தது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் இப்போது கேட்கும் போது வசந்தா இராகத்திற்கு உண்டான அறிகுறிகள் கேட்கின்றன. குறிப்பாக ஆண் குரலில் வரும் ஆலாபனையில் இலகுவாகக் கேட்கமுடியும்.  இந்தப் பாடல் வெளியான போது வைரமுத்துவின் வரிகள் சர்ச்சைக்க்குள்ளாகின என்று ஒரு வலைபதிவில் படித்த ஞாபகம். அது எப்படி கண் தெரியாத ஒருவன் ஒவ்வொரு மணித் துளிகளிலும் தனது காதலியின் முகத்தைப் பார்க்க முடியும் என்று பலர் இப்பாடலை விமர்சித்தார்கள். கொஞ்சம் பொழியட்டும் அந்த அந்தி மழை. 

வந்தனம்... வாழ்வே மாயம்
 வசந்தா இராகத்தில் ஒரு வந்தனம். இடையில் பாடல் வேறு இராகத்திற்கு மாறி, பின்பு வசந்தா இராகத்திற்கு வந்து சேரும். 

அகிலன் கருணாகரன்
நியூசிலாந்து
 (தொடரும்)

Friday, October 15, 2010

இவர்கள்


அந்த இளம் ஜோடிகளை இப்போது சில நாட்களாக அடிக்கடி சந்தித்துக் கொண்டிருந்தேன். வழமையில் மாலையிலோ அன்றி விடுமுறை நாட்களிலோதான் அவர்களை ஒன்றாகக் காண முடியும். அதுவும் அவசரமாக எங்காவது ஓடிக் கொண்டிருப்பார்கள். அல்லது சுப்பர்மார்க்கெட்டிலோ, அல்டியிலோ வீட்டுச் சாமான்கள் வாங்கிக் கொண்டிருப்பார்கள். படிப்பு, வேலை இவைகளின் மத்தியில் அனேகமானவர்கள் போல் அவர்களாலும் அப்படித்தான் வாழ முடிந்திருக்கிறது.

இந்தச் சில நாட்கள் மட்டும் இருவரும் மிகவும் சந்தோசமாகவும், ஆறுதலாகவும் ஐஸ்கிரீம் பாரிலும், கோப்பிக் கடைகளிலும், பார்க்குகளிலும்.. என்று அடிக்கடி என் கண்களில் தென்பட்டுக் கொண்டே இருந்தார்கள். ´ஒருவேளை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களோ!` என்ற எண்ணம் எனக்குள். ஒன்றாக, ஒரு வீட்டிலே சில வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும், இருவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நான் அறிந்து வைத்திருக்கிறேன். இரவில் பகுதி நேர வேலைகளும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நேற்று வேலைக்குப் போகும் போது நான் வேலை பார்க்கும் வங்கியோடு சேர்ந்த நீண்ட படிக்கட்டுகளில் இருவருமாக ஒருவரையொருவர் அணைத்தபடி, உதடு பதித்து முத்தமிட்டுக் கொண்டும், கலகலவென்று சிரித்துக் கொண்டும் அமர்ந்திருந்தார்கள். என்னைக் கண்டதும் சிரித்துக் கொண்டு  நலம் விசாரித்தார்கள்.

நன்றி கூறி நானும் நலம் விசாரித்து விட்டுஎன்ன விடுமுறையா, இருவரும் இத்தனை றிலாக்சாக இருக்கிறீர்கள்..?“ கேட்டேன்.

“ம்.. ம்.. நாங்களாக விடுமுறை எடுத்திருக்கிறோம்“  என்றார்கள் அர்த்தமுள்ள முறுவலாடு!

என்ன திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா?

“இல்லை, இல்லை. எமக்குள் சரிவரவில்லை. பிரிந்து விடப் போகிறோம்“  என்றார்கள் கோரசாக.

என் கண்கள் ஆச்சரியத்தில் விரிய  அதுதான் நாங்கள் ஒன்றாக இருக்கப் போகும் இந்த இறுதி வாரத்தை சந்தோகமாகவே கழிக்கிறோம்என்றார்கள்.

சந்திரவதனா
15.10.2010

Saturday, July 10, 2010

விபத்து

யாருக்குத் தெரியும் ஒரு வெள்ளிக்கிழமை திடீரென நான் ஒரு மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருப்பேன் என்று. எனக்கும் தெரியாது. ஆனால் நடந்து விட்டது. நான் மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருக்கிறேன். அடிக்கடி வந்து நான் சரியாக இருக்கிறேனா எனப் பார்த்துப் போகிறார்கள் மருத்துவத்தாதிகள்.

வழமையான வெள்ளிக்கிழமைகள் போலத்தான் நேற்றைய வெள்ளியும் விடிந்தது. மாலை வரை சாதாரணமாகவே இருந்தது. வெயிலின் அகோரம் தணிந்து,, வியர்வைப் பிசுபிசுப்பும் குறையட்டுமே என்று குளிக்கச் சென்ற போதுதான் அது நடந்தது. சவரைத் திறந்து விட்டு சற்றுத் திரும்பிய போது குளிக்கும் பேசினுக்குள் எப்படி வழுக்கியது என்றே தெரியவில்லை. ஒரு செக்கன் கூட தேவைப்பட்டிருக்காது சுழன்று விழுந்த போது ஒரு பக்கத்தில் கூரான விளிம்புடன் இருந்த கட்டோடு தலை படாரென அடிபட்டது வரைதான் எனக்குத் தெரிந்தது. சில நிமிடங்களுக்கு கோமா நிலைக்குப் போய் விட்டேன்.

இன்னும் வாழ வேண்டும் என்ற நியதி போலும். எவ்வளவு நேரம் என்பது சரியாகத் தெரியவில்லை. எழுந்து விட்டேன். நடந்த போது தள்ளாடியது. தலைசுற்றியது. எனது வழமையான பழக்கப்படி அன்றும் தொலைபேசியை குளியல் அறையில் வைத்து விட்டே குளிக்கத் தொடங்கியிருந்ததால் மகனை அழைக்க முடிந்தது.

அம்புலன்ஸ், மருத்துவமனை என்ற அளவுக்கு என் நிலை போய் விட்டது. ஒன்றும் பயமில்லை. எல்லாம் ஓகே என்று இப்போது நம்பிக்கை தந்து விட்டார்கள் என்றாலும் தலையில் அடிபட்டதாலும், கோமா நிலை வரை சில நிமிடங்களுக்குச் சென்றிருந்ததாலும் இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Friday, March 26, 2010

தொப்புள்கொடி - மதுமிதா

புனைவல்ல - உண்மை

சென்னைக்கு மழை வரவேண்டுமானால் வங்கக்கடலில் தாழ்வழுத்த மண்டலம் மையம் கொள்ள வேண்டும். மழை... மழை... மழை... பெய்து ஓயாத மழை. எங்கும் நகர இயலாது வீட்டிலேயே சிறைப்படுத்திய மழை. ஒரு மாதம் முன்பு சித்தன் யுகமாயினிக்கென மதிப்புரை எழுதித்தருமாறு கொடுத்த புத்தகம். தொப்புள்கொடி.

Monday, February 15, 2010

நந்திக்கடல் தாண்டி.. 3

 அலை துரத்தி வந்து கால்களைத் தழுவிச் சென்றது. உப்புக்காற்று வருடியது. காலையில் இனியவாழ்வு இல்லத்தில் எனது குரல் மீளுவதற்காக அவர்கள் பூசத் தந்த நாசியைத் துருத்திக் கொண்டிருந்த வேப்பெண்ணெய் வாசம் எப்போது என்னை விட்டு அகன்றதென்றே தெரியவில்லை. விடுதலை பற்றிய பேச்சும், மூச்சும் மனதை நிறைத்திருக்க அந்திக் கருக்கலில், மணலில் நடப்பது சுகமாக இருந்தது. கடற்படைத் தளபதி சூசை அவர்களின் அன்புக்கட்டளையை மீற முடியாதிருந்தது.

எமது சம்மதம் கிடைத்ததும் எமக்கான உணவை, நாம் கஸ்ரோவிடம் செல்வதற்கேற்ப விரைவில் தயாரித்து முடிக்கும் படி தனது முகாமுக்கு அறிவித்தல் அனுப்பி விட்டு. ரேகாவிடம், எம்மை அழைத்துச் சென்று, காட்ட வேண்டியவைகளைக் காட்டும் படி சொன்னார்.

சூரியன் மறைந்த பின், அந்த இருள் சூழ்ந்த கானகத்தில் என்ன பார்க்க இருக்கிறதென்று
ஜெனரேட்டர் ஒளி வெள்ளத்தில் அந்தச் சாகசப்பறவைகளைக் காணும் வரை எனக்கு விளங்கவில்லை.

ஒரு கணம் மனம் சிலிர்த்தது. உடலும் சிலிர்த்தது. அண்ணையின் அர்த்தத்துடனான ´சூசை எல்லாம் காட்டுவார்` என்பதன் பொருள் புரிந்தது. பெண்கள். அங்கு முழுக்க முழுக்கப் பெண்கள்தான் இருந்தார்கள். சும்மா இருக்கவில்லை. நடந்தார்கள். ஓடினார்கள். பாடினார்கள். மிக நுணுக்கமான தொழில்நுட்ப வேலைகளைக் கூடச் செய்தார்கள். அவர்களது ஒவ்வொரு அசைவிலும் ஒரு பிரமாண்டமான போர்க்கப்பல் உருவாகிக் கொண்டிருந்தது.

நம்ப முடியாதிருந்தது. துர்க்கா, அலை, கலை... என்று அழகிய பெயர்களுடன் அழகான, மென்மையான பெண்கள். ஏட்டிலும், பாட்டிலும், கதைகளிலும் வருகின்ற நளினப்பெண்கள் அங்கு வீரப்பெண்களாய் நடமாடிக் கொண்டிருந்தார்கள். மென்மைக்கு இலக்கணமானவர்கள் மனதில் வன்மையுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அழகுக்கு உவமானமானவர்கள் உறுதியின் வடிவமாய்ப் பிரகாசித்தார்கள். பொன்னகை தவிர்த்து புன்னகை பூத்திருந்தார்கள். . இடுப்பில் துப்பாக்கி சொருகியிருந்தார்கள். கழுத்தில் சயனைட் மாலை அணிந்திருந்தார்கள். எம்மை இன்முகத்துடன் வரவேற்றார்கள். மிக்சரும், சோடாவும் தந்து உபசரித்தார்கள்.

அவர்கள்தான், அந்தப் பெண்கள்தான், ஓரளவு முடிந்த நிலையில் இருந்த அந்தப் பிரமாண்டமான கப்பலைச் செய்தார்களாம். அது ஒரு பெரிய பள்ளத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கான தொழில்நுட்பச் சமாச்சாரங்களைக் கூட அவர்களே செய்து கொண்டிருந்தார்கள். வெளியில் வைத்து அதைச் செய்து விட்டு அந்தப் பெண்கள்தான் ஒன்றாகச் சேர்ந்து தூக்கி வந்து அங்கு வைத்தார்களாம்.

அவ்வளவு பிரமாண்டத்தை தூக்குவது என்பது எப்படிச் சாத்தியமாகும், என்று என்னுள் எழுந்த கேள்விக்கு நானே தேடிக் கொண்ட பதில் அவர்கள் மனஉறுதியும், மனபலமும்தான்.

ஐந்து நாட்கள், ஆறு நாட்கள்... என்று தொடர்ந்து தூங்காமலே இருந்து வேலை செய்வார்களாம். வேலை செய்யத் தொடங்கி விட்டால் தூக்கம் கண்களைத் தழுவுவதே இல்லையாம். தம்மை மறந்து விடுவார்களாம். ஆளுக்காள் பாடிக்கொண்டும், பேசிக்கொண்டும் வேலையில் இறங்கி விடுவார்களாம்.

கப்பல் சம்பந்தமான எல்லா வேலைகளும் முடிந்த பின் அந்தக் கப்பலை அவர்கள்தான் தூக்கிக் கொண்டு போய் கடலுக்குள் விடப் போகிறார்களாம். ´ஏலேலோ ஐலசா...` கோரசாகப் பாடிக் காட்டினார்கள். ஒரு சிறு கேள்வி கேட்டால் போதும். கப்பலின் ஒவ்வொரு பாகத்தையும், நுணுப்பத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக விளக்கத் தயாராக இருந்தார்கள். கப்பலுக்கான மாலுமிகளும் அவர்களேதானாம்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வளர்த்தெடுத்த அந்தப் பெண்கள் எல்லோருமே வாய்க்கு வாய் அண்ணை என்றும், அண்ணன் என்றும் உரிமையோடு பேசினார்கள். அவர் மேல் மிகுந்த மதிப்பும், பாசமும் வைத்திருந்தார்கள். தமிழீழம் ஒன்றே குறியாக இருந்தார்கள். அந்த மனவலிமையோடு செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். பெண்விடுதலை பற்றி அவர்கள் பேசினார்களா, எழுதினார்களா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதன் வடிவமாய் இருந்தார்கள்.

அண்ணையை முதல் தரம் மே 2002 இல் சந்தித்த போது “பெண்களிடம் எவ்வளவோ திறமைகள் இருக்கின்றன. அவர்களால் எத்தனையோ ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்ய முடியும். அவைகள் சமையல் அறையில் முடங்கி விடக்கூடாது என்பதற்காகவே எமது சமையற் கூடங்களில் ஆண்கள் மட்டுமே சமைக்கிறார்கள். பெண்களிடம் வேறு எத்தனையோ பொறுப்புக்களைக் கொடுத்திருக்கிறோம்.” என்றார்.

எண்ணுவதையும், சொல்வதையும் செயற்படுத்தி விடுகின்ற, தமிழீழத் தேசியத் தலைவரின் அந்தத் தன்மையை நந்திக்கடல் தாண்டி... முல்லைக்கடலருகே மீண்டும்  கண்டேன்.

புலம் பெயர்ந்த எம்மகத்துத் தமிழ்ப்பெண்கள் பலர் இன்னும் சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் மூழ்கி, தொலைக்காட்சிகளிலும், சமையலறைகளிலும் கண்கலங்கிக் கொண்டிருக்க அங்கு பெண்வலம் சமையல் புலத்தில் என்ற சரித்திரமே மாறியிருந்தது. வெண்கலன்களுடன் போராடிய அவர்களது கரங்கள் சுடுகலன்களுடனும், தொழில் நுட்பங்களுடனும்  விளையாடிக் கொண்டிருந்தன.. பெண்பலத்தை உணர்த்தினார்கள். ஆண்களால் மட்டும் முடியும் என்ற வார்த்தைகளையே ஒதுக்கி விட்டு பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு உதாரணமாக உயர்ந்து நின்றார்கள்.

வீரத்திலும், தியாகத்திலும், விடுதலை உணர்விலும் ஆண்களுக்கு, எவ்வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எமது பெண் போராளிகள் தமது வீரச்சாதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்ற தலைவரின் வார்த்தைகள் (தலைவரின் சிந்தனைகள்) காதில் ரீங்கரித்தன.

அவர்களிடமிருந்து விடைபெறவே மனம் வரவில்லை. அத்தனை சந்தோசமாக இருந்து எம்மையும் சந்தோசப் படுத்தினார்கள். அவர்களது தன்னம்பிக்கையும், உறுதியும், பெருமிதமும், அத்தனை பொறுப்பான வேலைகளின் மத்தியிலும் இன்முகத்துடன் எம்மை வரவேற்று, உபசரித்து, எம்மோடு அளவளாவிய பண்பும் எம்மை நியமாகவே வேறொரு உலகத்துக்கு அழைத்துச் சென்றிருந்தது. அவ்விடத்தை விட்டுப் போனபின்னும் அந்த இடமும், அந்தப் பெண்களும் மனதை விட்டு அகல மறுத்தார்கள்.

வெளியில்  வழிவழியே அடர் மரங்களின் கீழே போர்க்கப்பல்கள் ஆங்காங்கு ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. ரேகாவும் இன்னும் சிலரும் ஒவ்வொரு கப்பலினுள்ளும் எம்மை அழைத்துச் சென்று காட்டினார்கள். அந்தக் கப்பல்களின் மேற்தளத்துக்கு ஏணிகளில் ஏறி இறங்கும் போது எனக்குக் கால்கள் கூசின. பயமாக இருந்தது. ஆனால் அந்தப் பெண்களோ தன்னந்தனியாக கடலுக்குள் மின்னல் வேகத்தில் அக் கப்பல்களில் சென்று வருவார்களாம்.

“உள்ளுக்குள்ளையிருந்து இந்தக் கொம்பியூட்டரிலை பார்க்கிற பொழுது, எங்களை நோக்கி எதிராளி வருகிறதை நாங்கள் கப்பலுக்குள்ளை இருந்த படியே கண்டு தாக்குதல்களை நடத்துவோம்…”  ஒரு பெண் போராளி போர் முறைகளையும், தந்திரங்களையும் விளக்கினாள். அவ்வப்போது வேறு வேறு போராளிகள் வந்து எம்முடன் இணைந்து `நான் மொறிஸின் நண்பன், நான் மயூரனின் நண்பன்´ என்று சொல்லிக் கதைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அனேகமானோர் பருத்தித்துறை, வல்வெட்டித்துறைப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

சூசையின் முகாமுக்குச் சென்ற போது இருட்டி விட்டிருந்தது. வாசலில் அந்த இளம்போராளி நின்றான். சற்றுத் தளர்த்தப்பட்ட உடையுடன் கடற்கரையில் பார்த்தது போலவே பிஸ்ரோல், குண்டுகள், துப்பாக்கி சகிதம் நின்றான். கனிவான கண்களில் மெல்லிய புன்னகை.

உள்ளே சென்றதுமே எமக்கான உணவுகள் மேசைக்கு வந்தன. ஓடியோடிப் பரிமாறினார்கள். எல்லாம் கடலுணவுகள். தேங்காய்ப்பாலில் விளைமீன் சொதி, இடியப்பத்துடன்... மிகவும் சுவையாக இருந்தது. பரிமாறியவர்களில் பலர் எனது தம்பிமாரைத் தெரிந்தவர்கள். ´அக்கா, அக்கா..` என்று  அன்போடு பரிமாறினார்கள். எந்த இடர்பாடுகளின் மத்தியிலும் இன்முகத்துடன் வரவேற்று, உண்டி கொடுத்து உபசரிக்கும் தமிழருக்கே உரிய பண்பு நந்திக்கடல் தாண்டியும் வாழ்ந்து கொண்டிருந்தது.

எனது கணவரும், மூத்த மகனும் சூசையுடன் அரசியல், செயற்பாடுகள்... என்று பல்வேறு விடயங்களைப் பேசிய படியே சாப்பிட்டார்கள். எல்லோருக்கும் நன்றி கூறி வெளிமுற்றத்துக்கு வந்த பின்னும், வாசலடியில் நின்றும் போர் வியூகங்கள் பற்றியும், சரித்திரக் கதைகள் பற்றியும் அலசியும், விவாதித்துக் கொண்டும் நின்றார்கள். என்னால் அப்போதும் சரிவரப் பேச முடியாதிருந்தது. அவர்கள் கதைப்பதைக் கேட்டுக் கொண்டு நின்றேன்.

விடைபெறும் போது நன்கு இருட்டி விட்டிருந்தது. பத்து மணிக்கு மேலாகியிருந்தது. கஸ்ரோவிடம் அடுத்த நாள் வருவதாகத் தகவல் அனுப்பி விட்டு, மீண்டும் நந்திக்கடல் தாண்டி வெண்புறா செயற்கை உறுப்புத் தொழில் நுட்ப நிறுவனத்தை நோக்கிப் பயணிக்கையில் மனம், நிறைந்திருந்தது. எமது தமிழீழப் பெண்களின் உறுதியும், பலமும் கண்டு வியந்திருந்தது. கடற்படைத் தளபதி கேணல் சூசையுடனும், அங்கு சந்தித்த உறவுகளுடனும் பகிர்ந்து கொண்ட இனிய பொழுதுகளால் திளைத்திருந்தது. தமிழீழத்தின் வளர்ச்சியில் இறுமாந்திருந்தது.

சந்திரவதனா
12.2.2010


நந்திக்கடல் தாண்டி...1
நந்திக்கடல் தாண்டி... 2 

Monday, February 08, 2010

நந்திக்கடல் தாண்டி... - 2

முல்லைக்கடல் தனக்கேயுரிய அமைதி கலந்த ஆரவாரத்துடன் எம்மை வரவேற்றது. அலைகள் நிதானமாக எழுந்து, சரிந்து வந்து கரையைத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தன. வான் கடலோடு முட்டிக் கொண்டிருந்தது. சின்ன வயதில் பருத்தித்துறைக் கடற்கரையில் நின்று, எதிர்கரையைத் தொட்டுக் கொட்டிருக்கும் வானத்தை ஒரு தடவையாவது எட்டிப் பிடிக்க வேண்டும் என்று தீராத ஆவல் கொண்டு மனம் அலைந்த நாட்கள் சட்டென்று நினைவில் வந்து போயின.

கடற்படைத் தளபதி கேணல் சூசை அவர்கள் மணலிலேயே கதிரைகளும், மேசையும் போட்டு எமக்காகக் காத்திருந்தார். சொன்ன நேரத்தையும் விடத் தாமதமாகவே வந்திருந்தோம். மாலையாகிக் கொண்டிருந்ததால் சுட்டெரிக்கும் வெயில் இன்றி இதமான மெல்லிய குளிர்காற்று எம்மைத் தழுவியது. இன்முகத்துடன் சூசை எம்மை வரவேற்றார்.

“என்ன.. வீட்டை வாறனான்தானே என்றார்.” ம்.. எனக்கு அது தெரியாது. அவர் எனது வீட்டுக்கு வந்து போகும் காலத்துக்கு முன்னரே நான் புலம் பெயர்ந்து விட்டேன்.
“பருத்தித்துறைக்குப் போனால் உங்கடை ஆத்தியடி வீட்டுக்குப் போகாமல் நான் திரும்பிறேல்லை.” என்றார். அம்மாவையும் தங்கைமாரையும் நன்கு நினைவு வைத்திருந்தார். தம்பி மொறிஸை இந்திய இராணுவம் தேடத்தொடங்கிய காலத்தில் அம்மாவும், அப்பாவும், தங்கைமாரும் யாழ்ப்பாணத்துக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள். அதன் பின் தம்பி போகாத, ஸ்ரேசன் ரோட்டில் இருந்த அந்த யாழ்ப்பாண வீட்டுக்குக்  கூட தனது நண்பர்களுடன் சென்று அம்மாவைச் சந்தித்து அளவளாவி அம்மாவின் கைப்பதங்களைச் சுவைத்துச் செல்வாராம். கடற்படைத்தளபதி, கேணல் என்பதற்கும் அப்பால் எனது தம்பி மொறிஸின் நெருங்கிய நண்பனாக இருந்து எம்மோடு கதைத்தார்.

என்னால்தான் அதிகம் கதைக்க முடியாதிருந்தது. குரல் வெளிவர மறுத்தது. எனது கணவரும், பிள்ளைகளும்தான் கதைத்தார்கள். கதைத்துக் கொண்டிருக்கும் போதுதான் அவர் இயல்பிலேயே இனிமையாகப் பழகும் சுபாவம் கொண்டவர் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

வருண கிரண... பற்றி நான் கேட்டதும் முல்லைக்கடலின் அந்த எல்லையில்... என்று தொடங்கி போர் வியூகங்கள், திட்டமிடல்கள் என்று அவர் மிகவும் தெளிவாக விளக்கிய போது, வீடியோக்களில் அவரைக் களத்தில் பார்த்த ஞாபகம் வந்தது. அப்படியொரு தெளிவான விளக்கமான பேச்சு.

கதைத்துக் கொண்டிருக்கும் போதே அருகில் எங்கோ சூட்டுச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. மனம் அசௌகரியப் பட நாம் சற்றுக் குழம்பினோம். 'பயப்படாதைங்கோ. அது ஒண்டுமில்லை. பெடியள் சுட்டுப் பழகிறாங்கள். பிறகு உங்களைக் கூட்டிக் கொண்டு போய்க் காட்டுறன்" என்றார்.

அப்போது கரையில், வீதியில் நின்ற இன்னொரு வாகனத்தில் இருந்து ஒருவர் ஒரு பாத்திரத்துடன் இறங்கி வந்தார். நாம் வரும்போதே அந்த வாகனம் அவ்விடத்தில் நிற்பதை அவதானித்திருந்தேன். அதில்தான் சூசை அவர்கள் வந்திருக்க வேண்டும். கூடவே ரேகாவும் சிறு தட்டுக்களைக் கொண்டு வந்து மேசையில் எம்முன் வைத்து கரண்டிகளும் வைத்தான். பாத்திரத்தில் இருந்தது சில்லுக்கழி.

கடலும், வானும் இணைந்து உலகமே அதுவாய் ஒரு புறத்தை ஆக்கிரமித்திருக்க, பனைகள் மறுபுறம் நெடுத்திருக்க கடற்கரை மணலில் கதிரை போட்டமர்ந்து கடற்படைத் தளபதி சூசை அவர்களுடன் கதைப்பதிலேயே ஆனந்தித்திருந்த எமக்கு, அந்தச் சமயத்தில்  தித்திக்கும் சில்லுக்கழி பரிமாறப்படும் என்பது எந்தக் கனவுகளிலும் வந்திராத நனவு.

நியமாகவே சில்லுக்கழி தித்தித்தது. உளுத்தம்மாவும், தேங்காய்ப்பாலும் கலந்த வாசனையும், இதமான இனிப்பும் சேர்ந்து நாக்கைச் சப்புக் கொட்ட வைத்தது.

நாவுள்ள வரை மறக்க முடியாத அந்தச் சுவையுடன் சுடுபயிற்சி நடை பெறும் இடத்துக்கு மணலில் கால்கள் பதித்து நடந்தோம். வழி நெடுகிலும் ஆங்காங்கு மரங்களோடும், செடிகளோடும் மெய்ப்பாதுகாவலர்கள் துப்பாக்கிகளை ஏந்தியபடி நின்றார்கள். நாம் இருந்து அளவளாவியது வரை சற்றுத் தள்ளியே நின்ற ஒரு இளம் போராளி மட்டும் எங்களுடன் சூசையைப் பின் தொடர்ந்தான். அவனைப் பார்த்ததுமே இனம் புரியாத கனிவு மனதில். என் தம்பிமாரை ஞாபகப்படுத்தினான். மிகநேர்த்தியாக போராளிக்குரிய உடைகளை அணிந்து பிஸ்ரோல், குண்டுகள், துப்பாக்கி சகிதம் என் கண்களைப் பனிக்க வைத்தான்.

அவனைப் பார்த்துச் சிரித்தேன். அவன் கண்களில் மிகுந்த கனிவு தெரிந்தாலும் சிரிக்கக் கூடாது என்ற வைராக்கியம் கொண்டவன் போல மௌனமாகவே என்னைப் பார்த்தான். இதைப் பார்த்து விட்ட ரேகா “அக்காவைப் பார்த்து நீ சிரிக்கலாம். அக்கா எங்கடை ஆள்தான்” என்றான். அப்போதும் கூட அவன் வாய் இறுக மூடி, மௌனமாகவே தொடர்ந்தான். கனிவு நிறைந்த அந்தக் கண்கள் மட்டும் என்னைப் பார்த்து மிக மிக மென்மையாகச் சிரித்தன. மெதுமெதுவாக என் அருகில் நடக்கத் தொடங்கினான். அவன் தலையைத் தடவி ஆதரவாக இரண்டு வார்த்தைகளாவது பேச வேண்டும் என மனசு அவாப்பட்டது.

அவனது அம்மா, அப்பா, சகோதரர்கள் எல்லோருமே இந்திய இராணுவத்தினரால் அழிக்கப்பட்டு விட்டனர் என்று ரேகா மெதுவாக என்னிடம் சொன்னான். அவன் அப்போது குழந்தையாக இருந்தானாம். ரேகா எனது தம்பி மயூரனின் நண்பனாக இருந்ததாலோ என்னவோ எப்போதும் என்னோடு `அக்கா..´ என்றொரு அந்நியோன்னியத்தோடு பழகுவான். அவ்வப்போது ஏதாவது சிறுசிறு தகவல்களை என் காதில் போட்டு வைப்பான். என்னில் அத்தனை நம்பிக்கை வைத்திருந்தான்.

சுடுபயிற்சி நடைபெறும் இடத்தை நாம் வந்தடைந்ததும் பயிற்சியில் இருந்தவர்கள் சுடுவதை நிறுத்தி எம்மை வரவேற்றார்கள். எனது பிள்ளைகளுக்கு துப்பாக்கி இயங்கும் விதம் பற்றியும், இயக்கும் விதம் பற்றியும் சூசையும், அவர்களும் சிறு சிறு விளக்கங்கள் கொடுத்தார்கள். சிறிது நேரம் அங்கு பொழுதைக் கழித்த பின் ´கடலுக்குள் போய் போர்க்கப்பலைப் பார்த்து வருவோம்` என்றார் சூசை. போர்க்கப்பல் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நின்றது.

போராளிகளுடன் படகில் சென்ற போது மிக இறுக்கமாக இருந்த போராளிகள் கூட நட்போடு கதைக்கத் தொடங்கினார்கள். சிலர் கதைப்பதற்கு சங்கோஜப் பட்டாலும் சிரிப்பால் நட்பையும், மகிழ்வையும் உணர்த்தினார்கள்.

போர்க்கப்பலுக்குள் நின்று பார்த்த போது எம்மைச் சூழக் கடல். ஆக்ரோசமாக மேலெழும்பி, சுனாமியாக உயிர் குடிக்கக் கூடிய கண்ணுக்குத் தெரியாக புதிர்களையெல்லாம் தனது ஆழத்தினுள்ளே அமுக்கி விட்டு,  ஒரு வித அழகிய  லயத்தோடு அலைகளை அள்ளி வந்து கப்பலோடு மோதியது அந்தப் பெருங்கடல். அலைகளோடு இசைந்து இசைந்து எம்மைத் தாலாட்டியது கப்பல்.  ஊ.. ஊ.. என்ற ஓசையோடு வந்து எம்மைச் சீண்டியது காற்று. போர்க்கப்பலில் இருந்து குண்டுகள் எப்படி அனுப்பப் படுகின்றன, கப்பலுக்குள்ளான செயற்பாடுகள் என்ன, என்பது பற்றியெல்லாம் விளக்கிக் கொண்டிருந்தார் சூசை.

எனது பிள்ளைகளும் அதை இயக்கிப் பார்த்த போது அண்டவெளியே அதிர்ந்தது போன்ற பாரிய சத்தம் எம்மையும் அதிர வைத்தது. உடனேயே தூரத்தில், ஒரு குறிப்பிட்ட எல்லையில் நின்ற இலங்கை இராணுவமும் இரு குண்டுகளை வெடிக்க வைத்தது. நாம் கலவரப்பட்டோம். “அது சும்மாதான். தாங்களும் இருக்கிறம் எண்டதைக் காட்டுறதுக்கு... பயப்படாதைங்கோ” என்றார்கள் சூசையும், ரேகாவும்.

கரையில் இருந்து பார்க்கும் போது கவனத்துக்கு அவ்வளவாக எட்டாத தூரத்தில், மறைத்து நங்கூரமிடப்பட்டிருந்த ஒரு பெரிய கப்பலைக் காட்டினார் சூசை. அது இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்டதாம். முகத்தில் வெற்றிப்புன்னகை மிளிர்ந்தது. போராளிகளிகளின் முகங்களிலும் அந்த வீரச்செயலின் வெற்றிப்பிரதாபம் ஜொலித்தது.

காற்றின் ஓசையும், அலையின் சலசலப்பும் பெரு ஒலியெழுப்ப அதையும் விடச் சத்தமாகக் கப்பலுக்குள் கதைத்துக் கொண்டிருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. சூரியன் தன்னையோ, தன் கடமையையோ மறக்கவில்லை. அஸ்தமனத்துக்காய் விரைந்து கொண்டிருந்தான். வானம் சிவந்தது. கடலும் செந்நிறமாய் மின்னியது. கஸ்ரோவிடம் ஏழு மணிக்கு வருவதாகச் சொல்லியிருந்தோம். எனது கணவர், சொன்னபடி போய்விட வேண்டும் என்பதில் அவதானமாக இருந்தார்.

சூசை “நீங்கள் என்னட்டை வந்து இரவுச் சாப்பாட்டைச் சாப்பிட்டிட்டுத்தான் போகோணும்” என்றார். நாம் சங்கடப்பட்ட போது “கொஞ்சம் லேற்றாக வருவதாக கஸ்ரோவுக்கு அறிவிக்கிறேன்” என்றார்.

(தொடரும்)

சந்திரவதனா
4.2.2010


நந்திக்கடல் தாண்டி... 1
நந்திக்கடல் தாண்டி... 3 

Monday, February 01, 2010

நந்திக்கடல் தாண்டி...

 நந்திக்கடல் தாண்டி முல்லைக் கடற்கரையை நாம் சென்றடைந்த போது கடற்படைத் தளபதி கேணல் சூசை அவர்கள் மணலிலேயே கதிரைகளும், மேசையும் போட்டு எமக்காகக் காத்திருந்தார். இன்முகத்துடன் அவர் எம்மை வரவேற்ற விதம் என்னோடு ஒட்டியிருந்த களைப்பை அப்படியே களைந்து விட்டது.

ஐந்து நாட்கள்தான் இம்முறை வன்னியில் நிற்க முடியும். ஜேர்மனியிலிருந்து புறப்படும் போதே அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களுக்கு ´இம்முறை பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வருகிறேன்´ என்று மின்னஞ்சல் மூலம் என் வரவைத் தெரிவித்திருந்தேன்.

நாம் 22ந்திகதி ஐப்பசி மாதம் 2002 இல் வன்னியைச் சென்றடைந்த அன்று நோர்வே பேச்சு வார்த்தைக் குழுவினருடனான சந்திப்பு கிளிநொச்சி அரசியல் துறை அலுவலகத்தில் நடந்து கொண்டிருந்ததால் தமிழ்செல்வன் அவர்களால் உடனடியாக எம்மை வந்து சந்திக்க முடியவில்லை. ஆனாலும் தன் சார்பாக சுதா மாஸ்டரையும், மருத்துவத்துறை ரேகாவையும் அனுப்பி வைத்திருந்தார். அவர்களோடு டுபாய் பிட்டு அவித்துத் தந்த நிமலனும், புகழோவியனும் வந்து இணைந்து கொண்டார்கள்.
அடுத்தநாள் 23ந்திகதி கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்திருக்கும் வெண்புறா நிலையத்தில், நாம் தங்கியிருப்பது தெரிந்து எம்மைத் தேடி வந்த உறவுகளோடு நின்று கதைக்க முடியாதிருந்தது. அத்தனை பேர் வருவதும் போவதுமாக இருந்தார்கள். யாருடன் கதைப்பது என்று தடுமாற்றமாக இருந்தது. நாள் நகர்ந்ததே தெரியவில்லை.

இரவு வெண்புறா உறவுகளுடன் ஆறுதலாகக் கதைக்க எண்ணி முற்றத்தில் கூடினோம். மெல்லிய குளிர்ந்த காற்று எம்மைத் தழுவ மரங்களின் கீழ் கதிரைகள் போட்டு அமர்ந்து அந்த அன்பு உறவுகளுடன் பேசிக் கொண்டிருப்பது மிகவும் இனிமையானது. அந்தப் பொழுதில்தான் செஞ்சோலை ஜனனி வந்தாள். எனது குழந்தைகளை எத்தனையோ வருடங்களின் பின் சந்தித்த அவளின் முகத்தில் சந்தோசம் தவழ்ந்தது. அவளோடு இரண்டு வார்த்தைகள்தான் பேசியிருப்பேன். எதுவித முன்னறிவித்தலுமின்றி அரசியற் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் இனிய நட்புக் கலந்த சிரிப்புடன் வந்தார். முதல்நாள் வரமுடியாமற் போனதற்காக மன்னிப்புக் கேட்டார். தனியாக என்னை அழைத்து “அக்கா, நாளைக்கு உங்களுக்கு ஒரு இனிய சந்திப்பு இருக்கிறது“ என்றார். எனது பிள்ளைகள் அண்ணன் பிரபாகரன் அவர்களைச் சந்திக்க விரும்புகிறார்கள் என்பதை நான் முதலே மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தேன். அதுதான் அண்ணன் முக்கியமாகப் பிள்ளைகளைச் சந்திக்கப் போகிறார் என்றார்.

இம்முறை அண்ணையுடனான சந்திப்பு அரசியல் துறை அலுவலகத்திலேயேதான். அன்றும் ஒரு முக்கிய சந்திப்புக்காக வேறொரு இடத்தில் நிற்க வேண்டி இருந்ததால் குறிப்பிட்ட நேரத்தை விட அரைமணி நேரம் தாமதமாகவே அண்ணன் எம்மிடம் வந்து சேர்ந்தார். வந்ததும் தனது தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அந்த நேரம் பாலாண்ணையும் வன்னியில்தான் நின்றார். பாலாண்ணையுடன் கூடிய நேரத்தைச் செலவழிக்க முடியாதிருப்பதையிட்டு வருத்தம் தெரிவித்தார்.

அரசியற்துறை அலுவலகத்தின் முன் வெளிவிறாந்தையிலேயே நாம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சுக்கள் பல திசைகளிலும் விரிந்தன. எனது பிள்ளைகளுடனான அண்ணனின் நட்பான உரையாடல் என்னை வியக்க வைத்தது. வன்னியில் இருந்து கொண்டு உலகத்தையே அவர் புத்தகங்கள் வாயிலாகவும், படங்கள் மூலமாகவும் படித்துக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருப்பதை பிள்ளைகளுடன் அவர் பரந்து பட்டு பல்வேறு விடயங்களையும் கதைக்கும் போது புரிந்து கொண்டேன். அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் துப்பாக்கி ஏந்திய எமது வீரர்கள் நின்றிருந்தாலும் இறுக்கமான சூழ்நிலையோ, மனநிலையோ இருக்கவில்லை. மதிப்புக்குரிய மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு நண்பன் போல எம்மோடு பேசிக் கொண்டிருந்தார்.

மலேரியா எம்மைத் தொற்றிக் கொள்ளாதிருக்க எம் எல்லோருக்கும் ஒரு குளிகை தந்து உட்கொள்ள வைத்தார். எனது கணவரைத் தனியாக அழைத்துச் சென்று சில தனிப்பட்ட விடயங்களைப் பேசினார்.

எனது மூத்தமகனின் ஆர்வங்களையும், திறமைகளையும் கண்டு, உடனடியாக எங்கோ நின்ற தமிழேந்தி அவர்களை ஆட்களை அனுப்பி அழைத்து என் மகனுடன் கதைக்க வைத்தார். தமிழேந்தி அவர்களும் எனது மகனும் தனியாக அமர்ந்திருந்து அரசியலையும் தாண்டி இலக்கியம், சரித்திரம்.. என்று அளவளாவியது சுவாரஸ்யமானது.

அன்று அரசியல் துறை அலுவலகத்திலேயே எங்களுக்கு அருமையானதொரு பெரிய விருந்து. வெண்புறா உறவுகளில் சிலரும் எம்மோடு இணைந்திருந்தார்கள். மிகமிகச் சுவையான உணவுகள். நண்டு பிரமாதமாக இருந்தது. சமையற்கலையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் சமைத்திருந்ததை உணர முடிந்தது. அதை அவர்கள் அன்போடு பரிமாறிய விதம் இன்னும் இனிமையாக இருந்தது. சாப்பாட்டுக்கு மேல் வட்டில் அப்பம், பலாப்பழம், மாம்பழம் என்று... பல. எனது இரண்டாவது மகன் பலாப்பழத்தை மிகவும் ரசித்துச் சுவைத்துச் சாப்பிட்ட போது தமிழ்செல்வன் அவர்கள் தனது பலாப்பழத்தையும் அவனிடமே கொடுத்து விட்டார். அவர் ஓரிரு தினங்களில் பாங்கொக் செல்லத் தயாராக இருந்தார்.

சாப்பாட்டு மேசையிலும் கதைகள் பல்வேறு திசைகளிலும் விரிந்திருந்தன. எனது பிள்ளைகளின் ஆர்வம் நிறைந்த கேள்விகளுக்கெல்லாம் அண்ணை அலுக்காமல், சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். இம்முறை அண்ணையுடனான சந்திப்பு கடந்த மே மாதம் (வைகாசி-2002) சந்தித்ததை விட நீண்டதாக இருந்தது

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் ரேகாவிடம் சொன்னார் “நாளைக்கு இவர்களை முடில்லைக்கடலடிக்குக் கூட்டிச் செல்“ என்று.

எங்களிடம் சொன்னார் “சூசை எல்லாம் காட்டுவார்“ என்று

அது மிகவும் இனிமையானதொரு சந்திப்பு. சூசை என் தம்பி மொறிசுக்குப் பரிச்சயமானவர் என்பது மட்டுந்தான் எனக்குத் தெரியும்.

அன்று அதி காலையே புறப்பட்டு, முதலில் இனிய வாழ்வு இல்லத்துக்குச் செல்வதாகத்தான் தீர்மானித்திருந்தோம். போகும் போது வழியில் கஸ்ரோ அவர்களின் முகாமுக்கு அவசரமாகச் செல்ல வேண்டிய ஒரு தனிப்பட்ட தேவை வந்தது. அங்குதான் கஸ்ரோ அவர்களின் மெய்க்காப்பாளர்களில் ஒருவனான முத்தழகனைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பெயரைப் போலவே அழகானவன். துப்பாக்கி ஏந்திய அவன்தான் என்னை உள்ளே அழைத்துச் சென்றான். மௌனத்தால் பேசினான். அவசியம் ஏற்பட்ட போது மட்டும் முத்தென சில வார்த்தைகளை உதிர்த்தான்.

புறப்படும் போது அன்றிரவு தன்னிடம் கண்டிப்பாக வந்து போக வேண்டும் என்று கஸ்ரோ எங்களுக்குப் பணித்தார். நாமும் கண்டிப்பாக வருவதாகச் சொல்லி விட்டே புறப்பட்டோம். கஸ்ரோவுக்கு எனது கணவரையும், அவரது நகைச்சுவைகளையும் நன்கு பிடிக்கும். நாம் வந்திருக்கிறோம் என்ற போது வெண்புறா வரை வந்து வாகனத்தில் இருந்து இறங்காமலே எம்மோடு கதைத்து விட்டுச் சென்றார்.

இனிய வாழ்வு இல்லத்தில் எங்களுக்கு இனிய வரவேற்புக் கிடைத்தது. நாம் அவர்களுக்கெனக் கொண்டு சென்ற பொருட்களை அவர்கள் ஆசையுடனும், நன்றியுடனும் பெற்றுக் கொண்டார்கள். அவர்களுடன் உறவாடி அவர்களின் மதிய உபசரிப்பில் உளம் நிறைத்து நாம் விடைபெற்றோம். நாம் விடை பெறும் போது ஒரு சின்னப்பையன் ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம், ஓடி வந்து என்னைப் பார்த்து, தனது முகத்தை வட்டமாகச் சுற்றி... ஏதோ சைகை செய்தான். அவன் முகம் சந்தோசமாக இருந்தது. நான் புரியாது விழித்து போது அவனது ரீச்சர், “அக்கா, நீங்கள் நல்ல வடிவா இருக்கிறிங்கள்“ என்று சொல்கிறான் என்றா. வாய் பேசமுடியாத அந்தக் குழந்தையை அப்படியே என்னுடன் அள்ளி அணைத்த போது மனசு கரைந்தது.

இனியவாழ்வு இல்லத்தின் இன்னொரு பகுதியில் எட்டுச் சின்னஞ்சிறு குழந்தைகள் இருந்தார்கள். பெற்றோரை ஏதோ ஒரு வழியால் இழந்த அந்தக் குழந்தைகளைக் கொஞ்சி விட்டு, விடைபெற மனம் வரவில்லை. அவர்களுடனேயே இருந்து விடலாம் போல இருந்தது. ஒரு குழந்தை என்னோடு நன்கு ஒட்டிக் கொண்டது. நான் விடைபெறும் போது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியது. மனதும், கண்களும் கலங்க அங்கிருந்து புறப்பட வேண்டியிருந்தது.

அங்கிருந்து செஞ்சோலைக்குச் சென்றோம். செஞ்சோலை மிகவும் ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் இருப்பது போன்ற பிரமையைத் தோற்றுவிக்கும் படியாக சரியான தூரத்தில் இருந்தது. அங்கு அம்மா, அம்மா என்ற படி மழலைகள் ஜனனியோடு இணைந்திருக்க நாம் நீண்ட நேரம் ஜனனியுடன் பேசிக் கொண்டிருந்தோம். குழந்தை குயில் ஐனனியையே சுற்றிச் சுற்றி வந்தாள். அது ஒரு இன்பமான பொழுது.

ஜனனியிடம் விடைபெற்று முகிலன் பேஸ் நோக்கிப் பயணிக்கையில் வழியிலே 3பெண் போராளிகள் போய்க் கொண்டிருந்தார்கள். எமது வாகனத்தை ஓட்டி வந்தவர் நின்று அவர்கள் எந்த பேஸ் நோக்கிப் போகிறார்கள் என்பதை விசாரித்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டார். வழிநெடுக என்னோடு கதைத்துக் கொண்டு வந்தவர்கள் தமக்குச் சாப்பிட என்று வைத்திருந்த திராட்சைப்பழக் குலைகளோடு, அவர்கள் பற்றிய இனிய நினைவுகளையும் என்னிடம் தந்து விட்டு இடையிடையே இறங்கிக் கொண்டார்கள்.

முகிலன் பேஸ் அருகில் மருத்துவத்துறை ரேகா எமக்காகக் காத்திருந்தார். ரேகாவுடன் என்னால் பேசமுடியவில்லை. முதல்நாள் அண்ணையுடன் நிறையப் பேசி விட்டேனோ, என்னவோ தெரியவில்லை. சாப்பாட்டின் பின் அரசியல் துறை அலுவலகத்தில் மாங்காய் பறித்துச் சாப்பிட்டு விட்டு, வெண்புறா சென்று இளநீர் அருந்திச் சிறிது நேரத்தில் எனது குரல் மெதுமெதுவாக ஒலி இழந்து போகத் தொடங்கி விட்டது. ரேகாவைச் சந்தித்த போது முற்றிலுமாக நான் பேசுந்திறனை இழந்தவள் போல் ஆகியிருந்தேன்.

நந்திக்கடல் கடந்து கடற்படைத்தளபதி சூசை அவர்களைச் சந்திக்க என்று முல்லைக் கடல் நோக்கிப் பயணிக்கையில் பேச வரா விட்டாலும் ஆனந்தமாக இருந்தது

(தொடரும்)

சந்திரவதனா
28.1.2010


நந்திக்கடல் தாண்டி... 2
நந்திக்கடல் தாண்டி... 3

Monday, January 25, 2010

வெற்றி மனப்பான்மை - Written by எம்.ரிஷான் ஷெரீப்

வாழ்வின் எந்தவொரு கணத்திலும் நாம் தோல்வியடைய விரும்புவதில்லை. எந்தவொரு போட்டியிலும் வெற்றியைப் பெறுவதற்கும், எந்தவொரு இடத்திலும் முதலாவதாக, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கும், முன்னேறுவதற்கும் நாம் விரும்புகிறோம். இது தவறான எண்ணமல்ல. தான் ஒரு திறமை மிகுந்தவனாக ஆகவேண்டும், தன்னால் முடிந்த அளவு வாழ்வில் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும் என்ற இலட்சியத்தோடு முயற்சி செய்வது மிகவும் நல்ல விடயம்.

Sunday, January 10, 2010

குட்டி இளவரசன்

ஒரு நீண்ட உறைநிலையின் பின் மீண்டும் ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கான உந்துதல் எனக்குள் வந்திருந்தது. அப்போது நான் குட்டி இளவரசனை அரை மனதுடன்தான் கையில் எடுத்தேன்.

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite