Tuesday, December 02, 2014

நான் வாசித்தவற்றில் என்னை பாதித்தவை 2.12.2014

நிறைய வாசித்திருக்கிறேன் என்றுதான் எப்போதும் எனக்குள் ஒரு நினைப்பு. வாசிக்காதவைதான் நிறைய என்பது சில கட்டுரைகளை வாசிக்கும் போதும், சில சம்பவங்களைச் சந்திக்கும் போதும்தான் தெரிகிறது.

*  நான் எஸ். பொ வை இப்போதுதான் வாசிக்கிறேன். என் தங்கை எஸ். பொ என்றால் உயிரையே விடுவது போலக் கதைப்பாள். அப்படி என்ன அவரில் என்று யோசித்து விட்டு இருந்து விடுவேன். அவரது படைப்புகளில் நான் வாசித்தது என்றால் மிகமிகச் சொற்பமே! இப்போதுதான் தேடுகிறேன். கொஞ்சம் கொஞ்சம் வாசிக்கிறேன்.

1) நேற்று படுக்கையில் இருந்த படியே முகப்புத்தகத்தைத் திறந்த போது அருண்மொழிவர்மனின் இந்தக் கட்டுரை ´எஸ்பொ வாழ்ந்த வரலாற்றில் வாழ்ந்த நனவிடை` வாசிக்கக் கிடைத்தது. படுக்கையில் எனது கைத்தொலைபேசியில் வாசிப்பது என்பது சற்று அசௌகரியமானதுதான். சிறிய எழுத்துக்கள். ஆனாலும் வாசித்தேன்.

இப்போது சில நாட்களாக இப்படியான ஒவ்வொருவரின் கட்டுரைகளையும் தேடித்தேடியே எஸ்.போ என்ற ஒரு எழுத்தாளனை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் அவரது படைப்புகள் இணையவெளியில் குறைவாகவே உள்ளன.

 எஸ். பொ நூலகத்தில்

* சின்ன வயதில் தி. ஜானகிராமனின் பல கதைகளை வாசித்திருக்கிறேன். தொடராக வரும் போதே கூட வாசித்திருக்கிறேன். ஆனாலும் அப்போது சில விடயங்களிலான விளக்கங்கள் குறைவாகவே இருந்தன. இரவி அருணாச்சலம் என நினைக்கிறேன். முகப்புத்தகத்தினூடு தி. ஜானகிராமனை நினைவு படுத்தியிருந்தார். தேடியதில் வாசிக்கக் கிடைத்தவை.

2)  குழந்தைக்கு ஜுரம் (22.11.2014) வாசித்தேன்.
3)  சிறுகதை எழுதுவது எப்படி? – தி.ஜானகிராமன்  - 1969 இல் மகரம் என்பவர் தொகுத்தது.

கூடவே தி. ஜானகிராமன் பற்றிய, அவர் படைப்புகள் பற்றிய சிலவற்றையும் வாசித்தேன். அவைகளே ஒவ்வொரு கதைகள் போல மிகச்சுவாரஸ்யமாக அமைந்துள்ளன. மேலும் மேலும் வாசிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகின்றன. அவற்றில் உடன் என் நினைவுக்கு வருபவை

4) காலச்சுவட்டில் சுகுமாரன்  எழுதிய மோகமுள் - (தி. ஜானகிராமன்) மோகமுள் பற்றிய பதிவு - மோகப் பெருமயக்கு

* அம்மா வந்தாள் பற்றி குறிப்பிடத்தக்க பல பதிவுகள். அக்கதையை ஒரே ஒருவர் மட்டும் திட்டி நாகரிகமற்ற முறையில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். அது யாரென்பது ஞாபகத்தில் இல்லை. மற்றும் படி எல்லோருமே அதை மிகவும் ரசித்து, வாசித்து எழுதியிருந்தார்கள். அவைகளில் நான் வாசித்த சில

5) தி ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ வெங்கட் சாமிநாதன் எழுதியிருந்தார்.
6) அம்மா வந்தாள் - தி ஜானகிராமன்
7) அம்மா வந்தாள் (1) - சாருநிவேதிதா
8) தி.ஜானகிராமனின் – அம்மா வந்தாள்! நாவலின் மீள் விமர்சனம் - காலச்சுவடுக்காக சுகுமாரன் எழுதியிருந்தார்.

9) இவைகளோடு சிவமேனகை எழுதிய மூன்று தமிழ் சங்கங்களிலும் ஈழத்தவர்களின் பங்களிப்பு வாசித்தேன்.

10) நேற்று உஷா சுப்ரமணியனின் ஒரு சிறுகதை வாசிக்கக் கிடைத்தது. உஷா வலைப்பூக்கள் மூலம் ஏற்கெனவே அறிமுகமான ஒரு பெண் எழுத்தாளர். முன்னர் அவரோடு மின்னஞ்சல் தொடர்பும் இருந்தது. காலவோட்டத்தில் அத்தொடர்புகள் அற்றுப் போய் விட்டாலும் நினைவுகளில் இருந்து விட்டுப் போய் விடவில்லை. இலக்கியச் சிந்தனை யின் 1995 ம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகளின் தொகுப்பான ரத்தத்தின் வண்ணத்தில் புத்தகத்தில் உஷாவின் த்ரில் த்ரில் இருந்தது ஆச்சரியமான சந்தோசம். அக்கதை ஏற்கெனவே ஒக்டோபர் 1995 இல் ஆனந்தவிகடனில் பிரசுரமாகியுள்ளதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

11) இவைகளோடு எஸ். பொ வின் ´சடங்கு` பற்றிய சில பதிவுகளும் வாசிக்கக் கிடைத்தன. நான் இதுவரை வாசிக்காதவற்றில் இந்த சடங்கு நாவலும் ஒன்று. சுவாரஸ்யம் குன்றாத கதையாக இருக்கும் என்ற நினைப்பில் இணையம் முழுக்க தேடினேன். கிடைக்கவேயில்லை. 

Monday, December 01, 2014

இணைபிரியாத இளஞ்சோடிகள்

அன்றொரு நாள் அவர்கள்
இணைபிரியாத இளஞ்சோடிகள்
கை கோர்த்தும்
உதடு உரசியும்
இடை வளைத்தும்
இறுக அணைத்தும்
சுற்றியுள்ளவர்களை
பொறாமைப் படுத்திக் கொண்டிருந்தார்கள்

பின்பொரு நாள் அவர்கள்
பிரியப் போவதாக
பிரஸ்தாபித்தார்கள்

இன்றும் அவர்கள்
கை கோர்த்தும்
உதடு உரசியும்
இடை வளைத்தும்
இறுக அணைத்தும்
சுற்றியுள்ளவர்களை
பொறாமைப் படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்
வேவ்வேறு துணைகளுடன்...

சந்திரவதனா
1.12.2014

Thursday, November 20, 2014

சில வாரங்களுக்குள் நான் வாசித்தவற்றில் என்னை பாதித்தவை 20.11.2014

சிலரின் புனைவுகளைக் கண்டு நான் வியப்பதுண்டு. வாசித்துப் பல நாட்களாகியும் அக்கதையையோ கதையின் மாந்தர்களையோ மறக்க முடிவதில்லை. சிலரது கதைகளை வருடங்கள் பலவாகியும் மனதிலிருந்து அகற்ற முடிவதில்லை.

சில வாரங்களுக்குள் நான் வாசித்தவற்றில் என்னை ஏதோ ஒரு வகையில் பாதித்த சில இங்கே -

1) சயந்தன் எழுதிய சற்றே நீளமான ஒருசொட்டுக் கண்ணீர் சிறுகதை. காலச்சுவடில் பிரசுரமாகியிருக்கிறது. இதை இரண்டு நாட்களாக (18-19.11.2014) வாசித்தேன்.

ஒரு ஈழவிடுதலைப் போராளியை மையப்படுத்திய கதை. போராட்ட காலத்தின் அனுபங்கள் சில விபரிக்கப் பட்டுள்ளன. கண்டிப்பாகப் பதிந்து வைக்க வேண்டிய தகவல்கள். போரின் பின்னான போராளியின் புலம்பெயர்வும், மனஉளைச்சல்களும் என்று ஒரு காத்திரமான கதை. ஈழத்துப் பேச்சுத்தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் போது, பேசுவதை சிற்சில இடங்களில் எழுத்துத் தமிழுக்கு மாற்றியுள்ளமை கதையில் காணப்படும் ஒரு குறையாகவே கருதுகிறேன். (உதாரணமாக - "நீங்களும் இயக்கத்திலிருந்து வந்தவர்தானே. கேட்கிறேன் என்று குறை விளங்காதீர்கள். அமைப்பிலிருந்து செத்துப்போகாத ஒருவனால் உயிரோடு எப்படி இந்தச் சனங்களின் நடுவில் நிற்கமுடிகிறது.." இப்படித் தொடர்கிறது. இது சாதாரணமாக நாம் எழுதும் தமிழ்தான். ஆனால் கதையின் மற்றைய பகுதிகளில் சாதாரணமாக எழுதப்பட வேண்டியவையே பேச்சுத் தமிழில் எழுதப் பட்டுள்ளன. அது நன்றாகவும், இயல்பாகவும்தான் இருக்கிறது. ஆனால் அதனோடு இப்படியான வசனங்கள் ஒட்டாது நிற்கின்றன.) அதையும் சயந்தன் கவனத்தில் கொண்டிருந்தால் ஒரு அருமையான நெடுங்கதை.

2) கே.என்.சிவராமன் எழுதிய தேங்க்ஸ் (சிறுகதை) - தினகரன் தீபாவளி மலரில் பிரசுரமானது.  – நேற்றுத்தான் (19.11.2014) வாசித்தேன்.

அழகிய காதல்கதை

3)அ. முத்துலிங்கம் எழுதிய நான்தான் அடுத்த கணவன் - இதை சிலவாரங்களுக்கு முன் வாசித்தேன். காலச்சுவடில் பிரசுரமாகியிருக்கிறது.

அ. முத்துலிங்கத்தின் வழமையான எள்ளல் கலந்த எழுத்துக்களுடன் கூடிய சிறுகதை.

4) அ.முத்துலிங்கத்தின் 'கோப்பைகள்'  - இதுபற்றி கிரிதரன் எழுதியிருந்ததால் தேடி எடுத்து வாசித்தேன். விகடன் தீபாவளி மலரில் பிரசுரமானது.


5) சாதனா எழுதிய அக்கா சிறுகதை. ஆக்காட்டி இதழில் வெளியாகியுள்ளது.

இந்த எழுத்து உத்தி எனக்குப் பிடித்திருந்தது. கொஞ்சம் ஷோபாசக்தியின் எழுத்தின் சாயல். கொஞ்சம் பிறமொழிக்கதைகளின் சாயல். நல்ல கதை.

6) ஷோபாசக்தியின் எழுச்சி சிறுகதையையும் வாசித்தேன்.

மாறுபட்ட இவரின் எழுத்தின் உத்தி வாசிக்கத் தொடங்கி விட்டால் நிறுத்த முடிவதில்லை.

7) ஷோபாசக்தியின் தங்கரேகை சிறுகதை சிலவாரங்களுக்குள் நான் வாசித்தவற்றில் ஒன்று.

8)  கருணாகரமூர்த்தியின் வடிவான கண்ணுள்ள பெண் வாசித்தேன். இவரின் எழுத்துக்களில் இன்னொரு விதமான உத்தி. பொய்யோ, மெய்யோ என்று தெரியாமலும் மெய்தான் என்பது போன்றும் பிரமையை ஏற்படுத்தக் கூடிய கதைகள். எதுவாயினும் கதை சார்ந்த இடத்தின் பலதகவல்களையும் எமக்குத் தந்து விடுவார். இக்கதை இவரின் இடை கதை போல இனிப்பான கதை.

9) தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் (சிறுகதை)

10) தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய அனந்தசயனம் காலனி (சிறுகதை)

11) சிறீவத்சன் (என். சுப்பிரமணியன்) எழுதிய வேறு நதியில் அந்த ஓடம் (இலக்கியச் சிந்தனை - 1995 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகளின் தொகுப்பான ரத்தத்தின் வண்ணத்தில் இருந்து )

12) இவைகளோடு இன்னொரு பேய்க்கதை வாசித்தேன். அருமையாக எழுதப் பட்டிருந்தது. அதை எந்தத் தளத்தில் வாசித்தேன். யார் எழுதியது என்பதெல்லாம் ஞாபகத்தில் இல்லை.

வாசிப்பது சுகமானது. வாசிப்பது தவம் போன்றது.

ஒரு வட்டத்துக்குள்ளேயே ...

நாங்கள் பல சமயங்களில் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறோம். வெளியில் எட்டிப் பார்க்கும் போதுதான் தெரிகிறது எங்களைச் சுற்றி எத்தனை சந்தோசங்கள் உள்ளன என்று.

Tuesday, November 18, 2014

Crailsheimer Str - 17.11.2014

ஐந்து நிமிடங்களில் போகக் கூடிய எனது வேலைத்தளத்துக்கு நேற்று 50 நிமிடங்கள் தேவைப்பட்டன. 15 நிமிடங்கள் முதலே வெளிக்கிட்டிருந்தேன். எனது சிறுவீதியைக் கடந்து பெரிய வீதிக்குப் போன பொழுதுதான் நிலைமை சரியில்லை என்பது தெரிந்தது. அடுக்கடுக்காய் வாகனங்கள். 15 நிமிடங்கள் இருக்கின்றனதானே, போய் விடுவேன் என நினைத்தேன். இல்லை. ஆமை அதை விட வேகமாக நகரும் என்று தோன்றியது. எனது வேலை நேரத்தையும் தாண்டி பத்து நிமிடங்கள் போய் விட்டன.

எனது பொறுப்பாளருக்கு அறிவித்தாக வேண்டும். கைத்தோலைபேசியை ஒருவாறு வெளியில் எடுத்து விட்டுப் பார்த்தேன். என் பக்கத்தில் பொலிஸ்கார் ஒன்றும் என்னோடு சேர்ந்து ஊர்ந்து கொண்டிருந்தது.இருக்கிற ரென்சனுக்குள் இது வேறு. 

கைத்தொலைபேசியில் பேசப் போய் தண்டம் கட்ட வேண்டி வரலாம். என்ன செய்வது என்று யோசிக்கையில் இன்னும் ஐந்து நிமிடங்கள் ஓடிவிட்டன.
எப்படியும் அறிவித்தாக வேண்டும். என்ன செய்யலாமென யோசித்து.. கைத்தொலைபேசியை பக்கத்து இருக்கையில் வைத்து ஒரு குறுஞ்செய்தி எழுதினேன். எழுதும் போது பயமாக இருந்தது. பொலிஸ் காணலாம். நகரும் போது முன் காருடன் இடிபடலாம். பின் கார் வந்து இடிக்கலாம். இருந்தும் `traffic இல் நிற்கிறேன். விரைவில் வந்து விடுவேன்´ என்று எழுதி பொறுப்பாளருக்கும், சக வேலைத்தோழியருக்கும் ஒருவாறு அனுப்பினேன்.

அதன்பின் பாதி ரென்சன் குறைந்தது போன்ற உணர்வு.

என்ன நடந்திருக்கும். ஏனிந்த தாமதம் எதுவும் புரியவில்லை. அப்படியொரு நிலை முன்பு ஒரு போதும் அந்த வீதியில் வந்ததும் இல்லை. ஏதாவது பாரிய விபத்தாக இருக்குமோ று பலதையும் மனம் சிந்தித்தது. பொலிஸ் கார்கள் பின்னும், முன்னும், பக்க வாட்டிலும் என்று சேர்ந்து ஊர்ந்தன.

50 நிமிடங்கள் கழித்து வேலைத்தளத்தை அடைந்த போது, என் தவறு என்று எதுவும் இல்லையெனினும் மனதுள் ஒரு குற்றஉணர்வு. ஒரு பதட்டம். அவசரமாக உள் நுழைந்தேன்.

ஆச்சரியமாக இருந்தது. ஒருவருமே அங்கில்லை. என்ன, ஏது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் ஒவ்வொருவராய் இன்னும் அரைமணிநேரம், ஒருமணி நேரம் என்று கழித்து வந்தார்கள்.
அதன் பின்தான் பொறுப்பாளர் வந்தார். அவரும் இடையில் எங்கோ மாட்டுப்பட்டிருந்தாராம்.

குறிப்பிட்ட ஒரு வீதி ஒரு பெரிய திருத்தத்துக்காக மூடப்பட்டு விட்டதாம். அதனால் மற்றைய வீதிகள் எல்லாமே நிரம்பி வழிகின்றனவாம். பொறுப்பாளர் சொன்ன போதுதான் அந்தத் திருத்தம் பற்றியும், பாதையடைப்பு பற்றியும் செய்தித்தாளில் வாசித்தது ஞாபகத்தில் வந்தது. ஆனாலும் அது இத்தகைய பாதிப்பைத் தரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

இன்னும் இரண்டு கிழமைக்கு இதே பல்லவிதான்.

Monday, November 17, 2014

வாசிப்பது சுகமானது

தினமும் எவ்வளவோ வாசித்தாலும், முன்னர் போன்றதான வாசிப்பின் அளவு இன்றைய காலகட்டத்தில் குறைந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றும்.

இன்றும் நேற்றுமாக வாசித்தேன் என்று மனதுக்குள் திருப்திப்பட்டுக் கொள்ளக்கூடிய சில படைப்புகளை வாசித்தேன்.

தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய
1) ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் (சிறுகதை)
2) அனந்தசயனம் காலனி (சிறுகதை)

சிறீவத்சன் (என். சுப்பிரமணியன்) எழுதிய
1) வேறு நதியில் அந்த ஓடம் (இலக்கியச் சிந்தனை - 1995 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகளின் தொகுப்பான ரத்தத்தின் வண்ணத்தில் இருந்து )

இவைகளோடு ஜா. மாதவராஜ் எழுதிய சே குவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து...) வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
சே குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து.... - See more at: http://www.noolulagam.com/product/?pid=17965#details
சே குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து.... - See more at: http://www.noolulagam.com/product/?pid=17965#details
சே குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து.... - See more at: http://www.noolulagam.com/product/?pid=17965#details
சே குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து.... - See more at: http://www.noolulagam.com/product/?pid=17965#details


வாசிப்பது சுகமானது!

சந்திரவதனா
17.11.2014

Tuesday, November 04, 2014

தொடுதல்

மென்மையான தொடுதல்களின்
உன்னதம் தெரியாதவர்கள் எம்மில் பலர்.
கணவன் மனைவியர் கூட
கட்டிலில் மட்டுமே தொட்டுக் கொள்பவர்களாய்..

சந்திரவதனா
4.11.2014

Monday, October 13, 2014

மழை

மழை பிடிக்கும் என்பதால்
குடை பிடிப்பதில்லை

சந்திரவதனா
11.10.2014

Wednesday, October 08, 2014

பிரியாவிடை

நேற்று
அவளைக் கட்டியணைத்து
கண்ணீர் வடித்து
Sekt  உடைத்து
துக்கம் கொண்டாடினார்கள் அவர்கள்!
23 வருடங்கள் ஒன்றாக வேலை செய்தவள்
போகிறாள் என்று

இன்றும் கொண்டாடினார்கள்
Red Wine உடைத்து!
அவள் போய் விட்ட சந்தோசத்தை!

சந்திரவதனா
8.10.2014

Wednesday, October 01, 2014

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்

Thileepan & Me
இன்று எனது மகன் திலீபன் புதியபதவியில் அமர்கிறான். எத்தனையோ இடர் நடுவேயும் எனக்குள் சந்தோசஅலை முட்டி மோதிக்கொண்டே இருக்கிறது.

நாம் இங்கு ஜேர்மனியில் வந்திறங்கிய போது திலீபனுக்கு ஒன்பது வயதுகள்தான் நிரம்பியிருந்தன. அந்த வயதே அவனுக்கு ஒரு பிரச்சனையாக இருந்தது. குழந்தையும் அல்ல. வாலிபனும் அல்ல. இடைப்பட்ட வயதில் இன்னொரு நாட்டோடு ஒன்ற முடியாது மிகவும் அவதிப்பட்டான். மனதால் நொந்தான். விரக்தி அவனோடு கூடவே தொடர்ந்தது. எமது நாட்டுக்குத் திரும்பி விட வேண்டுமென்பதே அவனது குறியாக இருந்தது.

மற்றைய எனது இரு குழந்தைகளும் வயதில் குறைந்தவர்களாக இருந்ததால் அவர்களிடம் இவ்வளவு தூரமான பாதிப்பு இருக்கவில்லை. அவர்கள் விளையாடிக் கொண்டு திரிந்தார்கள். அம்மாவும், அப்பாவும் அருகில் இருந்தால் போதும் என்ற மாதிரி வாழ்ந்தார்கள்.

ஆனால் திலீபன் ஊர் நினைவுகளை இறக்கி வைக்கவும் முடியாமல், ஜேர்மனிய வாழ்வோடு ஒட்டவும் முடியாமல் மனதுக்குள் மிகவும் போராடினான். வந்த உடனேயே 3ம் வகுப்பில் சேர்ந்ததால் மொழியோடும் போராடினான்.

இன்று அவன்தான் ஒரு பொறுப்பாளர் பதவியில் அமர்கிறான்.

Bausparkasse Schwäbisch Hall
இன்று அவன் கடமையாற்றும் Bausparkasse நான் வந்த காலத்தில் எனக்கு கனவுமாளிகை போலத்தான் தோற்றமளித்தது. அந்த வாசலை மிதிப்பதே சாத்தியப்படக் கூடிய ஒன்றாக எனக்கு அப்போது தெரியவில்லை. அங்கு யாருக்காவது வேலை கிடைப்பது என்பது சுலபமானதொன்றல்ல. எத்தனையோ விதமான, எத்தனையோ பேருக்கு முன்னிலையிலான பரீட்சைகளின் பின்னரே அதற்குள் நுழைய முடியும். நுழைந்தவர்களும் ஆறுமாதங்களுக்குள் சுலபமாக வெளியே அனுப்பப் பட்டு விடுவார்கள்.

அங்கு எனது மகனுக்கு வேலை கிடைத்த போதும் சரி, பின்னர் நான் அங்கு போய் அவனைச் சந்தித்த பொழுதுகளிலும் சரி எனக்குள் ஒருவித பிரமை ஏற்பட்டதுண்டு.

அந்த வங்கியைக் கடந்துதான் தினமும் வேலைக்குச் செல்வேன். இங்கு என் மகனும் வேலை செய்கிறான், அதுவும் ஒரு நல்லதொரு பதவியில்.. என்னும் நினைவில், ஒவ்வொரு பொழுதிலும் மனதுக்குள் இனம் புரியாத பெருமையும், சந்தோசமும் ஊற்றெடுக்கும்.

ஆனால் அவனுக்கு அது போதவில்லை. அதை விட உயர வேண்டும் என்ற அவா. அதற்காக அவன் செலவுசெய்தது கிட்டத்தட்ட இரண்டு வருடப் பொழுதுகள். பரீட்சை, பரீட்சை, பரீட்சை.

ஒரு பொறுப்பாளனாவதற்கு அவர்கள் செய்த பரீட்சைகள் பல. அறிவு, ஆளுமை, பொறுமை, நிர்வாகத்திறன், சினேகத்தன்மை,.. என்று எத்தனையோ விதமான சோதனைகள். சில நாட்களில் ஒரு நாள் முழுவதும் பல பெரியவர்களின் நடுவே நின்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுக்க வேண்டும். சில நாட்களில் ஒவ்வொரு விதமான வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளின் போதும் எப்படி அவர்களைச் சமாளிப்பது என்பதை நடித்துக் காட்ட வேண்டும். இப்படி எத்தனையோ!

அவனது அயராத உழைப்பும் , முயற்சியும், தன்னம்பிக்கையும் இன்று அவனை இன்னும் சில படிகள் உயர்த்தியுள்ளன.

Bausparkasse யில் ஒரு பிரிவுக்கு இன்றிலிருந்து அவன் பொறுப்பாளன். பெரிதுவக்கிறது மனது.

சந்திரவதனா
1.10.2014

Thileepan at work place 


Monday, September 22, 2014

ஓர் அசாதாரண நாள் (18.9.2014)

உடற்பயிற்சி நிலையத்தில் இருந்து வெளியில் வந்த போது வெயில் நன்கு எறித்தாலும், மெல்லிய குளிர்ந்த காற்று உடலைத் தழுவியது. அருகில் உள்ள உணவகத்தின் முன் பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் சாப்பிட்டு முடித்து ஐஸ்கிறீம் சுவைத்துக் கொண்டிருந்தார்கள். எனக்கும் வயிற்றைக் கிள்ளியது. வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வேலைக்குப் போக வேண்டும்.

மனசு அவசரப்பட்டது. கால்கள் விரைந்தன. பேரூந்துத்தரிப்பிடத்தைத் தாண்டும் போது முகஸ்துதிகளும், நட்பார்ந்த சிரிப்புகளும் மனதுக்கு இதமாக இருந்தன.

வழமை போலவே  இலங்கைத் தமிழன் ஒருவன் குப்பைவாளிக்குள் வெற்றுப் போத்தல்களைத் தேடிக் கொண்டிருந்தான். அவனை அந்தக் கோலத்தில் காணும் போதெல்லாம் மனசு கொஞ்சம் சங்கடப்படும். விற்றால் அவனுக்கு ஒரு போத்தலுக்கு 25சதங்கள் கிடைக்கும்.

அவனையும் தாண்டி வீதியை அண்மிக்கும் பொழுதுதான் அவ்விடம் சற்று அசாதாரண நிலையில் இருப்பதை உணர்ந்தேன். நான்கைந்து பெண்கள் சூழ்ந்து நிற்க ஒரு பெண் ஒரு ஆடவனை பட்டம் விடுவது போல ஒரு கையில் இழுத்துப் பிடித்து வைத்திருந்தாள். அவனும் வலித்துக் கொண்டு ஓடுவதற்கு தயாரானவன் போல இழுத்துக் கொண்டு நின்றான். குளிர்காற்று அவனை ஒன்றுமே செய்யவில்லை. முகமெல்லாம் வேர்த்து ஊற்றிக் கொண்டிருந்தது. கலவரம் படர்ந்திருந்தது.

என்ன நடக்கிறது என்று அனுமானிப்பதற்கு எந்த அவகாசமும் எனக்குக் கிடைக்கவில்லை. திடீரென அந்தப் பெண்ணின் கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடியவன் சட்டென்று நடுவீதியில் மல்லாக்காகப் படுத்தான். படுத்தான் என்பததையும் விட விழுந்தான் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

அருகே கைக்குழந்தையுடன் நின்ற ஒரு இளம்பெண்ணைப் பார்த்து “என்ன நடக்கிறது இங்கே?“ என்றேன்.

“சாகப் போகிறானாம். வாழ இனி விருப்பமில்லையாம். பொலிசுக்கு அறிவித்து விட்டோம்...“ அவள் சொல்லி முடிக்கவில்லை. வேகமாக வந்த கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாத குறையாக கிறீச் சத்தங்களுடன் அவன் முன்னே வரிசையாகத் தரித்தன.

முதல் காரில் இருந்தவன் காரை விட்டு இறங்கி ஓடி வந்தான். அவனை அழுங்குப் பிடிபிடித்து இழுத்து வந்து ஒரு படியில் இருத்தி “என்ன பிரச்சனை?“ என்று கேட்டான். 30 - 35 வயதுகள் மட்டுமே மதிக்கத்தக்க அந்த ஆடவன் “நான் சாகப்போகிறேன். என்னைச் சாகவிடுங்கள்.. “ என்று உச்சாடனம் செய்து கொண்டே இருந்தான்.

இப்போது பிடித்திருப்பவனின் பிடியிலிருந்து அவன் மீண்டும் வீதிக்கு ஓட முடியாது என்பது திடம். எனக்கும் அவசரம். நான் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன். இல்லை விரைந்தேன்.

பத்திரிகையில் அவன் பற்றிய செய்தி வரும் என நினைத்தேன். இன்று வரை இல்லை. அங்கு நின்றிருந்த பெண்கள் எவரும் எனக்கு முன் அறிமுகமானவர்கள் அல்லர். ´அவன் இப்போது எப்படி இருக்கிறான்?´ என்று யாரையும் கேட்க முடியவில்லை.

மனசுக்குள் அந்த ஆடவனின் முகம் உறுத்திக் கொண்டே இருந்ததால் எனது மகனைத் தொடர்பு கொண்டு “இப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஏன் அது பற்றி எதுவுமே பத்திரிகையில் வரவில்லை? “ எனக் கேட்டேன்.

“தற்கொலை சம்பந்தமான விவரணங்கள் எதுவும் முடிந்தவரை எமது பத்திரிகையில் வராமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எமது பத்திரிகையால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்பட்டு விடக் கூடாது“ என்றான்.

சந்திரவதனா
22.9.2014

Wednesday, September 10, 2014

வடை

வடையைப் பொரித்துத்தானே சாப்பிடுகிறோம்.
பிறகேன் வடையைச் சுடுவதாகச் சொல்கிறோம்.

ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாள்......

Theerans Drawing


சில வாரங்களின் முன் என் பேரன் தீரன் வரைந்து தனது மேசையில் அடுக்கி வைத்திருந்தவற்றுள் நான் கண்டெடுத்தது. ஒன்று பாட்டாவாம் (எனது கணவர்) மற்றையது தானாம். அவன் வரைந்தவற்றில் அதிகமானவற்றில் பாட்டாவும், அவனும்தான் இருந்தார்கள். ஆண் குழந்தைகள் அப்பாவுக்கு அடுத்த படியாக, அப்பாவின் தந்தையைத்தான் தமது model ஆக எடுக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது அவனது செயற்பாடுகள்.

ரசனைகள் பலவிதம்

அன்று ஒரு குடும்பச் சந்திப்பு.
வழமையாக எனது கழுத்தோடு இருக்கும் சங்கலியுடனேயே அந்நிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.சிரிப்பும், சந்தோசமும் கலகலக்க பழைய நினைவுகளுடனும், புதிய சங்கதிகளுடனும் அளவளாவிக் கொண்டிருந்தோம்.

என் உறவுகளில் ஒருத்திதான் எனது கழுத்தில் இருந்த சங்கிலியைப் பார்த்து “எங்கே வாங்கினனீங்கள்? மிகவும் அழகாக இருக்கிறது. உங்களுக்கு நல்ல பொருத்தமாகவும் இருக்கிறது“ என்றாள். பல தடவைகள் அந்தச் சங்கலியுடன் அவளைச் சந்தித்திருந்தேன். இன்று என்ன பிரத்தியேகமாகச் சொல்கிறாள் என்ற நினைவு மனதுள் எழுந்தாலும் வார்த்தைகளால் என்னைச் சந்தோசப் படுத்திய அவளுக்கு நன்றி கூறி விலகிய அடுத்த கண்த்தில் இன்னொரு உறவுப்பெண் எனது சங்கிலியை உற்றுப் பார்த்தாள். “ஏன் இப்பிடிப் போட்டிருக்கிறீங்கள்? இதுக்கு ஒரு நல்ல பென்ரன் வாங்கிப் போட்டிருந்தீங்களென்றால் வடிவாய் இருந்திருக்கும்“ என்றாள்.

சாந்தினி வேலாயுதம்பிள்ளை

நீங்கள் சில வருடங்களாகவே தேடிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென உங்கள் முன் வந்து தன்னை உங்களுக்கு அறிமுகம் செய்து கொண்டால், உங்களுக்கு எப்படி இருக்கும்?

அப்படியொரு அதிசயமான சந்தோசம் எனக்குத் திடீரென்று கிடைத்துள்ளது.

என்னோடு மூன்றாம் வகுப்பு வரை படித்த எனது ஊரைச் சேர்ந்த சாந்தினியின் Shanthi Balasuriyar நட்பு, மனதுக்குள் தேடிக் கொண்டேயிருந்தால் என்றாவது ஒருநாள் கிடைப்பார்களோ, என்று எண்ணும் படியாக, எனக்குள் இனம் புரியாத ஒரு மகிழ்வையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பரிசுப்பொருட்களை நான் மிகவும் நேசிக்கிறேன். யார் அன்போடு தந்தாலும் அதைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருப்பேன். இவ்வருடக் கோடைவிடுமுறையில், இங்கிலாந்து விஜயத்தின் போது என் பேத்தி சிந்து தந்த அன்பு கலந்த வரவேற்புப் பரிசு இது

Sinthu´s Drawing — in Slough, United Kingdom. 8.8.2014

Wednesday, July 23, 2014

100,000€ க்கள்

இன்று தற்செயலாக  எனது ஜேர்மனிய நண்பி லியானே யைச் சந்தித்தேன். கடந்த வருடம் எழுதிய அவள் பற்றிய ஒரு குறிப்பு இது.

லியானே மிகவும் மனமுடைந்து போயிருந்தாள். அவளது கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருந்தது.

அவன் முன்னரும் சில தடவைகள் வேறு வேறு பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பதற்கான சந்தர்ப்பங்களும், சாத்தியங்களும் வெறும் சந்தேகங்களுடனும், சண்டைகளுடனும் முடிந்து முடிந்து வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது ஆதாரபூர்வமான சில தடயங்கள்  சாட்சியங்களாக, அவள் தாங்கொணாத் துயரில் தவித்தாள்.

மூன்று குழந்தைகளின் தேவைகள், வேலைகள் போன்றவற்றிற்கு மத்தியில் மனஆறுதலுக்கு நண்பிகள் சிலருடன் பேசினாள். விடயங்களைச் சொன்னாள். அப்படியெதுவுமில்லை அவன் தன்னிடமே திரும்பி விடுவான் என்று அடிக்கடி நம்பினாள்.

ஆனால் அவனோ ஒரு நாள், அவள் சமைத்து வைத்த சாப்பாட்டைச் சாப்பிட்ட படியே 'உன் மீது எனக்கு நாட்டமில்லை. உனக்கு 45 வயதாகி விட்டது. இப்போது ஒரு 30வயதுப் பெண்ணை நான் காதலிக்கிறேன். அவளோடு போய் வாழப்போகிறேன்' என்றான்.

லியானே ஒரு கணம் ஆடிப் போய் விட்டாள். 25வருடகாலத் தாம்பத்தியம் ஒரு நொடியில் கலைந்து போகப்போவதை உணர்ந்தாள்.

ஆனாலும் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் அவளை விட்டுப் போய் விட்டான்.

அவள் கலங்கினாள். அழுதாள். என்ன செய்வதென்று தெரியாது விட்டேற்றியாகத் திரிந்தாள். எல்லாம் சில வாரங்கள்தான்.

அதன் பின் „அவன் திரும்பி வருவான் என்று நம்புகிறாயா?“ என்று கேட்ட போது „வந்தாலும் அவனை ஏற்கவோ அவனுடன் சேர்ந்து  இனி வாழவோ தயாரில்லை“  என்று திடமாகச் சொன்னாள். தனக்கான, தனது மனதுக்குப் பொருத்தமான இன்னொரு துணையைத் தேட ஆரம்பித்தாள்.

விவாகரத்து, வீடுவிற்றல்... போன்ற சட்டப்படியான சில செயற்பாடுகளுக்கு மத்தியில் ஒரு சில மாதங்களிலேயே அவளுக்கு ஒரு புதிய நட்புக் கிடைத்தது. அவள் மெது மெதுவாகச் சந்தோசமானாள். துயரம் குடி கொண்டிருந்த அவள் முகம் மகிழ்வில் திளைக்கத் தொடங்கியது.

அந்த நேரத்தில்தான் அந்த அதிசயம் நடந்தது. லியானே அவளது கணவனுடன் வாழந்த காலங்களில் பணவிடயத்தில் கூட மிகுந்த கஸ்டப் பட்டாள். அவன் அவளை விட்டுப் போன சில மாதங்களுக்குள் அவள் பணக்காரியாகி விட்டாள். அவ்வப்போது லொத்தர் போடும் அவளுக்கு  அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக, 100,000€ க்கள் விழுந்தன.  

50வயதுக் கணவன் 30வயதுப் பெண்ணுடன் வாழ முடியாமல் மீண்டும் ஓடி வந்தான். லியானே அவனை ஏற்கவில்லை.

சந்திரவதனா
7.3.2013
Saturday, June 28, 2014

எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்

Thumilan Selvakumaranபொங்குதமிழ் இணைய இதழுக்காகப் பேட்டி கண்டவர் காண்டீபன்
துமிலன் ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுளைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பரிணமித்துக் கொண்டிருப்பவர்.

இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதிய Geheimsache NSU என்ற புத்தகம் யேர்மனியில் மே 26 அன்று வெளியாகி உள்ளது.

NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளை இந்தப் புத்தகம் விரிவாக ஆராய்ந்திருக்கிறது. இப் புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியான இரு தினங்களிலேயே விற்பனையாகி விட்டதால், உடனடியாக மீள்பதிவு செய்யப்பட்டு உள்ளது. யேர்மனியப் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் இப் புத்தகம் பற்றிப் பேசப்படுகிறது. எழுத்தாளர்களின் நேர் காணல்களும் இடம் பெறுகின்றன.

துமிலனை பொங்கு தமிழ் இணையம் இந்தப் புத்தகம் சம்பந்தமாக நேர்காணல் செய்திருக்கிறது.

நீங்கள் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து எழுதிய புத்தகம் குறிப்பாக யேர்மனிய மொழி பேசும் மக்களுக்குள்ளேயே இருந்துவிடப் போகிறது. அதைப் பற்றி மற்றைய நாடுகளில் உள்ளவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அந்தப் புத்தகத்தில் என்ன விடயத்தை உள்ளடக்கி இருக்கிறீர்கள்?

யேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான சில திரைமறைவு அமைப்புக்களின் செயற்பாடுகளை வெளியில் காண்பிக்க எத்தனித்திருக்கிறோம். அதில் நான் அதிகமாகக் காண்பித்த அமைப்பாக கூ-குளுக்ஸ்-கிளான் இருக்கிறது. கூ-குளுக்ஸ்-கிளான் பற்றி இப்பொழுதுள்ள பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இது ஏறக்குறைய 150 ஆண்டுகள் பழமையான அமைப்பு. ஆனாலும் இன்று சிலர் இதற்கு ஒக்சிசன் கொடுத்து உயிரூட்ட முயன்று கொண்டிருக்கிறார்கள்.
அந்த அமைப்பைப் பற்றி விளக்கம் தர முடியுமா?

கூ-குளுக்ஸ்-கிளான் என்பது அமெரிக்காவில் 1865இல் ஒரு நத்தார் தினத்தில் நிறுவப்பட்டது. வடக்கு அமெரிக்காவிலும் தெற்கு அமெரிக்காவிலும் நடந்த ஒரு உள்நாட்டு யுத்தத்தில் இந்த அமைப்பு முக்கிய பங்கு கொண்டது. வடக்கு அமெரிக்கர்கள் கறுப்பு இன மக்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்றார்கள். தெற்கு அமெரிக்கர்கள் அதற்கு முரண் பட்டார்கள். கறுப்பு இனத்தவர்கள் பஸ்சில் அமரக் கூடாது, பாடசாலை செல்லக் கூடாது அவர்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்ற விடயங்களில் கூ-குளுக்ஸ்- கிளான் உறுதியாக நின்றது. மேலும் யூத இனத்தவரோ, கறுப்பு இனத்தவரோ வெள்ளை அமெரிக்கர்களை மணம் செய்யவும் கூடாது என்பதும் அவர்களது கருத்தாக இருந்தது. இவ்வளவு தவறான கொள்கைகளுடன் அந்த அமைப்பு தன்னை மதரீதியாகவே காட்டிக் கொண்டது. ஆனால் அது உண்மை அல்ல என்பது பலருக்குத் தெரிந்திருந்தது. கறுப்பு இனத்தவரைக் கடத்துவது எரித்துக் கொல்வது, மரத்தில் கயிறு மாட்டி அதில் தூக்கிட்டுக் கொலை செய்வது என இந்த அமைப்பு பல நூறு கறுப்பு இனத்தவர்களை அழித்திருக்கிறது. நல்லவேளையாக அன்று நடந்த உள்நாட்டு யுத்தத்தில் வடக்கு அமெரிக்கா வெற்றி கொண்டதால், கறுப்பு இனத்தவர்கள் அடிமைகள் என்பதில் இருந்து வெளியே வந்து அமெரிக்கர்களுக்கு இணையாக பயம் இன்றி வாழத் தொடங்கினார்கள். யுத்தத்தில் தோற்றுப் போனதால் படிப்படியாக செல்வாக்கு இழந்து கூ-குளுக்ஸ்-கிளான் பத்து ஆண்டுகளில் இல்லாமல் போயிற்று.

1915இல் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பு மீண்டும் அமெரிக்காவில் புதுப்பிக்கப் பட்டது. ஒரு தேசிய அமைப்பாக உருப்பெற்ற இந்த அமைப்பு 1920இல் 4,000,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இதே காலப் பகுதியில் இந்த அமைப்பின் மேல் ஆர்வம் கொண்ட யேர்மனியர் சிலரால், இந்த அமைப்பு யேர்மனியிலும் தோற்றம் பெற்றது. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் யேர்மனிக்குள் பிரவேசித்த அமெரிக்கப் படையில் அங்கம் வகித்த பலர் இந்த அமைப்பில் இருந்திருக்கிறார்கள். இது யேர்மனியில் இவ் அமைப்பு மேலும் வலுப்பெற ஏதுவாக இருந்தது.

காலப்போக்கில் இவ்வமைப்பு வலுவிழந்து போனாலும் இந்த அமைப்பில் இன்னமும் 5000 தொடக்கம் 8000 வரையிலான உறுப்பினர்கள் இருக்கலாம் எனக் கருதப் படுகிறது. இந்த அமைப்பு இரகசியமாக இயங்கும் ஒரு அமைப்பாகவே இப்பொழுது இருக்கிறது.

இந்த அமைப்பு யேர்மனியில் இன்னமும் இருக்கிறதா?
இருக்கிறது.

இந்த அமைப்பை யேர்மனிய அரசாங்கம் தடை செய்யவில்லையா?
அதில்தான் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. கூ-குளுக்ஸ்-கிளான் என்ற பெயரில் யேர்மனியில் சில சில நகரங்களில் சில சில குழுக்களாக அவர்கள் இருக்கிறார்கள். ஒரு குழுவுக்கும் மற்றைய குழுவுக்கும் சம்பந்தம் கிடையாது. பெயரளிவில்தான் ஒற்றுமையே தவிர கொள்கையளவில் அவர்கள் ஒன்று சேரவில்லை. அதுபோக யேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அச்சுறுத்தலாக அவர்கள் நடந்து கொண்டதற்கான சம்பவங்களோ, சாட்சியங்களோ இல்லை. ஆகவே அவர்களைத் தடைசெய்ய யேர்மனியச் சட்டத்தில் இடம் இல்லை.

யேர்மனியில் இயங்கும் கூ-குளுக்ஸ்-கிளான் மீது குற்றம் சுமத்தப்படவில்லை என்றால் அவர்களைப் பற்றி நீங்கள் புத்தகத்தில் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?

இதை ஓரிரு வரியில் சொல்லி விட முடியாது.

பேர்லினில் இருந்து ஒரு பத்திரிகை 2011இல் ஒரு கட்டுரை வரைந்திருந்தது. அதில் Schwaebisch Hall என்ற நகரில் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பு இருக்கிறது என எழுதப்பட்டு இருந்தது. தற்செயலாகத்தான் நான் அதை வாசிக்க நேர்ந்தது. Schwaebisch Hall நகரத்தில்தான் நான் வசிக்கிறேன். இங்கேதான் பத்திரிகைத் துறையில் இருக்கிறேன். அதனால் எங்கே இந்த அமைப்பு இருக்கிறது எனத் தேடும் ஆவல் எனக்குள் எழுந்தது. அதன் பின் இது விடயமாகப் பல தேடுதல்களையும், தகவல் சேகரிப்புகளையும் மேற் கொண்டேன். இறுதியாக Schwaebisch Hall நகரில் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பின் உறுப்பினர் ஒருவரது தகவல் ஒன்று கிடைத்தது.

எப்படிக் கிடைத்தது என்பதை அறியலாமா?


ஒரு பத்திரிகையாளனுக்கு உள்ள உரிமையின் படி அதைச் சொல்வதற்கு இல்லை. யேர்மனியப் பொலிஸ் கேட்கும் பட்சத்திலும் இதே பதில்தான்.

சரி. மேற்கொண்டு சொல்லுங்கள்.

அந்த நபருடன் பல தடவைகள் தொலைபேசியில் அழைத்துக் கதைத்திருக்கிறேன். ஆனால் தகவல்கள் தரவோ, தன்னைச் சந்திக்கவோ முதலில் அவர் இடம் தரவில்லை.

ஒருநாள் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. என் மீதும், என் எழுத்தின் மீதும் அவருக்கு நம்பிக்கை வந்திருந்தது. ஒரு மணித்தியாலத்துக்குள் வர முடியுமானால் சந்திக்கலாம் என ஒரு இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார். அலுவலகத்தில் வேலையில் இருந்தேன். சந்தர்ப்பத்தை நழுவ விட மனம் இல்லை. ஏதோ ஒரு உந்துதலில் „சரி வருகிறேன்' என்றேன். குறிப்புகள் எடுப்பதற்கான பொருட்களை எடுத்துக் கொண்டேன். புறப்படும் பொழுதுதான் பார்த்தேன் அவர் குறிப்பிட்டுச் சொன்ன இடம் ஒரு அடர்ந்த காட்டுக்குப் போகும் பாதை. சிறிது தடுமாற்றம். நான் எதற்கு, எங்கே போகிறேன் என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அது தகவல் தருபவரைக் காட்டிக் கொடுப்பது போலாகும். சரி வருவது வரட்டும் என்ற துணிவுடன் அந்தக் குறிப்பிட்ட இடத்துக்குப் போனேன்.

சொன்ன இடத்தில் நின்றார். அறிமுகம் செய்து கொண்டேன். வாருங்கள் நடந்தபடி கதைப்போம் என்றபடி காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தார். அவர்களது அமைப்பு வெறுக்கும் வெளிநாட்டவனாக நான் இருக்கிறேன். அவரை நம்பிப் போகலாமா? அதுவும் அடர்ந்த காட்டுக்குள். ஒருவித பய உணர்ச்சி இருந்தாலும் சேர்ந்து நடந்தேன்.

அவர் தான் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பில் தற்பொழுது இல்லை. தனக்கு திருமணம் ஆனதால் அதில் இருந்து விலகி விட்டேன் என்று தனது தற்போதைய நிலைப்பாட்டைக் கூறிவிட்டு, பிரயோசனமான தகவல் ஒன்றையும் உதிர்த்தார். அது கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பில் இரு பொலிஸார் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதே. அவர்கள் இருவரும் Schwaebisch Hall நகரில் நடக்கும் இவ்வமைப்பின் கூட்டங்களுக்கு வந்து போவதாகவும் சொன்னார். அந்தத் தகவல்கள் எனக்கு மிகவும் பயன் பட்டன. ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக அவரிடம் உரையாடி நிறையத் தகவல்களைப் பெற்றேன்.

இந்தத் தகவல்கள் அடிப்படையில்தான் கூ- குளுக்ஸ் -கிளான் பற்றிய உங்களது கட்டுரைகள் ஆரம்பமானதா?


வெறும் தகவல்களைப் பெற்று மட்டும் உடனடியாக எழுத முடியாது. தகவல்களில் எந்தளவு உண்மை இருக்கிறது என்பது தெளிவான பின்னரே எழுத முடியும். ஆகவே உள்துறை அமைச்சுடன் தொடர்பு கொண்டு „எனக்கு கூ- குளுக்ஸ்-கிளான் பற்றிய சில தகவல்கள் கிடைத்துள்ளன. உங்களுக்கு ஏதாவது தெரியுமா?“ எனக் கேட்டேன். முப்பது நிமிடங்களுக்குள் பதில் தருகிறோம் என்றார்கள். ஆனால் மூன்று மணித்தியாலங்கள் காக்க வேண்டியதாயிற்று. அதில் இருந்து புரிந்து கொண்டேன். அவர்களுக்கும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் எனக்கு எந்தவிதத் தகவல்களைத் தரலாம், எதைத் தவிர்க்கலாம் என்று தங்களுக்குள் ஆராய்ந்து அதன் பின்னரே எனக்கு பதில் தந்திருக்கிறார்கள் என்று.

அவர்களுக்குத் தகவல்கள் எங்கே இருந்து கிடைக்கின்றன?


அவர்களிடம்தானே புலனாய்வுத் துறை இருக்கிறது. இரு பொலிஸார் கூ- குளுக்ஸ்-கிளான் அமைப்பில் இருக்கிறார்கள் என்றும், அதில் ஒருவர் பொறுப்பதிகாரி என்றும் இன்னும் சிலர் அதில் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது.

அந்தப் பொலிஸார் மீது உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லையா?


நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பு ஒரு இரகசியமாகச் செயற்படும் அமைப்பானாலும் எது வித குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதற்கான தகவல்கள் இல்லை. ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போயிருக்கலாம்.

குற்றச் செயல்களில் ஈடுபடாவிட்டாலும் ஒரு இனவாத அமைப்பில் நாட்டின் சட்டம், ஒழுங்கு போன்றவற்றிற்குப் பொறுப்பானவர்கள், உறுப்பினர்களாக இருப்பது தவறுதானே?

உண்மை. இங்கிருந்துதான், இந்த மையப்புள்ளியில் இருந்துதான் நான் பத்திரிகையில் எனது கட்டுரைகளை எழுத ஆரம்பித்தேன்.

முதலில் எங்கள் உள்ளூர் பத்திரிகையில் மட்டுமே எனது கட்டுரைகள் வந்து கொண்டிருந்தன. பிற்பாடு எங்கள் மாநிலத்தின் முதன்மைப் பத்திரிகை நிறுவனமான தென் மேற்குப் பிரசுரம் அவற்றை தாங்களும் வாங்கி வெளியிட, பரவலாக அது நாடு முழுவதும் போனது.

இதன் பின்னர்தான் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பு பற்றியும், அதனுடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸார் பற்றியும் தொலைக்காட்சிகளும், வானொலிகளும் பேசத் தொடங்கின.

அந்தப் பொலிஸார் நிலை என்னவாக இருந்தது?
அவர்கள் மௌனமாகவே இருந்தனர். குற்றம் சுமத்தப் பட்டு இரண்டு வருடங்களுக்குள் ஒரு அரச ஊழியருக்கு மேல் நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் அவர்கள் அதிலிருந்து விடுவிக்கப் படுவார்கள். இந்த ஒரு சட்டத்தின் பிரகாரம் அவர்கள் இருவர் மீதும் உள்துறை அமைச்சு மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அவர்கள் இன்னமும் பணியில்தான் இருக்கிறார்கள்.

இங்கே NSU என்ற அமைப்பு என்ன பங்கு வகிக்கிறது?


கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பு மட்டுமல்ல. நியோநாசி போன்ற வெளிநாட்டவர்களுக்கு எதிரான அமைப்புக்களும் NSU உடன் தொடர்பு வைத்திருந்தார்கள். இதற்கான ஆவணங்களை NSU அமைப்பைச் சேர்ந்த இருவரின் மரணங்கள் விட்டுச் சென்றிருக்கின்றன.

யாரந்த இருவர்?

அந்த இருவரும் NSU அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன் வேறு சில சம்பவங்களைச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

2000 இலிருந்து 2006 வரை துருக்கிய நாட்டவர் எட்டுப்பேரும், கிறீக் நாட்டவர் ஒருவரும் யேர்மனியில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள். 2004 இல் Koeln நகரில் துருக்கிய நாட்டவரின் வியாபரநிலையங்கள் நிறைந்த Holz வீதியில் ஆணிகள் அடங்கிய குண்டு வெடித்து 25 துருக்கியர்கள் காயப்படுத்தப் பட்டிருந்தார்கள். இந்தக் கொலைகளும் சரி, குண்டுத்தாக்குதலும் சரி, எவரால் செய்யப் பட்டது என்பது துப்புத்துலக்கப் படாமல் காவல்துறைக்கு ஒரு சவாலாக இருந்தது. ஆனால் இது ஏதோ ஒரு குழுவினால்தான் செய்யப்படுகின்றது என்ற ஊகம் யேர்மனியில் பரவலாக இருந்தது. இது தவிர 2007இல் Heilbronn நகரில் சேவையில் இருந்த இரு பொலிசார் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் ஒரு பெண் பொலிஸ் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டிருந்தார். ஒரு ஆண் பொலிஸ் படுகாயம் அடைந்திருந்தார். அவர்களது ஆயுதங்கள் கொலையாளி அல்லது கொலையாளிகளால் எடுத்துச் செல்லப் பட்டிருந்தன.

முதலில் நீங்கள் குறிப்பிட்ட வெளிநாட்டவர் மீதான தாக்குதலுக்கும், பொலிசார் மீதான இத்தாக்குதலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்ததா?

அந்தக் கேள்விதான் நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.

இப்போ அதற்கான விடை கிடைத்து விட்டதா?


கிடைத்திருக்கிறது. ஆனால் அதில் தெளிவு இல்லை.

இப்போ உங்கள் பதிலில் எங்களுக்குத் தெளிவு இல்லை.

அதைத் தெளிவாக்குவதற்காகத்தான் நாங்கள் பல கட்டுரைகளை எழுதியுள்ளோம். இப்புத்தகத்தையும் கொணர்ந்துள்ளோம்.

அப்படியானால் நீங்கள் எழுதியுள்ள இப்புத்தகத்தில் இச்சம்பவங்களுக்கான முடிச்சுகள் அவிழ்க்கப் பட்டுள்ளனவா?
முழுமையாக என்று சொல்ல முடியாது. முயன்று இருக்கிறோம்.

இப்பொழுது நான் முன்னர் குறிப்பிட்ட அந்த இரண்டு பேரைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

சொல்லுங்கள்.
Mundlos, Boehnhardt என்ற இருவரின் மரணங்கள்தான் சில விடயங்களைத் தெளிவாக்கி இருக்கிறது.

இந்த இருவரும் NSU வின் செயற்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இவர்களுடன் ஒரு பெண்ணும் இருந்திருக்கிறார் என்பது பின்னர் தெரிய வந்தது. அவரது பெயர் Beate Zschaepe. நீண்ட காலமாக தலைமறைவாக வாழ்ந்த இவர்கள் தங்கள் தேவைக்காக பல வங்கிகளில் கொள்ளையடித்திருக்கிறார்கள். இவர்கள் சைக்கிளில் சென்று வங்கிக்கொள்ளைகளில் ஈடுபடுவார்கள். கொள்ளையடித்த பின்னர் வீதியில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் ஒரு கரவனுக்குள் சைக்கிளை வைத்து விட்டு தாங்களும் அதற்குள் ஒளித்துக் கொண்டு விடுவார்கள். பொலிஸார் கொள்ளையர்களையும் அவர்கள் பயணித்த சைக்கிள்களையும் வெளியில் தேடிக் கொண்டிருப்பார்கள். ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருப்பார்கள். இவர்கள் கரவனுக்குள் அமைதியாக இருப்பார்கள். அமளிகள் ஓய்ந்த பின்னர் வெளியே வருவார்கள். இவர்களின் இந்தத் தந்திரமான செயலால் நீண்ட நாட்களாகவே வங்கிக் கொள்ளையில் ஈடுபடும் இவர்களை பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை.

04.11.2011இல் Mundlos, Boehnhardt இருவரும் வங்கி ஒன்றில் கொள்ளை அடித்து விட்டு வழக்கம் போல் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கரவனுக்குள் போய் ஒளித்துக் கொண்டார்கள். சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கரவனை பொலிஸார் நெருங்கும் போது, துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. கூடவே கரவனும் தீப்பற்றிக் கொண்டது. தீயை அணைத்து உள்ளே சென்ற பொலிஸார் Mundlos, Boehnhardt இருவரையும் பிணமாக மீட்டிருக்கிறார்கள். கரவனுக்குள் இருந்து, Heilbronn பொலிஸாரிடம் இருந்து கைப்பற்றப் பட்ட ஆயுதங்கள் மற்றும் ஒன்பது வெளிநாட்டவர்களைக் கொல்வதற்குப் பயன்படுத்தப் பட்ட ஆயுதங்கள், 110,000 யூரோக்கள் என்பன கண்டெடுக்கப் பட்டன. இன்னும் சில ஆவணங்களையும் பொலிஸார் எடுத்திருந்தனர்.

ஆகவே கொலையாளிகள் யார் என்று தெரிந்து விட்டனர். அத்தோடு பிரச்சினை முடிந்து விட்டது.
இல்லை. முடிவுக்கு வந்தது போல் தெரியும். அல்லது முடித்து வைக்கப் பட்ட தோற்றத்தைத் தருவதாக ஜோடிக்கப் பட்டிருக்கலாம்.

ஏன் அப்படிக் கருதுகிறீர்கள்?
இவர்கள் இருவரும் இறந்த சிறிது நேரத்தில் இவர்களுடன் ஒன்றாக இருந்த Beate Zschaepe தாங்கள் வசித்து வந்த வீட்டைக் குண்டு வைத்துத் தகர்த்து விட்டுத் தப்பி ஓடி விட்டார். பின்னர் இவர் கைது செய்யப் பட்டது வேறு விடயம். ஆனால் அந்த இருவரும் இறந்து விட்டார்கள் என்பது Beate Zschaepe க்கு எப்படித் தெரியும். யார் தகவல் தந்திருப்பார்கள் என்ற கேள்வி இருக்கிறது.

போதாதற்கு கரவனுக்குள் இருந்து மூன்றாவது நபர் ஒருவர் வெளியே சென்றதாக சாட்சியம் இருக்கிறது. கரவனுக்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், பின்னர் கரவன் தீப்பற்றியதாகவும் பொலிஸி;ன் அறிக்கை சொல்கிறதே தவிர பொது மக்களின் சாட்சியங்கள் அங்கே போதுமானதாக இல்லை.

போலிஸார் மீதே சந்தேகப் படுகிறீர்களா?
சந்தேகங்கள் என்பதை விட. தெளிவாக இல்லை என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

NSU என்பது மூன்று பேர் கொண்ட அமைப்புத்தான் என்று அரசாங்கம் கருதுகிறது. எங்களால் அதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. அது பலரை உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாகக் கொண்டிருக்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்பு பொலிஸாரிடம் இருந்து கூடக் கிடைத்திருக்கலாம். அதற்கான அனுகூலங்கள் இருப்பதாகக் கருதுகிறோம்.

எதை வைத்து அப்படி ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்?

இருவரது மரணத்தின் பின்னர் கரவனில் இருந்து எடுக்கப் பட்ட ஆவணங்களில் இருந்து கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்பில் இருக்கும் இருவருக்கும் NSUக்கும் தொடர்பு இருந்தது நிருபணமாகி இருக்கிறது. Heilbronn நகரத்தில் கொலை செய்யப்பட்ட Michele Kiesewetter மற்றும் படுகாயப் படுத்தப் பட்ட Martin.A ஆகிய இரு பொலிஸாரின் பொறுப்பதிகாரிக்கும் கூ-குளுக்ஸ்.கிளான் அமைப்புக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. Heilbronn நகரம் 117,000 மக்கள் தொகை கொண்ட ஒரு பெரிய நகரம். அந்த நகரத்தில் ஒரு பகல் பொழுதில் கடமையில் இருக்கும் பொலிஸார் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள புகையிரத நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் பொலிஸ் பொறுப்பதிகாரி நின்றிருக்கிறார். தாக்குதலை நிகழ்த்தி விட்டு இரண்டு பொலிஸாரையும் வாகனத்தில் இருந்து இழுத்துக் கீழே போட்டு அவர்களின் கைத்துப்பாக்கிகளை எடுத்துச் சென்றிருக்கிறார்கள் கொலையாளிகள். இவை எல்லாவற்றையும் எந்தவித பதட்டமும் இன்றி, நேரம் எடுத்து, ஆறுதலாகச் செய்திருக்கிறார்கள். அந்தச் சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி சிலர் இருந்து, மக்கள் நடமாட்டத்தை அவதானித்து கொலையாளிகளுக்குத் தகவல் தராதிருந்திருந்தால் அது சாத்தியப் பட்டிருக்காது.

போதாததற்கு, தோளில், கையில், காலில் இரத்த அடையாளங்களுடன் வெவ்வேறு ஆட்களைக் கண்டதாக 12 சாட்சிகள் இருக்கின்றன. அப்படிப் பார்க்கையில் குறைந்தது மூவராவது அங்கு நடந்த சம்பவங்களுடன் தொடர்பு படுகிறார்கள். ஆனால் Mundlos, Boehnhardt இருவரின் மரணத்தின் பின்னர் இருவரும்தான் கொலையாளிகள் என ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

சம்பவத்தின் பின்னர் Heilbronn நகரில் இருந்து வெளியே சென்ற 30000 வாகனங்கள் சோதனை செய்யப் படவில்லை. மாறாக, வாகனங்களைச் செல்ல விட்டு அவற்றின் இலக்கங்களை மட்டும் பதிந்து வைத்திருக்கிறார்கள். அப்படிப் பதிந்து வைத்த பதிவேட்டில் Mundlos, Boehnhardt இருவரும் பயணம் செய்த கரவனின் இலக்கமும் இருந்திருக்கிறது.

உங்களது கூற்றை வைத்தப் பார்த்தால், கொலையாளிகளை நோக்கி துப்புத் துலக்காமல், வேண்டும் என்றே அதை வேறு திசைக்குத் திருப்பி இருக்கிறார்கள் என்று கொள்ளலாமா?


அதற்கும் சாத்தியம் இருக்கலாம். இன்னும் ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.

Heilbronn நகரில் ஒரு இளைஞன் தனக்கு Michele Kiesewetter ஐ கொன்ற கொலையாளியைத் தெரியும் என்று தனது நண்பன் ஒருவனுக்குச் சொல்கிறான். அந்த இளைஞனுக்கும் நியோநாசிக்கும் முன்னர் தொடர்பு இருந்திருக்கிறது.

அந்த இளைஞன் கொலை பற்றி சொன்னதை அறிந்து புலனாய்வுத்துறை அவனை விசாரிப்பதற்காக மாநிலத்தின் தலைநகர் Stuttgart ; ற்கு அவனை அழைக்கிறது. மாலை 5.00 மணிக்கு அவனது விசாரணைக்கான நேரம் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால் அன்று காலை 9.00 மணிக்கு அவனது வாகனம் தீப்பற்றி எரிந்து அந்த இளைஞன் அவனது வாகனத்துக்குள்ளேயே இறந்து கிடக்கிறான். காதல் தோல்வியால் வாகனத்துக்குள் பெற்றோல் ஊற்றி, தீமூட்டி அந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக அவனது கதையை பொலிஸ் முடித்து விடுகிறது.

காதல் தோல்விகளால் பல தற்கொலைகள் நாள்தோறும்தானே நடந்து கொண்டிருக்கின்றன.


உண்மை. ஆனால் அந்த இளைஞனின் தாயும், அவனது காதலியும் அதை மறுக்கிறார்களே. அவர்கள் இருவரும் இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மறுபக்கமாகப் பர்த்தால் தற்கொலை செய்பவர்கள் தனிமையான ஒரு இடத்தைத்தான் தேடுவார்களே தவிர சன நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தை விரும்ப மாட்டார்கள். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கிடைத்த சாட்சி „சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது வீதி ஓரத்தில் நின்ற வாகனம் பெரிதாக தீப்பற்றி எரிந்தது. வாகனத்தின் கண்ணாடிகள் வெடித்துச் சிதறின' என்று இருக்கிறது. ஆக உள்ளிருந்த இளைஞன் தீயின் வெப்பத்தில் அலறியதாகவோ, வலியில் துடித்ததாகவோ சாட்சி பதியவில்லை. ஆகவே இளைஞன் முதலிலேயே இறந்தானா? யாராவது வாகனத்துக்கு தீமூட்டினார்களா? என்ற கேள்விகள் இருக்கின்றன.

அப்படியாயின் சாட்சியங்களை திட்டமிட்டே அழிக்கிறார்கள் என்று கருதலாமா?


அதற்கான சாத்தியங்கள்தான் அதிகமாக இருக்கின்றன.

Michele Kiesewetter கூட அவர்களுக்கு உள்ளிருந்து உதபுவராக அல்லது அவர்களுடன் தொடர்புகளைப் பேணுபவராகம் இருந்திருக்கலாம். அவர்களை விட்டு விலக நேர்ந்த பொழுது அல்லது அவர்களுக்குப் பிரச்சினையாக உருவாகும் பொழுதுதான் கொல்லப் பட்டிருக்க வேண்டும்.

இதில் Michele Kiesewetter உடன் கடமையில் இருந்து படுகாயமடைந்த Martin.A தாக்குதல்களின் பின்னால் கொலையாளிகளின் அங்க அமைப்புகளைத் தெளிவாக விவரிக்கிறார். எந்தப் பக்கம் இருந்து சுட்டார்கள். சுட்டவர் கையில் ரோமங்கள் இருந்தன என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். ஆனால் இப்பொழுது, சம்பவம் நடந்த பொழுது எனக்கு எல்லாமே இருட்டாக இருந்தது. என்னால் ஒன்றும் நினைவு படுத்த முடியவில்லை என்கிறார்.

ஏன் இப்பொழுது அப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்?

பயந்திருக்கலாம் அல்லது பயமுறுத்தப் பட்டிருக்கலாம். அல்லது மேலிடத்தில் இருந்து யாராவது கட்டளை இட்டிருக்கலாம்

கைது செய்யப்பட்ட NSU வின் பெண் உறுப்பினர் Beate Zschaepe ஐ விசாரணைக்கு உட்படுத்தி உண்மைகளை அறிய முடியாதா?

விசாரணை நடக்கிறது. ஆனால் தான் இது விடயமாக எதுவும் சொல்லப் போவதில்லை என்று நீதிமன்றத்தில் Beate Zschaepe அறிவித்து விட்டார். ஆகவே அவரை விசாரணை செய்ய முடியாது. யேர்மனிய சட்டம் அப்படி.
குற்றவாளியை விசாரிக்க முடியாது என்றால் வழக்கு எப்படி நடக்கும்?

அரச சட்டத்தரணியும் Beate Zschaepe இன் சட்டத்தரணியும் சம்பவங்கள், சாட்சியங்களை வைத்து வாதாடிக் கொள்வார்கள். விவாதங்களை வைத்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்.
Beate Zschaepe தப்பிக்க வாய்ப்பு உருவாகி விடுமா?

Beate Zschaepe தப்பிக்க வாய்ப்பில்லை. அவருடைய குற்றச் செயல்களுக்கான சாட்சியங்கள் இருக்கின்றன. ஆனால் பல உண்மைகள் அவரிடம் இருந்து வெளியே வராமல் சம்பந்தப் பட்டவர்கள் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.
சமீபத்தில், பணம் பெற்றுக் கொண்டு, புலானாய்வுத்துறைக்கு NSU பற்றித் தகவல் தரும் Thomas என்பவர் மரணம் அடைந்திருக்கிறார். இவரது புனைபெயர் Correli. இவர் திரைமறைவு அமைப்புக்களின் செயற்பாடுகளில் இருந்தவர். பின்னர்தான் பணத்திற்காக தகவல் தருபவராக மாறினார். அதுவே அவரது தொழிலாகப் போனது. தனது செயல்களை அறிந்து தனக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து லண்டனுக்கு இடம் பெயர்ந்தார். சில காலங்களுக்குப் பின்னர் யேர்மனி திரும்பி Nordrhein-Westfalen மாநிலத்தில் வசித்து வந்தார். இவரது சாட்சி நீதிமன்றத்துக்குத் தேவைப் பட்டது. நீதிமன்றில் இருந்து இவருக்கு அழைப்பாணை போனது.
ஆனால் குறிப்பிட்ட தினத்தில் Correli நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை. அதனால் நீதிமன்றத்தின் ஆணையின் பேரில் காவல்துறை அவரது இருப்பிடத்துக்குச் சென்று பார்த்த போது அவர் இறந்திருந்தார். இறக்கும் போழுது அவருக்கு வயது 39. இத்தனைக்கும் அவர் புலனாய்வுத்துறையின் ஏற்பாட்டின் பேரிலேயே இரகசியமாக அந்நகரில் அவ்வீட்டில் வசித்து வந்தார்.

எப்படி இறந்து போனார்?

அவருக்கு நீரழிவு நோய் இருந்திருக்கிறது என்றும், இன்சுலின் கூடி அவர் இறந்து போனதாகவும் அறிக்கை வருகிறது. இன்சுலின் தானாகவே அதிகரித்ததா? அல்லது யாராவது அதிகளவு அவருக்கு இன்சுலின் செலுத்தினார்களா? என்ற கேள்விகளும் இருக்கின்றன.

சாட்சிகள் ஒவ்வொன்றாக இல்லாது போனால் விசாரணை என்னவாகும்?

அது சட்டத்தின் வேலை. ஆனாலும் உண்மைகளை வெளிக் கொணர்வதற்கு எங்களுக்கு இன்னமும் பல தேடுதல்கள் இருக்கின்றன.

இந்தப் புத்தகத்தின் மூலம் இது சம்பந்தமாக ஏதாவது பயன் கிடைத்ததா?

இந்தப் புத்தகத்தின் மூலமாக மட்டுமல்ல, நாங்கள் இது விடயமாக தகவல்களை சேகரித்து எழுதும் பொழுது முன்னேற்றங்கள் தெரிகின்றன.

இனி இதில் விசாரிப்பதற்கு எதுவும் இல்லை என்று Heilbronn நகரத்தில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் Michele Kiesewetter மற்றும் படுகாயப் படுத்தப் பட்ட பொலிஸ் Martin.A சம்பந்தமான வழக்கை கடந்த வருடம் நீதிமன்றம் முடித்து விட்டது. இந்த முடிவை 12 யூரிமாரும் இணைந்து அன்று எடுத்திருந்தனர்.

இப்பொழுது ஆட்சி மாறி இருக்கிறது. 12 யூரிமாரில் ஒன்பது பேர் புதியவர்கள். ஊடகங்களின் தகவல்ளை அடிப்படையாக வைத்து இன்னமும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டி உள்ளதாக அவர்கள் இப்பொழுது அறிவித்திருக்கிறார்கள். இது ஒரு முன்னேற்றம்தானே.

துருக்கிய மக்கள் நிறுவனங்களை வைத்திருக்கும் Holz str வில் நடந்த குண்டுத் தாக்குதலின் பத்தாவது வருட நினைவு நாள் கடந்த 9ந்திகதி Koeln நகரில் நினைவு கூரப்பட்டிருந்தது. யேர்மனிய ஜனாதிபதி Gaug கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பல யேர்மனிய மக்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் இக்குண்டுத்தாக்குதல் பற்றிய மர்மங்களை வெளிக்கொணர்ந்த பத்திரிகையாளர்களின் செயற்பாடுகள் பாராட்டப் பட்டிருக்கிறது.

இந்தப் புத்தகத்தை வெளியிடும் எண்ணம் எப்படி உங்களுக்கு வந்தது? மற்றைய ஒன்பது எழுத்தாளர்களுடனான தொடர்பு எப்படி உங்களுக்குக் கிடைத்தது?

NSUவுக்கு மேலான வழக்கு நடக்கும் பொழுது நான் அங்கே செல்வதுண்டு. அதுபோல இந்தச் சம்பவத்தைப் பற்றி எழுதும் மற்றையவர்களும் நீதி மன்றத்துக்கு வருவார்கள். பல தடவைகள் நாம் அங்கே சந்தித்துக்கொண்டதால் எமக்குள் பரீச்சயம் ஏற்பட்டது. அதன் பின் நாங்கள் NSU சம்பந்தமாக விவாதங்கள் செய்யத் தொடங்கினோம். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் பேராசிரியர் Andreas Foerster இவைகளை எல்லாம் சேர்த்து ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தால் என்ன என்று கேட்டார். எல்லோரும் ஒத்துக் கொண்டதால் புத்தகம் வெளியாயிற்று.

கேள்விகளுக்கு தெளிவாகவே விடை தந்திருக்கிறீர்கள்.

புத்தகத்தில் சம்பவங்களும், தகவல்களும் நிறையவே அடங்கி இருக்கின்றன. அவ்வளவையும் நான் இங்கே சொல்லவில்லை. உங்கள் கேள்விகளுக்கான பதில்களை மட்டுந்தான் முடிந்தளவு தந்திருக்கிறேன்.

தங்கள் உரிமைகள் கிடைக்காமல், அதற்காக ஏங்கி நிற்கும் துயரங்கள் நிறைந்த தமிழர்களது நிலையை யேர்மனிய மக்களுக்கு விளக்கும் வகையில் நீங்கள் ஒரு தமிழராக இருக்கும் பட்சத்தில் உங்கள் எழுத்துக்களைப் பயன்படுத்துவதில்லையா?
எமது உறவுகளின் பிரச்சினை சம்பந்தமாக விரிவாக யேர்மனிய மொழியில் எழுத எண்ணம் எனக்கு இருக்கிறது. கூடவே ஆர்வமும் இருக்கிறது. மேலெழுந்த வாரியாக அவைகளை எழுத முடியாது. வெறுமனே தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு எழுதுவதில் ஒன்றுமே இருக்கப் போவதில்லை. இது விடயமாகப் பலரைச் சந்திக்கவும், பேட்டிகள் எடுக்கவும், விபரங்களை ஆதாரங்களோடு திரட்டவும் எனக்கு நிறைய நாட்கள் தேவைப்படும். எனது வேலைகளுக்கு மத்தியில்தான் அதற்கான நேரங்களையும் நான் தேடவேண்டும். ஒரு நிருபராக, எழுத்தாளனாக இருந்து கொண்டு சுதந்திரமாக இலங்கை சென்று இவற்றைப் பெறுவது அங்குள்ள நிலையில் இன்று சாத்தியம் இல்லை என்று அறிகிறேன். மேலும் எழுத்தாளனாக நான் யேர்மனியில் பரவலாக அறியப்பட இன்னமும் நான் உழைக்க வேண்டி இருக்கிறது. ஆனாலும் என் இனத்தைப் பற்றி எழுத எனக்கான காலம் அதிகதூரம் இல்லை என்ற எண்ணம் எனக்குள் இருக்கிறது.

இலங்கையில் ஒரு ஊடகவியலாளர் சுதந்திரமாகச் செயற்பட முடியாது என்பதை எதை வைத்துச் சொல்கிறீர்கள்?

இலங்கையில் மட்டுமல்ல, உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் பிரச்சனைகளும் DPA யின் மூலம் ஒரு பத்திரிகையாளன் என்ற ரீதியில் எனக்கு உடனடியாகக் கிடைத்து விடும். எல்லாவற்றையும் நான் வாசிப்பேன். ஆனால் எமது பத்திரிகைக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்வேன்.

ஒரு தமிழனாக இருந்து யேர்மனிய மொழியில் சவால்கள் நிறைந்த துறையில் சாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு பொங்குதமிழின் வாழ்த்தும், நன்றியும்.

நல்லது. நான் மட்டும் அல்ல வேறு பல தமிழ் இளைஞர்களும்; இங்கே சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லாமே வெளியே தெரிவதில்லை. நான் ஊடகத் துறையில் இருப்பதால் சட்டென்று தெரிய வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கும் சேர்த்து உங்கள் வாழ்த்தை ஏற்றுக் கொள்ளுகிறேன்.

நன்றி.
- காண்டீபன்
Quelle - Ponguthamil

Friday, June 20, 2014

நான் கேட்டவை - என் விருப்பம்

எழுது என்கிறது ஒரு மனம் . வேண்டாம் எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று தடுக்கிறது ஒரு எண்ணம். எழுதி என்னதான் ஆகப் போகிறது என்ற கேள்வி எழுகிறது மறு புறம். ஆனாலும் எழுது என்கிற உந்துதலே மேலோங்கி நிற்கிறது.

தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவை என்ற பெயருக்கே பெரிய வரவேற்பிருந்த காலம் அது. அந்தக் கால கட்டத்தில் வானொலியை விட்டால் வேறு கதியே இல்லை. வீட்டில் வானொலிப் பெட்டி இல்லாதவர்களுக்கு அப்பொழுது எல்லாம் தேனீர்க்கடைகள் ஒரு வரப்பிரசாதம். காலையில் கடையைத் திறக்கும் போது போடப்படும் வானொலிப் பெட்டி இரவில் கடை மூடும் போதுதான் நிறுத்தப் படும். வானொலியில் நல்ல இனிமையான பாடல்கள் ஒலிக்கும் பொழுதுகளிலும், நல்ல நிகழ்ச்சிகள் வரும் பொழுதுகளிலும் பலர் தேனீர் கடைகளின் ஓரம் நின்று கேட்பதை அல்லது உள்ளே இருந்து தேனீரோடு அவற்றை இரசிப்பதை நான் பல தடவைகள் அவதானித்திருக்கிறேன். வீட்டில் அதிக நேரம் வானொலியை ஒலிக்க விட்டால், „வர வர எங்கடை வீடும் தேத்தண்ணிக் கடையாப் போச்சு' என்று பெரிசுகள் அங்கலாய்ப்பதும் இருந்திருக்கிறது.

தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவை இலங்கையைத் தாண்டி இந்தியாவிலும் ரசிகர்களைக் கொண்டிருந்தது. நான் கண்ட சொர்க்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் கே.ஏ. தங்கவேலு, மரணம் அடைந்து சொர்க்கத்திற்குச் செல்கிறார். சொர்க்கத்தில் அவர் நுழையும் பொழுது அங்கு வானொலி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதில் அன்றைய ஒலிபரப்பாளர் மயில்வாகனம் அவர்களது குரல் கேட்கிறது. „இங்கேயும் வந்திட்டானா?' என தங்கவேலு கேட்பதாக அந்தக் காட்சி இருக்கும். இந்த ஒரு விடயமே போதும். அன்றைய இலங்கை வானொலியின் வர்த்தக சேவையின் தரத்தையும் அறிவிப்பாளர்களின் புகழையும் சொல்ல. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூட, தான் அப்துல் ஹமீத்தின் இரசிகன் எனப் பல தடவைகள் குறிப்பிட்டிருக்கிறார். அந்தளவுக்கு சினிமா சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளைக் கூட இலங்கை தமிழ் வர்த்தகசேவை கட்டிப் போட்டிருந்தது.

அன்றைய முன்னணி இளம் கதாநாயகர்கள் நடித்த, சிறீப்பிரியாவின் சொந்தத் தயாரிப்பான „நீயா' திரைப்படம் தமிழகத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற வில்லை. கே.எஸ். ராஜா அவர்கள், அப்படத்திற்கான திரைவிருந்து நிகழ்ச்சியை அற்புதமாகத் தயாரித்தும் அதற்கு மேலாக தனது குரல் வளத்தாலும், அதை இலங்கையில் பெரும் வெற்றிப் படமாக்கியது தனிப் பதிவு.

அன்றைய காலத்தில் பல தமிழ்ப் படங்கள் தமிழகத்தில் வெளியாகும் பொழுது, அவற்றிற்கான விளம்பரங்கள் இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவையின் ஊடாகவும் விளம்பரப் படுத்தப்பட்டன. இத்தனைக்கும் தமிழகத்தில் தமிழ் வானொலி இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும்.

திரைப்படப் பாடல்களை முன் நிறுத்தி, பாட்டுக்குப் பாட்டு, பாட்டும் பதமும், இன்றைய நேயர், இசையும் கதையும், பொங்கும் பூம்புனல், பூவும் பொட்டும், ஒலி மஞ்சரி, மலர்ந்தும் மலராதவை, புது வெள்ளம், அன்றும் இன்றும், இரவின் மடியில், இசைத் தேர்வு, நேயர் விருப்பம் என்று பலவகையான நிகழ்ச்சிகளைத் திறம்பட மிகச்சுவையாக நடாத்தி இரசிகர்களை ஈர்த்து வைத்திருந்தார்கள். விடுமுறை நாட்கள் என்றால் நேயர்களுக்காக விடுமுறை விருப்பம் என்றும் விவசாயிகளை ஊக்குவிக்க விவசாய நேயர் விருப்பம் என்றும் பாடல்களில் துள்ளிசை மெல்லிசை என வகை பிரித்தும் நிறையவே வெற்றி கண்டார்கள். ஒரு பாடலை ஒலிபரப்பினார்கள் என்றால் அதே பாடலை எக்காரணம் கொண்டும் அன்று மீண்டும் ஒலிபரப்ப மாட்டார்கள். அடுத்த நாள் அல்லது வேறு ஒரு நாளில்தான் மீண்டும் கேட்கலாம். இவ்வாறு சின்னச் சின்ன விடயங்களில் எல்லாம் மிகக் கவனமாக இருந்தார்கள். நிகழ்ச்சிகளைத் தயாரித்து வேண்டாதவற்றை தணிக்கை செய்து தேவையானதை இணைத்து தரமாகத் தந்தார்கள்.

எனது கால கட்டத்தில் அப்துல் ஹமீத், விமல் சொக்கநாதன், கே.எஸ்.ராஜா, கே.பரராஜசிங்கம், சில்லையூர் செல்வராஜன், திருமதி இராஜேஸ்வரி சண்முகம், திருமதி விசாலாட்சி ஹமீத், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் என்று பல வானொலி அறிவிப்பாளர்கள் இருந்திருந்தாலும், பெரும்பான்மையான வானொலி இரசிகர்களின் விருப்பத்துக்குரியவர்களாக இரண்டு முக்கிய அறிவிப்பாளர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் அப்துல் ஹமீத். மற்றையவர் கே.எஸ்.ராஜா. இதில் முன்னையவரின் தமிழ் உச்சரிப்பும் நேர்த்தியான தடங்கலின்றிய அமைதியான பேச்சும், ஒழுங்கான முறையில் தயாரிக்கப்படும் அவரது நிகழ்ச்சிகளும் அவரைப் பெரிய உச்சத்துக்கே கொண்டு போயின. இலங்கைக் கலைஞருக்கு அதுவும் ஒரு ஒலிபரப்பாளருக்கே கடல் தாண்டி ரசிகர்கள் பெருமளவு இருந்தார்கள் என்றால் அந்தப் பெருமை அப்துல் ஹமீத் அவர்களையே சாரும். அதிலும் „பாட்டுக்குப் பாட்டு' போட்டி நிகழ்ச்சியில் யாராவது வார்த்தைகளை மாற்றிப் பாடினாலோ, இராகங்களை விட்டு விட்டாலோ உடனடியாகக் கண்டு பிடிக்கும் அவரது ஆற்றலும், பாடகர்களைப் பாட வைக்கும் முன் அவர்களை உற்சாகப் படுத்தி தயார் படுத்தும் பாணியும் தோற்றவர்களைத் தட்டிக் கொடுத்து விடை கொடுக்கும் பாங்கும் அவரது தனித் தன்மை. அதேபோல் வேகமான உச்சரிப்புடன் நல்ல குரல் வளத்தால் பலரை ஈர்ந்து வைத்திருந்தவர் கே.எஸ்.ராஜா. நானும் அவர் இரசிகனாகவே இருந்தேன்.

ஒரு தடவை அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் தமிழர்களுக்கு எதிரான ஒரு தகவலை வெளியிட்டார். அன்றைய செய்தியின் முக்கிய தலைப்பாக அது வாசிக்கப் பட்டது. செய்தி முடிந்தபின் கே.எஸ்.ராஜா ஒலிபரப்பியது செல்வம் திரைப் படத்தில் வந்த „அவளா சொன்னாள் இருக்காது அப்படி ஒன்றும் நடக்காது நடக்கவும் கூடாது..' என்ற பாடல். இந்தப் பாடலை அவர் ஒலிபரப்பிய பின்னர் அவரை சிறிது காலம் வானொலியில் காணவில்லை. மேலிடத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

மீண்டும் கே.எஸ்.ராஜா வானொலியில் வந்தார். எம்ஜிஆர் திமுக வில் இருந்து நீக்கப் பட்ட செய்தி வந்தது. செய்திக்குப் பிறகு கே.எஸ்.ராஜா. „போனால் போகட்டும் போடா.. என்ற சிவாஜி கணேசன் படப் பாடலை அதுவும் கண்ணதாசன் எழுதிய பாடலை ஒலிபரப்பி எம்ஜிஆருக்கும் அவரது இரசிகர்களுக்கும் ஆறுதல் சொன்னார். „இது கோர்ட்டுக்குச் போனால் ஜெயிக்காது அந்தக் கோட்டைக்குள் நுழைந்தால் திரும்பாது போனால் போகட்டும் போடா.' என்ற அந்தப் பாடல் வரிகள் எம்ஜிஆரின் அந்த நிலைக்கு கச்சிதமாகப் பொருந்தி இருந்தன்.

கொழும்பில் கலவரம் தமிழர்கள் தாக்கப் பட்டார்கள். அன்று கே.எஸ்.ராஜா ஒலிபரப்பிய பாடல்களெல்லாம் எம்ஜிஆர் படங்களில் இடம் பெற்ற புரட்சிப் பாடல்களே. அதிலும் „என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே..' பணத்தோட்டத்துப் பாடல் முக்கியத்துவம் பெற்றது. அந்தப் பாடலில் வரும் கடைசி வரிகள் „..கலகத்தில் பிறப்பதுதான் நீதி மனம் கலங்காதே. மதி மயங்காதே' என்று வரும். யாரோ போட்டுக் கொடுத்து விட்டார்கள். அந்தப் பாடலை ஒலிபரப்பியதற்காக நாலாவது மாடிக்கு கே.எஸ்.ராஜா அழைக்கப் பட்டதாக செய்தி பின்னர் வந்தது.

இவைகளை எல்லாம் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பாடல் வரிகள் இடம் பெற்ற திரைப்படம், இசை அமைப்பாளர், கவிஞர், பாடல்கள் ஒலிபரப்ப வேண்டிய காலம் என்று எல்லா விபரங்களையும்; தெரிந்து கொண்டே அன்று தளத்துக்குள் நுழைந்தார்கள். தங்களது அதி மேதாவித் தனங்களைக் காட்டாமல் எது இரசிகனுக்குத் தேவையோ அவற்றை திறம்படத் தயாரித்துத் தந்தார்கள். இப்படி அன்றைய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் எனது ஆதங்கம் என்னவென்றால், அன்றைய தரத்துக்கு… அதாவது மூன்று நான்கு தசாப்தங்களுக்குப் பின்னால் தமிழர்களது வானொலித் துறை எப்படி இப்படி ஆயிற்று என்பதே.

இங்கே நான் முன்னர் சொல்லியது எல்லாம், இலங்கை தமிழ் வர்த்தக சேவையின் அன்றைய பெருமைகளைப் பற்றியதே. இன்றைய அவர்களது தரத்தை உரசிப் பார்க்கும் நோக்கம் எனக்கு இங்கே இல்லை. நான் புலம் பெயர்ந்து வந்து நிறைய வருடங்கள் ஆயிற்று. அவர்களது நிகழ்ச்சியைக் கேட்க எனக்கு இப்பொழுது வாய்ப்பு இல்லை. நான் சொல்ல வருவது புலம் பெயர் நாடுகளில் நான் கேட்கும் சில வானொலிகள் பற்றியே.

வலைத்தளத்துக்குள் நுழைந்தால் இணையத்தள வானொலிகள் சிதறிக் கிடக்கின்றன. என்னைக் கேள் உன்னைக் கேள் என்று வலைத்தளங்களில் அவை மின்னிக் கொண்டிருக்கின்றன. தனியாளாக, நண்பர்களாக, குடும்பமாக, அமைப்புகள் ரீதியாக, வர்த்தக நிறுவனங்களாக என ஏகப் பட்ட வானொலிகள். எங்கே போவது எதைக் கேட்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்க வேண்டிய நிலையாக இருக்கிறது. இதில் பலர் தங்களது பகுதிநேர வேலையாகவே வானொலியில் பணியாற்றுகிறார்கள். ஈழத்துக் கலைஞன் கலைகளில் சம்பாதிக்க வாய்ப்பில்லை. ஆகவே அவனால் பகுதி நேரமாகத்தான் வேலை செய்ய முடியும். அப்படியும் சிரமப்பட்டு வானொலி நடாத்துகிறானே அதைப் பாராட்ட உனக்குத் தெரியவில்லையா? என்று பலர் எரிக்கும் விழிகளுடன் என்னை நோக்குவது தெரிகிறது. அப்படிக் கேட்பவர்களில் ஒரு சில அறிவிப்பாளர்களின் பொருளாதார நிலையும் எனக்குப் புரிகிறது. ஆனால் நான் பேச வருவது வானொலிகளின் தரத்தைப் பற்றி மட்டுமே. பொருளாதாரத்தைப் பற்றி அல்ல.

சிலர் வானொலிகளை கணணியில் இணைத்து விட்டு தங்கள் வேலைகளைக் கவனிக்கப் போய் விடுகிறார்கள். அந்த வானொலிகள் தங்கள் விருப்பத்துக்கு பழையது, புதியது, இடைப்பட்டது எனப் பாடல்களைக் கலந்து ஆட்டோ ரிக்சா மாதிரி தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்கின்றன. இல்லை ஒலிபரப்பிக் கொண்டிருக்கின்றன. கணணியில் ஏதாவது தடங்கல்கள் வந்தால் அவை நின்று போய் பின் ஏதோ நினைத்து விட்டு „எந்திரன் எந்திரன்..' என்று பாடத் தொடங்குகின்றன. ஆக „விரும்பினால் கேள் இல்லை என்றால் போ' என்ற நிலைதான் அங்கே பலமாக நிற்கிறது.

சரி வானொலி நிலையங்களாக முத்திரை குத்திக் கொண்டு இயங்குவனவற்றைப் பற்றி சொல்ல வேண்டுமானால்......, அதற்குத்தான் கட்டுரையின் ஆரம்பத்திலே இப்படி ஆதங்கப் பட்டிருக்கிறேன். „எழுது என்கிறது ஒரு மனம் . வேண்டாம் எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று தடுக்கிறது ஒரு எண்ணம். எழுதி என்னதான் ஆகப் போகிறது என்ற கேள்வி எழுகிறது மறு புறம். ஆனாலும் எழுது என்கிற உந்துதலே மேலோங்கி நிற்கிறது.'

ஆகவே தொடர்ந்து எழுகிறேன்.

இதை எழுதுவதற்காக - சர்வதேச தமிழ் வானொலி ஒன்றில் சில வருடங்களுக்கு முன்னர் ஒலிபரப்பப் பட்ட ஒரு நிகழ்ச்சியை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்கிறேன்.

´பாதகாணிக்கை´ என்ற ஒரு திரைப் படம். அதில் இடம் பெற்ற ஆழமாக மனதில் பதிந்திருக்கும் ஒரு அற்புதமான பாடல் „பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா...'கண்ணதாசன் வரிகள் தர, விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில் பி.பி. சிறிநிவாஸ், ஜானகி இணைந்து பாட ஜெமினி கணேசன் விஜயகுமாரி அந்தப் பாடலுக்காக நடித்திருந்தார்கள்.

திருமணம் முடிந்து ஒரு முதலிரவில் இந்தப் பாடல் வருவதாகக் காட்சி அமைத்திருந்தார்கள். இருக்கட்டும். பாடல் நன்றாகத்தானே இருக்கிறது. காட்சியும் அழகாகத்தானே இருக்கிறது. பிரச்சினை உனக்கு எங்கே இருக்கிறது என்கிறீர்களா?

பிரச்சினை என்று ஒன்றும் பெரிதாக இல்லை ஒரு ஆதங்கம். அவ்வளவுதான்.

அன்று ஒரு நாள் இந்தப் பாடலை சர்வதேச தமிழ் வானொலி ஒன்றில் ஒலிபரப்பி அதற்கு விளக்கம் கேட்டார் அந்த அறிவிப்பாளர். விளக்கத்தை எழுதி அனுப்புங்கள் அடுத்த வாரம் சந்திப்போம் என்றார். எனக்குப் பிடித்தமான பாடல். விளக்கத்துடன் கேட்க அடுத்த வாரம் வரை காத்திருந்தேன். அடுத்த வாரம் வந்தார். தொலைநகலில் வந்த ஒரு ரசிகையின் விளக்கத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

'பூஜைக்கு வந்த மலரே வா. பூமிக்கு வந்த நிலவே வா என்று ஒரு கருத்தையும், பூஜைக்கு உவந்த மலரே வா. பூமிக்கு உவந்த நிலவே வா என்று இன்னும் ஒரு கருத்தையும் இந்தப் பாடல் கொண்டிருக்கிறது. எனவே சரியான விடையை எழுதி அனுப்பிய இன்னாருக்கு பாராட்டுக்கள். அவருக்கான பரிசுத் தொகை விரைவில் அனுப்பி வைக்கப்படும்' எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

பி.பி. சிறிநிவாஸ், ஜானகி இருவரும் தமிழர்களாக இல்லாவிட்டாலும். தமிழ் உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்திப் பாடுபவர்கள். அவர்கள் பாடும் போது 'வந்த' என்ற சொல்லே மேல் ஓங்கி நிற்கிறது. 'உவந்த' என்று காதில் ஆழமாக விழவில்லையே. கண்ணதாசன் இரண்டு பொருள் பட எழுதுவதில் வல்லவர். ஆகவே அவர் இரு பொருள் பட இந்தப் பாடலையும் எழுதி இருப்பாரோ என்று அன்று முழுவதும் குழப்பமாகவே இருந்தது.

 • 'கட்டான கட்டழகுக் கண்ணா - உன்னைக் காணாத கண்ணும் ஒரு கண்ணா...' 'வேலை வணங்காமல் வேறென்ன வேலை..' 
 • 'வக்கீலாத்து வசந்தா –உன் மனதை எந்தன் வசந்தா' 
 • 'குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி –எங்கள் குடும்பம் இருப்பது உன்னை நம்பி'
இவை போன்று இன்னும் பல பாடல்களில் கவிஞர் ஒரு சொல்லை பெயராகவும், வினையாகவும் வைத்து விளையாடி இருப்பார் அந்த வகையில் இதுவும் அடங்குமா?

'உள்ளமெல்லாம் இளகாயோ ஒவ்வொரு தேன் சுரக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ..' என்று பலே பாண்டியாவில் வரும் 'காய்' பாடல் போன்று இதுவும் ஒன்றா?

அப்படியாயின், அறிவிப்பாளர் ஒப்புவித்த கருத்தைப் பார்த்தால்,
பூஜைக்கு உவந்த மலர் சரி. அதென்ன பூமிக்கு உவந்த நிலவு? கூட்டிக் கழிச்சு ஏன் பெருக்கியும் பார்த்தால், உகந்ததோ இல்லையோ பூமிக்கு ஒரு நிலவுதான் இருக்கப் போகிறது. ஆக கவிதையில் பொருட் குற்றம் வந்து விடுமே? கண்ணதாசனின் பாடல்களில் பொருட் குற்றம் சொன்ன நக்கீரர்கள் இருக்கிறார்கள்.

பச்சரிசிப் பல் ஆட பம்பரத்து நாவாடா..'
உச்சி மரக் கிளையில் நின்று உயிர் வேரை அறுத்தவன் நான்..' 'பூஜ்ஜியத்துக்குள் ஒரு இராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு...'
என்று பாடல் வரிகளைச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அந்தப் பாடல்கள் எல்லாம் நேரடியாகப் பொருள் தருபவை. பூஜைக்கு வந்த மலரே வா பாடலில் நேரடியாகப் பார்த்தால் பொருட் குற்றம் எதுவும் இல்லை. பிரித்துப் பார்த்தால்தான் பிரச்சினையாகிறது.

தேவர் மகன் திரைப் படத்தில் வரும் 'இஞ்சி இடுப் பழகி..' பாடலில் எஸ். ஜானகி பாடும் வரிகளைப் பார்த்தால்,
'இஞ்சி இடுப்பழகா... மஞ்ச சிவப்பழகா... கள்ளச் சிரிப்பழகா...மறக்க மனம் கூடுதில்லையே... ' வரிகளை பிரித்து மேய வெளிக்கிட்டால், இஞ்சி இடுப்பு அழகா? மஞ்ச சிவப்பு அழகா? கள்ளச் சிரிப்பு அழகா? என்று கேட்க வேண்டி வரும்.

நிறத்தைப் பற்றிச் சொல்லும் போது இன்னும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.
'என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை...'
என்ற பாடலில் உள்ள வரிகளை உற்றுப் பார்த்தால்;

மஞ்சள் நிறத் தவளை – என்
நெஞ்சில் நிலத் தவளை
என்றெல்லாம் காதலியை காதலன் தவளையாக வர்ணிக்கிறான் என்று கருத்தக் கொள்ள வேண்டி வரும்.

திருக்குறளுக்கு பலர் உரை எழுதி இருக்கிறார்கள். தாங்கள் இருக்கும் சூழல், தங்களது வாழ்வியல் அனுபவங்கள், அறிவுகள் எல்லாவற்றையும் இணைத்து பொருள் எழுதுவார்கள். அது போல்தான் கண்ணதாசனின் பாடலுக்கு அறிவிப்பாளர் விளக்கம் தந்திருக்கிறார் என்று எண்ணிக் கொள்வதைத் தவிர வேறு மார்க்கம் எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் பூமிக்கு உவந்த நிலவு என்று சொன்னவருக்குப் பரிசு தந்து, நேரடியாக விளக்கம் தந்தவரை கண்டு கொள்ளாமல் விட்டது அறிவிப்பாளரின் அதிகப் பிரசங்கித் தனம் என்பதுதான் எனது கருத்து. இது நடந்து பல வருடங்களாயிற்று என்றாலும், என்னுள் அமர்ந்திருந்த ஒரு உறுத்தலை இன்று உலா வர விட்டிருக்கிறேன்.

நாங்கள் மீண்டும் வந்து விட்டோம். வாருங்கள் வந்து பாருங்கள, கேளுங்கள்; என்று அறிவிப்பு வந்திருந்தது. சரி என்னதான் சொல்கிறார்கள் போய்த்தான் பார்ப்போம் என்று அந்த வானொலிக்குக் காது கொடுத்துக் கேட்டேன்.

நான் அந்த வானொலியில் கேட்டதற்கு முன்னால், இந்த விடயத்தை முதலில் சொல்லி விடுகிறேன்.

60களின் பிற்பகுதியில் வந்த செல்வம் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு அற்புதமான பாடல். அது பட்டி தொட்டிகள் எல்லாம் அன்று ஒலித்துக் கொண்டிருந்தது. ஜமுனாராணி, தாராபுரம் சுந்தரராஜன் இணைந்து பாடிய பாடல். அப்பொழுது எல்லாம் திருவிழாக் காலங்களில் அதிகம் சுழன்ற இசைத் தட்டுக்களில் இதுவும் ஒன்று. கே.வி மகாதேவன் இசைக்கு வாலி கவிதை எழுதி இருந்தார்.

எனக்காகவா நான் உனக்கானவா என்னைக் காணவா என்னில் உன்னைக் காணவா

இந்தப் பாடலில் பலருக்கு அன்று ஒரு மயக்கம் இருந்தது. அந்த மயக்கத்தைத் தரும் குரலாக ஜமுனாராணி இருந்தார். அவர் குரலில் வந்த சில பாடல்களில் எனக்கு இன்றும் மயக்கம் உண்டு.

 • 'என் ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா' 'செந்தமிழ் தேன் மொழியாள்' 
 • 'காமுகர் நெஞ்சில் நீதியில்லை' 
 • 'அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு' 
 • 'காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு' 
 • 'சித்திரத்தில் பெண் எழுதி சீர் படுத்தும் மானுடமே ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயா 
 • 'பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதைப் பாடவில்லை 'மாமா,மாமா மாமா' 
 • 'குங்குமப் பூவே, கொஞ்சும்புறாவே'
 • 'நான் சிரித்தால் தீபாவளி'
போன்ற பாடல்களை இங்கே உதாரணத்திற்குத் தருகிறேன்.

தாராபுரம் சுந்தரராஜன் சினிமாவுக்காக அதிக பாடல்கள் பாடவில்லை. ஆனால் ஜமுனாராணியுடன் இணைந்து அவர் பாடிய 'எனக்காகவா நான் உனக்காகவா' பாடல் மிகப் பிரபலமானது. அறுபதுகளில் வாழ்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல, அதன் பின்னரும் கூட இந்தப் பாடல் பலருக்குத் தெரிந்திருக்கும்.

அதிலும்,
இளவேனில் வெயிலே காய இளம் மீன்கள் கண்ணில் மேய
இளமேனி தோளில் சாய இதழோரம் தேனும் ஊற..
என ஜமுனாராணியின் குரலில் குழைந்து வரும் பாடலின் ஆரம்பம் நிச்சயமாகப் பலரை கிறங்கடித்திருக்கும்.

இப்பொழுது நான் காது கொடுத்து வானொலியில் கேட்டதைச் சொல்லி விடுகிறேன்.

'உங்கள் விருப்பம் நிகழ்ச்சியில் ஒரு நேயர் என்னிடம் 'எனக்காகவா நான் உனக்காகவா...' என்ற பாடலைக் கேட்டிருந்தார். அந்தப் பாடலில் ஏதாவது ஏடாகூடமாக இருக்குமோ என்ற பயத்தில் அது எங்களிடம் இல்லை என்று சொல்லி விட்டேன். ஆனால் கலையகத்தில் அந்தப் பாடல் இருந்தது. பிறகு நான் தனியாக அந்தப் பாடலைக் கேட்டு, அதில் அப்படி ஒன்றும் இல்லாததால் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அந்தப் பாடலை அந்த நேயருக்காக ஒலிபரப்பினேன்...' என்று வானொலியில் சொன்னார் ஒரு அறிவிப்பாளர். இந்த ஒரு சம்பவத்தில் அந்த அறிவிப்பாளரின் ஞானத்தைப் புரிந்து கொண்டேன்.

எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரு தளத்துக்குள் நுழையும் பொழுது குறைந்த பட்சம் அது சம்பந்தமான விடயங்களையாவது தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இத்தனைக்கும் `நெஞ்சில் நிறைந்தவை´ நிகழ்ச்சியில் நான் கேட்டிராத பல பழைய பாடல்களை தேடி எடுத்து வந்து தூசி தட்டி தன் விளக்கம் தந்து ஒலிபரப்பும் ஒரு அறிவிப்பாளர் அவர்.

அவருக்கு ஏன் இந்தப் பாடல் தெரியாமல் போனது என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சரி அவருக்குத் தெரியாமலே போகட்டும். அன்றைய கால கட்டத்தில் நாங்கள் விரும்பிய பாடல்களைக் கேட்க வானொலிப் பெட்டி முன் தவமாய் இருந்தோம். வானொலி நிலையத்துக்கு எழுதிப் போட்டு ஒலிபரப்புவார்கள் என்று காத்திருந்தோம். ஆனால் இன்று நிலமை அப்படி இல்லை. வேண்டிய பாடலை இணையத்தில் தேடினால் உடனேயே வந்து விடப் போகிறது. விரும்பிய பாடல்களை வேண்டிய தடவைகள் கேட்டு விட முடிகிறது. இப்படியான நிலையில் ஒரு நேயர் ஏன் வானொலிக்கு தொலைபேசி எடுத்து, காத்து நின்று ஒரு பாடலைக் கேட்க விரும்புகிறார்? தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற அவர் விரும்புகிறார் என்ற பரந்த நோக்கமா? இல்லை தனது குரலும் வானொலியில் ஒலித்தது என்கிற பெருமையா? எதுவாகவேனும் இருந்து விட்டுப் போகட்டும்.

'மடல் வாழை தொடை இருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க..'
'தேன் கனிகள் இருபுறமும் தாங்கி வரும்..

பாடல்கள் எல்லாம் அந்த வானொலியில் ஒலிக்கிறது.

'வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது..'
என்ற இரு கருத்துப் பாடல்களை அவர்களால் தர முடிகிறது.

தீப்பிடிக்க தீப்பிடிக்க பாடல்களேயே ஒலிபரப்ப முடிகிறது.

எனக்காகவா பாடல்களில்தான் வில்லங்கம் இருக்கிறதா எனப் பார்க்கிறார்கள்.

இதேபோல் இன்னும் ஒரு விடயம்,

தங்களுக்குப் பிடித்த பாடல்களை இரண்டு அறிவிப்பாளர்கள் இணைந்து வானொலியில் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பிடித்திருந்த பாடல்கள் எனக்கும் பிடித்திருந்தது. பாடல்களுக்கான விளக்கங்களையும் மேலதிகமாகத் தந்து கொண்டிருந்தார்கள்.

'உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது..'`நான் ஏன் பிறந்தேன்´ திரைப் படத்தில் இடம் பெற்ற மனதை விட்டகலாத ஒரு பாடல். இரண்டு அறிவிப்பாளர்களும் இந்தப் பாடல் பற்றி ஆளாளுக்கு விளக்கம் தந்து கொண்டிருந்தார்கள்.

'இசை அமைப்பாளர்கள் சங்கர் கணேஸ். எம்ஜிஆர் படம். கேஆர்.விஜயா நடித்திருந்தார். படத்தில் பாடல் இடம் பெறும் பொழுது அசோகன் ஒழித்து நின்று எட்டி எட்டிப் பார்ப்பார்...' என்று ஒரு அறிவிப்பாளர் விளக்கம் தந்தார்.

நான் ஏன் பிறந்தேன் திரைப் படத்தில் அசோகன் நடித்திருந்தாரா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. பிறகு புரிந்து கொண்டேன் அந்த அறிவிப்பாளர் தேங்காய் சீனிவாசனைத்தான் அசோகன் என்று சொல்கிறார் என்று.

இவை எல்லாம் அறிவிப்பாளர்களின் அறிவு ஞானங்கள். அறிந்ததைத் தரலாம். தெரியாததைத் தவிர்க்கலாம். அல்லது தேடுதலில் பெற்றுக் கொண்டு அழகாகத் தொகுத்துத் தரலாம். ஒன்றும் அவசரம் இல்லை. எனக்குத் தெரியும் என்று நினைத்துக் கொண்டு தவறானவற்றை தந்து விடக் கூடாது. பின்னாளில் யாராவது சுட்டிக் காட்டினால், 'அப்படியா? தகவலுக்கு நன்றி..' என்று சமாளிக்கக் கூடாது.

இசைத்தட்டுக்களை மட்டும் வைத்துக் கொண்டு அன்றைய காலத்தில் வானொலி அறிவிப்பாளர்கள் தந்த தகவல்கள், அவர்கள் சுவை படத் தந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் அன்று செய்த நிகழ்ச்சிகளை இணையத்தில் தேடி எடுத்து திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். தடங்கல் இன்றி அவர்கள் தெளிவாகப் பேசிய தமிழைப் பயிற்சி செய்து பெற வேண்டும்.

அவசரமும் அதிகப் பிரசங்கித் தனமும் அறிவிப்பாளருக்கு ஆகாது. எழுது என்கிற உந்தலே மேலாக நின்றதனால்தான் இதை எழுதியிருக்கிறேன்.

ஆழ்வாப்பிள்ளை
Mai 2014

Friday, June 13, 2014

மொய்

சமைச்சுக் கொண்டிருக்கிற நேரமாகப் பார்த்து தொலைபேசி அலறுகிறது.

"இந்தச் சனங்களுக்கு வேறை வேலையில்லை. சமைச்சுக் கொண்டிருக்கிற நேரமாப் பார்த்துத்தான் ரெலிபோன் பண்ணுங்கள். நேற்றும் வெங்காயம் எரிஞ்சு போட்டுது." புறுபுறுத்த படி சமையலறையிலிருந்து வெளியில் வந்த செண்பகக்காவின் மனசு ஏதும் தொல்லைபேசியாக இருக்குமோ என்று தயக்கம் காட்டினாலும், கால்கள் விரைய கைகள் தொலைபேசியைத் தூக்க...

"வணக்கம் அக்கா. நான் சாந்தன் கதைக்கிறன்."

"எந்தச் சாந்தன்..? கறுத்தச் சாந்தனோ..?"

"இல்லையக்கா"

"அப்ப... எரிமலை சாந்தனோ..?

"இல்லை...யக்கா. நான் அண்டைக்கு.. மைக்டொனால்ட்ஸ் சிறீயின்ரை கலியாணவீட்டிலை உங்களோடை கதைச்சன்.."

"அட நீங்களே..? சொல்லுங்கோ தம்பி என்ன விசயம்..?"

"உங்கடை வீட்டுக்கு எப்பிடியக்கா வாறது? ஒருக்கால் வழியைச் சொல்லுவிங்களோ..?"

இவன் ஏன் இப்ப இங்கை..! சொந்தமும் இல்லை. நட்பும் இல்லை. எப்பவோ ஏதோ ஒரு கலியாண வீட்டிலை சந்திச்சது. அவ்வளவுதான். என்ரை கணவரை முந்தியே இடைக்கிடை றோட்டு வழியே கண்டு கதைச்சிருக்கிறானாம். அண்டைக்கும் கலியாண வீட்டிலை மொய் எழுதிற வரிசையிலை நிண்டு மைக்கை விழுங்கினவன் மாதிரி பெரிய சத்தமாகக் கதைச்சுக் கொண்டு நிண்டவன். எங்கடை இடத்திலையிருந்து 100கி.மீற் தள்ளியிருக்கிறான்.

"தம்பி..! என்ன விசயம்? இவ்வளவு தூரம் எங்களைத் தேடி வர..?"

"அது வந்து... மகள் சாமத்தியப் பட்டிட்டா. வாற சனிக்குத் தண்ணி வார்க்கிறம். அதுதான் கார்ட்டைக் கொண்டு வந்து நேரேயே தந்திட்டுப் போவமெண்டு.."

உந்தக் கார்ட் தாறதுக்கு பெற்றோல் செலவழிச்சு 150கி.மீற் கார் ஓடி வரப் போறிங்களே..? ஏன் தம்பி உங்களுக்கு வீண் அலைச்சல்? தபாலிலை அனுப்பி விடுங்கோ.

செண்பகக்கா ஏதோ அவன் அலைஞ்சு கஸ்டப்படுறதைப் பார்க்க தனக்கு விருப்பமில்லை என்பது போலக் கதைத்தாலும், உள்ளுக்குள் 150கி.மீற் தூரத்திலையிருந்து வாறவனைச் சும்மா அனுப்பேலுமே! சமைச்சுமெல்லோ கொடுக்கோணும்.. என்ற பயம்தான் இருந்தது.

"பிறகு நீங்கள் குறை பிடிக்க மாட்டிங்களே..?"

"இதிலை குறை பிடிக்க என்ன தம்பி இருக்குது? நான் ஒண்டும் குறை நினைக்க மாட்டன். நீங்கள் தபாலிலை அனுப்புங்கோ.

ம்… திரும்ப இண்டைக்கும்.. அடுப்பிலை வெங்காயம் எரிஞ்சு போட்டுது. நேற்றும் இந்த மனிசன் முகத்தைக் கோணி வைச்சுக் கொண்டு சாப்பிட்டது.

சனத்துக்கு வேறை வேலையில்லை. மகள் சாமத்தியப் பட்டிட்டுதாம். மகளையே நான் ஒரு நாளும் கண்ணாலை காணேல்லை. இப்ப உதுக்குப் போய் மொய் எழுதோணுமே!

சா... யேர்மனியை விட்டிட்டு பேசாமல் செட்டி நாட்டிலை போய் இருக்கலாம் போலை இருக்கு. அங்கை கலியாணத்துக்கே மொய் 25பைசாதானாம்.

சந்திரவதனா
3.8.2004

பிரசுரம் - எரிமலை (Aug-2004)

Online னாலை எல்லாம் செய்யலாம்

பேரன் தீரன் விளையாடிக் கொண்டிருந்தான்.

எனது மருமகள் அவனிடம்
"தீரன் அந்த காற்சட்டையை ஒருக்கால் அப்பம்மாவுக்குப் போட்டுக் காட்டு"

விளையாடுவதை விட்டு வந்து காற்சட்டையைப் போட்டுக் காட்டுவதா..?
"பிறகு போட்டுக் காட்டுகிறேன்" என்றான்.

"இல்லை, இப்பவே போட்டுக் காட்டு. அப்பம்மா போகோணும்"

"அது பிரச்சனையில்லை. பிறகு Online னாலை எல்லாம் செய்யலாம்" என்றான்.

Sunday, June 08, 2014

வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள்

ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முதல் இன ஒடுக்குமுறைக்காக அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பெற்ற கூ-குளுக்ஸ்-கிளான் என்ற அமைப்பு  சட்டரீதியாகத் தடைசெய்யப் பட்டதாயினும் திரை மறைவில் அதன் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த அமைப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல யேர்மனியிலும் தனது செயற்பாட்டை வைத்திருப்பது இப்பொழுது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. வெளிநாட்டவர்களை வெறுக்கும் யேர்மனிய இனவாதிகள் சிலர் இந்த அமைப்பைப் புதுப்பித்து யேர்மனியில் செயற்பட்ட செய்தியானது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த அமைப்புக்குள் யேர்மனிய காவல்துறையைச் சேர்ந்தவர்களும் இருந்தது கண்டு பிடிக்கப் பட்ட பொழுது அது அதிர்ச்சிக்குள் இன்னும் அதிர்ச்சியாகிப் போனது.

யேர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான பல தாக்குதல்கள் துலக்கப்படாமலே இருந்து வந்தது. அதிலும் 2000 இல் இருந்து 2006ம் ஆண்டுவரை சிறிய வர்த்தக நிலையங்களை வைத்திருந்த எட்டு துருக்கி இனத்தவர்களதும், ஒரு கிரீக் நாட்டவரதும் கொலைகள் மர்மமாகவும் வெளிநாட்டவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்து வந்தன. 25.04.2007 இல் கைல்புறோன் என்ற நகரத்தில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப் பட்டதும் அவருடன் கடமையில் இருந்த மற்றைய ஆண் பொலிஸ் படுகாயப் படுத்தப் பட்டதும் யேர்மனியின் பொலிஸ் துறையையே புரட்டிப் போட்டது. எவ்வளவுதான் புலனாய்வுகள் செய்தும் கொலையாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்த முடியவில்லை. இது யேர்மனிய பொலிஸின் கையாகாலாத தன்மையா? அல்லது குற்றவாளிகளின் தடயங்கள்  திட்டமிட்டே அழிக்கப் படுகின்றனவா? என்ற கேள்விகளும், கருத்தாடல்களும் மக்கள் மத்தியில் மேலோங்கத் தொடங்கின. பொலிஸைச் சேர்ந்த ஒருவர் பட்டப் பகலில் அதுவும் கடமையில் ஈடுபட்டிருக்கும் பொழுது அவரது வாகனத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப் பட்டதும், மற்றையவர் படுகாயப் படுத்தப் பட்டதும், தாக்குதலின் பின்னர்  அவர்களது ஆயுதங்கள் களவாடப் பட்டதும் சாதாரண விடயங்கள் அல்ல. பொலிசுக்கே நிலமை மோசம் என்றால், சாதாரண பொதுமக்களுக்கு, அதுவும் வெளிநாட்டவருக்கு என்ன பாதுகாப்பு என்று யேர்மனிய ஊடகங்கள் கேள்வி எழுப்பின. 

Haller Tagblatt என்ற பத்திரிகையின்  ஆசிரியரும், எடிட்டரும், எழுத்தாளருமான துமிலன் என்பவர், யேர்மனியில் இயங்கும் கூ-குளுக்ஸ்-கிளான் பற்றி தான் சேகரித்த தகவல்களை பத்திரிகையில் எழுதத் தொடங்க மறைந்திருந்த பல தகவல்கள் மக்களைச் சென்றடைந்தன. அதிலும் முக்கியமாக, நியோநாசி என்று அழைக்கப் படும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான அமைப்புக்கும்  கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்புக்குமான தொடர்புகளை அவர் வெளிச்சம் போட்டுக் காட்ட, அது பொலிஸ் துறைக்கு ஒரு சவாலாகப் போய் விட்டது. அரசியல்வாதிகளும் தங்கள் பங்குக்கு பாராளுமன்றத்தில், சட்டம், பாதுகாப்பு, ஒழுங்கு பற்றி விவாதத்தைத் தொடங்கி விட்டனர். 

04.11.2011 இல் Mundlos, Boehnhardt ஆகிய இரு யேர்மனியர் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் தற்கொலை செய்யும் முன் Eisenach என்ற நகரத்தில் உள்ள வங்கியில் 70,000 யூரோக்களைக் கொள்ளை அடித்திருந்தார்கள். பொலிஸார் Eisenach நகரத்தைச் சுற்றி வளைத்து கொள்ளையர்களைத் தேடத் தொடங்கினார்கள்.  அநாதையாக நின்ற வெள்ளை நிற கரவன் வாகனம் ஒன்றை  பொலிஸ் நெருங்கும் பொழுது, அதற்குள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. தொடர்ந்து கரும் புகையுடன் வாகனம் தீப்பற்றிக் கொண்டது. தீயை அணைத்து பொலிஸ்  வாகனத்துக்குள் நுளைந்த பொழுது வாகனத்துக்குள் Mundlos, Boehnhardt  இருவரும் தங்களைத் தாங்களே சுட்டுக் கொண்டு இறந்திருந்தார்கள். இறப்பதற்கு முன்னால் வாகனத்தை உள்ளிருந்தே அவர்கள் தீயிட்டு இருந்தது புலனாய்வில் தெரிய வந்தது. வாகனத்துக்குள் இருந்து 110,000 யூரோக்கள், கொலைக்குப் பயன் படுத்திய ஆயுதங்கள், கைல்புறோன் நகர பொலிஸிடம் இருந்து கைப்பற்றப் பட்ட துப்பாக்கிகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர். இதேநாள் மாலை 3மணிக்கு Weissenborn என்ற நகரத்தில் ஒரு வீடு குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது. இந்த வீட்டில்தான் தற்கொலை செய்து கொண்ட Mundlos, Boehnhardt  இருவரும்  வாழ்ந்து வந்தார்கள் என்பது பொலிசுக்குத் தெரிய வந்தது. இவர்களுடன் வாழ்ந்து வந்த இன்னும்  ஒருவரான Beate Zschaepe என்ற பெண்ணே குண்டு வைத்து வீட்டைத் தகர்த்து விட்டுத் தப்பி ஒடியதும் தெரிய வந்தது. 

பின்னர்  அவரை பொலிஸ் கைது செய்தது. இதன் பின்னர் பல தகவல்கள் வெளிவரத் தொடங்கின. வெளிநாட்டவர்களின் கொலைகளைச் செய்தவர்கள் இவர்கள்தான் என்றும், 14 தடவைகள் வங்கிகளைக் கொள்ளையடித்து அந்தப் பணத்தில்தான் தங்கள் செலவுகளைப் பார்த்துக் கொண்டார்கள் என்றும் தற்கொலை செய்த ஆண்களுடன் செயற்பட்ட ஒரு பெண்ணை கைது செய்திருக்கிறோம் என்றும் பொலிஸ் அறிக்கையை வெளியிட்டது.
„சரி. அப்படியாயின் கைல்புறோன் நகரத்தில் பெண் பொலிஸை ஏன் கொன்றார்கள்? பொலிஸ் துறைக்குள்ளும் நியோநாசியா?' என்ற கேள்விகளை ஊடகங்கள் கேட்கத் தொடங்கின. இவை சம்பந்தமாகப் பல கட்டுரைகளை அவை எழுதத் தொடங்கின.

பல கேள்விகளுக்குப் பதில்கள்; இன்னும் தெளிவாக இல்லை. நியோநாசி என்ற இனவாத அமைப்பு தேசிய சோசலிய திரைமறைவு அமைப்பாக (Nationalsozialistischer Untergrund (NSU)) தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு செய்த குற்றச் செயல்கள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் போன்ற பல விடயங்களைத் திரட்டி யேர்மனியில் பத்து எழுத்தாளர்கள் இணைந்து எழுதிய ´என்எஸ்யு வின் இரகசிய விடயங்கள்` (Geheimsache NSU)  என்ற புத்தகம் மே 26 இல் வெளிவந்துள்ளது.

இந்தப் பத்து எழுத்தாளர்களில் ஒருவராகத் துமிலன் இருக்கின்றார். தமிழரான இவர் 1986இல் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். இன்று யேர்மன் பத்திரிகை ஒன்றின் ஆசிரியராகவும், எடிட்டராகவும், எழுத்தாளராகவும் இருக்கின்றார். இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் பல சிக்கலான பிரச்சனைகளையும் ஆபத்து நிறைந்த விடயங்களையுமே தொட்டு நிற்கின்றன.
துமிலன், தேசிய சோசலிய அமைப்பின் திரைமறைவுச் சம்பவங்களைப் பத்திரிகையில் வெளிச்சம் போட்டுக் காண்பித்தவர்களில் முதன்மையாக இருக்கிறார். அவர்கள் சம்பந்தமான விடயங்களைச் சேகரிப்பதற்காக பல ஆபத்து நிறைந்த இடங்களுக்குச் சென்று தகவல்களைத் திரட்டி இருக்கிறார்.
இன்றும் என்எஸ்யூ வின் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில், என்எஸ்யூ விற்கு எதிராக நீதிமன்றத்துக்கு சாட்சி சொல்ல வர இருந்த ஒருவர் வழக்குக்கு முதல் நாள் மர்மமான முறையில் இறந்திருந்தார். இந்த சம்பவம் இன்னமும் நாங்கள் இருக்கிறோம் என்று அவர்கள் கட்டியம் கூறுவதாக இருக்கிறது.

துமிலன் ஒரு தமிழனாக இருந்து யேர்மனிய மொழியில் நூல் வெளியிடுவதில் பெருமை இருக்கிறது. அதை விட வெளிநாட்டவர்களையே கொலை செய்யும் ஒரு நியோநாசி அமைப்பைப் பற்றியும் அவர்களின் திரைமறைவுச் செயற்பாடுகளையும் எழுதும் ஒரு வெளிநாட்டவர் என்றளவில் மிகப் பெருமையாக இருக்கிறது.

ஆழ்வாப்பிள்ளை
26.5.2014

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite