தாயகம் நோக்கி - 1 தாயகம் நோக்கி - 2தாயகம் நோக்கி - 3
அடிக்கடி ரோச்சைப் பிடித்து நேரம் பார்த்து 5.30 என்றதும் எழுந்து கொண்டேன். வெளியில் போய் இருள் கலைந்து கொண்டிருக்கும் அதிகாலையின் இயற்கை அழகைச் சிறிது நேரம் பருகி விட்டுக் காலைக் கடன்களை முடித்து, குளித்து வரும் போது வோச்சர் ஐயா முற்றம் கூட்டத் தொடங்கி இருந்தார். கணக்காளர் பாஸ்கரன் எனது அறைக்கு முன்பக்கமுள்ள சிறிய முற்றத்தைக் கூட்டத் தொடங்கியிருந்தான். மாஸ்டர் என அழைக்கப் படும் சுகுணன் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தான்.
நான் ஒற்றைப் பனையின் கீழ் கதிரை போட்டு அமர்ந்து கொள்ள சுகுணன் தேநீருடன் வந்தான். அம்மாவுடன் வாழ்ந்த காலங்களுக்குப் பிறகு இருந்த இடத்தில் எனக்காகத் தேநீர் தயாரிக்கப் பட்டு வருவது புது அனுபவம். தேநீர் சுமாராக இருந்தாலும் வெண்புறா உறவுகள் அத்தனை பேரும் என்மேல் காட்டும் அன்பு என்னை நெகிழ வைத்தது. தமது கஷ்டங்களைப் பற்றியதான அக்கறைகள் எதுவுமின்றி எனக்கு எந்த விதமான அசௌகரியங்களும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலான அவர்களது அவதானம், அவர்கள் மேல் எனக்கு மிகுந்த பிரியத்தை ஏற்படுத்தியது.
அவர்களில் சிலர் காலை வணக்கங்களுடன் என்னைத் தாண்டி கேற் கடந்து கரடிபோக்குச் சந்தி வெள்ளவாய்க்காலுக்கு குளிப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார்கள். சிலர் நின்று என்னோடு சிரித்து, பேசிச் சென்றார்கள்.
சொல்லாமல் கொள்ளாமல் வெயில் வெண்புறா நிறுவனத்துக்குள்ளும் புகுந்து மெய் கருக்கத் தொடங்கியது. கால் போடுவதற்காக ஆட்கள் வரத் தொடங்கி இருந்தார்கள். சடகோபன் வேலையைத் தொடங்குவதற்காக செயற்கைக் கால் தயாரிக்கும் பட்டறைக்குள் நுழைந்தான். நேரத்தைப் பார்த்தேன். எட்டு மணியாகி இருந்தது.
முதல்நாட்தான் Fiberglass இல் கால்செய்வதற்கான வகுப்பு சரியாகத் தொடங்கியது. நாம் புறப்படும் போதே யேர்மனியின் டுசுல்டோர்ஃப் (Düsseldorf) விமான நிலையத்தில் Fiberglass இல் கால் செய்வதற்கான மருந்துப் பொருட்களில் பவுடர் போல இருந்த சில பொருட்களை எம்முடன் கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி விட்டார்கள். பின்னர் நாங்கள் விளக்குவைச்ச குளத்தில் பொருட்களுடன் தாண்டப் பயந்து வவுனியாவில் சிலதை விட்டு விட்டோம். அதனால் வந்த உடனே நாம் எதிர்பார்த்தது போல வகுப்பைத் தொடங்க முடியாதிருந்தது.

ஆனால் அந்த நேரம் அவர்கள் செய்யும் தகரக் கால்களையே செய்ய விட்டு எப்படிக் கால்களைத் தயாரிக்கிறார்கள் எனப் பார்த்தோம். மிகவும் ஆச்சரியம்தான். இரண்டு மணித்தியாலங்கள் கூடத் தேவைப்படவில்லை. வசதியான நவீன தொழில் நுட்ப உபகரணங்கள் ஏதுமின்றி அவர்கள் மூன்று கால்களைச் செய்து முடித்த வேகம் எங்களை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது.

சடகோபனும், ஹரிஹரனும், யுவராஜ்யும் கால் போட வந்தவர்களில் மூவரின் கால்களை ஒரே நேரத்தில் அளவெடுக்கத் தொடங்கி, கத்தரிக்கோலால் தகரங்களை வெட்டி, அதை கால் வடிவத்திற்கு சிறிது சிறிதாகத் தட்டியெடுத்து அடித்து நெளித்து, நேர்த்தியாக மடித்துக் கொண்டிருக்க, சிறீயும் கிருஷ்ணாவும் பாதத்தையும் மேற்காலையும் பொருத்துவதற்கான கட்டையை வெட்ட (உபகரண வசதிகள் இல்லாததால் ஒரு சிறிய வட்டக் கட்டையை வெட்டி எடுப்பதற்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் தேவைப்பட்டது.) அங்கிருப்பவர்களில் மிகவும் வயது குறைந்த தம்பி என்றழைக்கப் படும், 17 வயது நிரம்பிய சதாசிவம் செயற்கைக் காலின் மேற்பகுதியை அதாவது முழங்காலுக்கு மேல் தொடையோடு பொருந்தும் பகுதிக்கான தோல் பட்டியை மெசினில் தைக்க, இன்னும் சிறிய சிறிய தொட்டாட்டு வேலைகளை மற்றவர்கள் தொடர, நாம் பார்த்துக் கொண்டிருக்கவே இரண்டு மணித்தியாலங்களுக்குள் மூன்று கால்கள் தயார்.
காலையில் கால் இல்லாமல் வந்தவர்களில் அளவெடுக்கப் பட்ட அந்த மூவரும் காலை அணிந்து கொண்டு நடப்பதற்கான பயிற்சியை எடுக்கத் தொடங்கிய போது நியமாகவே எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசமும் வியப்பும் ஏற்பட்டது.

இன்னும் ஐந்து நாட்கள் அவர்கள் மூவரும் வெண்புறாவிலேயே தங்கியிருந்து நடப்பதற்கான பயிற்சியை எடுத்து, காலுடன் செல்வார்களாம். காலை எட்டு மணியிலிருந்து மாலை நான்கு மணிவரை பயிற்சி நடக்கும். அவர்கள் அந்ந ஐந்து நாட்களும் அங்கு தங்கிச் செல்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப் படும். இருப்பிட, உணவுச் செலவுகள் அனைத்துமே வெண்புறாவினுடையதுதான். என்ன ஒரு மனிதநேயமான கரிசனமான செயல்! வியப்பு..! வியப்பு..! வியப்பு...!
தகரத்தில் கால்களைச் செய்யும் அவர்களது அந்த வேகத்துக்கு ஏற்ப Fiberglass கால்களைச் செய்ய முடியாது என்று ஹொல்கெர் சொல்லி விட்டார்.
முதல்நாட்தான் நாம் ஜேர்மனிய விமான நிலையத்தில் விட்டு வந்த பொருட்களை தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் ஜேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் ஆனந்தராஜா அவர்கள் எடுத்து மீளவும் எமக்கு அனுப்பி இருந்தார். வவுனியாவில் விட்டு வந்த பொருட்களும் எம்மை வந்தடைந்தன. இதற்கிடையில் முல்லைத்தீவுக் கடற்கரை வரை சென்று இது சம்பந்தமான சில பொருட்களை கப்பல் தயாரிப்பாளர்களிடமும் பெற்று வந்தோம்.

முதல்நாள் தொடங்கிய வகுப்பை வெண்புறா உறவுகள் அனைவரும் ஒன்றாக இருந்து மிக ஆர்வமாக அவதானித்தார்கள். சரியான உபகரணங்களோ, புதிய தொழில்நுட்ப வசதிகளோ அங்கு இல்லாததால் நாம் கொண்டு சென்ற புதிய Fiberglass கால் செய்யும் திட்டத்தைச் செயற்படுத்துவதில் சில அசௌகரியங்களும் இருக்கத்தான் செய்தன. மின்சாரம் பெரும் பிரச்சனையாக இருந்தது. வழமையில் இரவு மட்டுமே ஆறு மணியிலிருந்து பத்து மணிவரை இயங்க வைக்கப்பட்டு மின்சாரத்தைத் தந்த ஜெனரேட்டரிலிருந்து Fiberglass கால் செய்வதற்குத் தேவையான மின்சாரத்தைப் பெறுவது மிகவும் கடினமாயிருந்தது. பலதடவைகள் மின்சாரம் நின்று நின்று, திரும்பத் திரும்ப ஜெனரேட்டரை இயங்க வைத்து, வகுப்பைத் தொடர்ந்த போது ஜேர்மனிக்குப் போனதும் கண்டிப்பாக இவர்களுக்கு இன்னும் இரண்டு ஜெனரேட்டர் வாங்கப் பணம் சேர்த்து அனுப்ப வேண்டுமென நினைத்துக் கொண்டேன். தாயகம் நோக்கிப் பயணிப்பவர்களை பட்டறைக்குத் தேவையான உபகரணங்களை கொண்டு சென்று அன்பளிப்புச் செய்யச் சொல்ல வேண்டுமென எனது கொப்பியில் குறித்துக் கொண்டேன்.

சடகோபனைத் தொடர்ந்து மற்றையவர்களும் பட்டறைக்குச் சென்று கொண்டிருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன் தகரக் கால்களைப் பெற்றுக் கொண்ட மூன்று பிள்ளைகளுக்குத் தாயான ராஜலட்சுமி நடைப்பயிற்சி எடுக்கத் தொடங்கியிருந்தாள்.
எனது கணவரும் ஹொல்கெரும் பட்டறைக்குள் நுழைந்தார்கள். உடனே நானும் எழுந்து கொண்டேன். முற்றத்து மண் செருப்புக்குள் புகுந்து கால்பாதங்களுடன் சரசமாட பட்டறையை நோக்கி விரைந்தேன். வெயில் சுட்டது.
அண்ணையை எப்படிச் சந்திக்கலாம்? அவரைச் சந்திக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா? கேள்வி இன்னும் எனக்குள்...!
சந்திரவதனா
யேர்மனி.