- எம்.கே.முருகானந்தன்
என்னை இன்று எமது கதைகளின் கதையைத்தான் பேச அழைத்துள்ளார்கள். நான்
கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகளின் கதைச்
சொல்கிறேன். ஊர்கள் சிறியன. பெருநாடுகளின் தள வள ஆளனி வலுக்குகளுடன்
ஒப்பிடுகiயில் சிற்றூரிலும் சிறியது எமது நாடு. அதில் இலங்கை பூராவும்
ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தமிழ்பேசும் சமூகங்கள் ஏனைய உலக சமூகங்களுடன்
ஒப்பிடுகையில் கணக்கில் கொள்ள முடியாதவை. நுணுக்குக் கண்ணாடிகளால் தேட
வேண்டியவை.
இருந்தபோதும் நாற்திசைகளிலிருந்தும் உலகளாவ எமது குரல்
ஓங்காரமாக ஒலிக்கிறது. அதுவும் இனிய தமிழில் ஒலிக்கிறது. கதைகளாக,
கவிதைகளாக, ஒலிப்பேளைகளாக, ஒளிச்சித்திரங்களாக சிறகடித்து வலம் வருகின்றன.
தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு நீண்டகால வாசகன் என்ற முறையில் இது எனக்கு
மகிழ்வைத் தருகிறது. ஆனால் இதற்காக எமது எழுத்தாளர்கள் நெடும்பயணம் செய்ய
வேண்டியிருந்தது. கிடுகு வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடந்த எமது சிறுகதைகள்
பெருவீதி கடந்து வான்வெளி எட்ட பெரு முயற்சிகள் தேவைப்பட்டன.
கனடாவிலிருந்து முத்துலிங்கமும், மறுபுறம் ஆஸ்த்திரேலியாவிலிருந்து
ஆசி.காந்தராசாவும், மத்திய கிழக்கிலிருந்து ரிஸான் ஷெரிபும்,
ஜேர்மனியிலிருந்து கருணாகரமூர்த்தி, சந்திரவதனாவும் இங்கிருந்து உமா
வரதராசன், ரஞச்குமார், ராகவன் போன்றோரும், இன்னும் ஏராளமான பலரும் எமது
வாழ்வின் ஒளிந்து கிடந்த பக்கங்களை உலகிற்கு அலங்காரமாக வெளிச்சமிட்டுக்
காட்டுகிறார்கள்.
இணையத்திலும், தமிழகம் உட்பட உலகளாவ அவர்களது படைப்புகளைச் சஞ்சிகைகள் வேண்டி வெளியிடுகின்றன. ஆனால் எமது மூத்த எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட களம் தேடியலைய வேண்டியிருந்தது.
இலங்கையில் சிறுகதை இலக்கியத்தின் ஆரம்பம்
ஈழத்தின்
முதற் சிறுகதையை எழுதியவர் யார் என்ற சர்ச்சை ரப்பர் நாடாபோல
இழுபட்டுக்கொண்டே போகிறது. இருந்தபோதும் மூலவர்கள் மூவர் என்பதைப் பலரும்
ஏற்றுக் கொள்ளவே செய்கிறார்கள். இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம்,
சம்பந்தன் ஆகியவர்களே அவர்கள். இவர்கள் ஆளுமைமிக்க சிறந்த
சிறுகதையாசிரியர்களாக இருந்தார்கள். சிறுகதை என்ற புதிய இலக்கிய வடிவத்தை
எமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். புராண இதிகாசக் கதைகளை
பெரும்பாலும் கருவாகக் கொண்டு கற்பனை ரதத்தில் பயணித்து சுவையான வாசிப்பு
அனுபவத்தைத் தந்தார்கள். அவற்றைச் செப்பமாகவும் செய்தார்கள். இருந்தபோதும்
போதும், எமது மண்ணின் பிரச்சனைகளை பெரிதாக தமது படைப்புகளை
வெளிப்படுத்தவில்லை. சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தை தமிழ் வாசகர்களுக்கு
அறிமுகப்படுத்தும் பணி அவர்களுக்கானதாக இருந்ததால் அதன் வடிவத்திற்கு
முக்கியத்துவம் கொடுக்கபட்டதில் வியப்பில்லை. கரு, களம் ஆகியவற்றைப்பொறுத்த
வரையில் தாம் சார்ந்த சமூகத்தை முன்னிலைப்படுத்தவில்லை எனலாம்.
"இம்மூவரதும் கதைகள் பெரும்பாலும்(1) வரலாற்று இதிகாச சம்பவங்களை
அடிப்படையாகக் கொண்டிருந்தன. (11) தனிமனித அவலங்களையும் உணர்வுகளையும்
(சமூக, யதார்த்த சூழலின்றி) வெளிப்படுத்தின. (111) மனோரதியப் பாங்கில்
அமைந்திருந்தன." எனப் பேராசிரியர் செ.யோகராசா ஒரு கட்டுரையில்
குறிப்பிடுகிறார்.
இருந்தபோதும் மண்வாசனையுள்ள, சமூக விழிப்புணர்வை நோக்கிய படைப்புகள் அக்காலத்தில் எழதப்படவில்லை எனக் கூறமுடியாது.
ஆனந்தன்
என்ற புனைபெயரில் எழுதிய சச்சிதானந்தன் சாதிப்பிரச்சனையை மிகச் சிறப்பாக
அக்காலத்திற்கு ஏற்றவாறு தண்ணீர்த் தாகம் என்ற சிறுகதையில்
சொல்லியிருந்தார். நமது பாராம்பரியக் கிராமங்கள், அங்கு பிற்புறத்தில்
இருக்கும் கிணறு, சாதித் திமிருள்ள வெள்ளாள சமூக பெரியார், தண்ணீர்த்
தாகத்தில் அதில் நீர் அள்ளிக் குடிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் என அக்
கதையை யதார்த்தமாக நகர்த்தியுள்ளார்.
மூலவர்களினதும் அதைத் தொடர்ந்த மறுமலரச்சி சஞ்சிகை காலகட்டத்துப்
படைப்புகளான இலங்கையர்கோனின் 'வெள்ளிப் பாதரசம்', சம்பந்தனின் துறவி,
சி.வைத்தியலிங்கத்தின் 'பாற்கஞ்சி' கனகசெந்திநாதனின் 'ஒரு பிடி சோறு',
அ.செ.முருகானந்தனின் 'வண்டிச் சவாரி' போன்றவை இன்றும் பேசப்படுமளவிற்கு
மிகச் சிறந்த படைப்புகளாக இருக்கின்றன.
குடாநாட்டுக்கு அப்பாலான முயற்சிகள்
மேற் கூறிய முயற்சிகள் யாழ்ப்பாணத்தில் கருக்கட்டிய வேளையில்
மலையகத்திலும் சிறுகதை படைப்பாக்க முயற்சிகள் தோன்ற ஆரம்பித்தது.
மலைநாட்டுத் தோட்டத் தெழிலாளர்கள் பற்றி திரு.கோ.நடேசஐயர் சில சிறுகதைகளை
எழுதியாக அறிய முடிகிறது. திரு.கணேஷ் அவர்களும் இவ்வாறன முயற்சிகளில்
எழுதியுள்ளார். 'சத்திய போதி மரம்' என்ற அவரது சிறுகதை அறம் வெல்லும்
என்பதை உணர்த்தும் ஒரு நல்ல படைப்பாகும்.
மற்றொரு புறத்தில்
கிழக்கு மாகாணத்தில் அதிலும் முக்கியமாக மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்தும்
சிறுகதை எழுத்து விதைவிட ஆரம்பித்தது. வித்துவான் கமலநாதன், சிவா, மற்றும்
புரட்சிக் கமால் ஆகியோரை முன்னோடிகளாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பித்தன் மற்றொரு சிறந்த சிறுகதையாசிரியர் ஆவார்.
மூதூர் பிரதேசத்திலிருந்து எழுதியவரான வ.அ.இராரத்தினத்தின் 'தோணி' இன்றளவும் போற்றப்படும் படைப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
1950
முற்பட்ட காலகட்டத்தில் அவ்வாறான சிறந்த சிறுகதைகள் ஈழத்துச் சுழலில்
எழுந்தபோதும், அதற்குப் பிற்பட்ட காலத்தில்தான் எமது சிறுகதைத் துறையில்
பாரிய துரித வளர்ச்சியைக் கண்டது எனலாம். இதற்கு இரண்டு காரணங்களைச்
சொல்லலாம்.
புதிய வீச்சுகள் 50களின் பின்
உலகளாவிய
ரீதியில் தொழிலாளர் நலம் சார்ந்த உணர்வுகளும், உள்நாட்டில் தேசிய உணர்வு
வலுப்பட்டதையும் காரணங்களாகச் சொல்லலாம். உலகளாவிய ரீதியில் ஸ்பெயின்,
பிரான்ஸ், ஆஸ்திரியா, போன்ற தேசங்களில் தோன்றிய விடுதலை இயக்கங்களின்
செயற்பாடுகள் அடக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும்
அளித்தன. பாஸிசத்திற்கு எதிரான உணர்வு வலுப்பெற்றமையும்,
பொதுமக்களிடையேயான அரசியல் விழிப்புணர்ச்சியும் காரணமாக இருந்தன.
இலங்கையிலும்
பொதுவுடமை சார்ந்த கருத்துக்கள் 40, 50களில் மக்களிடையே செல்வாக்குச்
செலுத்தின. தொழிலாளர் எழுச்சிகள் தோன்றின. இடதுசாரிக் கட்சிகளின்
செல்வாக்கு இளம் சமுதாயத்தினரிடையே பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. இவை
படைப்புலகிலும் பிரதிபலித்தது.
உதிரி எதிரியாக எழுதிக்
கொண்டிருந்து முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர்களை இணைக்க முற்போக்கு
எழுத்தாளர் சங்கம் உருவாகியது. வெறுமனே பொழுது போக்கிற்காக எழுதுவதை
விடுத்து மக்கள் உள்ளங்களில் முற்போக்கு எண்ணங்களை விதைக்கும் எழுத்துக்களை
எழுத வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.
இதனால் இன்றுவரை ஈழத்தில் படைக்கபடும் சிறுகதைகள் சமூக உணர்வோடும் அதன்
மேம்பாடு நோக்கியுமே படைக்கப்படுகின்றன. வெறுமனே புகழுக்காவும்,
பொழுதுபோக்கிறாகவும், பாலியல் கவரச்சிக்குமாக எழுதப்படுவதைக் காண்பது
அரிது.
மற்றொரு புறத்தில், இலங்கை அரசியலிலும் தேசிய உணர்வு ஏற்பட்டமையும் எமது
சிறுகதை வளர்ச்சிக்கு அளப்பரிய வாய்ப்பாக அமைந்தது. எமது மண்ணின்
பிரச்சனைகளை மண்வாசனையுடன் எழுதவேண்டும் என்பதை எமது எழுத்தளர்கள் முற்று
முழுதாக ஏற்றுக் கொண்டனர்.
இதற்கு மறுபக்கம் ஒன்று உண்டு. இலங்கைத் தேசியம் என எமது முற்போக்கு
எழுத்தாளர்கள் எண்ணியும் எழுதியும் வந்த அதே நேரத்தில் சிங்கள தேசியம்
எழுச்சி பெற்றது. அதன் பூதாகரத்தன்மை தமிழர் வாழ்வில் அச்சத்தை
ஏற்படுத்தின. தமிழ், தமிழர் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மையும்
புறக்கணிப்பும் தமிழ்தேசிய உணர்வை ஏற்றம் பெறச் செய்தன. இவை எமது இலக்கியத்தில் பிரதிபலிக்க ஆரம்பித்தது. எனவே முற்போக்குக் கருத்துள்ளவர்கள் ஒரு புறமாகவும், முற்போக்கு
அணியினருக்கு எதிரானவர்கள் மற்றொரு அணியினராகவும் செயற்பட ஆரம்பித்தனர்.
இவ்வாறு எதிரணியில் நின்றவர்கள் முற்று முழுதாக முற்போக்கு கருத்தியலை
எதிர்த்தவர்கள் எனப் பொருள்படாது. அவர்களது செயற்பாடுகளை எதிர்த்தவர்கள்
எனச் சொல்லாம்.
ஈழத்து இலக்கியப் பரப்பில் முக்கிய விமர்சகர்களாக
வெளிப்பட்ட பேராசிரியர்கள் சிவத்தம்பி, கைலாசபதி போன்றவர்கள்
முற்போக்காளர்களாக இருந்த காரணத்தால் தம் அணிசார்ந்த எழுத்தாளர்களையும்;
முற்போக்கு அம்சங்கள் கொண்ட படைப்புகளை பாராட்டிச் சிலாகித்ததை மறுக்க
முடியாது. இதனால்; புறக்கணிக்கபட்ட பலரும் இதில் அடங்குவர்.
இவ்வாறு எதிராக நின்றவர்களில் பலர் எந்தக் கருத்தியல்
கோட்பாடுகளுக்குள்ளும் தம்மைப் பிணைத்துக் கொள்ளவில்லை என்ற போதும்,
இவர்களில் பலர் தமிழ் தேசியம் என்ற கருத்தியலோடு எழுதியமை
குறிப்பிடத்தக்கது.
நந்தி, சாந்தன் போன்றவர்கள் ஆரம்பத்தில்
முற்போக்கு அணியுடன் இருந்தபோதும், தமிழ் தேசிய உணர்வுடன் படைப்புகளைத
தருவதில் பின்நிற்கவில்லை என்பதையும் சுட்ட வேண்டும்.
அணிகளாகப் பிரிந்து நின்று ஒருவர் மீது மற்றொருவர் எனக் கண்டனக்
கணைகளைத் தொடுத்தபோதும் இரு பக்கங்களிலிருந்தும் நல்ல படைப்புகள் வெளிவரவே
செய்தன.
மேற் கூறிய இரண்டிற்கும் மாற்றாக மு.தளையசிங்கத்தின் மெய்யுள் அல்லது
ஆத்மார்த்தம் சார்ந்த அணியும் எண்ணிக்கை அளவில் குறைந்திருந்தாலும் தனது
பலமான பங்களிப்பை ஈழத்துச் சிறுகதை வளர்;சிக்கு அளிக்கவே செய்தது.
இவ்வாறு பல்வேறு பிரிவுகளாக நின்று தங்களுக்குள் மோதியபோதும் எமது மண்ணின், தேசத்தின் இலக்கியம் வளர்ந்து சென்றது.
முற்போக்கு இலக்கியம்
கணேஸ்,
அ.ந.கந்தசாமி, டொமினிக் ஜீவா, டானியல், என்.கே.ரகுநாதன், நீர்வை
பொன்னையன், ஈழத்துச் சோமு, தெணியான், செ.யோகநாதன் போன்ற பலரையும்
முற்போக்கு அணி சார்ந்த முக்கிய படைப்பாளிகளாக குறிப்பிடலாம்.
மண்ணின் மணத்தை தமது படைப்புகளில் முற்போக்கு அணிசார்ந்தவர்கள் எவ்வாறு
கொண்டு வந்தார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு படைப்பை நோக்கலாம். இன்று நாம்
நினைவு கூரும் ஈழத்துச் சோமு எழுதிய நிலவோ நெருப்போ என்ற சிறுகதை அது.
சுமார் 60-70 வருடங்களுக்கு முன்னான ஒரு தோட்டத் தொழில் சார்ந்த ஒரு
கிராமத்தை அப்படியே கண்முன் கொண்டு வருகிறது. தோட்ட நிலங்கள், அங்கு
மண்ணின் வளத்தைப் பெருக்குதற்காகப் போடப்படும் உரமாக இலை குழைகள், அதை
வெட்டி கட்டிக்கொண்டு வரும் பெண்கள், அதை விற்பதற்கு உதவும் தரகர்கள்,
தரகர்களது தில்லுமுல்லுத்தனங்கள், பாலியல் மனவக்கிரங்கள் என மிகவும்
யாதார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ளது.
தரகனது இச்சைக்கு இணங்காத பெண்ணை உதாசீனம் செய்து அவளது குழைக்கட்டை
விற்காது தடுப்பவனுக்கு எதிராகப் ஏனைய பெண்கள் எவ்வாறு எதிர்கொண்டு
வெல்கிறார்கள் என்பது வெற்றுக் கோசங்கள் இன்றி இயல்பாக மண்வாசனையோடு
சித்தரிக்கப்பட்டுள்ளது. சோமகாந்தனின் ஆகுதி மற்றுமொரு நல்ல படைப்பாகும்.
ஆனால் இதற்கு மாறாக மார்க்சிய கருதியலுக்கு அழுத்தம் கொடுத்து, கலை நயத்தைத் தொலைத்த எழுத்தாளர்களும் உண்டு. இரு வருடங்களுக்கு முன்னர் 'ஈழத்து இலக்கிய செல்நெறியில் முற்போக்குச்
சிறுகதைகளின் சுவடுகள்' என்ற தொகுப்பு நூல் வந்தது. அது பற்றி விமரசித்த
லெனின் மதிவாணம் இவ்வாறு கூறுகிறார். 'இத்தொகுப்பில், முற்போக்கு நோக்கிலான சிறுகதைகளாக இரத்த உறவு (அ. ந.
கந்தசாமி), ஒரு புதிய ஆயுதம் (சி. வி. வேலுப்பிள்ளை), தண்ணீர் (மொஹிதீன்),
வாய்க்கரிசி (டொமினிக் ஜீவா), பிரசாதம் (எஸ். அகஸ்தியர்), மண்பூனைகளும் எலி
பிடிக்கும் (மருதூர்க்கனி), 47 வருடங்கள் (கே. விஜயன்), தேவ கிருபையை
முன்னிட்டு வாழும்.... (காவலூர் ராசதுரை), ஊர் நம்புமா? (நந்தி), ஒரு
கிராமத்து பையன் கல்லூரிக்கு செல்கின்றான் (செ. கதிர்காமநாதன்), பெருமூச்சு
(ஏ. இக்பால்), எப்படியம் பெரியவன் தான் (தெணியான்), மாறுசாதி (திக்குவல்லை
கமால்), நிலவோநெருப்போ?(என்.சோமகாந்தன்), என் நண்பன் பெயர் நாணயக்கார
(சாந்தன்), அந்தக் கிழவன் (அ.ஸ. அப்துஸ் ஸமது), பகவானின் பாதங்களில் (மு.
கனகராசன்) ஆகியன காணப்படுகின்றன.
மார்க்ஸிய நோக்கிலான சிறுகதைகளாக தண்ணீர்,(கே டானியல்), போர்வை(என். கே
ரகுநாதன), சங்கமம்(நீர்வை பொன்னையன்), நேற்றைய அடிமைகள்(செ.யோகநாதன்)ஆகியன
காணப்படுகின்றன. இதற்கு மாறாக சாயம் (செ. கணேசலிங்கம்), இங்கெவர் வாழவோ
(யோ. பெனடிக் பாலன்) முதலானோரின் கதைகளில் கோட்பாட்டு தளம் வலிந்து
புகுத்தப்பட்ட அளவிற்கு அழகியல் அம்சம் பேணப்படவில்லை.'
முற்போக்கு
கருத்தியல் கொண்டபோதும் நந்தினி சேவியர் விமர்சகர்களால் பெரும்பாலும்
கண்டு கொள்ளப்படுவதில்லை. மிகச் சிறந்த ஒரு முற்போக்குப் படைப்பாளியாக அவர்
இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த மார்க்ஸிய கொள்கைப் பிடிப்புக்
கொண்டவர். ஆயினும் அவரது படைப்புகளில் எந்தக் கோசமும் முனைப்படுவதில்லை.
மிகுந்த கலைநயம் வாய்ந்த படைப்புகளை அவர் தந்திருக்கிறார்.
அண்மையில்
அவரது 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்' என்ற தொகுப்பு வெளி வந்தது. அதற்கு
முன்னுரை எழுதிய ரவிக்குமார் அவர்கள் 'குரலை உயர்த்தாமலே கொதிப்பை
வாசகனுக்குக் கடத்த முடியும் என நிருபிப்பவை இவரது கதைகள்' என்கிறார்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் எழுத்தாளர்களை முற்போக்கான
கருத்துக்களை தமது படைப்புகள ஊடாக பரப்புவதை ஊக்குவிப்பதிலும் அவர்களை
ஒன்றிணைப்பதிலும் மட்டும் ஈடுபடவில்லை. தமிழ் மரபுகளையும் அறிஞர்களையும்
பாராட்டிக் கௌரவிப்பது போன்ற செய்றபாடுகளிலும் ஈடுபட்டது.
இவற்றில்
சோமு ஆற்றிய பங்கiளிப்புகளை குறிப்பிடாமல் விட முடியாது. பாரதியாரின்
ஞானகுருவென யாழ்பாணத்துச் சுவாமி என்று அழைக்கப்பட்ட அருளம்பல சுவாமிதான்
என அ.ந.கந்தசாமி நிறுவியபோது அதனை பெருவிழாவாக அவர் பிறந்த
வியாபாரிமூலையில் கொண்டாடியதில் சோமுவின் பங்களிப்பு பலமானதாகும். அதே
வியாரிமுலைச் சார்ந்த நான் ஒரு பாடசாலை மாணவனாக அக் கூட்டத்தில்
பார்வையாளனாகப் பங்கு பற்றியது எனக்கு நேற்று நடந்தது போல ஞாபகம்
இருக்கிறது.
அதேபோல பாரதி நூற்றாண்டு மலர், ஆறுமுகநாவலர் நூற்றாண்டு மலர் ஆகியன
வெளியிடுவதற்கான குழக்களில் செயலாளராக பங்காற்றி அளப்பரிய பணியாற்றியதையும்
இங்கு குறிப்பிட வேண்டும்.
முற்போக்கு எழுத்தாளர் பலரது
படைப்புகள் கருத்திற்கு அழுத்தம் கொடுப்பது என்பது வெறும் கருத்தாக
மட்டுமின்றி கோசமாகவும் எழுந்தனால், படைப்புகளை செழுமைப்படுத்துவதில்
அவர்களில் பலரும் அக்கறை காட்டாமல் காலத்திற்கு ஏற்ப கதை
கட்டிக்கொண்டிருந்தனர்.
தமிழ் தேசியம்
இவற்றால்
ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்தவர்கள் மாற்றுக் குழுவினராக படைப்பின்
செழுமையில் தங்களை ஈடுபடுத்த முயன்றனர். செம்பியன் செல்வன், செங்கைஆழியான்,
சொக்கன், தெளிவத்தை ஜோசப், சுதாராஜ், குந்தவை, கோகிலாமகேந்திரன்,
தாமரைச்செல்வி, போன்ற ஏரளமானோரை உதாரணம் காட்டலாம்.
குப்பிளான்.சண்முகம்,
சட்டநாதன், உமா வரதராஜன் (அரசனின் வருகை), ரஞ்சகுமார் (கோசலை),
எஸ்.எல்.எம்.ஹனிபா (மக்கத்துச் சால்வை), ஓட்டாவடி அரபாத், திசேரா,
திருகோவிலூர் கவியுகன். ராகவன், போன்றவர்களின் படைப்புகள் இவற்றுள்
தனித்துவமான வாசிப்பு அனுபவங்களைத் தந்தவை.
எஸ்.பொ எப்பொழுதும்
தனித்துவமான படைப்பாளியாக இருந்த அதே நேரம் இலக்கியத்தில் தூய்மை
பேணுபவர்களின் கடும் விமர்சனங்களும் ஆளாக நேர்ந்திருக்கிறது.
படைப்புகள்
செழுமையாக வரவேண்டும் என்பதில் அக்கறையோடு செயற்பட்டவர் அ. யேசுராசா. தனது
படைப்புகள் ஊடாகவும், அலை சஞ்சிகை ஊடாகவும் ஈழத்து படைப்பிலக்கியத்திற்கு
ஆற்றிய பணி அளப்பரியது.
முனியப்பதாசன் மற்றொரு தனித்துவமான
படைப்பாளி. ஆன்மீகத் தேடல், அழிவும் தேய்வும், ஆணிவேர், துறவி போன்ற பல
படைப்புகளை எடுத்துக் காட்ட முடியும். 'முனியப்பதாசனின் எழுத்துக்கு
நிகரில்லை. நிகரெனக் குறிப்படுவதாயின் மௌனி, லா.சா.ராமாமிர்தம்,
பிச்சமூர்த்தி ஆகியோரையே குறிப்பட முடியும். ஆத்மிகத் துறவியாக வாழ்ந்து
மறைந்த அறிஞன்' எனச் செங்கையாழியான் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
ஆனந்தமயில் மற்றொரு சிறந்த படைப்பாளி. இவரது "படைப்புகள் அனைத்துமே சுய
அனுபவத்தின் வெளிப்பாடுகள். நாளாந்தம் காணும் நிகழ்வுகள். அத்தோடு முகம்
காட்டும் கண்ணாடிபோல எமது வாழ்வின் தெளிவான பிரதிபலிப்பாகவும் இருக்கின்றன.
இவற்றால் மிகுந்த நம்பகத்தன்மை கொண்டவையும் கூட. இருந்தபோதும் தகவல்
களஞ்சியம் போன்ற அனுபவக் குறிப்புகளாகக் கணிக்கக் கூடிய கதைகளும் அல்ல.
ஆழ்ந்த ரசனையும், கூர்ந்த அவதானிப்பும், மானிட நேயமும் கொண்ட ஒரு சாதாரண
குடிமகனது உணர்வுகளின் கலாபூர்வமான சித்தரிப்பு என்றே சொல்ல வேண்டும்." என
நான் இவரது 'ஒரு எழுதுவினைஞரின் டயறி" என்ற நூலுக்கு எழுதிய விமர்சனத்தில்
எழுதியதை இங்கு பகிர்வது பொருத்தமாக இருக்கும்.
மு.தளையசிங்கம்,
மு.பொ, ஆகியோரின் ஆத்மார்த்தம் சார்ந்த தனித்துவமான பாதையில் பயணித்தனர்.
தளையசிங்கத்தின் கோவில்கள், அகல்யை, மு.பொ வீடும் பல்லக்கும், சீதை
யுகங்களை விழுங்கிய கணங்கள், போன்ற பல சிறுகதைகளை உதாரணம் காட்ட முடியும்.
ஆத்மார்த்தத்தோடு தமிழ் தேசிய கருத்தியலோடு இணைந்தவை இவர்களது படைப்புகள்.
மு.த
வின் பாதை நம்பிக்கைக்கு உரியதாகவும், தமிழக எழுத்தார்களின் கணிப்பைப்
பெற்றிருந்தபோதும், இவ்வழியில் பின்தொடர்ந்து படைப்பாக்க முயற்சிகளில்
இறங்குபவர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். கருத்தியல் ரீதியாக இவர்களது
ஆத்மார்த்த வீச்சு கவிதைகளில் வெளிப்பட்ட அளவிற்கு சிறுகதைகளில் இல்லை
என்றே தோன்றுகிறது.
ஆயுதப் போராட்ட காலம்
தமிழர்களின் அரசியல் போராட்டம் பின்தங்கி, ஆயுதப் போராட்டம்
முனைப்புற்றபோது படைப்பாளிகள் ஒட்டுமொத்தமாக தமிழ்தேசிய உணர்வில்
தெக்கிநின்றனர். போரும், அதனால் சாதாரண மனிதர்களின் பாடுகளும்
பேசுகதைகளாயின. போராளிகளின் வீரமும், இனப் பற்றும் படைப்பாக்கம் பெற்றன.
சங்ககாலத்திற்குப் பின்னர் தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த மிக வித்தியாசமான
அனுபவங்கள் சிறுகதை, நாவல், கவிதை என யாவற்றிலும் பதிவாகின.
பார்வையாளர்களாகவும்,
பாதிப்புக்கு உள்ளாவர்களாகவும் இருந்தவர்கள் மட்டுமின்றி களத்தில் நின்று
போராடியவர்களும் தம் அனுபவங்களை படைப்புலகில் விதைத்தனர். மாலதி மலரவன்
போன்ற படைப்பாளிகள் கவனத்திற்குரியவர்கள்.
ஆனால் முற்போக்கு
இலக்கியத்திற்கு நேர்ந்த அவலம் இங்கும் தன்கைவரிசையைக் காட்டியது. இது
பற்றி திருக்கோயில் கவியுகன் '..ஆயுதப் போராட்டத்தின் பின் வந்த அவல
வாழ்வை, அதாவது மரணம், கைது, ஊனம், காயம் இப்படியான அவல வாழ்வை தங்கள்
படைப்புகளில் கருப்பொருளாய்க் கொண்டு, கதையில் வரும்
பாத்திரங்களுக்குள்ளேயோ, கதை நகரும் புலத்திற்குள் நுழையாமல் எட்ட நின்று
வெளிப்பார்வையில் பின்னிய பல அபத்தமான போலியான படைப்புகளும்
வெளிவந்திருக்கின்றன.'
இப்படைப்புகள் பக்கம் சார்ந்தவையாக, அரசியலை
விமர்சிக்க முயலாதவையாக இருந்தன என்பதை 'இயக்கங்களை விமர்சிக்காத
வரைக்கும் ஆயுதப் போராட்டம் வேறுபல வழிகளில் (இலக்கியத்தை வளர்ச்சியடையச்
செய்துள்ளது' என்கிறார் மு.பொ. ஆம் எந்தப் படைப்பும் நடுநிலையாக இருக்க
முடியாது என்பதை இது சுட்டுகிறது. எமது பக்கத்தில் இல்லாதவற்றை பக்கம்
சார்ந்தவை என ஒதுக்கித் தள்ளிப் பழகிவிட்டோம் நாம்.
பெண்ணியம்
பெண்ணியக்
கருத்தியல் கொண்ட படைப்புகளைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். ராஜேஸ்வரி
பாலசுப்பிரமணியம், கோகிலா மகேந்திரன், பத்மா சோமகாந்தன், பாலேஸ்வரி, கவிதா,
சந்திரா தியாகராஜா, அன்னலட்சுமி ராசதுரை, ரூபராணி ஜோசேப், ராணி சீதரன்
எனப் பலரையும் கூறலாம்.
இருந்தபோதும் பெண்ணியம் கவிதையில் கண்ட எழுச்சியைச் சிறுகதைகளில் தரிசிக்க முடியவில்லை.
புலம் பெயர் படைப்புகள்
புலம் பெயர் படைப்புகள் பெரும்பாலும் தாம் இழந்த வாழ்வின் துயரங்களை இரை மீட்பனவாகவே இருந்தன.
ஆனால்
அவர்களுள் அ.முத்துலிங்கம், ஆசி.காந்தராஜா, பொ.கருணாகரமூர்த்தி ஆகியோர்
புதிய தரிசனங்களைத் தந்தார்கள். வித்தியாசமான படைப்புலகுடன் தொடர்ந்து
பயணிக்கின்றனர். அவர்களது களங்கள் புதியன. அப் புதிய களங்குடன் எமது
பாரம்பரியங்களை கலந்து படைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
விமல்
குழந்தைவேல், ராஜேஸ்வரி.பாலசுப்பிரமணியம், ஷோபா சக்தி, சுமதிரூபன்,
இரவி.அருணாசலம், சிறிதரன், ரமணீதரன்(சித்தாந்த சேகுவரா), சார்ல்ஸ்
போன்றவர்களின் சிறுகதைகளும் அதிகம் கவனத்திற்குள்ளாயின.
தமிழ்நதி
என்ற புனைபெயரில் எழுதிவரும் .... கவனத்தில் எடுக்க வேண்டிய படைப்பாளி.
சிறுகதை, கவிதை, நினைவுப் பதிவுகள், நூல் விமரிசனமென 'இளவேனி'ல்' என்னும்
தன் வலைப்பதிவில் படைப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார். தமிழ்நதியின்
'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது' சிறுகதை தொகுப்பு அண்மையில்
வெளிவந்தது. 'கவித்துவ மொழிதலுக்கு' தமிழ்நதி என்றும், 'அழகுத்தமிழில்
ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் படைப்புகள் எனவும் பாராட்டுக்களைப் பெற்றது
இவரது தொகுப்பு.
சுமதி ரூபன் மற்றுமொரு அருமையான படைப்பாளி. யாதுமாகி என்ற சிறுகதைத்
தொகுதி வந்துள்ளது. குணேஸ்வரன் இவை பற்றிக் கூறுகையில் 'இத்தொகுப்பில் உள்ள
ஒவ்வொரு கதையும் பெண்களின் ஒவ்வொரு பிரச்சினையை முன்வைக்கின்றது.
சிறுவயதில் இருந்து பெண் என்ற காரணத்தினால் ஆணாதிக்க சமூகத்தின்
ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பல பெண்களை கதைகளில் இனங்காண முடிகின்றது.'
நாடு
விட்டு புதிய தேசம் நோக்கிய நம்மவர்களின் பயணங்கள் துயரம் தோய்ந்தவை,
பனிவயல்களையும், ஆழ்கடல்களையும் தாண்டி, பொருள் காவிகளினுள் ஒளிந்து
பயணித்தவற்றைக் கேள்விப்பட்டுள்ளோம். அதில் ஆவி பிரிந்து உடல் சிதைந்து
எங்கென்று அறியப்படாதவர்கள் பலபேர். இவை பற்றி வாசித்திருக்கிறோம்.
அரசல்
புரசலாகக் கேள்விப்பட்ட ஆனால் வெளிப்படையாகப் பேசப்படாத அவலத்தை
ஆவணப்படுத்தியுள்ளார் சுமதி ரூபன். பயண இடைவெளியின்போது பெண் உடல்
சிதைக்கப்படல் அதிர்ச்சியளிப்தாக உள்ளது. மிலேச்சத்தனமான
இராணுவத்தினரிடமிருந்தும் ஆயுததாரிகளிடமிருந்தும் தன்னைக் காக்க
புலம்பெயரப் புறப்பட்டவள், தன்னைப் பயண வழியில் இழக்கும் துயரம் இங்கு
பேசப்பட்டுள்ளது.
போருக்குப் பின்னான புதிய பயணம்
பரந்த வானம் எம் முன் விரிந்து கிடக்கிறது. இதில் எமது படைப்பாளிகள் பயணிக்க வேண்டிய திசை எது?
பயணிக்க வேண்டிய திசை
இது போருக்குப் பின்னான காலம். மேனியெங்கும் வடுக்களைச் சுமந்த சமூகம் எம்மது.
நம்பிக்கையோடு புதுவாழ்வைத் தேடுபவர்கள் பலருள்ளனர். இவ்வாறிருக்க, ஆறின புண்ணை மீண்டும் நோண்டி வலியை தூண்டும் வண்ணமே இன்னமும் பலரும் எழுதுகிறார்கள். பலரது படைப்புகள் எங்கள் சமூகத்தை இன்னமும் இருண்ட வாழ்வை நோக்கித் திருப்புவனவாக உள்ளன.
எமது அனைத்துத் துன்பங்களுக்கும் மற்றவர்களையே குறை கூறி நிற்கிறோம். படைப்பாளிகள் மட்டுமின்றி பத்திரிகைகளும், இலத்திரனியல் ஊடகங்களும் அதையே செய்கின்றன. இனிவரும் காலங்களில் எமது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் படைப்புகளைத் தாருங்கள்.
எமது இனத்திற்கு நீதி கேட்பதில் தவறில்லை. அது அவசியமானதும் கூட.
ஆனால் எம்மிடையே ஊறிப்போன சமூக ஏற்றத்தாழ்வுகளையும் பேச முன்வாருங்கள்.
இன்று
ஏராளமான எழுத்தாளர்கள் தமது சிறுகதைகளைத் தருக்கிறனர். பலர் நம்பிக்கை
உரியவர்களாக உள்ளனர். மூத்தவர்கள் மற்றும் புதியவர்களான அனைவரையும் இக்
கட்டுரையில் குறிப்பிடுவது சாத்தியமல்ல. பதச்சோறு போல சில உதாரணங்களையே
காட்ட முடிந்தது.
இறவாத புகழுடைய புது நூல்கள்
மற்றொரு விடயம். எமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை. இறவாத
புகழுடைய புது நூல்கள் நம் நாட்டில் இயற்ற வேண்டும். திறமான புலமையெனில்
வெளிநாட்டோர் வணங்குதல் செய்வர்.
அவ்வாறு பார் புகழ வேண்டுமெனில் எம் படைப்புகள் செழுமையுற வேண்டும். கருத்தியலோடு அழகியலும் மேம்படவேண்டும்.
ஒரு சிலரின் படைப்புகளே நல்ல இலக்கியத்தரம் வாய்ந்தவையாக உள்ளன.
ஏனைய பலரும் பாட்டி கதை சொல்வது போலவும், பத்திரிகைக்குச் செய்திகள் போலவும் கதையாடல் பண்ணுகிறார்கள். மொழியை வசப்படுத்தி கருத்தை மறைபொருளாக்கி, படைப்பை செதுக்கித் தரும் ஆற்றலை எம் எழுத்தாளர்கள் வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான் எங்கள் கதைக் குருவிகளுக்கு வானமும் வையகமும் ஒன்றுசேர வசப்படும்.
நோக்கிய ஆக்கங்கள்
முகங்கள் சிறுகதைத்த தொகுப்பு- ஜீவகுமாரன்
சுதந்திரன் சிறுகதைகள்- செங்கை ஆழியான்
நெல்லிமரப் பள்ளிக்கூடம் நந்தினி சேவியர்
திறனாய்வின் புதிய திசைகள் மு.பொ
ஈழத்து முற்போக்குச் சிறுகதைகள்
கடலும் கரையும் மு.பொன்னம்பலம்
மல்லிகை இதழ்கள்
ஈழத்து இலக்கிய செல்நெறியில் முற்போக்குச் சிறுகதைகளின் சுவடுகள் லெனின் மதிவாணம்
ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி கலாநிதி செ.யோகராசா
ஈழத்துச் சிறுகதைகள் எனது பார்வை முல்லை அமுதன்
'யாதுமாகி' தொகுப்பிற்கான க.குணேஸ்வரனின் விமர்சனம் இணையத்தில்
நா.சோமகாந்தன் நினைவுப்பரவல் நிகழ்வில் நான் வாசித்த கட்டுரை.
எம்.கே.முருகானந்தன்
kathirmuruga@hotmail.com
Quelle - Pathivukal
Wednesday, May 02, 2012
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
▼
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )