Thursday, July 12, 2007

எனக்கு எட்டிய எட்டுக்கள்

எட்டுப் பதிவுக்கு நிர்மலாவும், சுதர்சனும், கவிப்பிரியனும் என்னையும் அழைத்திருக்கிறார்கள். நான் அப்படி எதுவும் சாதிக்கவில்லையே, அப்படியிருக்க என்னத்தை எழுதுவது என்ற யோசனை ஒரு புறமும், நேரமின்மை மறுபுறமுமாய் சில நாட்கள் ஓடி விட்டன.

1 - அப்போது எனது அப்பா மருதானை புகையிரத நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கென ஒதுக்கப் பட்ட ரெயில்வேக்குச் சொந்தமான வீடு வத்தளையில் இருந்தது. கர்ப்பப்பையில் என்னைச் சுமந்திருந்த அம்மா தவறுதலாக வீழ்ந்ததில் மேல் மாடியிலிருந்து இருந்து கீழ்மாடிக்குரிய படியில் உருளத் தொடங்கி விட்டா. கடைசிப்படியில் உருண்ட போது நினைவை இழந்து விட்டா. அதன் பலனாக அவசரமாக மருத்துவமனை.. அதே வேகத்துடன் பருத்தித்துறை வந்து சேர்ந்து மந்திகையில்தான் அவசரமாக எட்டுமாதக் குழந்தையாகப் பிறந்தேன். சரியாக ஒரு மாதம் மூச்சைத் தவிர வேறெந்த சத்தமும் இன்றி கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்திருக்கிறேன். உயிரோடு வாழ்வேனா, என்று அம்மாவும், அப்பாவும் மற்றைய உறவுகளும் மூச்சைப் பிடித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். 47வயதுகள் வரை வாழ்ந்து விட்டேன். அது சாதனைதானே.

2 - சனிக்கிழமை பெரியார் படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதுதான் இது நினைவில் வந்தது. எங்கள் வீட்டில் அப்போதெல்லாம் எங்களுக்குத் தலைமயிர் வெட்டும் கதிரமலைக்கு தேங்காய்ச் சிரட்டையில்தான் தேநீர் கொடுப்பார்கள். சாதித்திமிர் என்பது எனது அம்மம்மா, பாட்டாவுக்கு மட்டுமன்றி எங்கள் ஊரான ஆத்தியடி மக்களுக்கும் அதிகமாகவே இருந்தது. அந்தச் சிரட்டைப் பழக்கத்தை நிற்பாட்டி கிளாசில் தேநீர் கொடுத்தேன்.

3 - எனக்கு நினைவு தெரிந்து அவதானிக்கத் தொடங்கிய காலங்களில் (அறுபது, எழுபதுகளில்) மாதத்தில் மூன்று நாட்கள் எங்கள் வீட்டுப் பெண்கள், அதாவது அம்மா, மாமிமார், சித்தி, பக்கத்து வீட்டு குஞ்சியம்மா... என்று பலரும் ´தொடமாட்டாள்´ என்ற பட்டப் பெயரோடு தள்ளி வைக்கப் பட்டார்கள். சாப்பாடு கூட தீண்டத்தகாதவர்கள் என்பது போல வெளியிலே கொண்டு போய்க் கொடுக்கப் பட்டது. அந்த நேரத்தில் சாப்பிடத் தனிக்கோப்பை.

அப்பாச்சி வீட்டில் வெளியில் கரிக்கட்டியால் பெட்டி போட்டு அதற்குள்ளேதான் மாமிமார் இருந்தார்கள்.

எங்கள் வீட்டில், அந்த மூன்று நாட்களிலும் எனது அம்மா குசினிக்குள் போவதில்லை. அம்மம்மாதான் வந்து சமைப்பா. அம்மா குசினி வாசலில் வந்து நிற்க அம்மம்மா சாப்பாட்டைப் போட்டுக் கொடுப்பா. அம்மா ஒரு ஓரமாக விறாந்தை நுனியில் இருந்து சாப்பிடுவா. அந்த நாட்களில் அம்மா சுவாமி அறைக்குள் போக மாட்டா. அலுமாரிக்குள் இருக்கும் காசு தேவைப்பட்டாலும் என்னையோ, அண்ணனையோ அனுப்பித்தான் எடுப்பா. கிணற்றில் தண்ணி அள்ள மாட்டா. வீட்டின் வெளி விறாந்தையில்தான் அந்த மூன்று நாட்களும் படுக்கை. இது பற்றி நான் சின்னவளாக இருந்த போது பெரிதாகச் சிந்திக்கவில்லை. அதென்ன தொடமாட்டாள், எதையும் தொடக் கூடாதோ என்ற கேள்விகள் எனக்குள் எழுந்திருந்தாலும், பெரிதாக அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் எனது 12வது வயதில் என் முறை வந்த போதுதான் நான் விழித்துக் கொண்டேன். முதல் முறை எட்ட நின்றே சாப்பாட்டை அம்மாவிடம் வாங்கிச் சாப்பிட்டேன். ´தீட்டு´ என்று சொல்லி அம்மம்மா என்னிலிருந்து இரண்டடி தள்ளி நடந்த போது மௌனமாய் இருந்து எரிச்சல் பட்டேன்.

ஆனால் இரண்டாவது முறை என்னால் அப்படி இருக்க முடியவில்லை. எனது வீட்டுக்குள் நான் போவதற்கு யாரும் கோடு போட்டு வைப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்காக நான் சண்டை பிடிக்கவோ கூப்பாடு போடவோ இல்லை. அம்மாவிடம் பக்குவமாகச் சொன்னேன். வீட்டில் உள்ளவர்களுக்கும், வீட்டுக்கு வருபவர்களுக்கும் இதைப் பறை தட்டுவது போல, தெரியப் படுத்த வேண்டுமா? என்று தொடங்கி, இன்னும் சில கருத்துக்களையும் சொன்னேன். குறிப்பாக “எனது வீட்டுக்குள்ளேயே அங்கு போகாமல், இங்கு போகாமல் என்னால் இருக்க முடியாது“ என்பதையும் அம்மாவிடம் விளக்கினேன். அம்மாவின் சம்மதம் கிடைக்க முன்னரே பசித்த போது குசினிக்குள் போய் சாப்பிட்டேன். எனது வழமையான கட்டிலிலேயே படுத்தேன். அம்மா கொஞ்சம் சங்கடப் பட்டா. அம்மம்மாவுக்குத் தெரிந்தால் வில்லங்கம் என்று பயந்தா. ஆனாலும் என்னைத் தடுக்கவில்லை. சில மாதங்களில் அம்மாவும் அந்த மூன்று நாட்கள் பற்றி யாரிடமும் சொல்லாமல் தானே குசினிக்குள் போய் சமைக்கத் தொடங்கி விட்டா.

மிகுந்த ஆச்சாரம் பார்க்கும் அம்மம்மாதான் இடையிடையே அம்மாவிடம் கேட்டா “உவளென்ன மாசம் முழுக்க வீடெல்லாம் திரியிறாள். இவளுக்கு எல்லாம் ஒழுங்கா வாறதோ“ என்று.

4 – ஊரில், சோறு தீத்துவதும், ஏடு தொடக்குவதும்… கோயிலில்தான் செய்யப்படும். கோயில் ஐயர்தான் முதலில் சோறு தீத்துவார். அவரேதான் ஏடு தொடக்குவதும். எனது முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் முறைப்படி கோயிலிலேயே இவை தொடங்கப் பட்டன. மூன்றாவது மகனுக்கு ´எனக்கில்லாத அக்கறை ஐயருக்கு இருக்கா´ என்ற கேள்வி என் மனதில் எழ நானே பென்சில் பிடித்து அவனை எழுத வைத்தேன். இற்றை வரைக்கும் எழுத்திலோ, படிப்பிலோ அவனுக்கு எந்தக் குறையும் இல்லை. ஒரு பத்திரிகை நிரூபராக, எடிட்டிராக இருக்கிறான்.

5 – பாடசாலையில் மிகவும் கெட்டித்தனமாக இருந்தேன். கணக்கிடும் வேகத்தை வைத்து எனக்கு ´கொம்பியூட்டர்´ என்ற பட்டப் பெயரை கணித ஆசிரியர்கள் தந்திருந்தார்கள். பரீட்சையில் Algebraவுக்கு மட்டுமல்லாது, Geomatryக்கும் 100புள்ளிகளையே பெறுவேன். இத்தனை இருந்தும், ஒரு ஆர்க்கிரெக் ஆக வரும் எனது எண்ணத்தை மட்டுமல்லாது, எனது அம்மா, அப்பாவின் கனவையும் காதலுக்காகத் தூக்கி எறிந்தேன். இந்த சாதனைக்காக நானே வருந்தியிருக்கிறேன். (இப்போது வருத்தம் இல்லை. பிள்ளைகளை சீராக வளர்த்து விட்டேன் என்ற பெருமைதான் இருக்கிறது.)

5 – சின்ன வயதிலேயே காதல் திருமணம். அம்மா, அப்பாவின் சம்மதத்தைப் பெற நிறையப் போராட வேண்டி இருந்தது. போராட்டம் என்பதை விட சகிப்புத்தன்மை அவசியமாயிருந்தது. பேச்சு, அடி.. எல்லாம் வாங்கினேன். என்றைக்குமே அடிக்காத அப்பாவிடம் கூட முதலும் கடைசியுமாக காதலுக்காக ஒரு அடி வாங்கினேன். அது வாழ்நாளுக்கும் மறக்காத அடி.

ஆனால் திருமணத்தின் போது தாலி வேண்டாமென்று சொல்லி விட்டேன். பெரிய புரட்சி செய்கிறேன் என்ற எண்ணம் எதுவும் இருக்கவில்லை. மனதால் ஒன்று பட்டிருக்கிறோம். தாலி என்னத்துக்கு என்ற உணர்வே இருந்தது. மஞ்சள் கயிறைக் கூட விரும்பவில்லை. அம்மா, அப்பாவும் பெரிய தடைகள் எதுவும் சொல்லவில்லை. இன்றை வரைக்கும் தாலி கட்டவில்லை.

6 – 17வயதிலேயே முதற் குழந்தையைப் பெற்றெடுத்தேன். இந்த வயதில் எப்படிப் பெற்றெடுக்கப் போகிறாள் என்று எங்களூர்க் கிழவிகள் அவலாய் மென்றார்கள். அக்கறையோடு கதைத்தார்கள். அம்மா தந்த புத்தகங்களையும், தைரியமான வார்த்தைகளையும் பெரிதும் நம்பினேன். எந்தப் பிரச்சனையுமின்றிய சுகப்பிரசவமே.

7 – பேனா பிடித்து எழுதத் தொடங்கிய காலத்திலேயே அப்பா தந்த டயறியில் எனது அன்றாட உணர்வுகளை எழுதத் தொடங்கினேன். அப்போதிருந்து நான் எதையாவது தினமும் எழுதிக் கொண்டிருந்தாலும், எனது முதற்கவிதையை 1975இல் எழுதினேன். அதை 1981இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பி வைத்தேன். உடனேயே அது ஒலிபரப்பானது. அன்றிலிருந்து ஊடகங்களுக்கு எனது ஆக்கங்களை அனுப்பத் தொடங்கினேன். அந்த நாட்களில் எனது கவிதையோ, கட்டுரையோ அன்றி விமர்சனமோ வெளி வராத நாட்களே இல்லையென்று சொல்லுமளவுக்கு எழுதித் தள்ளினேன். எனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. பாராட்டுக் கடிதங்கள் இந்தியாவிலிருந்து கூட வந்து குவிந்தன. இரண்டு பெரிய சூட்கேஸ் நிறைய கடிதங்கள் வைத்திருந்தேன். (இந்திய இராணுவத்தினர் 1989இல் அவைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம்.)

8 - இன்று இணையத்திலும் எழுதுகிறேன். எல்லோரையும் போல எனக்கெனச் சொந்தமாக இணையத்தளம், வலைப்பதிவு என்று வைத்துக் கொண்டிருக்கிறேன்.

பிள்ளைகளுக்கும் திருமணமாகி, பேரப்பிள்ளைககளுடனும் கொஞ்சுகிறேன். முடிந்தவரை தேவைப்படுகின்ற எல்லோருக்கும் உதவி செய்து கொண்டு, அமைதியாக வாழ வேண்டும் என்பதே விருப்பம்.

கடவுள் நம்பிக்கை இல்லை. சின்னவயதில் இருந்தது. அம்மாவோடு சேர்ந்து விரதங்களும் பிடிப்பேன். இப்போது இல்லை. கோயிலுக்கும் செல்வதில்லை. மற்றவர்களைத் துன்புறுத்தாமல், மற்றவர்களுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்வது கோயிலுக்குச் செல்வதை விட நல்லது என நினைக்கிறேன். அதற்காக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை தடுப்பதும் இல்லை. மதங்களைத் தூற்றுவதும் இல்லை. ஆனால் ஒவ்வொரு மதத்திலும் உள்ள மூடக் கொள்கைகளை முற்றிலுமாக வெறுக்கிறேன்.

இவையெல்லாம் பெரும் சாதனைகள் என்று நான் சொல்லவில்லை. இவைகளை விடப் பெரிதாக நான் எதையும் சாதிக்கவும் இல்லை.

சந்திரவதனா
12.7.2007

Tuesday, July 10, 2007

எமக்கான கதவு (ஒரு டயறிக் குறிப்பு)

மனநிலை சரியில்லாதிருந்தது. வேலையில் இருந்து விரைவாக வீட்டுக்குப் போய் விட வேண்டும் போல ஒரு அந்தரம் இருந்தது.

"என்ன, இண்டைக்கு ஆழ்ந்த அமைதியில் இருக்கிறாய்? பேச்சையே காணோமே...” என்று எனது வேலைத்தோழிகள் ஒவ்வொருவராகக் கேட்டு வைத்தார்கள். "தலையிடிக்குது" என்று பொய் சொல்லி விட்டு வேலையைச் செய்து கொண்டிருந்தேன். என்னதான் அவசரமாக இருந்தாலும், வேலை முடிந்து விட்டது என்றாலும், சரியான காரணம் காட்டி பிரத்தியேக அனுமதி எடுக்காத பட்சத்தில் குறிப்பிட்ட நேரம் வரை அங்கு இருந்துதான் ஆக வேண்டும். கடனே என்று இருந்து முடித்தேன்.

அடுத்து, பகுதி நேர வேலை. அதை நான் எவ்வளவு வேகமாகச் செய்கிறேனோ, அந்தளவு கெதியில் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விடலாம்.

விரைவாக வேலையை முடித்து விரைவாக வீட்டுக்கு ஓடி விட வேண்டுமென்ற எண்ணத்தில் மிகவும் அவசரமாகச் செய்து கொண்டிருந்தேன். இடையிடையே மேலதிக வேலைகள் வந்து சேர்ந்ததால் வேலைகளை முடித்து நேரத்தைப் பார்த்த போது நேரம் 8.39ஆகி இருந்தது. 8.40க்குப் பேரூந்து. இனி ஓடினாலும் பேரூந்தைப் பிடிக்க முடியாது என்பதில் மனம் சோர்ந்து விட்டது. இத்தனை அவசரமும், வேகமும் காட்டியும் நினைத்ததைச் சாதிக்க முடியாது போய் விட்டதே, என்பதில் கவலையாகி விட்டது.

இரவு நேரம் என்பதால் அடுத்த பேரூந்து 40நிமிடங்கள் கழித்து 9.20க்குத்தான் வரும். வழமையில் 30நிமிடங்கள் நடந்தாவது வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விடுவேன். இன்றைய மனநிலையில் நடப்பதற்கான எந்தவித ஆர்வமும் இருக்கவில்லை. அத்தோடு கோடைகாலத்துக்கு ஒவ்வாத குளிர்காற்று வீசிக் கொண்டிருந்தது. இன்னொரு பிரச்சனை, நான் வழமையாகச் செல்லும் பாதையில் "இந்தப் பாதையில் உள்ள மரங்களில் மயிர்க்கொட்டி இருக்கிறது. அதன் மயிர்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. அவை உங்கள் உடலிலும், தோலிலும் பாரதூரமான அலர்ஜியை உண்டு பண்ணும். இதை மீறி நீங்கள் இந்தப் பாதையால் சென்று உங்களுக்கு ஏதாவது ஆகினால் அது உங்கள் பொறுப்பே" என்ற வார்த்தைகளுடன் பெரிய பதாதை கொழுவியிருந்தது.

அனேகமான பொழுதுகளில் இந்த நேரத்தில் எனது வேலையிடத்தில் இருக்கும் Treadmiller இல் அரைமணி நேரம் ஓடுவேன். இன்று அதற்கான மனநிலையும் துளியும் இருக்கவில்லை.

சோர்ந்த மனதுடன் வெளிக்கிட்டுப் படிகளில் இறங்கிய போதுதான் அந்தப் பெண்ணைக் கவனித்தேன். என்னைப் போலவே லிப்றைப் பாவிக்காமல் அவள் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள். முதலே அவளை அந்த அலுவலகத்தின் வேறொரு பகுதியில் நான் கண்டேன்தான். ஆனாலும் அவள் அவ்வளவாக என் கவனத்தைக் கவரவில்லை.

இப்போது என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு போனாள். அவளை விட வேகமாக நான் நடந்ததில் அவளருகில் போன போது மெலிதாகச் சிரித்தாள்.

ஏதாவது கதைக்க வேண்டுமென்று தோன்றியது. "ஹலோ" என்றேன்.

அவளும் "ஹலோ" என்றாள்.

சேர்ந்து நடந்து கொண்டிருந்தோம். சும்மா கதைத்தோம்.

வேளைக்குப் போகவேண்டும் என்ற முனைப்போடு அவசரமாக வேலை செய்தும் எனது பேரூந்தை விட்டு விட்டேன் என்ற ஆதங்கத்தை அவளிடம் சொன்னேன்.

"ஓ.." என்று எனக்காகக் கவலைப் பட்டாள்.

"எங்கே இருக்கிறாய்?" என்றாள்

இடத்தைச் சொன்னதும் நான் உனது வீட்டைத் தாண்டித்தான் போக வேண்டும் என்று சொல்லி தனது இடத்தைச் சொன்னாள். தன்னோடு என்னை வரும்படி இன்முகத்துடன் அழைத்தாள்.

காரினுள் ஏறும் போதுதான், "உனது முகம் என்னுள் எதையோ ஞாபகப் படுத்துகிறது. நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள்?" என்றாள்.

"சிறீலங்கா" என்றேன்.

"அப்ப உனக்கு திலீ யைத் தெரியுமா?" என்றாள்.

எனது மகன் திலீபனைத்தான் கேட்கிறாள் என்பது புரிந்தது.
"ம், எனது மகன்தான் என்றேன்."

மிகுந்த சந்தோசமாகி விட்டாள்.

கிட்டத்தட்ட 10வருடங்களின் முன், தான் எனது மகனின் 12ம், 13ம் வகுப்பு பிரெஞ் பாஷைக்குரிய ஆசிரியராக இருந்ததிலிருந்து தொடங்கி எனது மகனின் கெட்டித்தனம் பற்றி.. நட்புடன் பழகும் தன்மை பற்றி என்று மிகுந்த சந்தோசமாக என்னோடு பேசிக் கொண்டு வந்தாள்.எனது மகனுக்கு மறக்காமல் தனது வாழ்தைச் சொல்லும் படி வேண்டினாள்.

வீட்டடியில் இறங்கும் போது "பார்த்தியா, சந்திப்புகள் எப்படி எப்படி வருமென்றே தெரியாது. உன்னை இன்று சந்தித்தது ஒரு அதிசயமே. எனக்கு மிகுந்த சந்தோசமாக இருக்கிறது. மீண்டும் சந்திப்போம்" என்றாள்.

நான் பேரூந்தில் வருவதையும் விட வேகமாக வீட்டுக்கு வந்து விட்டேன். அந்த சந்திப்பு ´எதற்காகவும் சோரத் தேவையில்லை. எங்கோ ஒரு கதவு எமக்காகத் திறந்திருக்கும்´ என்ற நம்பிக்கையை எனக்குத் தந்தது. என் மனதும் ஓரளவு லேசாகியிருந்தது.

சந்திரவதனா
9.7.2007

Monday, July 09, 2007

தமிழ் கலைஞர்கள்

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் கலைஞர்கள் பற்றிய விபரம் தேவைப் படுகிறது.
உங்களுக்குத் தெரிந்த கலைஞர்களையும்,
கலைஞர்களாகிய உங்களையும் இங்கு அறிமுகப் படுத்துங்கள்.

Thursday, July 05, 2007

கரும்புலிகள் என நாங்கள்

மீள்பதிவுநாங்கள் அழகு மாணிக்கங்கள் அல்ல,
அத்திவாரக் கற்கள்
அழகான ஈழம் அமைவதற்காக
வெளியில் தெரியாமல் புதைந்து போனவர்கள.;

எங்கள் சிலரின்
முகங்களையும் முகவரிகளையும்
சுவரொட்டிகளில் தேடாதீர்கள்
நாங்கள்
உங்கள் பாதங்கள்
உரிமையுடன் நடப்பதற்காக
எங்கள் உடல்களைப்
பஸ்பமாக்கிக் கொண்டவர்கள்.

மண்ணின் விடிவுக்காக
மாற்றானின் அருகிற் சென்று
கூற்றுவனை வலிந்தழைத்து
குசலம் விசாரிப்பவர்கள்

மின்னல்க் கீற்று வெடி முழக்கத்துடன்
கண்ணில் படாமல் கரைந்து போன
எங்கள் கல்லறைகள்
வெளியில் தெரிவதில்லை.

அநேகமான சமயங்களில் நாங்கள்
அஞ்சலிக்கு வைக்கப் படாத
அநாமதேய வித்துடல்கள்.

- தீட்சண்யன் -

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite