Sunday, October 08, 2006
ஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்.
இசை என்பது மனித உணர்வுகளை அசைக்க வல்லது. துன்பம் இன்பம் இரு பொழுதுகளிலும் எம்மைத் தாங்கக் கூடியது. காற்றில் அதிர்வுகளை உண்டாக்கி, அதனூடு செவிப்பறைகளைத் தாக்கி, கொஹ்லியா (cochlea) குழியிலுள்ள செல்களில் மின்னழுத்த வேறுபாடுகளை உண்டாக்கி தண்டுவடம் மூலம் மூளையின் தலாமஸ் பகுதிக்கு விரைந்து, அங்கு வரும் உணர்வு அலைகளுக்கு ஏற்ப கட்டளை மின்னலைகளை உருவாக்கி, உடலின் வலிகளையும், நோய்களையும் நீக்க வல்லது.
என்னை ஒரு சிலர் கேட்பார்கள் "எத்தனையோ பிரச்சனைகள் நாட்டில், உலகில் என்று இருக்கின்றன. நீயென்ன சும்மா உந்தச் சினிமாப் பாடல்களை ரசிக்கிறாய்" என்று. அவர்களுக்கு நான் சொல்லும் பதில்கள் அவர்களைத் திருப்திப் படுத்துகின்றனவோ, இல்லையோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இசை என்பது எனது உயிரை அசைக்கிறது என்பது உண்மை. எனது உணர்வுகளைத் தாலாட்டுகிறது என்பது உண்மை. எனது ஞாபகங்களை மென்மையாகவும், தன்மையாகவும் மீட்டுகின்றது என்பது உண்மை.
எந்த இசையையும் நான் ரசிப்பேன். அது சினிமாப் பாடல்தான் என்று முத்திரை குத்தி வைக்க வேண்டியதில்லை. எனது ஈழத்தின் மெல்லிசைப் பாடல்கள், பொப்பிசைப் பாடல்களில் தொடங்கி மேற்கத்திய இசை வரை நான் ரசிக்கிறேன். இந்த இசைகள் என் உயிரைச் சீண்டுகின்றன. எந்த ஒரு சோர்ந்த பொழுதிலும் எங்கோ ஒலிக்கும் ஒரு இசையில் நான் மெய் சிலிர்க்கிறேன்.
காதலின் இனிமையை, அன்பின் தழுவலை, சோகத்தின் போதான ஆதரவான அணைப்பை, குலுங்கி அழ வேண்டும் போன்ற உணர்வைத் தோற்றுவிக்கக் கூடிய இழப்பின் போதான வலிக்கான ஒத்தடத்தை... என்று ஒவ்வொரு உணர்வின் போதும் இந்த இசை என்னை அணைக்கிறது. தழுவுகிறது. தாலாட்டுகிறது. என் மனதை நீவி விடுகிறது.
இசைகளில், பாடல்களில் மயங்காதார் உண்டோ? பாம்புகள் கூட இசையில் மயங்குகின்றன. புன்னாகவராளி இராகம் இசைக்கும் போது அவை காற்றில் ஏற்படுத்தும் அதிர்வில் பாம்புகள் மயங்குகின்றன. இந்த இராகத்துக்கு கொடூர எண்ணம் உள்ளவர்களையும், கொலைவெறி கொண்டவர்களையும் அமைதிப் படுத்தும் சக்தி இருக்கிறதாம். இப்படி ஒவ்வொரு இராகத்துக்கும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கிறது.
பாட்டுக்கு பாலைவனப் பூக் கூடப் பூப் பூக்குமாம். மெட்டுக்கு வெண்ணிலவு கூடத் தலையசைக்குமாம். இது ஒரு கவிஞரின் அதீத கற்பனை கலந்த வரிகளாயினும் பாடல்களுக்கும் இசைக்கும் எம்மை அசைக்கும் சக்தி இருக்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களாலும் மருத்துவர்களாலும் உண்மை என நிரூபிக்கப் பட்ட கருத்து.
இன்பம், துன்பம், கோபம், அமைதி... என்று மனம் துள்ளுகின்ற அல்லது துவள்கின்ற எந்த விதமான நேரத்திலும், மகிழ்கின்ற எமது மனதுக்கு மகிழ்வு சேர்க்கவோ, அல்லது துவள்கின்ற எமது மனதுக்கு ஆறுதல் கூறவோ இந்தப் பாடல்களால் முடியும்.
நாம் நாளாந்தம் செய்யும் ஒவ்வொரு வேலையுடனும், செயற்பாட்டுடனும் பாடல்களும் இணைந்து நிற்கின்றன. கருவறையில் இருந்து வெளிவந்த, உலகத்தைத் தெரியாத அந்தப் பச்சைக் குழந்தைப் பருவத்தில் கூட நாம் அம்மாவின் தாலட்டுப் பாடலில் மயங்கி அழுவதை மறந்து, அமைதியாக உறங்கி விடுகிறோம். தொடரும் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு வகையான பாடல்களில் நாம் மயங்கி, மகிழ்ந்து, அமைதியாகிப் போகிறோம். அல்லது துள்ளிக் குதிக்கிறோம். அல்லது ஆறாத சோகத்தையும் அழுகையாக வடிக்கிறோம். இன்னும் எத்தனையோ வகையான உணர்வுகளை அனுபவிக்கிறோம்.
வேலைகள் என்று பார்க்கும் போது, நாற்று நடுபவருக்கு ஒரு பாட்டு, மீன் பிடிப்பவருக்கு ஒரு பாட்டு... என்று ஒவ்வொரு வேலைக்கும் அதனோடு இசையக் கூடிய, இசையுடன் கூடிய பாட்டு இருக்கும். போராட்டம் என்று பார்க்கும் போது அதற்கும் ஒரு பாட்டு(பரணி) இருக்கிறது. அந்தப் பாடல்களுக்கு துணிவையும், வீரத்தையும் மட்டுமல்லாமல் விடுதலை உணர்வையும் உற்சாகத்தையும் சேர்த்துத் தரக்கூடிய சக்கி இருக்கிறது. இதே போல ஒப்பாரிப் பாடல்களுக்கு மனதில் இருக்கும் சோகத்தை வடித்துக் கொட்ட ஏதுவான சக்தி இருக்கிறது. இவைகளில் இருந்தே இசையும் பாடல்களும் எம் வாழ்வோடு எந்தளவுக்கு ஒன்றியிருக்கின்றன என்பதையும் அவை எத்தகைய அவசியமானவை என்பதையும் எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
எனக்கு அனேகமான பாடல்களைக் கேட்கும் போது, எனது சின்ன வயதுடன் கூடிய, அப்பாவுடனான, அம்மாவுடனான, அண்ணாவுடனான, சொந்தங்களுடனான, நண்பர்களுடனான... என்று பல ஞாபகங்கள் அந்தந்தப் பாட்டுக்கு ஏற்ப வந்து போகின்றன. அந்த ஞாபகங்கள் சந்தோசமாய், சந்தோசம் கலந்த துன்பமாய், ஏக்கமாய், ஏக்கம் கலந்த இனிமையாய்... பல்வேறு வடிவங்களில் என் மனசை வருடுகின்றன. இந்த வருடலுடன் எனக்குப் பிடித்தமான ஒருவரையோ, இருவரையோ, பலரையோ அல்லது ஒரு சம்பவத்தையோ என் முன் கொண்டு வந்து நிறுத்தி என் கண்களைப் பனிக்க வைக்கின்றன.
உதாரணமாக, 70களில் நாம் பாடசாலைக்கு அவசரமாக வெளிக்கிடும் காலைப் பொழுதுகளில் துலாவைப் பதித்து கிணற்றில் நீர் மொண்டு குளிக்கும் போது, இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் ஒலித்த எமது மெல்லிசைப் பாடல்களில் குறிப்பாக கே.எஸ்.பாலச்சந்திரனின் பெற்ற மனம் பித்து என்பார்... என்ற பாடலை இப்போது கேட்டாலும், துலாவும் என் வீட்டுக் கிணறும், மெல்லிய இதமான சூடும், குளிரும் கலந்த தண்ணீரில் நான் குளித்த அந்தப் பொழுதுகளும் என் நினைவைக் குளிர வைக்கும். இதே போல எம்.பி.கோணேஸ் பாடிய பரமேசின் உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது, எனக்குத் தெரியுமா நீ என்னை நினைப்பது..., எஸ்.கே.பரராஜசிங்கம் பாடிய அழகான ஒரு ஜோடி கண்கள்... இன்னும் யாரோ ஒருவர் பாடிய முகத்தைப் பார்த்துக் குணத்தை அறிய அறிவை இறைவன் கொடுக்கவில்லை...
எம்.பாக்கியராஜா பாடிய புது ரோஜா மலரே.... என்று பாடல்களின் வரிசைகளும் அதனுடனான நினைவுகளும், உணர்வுகளும் நீண்டு கொண்டே போகும்.
வார இறுதியில் மதியப் பொழுதுகளில் ஒலிக்கும் கள்ளுக் கடைப் பக்கம் போகாதே.. சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே.. போன்ற பொப் இசைப் பாடல்களைக் கேட்கும் போது, அம்மா சமைக்கும் போது, கொதிக்கும் எண்ணெயில் வெங்காயத்தைப் போடும் கலகலத்த சத்தம் காதுக்குள் கேட்கும். கமகமக்கும் பொரியலின் வாசம் மூக்கினுள் வரும். கறுவாப் பட்டையின் இனிமை கலந்த நறுமணத்தை மூளை உணரும்.
1993இல் பூநகரித் தாக்குதலில் எனது தம்பி மரணித்த செய்தியில் நான் வாடிக் கிடந்த ஒரு பொழுதில் ஒரு ஒலிப்பேழை என் கரம் கிட்டியது. அதில் இடம் பெற்ற பாடல்களில் ஒன்றான,
ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.
சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!.... என்ற பாடலைக் கேட்கும் போது மனதை ஒரு தரம் வேதனை பிழிந்தெடுக்கும். தம்பியின் ஞாபகம் வாட்டும். இந்தப் பாடலும் அந்த சோகமும் என்னுள் ஒன்றாகப் பதிந்திருக்கின்றன. இது சோக உணர்வே ஆனாலும் அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று மனது ஆவல் கொள்ளும்.
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.... என்ற வரிகளை மனசு மானசீகமாக மீண்டும் மீண்டுமாய் மீட்டிக் கொண்டே இருக்கும்.
இப்படியே ஒவ்வொரு பாடலைக் கேட்கும் போதும் ஏதோ ஒரு நினைவு வந்து மனசை ஆக்கிரமித்துக் கொள்கிறது.
இந்த உணர்வுகளையே கவிதையாக்கிப் பாடலாக்கி ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும், கேட்கும் பொழுதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்.... என உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்ற திரைப்படத்துக்காக ஒரு கவிஞர் எழுதினார். அப் பாடல் வெளி வந்த காலத்தில் பாடல்களை ரசிக்கும் அனேகமானோர் இது தமக்காகவே எழுதப் பட்ட பாடல் என்ற பிரமையோடு அதைப் பாடிக் கொண்டும், ரசித்துக் கொண்டும் திரிந்தார்கள். இந்த நினைப்பு எனக்குள்ளும் வந்தது. இப்பாடல் என்னுள்ளும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. இப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றுமே என் சின்ன வயசுக்கும் பொருந்தி என் மனதை மீட்டக் கூடியதாக இருந்தது.
ரெயிலின் பயணத்தில் மரம் நகர்ந்தது ஞாபகமே... என்ற வரியில் மரம் நகர்ந்ததுக்கும் மேலாக இன்னும் நிறைய ஞாபகங்கள். ரெயினில் பயணம்... இது எனக்கு எப்போதுமே இனிய சந்தோச உணர்வைத் தருவது. இப்போது கூட ரெயின் ஓடும் சத்தம் கேட்டால், ஒவ்வொரு பாடசாலை விடுமுறைக்கும் எனது குடும்பத்துடன் புகையிரதத்தில் பயணித்ததும், அப்பாவின் ரெயில்வே குவர்ட்டர்ஸில் புகையிரதத்தின் சத்தங்களுடனேயே தூங்கிப் போனதும், ஞாபகத்தில் வந்து, இனம் புரியாதவொரு குதூகலம் கலந்த ஏக்கம் என்னுள் குடிகொள்ளும்.
மருதானை புகையிரதநிலையத்தில் கீழே தண்டவாளங்களில் புகையிரதங்கள் அடுக்கடுக்காய் ஊர, மேலே கடமையில் இருக்கும் அப்பாவின் அருகில் கதிரையில் அமர்ந்து, கதையளந்தபடி மருதானைக்கே உரிய மசாலாவடை, பொரித்த கஜூ, பொரித்த கச்சான்... என்று சுவைத்தவைகளையும் இன்னும் பல புகையிரத நிலையத்துடனான சம்பவங்களையும் இப்பாடல் மீட்டிப் பார்க்க வைக்கும்.
கட்டப் பொம்மன் கதையைக் கேட்ட ஞாபகம்... என்ற வரி பாடப் படும் போது, முழுக்க முழுக்க அப்பாவின் ஞாபகம். அப்பா கதை சொல்வதில் வல்லவர். அவர் இலங்கையின் எந்தப் பாகத்தில் கடமையில் இருந்தாலம், அங்கிருந்து அஞ்சலில் பத்திரிகைகளை எமக்கு அனுப்புவது மட்டுமல்லாது, வீட்டுக்கு வரும் போது எங்கள் வயதுக்கு ஏற்ப பல கதைப் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு வந்து வாசித்தும் காட்டுவார். வாசித்துக் காட்டும் போது அதற்கேற்ப நடித்தும் காட்டுவார். அவர் ஒரு முறை கட்டப்பொம்மன் கதையைச் சொன்ன போது, மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு தானே கட்டப் பொம்மன் ஆனது இன்னும் மனக்கண்ணில் தோன்றி சிலிர்ப்பைத் தரும்.
பாடல்களைக் கேட்கும் போது எனக்குள் ஊற்றெடுக்கும் நினைவுகள் ஒவ்வொன்றையும் நான் சொல்வதானால் எனக்கு இன்னும் நிறையப் பக்கங்கள் தேவை.
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்,
கேட்கும் பொழுதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்.
மிகவும் நிதர்சனமான வரிகள். ஒவ்வொரு பாடலின் போதும், ஏதேதோ நினைவுகள் ஊற்றாய் கசிந்து, நதியாய் விரிந்து... மனசை நனைக்கின்றன.
சந்திரவதனா
7.10.2006
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
▼
2006
(
137
)
- ▼ October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )