
பெப்பே தான் அவசரமாக வாங்கில் மேசைகளை ஒழுங்கு படுத்தி விட்டது. அது யார் பெப்பே...! என்ற யோசனை உங்களுக்கு வரலாம். அது பாவம். நாங்கள் பெண்கள் எல்லோருமாகச் சேர்ந்து அதுக்கு வைத்த பெயர்தான் பெப்பெ. அதென்ன அஃறிணையில்... என்று நெற்றியைச் சுருக்குகிறீர்களா? அவனெண்டு சொல்ல முடியவில்லை. வயதில் மூத்தது. அவர் என்று சொல்ல முடியாத படி பெப்பே. நாங்கள் ரியூற்றறிக்குள் நுழையும் போது கதவைத் திறந்து விடுவதிலிருந்து கரும்பலகையைச் சுத்தமாக்கி... என்று எல்லாவற்றையும் செய்து வைப்பதுதான் பெப்பேயின் வேலை.
யாரோ நாங்கள் பெப்பே என்று சொல்வதை அதுக்குச் சொல்லி, ஒரு நாள் இடைவேளை நேரம் அது வந்து அதன் அர்த்தம் என்ன? ஏன் தனக்கு அப்பிடிப் பெயர் வைக்க வேண்டும் என்று கேட்க எங்களுக்குப் பாவமாகி விட்டது. பெயர் வைப்பதில் மும்முரமாக நின்ற சந்திரப்பிறேமா மட்டும் நைஸாக நழுவி விட்டாள்.
மனசுக்குள் கனவுகளை வளர்த்துக் கொண்டு மன்மத நினைப்பில் பெண்களுக்கு நடுவில் வேலை செய்து கொண்டிருந்த பெப்பே இப்போதெல்லாம் எங்களைக் கண்டால் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
சில 11ம் வகுப்பு மாணவர்கள் உதவி செய்ய, பெப்பே முகத்தைத் தொங்கப் போட்ட படி வாங்கில்களை அடுக்கிக் கொண்டிருக்கவே ஆண்மாணவர்கள் சிலர் தடால் புடால் என்று ஓடிவந்து அமரத் தொடங்கினார்கள். இடங் காணததால் பக்கப் பாடாகவும் வாங்கில்கள் போடப் பட்டன.
வகுப்பு தொடங்கி விட்டது. பெப்பே அவசரமாய்ப் புதுச் சோக்குகளை கொண்டு வந்து மேசையில் வைத்து விட்டு வெளியேறி விட்டது.
மணியம் மாஸ்டர் வழக்கம் போல Organic Chemistry யை இரட்டை அர்த்தம் தொனிக்க விளக்கிக் கொண்டிருந்தார். சிரிப்பலைகளின் நடுவே அவசரமாய் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தோம். திடீரென்று என் காலில் ஏதோ தட்டுப் பட்டது. திடுக்கிட்டுக் குனிந்து பார்த்தேன். ஒரு கால் நீண்டிருந்தது. அது பக்கப் பாடாக எனக்கு வலது பக்கமாக வைக்கப் பட்டிருந்த வாங்கிலில் இருந்த அவனின் கால். நிமிர்ந்து பார்த்தேன். அவன் குனிந்த தலை நிமிராமல் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான்.
என்னை விட இளையவன். 11ம் வகுப்பு மாணவன். எனக்குப் பிரயோககணிதம் படிப்பிக்கும் மாஸ்டரின் மகன். அந்த மாஸ்டர் கடமையே கண்ணானவர். அவர் வகுப்புக்குள் நுழைந்து விட்டால் ஆர்முடுகல், அமர்முடுகல், வேகம், நேரம், கரும்பலகை, சோக், டஸ்ரர்,... இவைகள் தவிர வேறெதுவும் எம் சிந்தனையில் செல்லாது. Chemistry யில் மாதிரி பிரயோககணித வகுப்பில் நிறையப் பெண்களும் இருக்க மாட்டார்கள். ஏதோ பெண்கள் கணிதம் படிக்கத் தகுதியில்லாதவர்கள் என்பது போல டொக்டர், ரீச்சர் கனவுகளோடு உயிரியலும், தாவரவியலும் படிக்கச் சென்று விடுவார்கள். நானும் கீதாவும் இன்பியும்தான் கணிதம் படிப்போம். மிச்ச எல்லாம் பெடியன்கள்தான். எங்களுக்குத்தான் சின்னதாகக் கூடப் பெண்களின் பக்கமாகச் சிரிக்காமல் சீரியஸாகப் படிப்பிக்கும் அந்த மாஸ்டரின் ஆசிரியத் தன்மையும், திறமையும் தெரியும். அதனால் நாங்கள் மூவரும் அவர் மகனான அவனை மற்றைய மாணவர்கள் போல சாதாரணமாக எண்ணாது சற்று எட்டவே வைத்திருந்தோம்.
இதென்னடா...? வாங்கிலுக்குக் கீழே தவறுதலாக ஒரு கால் பட்டதுக்கு இத்தனை ஆரவாரமா என உங்களுக்கு ஒரு சிரிப்பான யோசனை வரலாம். அந்தக் காலம் என்ன உதட்டோடு உதடுரசிக் ´ஹலோ´ சொல்லும் இன்றைய காலமா.? ஒன்றாகப் படிக்கும் மாணவனுடன் கூட ஒரு வார்த்தை பேசாது, ஆண் பெண் என்று பிறித்து, பிரித்து வைத்து.. கண்கள் சந்தித்துக் கொண்டாலே பாவம் என்பது போல தலைகுனிந்து திரியும் இற்றைக்கு 28 வருடங்கள் முந்திய காலமல்லவா அது..!
பார்வையே தொடக் கூடாது. புன்னகை.. அது தெரியாமல் கூட ஆண் மாணவர்கள் முன் பெண் மாணவர்களுக்குப் பூக்கக் கூடாது. இந்த நிலையில் ஒரு ஆண் மாணவனின் கால் பெண் மாணவியின் காலில் படுவதென்பது சும்மாவா..?
அவன் தலை கவிண்ட படியே எழுதிக் கொண்டிருந்தான். யாராவது அவதானித்திருப்பார்களா என்று அறிந்து கொள்ள மெதுவாகப் பார்வையைச் சுழற்றினேன். எல்லோரும் நோட்ஸ் எடுப்பதிலேயே கவனமாக இருந்தார்கள். யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதில் எனக்குப் பெரும்நிம்மதி. இருந்தாலும் ஏதோ அவமானப் பட்டுப் போன மாதிரியான ஒரு உணர்வு. முன் வாங்கிலில்தான் நான் இருந்தேன். எனக்கு நேரெதிரே கரும்பலகைக்கு முன் நின்று படிப்பித்துக் கொண்டிருக்கும் மணியம் மாஸ்டர் கண்டிருப்பாரோ என்று மனசுக்குள் ஒரு சின்ன உறுத்தல்.
அவன் தலையை நிமிர்த்தியதை நான் காணவில்லை. அவன் நோட்ஸ் எடுக்கும் விதத்தைப் பார்த்தால் அவன் என் காலில் தட்டுப் பட்டதையே உணராதவன் போலத் தெரிந்தான். தெரியாமல்தான் நடந்திருக்கும். அவன் நல்ல பெடியன். என் மனசுக்கு நான் கூறிக் கொண்டேன்.
வகுப்பு முடிந்து வெளியில் வந்த போதும் யாரும் இது பற்றி எந்தக் கேள்வியும் கேட்க வில்லை. எனக்கு இப்போ துணிச்சலான நிம்மதி. யாரும் காணவில்லை.
அடுத்த வாரம் பாடசாலைக்குச் சென்ற போது எனது நிம்மதி பாடசாலை மதில்களில் கரிக்கட்டியால் குலைக்கப் பட்டிருந்தது. அவனது பெயரை எழுதி பக்கத்தில் கூட்டல் அடையாளம் போட்டு எனது பெயரும் எழுதப் பட்டிருந்தது. என்னையும் அவனையும் இணைத்தும், நான் அவனின் காலைத் தட்டினேன் என்றும் அரசல் புரசலான கதைகள் பாடசாலைச் சுவர்களில் எதிரொலித்தன.
எனது கால் மாஸ்டரை நோக்கித்தான் நீள முடியுமே தவிர எனக்கு வலது பக்கமாக இருந்த அவனின் பக்கமாக நீள முடியாது. அவனாக வேண்டுமென்று என் பக்கம் நீட்டினானா..? அல்லது தவறுதலாக நடந்ததா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதை ஒரு தவறான கதையாக ஊருக்குள் உலாவ விட்டு விட்டான்.
´ஏன்ரா இப்படி ஒரு கதையை உருவாக்கினாய்` என்று அன்று அவனிடம் சென்று கேட்க ஆண் பெண்ணுக்கிடையில் அன்றிருந்த இடைவெளி இடம் தரவில்லை. அதனால் இன்றுவரை அவன் ஏன் அப்படி நடந்து கொண்டான்..? என்ற கேள்விவிக்கு எனக்குப் பதில் கிடைக்கவும் இல்லை.
சந்திரவதனா - யேர்மனி - 15.9.03