Tuesday, March 23, 2004

நினைவு நதியில் மனதின் ஜதி -3

இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)

புளியடி புங்கடி!


இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)

புளியடி புங்கடி!

எனது இரண்டு உள்ளங் கைகளையும் நான் ஒட்டியபடி வைத்திருக்க அதிலே மண் போட்டு ஒரு தடி குத்தப் பட்டது. கண்கள் அப்பாச்சியின் பழைய சேலை ஒன்றின் தலைப்பில் இருந்து கிழித்தெடுக்கப் பட்ட துண்டால் கட்டப் பட்டது.
சித்தப்பாதான்(பரமகுரு) மெயின். இன்னும் எனது அண்ணன் அக்கம் பக்கத்துப் பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து அப்பாச்சி வீட்டுக்கு முன்னுள்ள அந்தப் பெரிய காணியின் மூலைப் பக்கத்திலிருந்து விளையாட்டைத் தொடங்கினோம்.

அதுதான் எமது விளையாட்டுக்களுக்கான மையப்புள்ளி. அப்பாச்சி வீட்டுக்காணி போலவே அந்தக் காணியும் பென்னாம் பெரிசு. ஆனால் அப்பாச்சியின் காணியில் பூட்டப்பாவின் மூன்று பெண்களுக்குமெனக் கட்டப் பட்ட மூன்று வீடுகள் முறையே அடுக்காக அமர்ந்திருந்தன. வீடுகளுக்கிடையேயும் பின்னுக்கும் பெரிய பெரிய முற்றங்கள். வீடுகளைப் பிரிக்கும் எல்லைகளாக ஓரிரு செம்பருத்தியும் ஒரு நெல்லியும்தான். படுக்கையும் சமையலும் மட்டும் அவரவர் வீடுகளுக்குள் நடக்கும். மிச்சமெல்லாம் பனம் பூக்களைச் சொரிந்து கொண்டும், நொங்குகள் தொங்கிக் கொண்டும் ஆங்காங்கு நிமிர்ந்து நிற்கும் பனைகள் நிரவி நிற்கும் அந்த முற்றங்களில்தான்.

அப்பாச்சி வீட்டின் களைக்கு முற்றும் எதிரான தோற்றத்துடன்தான் முன் காணி. எருக்கலை பூத்திருக்கும். பிரண்டை படர்ந்திருக்கும். கற்றாழை ஆங்காங்கு துண்டுகள் வெட்டி எடுக்கப் பட்ட இதழ்களுடன் சற்று விறைப்பாக விரிந்திருக்கும். ஊமத்தை பூத்திருக்கும். சில காலங்களில் பருத்தி வெடித்துப் பஞ்சுகள் பறந்து கொண்டிருக்கும். குவித்து வைக்கப் பட்ட கற்கள் எங்கள் உழக்கல்களால் சிதறி காணி முழுவதும் பரவியிருக்கும். பின் மூலையில் ஒரு மலசலகூடம் தீண்டுவாரின்றி தனியாக இருக்கும்.

பூட்டப்பா இருக்கும் வரை அந்தக் காணியின் மதிப்பு அதிகமாயிருந்தது. அவரின் மருந்துத் தேவைகளுக்கெல்லாம் அங்கிருந்துதான் அனேகமான மூலிகைகள் எடுக்கப்படும். மூலவருத்தக் காரருக்கு கற்றாழை தெய்வம் போல. கற்றாழையின் தோலை நீக்கித் துண்டு துண்டாக வெட்டி - மணம் போவதற்கு - ஏழு தண்ணீரில் கழுவி கோப்பையில் போட்டால் மிகவும் அழகாக பளிங்குக் கற்கள் போல் பளபளக்கும். அதை மூலவருத்தக்காரர் காலை எழுந்தவுடன் வெறு வயிற்றில் சாப்பிட வேண்டும். வாய்க்குள் போட்டால் அப்படியே வழுக்கிக் கொண்டு போகுமாம். ஆனால் அதன் சுவையில் முகந்தான் அவர்களுக்குக் கோணலாகிப் போகும். என் முகமோ மணத்தில் கோணலாகி விடும்.
சொல்லி வைத்து மூன்று மாதத்தில் வருத்தம் மாறி விடுமாம். மூலவருத்தக்காரர் வந்தால் பூட்டப்பா இந்தக் கற்றாழையை சுத்தப் படுத்தி இரு கோப்பைகளில் போடுவார். ஒன்று வெறுவயிற்றில் சாப்பிடவாம். மற்றது வீட்டுக்குக் கொண்டு போய் வெங்காயமும் போட்டு நல்லெண்ணெயில் பொரித்து சோற்றுடன் மதியச் சாப்பாடாகச் சாப்பிட வேண்டுமாம். பிரண்டந்தண்டும் கற்றாழை போல ஒரு முக்கியமான மருந்துதான்.

இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)

புளியடி புங்கடி!

இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)

புளியடி புங்கடி!

எல்லோரும் நடந்து கொண்டிருந்தோம். எனது கண்கள் மட்டும் கட்டப் பட்டிருந்தது. வாய் ஓயாது இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)
கேட்கப் படும்.

நானும் சொல்லுவேன். புளியடி புங்கடி!

இராசம்மா பாட்டி வீட்டைத் தாண்டும் போது எள்ளு வாசம் வரும். அவர்கள் எள்ளு ஆட்டி நல்லெண்ணெய் விற்பவர்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் காணிகளுக்கும் ஒவ்வொரு வாசம். எந்த வாசமுமின்றி மல்லிகைப்பூ வாசம் கூட இன்றி; சில வீடுகள் மிகவும் அமைதியாகவும் இருக்கும். எல்லோரும் சொந்தக் காரர்கள்தான். கண் கட்டியிருந்தாலும் நான் எங்கே நிற்கிறேன் என்பதை இந்த வாசங்களினூடே கண்டு பிடித்து விடுவேன்.

அரசடிச் சந்தி ஒரு முச்சந்தி. சித்தப்பா(பரமகுரு) என்னை ஒருதரம் சுழற்றி விடுவார். தலை சுத்தும். பாதை தடுமாறும். கொஞ்ச நேரம் நான் எங்கே நிற்கிறேன் என்று யோசிக்க வேண்டி இருக்கும். ஆனாலும் சிவக்கொழுந்துப் பாட்டி வீடு தாண்டும் போது எதிரேயுள்ள பனங்காணிக்குள் இருந்து வரும் பனம்பூவினதும் பனம்பழத்தினதும் வாசத்தில் இடத்தைப் பிடித்து விடுவேன். அப்படியே மல்லிகைக் கலட்டிப் பக்கம் போய் விடாமல் திரும்பி...... அடுத்த திருப்பத்திலும் பண்டாரி கோயில் பக்கம் திரும்பி விடாமல்....... நடந்தால் சுத்தியும் சுத்தியும் சுப்பற்ற கொல்லைக்குள்ளைதான். புதியாக்கணக்கனுக்கே வந்து விடுவோம்.

இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)

புளியடி புங்கடி.

இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?)

புதியாக்கணக்கன்.

நான் வென்று விடுவேன்.

வீட்டுக்குள்ளிருந்து வெளியே வராது உள்ளிருந்தே எங்களை வழி அனுப்பி வைத்த எனது மாமிமார் என்னைத் தூக்கிக் கொஞ்சுவார்கள். கற்கண்டு அல்லது பனங்கட்டி பரிசாய்க் கிடைக்கும். பனம்பழக் காலமென்றால் பனங்காய்ப் பணியாரம் கிடைக்கும்.

எனக்கு நான்கு மாமிமார். எனது அப்பாவுக்கு ஒரு தங்கை. அவ மூத்தமாமி. அதை விட அப்பாச்சியின் மூத்த தங்கையான முரசு மோட்டை அப்பாச்சிக்கு இரண்டு மகள்கள். அவர்கள் நாகரத்தினமாமி. தங்கரத்தினமாமி. மற்றைய தங்கையான சின்னப்பாச்சிக்கு ஒரு மகள். அவ ராணிமாமி. ராணிமாமி நல்ல வடிவு. உண்மையிலேயே ராணி மாதிரித்தான்.

திடீரென்று ஒரு நாள் இந்த மாமிமார் ஓலமிட்டார்கள். முரசுமோட்டையில் தோட்டம், துறவு, வயல், விளைச்சல் என்று வாழ்ந்த அவர்களின் அப்பா இறந்து விட்டாராம். பூட்டப்பாவின் குடும்பம் ஆட்டம் காணத் தொடங்கியது. நாகரத்தினமாமியும், தங்கரத்தினமாமியும், நாதச்சீனையாவும், சண்முகக்குஞ்சையாவும் அப்பா இல்லாத பிள்ளைகளாகினார்கள்.

அடிக்கடி முரசு மோட்டைக்குப் போய் வந்த முரசுமோட்டை அப்பாச்சி புதியாக்கணக்கனிலேயே முடங்கி விட்டா. மாமிமார் இருவரதும் கண்கள் எப்போதும் குளமாகவே இருந்தன. இடையிடையே நிரம்பி கன்னங்கள் வழியே வழிந்தோடின. அடிக்கடி ஐயா ஐயா என்று அவர் பற்றியே அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

(தொடரும்)

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite