"சும்மா கொஞ்சம் என்னைப் படுக்க விடு."
"நீ இப்ப வேலைக்கெல்லோ போகோணும்.... சமைச்சுப் போட்டம். எழும்பிச் சாப்பிட்டிட்டு வெளிக்கிடு."
சந்திரனும் அலெக்சுமாக பாலாவை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
பாலா உணவுவிடுதியில் வேலையை முடிச்சிட்டு சாமம் இரண்டு மணிக்குத்தான் வந்தவன். வந்தவன் உடனை படுத்திருக்கலாம். அதில்லை. காதலுக்குமரியாதை படத்தை ஆறாவது தடவையாகப் போட்டுப் பார்த்திட்டுத்தான் படுத்தவன்.
அவனுக்குச் சாலினி மாதிரி மனைவி வேணுமாம். அவனுக்குள்ளை இருக்கிற நிறையக் கனவுகளுக்கை இதுவும் ஒன்று.
ஏன் சந்திரனுக்கும் அலெக்சுக்கும் இல்லையே..! அவையளுக்கும்தான். பத்து வருசத்துக்கு முந்தி யேர்மனிக்கு வந்த புதுசிலை ரோகிணி, அமலா, குஸ்பு.. என்று கனவுகள் இருந்தது.
சந்திரன் ஒவ்வொருநாளும் உணவுவிடுதியிலை சலாட் கழுவுற பொழுது தன்ரை கனவுகளையும் சேர்த்துக் கழுவிக் கொண்டிருப்பான்.
அலெக்ஸ் சுப்பர்மார்க்கெட்டிலை நிலத்தைக் கூட்டிக் கழுவுகிற பொழுது தன்ரை கனவுகளையும் கூட்டிச் சேர்த்து கற்பனையில் பறந்து மகிழ்ந்து பின் கழுவித் துடைப்பான். நிலம் பளிச்செண்டு துலங்கும். இவன் மனசோ வெறுமையாகித் துக்கத்தில் துவண்டு ஏக்கத்தால் நிரம்பும்.
"எழும்படா.."
"இவங்கள் இரண்டு பேரின்ரையும் ஆய்க்கினை தாங்கேலாமல் கிடக்குது."
முணுமுணுத்தபடி பாலா எழும்பினான்.
கட்டிலில் இருந்த படியே....
"என்னைத் தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்கத் தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ..."
பாடத் தொடங்கினான்.
பாடி முடியும் வரை பொறுத்திருந்த அலெக்சும், சந்திரனும்
"சரி.. சரி.. சாலினியைப் பிறகு பார்ப்பம். இப்பப் போய் பல்லைத் தீட்டிப் போட்டு வா... சாப்பிடுவம்..." என்றார்கள் ஒரு வித நெகிழ்ச்சியோடு.
யேர்மனிக்கு வந்து பத்து வருசமாச்சு. இந்தப் பழக்கங்களை மட்டும் நீங்கள் விடேல்லை. சொல்லிய படி குளியலறைக்குள் நுழைந்தான் பாலா.
தண்ணீர்ச் சத்தத்தையும் மீறி
"தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளோ?
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ?
கொஞ்சம் பொறு.. கொலுசொலி கேட்கிறதே...
லல லாலால்ல லலலால...
எனது இரவு அவள் கூந்தலில்..
எனது பகல்கள் அவள் பார்வையில்..
காலம் எல்லாம் அவள் காதலில்..
கனவு கலையவில்லை கண்களில்..
இதயம் துடிக்குது ஆசையில்..
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்..
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்..
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்..
நாளைக்கு நான் காண வருவாளோ..
பானைக்கு நீர் ஊற்றிப் போவாளோ..
வழியோரம் விழி வைக்கிறேன்......
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா?
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா?
கொஞ்சம் பொறு.. கொலுசொலி கேட்கிறதே.."
பாலாவின் குரல் தன்னை மறந்து ஒலித்துக் கொண்டிருந்தது.
வெளியே மேசையில் பணம் கேட்டு வந்த ஊர்க்கடிதம் காத்திருப்பது தெரியாமல்....
சந்திரவதனா
12.8.1999
பாடல் வரிகள் - பழனிபாரதி