
அதைப் பிரித்தெடுத்து ஒவ்வொரு கவுண்டரிலும் வைத்து வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொன்றாக, சிரித்த முகத்துடன் கொடுத்தனுப்புவார்கள்.
இப்படி ரோஜாக்களைக் கொண்டு வருபவர்களில் ஒருவன், நான் வேலை தொடங்கிய முதல் வருடம் அங்கு வரும் போது, நான் எனது உள்நுழைவதற்கான கார்ட்டை மெசினில் அடித்துக் கொண்டிருந்தேன். அவனைக் கண்டதும் "காலை வணக்கம்" சொல்லி வைத்தேன். பதில் வணக்கம் சொல்லி என்னைத் தாண்டிச் சென்றவன் என்ன நினைத்தானோ, தான் வைத்திருந்த கட்டுப் பூக்களில் இருந்து ஒரு ரோஜாவை இழுத்த படி என்னிடம் திரும்பி வந்து, ஒரு புன்னகையுடன் தந்து விட்டுச் சென்றான். நானும் சாதாரணமான சந்தோசத்துடன் நன்றி சொல்லி வாங்கி, ரோஜாவை எமக்கான அறையில் பத்திரமாக வைத்து விட்டு வேலைகளைத் தொடர்ந்தேன்.
ஆனால் அதன் பின்னர், சுப்பர் மார்க்கெட்டில் என்னோடு வேலை செய்யும் பல பெண்கள் யாரவன், யாரவன் என்று கேட்ட போதுதான் அந்த ரோஜாவுக்கு கொஞ்சம் மவுசு இருக்கிறதென்பது புரிந்தது. வீட்டுக்குப் போகும் போது ரோஜாவும் கையுமாகச் சென்ற என்னை வழியிலும், பஸ்சிலும் சிலர் அர்த்தத்தோடு பார்த்தார்கள். ஆனால் என் மனசில் அதற்கு எந்த அர்த்தமும் இருக்கவில்லை. யாரோ முன்பின் தெரியாத ஒருவன் நட்போடு தந்தான். அழகிய ரோஜா. வீட்டில் கொண்டு போய் பூச்சாடியில் வைத்த போது இன்னும் அழகாய் இருந்தது. அவ்வளவுதான்.
சில நாட்களில் அது பற்றி மறந்து விட்டேன். அடுத்த காதலர்தினம் வந்த காலை கூட நான் அது பற்றி நினைக்கவில்லை. சுப்பர்மார்க்கெட்டில், அன்று வந்திருந்த கிறீம், சம்பூ, வாசனைத்திரவியங்கள்.. போன்றவற்றை கணக்கெடுத்துப் பதிந்து கொண்டிருந்தேன். திடீரென யாரோ "ஹலோ" சொல்ல, திரும்பினால் அவனேதான். கடந்த வருடம் ரோஜா தந்தவன். ஒரு ரோஜாவை என்னிடம் நீட்டினான். நன்றி சொல்லி வாங்கிக் கொண்டேன். புன்னகையை வீசி விட்டுப் போய் விட்டான்.
என்னைத் தேடி வந்து தந்து விட்டுப் போனான் என்ற நினைப்பு சின்ன சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தாலும், சந்தோசமாகவும் இருந்தது.
அடுத்தடுத்த வருடங்களில் வந்த ஒவ்வொரு காதலர்தினத்தன்றும், சுப்பர்மார்க்கெட்டில் நான் எந்த மூலையில் நின்றாலும் தேடி வந்து புன்னகையோடு, ஒரு ரோஜாவைத் தந்து செல்ல அவன் மறந்ததில்லை. ஒரு ஹலோ, ஒரு GUTEN MOEGEN(good morning) இவை தவிர வேறெதையும் அவன் என்னுடன் பேசியதுமில்லை. காதலர் தினம் தவிர்ந்த வேறெந்த நாளிலும் நான் அவனைச் சந்தித்ததுமில்லை.
என்னை விட, பல வருடங்கள் இளையவானகத்தான் இருப்பான். ஜேர்மனியன். அது தவிர வேறொன்றும் அவனைப் பற்றி எனக்குத் தெரியாது.
2000ம் ஆண்டோடு நான் சுப்பர்மார்க்கெட் வேலையை விட்டு விட்டேன். ஆனாலும் அவன் நினைவு அவ்வப்போது வந்து போகும். காதலர் தினத்தன்று கண்டிப்பாக வரும். என் கணவரோடும், நண்பிகளோடும் அவனது அந்த செய்கை பற்றி கதைத்துக் கொள்வேன். இன்று டிசேயின் பதிவைப் பார்த்தபோதும் நினைவு வந்தது. எழுதலாம் என்றும் தோன்றியது.