Wednesday, September 22, 2004

இந்த வார வலைப்பூ ஆசிரியர் பணியில் இதுவரை

September 22, 2004


சிலந்தியின் ஆசை


ரமணியும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வைத்திருக்கும் ஆரம்பகாலப் பதிவாளர்களில் ஒருவர். இவர் இன்னும் சில பெயர்களில் பதிவுகளை வைத்திருக்கிறார்.

இவர் அப்போதே அம்மாவுக்கு ஏற்ற இணையம் வேண்டும் என அவாப்பட்டுக் கொண்டார். இவரது ஆசை முற்றுமுழுதாக நிறைவேறியதோ இல்லையோ இந்த ஒரு வருடத்துக்குள் தமிழ் வலையுலகில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

வெறுமனே வார மாத சஞ்சிகைகளின் வாசகர்களாக இருந்தவர்களும், உள்ளக் கிடக்கைகளை நாளேட்டில் எழுதி வைத்தவர்களும்.. என்று கணிசமான தொகையினர் தமிழில் வலைப்பதிய ஆரம்பித்து விட்டார்கள். எத்தனையோ இலைமறைகாயாக இருந்த எழுத்தார்வலர்கள், வெளியுலகத்துக்கு வரத் தொடங்கி விட்டார்கள். தமது திறமை தமக்கே தெரியாமல் இருந்த பலர் தம்மாலும் முடியும் என்ற தைரியத்தோடு எழுதத் தொடங்கி விட்டார்கள். தமிழை மெதுமெதுவாக மறக்கத் தொடங்கியவர்கள் மீண்டும் தமிழோடு ஐக்கியமாகி விட்டார்கள். பாவனையிலிருந்து விலகியிருந்த எத்தனையோ தமிழ்ச்சொற்கள் மீண்டும் பாவனைக்குள்ளாகத் தொடங்கி விட்டன.

பல் வேறு தரத்தினரும், பல் வேறு துறைகளில் ஆர்வமுள்ளவர்களும் வலைப்பதியத் தொடங்கியதில் வலைப்பூக்களைத் தரிசிக்கும் ஒவ்வொருவருமே தத்தமது ஆர்வத்துக்கு ஏற்புடையதான விடயங்களைத் தேடி எடுத்து வாசித்து, ஏதோ ஒரு வகையில் பயனாளிகளாகவும் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் காசியின் முயற்சியில் உருவான தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம், வலையுலகுக்கும் வலைப்பூ ஆர்வலர்களுக்கும் கிடைத்த பெரியதொரு வரப்பிரசாதம்.

இந்தளவு வளர்ந்த வலைப்பதிவுகளை இன்னும் வளர்க்கவும், பிரபல்யப் படுத்தி இன்னும் பலர் வலைப்பதிவுகளோடு இணைந்து கொள்ளவும் இது பற்றியதான கட்டுரைகளை எழுத வேண்டுமென காசிக்கு ஒரு கடிதம் வரைந்துள்ளார் ரமணி. வாசித்துப் பாருங்கள். காசி மட்டுமென்றில்லாமல் மற்றவர்களும் உங்கள் உங்கள் இடங்களில் உள்ள நல்ல பத்திரிகைகளுக்கு இது சம்பந்தமான கட்டுரைகளை எழுதிக் கொடுக்கலாம்.

சந்திரவதனா

September 21, 2004


புதியவர்



எதிர் வரும் இளைய தலைமுறையிடம் தமிழினைச் சேர்ப்பிக்கும் ஊடகமாய் இணையம் இருக்கும் தறுவாயில், இணைய மொழியாக்கம் மிகத் தேவையான ஒன்றுதான்! என்கிறார் புதியவர் யூனா

chandravathanaa

ஆரம்பகால வலைப்பதிவாளர்கள்



ஆரம்பகால வலைப்பதிவாளர்கள் பலர் காணாமற் போய் விட்டார்கள். ஆனாலும் எளிதில் அவர்களை மறந்து விட முடியாது. வலைப்பதிவுகளின் மேல் இன்றைய தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு ஆர்வம் ஏற்படும் வகையில் வலைப்பதிவு செய்து வளர்த்து விட்டவர்கள் அவர்கள்.

ஆரம்ப கால வலைப்பதிவாளர்களில் சுபாவின் பதிவுகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. ஆரம்பகாலம் போல அடிக்கடி பதியாவிட்டாலும் இப்போதும் இடையிடையே வந்து ஏதாவது எழுதிக் கொண்டுதானிருக்கிறார். இவர் யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருந்ததால் ஆரம்பத்தில் யேர்மனி பற்றிய விடயங்களை Germany in Focus என்ற தலைப்பில் எழுதிக் கொண்டிருந்தார். இவர் இன்னும் பல வலைப்பதிவுகளை வைத்திருந்தாலும் இது பலரைக் கவர்ந்த பதிவுகளில் ஒன்று. மலேசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு கட்டத்தில் Malaysia in Focus என்ற தலைப்பில் சுபா இல்லம் ஒன்றை அமைத்து மலேசியா பற்றிய பல விடயங்களையும் எழுதத் தொடங்கினார். ஆனாலும் முந்தைய வேகம் ஏனோ இப்போது இல்லை. இவரது மலேசியா சம்பந்தமான இறுதிப் பதிவில் தாயின் மரணம் குறித்து வருந்தியுள்ளார். தாயில்லாத தாய்நாட்டுக்குப் போகும் போதான அவர் மனதின் ஆதங்கம் புரிகிறது. மனதின் சோகம்தான் எழுத்தை முடக்கியதோ என்பதுதான் தெரியவில்லை.

இவர் கடந்த வருடம் ஐப்பசி மாதத்தில் வலைப்பூ ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
ஹரன் பிரசன்னா இவரும் ஆரம்பகால வலைப்பதிவாளர்களில் ஒருவர். நிழல்கள் என்ற பதிவில் நினைவுகளை உணர்வுகளோடு கலந்து கதையாய், கவிதையாய்... என்று பதிந்துள்ளார்.

தற்போது கம்பராமாயணம், பாஞ்சாலி சபதம்.. என்று மரபிலக்கியங்களையும் பதியத் தொடங்கியுள்ளார்.

இங்கு தவறாக எழுதி விட்டேன்.
மரபிலக்கியத்தை எழுதுபவர் Hari Krishnan

நா.கண்ணன் இவரும் ஆரம்பகாலப்பதிவாளர்களில் ஒருவர். ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வைத்துள்ளார். கவிதை, கட்டுரை, கொரியக் கட்டுரைகள் என்று பல தரப்பட்ட விடயங்களைப் பதிந்து கொண்டு வந்தாலும், 44அங்கங்களைத் தாண்டி விட்ட இவரது வைகைக்கரைக்காற்றே பலரைக் கவர்ந்த தொடர்களில் ஒன்று.

நவநீத கிருஷ்ணன் இவரது முதற்பதிவு 2002 இல் பதியப் பட்டுள்ளது. சற்று ஆச்சரியத்தைத் தருகிறது. ஆனால் சளைக்காமல் இன்னும் பல் தரப்பட்ட விடயங்களைப் பதிந்து கொண்டிருக்கிறார். இவரது இறுதிப்பதிவு ப்புரோக்கிராமர்கள் பற்றியது.

செல்வராஜ் நன்றாக எழுதிக் கொண்டிருந்தார். இப்போது இவர் பதிவில் எதையும் வாசிக்க முடியவில்லை.

ஆரம்பகாலப் பதிவாளர்களில்
காலோரம் அலை புரண்டு கெஞ்சும்
எனினும்
வானோரத் தாரகைக்கே ஏங்கும் நெஞ்சம்

என்ற மாலனும் ஒருவர். திசைகளோடு திசை மாறி மாறி விட்டார்.

சந்திரவதனா

சாப்பாடே போச்சு



கணவன் : எப்பிடி ஒரு செல்லப்பிள்ளை போல இருந்தனான் நான்.

உன்னைக் கட்டி என்ரை வாழ்க்கை இப்பிடியாப் போச்சு....

மனைவி : ம்...

என்ரை வாழ்க்கையும் அப்பிடித்தான்.

கணவன் : என்னப்பா கண்டடிறியாத சமையல் சமைச்சு வைச்சிருக்கிறாய்?

தாயோடு சுவை போச்சு எண்டு இதுக்குத்தான் சொல்லுறது.



மனைவி : உங்களுக்காவது நான் சமைச்சு வைச்சிருக்கிறன்.

எனக்கு....!

சந்திரவதனா

வலைவலம் - 21.9.2004



அறிவியல் என்பது எந்தளவு தூரத்துக்கு வாழ்வோடு அவசியப் பட்டது என்றாலும், அதைத் தேவை கருதியே வாசிக்கிறோம். மற்றும் படி இந்த மனசு தேடுவதென்னவோ சுவையும், சுவாரஸ்யமும் நகைச்சுவையும் நிறைந்த விடயங்களையே! இருந்தாலும் சில சமயங்களில் அறிவியலில் கூட சுவையான தகவல்கள் கிடைக்கின்றன.

முதுமையைத் தள்ளிப் போட்டு விட்டு வாழ்நாளை நீடிக்கலாம் என்றால் யார்தான் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்காமல் விடுவார்கள். தற்கொலையின் வீதம் எந்தளவாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனதும் அதி உச்சப் பயம் மரணத்தை ஒட்டியதுதானே. அந்த மரணத்தையே தள்ளிப் போடவும் மருந்து கண்டு பிடித்திருக்கிறார்களாம். யாருக்குத்தான் அதை வாசிக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல் போகும்.

சிவப்பு வைனிலும், திராட்சைப்பழங்களிலும் காணப்படும் resveratrol என்ற வேதிப்பொருள்தான் இந்த முதுமையை விரட்டும் பதார்த்தம் என Brown, Harvard, Connecticut மூவருமாகச் சேர்ந்து பரிசோதனை செய்து கண்டு பிடித்துள்ளார்கள். முதுமையை விரட்ட நாம் கடைப் பிடிக்க வேண்டிய இன்னும் சில விடயங்கள் இருக்கின்றன. சுந்தரவடிவேலுவின் அறிவியல் பகுதியில் வாசித்துப் பாருங்கள்.

விரலில் வலியேற்படும் விதமாக நறுக்கென்று குத்தி, குருதியை எடுத்துப் பரிசோதனை செய்து, சர்க்கரையளவைக் கண்டு பிடிக்கும் முறையை விடுத்து, ஒரு தகட்டின் மூலம் வலியே இல்லாமல் சர்க்கரையளவைக் கண்டு பிடிக்கும் முறை வரப் போகிறதாம். அதையும் சுந்தரவடிவேலுவின் அறிவியல்தான் கூறுகிறது.

மற்றுமொரு சுவாரஸ்யமான பதிவு மதுரபாரதியினது. தமிழும் தமிழ் சார்ந்த புலமும் குறித்துப் பேசும் இவரது பதிவில் எமது முன்னோர்களோடு சம்பந்தமான எமக்குத் தெரியாத, நாம் அறியாத பல விடயங்கள் உள்ளன. அன்றைய பாடல்களையும் அதனுள் வரும் பொருட்களையும் சுட்டி சங்ககாலத்துக்கே எம்மை அழைத்துச் செல்கிறார்.

இவரது கடைசிப் பதிவு உங்களையும் ஈர்க்கலாம். சவரம் செய்து முகங்கழுவி அல்லது குளித்துத் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள ஒரு ஆணுக்கு அதிக நேரம் தேவையாக இருந்த போதும், அலங்காரம் என்பது என்னவோ பெண்களுக்குத்தான் சொந்தமானது என்பதாகத்தான் எல்லோருமே பேசிக் கொள்கிறோம். ஆனால் ஆண்களும் அலங்காரம் செய்திருக்கிறார்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னான ஆணழகனின் அலங்காரம் பற்றிய அழகிய பதிவு இது.

இவரது இந்தப் பதிவில் இன்னொரு விடயத்தைக் காணக் கூடியதாக உள்ளது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் நீண்ட கூந்தல்தான். அவர்களும் தலையில் பூச்சூடியுள்ளார்கள். மலர் மாலைகளை அணிந்துள்ளார்கள்.

எனக்குத் தெரிந்த வரையில் தலைக்குப் பூ வைப்பதற்கான முக்கிய காரணம் - பூக்களுக்கு நீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை இருக்கிறது. தலைநீராடிய பின் அதாவது முழுகிய பின் தலைமயிரைக் காய வைப்பதற்கான மின்சார உபகரணம் அப்போது இருக்கவில்லை. அதனால் பூக்களைத் தலையில் வைத்தே தலையைக் காய வைத்தார்கள். ஆனால் பிற்காலத்தில் எப்படியோ ஆண்களின் நீண்ட கூந்தல் குறுகி விட்டது. அதனால் அவர்களுக்கு பெரியளவாக பூக்கள் தேவைப்படவில்லை. காலப்போக்கில் பூக்களென்னவோ பெண்களுக்கே சொந்தமானது என்பது போல ஆகி விட்டது. இவரது இந்தப் பதிவே மலர் என்பது மகளிருக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதற்குச் சான்றாகிறது.

அடுத்து சத்யராஜ்குமாரின் துகள்கள் சுவாரஸ்யமான பதிவுகளில் இதுவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" என்பதற்கமைய அளவாகத்தான் இவர் எழுதுவார். ஆனால் எழுதியவைகள் எல்லாமே வாசித்தோம், மறந்தோம் என்றில்லாமல் வாசித்தோம் என்று என்றைக்குமே ஞாபகம் வைத்திருக்கக் கூடிய மனதை ஏதாவதொரு வகையில் நெருடக் கூடிய பதிவுகள். அவர் எடுத்துக் கொள்ளும் கருக்களும், அதைக் கதையாகப் புனையும் தன்மையும், கதையைக் நகர்த்தும் விதமும் மிகவும் அருமை.

சந்திரவதனா

21.9.2004



September 20, 2004



ஒரு பெக் அடிச்சால்....



கணவன்: இஞ்சரப்பா எனக்குச் சரியாக் குளிருது. ஒரு பெக் அடிச்சால் நல்லா இருக்கும் போலை இருக்கு.

மனைவி: ஓமப்பா. எனக்கும் சரியாக் குளிருது.

கணவன்: என்ன...!!!!!

மனைவி: எனக்கும் குளிருது. நானும் ஒரு பெக் அடிக்கட்டே?

கணவன்: ஏய்...! பொம்பிளையள் இதுகள் குடிக்கிறேல்லை.

மனைவி: ஏன் பொம்பிளையளுக்குக் குளிராதோ...?

கணவன்: ...! ....! ...!

சந்திரவதனா

20 ஆம் நூற்றாண்டின் தமிழக் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடுவதற்கு முயற்சி



20ஆம் நூற்றாண்டில் வெளிவந்த தரமான ஈழத்துக் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிட முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பூபாலசிங்கம் புத்தக சாலை அதிபர் பூ.ஸ்ரீதரசிங் மேற்கொண்டுள்ளார்.

தமிழ்க் கவிதை வரலாற்றில் ஈழத்துக் கவிதைகள் 20ஆம் நூற்றாண்டிலேயே கவனிப்புக்குரியனவாகும், முக்கியத்துவமுடையனவாகவும் அமைகின்றன. எனவே, 20ஆம் நூற்றாண்டு ஈழத்துக்கவிதைகளை ஒரே பார்வை யில் நோக்கக்கூடியதான தொகுப்பு முயற்சியொன்று மிகவும் அவசியமானதாகும். ஏற்கனவே, ஆ.சதாசிவம் அவர்கள் சுதந்திரகாலத்திற்கு முற்பட்ட ஈழத்துக் கவிதைகளை 'ஈழத்துத் தமிழ்க் களஞ்சியம்' என்னும் தலைப்பில் தொகுத்தளித்துள்ளார். அத்தொகுப்பிற்குப் பின்பும் 'மரணத்துள் வாழ்வோம்', 'வேற்றாகி நின்றவெளி', 'ஈழத்துக் கவிதைக்கனிகள்' முதலிய தொகுப்பு நூல்கள் சில வெளிவந்துள்ளன.

எனினும், இத்தொகுப்புநூல்களிலும் அடக்கப்படாத தரமான கவிதைகள் பல காணப் படுகின்றன என்பது இன்று உணரப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, கட்சி, குழு பேதமின்றி நடுவுநிலையோடு தரமான ஈழத்துக் கவிதைகளைத் தொகுக்கவிருப்பதாகவும் அத்தொகுதிக்கு பயன்செய்யத்தக்க தமது நூல்களை யும் இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் போட்டோப் பிரதிகளையும் கவிஞர்கள் அனுப்பி உதவவேண்மென்றும் பூ. ஸ்ரீதரசிங் தெரிவித் துள்ளார்.

தமது கவிதை நூல்களில் மேலதிகப் பிரதிகள் இல்லாதோர், அவற்றுள் வெளி வந்த மிகத் தரமான சில படைப்புகளைப் போட்டோப் பிரதியெடுத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி உதவலாம். அமரர்களாகிவிட்ட கவிஞர்களுடைய படைப்புகளை அவர்களுடைய குடும்பத்தினரோ, நண்பர்களோ அனுப்பி உதவும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கவிதைகளை அனுப்புவோர் கூடவே கவிதை வெளிவந்த நூலின் பெயர், வெளியிடப்பட்ட ஆண்டு, வெளியீட்டாளர் விவரம், கவிதை வெளி வந்துள்ள பக்கவிவரம் போன்றவற்றை நிச்சயமாக இணைத்து அனுப்பும்படி கேட்டுக்கொள் ளப்படுகின்றனர். புனைபெயர்களில் கவிதைகளை பிரசுரிக்க விரும்புவோர், தமது சொந்தப் பெயர், விவரத்தையும் இணைத்து அனுப்பவும். சகல கவிஞர்களும் தங்களது சுருக்கமான சுய விவரக்கோவைகளை இணைத்து அனுப்பவும்.

கவிதைகள் யாவும் தரமான நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும். ஈழத்துக் கவிதைகள் பற்றி தமிழ்நாடு உள்ளிட்ட பிறநாடுகளில் போதிய அறிமுகம் இன்னும் ஏற்படாமையால் வெளியிடப்படவுள்ள தொகுப்பை தமிழ்நாட்டில் பிரசுரிப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி தொகுப்பு செட்டியார் தெருவில் மிகவிரைவில் திறந்து வைக்கப்படவுள்ள பூபாலசிங்கம் புத்தகசாலையின் புதிய காட்சியறையினது திறப்புவிழாவின்போது வெளியிடப் படவுள்ளது.

Nantri - Uthayan

இந்த அறிவித்தலை கவிஞர்கள் அறிந்து கொள்வதற்காக இங்கு பதிந்துள்ளேன். எந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கவிதைகளை அனுப்ப வேண்டுமென்பது குறிப்பிடப்படவில்லை. விரைவில் அறிந்து எழுதுகிறேன்.

நட்புடன்சந்திரவதனா

அட ஒரு வருசம் ஓடி விட்டதா?



இந்த ஒரு வருடத்துக்குள்தான் வலைப்பதிவுகளில் எத்தனை மாற்றம்!

முதல் முதல் கடந்த வருடம் ஜூலை மாதத் திசைகளில் உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு இணையத்தளம் ஓசியில் என்று மாலன் அவர்கள் Blog ஐ அறிமுகப் படுத்திய போது - இது எப்படிச் சாத்தியமாகும் என்று ஆச்சரியப் பட்டேன்.

மாலன் அவர்கள் இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று வாசகர்களைக் கேட்டு வலைப்பூ என்று நண்பர்கள் சொல்கிறார்கள். வலைப்பூ என்ற பெயர் எப்படி என்றும் கேட்டிருந்தார். உண்மையிலேயே வலைப்பூ என்ற பெயர் கவித்துவமாக என்னைக் கவர்ந்தது. அதன் பின் இது பற்றி யாழ் கருத்துக்களத்திலும் பேசினார்கள்.

சும்மா பாமினியில் எழுதிக் கொண்டிருந்த எனக்கு யூனிக்கோட்டுக்கு மாற்றி எழுதுவதெல்லாம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஆர்வம் என்னை விட்டு வைக்கவில்லை. Blog ஐ தயாரிப்பதற்கான சில வழி முறைகளைச் சொல்லித் தந்த சுரதாவின் ஆயுதத்தின் உதவியுடன், எனது முதற் பரீட்சார்த்தப் பதிவாக நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த நாகரீகம் என்ற குட்டிக்கதையை 27.7.2003 அன்று பதிந்து பார்த்தேன். சந்தோசமாகத்தான் இருந்தது.

இந்த வலைப்பூ என்பது என்னை வெகுவாகக் கவர்ந்ததற்கு முக்கிய காரணம். யாருடைய குறுக்கீடோ, எந்த விதமான தடைகளோ இல்லாத எனக்கான சுதந்திரம்தான். எதை விரும்பினாலும் அதை நான் அங்கே பதிக்க முடியும். அது எனக்கு ஒரு வித ஆரோக்கியமான திருப்திகரமான உணர்வையே தந்தது.

அந்த நேரத்தில் மிகக் குறைந்த தொகையினரே தமிழில் வலை பதியத் தொடங்கியிருந்தார்கள். அதனால் வலைப்பதிவுகளின் தொகுப்பு உதவியுடன் எல்லோருடைய பதிவுகளையும் ஓடி ஓடி வாசிக்க முடிந்தது. ஆனால் இன்றோ எமக்குத் தெரியும் படியாக நூற்றுக்கு மேற்பட்ட பதிவுகள் தமிழில் உள்ளன. அத்தனையையும் ஒரே நாளில் வாசிக்க முடியாத அளவுக்கு அவைகளில் எழுதிக் குவித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

அன்று வலை பதியத் தொடங்கிய அத்தனை பேரும் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. பலபேர் இடை நடுவில் ஏதேதோ காரணங்களினால் தமது பதிவுகளைத் தூங்க விட்டு விட்டார்கள். அதே நேரத்தில் இன்றும் பலர் ஆரோக்கியமான சுவாரஸ்யமான பதிவுகளைப் புதிது புதிதாகப் பதிந்து தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தொடங்கிய காலத்துக்கும், இன்றைய காலத்துக்கும் இடைப்பட்டதான காலப் பகுதியில் யார் யார் எங்கெங்கே புதிய விடயங்களைப் பதிந்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு வலைப்பூவாகப் போய்ப் பார்த்துத்தான் அறிந்து கொள்ளக் கூடிய ஒரு பெரிய சிக்கல் இருந்தது.

அந்தச் சிக்கலை நிவர்த்தி செய்யும் விதமாக காசி தயாரித்த தமிழ்மணம் மிகவும் பயனுள்ள தமிழ்வலைப்பூக்களுக்கெல்லாம் தலைப்பூவாக விளங்குகின்ற ஒரு பதிவு.

இந்த நேரத்தில் காசியை மனந்திறந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இந்தத் தமிழ்மணம் செய்வது வலைப்பூ ஆர்வலர்களுக்கான ஒரு அரிய பணி. பதிந்த எந்த வலைப்பூவையும் சுலபமாகக் கண்டு பிடிக்கவும், புதிய பதிவுகளை உடனுக்குடன் சிரமமின்றி கண்டு கொண்டு வாசிக்கவும் மிகவும் உதவுகிறது தமிழ்மணம். காசிக்கு மீண்டும் தமிழ்வலைப்பதிவாளர்கள் அத்தனை பேர் சார்பாகவும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, இனி முடியுமான அளவுக்கு வலைப்பூக்கள் பக்கம் சென்று வருகிறேன்.

நட்புடன்
சந்திரவதனா



நன்றி



ஆரம்ப காலத்தில்தான் யாரும் இல்லாத போது என்னை அழைத்தீர்கள்.
இன்று எத்தனை வலைப்பதிவுகள். அத்தனைகளிலும் எத்தனை பெரிய பெரிய வலைப்பதிவாளர்கள். இத்தனை பேர் இருக்க என்னை மீண்டும் அழைப்பீர்கள் என நான் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை.

சும்மா நானுண்டு, என் பேரப்பிள்ளைகள் உண்டு என்று விளையாடிக் கொண்டிருந்த என்னை மைக்கை தந்து மேடையில் ஏற்றி விட்டது போல இருக்கிறது. என் பாட்டுக்கு எதையாவது சொல்லலாம். இத்தனை பேர் என் முன்னால் நிற்கிறீர்கள் என்ற போது, பேசுவதற்கு நிறைய இருந்தாலும் பேச நா எழவில்லை.

இருந்தாலும் என்னையும் ஒருவராக மதித்து நிறைந்த ஆலாபனைகளோடு வரவேற்ற மதிக்கும், என்னை வரவழைக்க வக்காலத்து வாங்கிய காசிக்கும், நான் வருமுன்னரே நிறைகுடம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழங்களோடு காத்து நின்று பன்னீர் தெளித்த ஜெயந்தி, ஈழநாதனுக்கும் கூட வந்து சேர்ந்து நின்று வாழ்த்திய மூர்த்தி, சாகரனுக்கும் என் மனமார்ந்த நன்றி.

நட்புடன்

சந்திரவதனா


September 19, 2004


ஞாயிற்றுக் கிழமை



"இஞ்சை ..........உங்கடை உந்தத் தலைக்கு Joghurtம் (யோக்கற்ம்) முட்டையும் கலந்து பூசி ஊற விட்டிட்டு, பிறகு தோய்ஞ்சிங்களெண்டால் சொடுகு போயிடுமாம்."

"ஆரப்பா உனக்குச் சொன்னது? பிறகும் ஏதும் புத்தகத்திலை வாசிச்சிட்டியே?"

"ம்.........வேறை எங்கையிருந்து எனக்குத் தெரியிறது! புத்தகத்தையும் பேப்பரையும் ரேடியோவையும் விட்டால் எனக்கு வேறை என்ன இருக்கு இங்கை!!!"

"ம்........எனக்கு மட்டும் இங்கை கனக்க இருக்காக்கும்."

"ஏன் உங்களுக்கென்ன ஏதும் அது இது எண்டு சாட்டிக்கொண்டு ஊர் சுத்தப் போடுவிங்கள."

"உன்னை ஆரும் போவேண்டாமெண்டு சொன்னதே?"

"போவேண்டாம் எண்டு நேரடியாச் சொல்லாமல் நான் போகாத விதமா நீங்கள் நடக்கிறது எனக்கு விளங்காதெண்டு நினைக்கிறீங்களாக்கும். வேலை முடிஞ்சு வரக்கை தற்செயலா பஸ்ஸை விட்டிட்டனெண்டால் போதும். எங்கை துலைஞ்சு போனனி எண்டு எரிச்சலாக் கேப்பிங்களே! Shopping(சொப்பிங்) போயிட்டு வர, கொஞ்சம் லேற்றாப் போனால் போதும். முகத்திலை எள்ளும் கொள்ளும் வெடிக்க நிப்பிங்கள். இதெல்லாம் எனக்கு விளங்கிறேல்லை எண்டு நினைச்சிங்களோ? நீங்கள் ஊர் சுத்திப்போட்டு வர நான் வீட்டிலை இருந்து வீட்டு வேலையளைப் பாத்துக் கொண்டு நீங்கள் சொல்லிப் போட்டுப் போற வேலையளையும் செய்து கொண்டு இருக்கோணும். வந்து அதுக்கும் நொட்டையும் சொட்டையும் வேறை. எத்தினை காலத்துக்கெண்டு மனுசர் இப்பிடி வாழேலும். நான் வேலைக்குப் போகாமலே எனக்குச் சம்பளம் வருமெண்டால் நீங்கள் எவ்வளவு சந்தோஷப் படுவியள் எண்டு எனக்குத் தெரியாதாக்கும்."

"சரியப்பா...கொஞ்சம் விட்டனெண்டால் நீ உன்ரை பல்லவியைத் தொடங்கீடுவாய்."

"இருந்து பாருங்கோவன். நானும் ஒரு நாளைக்கு............"

"இஞ்சை பார் நான் ஒண்டும் பார்க்கேல்லை..........நீ உந்தத் தேவையில்லாத கதையளை விட்டிட்டு போய்ச் சமையலைப் பார்."

"ஏன் இப்பக் கதையை மாத்திறியள்?"

"இஞ்சை பார்........ மனுசருக்குப் பசிக்குது. கதையை விட்டிட்டுப் போய் சமை."

"ஏன்.........நான் சமைக்கோணும். சாப்பிடுறது எல்லாரும்தானே...... சமைக்கிறது மட்டும் எனக்கெண்டு எங்கை எழுதி வைச்சிருக்கு?"

"ஐயோ.....ஏனப்பா கதைச்சே மனுசரைக் கொல்லுறாய்.?"

"பின்னை என்ன? நீங்கள் இருந்து TV(தொலைக்காட்சி) பார்த்துக் கொண்டிருக்க நான் போய்ச் சமைக்கோணுமோ?

"ஞாயிற்றுக் கிழமையிலையாவது மனுசரைச் சும்மா இருக்க விடன்."

"ஏன் எனக்கு மட்டும் ஞாயிற்றுக் கிழமை இல்லையோ?"

"நான் ஆம்பிளையடி!"

"ஆம்பிளையெண்டால்...............!"

சந்திரவதனா

இனிய வணக்கம்



இனிய வணக்கம்

ஆர்வமுடன் என்னை வரவேற்ற நட்பு உள்ளங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி.

இன்று கணினியைப் போட்டதும்தான் தெரிந்தது நான்தான் இவ்வார வலைப்பூ ஆசிரியரென்பது. அதிர்ச்சிதான்.

ஈழநாதனை முந்திக் கொண்ட ஜெயந்தியும், ஓடி வந்தும் வரிசையில் முதல் இடம் கிடைக்காது வருந்திய ஈழநாதனும் என்னை வரவேற்றும் இருந்தார்கள்.

என்னடா இது? ஒரு வார்த்தை பேசாமல் நான்தான் இவ்வார ஆசிரியை என்று மதி தீர்மானித்து விட்டாவோ! என் மீது அவ்வளவு அபார நம்பிக்கையோ! என்று எனக்குள்ளே யோசனை! பின்னர்தான் தெரிந்தது மதி ஏற்கெனவே அனுப்பிய மின்னஞ்சல் எப்படியோ தவறிவிட்டது என்பது. பரவாயில்லை.

முடிந்தவரைக்கும் எதையாவது எழுதுகிறேன். எந்த வித ஆயத்தமும் இல்லாமல் வந்து நான் தரப்போவதை இந்த ஒரு வாரமும் நீங்கள் வாசிக்க வேண்டுமென்ற நியதி போலும்.

முடிந்தால் வாசியுங்கள்.

நட்புடன்
சந்திரவதனா

'வலைப்பூ'வின் முதலாம் ஆசிரியர்: வலைப்பூவின் அம்மம்மா



இவ்வாரம் வலைப்பூவின் சிறப்பாசிரியராக வருபவர் சந்திரவதனா. தமிழ் வலைப்பதிவாளர்களில் எண்ணிக்கையில் அதிக வலைப்பதிவு வைத்திருக்கும் சந்திரவதனா, ஊக்குவிக்கும் நற்பண்பு நிறைந்தவர். நான் அழைத்த மாத்திரத்தில் உற்சாகத்தோடு வலைப்பூவின் முதலாவது ஆசிரியராக வந்தபடியால் நான் இதைச் சொல்லவில்லை. இங்கே இருக்கும் பலரது வலைப்பதிவுகளில் இவரது கருத்துகளும் ஊக்குவிப்பும் இடம்பெற்றிருக்கின்றன. இவரது வலைப்பதிவைப் பார்த்து, 'நாமும் தொடங்கினாலென்ன?' என்றபடி தொடங்கிய வலைப்பதிவர்களும் இருக்கிறார்கள்.

மொத்தம் பதினாறு வலைப்பதிவுகளை நிர்வகிக்கும் சந்திரவதனா 'தோழியர்' வலைப்பதிவிலும் பங்குபெறுகிறார். அவருடைய பதினாறு வலைப்பதிவுகளில் இரண்டு அவருடைய மகன்களுடையது - துமிலன், திலீபன். ஒன்று அவருடைய அண்ணா - மறைந்த கவிஞர் தீட்சண்யனுடையது. மனவோசை, குழந்தைகள், மகளிர், மருத்துவம், பாடல்கள், படித்தவை, பெண்கள், Sammlung, செய்திகள், வி.ஐ.பி பெண்கள் ஆகிய பன்முகப் பதிவுகளோடு சிறுகதைகள் என்ற வலைப்பதிவில் தம் சிறுகதைகள் சிலவற்றையும் தன்னைக் கவர்ந்த பிறரின் எழுத்துகளையும் பகிர்ந்துகொள்கிறார். தன் கூடப்பிறந்த சகோதரர்கள் மூவரை நாட்டுக்கு அர்ப்பணித்த இவர், நாட்டுக்கு தங்கள் இன்னுயிரை நீத்த மாவீரர்களுக்காக ஒரு வலைப்பதிவும், புனர்வாழ்வுக்கென இன்னொரு வலைப்பதிவும் வைத்திருப்பதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை.

மேலே சொன்ன பதினாறு வலைப்பதிவுகள் தவிர, மனவோசை என்று ஒரு இணையத்தளமும் வைத்திருக்கிறார். கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், புகைப்படம் என்று மிளிரும் அந்த இணையத்தளத்தில் சந்திரவதனாவின் கட்டுரைகள் பகுதிதான் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தமானது. நினைவுகள் பகுதியில் இந்தக் கட்டுரைதான், உங்கள் தளத்தில் பலரும் வாசிக்கும் கட்டுரையாக இருக்கும் என்று நினைக்கிறேன் சந்திரவதனா.(சரிதானே?) (அந்த டுபாய்புட்டெண்டா என்னெண்டும் சொல்லிப்போடுங்கோ சந்திரவதனா... ;)

வாங்கோ அம்மம்மா! இந்த ஒரு வருசத்தில என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கு. என்னமாதிரியெல்லாம் வலைப்பதிவு இலகுவாயிருக்கு. இன்னும் என்னெல்லாம் செய்யலாம் எண்டு நீங்க நினைக்கிறது. இளைய தலைமுறையை வலைப்பதிவுக்குக் கூட்டியண்டு வாறது(முதல் ஆக்கள் - தீபா, திலீபன், துமி. சரியே?) எண்டெல்லாம் சொல்லுங்க.

-மதி கந்தசாமி



ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்கிறது!



இந்த வாரம் கொஞ்சம் விசேடமான வாரம். கடந்த வருடம் ஜூலை மாதம் 'வலைப்பூ' என்ற இந்த வலைப்பதிவைத் தொடங்கியிருந்தாலும், அதில் கவனம் செலுத்தத் தொடங்கியது இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகே. அப்போதிருந்த வலைப்பதிவர்களில் தொடர்ந்து வலைபதிந்துகொண்டிருந்த மூவரிடம் 'வலைப்பூ'வை அறிமுகப்படுத்தி என்னுடைய யோசனையைச் சொன்னேன். உடனேயே ஒப்புக் கொண்டு முழு ஒத்துழைப்பு அளித்த அந்த மும்மூர்த்திகளை, வலைப்பூ சீராக இயங்கத் தொடங்கி ஒரு வருடம் நிறையும் இத்தருணத்தில் வாரமொருவராக அழைக்க இருக்கிறேன்.

அவர்களுக்கும், சொந்த வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அழைப்பையேற்று இங்கே எழுதிய 49 ஆசிரியர்களுக்கும், எல்லாரையும் விட முக்கியமாக இங்கே எழுதும் பதிவுகளைப் படித்த, படித்து கருத்துகள் எழுதிய உங்களனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

-மதி கந்தசாமி

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite