
இவ்விளையாட்டுக்கு, கல்லைச் சுண்டினால் தடங்கி நின்று விடாமலோ, மேலே பறக்காமலோ, சுண்டிய வேகத்துக்கு ஏற்ப போகக் கூடிய எந்தத் தளமும் ஏதுவானது. இதை இரண்டுக்கு மேற்பட்ட எத்தனை பேரும் கூடி இருந்து விளையாடலாம். இதற்கு சிறிய கற்கள் (அல்லது புளியங்கொட்டைகள்) உகந்தவை. இரண்டிலிருந்து இரட்டை இலக்க எண்கள் கொண்ட எத்தனை கற்களையும் உபயோகிக்கலாம். அவை கைகளுக்குள் கொள்ளக் கூடிய அளவுக்கு இருக்க வேண்டியது அவசியம்.
வீடுகளிலும், பாடசாலைகளிலும் இவ்விளையாட்டை வழுக்கலான அல்லது சொரசொரப்பான சீமேந்துத் தரைகளில் விளையாடுவார்கள்.
விளையாடும் முறை மிகவும் சுலபமானதே.
முதலில், கொஞ்சக் கற்களாயின் ஒற்றை உள்ளங்கைக்குள்ளும், ஒற்றைக் கைக்குள் அடங்காதவையாயின் இரண்டு கைகளைச் சேர்த்து இரட்டை உள்ளங்கைகளுக்குள்ளும் வைத்து நிலத்தில் மெதுவாக வீசிப் போட வேண்டும். கற்கள் ஒன்றொடொன்று ஒட்டி இராமல் தள்ளித் தள்ளி இருந்தால் வெல்வதற்கான சாத்தியங்கள் அதிகம்.
அடுத்து, தரையில் போடப் பட்ட கற்களில் இரண்டு கற்களுக்கு நடுவே சின்ன விரலாலோ அன்றி சுட்டு விரலாலோ கோடு கீற வேண்டும். அப்படிச் செய்யும் போது கற்களில் விரல் பட்டு விடக் கூடாது.

சரியாகக் கோடு கீறி, குறி வைத்த கல்லையே சுண்டிய கல்லால் தொட்டு விட்டால் சுண்டியவர் அந்த இரண்டு கற்களில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்.
இதே போல் தொடர்ந்தும் ஒவ்வொரு இரண்டு கற்களாகச் சுண்டிச் சுண்டி அதில் ஒன்றை எடுத்துச் சேர்க்க வேண்டும்.
முக்கிய நிபந்தனைகள்
கோடு கீறும் போது விரல்களோ கையின் வேறெந்தெப் பகுதியுமோ கற்களில் பட்டு விடக் கூடாது.
கோடு கீறிய விரல் உள்ள கையின் ஏதாவது ஒரு விரலால் மட்டுமே சுண்டலாம்.
சுண்டும் கல் குறி வைத்த கல்லில் கண்டிப்பகப் பட வேண்டும்.
சுண்டும் கல்லோ, குறி வைக்கப் பட்ட கல்லோ மற்றைய கற்களில் பட்டு விடக் கூடாது.
இருந்த இடத்தை விட்டு அரக்கக் கூடாது. (சற்றே பின்பக்கத்தைத் தூக்கி உன்னலாம்.)
ஒருவர் ஆட்டமிழந்தால் அவர் முழுமையாக வெளியில் போக வேண்டியதில்லை. தான் எடுத்ததை வைத்துக் கொண்டு, மற்றவர்கள் ஆட்டம் இழக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் காத்திருக்க வேண்டும். அதிர்ஸ்டம் இருந்தால் கடைசி இரண்டு கற்களாவது இவரிடம் வந்து சேரலாம்.
ஒரு வட்டம் முடிய ஒவ்வொருவரும் எத்தனை கற்கள் எடுத்திருக்கிறார்களோ அத்தனை புள்ளிகள் அவர்களுக்கு. எத்தனை வட்டங்கள் விளையாடுவது என்பதை முதலிலேயே தீர்மானித்து வைத்திருந்து அத்தனை வட்டங்களையும் விளையாடி முடித்ததும் மொத்தமாக யார் அதிக புள்ளி எடுத்தாரோ அவர் வென்றவர் ஆகிறார்.
இந்த விளையாட்டில் பெரியவர்களை விட சிறியவர்கள் வெல்வதற்கான சாத்தியம் அதிகம். ஏனெனில் சிறியவர்களது விரல் மெலிதாக இருக்கும். சிறிய இடைவெளியுடன் உள்ள கற்களுக்கு நடுவில் கூட கீறிச் சுண்டி விடுவார்கள்.
சந்திரவதனா
9.4.2006
நான் ஏற்கெனவே எழுதிய இந்தப் பதிவில் வசந்தனும், ஷ்ரேயாவும் தந்த தகவல்களையும் சேர்த்து மீளப் பதிந்துள்ளேன்.