
ஆலும் அரசும் தெற்கு வீதியை நிறைத்து நிற்க அலரிகளால் எல்லை போட்டு அளவாகவும் அழகாகவும் வீற்றிருக்கிறது ஆத்தியடிப் பிள்ளையார் கோயில். அத்தி மரத்தில் பிள்ளையார் தோன்றி, கல்லிலே கற்பூரம் கொழுத்தி வழிபடப் பட்ட அந்த இடந்தான் இப்போ ஊர் கூடி உணர்வோடு வழிபடுமிடமாகியதாகவும், அத்திமரப் பிள்ளையாரினால் அந்த இடம் அத்தியடியாகி கால ஓட்டத்தில் திரிபு பட்டு ஆத்தியடி என்ற ஊரானதாகவும் அம்மம்மா அடிக்கடி சொல்லுவா.
கோயில் கிணற்றில் கால் கழுவித்தான் உள்ளே நுழைவோம். கற்பூரம் சாம்பிராணி என்று வாசனை கமகமக்கும். சனங்கள் நிரம்பி வழிவார்கள். காவடி ஆடுபவர்களுக்கெல்லாம் செடில், அலகு... என்று குத்தப்பட்டுக் கொண்டிருக்கும். பால் செம்பு எடுக்கும் பெண்களும் அதற்கேற்ப ஆயத்தங்களுடன் யாருடனும் அவ்வளவாகப் பேசாமல் அமைதியாகத் தியானித்துக் கொண்டிருப்பார்கள். சுவாமி இருக்கும் இடம் திரைச்சீலையால் மறைக்கப் பட்டிருக்கும்.
நான் பட்டுப் பாவடை கசங்கி விடுமே என்று அந்தரப் பட்டு, யோசித்து... ஒரு மாதிரி அமர்ந்து கொள்வேன். ஏதோ ஒரு சந்தோசமான உணர்வு மனதை நிறைத்திருக்கும். எனது வயதையொத்த பெண் பிள்ளைகளும் என்னோடு வந்து அமர்ந்து கொள்வார்கள். அம்மா, அப்பா.. தொடங்கி எல்லோரும் மிகுந்த பக்தியுடன் தரிசனம் செய்து கொண்டிருப்பார்கள்.
ஐந்து மணியானதும் பூசை தொடங்கும். அதற்கிடையில் காண்டாமணி மூன்று தரமாக அடிக்கப் பட்டு.... கோயில் ஒளியும் ஓசையுமாய் மங்களகரமாய் கலகலக்கும். விழுந்து கும்பிட்டு சுவாமியுடன் கோயில் உள்வீதியைச் சுற்றிக் கும்பிடுவோம்.
வெளிவீதி சுற்றுவது மிகவும் ஆர்வமானதாக இருக்கும். ஆல், அரசு, சீனிப்புளி;, வேம்பு, செவ்வரளி, பொன்னலரி,........ என்று அடுக்கியிருக்கும் தெற்கு வீதியில் நடப்பதே ஒரு சுகம். மெல்லிய தென்றல் தழுவ, நீண்டு, புரண்டு பின்னிப் பிணைந்து கிடக்கும் அரசின் வேர்களில் பட்டுப் பாவாடை காலில் தடக்கி விடாது பிடித்துக் கொண்டு ஏறி ஓடுவதும் கெந்துவதுமாய் நடப்பது மிக மிக இன்பமானது.
வடக்கு வீதியில் கோயிலை ஒட்டிய பூங்காவனம். அது என்றும் நறுமணம் வீசும் நந்தவனம். திருவிழா இல்லாத காலங்களில் ஆத்தியடி இளைஞர்களின் விளையாட்டு மைதானமும் அந்த வடக்கு வீதிதான். கால் பந்தென்றால் என்ன கைப்பந்தென்றால் என்ன அவர்கள் கூடிக் குதூகலிக்கும் இடம் அது. திருவிழாக் காலங்களில் சப்பரம் என்றால் என்ன? தேர் என்றால் என்ன? சூரன் போர் என்றால் என்ன? அந்தப் பெரிய வடக்கு வீதியிலே சில மணித்தியாலங்கள் தரித்து மேளக்கச்சேரியும், நாதஸ்வரமுமாய் நெஞ்சை நிறைக்கும்.
வெளிவீதி சுற்றி காவடி வெளிக்கிட எப்படியும் ஏழுமணியாகி விடும். காவடி மயில் இறகுகளுடன் அழகாக இருந்தாலும் காவடி ஆடுபவர்களைப் பார்க்கச் சகிக்காது. அவர்களின் முதுகில் செடில் குத்தப் பட்டிருக்கும். அதிலிருந்து நீளும் கயிற்றை யாராவது பிடித்துக் கொண்டு நிற்பார்கள். நடக்கும் போதெல்லாம் அவர்கள் முதுகுத் தோல் இழுபட்டுக் கொண்டே இருக்கும். எதற்காக இது..? என்று மனசு சங்கடப் படும். சிலர் வாயில் அலகு குத்தியிருப்பார்கள். அது வாயின் ஒரு பக்கத்தில் குத்தி மற்றப் பக்கத்தால் எடுக்கப் பட்டிருக்கும். அலகு குத்தியிருக்கும் போது குத்தியிருப்பவர் பேசவோ வாய் திறக்கவோ முடியாது. அவரவர் நேர்த்திக்கு ஏற்ப நேர்த்திக்கடன் என்ற பெயரில் இந்த ஆரவாரம் நடக்கும். கடவுள் இத்தனை தூரம் கஸ்டப் படும் படி மனிதர்களைக் கேட்டாரா என மனசு எண்ணும். சிலர் அலகை நாக்கில் கூடக் குத்திக் கொள்வார்கள்.
மெதுவாக வீதியில் இறங்கும் காவடிகள் சிறிது நேரத்திலேயே பலத்த ஆட்டங்களுடன் எங்கள் வீடு தாண்டும். புதியாக்கணக்கன் ஊடாக அப்பாச்சி வீடு தாண்டி பண்டாரி அம்மன் கோயிலுக்குப் பயணிக்க நாங்களும் பின் தொடர்வோம். காவடி ஆடுபவர்களின் மேல் வீடுகளுக்குள் இருந்து வாளியுடன் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவார்கள். காவடி எடுப்பவர்களின் உருத்துறவுப் பெண்கள் பாற்செம்புடன் பின் செல்வார்கள்.
மாயக்கைப் பிள்ளையார் கோயில் காவடியும் பண்டாரி அம்மன் கோவிலுக்கு வந்து சேரும். இவைகளுக்குள் வேறு வேறு கோவில்களிலிருந்து கரகாட்டக் காரர்களும் வந்து சேருவார்கள்.
24.5.2004
(தொடரும்)