
யாதவனுக்கு மட்டும் பிரிவதில் என்ன சந்தோசமா...? நாட்டு நிலைமை ´ஓடு ஓடு´ என்று துரத்த வீட்டு நிலைமையைச் சொல்லி யேர்மனியிலிருந்து அண்ணன் அழைக்க வேறு வழியின்றித்தான் புறப்பட்டான்.
நினைவுகளை நதியாவிடம் விட்டு விட்டு விமானமேறியவன் நேரே யேர்மனிக்கு வந்து சேர்ந்திருந்தால் நிகழ்வுகள் வேறு மாதிரித் தொடர்ந்திருக்கும். அவனுடன் சேர்ந்து விதியுமல்லவா விமானம் ஏறி விட்டது.
பாங்கொக்(Bankok) இல் இரண்டு கிழமைதான் நிற்க வேண்டி வருமென ஏஜென்சி கொழும்பில் வைத்துச் சொல்லியிருந்தார். ஆனால் ஏழு மாத காலங்கள், ´சீ...´ என்று யாதவன் அலுத்துப் போகுமளவிற்குப் போய் விட்டது. முள்ளின் மேல் போட்ட சேலை போல் அவன் நிலை ஆகி விட்டது.
அங்கு யாதவனுக்கென ஒதுக்கப் பட்டிருந்த விடுதி போன்ற வீட்டில் பழையவர்கள் போவதும் புதியவர்கள் வந்து சேர்வதுமாய் ஏறக்குறைய 24, 25 பேர் மட்டில் எப்போதும் நின்றார்கள். ஏஜென்சிதான் அங்கே ராஜா. அவர் வைத்ததுதான் சட்டம். அங்கே பெண்கள் வந்தால் முதலில் அந்தப் பெண்களுக்கு சகல வசதிகளுடன் ராஜமரியாதை கிடைக்கும். பின்னர் போகப் போக ஏஜென்சியின் இச்சைக்கு அவர்கள் போகப் பொருள் ஆவார்கள். இணங்காத பட்சத்தில் நாயிலும் கேவலமாக நடாத்தப் படுவார்கள். இணங்கியவர்கள் அவர்கள் மீதான ஏஜென்சியின் மோகம் தணிந்ததும் போக வேண்டிய நாடுகளுக்கு அனுப்பப் படுவார்கள்.
இந்த அநீதிகளைப் பார்த்தும் பாராதவர்கள் போல ஆண்கள் இருக்க வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம். யாதவனுக்கு அந்த சூட்சுமம் தெரியாமற் போனதால் வந்ததே வினை. ஆறு மாதங்கள்.. எந்த வித முன்னேற்றமுமின்றி ஓடி விட்டன. இனியும் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலை வந்த போதுதான் எந்த அநீதியையும் பார்த்தும் பார்க்காதவன் போல நடிக்கத் தொடங்கினான். பெட்டிப் பாம்பாய் ஒடுங்கி இருந்தான். நதியாவின் நினைவில் குளிர் காய்ந்தான்.
ஏழாம் மாதம் அவன் பக்கம் காற்று வீசியது. அவனும் அவனுடன் இன்னும் இருவரும் உக்ரைன் செல்வதென்பது முடிவானது. உக்ரைன் போய் விட்டால் பக்கத்தில்தானே யேர்மனி என நினைத்தான்.
ஆனால் உக்ரைன் குளிரில் சாப்பாடுகளும் சரியாக இல்லாமல் பனிக்குவியலுக்குள் ஏறி இறங்கிய போது பாங்கொக் பருப்புக்கறியும் சோறும் பரவாயில்லை என நினைத்துக் கொண்டான்.
இந்தா, எல்லையைக் கடந்து விடுவோம் என்ற நிலையிருக்கையில் அடிக்கடி தடைகள் வந்து பயணம் தடைப் பட்டுப் போய் அவனுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. மனம் தளர்ந்த போதிலெல்லாம் இதமாகத் தழுவியது நதியாவின் நினைவொன்றுதான்.
ஜெயில் வாசம் போன்ற கடினமான இரண்டு வருடங்கள் உக்ரைனில் கழிந்த பின்தான் அவனால் யேர்மனியை வந்தடைய முடிந்தது.
´இனியென்ன வாழ்க்கையில் ஜெயித்து விடுவேன்.´ என்ற நம்பிக்கையோடு யேர்மனியில் வாழ்க்கையைத் தொடங்கியவன் நதியாவுக்கும் கடிதங்களை எழுதத் தொடங்கினான். ஆனாலும் அவன் நினைத்தது போல யேர்மனிய வாழ்க்கை ஒன்றும் வசந்தத்தைக் கொட்டிக் கொண்டு அவனுக்காகக் காத்திருக்க வில்லை. மாறி மாறி அகதி முகாம்கள் விசாரணைகள் என்று ஒரு வருடங்கள் ஓடி விட்டன. நதியாவின் கடிதங்கள்தான் வரத் தவறி விட்டன.
நிரந்தரமான ஒரு முகவரி கிடைத்த பின் ´இனி என் நதியாவின் கடிதம் வரும்´ என்ற நம்பிக்கையோடு காத்திருந்தான். பிற்சேரியாவில் மாப் பிசைந்தான். மாலையில் சுப்பர் மார்கட்டில் கிளீனிங் வேலை செய்தான். அண்ணனுக்குக் கூப்பிட்ட காசையும் கொடுத்து, அம்மாவுக்கும் அனுப்பி, எப்படியாவது மிச்சம் பிடித்து நதியாவையும் கூப்பிட்டு விட வேண்டுமென்ற அவா அவனுள். நினைக்கின்ற அளவு வேகத்தில் பணத்தைச் சேர்க்க முடியாவிட்டாலும் முயன்றான்.
தினம் தினம் நதியாவின் கடிதத்துக்காகக் காத்திருந்து ஏமாந்தான். முடிவில் விடயத்தை அம்மாவுக்கு எழுதினான். அம்மாவின் பதில் கடிதம் அவனை ஆடிப் போக வைத்து விட்டது.
"இவ்வளவு காலமும் எங்கை போனவர்? யேர்மன் காரியோடை சுத்திப் போட்டு இப்ப அலுத்துப் போக என்னைத் தேடுறாரோ..?" என்று நதியா அம்மாவிடம் சண்டைக்குப் போயிருக்கிறாள். நதியாவுக்கு எத்தனை கடிதங்கள் எழுதியும் அவள் யாதவனின் உண்மை நிலையை உணர்ந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ தயாராக இருக்கவில்லை.
யாதவன் பணத்தைப் பாராது தொலைபேசி அட்டைகளை வாங்கி வாங்கி நதியாவுடன் கதைக்க முற்பட்டு ஒவ்வொரு தடவையும் அவள் சரியாகக் கதைக்காமல் கோபமாகத் திட்ட தோற்றுப் போனவனாய் நின்றான். இயலாமையில் மெது மெதுவாகக் குடிக்கத் தொடங்கினான். பல சமயங்களில் குடித்து விட்டு வீட்டுக்கு அண்ணனிடம் போகப் பயந்து அந்தப் பூங்கா வாங்கிலிலேயே தூங்கிக் கொண்டான். குளிரும் குடியும் அவனை நோயாளி ஆக்கியது. வேலையையும் தொலைத்தான். அண்ணன் கூட அவனைப் புரிந்து கொள்பவனாக இல்லாமல் இவனால் மானம் கப்பல் ஏறுகிறதே என்றுதான் கத்தினான்.
இறுதியாக ஒரு நாள் "வையடா ரெலிபோனை" என்றும் நதியா சொல்லி விட்டாள். அதோடு யாதவன் முழுக் குடிகாரன் ஆகி விட்டான். அந்தப் பூங்காவே கதியென்று ஆகி விட்டான். பிறகும் பிறகும் ஏதோ ஒரு நப்பாசையில் தொலைபேசியில் நதியாவை அழைப்பதுவும் அவள் திட்டுவதைக் கேட்டு விட்டு அழுவதுமாய் தொடர்ந்தான்.
அன்று நதியா அழுத போது ஆண் மகனாய் நின்று அவள் கண்ணீரைத் துடைத்து விட்டவன் இன்று தானிருந்து அழுதான். அவன் மனத்தில் படிந்து விட்ட சோகத்தையோ ஆற்றாமையையோ துடைத்தெறிய யாரும் அவன் அருகில் இல்லை.
சந்திரவதனா
ஜேர்மனி
பிரசுரம் - பூவரசு (பங்குனி-சித்திரை 2003)
ஒரு எழுத்தாளர் கதையை ஆரம்பித்து வைக்க வாசகர்கள் கதையை வளர்த்துச் செல்லும் முயற்சியில் உருவானது இனி அவர்கள் என்ற கதை. கதையை இராஜன் முருகவேல் தொடக்கி வைக்க முதலில் நான், அடுத்து சாந்தினி வரதராஜன், அடுத்து புஸ்பராணி ஜோர்ஜ் தொடர இந்துமகேஷ் அவர்கள் முடித்து வைத்தார்கள். அக்கதையின் இரண்டாவது அங்கமே இங்கு பதிவாகி உள்ளது.