Monday, February 15, 2010

நந்திக்கடல் தாண்டி.. 3

 அலை துரத்தி வந்து கால்களைத் தழுவிச் சென்றது. உப்புக்காற்று வருடியது. காலையில் இனியவாழ்வு இல்லத்தில் எனது குரல் மீளுவதற்காக அவர்கள் பூசத் தந்த நாசியைத் துருத்திக் கொண்டிருந்த வேப்பெண்ணெய் வாசம் எப்போது என்னை விட்டு அகன்றதென்றே தெரியவில்லை. விடுதலை பற்றிய பேச்சும், மூச்சும் மனதை நிறைத்திருக்க அந்திக் கருக்கலில், மணலில் நடப்பது சுகமாக இருந்தது. கடற்படைத் தளபதி சூசை அவர்களின் அன்புக்கட்டளையை மீற முடியாதிருந்தது.

எமது சம்மதம் கிடைத்ததும் எமக்கான உணவை, நாம் கஸ்ரோவிடம் செல்வதற்கேற்ப விரைவில் தயாரித்து முடிக்கும் படி தனது முகாமுக்கு அறிவித்தல் அனுப்பி விட்டு. ரேகாவிடம், எம்மை அழைத்துச் சென்று, காட்ட வேண்டியவைகளைக் காட்டும் படி சொன்னார்.

சூரியன் மறைந்த பின், அந்த இருள் சூழ்ந்த கானகத்தில் என்ன பார்க்க இருக்கிறதென்று
ஜெனரேட்டர் ஒளி வெள்ளத்தில் அந்தச் சாகசப்பறவைகளைக் காணும் வரை எனக்கு விளங்கவில்லை.

ஒரு கணம் மனம் சிலிர்த்தது. உடலும் சிலிர்த்தது. அண்ணையின் அர்த்தத்துடனான ´சூசை எல்லாம் காட்டுவார்` என்பதன் பொருள் புரிந்தது. பெண்கள். அங்கு முழுக்க முழுக்கப் பெண்கள்தான் இருந்தார்கள். சும்மா இருக்கவில்லை. நடந்தார்கள். ஓடினார்கள். பாடினார்கள். மிக நுணுக்கமான தொழில்நுட்ப வேலைகளைக் கூடச் செய்தார்கள். அவர்களது ஒவ்வொரு அசைவிலும் ஒரு பிரமாண்டமான போர்க்கப்பல் உருவாகிக் கொண்டிருந்தது.

நம்ப முடியாதிருந்தது. துர்க்கா, அலை, கலை... என்று அழகிய பெயர்களுடன் அழகான, மென்மையான பெண்கள். ஏட்டிலும், பாட்டிலும், கதைகளிலும் வருகின்ற நளினப்பெண்கள் அங்கு வீரப்பெண்களாய் நடமாடிக் கொண்டிருந்தார்கள். மென்மைக்கு இலக்கணமானவர்கள் மனதில் வன்மையுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அழகுக்கு உவமானமானவர்கள் உறுதியின் வடிவமாய்ப் பிரகாசித்தார்கள். பொன்னகை தவிர்த்து புன்னகை பூத்திருந்தார்கள். . இடுப்பில் துப்பாக்கி சொருகியிருந்தார்கள். கழுத்தில் சயனைட் மாலை அணிந்திருந்தார்கள். எம்மை இன்முகத்துடன் வரவேற்றார்கள். மிக்சரும், சோடாவும் தந்து உபசரித்தார்கள்.

அவர்கள்தான், அந்தப் பெண்கள்தான், ஓரளவு முடிந்த நிலையில் இருந்த அந்தப் பிரமாண்டமான கப்பலைச் செய்தார்களாம். அது ஒரு பெரிய பள்ளத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கான தொழில்நுட்பச் சமாச்சாரங்களைக் கூட அவர்களே செய்து கொண்டிருந்தார்கள். வெளியில் வைத்து அதைச் செய்து விட்டு அந்தப் பெண்கள்தான் ஒன்றாகச் சேர்ந்து தூக்கி வந்து அங்கு வைத்தார்களாம்.

அவ்வளவு பிரமாண்டத்தை தூக்குவது என்பது எப்படிச் சாத்தியமாகும், என்று என்னுள் எழுந்த கேள்விக்கு நானே தேடிக் கொண்ட பதில் அவர்கள் மனஉறுதியும், மனபலமும்தான்.

ஐந்து நாட்கள், ஆறு நாட்கள்... என்று தொடர்ந்து தூங்காமலே இருந்து வேலை செய்வார்களாம். வேலை செய்யத் தொடங்கி விட்டால் தூக்கம் கண்களைத் தழுவுவதே இல்லையாம். தம்மை மறந்து விடுவார்களாம். ஆளுக்காள் பாடிக்கொண்டும், பேசிக்கொண்டும் வேலையில் இறங்கி விடுவார்களாம்.

கப்பல் சம்பந்தமான எல்லா வேலைகளும் முடிந்த பின் அந்தக் கப்பலை அவர்கள்தான் தூக்கிக் கொண்டு போய் கடலுக்குள் விடப் போகிறார்களாம். ´ஏலேலோ ஐலசா...` கோரசாகப் பாடிக் காட்டினார்கள். ஒரு சிறு கேள்வி கேட்டால் போதும். கப்பலின் ஒவ்வொரு பாகத்தையும், நுணுப்பத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக விளக்கத் தயாராக இருந்தார்கள். கப்பலுக்கான மாலுமிகளும் அவர்களேதானாம்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வளர்த்தெடுத்த அந்தப் பெண்கள் எல்லோருமே வாய்க்கு வாய் அண்ணை என்றும், அண்ணன் என்றும் உரிமையோடு பேசினார்கள். அவர் மேல் மிகுந்த மதிப்பும், பாசமும் வைத்திருந்தார்கள். தமிழீழம் ஒன்றே குறியாக இருந்தார்கள். அந்த மனவலிமையோடு செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். பெண்விடுதலை பற்றி அவர்கள் பேசினார்களா, எழுதினார்களா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதன் வடிவமாய் இருந்தார்கள்.

அண்ணையை முதல் தரம் மே 2002 இல் சந்தித்த போது “பெண்களிடம் எவ்வளவோ திறமைகள் இருக்கின்றன. அவர்களால் எத்தனையோ ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்ய முடியும். அவைகள் சமையல் அறையில் முடங்கி விடக்கூடாது என்பதற்காகவே எமது சமையற் கூடங்களில் ஆண்கள் மட்டுமே சமைக்கிறார்கள். பெண்களிடம் வேறு எத்தனையோ பொறுப்புக்களைக் கொடுத்திருக்கிறோம்.” என்றார்.

எண்ணுவதையும், சொல்வதையும் செயற்படுத்தி விடுகின்ற, தமிழீழத் தேசியத் தலைவரின் அந்தத் தன்மையை நந்திக்கடல் தாண்டி... முல்லைக்கடலருகே மீண்டும்  கண்டேன்.

புலம் பெயர்ந்த எம்மகத்துத் தமிழ்ப்பெண்கள் பலர் இன்னும் சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் மூழ்கி, தொலைக்காட்சிகளிலும், சமையலறைகளிலும் கண்கலங்கிக் கொண்டிருக்க அங்கு பெண்வலம் சமையல் புலத்தில் என்ற சரித்திரமே மாறியிருந்தது. வெண்கலன்களுடன் போராடிய அவர்களது கரங்கள் சுடுகலன்களுடனும், தொழில் நுட்பங்களுடனும்  விளையாடிக் கொண்டிருந்தன.. பெண்பலத்தை உணர்த்தினார்கள். ஆண்களால் மட்டும் முடியும் என்ற வார்த்தைகளையே ஒதுக்கி விட்டு பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு உதாரணமாக உயர்ந்து நின்றார்கள்.

வீரத்திலும், தியாகத்திலும், விடுதலை உணர்விலும் ஆண்களுக்கு, எவ்வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எமது பெண் போராளிகள் தமது வீரச்சாதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்ற தலைவரின் வார்த்தைகள் (தலைவரின் சிந்தனைகள்) காதில் ரீங்கரித்தன.

அவர்களிடமிருந்து விடைபெறவே மனம் வரவில்லை. அத்தனை சந்தோசமாக இருந்து எம்மையும் சந்தோசப் படுத்தினார்கள். அவர்களது தன்னம்பிக்கையும், உறுதியும், பெருமிதமும், அத்தனை பொறுப்பான வேலைகளின் மத்தியிலும் இன்முகத்துடன் எம்மை வரவேற்று, உபசரித்து, எம்மோடு அளவளாவிய பண்பும் எம்மை நியமாகவே வேறொரு உலகத்துக்கு அழைத்துச் சென்றிருந்தது. அவ்விடத்தை விட்டுப் போனபின்னும் அந்த இடமும், அந்தப் பெண்களும் மனதை விட்டு அகல மறுத்தார்கள்.

வெளியில்  வழிவழியே அடர் மரங்களின் கீழே போர்க்கப்பல்கள் ஆங்காங்கு ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. ரேகாவும் இன்னும் சிலரும் ஒவ்வொரு கப்பலினுள்ளும் எம்மை அழைத்துச் சென்று காட்டினார்கள். அந்தக் கப்பல்களின் மேற்தளத்துக்கு ஏணிகளில் ஏறி இறங்கும் போது எனக்குக் கால்கள் கூசின. பயமாக இருந்தது. ஆனால் அந்தப் பெண்களோ தன்னந்தனியாக கடலுக்குள் மின்னல் வேகத்தில் அக் கப்பல்களில் சென்று வருவார்களாம்.

“உள்ளுக்குள்ளையிருந்து இந்தக் கொம்பியூட்டரிலை பார்க்கிற பொழுது, எங்களை நோக்கி எதிராளி வருகிறதை நாங்கள் கப்பலுக்குள்ளை இருந்த படியே கண்டு தாக்குதல்களை நடத்துவோம்…”  ஒரு பெண் போராளி போர் முறைகளையும், தந்திரங்களையும் விளக்கினாள். அவ்வப்போது வேறு வேறு போராளிகள் வந்து எம்முடன் இணைந்து `நான் மொறிஸின் நண்பன், நான் மயூரனின் நண்பன்´ என்று சொல்லிக் கதைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அனேகமானோர் பருத்தித்துறை, வல்வெட்டித்துறைப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

சூசையின் முகாமுக்குச் சென்ற போது இருட்டி விட்டிருந்தது. வாசலில் அந்த இளம்போராளி நின்றான். சற்றுத் தளர்த்தப்பட்ட உடையுடன் கடற்கரையில் பார்த்தது போலவே பிஸ்ரோல், குண்டுகள், துப்பாக்கி சகிதம் நின்றான். கனிவான கண்களில் மெல்லிய புன்னகை.

உள்ளே சென்றதுமே எமக்கான உணவுகள் மேசைக்கு வந்தன. ஓடியோடிப் பரிமாறினார்கள். எல்லாம் கடலுணவுகள். தேங்காய்ப்பாலில் விளைமீன் சொதி, இடியப்பத்துடன்... மிகவும் சுவையாக இருந்தது. பரிமாறியவர்களில் பலர் எனது தம்பிமாரைத் தெரிந்தவர்கள். ´அக்கா, அக்கா..` என்று  அன்போடு பரிமாறினார்கள். எந்த இடர்பாடுகளின் மத்தியிலும் இன்முகத்துடன் வரவேற்று, உண்டி கொடுத்து உபசரிக்கும் தமிழருக்கே உரிய பண்பு நந்திக்கடல் தாண்டியும் வாழ்ந்து கொண்டிருந்தது.

எனது கணவரும், மூத்த மகனும் சூசையுடன் அரசியல், செயற்பாடுகள்... என்று பல்வேறு விடயங்களைப் பேசிய படியே சாப்பிட்டார்கள். எல்லோருக்கும் நன்றி கூறி வெளிமுற்றத்துக்கு வந்த பின்னும், வாசலடியில் நின்றும் போர் வியூகங்கள் பற்றியும், சரித்திரக் கதைகள் பற்றியும் அலசியும், விவாதித்துக் கொண்டும் நின்றார்கள். என்னால் அப்போதும் சரிவரப் பேச முடியாதிருந்தது. அவர்கள் கதைப்பதைக் கேட்டுக் கொண்டு நின்றேன்.

விடைபெறும் போது நன்கு இருட்டி விட்டிருந்தது. பத்து மணிக்கு மேலாகியிருந்தது. கஸ்ரோவிடம் அடுத்த நாள் வருவதாகத் தகவல் அனுப்பி விட்டு, மீண்டும் நந்திக்கடல் தாண்டி வெண்புறா செயற்கை உறுப்புத் தொழில் நுட்ப நிறுவனத்தை நோக்கிப் பயணிக்கையில் மனம், நிறைந்திருந்தது. எமது தமிழீழப் பெண்களின் உறுதியும், பலமும் கண்டு வியந்திருந்தது. கடற்படைத் தளபதி கேணல் சூசையுடனும், அங்கு சந்தித்த உறவுகளுடனும் பகிர்ந்து கொண்ட இனிய பொழுதுகளால் திளைத்திருந்தது. தமிழீழத்தின் வளர்ச்சியில் இறுமாந்திருந்தது.

சந்திரவதனா
12.2.2010


நந்திக்கடல் தாண்டி...1
நந்திக்கடல் தாண்டி... 2 

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite