Friday, June 09, 2006

கன்பரா கண் விழிக்குமா?

தெ.நித்தியகீர்த்தி

அல்லைப்பிட்டி நெஞ்சிலே அனலைக் கொட்டிவிட்டது. அந்தக் குழந்தையின் பிஞ்சு முகம் மீண்டும், மீண்டும் நெஞ்சக் கதவுகளைத் தட்டி எதையோ கேட்கின்றது. பேச முடியாத சிறுவர்களுக்காகப் பேசுங்கள். “அப்பாவி மக்களின் அநியாயச் சாவிலே கொக்கரிக்கும் கொடூர சிறிலங்காவின் ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுங்கள்” என்று இரத்த வெள்ளத்தில் இருந்த அந்தக் குடும்பத் தலைவனும், தலைவியும் கதறுவது காதில் ஒலிக்கின்றது. அதனாலோ என்னவோ கன்பராவில் உரிமைக் குரல் ஒலிக்கப் போகின்றது என்று கேள்வியுற்றதும் மெல்பேர்ன் மக்கள் துள்ளி எழுந்தனர்.

பயண ஒழுங்குகள் செய்வதில் ஒரு குழு வேகமாக இயங்க ஆரம்பித்தது. எத்தனை பஸ்கள்? எத்தனை கார்கள்? எத்தனை பேர் வருவார்கள்? தொலை பேசிகள் தொடர்ந்து பேசின. இரவுகள் பகலாகின. பல புதிய நட்புறவுகள் உருவாகின. நான் முந்தி, நீ முந்தி என்று உதவுவதற்குப் பலர். எப்படியும் போக வேண்டும் என்ற துடிப்பு ஒவ்வொருவருக்கும். பலரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஆவலோடு ஆட்களைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மாறி மாறி வரும் தொலை பேசி அழைப்புகளில் தடுமாறி நின்றார்கள்.

“ அண்ணை பஸ்ஸில இடமில்லை. உங்கடைக் காரைக் கொண்டு வாரீங்களோ? உங்களோட இன்னும் நாலு பேர் வருவீனம்.” உரிமையோடு கேட்கும் குரல்கள்.

பலர் வருகின்றார்கள் என்றதும் மகிழ்வோடு மறுக்காது ஏற்றுக் கொண்டு, “ முருகா, டயரும் செக் பண்ணல்லை. வழியில ஏதும் நடக்கக் சுடாது” என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டார்கள். நட்ட நடுநிசியில், டயர் வெடித்த போது கொட்டும் பனியில் கை விறைக்க இன்னொரு வழுக்கல் டயரை மாற்றி, புன்முறுவலோடு பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

“தம்பி நானும் வர வேணுமடா”

“அப்பா, 700 கிலோ மீட்டரப்பா. உங்களால அவ்வளவு தூரம் இருக்க ஏலாது”

“அப்பா இல்லே சொல்லுறார். கூட்டிக் கொண்டு போவன்.” அம்மா கண்டிப் போடு சொல்லி, மெதுவாக “ நானும் வாரன்” என்கின்றாள்.

இயலாத வயது. இருவருமே தொடர்ந்து ஒரு இடத்தில் அரை மணி நேரத்துக்கு மேல் இருக்க முடியாதவர்கள். மகனால் மறுக்க முடியவில்லை. எழுநூறு கிலோ மீட்டர்களை அரை மணிக்கு ஒரு முறை காரை நிறுத்தி, அவர்களை ஆசுவாசப்படுத்தி ஏற்றிச் செல்கிறான்.

பஸ்ஸில், பிள்ளை அழுகின்றது.

“உமக்குச் சொன்னனான். ஒன்றறை வயசுப் பிள்ளையை இந்தக் குளிருக்குள்ள பஸ்ஸில கூட்டிக் கொண்டு போக ஏலாது என்று கேட்டால்தானே?” கணவன் கடிந்து கொள்கின்றான்.

“ அதுக்கென்னப்பா. அல்லைப்பட்டி பிள்ளைக்காக என்ரை பிள்ளையும் ஒருக்கா அழட்டுமே”

அந்தத் தாயின் வார்த்தையைக் கேட்ட எண்பத்தேழு வயதுப் பெரியவர் குளுசையை வாயில் போட்டுக் கொண்டு, ‘இந்தப் பிள்ளைக்கு இவ்வளவு துணிவென்றால், நான் கிழடு பஸ்ஸில செத்தால்தான் என்ன’ என்று எண்ணுகின்றார். ஆனாலும் கன்பரா சென்று எங்கள் ஈழ மக்களுக்காகக் கத்தி விட்டுத்தான் சாக வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கின்றார். தங்கள் மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற வேட்கையை கட்டுப்படுத்த முடியாது பேரூந்தில் ஏறிக் கொண்ட அவர் வயதுக்காரர்கள், அடிக்கடி பேரூந்தை நிறுத்த முடியாது சலத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார்கள்.

இரவு 12 மணி. தொலை பேசி ஒலிக்கின்றது.

“என்னடி நித்திரை கொள்ளயில்லையே”

“எல்லாரும் கன்பராவுக்குப் போகீனம்.”

“ஓமடியப்பா எனக்கும் போக வேணும் போல இருக்கு. இந்த மனுசனுக்கு நாளைக்கென்று ஒபிசில கண்டறியாத மீட்டிங்காம்”

“இவரும் ஓவர்சீஸ். எடியே நாங்கள் கார் ஓடிக் கொண்டு போவமே. இன்னும் இரண்டு பேரைக் கேட்பம்”

“நல்ல ஜடியா”

நாலு பெண்கள் இரவு, இல்லை காலை 2.30 மணிக்குப் புறப்பட்டு காரில் 700 கிலோ மீற்றர்கள் ஓடி கன்பராவை பகல் 10 மணிக்கு அடைகின்றார்கள். காலைக் கடனை பாராளுமன்ற கார்ப் பார்க்கில் இருந்த லேடீசில் முடித்து விட்டு விழிப்புப் போராட்டத்தில் இணைந்து கொள்கின்றார்கள்.

கன்பராவில் தேனீக்கள் போல் எங்கள் தமிழ் அன்பர்களில் வாகனங்கள் அங்குமிங்கும் ஓடுகின்றன. மெல்பேர்ன், பிரிஸ்பேர்னில் இருந்து வந்த நூற்றுக் கணக்கானவர்களுக்கு தங்கள் வீட்டுக் கதவுகளைத் தாராளமாகத் திறந்து புன்னகை பூத்த முகத்தோடு வரவேற்ற அந்த நல்ல உள்ளங்களில் தமிழரின் விருந்தோம்பல் பொங்கி வழிந்தது. இடியப்பம், சொதி, முட்டைப் பொரியல், கிழங்குக் கறி என்று அத்தனை பேருக்கும் அங்கே விருந்து. அது மட்டுமா மதிய போசனத்துக்கு உணவுப் பொதி வேறு.

பாராளுமன்ற முன்னிலை. புற்றீசல் போல் திரண்டு வருகின்றது புலம் பெயர்ந்த தமிழர் படை. கைக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், கைலாகு கொடுத்து நடக்கும் வயோதிபர்கள், துடிப்போடு நிற்கும் இள வயதினர்.. அப்பபப்பா என்ன காட்சி? தமிழ்ப் பேரலை பாராளுமன்றத்தை மோதி நின்றது. சிட்னியில் இருந்து தொடர்ந்து வரும் பேரூந்துகள் வரிசையாக வரும் எறும்புகள் போல் வந்து கொண்டிருந்தன. அல்லைப்பிட்டி கொடூரக் கொலையைச் சித்தரித்து அண்ணாவியார் இளையபத்மநாதன் அமைத்திருந்தது வெறும் காட்சிப் பொருளல்ல. உலகத்தின் மனச் சாட்சியை உலுக்கும் கேள்வி. சிறீலங்கா அரச பயங்கரவாதத்திற்கு மறுக்க முடியாத சாட்சி. இன்பத்தமிழொலி முதல் சிகரம் தொலைக்காட்சி வரை ஓடியோடி செய்தி சேர்க்கும் ஊடகவியலாளர் சுறுசுறுப்பாக இயங்குகின்றார்கள்.

“ கொல்லாதே கொல்லாதே தமிழர்களைக் கொல்லாதே”

ஆழிப் பேரலை எழுப்பிய ஓசை போல் தமிழர் குரல் பாராளுமன்ற உயர்ந்த சுவர்களில் முட்டி மோதியது. உணர்வு வெள்ளத்திலே அள்ளுண்ட அந்த மக்களின் குரல் மகேசன் காதிலும் விழுந்திருக்கும். அவன் தோடுடைய செவியன் அல்லவா? இரும்பாகிவிட்ட மேலை நாட்டு ஆளும் அரசியல்வாதிகளின் செவிகளில் விழுந்ததா? பல பாராளுமன்ற உறுப்பினர் தமிழருக்காக மனமுருகிக் குரல் கொடுத்தார்கள். அவர்களுள் டொன் மேபி மனதில் நிறைந்தார். தமிழருக்கு தனி நாடே தீர்வு என்று பேசிய பிறையன் செனிவிரத்தனா அவர்களைச் செவிமடுத்த என்னருகில் இருந்த நண்பர்,

“தமிழீழம் கிடைத்ததும் இவரை நாங்கள் ஓர் அமைச்சர் ஆக்க வேண்டும் ” என்றார்.

கத்திக் கத்தி அனா பரராஜசிங்கத்தின் குரல் அடங்கினாலும் குமுறல் அடங்கவில்லை.

“இது ஒரு சனநாயக நாடு. இங்கே எங்கள் உரிமைகளுக்கு குரல் கொடுப்பது குற்றமல்ல. கொடுக்காமல் இருப்பதே தமிழருக்கு இழைக்கப்படும் குற்றம்” என்று ஒரு குட்டிப் பெண் அழகான ஆங்கிலத்தில் உணர்ச்சி பொங்க பேசிய போது, ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும் அவள் தாயை நினைத்துக் கொண்டேன்.

தொண்டை வறண்டு போகும் வேளையில் தாகந் தீர்க்க ஒரு தண்ணீர்ப் பந்தலே அங்கிருந்தது. பசி தீர்க்க உணவு. தேடித் தேடி வந்து எங்களுக்குத் தந்துதவிய தொண்டர்களை நன்றியோடு நோக்கினோம்.

மடை திறந்த வெள்ளம் போல், தமிழர் மீது சுமத்தப்பட்ட தடை உடைக்கப் புறப்பட்ட தமிழர் படை பல செய்திகளைக் கூறியது. உணர்வால் நாம் ஒன்று பட்டவர்கள். தமிழரின் உரிமைக் குரலைத் தடைகளால் நசுக்கி விட முடியாது. தமிழர் போரை வலிந்து ஏற்றவர் அல்ல. தங்கள் தற்காப்புக்காக, தமது மனித உரிமைகளைப் பேண ஆயுதம் தூக்கியவர்கள். தற்கொடை அவர்கள் தற்காப்பின் உயரிய தியாகம். நம்மை ஆண்டு, எங்களுக்கு அடிமை சாசனம் எழுதி அதை சிறிலங்காவின் கையில் கொடுத்த கொலொனிய மேற்கத்தைய நாட்டு ஆட்சியாளர், மீண்டும் நம் உரிமைகளைப் பறிக்க இன வெறி கொண்ட அரசுக்கு உதவ முன் வந்தால், அதை எதிர்த்து குரல் கொடுக்க புலம் பெயர்ந்த தமிழர் தயங்க மாட்டார்கள். சிறிலங்காவின் அரசியல் படுகொலைகளையும், அரச பயங்கரவாதத்தையும் தடுத்து நிறுத்த முடியாத மேற்கத்தைய நாடுகள், தமிழர் விடுதலைப் போராட்டத்திற்குப் பயங்கரவாத வண்ணம் பூசுவது அவர்கள் இயலாமையா? அல்லது தமது சர்வதேச அரசியல், பொருளாதார இலாபங்களுக்காக ஓர் இனத்திற்கு அடிமை சாசனம் எழுத உதவுகின்றார்களா?

ஒரு திரை இசைப் பாடல் நினைவு வருகின்றது.

“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை”

அலைகடல் போல் கன்பராவில் கூடிய மக்களின் செய்தி இதுவே. யார் தடுத்தாலும் தமிழினம் தன் விடுதலை பெற்றே தீரும்.

மெல்பேர்னில் தொடர்ந்து நடந்த பகிரங்கக் கண்டனக் கூட்டத்திற்கு என்றுமில்லாத அளவில் திரண்ட மக்களின் செய்தி மேலும் அதை உறுதிப்படுத்தியது.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite