Thursday, September 29, 2005

என் இனமே...! என் சனமே...!


என் இனமே...! என் சனமே...!
என் இனமே...! என் சனமே...!

என்னை உனக்குத் தெரிகிறதா?
எனது குரல் புரிகிறதா?

Monday, September 26, 2005

ஏமாற்றம்

ஏதோ ஒரு உந்துதலில், அன்றைய பொழுதின் இறுக்கத்தில் அல்லது இனிமையில் என் மனப்போக்கில் எதையாவது எழுதுவேன். அவைகளில் முடிக்காமல் போனவை பல. அப்படியான ஒரு துண்டு இது. என் மனதுக்குள் இருக்கும் இதன் தொடர்ச்சியை எழுதி முடிப்பேனா அல்லது இப்படியே விட்டு விடுவேனா என்பது எனக்கே தெரியாத விடயம்.

என் கண்ணுக்குள் தெரிந்த உலகம் குளிரில் உறைந்து கிடந்தது. கால்கள் தன்போக்கிலே நடந்தாலும் மனசு வீட்டுக்குத் திரும்பி விடு என்று கெஞ்சியது. குருவிகளினதும் கோட்டான்களினதும் கூச்சலும் சிறகடிப்பும் ஆற்றுப் படுக்கைக்கேயுரிய ஆத்மார்த்த சலசலப்புகளாயிருந்தன. ஆற்றைக் குறுக்கறுத்து நின்ற பாலத்தைக் கடக்கும் போது குத்தெனத் தெரிந்த ஆற்றின் மீது படர்ந்திருந்த குளிர்ந்த அமைதி (ஏதோ ஒன்று) சுனாமியை ஞாபகப் படுத்தி என்னைக் கிலி கொள்ளச் செய்தது.

அழகான இயற்கை ஏதோ ஒரு கணத்தில் ஆக்ரோஷமாக உயிர் குடிக்கும் என்ற உண்மை இப்போதெல்லாம் அடிக்கடி மனசை உதைத்து விட்டுச் செல்கிறது. நேற்றிரவு பெண்கள் சந்திப்பு மலரில்(2004) வாசித்த, கருக்கு பாமாவின் அந்தி சிறுகதை நினைவுக்குள் உருண்டது. யாருக்கும் கடமைப் படாமல் தான் என்ற வீறாப்புடன் வாழ்ந்த கிழவி ஒரு இரவின் தனிமையில் மழையில் நிரம்பியிருந்த பள்ளத்தில் வீழ்ந்து இறந்து போன கதை சாதாரணமான கதைதான். ஆனால் அதைப் பாமா எழுதிய விதம் மனசைத் தொடும்படியாக இருந்தது. பல சொற்கள் விளங்கவில்லையானாலும் கதையோடிய விதம் மனசைப் படுத்தியது. அந்த நினைவில் சப்பாத்தையும் துளைத்துக் கொண்டு கால்விரல்களில் ஏறிய குளிரை மனசு கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருந்தது.

நான் தனியே நடந்து கொண்டிருந்தேன். ஆற்றங்கரையும் அதையொட்டிய புல்வெளியும் பனி போர்த்தியிருந்தன. தூரத்தில் அந்தப் பனியின் மேல் நின்று சில ஜேர்மனியர்கள் மிகவும் சிரத்தையாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆசிரியர் ஆணானாலும் நீண்ட கூந்தலைப் பிடியாகக் கட்டியிருந்தார்.

மீண்டும் மீண்டுமாய் பாமாவின் கதாநாயகக் கிழவி மனசுக்குள் உருண்டாள்.
உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்களைத் தாண்டும் போது ஆசிரியர் பல தடவைகள் தலையை என் பக்கம் திருப்பினார். நான் நடந்து கொண்டிருந்தேன்.

இலக்கின்றிய நடையல்ல, இலக்கோடுதான். ஒரு மணித்தியாலம் நடக்கலாம் என்று தீர்மானித்த பொழுதே அந்த வீடுவரை போய் வரலாம் என்ற ஆவலும் கூடவே எழுந்தது. எத்தனை காலமாகி விட்டது அந்தப் பக்கம் போய்...! ஏதோ ஒரு உந்துதல் இன்று.

March - 2005

- தொடரும் -

Monday, September 19, 2005

திலீபன்-சிறப்புக்கவிதாஞ்சலி


- தீட்சண்யன் -



விடுதலை வேட்கை சுடராய் விழிகளில் நடனமாட
பறந்திடும் கேசத்தோடும் புன்னகை வதனத்தோடும்
நடந்தவன் நல்லூர் வீதி மேடையை நாடிச்செல்ல
திரண்ட எம் மக்கள் கூட்டம் - தெய்வமே! - என்றழைக்க
பஞ்சென வெண்மைக் கேசம் கொண்டதோர் பக்தி மாது
பையவே திலீபன் முன்னால் பாதையை மறித்து வந்து
கையிலே தாங்கிவந்த அர்ச்சனைத் தட்டைத் தொட்டு
விரலிலே வபூதி அள்ளி எம் வீரனின் நுதலில் பூச
பௌர்ணமித் திங்களாய் எம் திலீபனோ முகம் ஜொலித்தான்.

எங்களின் பிரச்சினைக்கு..... எங்களின் விடுதலைக்கு......
எங்களின் பங்குமின்றி எங்களின் விருப்புமின்றி
சிங்களம் பெற்றெடுத்த கிழநரி ஜெயவர்த்தனாவும்,
தன்னலம் மட்டுமேயோர் இலட்சியக் குறியாய்க் கொண்ட
அன்றைய பாரதத்தின் அரசியல் ஓச்சுவோனும்
தங்களுக்குள்ளே கூடித் தந்திரக் கூத்தடித்து
செய்தவோர் ஒப்பந்தத்தின் அம்சங்கள் ஐந்தினையே
செயற்படவைக்கத் திலீபன் வயிற்றுடன் போர்தொடுத்தான்

பண்டமும் பருப்பும் வானில்-நாம்
உண்டிடவென்றே போட்டு
கண்டறியாதவொரு கரிசனைச் சாலம் காட்டி
தந்திரமாக எங்கள் தலைவனைக் கூட்டிச் சென்று
ஒன்றுமே இல்லா அந்த ஒப்பந்த ஓலைதன்னை
நிர்ப்பந்தமாகவே அவர் ஏற்றிட மிரட்டியங்கு
அறையிலே பூட்டி அவமானப் படுத்தி-ஐயோ
எத்தனை சாகசங்கள! எத்துணை கேவலங்கள்!

அந்த ஒப்பந்தப் பட்டோலையின்
உள்ளமைந்த வரிகளைத்தான்
உண்மையுடன் நிறைவேற்ற
உத்தமன் எம் திலீபன்-உள்ளார்ந்த வேட்கையுடன்
உண்ணா நோன்பு புக்கான்.

மக்களும் மாணவரும் மேடையைச் சூழ்ந்திருக்க
பக்கலில் மேடையிட்டு கவிதைகள் சொற்பொழிவு
உணர்வுகள் கொப்பளிக்கும் உயர்மிகு வேளையதனில்
திலீபனும் தன்னுணர்வில் மக்களோடிணைந்து கொண்டான்
ஒப்பிலா அந்த வீரன் உறுவினை கண்டு மக்கள்
வெப்பினார், வீரமுற்றார்
சங்கது சுட்டதைப்போல் மென்மேலும் தெளிவு பெற்றார்

பற்றது-சுய பற்றது விட்டுத் திலீபன்
பாடையை நோக்கிப் பயணம்
சொட்டதும் தளரா முனைப்பில்
வெப்புடன் தொடர்ந்த போதும்
புத்தனின் பாரதமோ பகர்ந்தது ஏதுமில்லை.

காந்தியைப் போற்றும் அந்த இந்திய தேசம் அன்று
ஏந்திய ஒப்பந்தத்தைச் சரிவரச் செய்யவில்லை.
காந்தியின் தேசமென்று புகழுரைத்தாரேயன்றி
அன்னவர் அகிம்சா வழியைப் புரிந்திட மறுத்தார்-ஐயோ
அந்தக் காந்தியும் கூட முன்னர் நீருணவு அருந்தித்தானே
விரதமும் அனுசரித்தார்! நீரதும் ஏலாத் திலீபன்,
இளமையின் ஆசாபாசா உணர்வெலாம் ஒடுக்கிப் போரில்
ஆயுதம் ஏந்திக் காயம் பட்டவன் பட்டும் மீண்டும்
உடலதை எரிக்கும் போரை உவப்புடன் ஏற்ற வேளை
பதரெனப் பாரதத்தால் புறமென ஒதுக்கப் பட்டான்.

கணம் கணமாக அந்த இந்தியப் பதிலைக் காத்து
பிணமெனும் நிலை வராமல் திலீபன்
வாழ்ந்திட வேண்டுமென்று
துடித்தனர் மக்கள் ஆங்கே
துவண்டனர் தாய்க்குலத்தோர்.
ஏதுமே எட்டவில்லை!??
ஐரிஸ் போராட்டவீரன்
பொபி சான்டஸ் என்ன செய்தான்?
சிறையிலே வதங்கி வாடி
வீரமாய் சாவணைத்தான்.
ஆயினும் அவனும்
நீராகாரம் நிதமும் உண்டான்.

நீரையே நினைத்திடாதவோர்
போரிலே குதித்த உலகின்-முதல்
மாபெரும் வீரனென்றால்
தலைவர் பிரபாகரன்தான் ஐயா,
எண்பத்தாறிலே-தலைவர்
நவம்பரில் போர் தொடுத்தார்
தகவற் தொடர்பினை வென்றெடுத்தார்.

அன்னவர் பாசறையில்
வளர்ந்தொரு வீரனாக
வந்த எம் வண்ணத் திலீபன்
கண்ணது போல அந்த
விடுதலை வேதம் காத்து
பொன்னதை யொத்த வேள்விப்
போரினைத் தொடர்ந்து நின்றான்.

மகத்தான அந்த மன உறுதி பாரீர்!
எக்கட்டத்திலேனும் தன் விருப்புக்கு மாறாக
மருந்தோ, சிகிச்சையோ, உணவோ, நீரோ
தந்திடக் கூடாதென்று சத்தியம் வேண்டிக் கொண்டே,
மேடையில் போயமர்ந்தான்-சந்தன மேனியாளன்,
இறப்பின் பின்னரும்தன் ஈகத்தின் தொடர்ச்சியாக
உடலின் கூறுகள் உயர் கல்விக்கு உதவவென
மருத்துவ பீடத்திற்கு அனுப்பிடல் வேண்டுமென்றான்.

நிமிடங்கள் மணிகளாக
மணித்துளிகள் தினங்களாகி
ஒன்றாக இரண்டாக மூன்றாக நாட்கழிய
உடலால் சோர்வுற்றான்-மக்கள்
உள்ளங்களில் தீயிட்டான்,
எங்கும் எரியும் உணர்ச்சிப் பிரவாகம்,
முண்டியடித்துத் திரளும் சனக்கூட்டம்,
சீருடைச் சிறார்களின் தளர் நடைச் சோகம்,
ஊரூராக உருக்கொண்டு மக்கள்
பேரணியாக நல்லூர் நகர்ந்தனர்,
திலீபனுக்குத் துணையாகத்
தம் வயிற்றில் தீ மூட்ட
அணியணியாக ஆட்கள் திரண்டனர்,
ஆங்காங்கு மேடைகள்,
ஆத்திர உணர்வு மக்களுள் கிளர்ந்தது,
கோத்திரம், குலம், சாத்திரம் யாவும்
கூடையில் போயின - சோற்றுப்
பாத்திரம் தொட மக்கள் கூசினர்,
தேற்றவோர் வார்த்தையின்றி
தேசம் சிவந்தது.
நல்லூரிலேயே அருகிலொருமேடை,
வல்லையில் ஐவர்,
முல்லையில் திருச்செல்வம்,
திருமலையில் வேறொருவர்,
மட்டுநகர் மேடையில் மற்றொருவர்,
எங்கும் வியாபித்த இலட்சியப் போர்த்தீ.

ஆயினும், பாரதபூமி
பார்த்தே கிடந்தது.
தேரோடிய எம்மண்ணில்
கண்ணீர் ஆறோடியது.
வசந்தம் வீசிய வாழ்நிலத்தில்
அக்கினிப் புயல் அனல் வீசியது.

நாட்கள் கடந்தன்
காந்தீயப் போர்வைகள் கிழிந்தன,
மகாத்மா என்ற மாபெரும் வார்த்தையை
தனக்கே உரித்தான
தனியான அணிகலனாக
தானே தனக்குச் சூடிக்கொண்ட பாரதம்
வேஷம் கலைந்து
விவஸ்தை கெட்டு-வெறும்
கோஷதாரியாக குறிகெட்டு நின்றது
காந்தீயமென்று போற்றிப் பூஜிக்கும்
குவலயத்து மக்களெல்லாம்
குருடர்களாய்ப் போயினரோ!

அந்தக் காருண்யப் பாதையிலே
அணுஅணுவாய் எரிந்தழியும்
திலீபமெனும் மெழுகுச் சுடர்-இந்தத்
தீன விழிகளில் ஈரமதைத் தரவில்லையா?!
மனித தர்மமென்ன மாண்டே போனதா?!
புத்தன் பிறந்த தேசமென்றார்களே
சித்தமே கல்லான எத்தர்களா இவர்கள்?!
சத்தமின்றி அமர்ந்திருந்து
சித்திரவதை தன்னை
மெத்தனமாய்க் கண்கொள்ளும்
வித்தையிலே விற்பன்னரோ?!

பத்திரமாய் நாம் வாழ
சித்திரமாம் எம் திலீபன்
கத்தியில்லா யுத்தமொன்றை
கணம்கணமாய் முன்னெடுக்க,
புத்தியிலே பொறிவெடித்து-எம்
புத்திரர்கள் எல்லோரும்
சத்திய வேள்வியிலே
சேர்ந்து குதித்தார்கள்,
சொத்தான எம் ஈழம்
பெற்றிடலே வேதமென்று
வற்றாத பேராறாய்
வரிசையிலே வந்தார்கள்.

உடல் வற்றி உயிர் வற்றிப் போன
எம் இளவல்,
கடல் வற்றிக் காய்ந்திட்ட
சவர் படிந்த நிலமாக-விழி
மடல் ஒட்டி வேதனையின்
விளிம்புகளைத் தொட்டு நின்ற-அப்
பதினோராம் நாளோர் பாவப்பட்ட
நாளென்றால்,
பன்னிரண்டாம் நாளை நான்
எப்படித்தான் பகர்ந்துரைப்பேன்.

நல்லூரின் வீதிதனில்
நாடறியாச் சனவெள்ளம்,
லட்சோப லட்சமாய்
பட்சமிகு மக்கள்.
கண்ணீரும் கதறல்களும்
காற்றோடு பேச-திலீபன்
கண்ணோடு கண்மூடினான்-ஈழ
மண்ணோடு சாய்ந்திட்ட
மாவீரர் எல்லோரும்
பண்ணோடு இசை பாடி
விண்ணோடு வரவேற்றனர்-அவனைக்
கண்ணோடு ஒற்றி
காதோடு கதை பேசி
தம்மோடு அணி சேர்த்தனர்.

நாம்
கண்ணீருக்கு அணை தேடினோம்
நிலை புரியாது தடுமாறினோம்
களம் புதிதாக வெளித்திடக்
களமாடச் சுயமாக கனலோடு
அணிதேடினோம்-இனிச்
சமர்தானே சகமென்று
திடமாகினோம்
புதுத் தெளிவோடு-பாசறை
புக ஓடினோம்.

தீட்சண்யன்

ஒலிபரப்பு- புலிகளின்குரல் வானொலி, சிறப்புக்கவிதாஞ்சலி.
காலம்-திலீபன் நினைவு வாரம் 1997.

ஜேர்மனியின் Chancellor யார்...?


ஜேர்மனியின் Chancellor யார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
நேற்றைய தேர்தல் முடிவுகள்

Friday, September 09, 2005

பாட்டியும் partyயும்


நான் ஜேர்மனிக்கு வந்து சில மாதங்களில் எனது அகதி அந்தஸ்து கோரிக்கைக்கான வழக்கு நடை பெற்றது.

ஜேர்மன் மொழியைக் கேட்டாலே சிதம்பரசக்கரத்தைப் பேய் பார்ப்பது போன்ற உணர்வு அப்போது எனக்கு. உனது Tochter(மகள்) என யாராவது என்னோடு கதைத்தாலே, நான் அவர்கள் டொக்டரைப் பற்றி ஏதோ சொல்கிறார்கள் என நினைப்பேன். இப்படியான நிலையில், எனது வழக்குக்கு எனக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் கண்டிப்பாகத் தேவை என்ற நிலை இருந்தது. அதனால் ஒரு இந்தியர் எனக்கு மொழிபெயர்ப்பாளராக வந்திருந்தார்.

நான் தமிழில் எனது அகதி அந்தஸ்து கோரிக்கைக்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க, அவர் அதை ஜேர்மனிய மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவர் எனது பாட்டி பற்றி என்னவோ சொன்னார். என்னடா இது! நான் பாட்டியைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று யோசித்து மீண்டும் எனது கருத்தைச் சொன்னேன். அவர் மீண்டும் எனது பாட்டி பற்றியே சொன்னார்.

அப்போதுதான் எனக்கு விளங்கியது நான் party(கட்சி) என்று சொல்ல அவர் அதை இப்படி மொழிபெயர்க்கிறார் என்று. உடனேயே நான் எனது வழக்கறிஞரிடம் தவறைச் சுட்டிக் காட்டி எனது வழக்குக்கு பழுது வராமல் பார்த்துக் கொண்டேன்.

டோண்டு ராகவனின் பதிவைப் பார்த்த போது பல சமயங்களில் எனது நினைவில் வந்து போகும் இவ்விடயம் மீண்டும் நினைவில் வந்தது.

காலத்தின் கவிக்கூர் இவன்



நேற்று எனக்குக் கிடைத்த புத்தகம் சஞ்சீவ் காந்தின் உராய்வு கவிதை நூல். 54 கவிதைகளுடன், மூனாவின் ஓவியங்களுடன் புத்தகம் அழகாய் உள்ளது.

சஞ்சீவ்காந்த், இளைஞனாய் என்னுள் வியப்பை ஏற்படுத்தியவன். அவன் கவிதைகளில் ஒன்று வானலையில் பாடலாக ஒலித்த போதும், தானே வந்து தன் குரலில் ஐபிசி வானொலியில் கவிதைகளை மிக அழகாக வாசித்த போதும் மனம் சிலிர்த்திருக்கிறேன். இப்போது நான் பார்த்துக் கொண்டிருக்க வளர்ந்த இளைஞனின் கவிதை நூல் ஒன்று என் கரங்களில் தவழும் போது உண்மையிலேயே மகிழ்சியாக இருக்கிறது.

திரு.தாசீசியஸ் அவர்கள் மதிப்புரையாகவோ, முகவுரையாகவோ ஒரே ஒரு வரி சொல்லியுள்ளார். காலத்தின் கவிக்கூர் இவன். அழகான அர்த்தமான வரி.

கவிதைகளை ஒவ்வொன்றாக வாசித்து அவை பற்றிய எனது கருத்துக்களை எழுத வேண்டுமென்று ஆசை. முயற்சிக்கிறேன்.

ஒரு பேப்பர் - 30 (Sep02-15, 2005)


ஒரு பேப்பரின் 30வது வெளியீடு கிடைத்துள்ளது. 29வது கிடைக்கவில்லை. ஆதலால் இனி எனக்கு அனுப்ப மாட்டார்கள் என்றே நினைத்தேன். இணையத்தில் வாசிக்கவும் நேரம் சரியாக அமையவில்லை. மீண்டும் என்னை நினைத்து 30ஆவது பேப்பரை அனுப்பியுள்ளார். அவர்களை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

ஒரு பேப்பர் 30இல் இளைஞனின் உராய்வு கவிதைநூல் வெளியீடு, எல்லாளனின் வழமையான கொஞ்சம் யோசியுங்க, சேயோனின் சற்று மாறுதலுக்காக, கந்தையா சண்முகத்தின் பண்பாடு, இவைகளோடு இந்தியனின்(தாத்தா இல்ல) ஈழத்தழிழருக்கு நான் எழுதிக் கொள்வது, உமா மகாலிங்கத்தின் சமரசம் இல்லையேல் சமாதானம் இல்லை, கருணாவின் கமரா, டொக்டர் பாலேந்திரனின் தம்பதிகளாக வாழ்வது எப்படி?, திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தாளவாத்தியக் கலைஞர் முத்து சிவராஜாவுடனான பேட்டி, கொழுவியின் கொலிஜ் கொலிஜ், எம்.கே.குமாரின் ஜனநாயகமும் சன் டிவி குழுமமும், தமிழ்டுபுக்குவின் ஜொள்ளித் திரிந்ததொரு காலம், குழலியின் இணையத்தில் அழகுக்கிளி அசின், சுரேஸின் பெனாத்தல் சுரேஷ் - ஒரு தியாகி, கரிச்சான் குஞ்சனின் ஒற்றைப் பனைமரம், அரசுவின் கண்ணகி தீவிரவாதியா?, கே.எஸ் பாலச்சந்திரனின் விசிலடிச்சான் குஞ்சுகள், சினிமா... என்று பல சுவையான அம்சங்கள் உள்ளன.
அறுவைப்பக்கத்தில் தமிழ்பித்தனின் தொலைபேசியால், முகமூடியின் எஸ்.ஏ.ராஜ்குமார் தினமூடி சந்திப்பு இன்னும் இவையின்றி தமிழ்சினிமா இல்லை(எழுதியவர் பெயரைத் தவற விட்டு விட்டார்களாம்) என்பன இடம் பெற்றுள்ளன.

குறிப்பிடும் படியாக பல கட்டுரைகள் ஒரு பேப்பருக்காகவே பிரத்தியேகமாக எழுதப் பட்டுள்ளன.

பூராயம் பகுதியில்தான் ஒரு வாசகர் - பெயர் சங்கரப்பிள்ளை - விம்பிள்டனில் இருந்து எழுதியிருக்கிறார்.
"ஒரு பேப்பரை ஒரு பவுணுக்காவது வில்லுங்கோ. ஓசியாக் குடுத்தா மரியாதை இல்லை" என்று.
விற்கப்படும் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் சில காலங்களுக்குள் காணாமற் போவது பற்றி அவருக்குத் தெரியாதென்றே நினைக்கிறேன்.

சரி, பேப்பரை மேலோட்டமாகப் பார்த்து எழுதியுள்ளேன். வாசித்து எனது அபிப்பிராயங்களை எழுதுவேன் என்று எந்த வாக்குறுதியும் நான் தரவில்லை. நேரம் அப்படி. இனித்தான் வாசிக்க வேண்டும். வாசிக்கும் போது ஏதாவது ஒரு விடயம் மனதை உதைத்தாலோ அல்லது மனதைத் தழுவினாலோ வந்து அது பற்றி எழுதுகிறேன்.

சந்திரவதனா
9.9.05

Saturday, September 03, 2005

இரண்டு வருடங்கள் ஓடி விட்டன

நான் வலைப்பதிவுகளை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. முதற் பதிவை 27.7.2003 இல் பதிந்தேன். விடுமுறையில் இருந்ததால் அதைப் பற்றிய நினைவே இல்லாமல் போய் விட்டது. இன்றுதான் கவனித்தேன்.

திகதி, தேதி எது சரி?

திகதி, தேதி இவைகளில் எது சரி?
இவைகள் தமிழ் சொற்கள்தானா?

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite