Google+ Followers

Monday, September 19, 2005

திலீபன்-சிறப்புக்கவிதாஞ்சலி


- தீட்சண்யன் -விடுதலை வேட்கை சுடராய் விழிகளில் நடனமாட
பறந்திடும் கேசத்தோடும் புன்னகை வதனத்தோடும்
நடந்தவன் நல்லூர் வீதி மேடையை நாடிச்செல்ல
திரண்ட எம் மக்கள் கூட்டம் - தெய்வமே! - என்றழைக்க
பஞ்சென வெண்மைக் கேசம் கொண்டதோர் பக்தி மாது
பையவே திலீபன் முன்னால் பாதையை மறித்து வந்து
கையிலே தாங்கிவந்த அர்ச்சனைத் தட்டைத் தொட்டு
விரலிலே வபூதி அள்ளி எம் வீரனின் நுதலில் பூச
பௌர்ணமித் திங்களாய் எம் திலீபனோ முகம் ஜொலித்தான்.

எங்களின் பிரச்சினைக்கு..... எங்களின் விடுதலைக்கு......
எங்களின் பங்குமின்றி எங்களின் விருப்புமின்றி
சிங்களம் பெற்றெடுத்த கிழநரி ஜெயவர்த்தனாவும்,
தன்னலம் மட்டுமேயோர் இலட்சியக் குறியாய்க் கொண்ட
அன்றைய பாரதத்தின் அரசியல் ஓச்சுவோனும்
தங்களுக்குள்ளே கூடித் தந்திரக் கூத்தடித்து
செய்தவோர் ஒப்பந்தத்தின் அம்சங்கள் ஐந்தினையே
செயற்படவைக்கத் திலீபன் வயிற்றுடன் போர்தொடுத்தான்

பண்டமும் பருப்பும் வானில்-நாம்
உண்டிடவென்றே போட்டு
கண்டறியாதவொரு கரிசனைச் சாலம் காட்டி
தந்திரமாக எங்கள் தலைவனைக் கூட்டிச் சென்று
ஒன்றுமே இல்லா அந்த ஒப்பந்த ஓலைதன்னை
நிர்ப்பந்தமாகவே அவர் ஏற்றிட மிரட்டியங்கு
அறையிலே பூட்டி அவமானப் படுத்தி-ஐயோ
எத்தனை சாகசங்கள! எத்துணை கேவலங்கள்!

அந்த ஒப்பந்தப் பட்டோலையின்
உள்ளமைந்த வரிகளைத்தான்
உண்மையுடன் நிறைவேற்ற
உத்தமன் எம் திலீபன்-உள்ளார்ந்த வேட்கையுடன்
உண்ணா நோன்பு புக்கான்.

மக்களும் மாணவரும் மேடையைச் சூழ்ந்திருக்க
பக்கலில் மேடையிட்டு கவிதைகள் சொற்பொழிவு
உணர்வுகள் கொப்பளிக்கும் உயர்மிகு வேளையதனில்
திலீபனும் தன்னுணர்வில் மக்களோடிணைந்து கொண்டான்
ஒப்பிலா அந்த வீரன் உறுவினை கண்டு மக்கள்
வெப்பினார், வீரமுற்றார்
சங்கது சுட்டதைப்போல் மென்மேலும் தெளிவு பெற்றார்

பற்றது-சுய பற்றது விட்டுத் திலீபன்
பாடையை நோக்கிப் பயணம்
சொட்டதும் தளரா முனைப்பில்
வெப்புடன் தொடர்ந்த போதும்
புத்தனின் பாரதமோ பகர்ந்தது ஏதுமில்லை.

காந்தியைப் போற்றும் அந்த இந்திய தேசம் அன்று
ஏந்திய ஒப்பந்தத்தைச் சரிவரச் செய்யவில்லை.
காந்தியின் தேசமென்று புகழுரைத்தாரேயன்றி
அன்னவர் அகிம்சா வழியைப் புரிந்திட மறுத்தார்-ஐயோ
அந்தக் காந்தியும் கூட முன்னர் நீருணவு அருந்தித்தானே
விரதமும் அனுசரித்தார்! நீரதும் ஏலாத் திலீபன்,
இளமையின் ஆசாபாசா உணர்வெலாம் ஒடுக்கிப் போரில்
ஆயுதம் ஏந்திக் காயம் பட்டவன் பட்டும் மீண்டும்
உடலதை எரிக்கும் போரை உவப்புடன் ஏற்ற வேளை
பதரெனப் பாரதத்தால் புறமென ஒதுக்கப் பட்டான்.

கணம் கணமாக அந்த இந்தியப் பதிலைக் காத்து
பிணமெனும் நிலை வராமல் திலீபன்
வாழ்ந்திட வேண்டுமென்று
துடித்தனர் மக்கள் ஆங்கே
துவண்டனர் தாய்க்குலத்தோர்.
ஏதுமே எட்டவில்லை!??
ஐரிஸ் போராட்டவீரன்
பொபி சான்டஸ் என்ன செய்தான்?
சிறையிலே வதங்கி வாடி
வீரமாய் சாவணைத்தான்.
ஆயினும் அவனும்
நீராகாரம் நிதமும் உண்டான்.

நீரையே நினைத்திடாதவோர்
போரிலே குதித்த உலகின்-முதல்
மாபெரும் வீரனென்றால்
தலைவர் பிரபாகரன்தான் ஐயா,
எண்பத்தாறிலே-தலைவர்
நவம்பரில் போர் தொடுத்தார்
தகவற் தொடர்பினை வென்றெடுத்தார்.

அன்னவர் பாசறையில்
வளர்ந்தொரு வீரனாக
வந்த எம் வண்ணத் திலீபன்
கண்ணது போல அந்த
விடுதலை வேதம் காத்து
பொன்னதை யொத்த வேள்விப்
போரினைத் தொடர்ந்து நின்றான்.

மகத்தான அந்த மன உறுதி பாரீர்!
எக்கட்டத்திலேனும் தன் விருப்புக்கு மாறாக
மருந்தோ, சிகிச்சையோ, உணவோ, நீரோ
தந்திடக் கூடாதென்று சத்தியம் வேண்டிக் கொண்டே,
மேடையில் போயமர்ந்தான்-சந்தன மேனியாளன்,
இறப்பின் பின்னரும்தன் ஈகத்தின் தொடர்ச்சியாக
உடலின் கூறுகள் உயர் கல்விக்கு உதவவென
மருத்துவ பீடத்திற்கு அனுப்பிடல் வேண்டுமென்றான்.

நிமிடங்கள் மணிகளாக
மணித்துளிகள் தினங்களாகி
ஒன்றாக இரண்டாக மூன்றாக நாட்கழிய
உடலால் சோர்வுற்றான்-மக்கள்
உள்ளங்களில் தீயிட்டான்,
எங்கும் எரியும் உணர்ச்சிப் பிரவாகம்,
முண்டியடித்துத் திரளும் சனக்கூட்டம்,
சீருடைச் சிறார்களின் தளர் நடைச் சோகம்,
ஊரூராக உருக்கொண்டு மக்கள்
பேரணியாக நல்லூர் நகர்ந்தனர்,
திலீபனுக்குத் துணையாகத்
தம் வயிற்றில் தீ மூட்ட
அணியணியாக ஆட்கள் திரண்டனர்,
ஆங்காங்கு மேடைகள்,
ஆத்திர உணர்வு மக்களுள் கிளர்ந்தது,
கோத்திரம், குலம், சாத்திரம் யாவும்
கூடையில் போயின - சோற்றுப்
பாத்திரம் தொட மக்கள் கூசினர்,
தேற்றவோர் வார்த்தையின்றி
தேசம் சிவந்தது.
நல்லூரிலேயே அருகிலொருமேடை,
வல்லையில் ஐவர்,
முல்லையில் திருச்செல்வம்,
திருமலையில் வேறொருவர்,
மட்டுநகர் மேடையில் மற்றொருவர்,
எங்கும் வியாபித்த இலட்சியப் போர்த்தீ.

ஆயினும், பாரதபூமி
பார்த்தே கிடந்தது.
தேரோடிய எம்மண்ணில்
கண்ணீர் ஆறோடியது.
வசந்தம் வீசிய வாழ்நிலத்தில்
அக்கினிப் புயல் அனல் வீசியது.

நாட்கள் கடந்தன்
காந்தீயப் போர்வைகள் கிழிந்தன,
மகாத்மா என்ற மாபெரும் வார்த்தையை
தனக்கே உரித்தான
தனியான அணிகலனாக
தானே தனக்குச் சூடிக்கொண்ட பாரதம்
வேஷம் கலைந்து
விவஸ்தை கெட்டு-வெறும்
கோஷதாரியாக குறிகெட்டு நின்றது
காந்தீயமென்று போற்றிப் பூஜிக்கும்
குவலயத்து மக்களெல்லாம்
குருடர்களாய்ப் போயினரோ!

அந்தக் காருண்யப் பாதையிலே
அணுஅணுவாய் எரிந்தழியும்
திலீபமெனும் மெழுகுச் சுடர்-இந்தத்
தீன விழிகளில் ஈரமதைத் தரவில்லையா?!
மனித தர்மமென்ன மாண்டே போனதா?!
புத்தன் பிறந்த தேசமென்றார்களே
சித்தமே கல்லான எத்தர்களா இவர்கள்?!
சத்தமின்றி அமர்ந்திருந்து
சித்திரவதை தன்னை
மெத்தனமாய்க் கண்கொள்ளும்
வித்தையிலே விற்பன்னரோ?!

பத்திரமாய் நாம் வாழ
சித்திரமாம் எம் திலீபன்
கத்தியில்லா யுத்தமொன்றை
கணம்கணமாய் முன்னெடுக்க,
புத்தியிலே பொறிவெடித்து-எம்
புத்திரர்கள் எல்லோரும்
சத்திய வேள்வியிலே
சேர்ந்து குதித்தார்கள்,
சொத்தான எம் ஈழம்
பெற்றிடலே வேதமென்று
வற்றாத பேராறாய்
வரிசையிலே வந்தார்கள்.

உடல் வற்றி உயிர் வற்றிப் போன
எம் இளவல்,
கடல் வற்றிக் காய்ந்திட்ட
சவர் படிந்த நிலமாக-விழி
மடல் ஒட்டி வேதனையின்
விளிம்புகளைத் தொட்டு நின்ற-அப்
பதினோராம் நாளோர் பாவப்பட்ட
நாளென்றால்,
பன்னிரண்டாம் நாளை நான்
எப்படித்தான் பகர்ந்துரைப்பேன்.

நல்லூரின் வீதிதனில்
நாடறியாச் சனவெள்ளம்,
லட்சோப லட்சமாய்
பட்சமிகு மக்கள்.
கண்ணீரும் கதறல்களும்
காற்றோடு பேச-திலீபன்
கண்ணோடு கண்மூடினான்-ஈழ
மண்ணோடு சாய்ந்திட்ட
மாவீரர் எல்லோரும்
பண்ணோடு இசை பாடி
விண்ணோடு வரவேற்றனர்-அவனைக்
கண்ணோடு ஒற்றி
காதோடு கதை பேசி
தம்மோடு அணி சேர்த்தனர்.

நாம்
கண்ணீருக்கு அணை தேடினோம்
நிலை புரியாது தடுமாறினோம்
களம் புதிதாக வெளித்திடக்
களமாடச் சுயமாக கனலோடு
அணிதேடினோம்-இனிச்
சமர்தானே சகமென்று
திடமாகினோம்
புதுத் தெளிவோடு-பாசறை
புக ஓடினோம்.

தீட்சண்யன்

ஒலிபரப்பு- புலிகளின்குரல் வானொலி, சிறப்புக்கவிதாஞ்சலி.
காலம்-திலீபன் நினைவு வாரம் 1997.

3 comments :

Garunyan KavitaikaL said...

தீட்ஷண்யனின் அறியாமையில் பிறந்த அரைகுறைக்கவிதை இது.

ஒரு திலீபனல்ல முழுத்தமிழீழமேதான் உண்ணா நோன்பிருந்தாலும்
'றோ' என்ற பாசிசக்கும்பலிடம் குடுமிப்பிடியை கொடுத்துவிட்ட
இந்தியஅரசு இறங்கிவரவே வாராதென்பதை விரல் சூப்பும் பாப்பாவும்
அறியும். நிலமை அப்பிடியிருக்க சரித்திரமும் நிலைமையும் அறியாத
திலீபன் குழந்தை உணர்ச்சிவசப்பட்டு
சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முற்பட்டது அடிமுட்டாள்தனம்.

தலைவன் நினைத்திரிந்தால் இதைத்தடுத்திருக்கலாம். அவருக்கு அப்போது
வேண்டியிருந்ததெல்லாம் சர்வதேசத்துக்கு பிரச்சாரம்.

''அவன் உயிரோடு பாடையில் ஏறிவிட்டான்.
இனி யார் வந்து இனியார்வந்து சொன்னாலும்
இறங்கமாட்டான்.''
கூடவுள்ள கவிக்குரங்குகள் அவனுக்கு புத்திசொல்வார்களா?
இந்தா சாகிறான், அந்தா போகிறான் என்றல்லவா
உடுக்கடித்துக்கொண்டிருக்கிறார்கள்!

இறப்பதற்கு 2 மணிமுன்பதாக தண்ணீர் தரச்சொல்லிச்சைகையால்
கேட்டான் தீலீபன். கொடுக்கப்படல்லை. அலறித்துடித்து ஓலமிட்டழுத
அவன் Ex- Friend ஐத்தூக்கி அப்புறப்படுத்தினார்கள்.
திலீபன் சாகடிக்கப்பட்டான். அவன் கொல்லப்பட்டதால்
கொஞ்சம் பிரச்சாரம் கிடைத்தது மாத்திரந்தான் இதுவரை விளைந்த பலன்.

தற்கொடையாளர்களைப்பற்றி ஆய்வுசெய்யும் ஊடகர் ஒருவர் ஒரு சந்திப்பில் என்னைக்கேட்டார்:

"நீர் திலீபனின் மரணத்தை ஆதரிக்கிறீரா?" நான் "ஆம்" என்றேன்.

"அப்போ உமது மரணத்தை?" நான் தலையைக்கவிழ வேண்டியதாயிற்று.

ஹிட்லர் ஐரோப்பியயூதர்கள் அனைவரையும் அழிக்கப்படவே வேண்டும் என்று முடிவுசெய்தபோது
அம்முடிவு சரியா தவறா; அதன் பிரதிபலிப்புகள் எப்படியிருக்குமென்று தன் சகாக்கள் எவரையும் கலந்தாலோசிக்கவில்லை.
ஆனால் எப்படிக்கொல்லப்படவேண்டும்; பின் அவர்கள் உடல்கள் எப்படி அழிக்கப்படவேண்டும் என்பதில் பல கலந்தாலோசனைகள் நடத்தினான்.

பொதுசனத்தின் பொதுப்புத்தியில் (Mass Concept)படுவதைப்போலவே ஒரு கவிஞனோ, எழுத்தாளனோ எண்ணப்படாது. அவன் வேறு கோணத்திலும் எண்ணத்தலைப்படவேண்டும். ஒரு ஆவர்த்தனமாவது முன்னே செல்லத்தெரிந்தவனாக இருந்தால்தான் அவள்/அவன் சிந்தனையாளன்.

உடுக்கடிப்பவர்களைப்பார்த்து நாமும் பாமரத்தனமாக உடுக்கடிக்கப்படாது.

இப்போ பேச்சுவார்த்தைகளில் எமது கோரிக்கைகள்/விருப்பங்கள் கிட்டவா போகிறது?
அப்போது பாருங்கள் எவராவது உண்ணாவிரதம் இருக்கிறார்களாவென்று?

ஏன்?

உண்ணாவிரதத்தால் எதுவும் ஆகாதென்பதுதான் தெரிந்து போச்சே!!

என் தோழன் திலீபனுக்கு அப்போது அது தெரிந்திருக்கவில்லை. அதுதான் பரிதாபம்.
அப்பாவிஅன்னை பூபதிக்கு நடந்ததுவும் இதேகதைதான்.
அவரையும் சூழவிருந்தவர்கள்தான் தூண்டினார்கள்.விபரமில்லாமல்
இன்னும் உடுக்கடிப்பவர்களே ஒன்றத்தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த உண்ணாவிரதத்தை மனதளவில் அங்கீகரியாத பலர் விடுதலைப்புலிகள்
இயக்கத்தில் இருந்தார்கள்.இன்னும் இருக்கிறார்கள் குரலற்றவர்களாக.

கொஞ்சம் சிந்திக்கின்றவர்களும் வலைப்பக்கங்களுக்கு வருகிறார்கள் என்பதால்
இதை இங்கு எழுதினேன். நானும் தமிழீழத்தின் யாசகந்தான்.
ஆனால் முட்டாள்தனங்களுக்கல்ல! விரும்பினால் இக்கருத்துடன்
உடன்பாடில்லாதவர்கள் இதை இன்னும் விஸ்தாரமான தளத்தில் விவாதிக்கலாம்.

=காருண்யன் கொன்பூசியஸ்=

வந்தியத்தேவன் said...

அருமையான பதிவு அக்கா.

ஐயா காருண்யன் கொன்பூசியஸ்அவர்களே திலீபன் உண்ணாவிரதம் இருந்தது சரியா பிழையா என்பது பிரச்சனையல்ல. அதனை அகிம்ஸை வழிவந்த பாரத மாதாவின் புத்திரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதன் பிரச்ச்னை.

Chandravathanaa said...

நன்றி வந்தியத்தேவன்

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite