
பல இனிமையான நினைவுகள் எம்முள் பதிந்திருந்து அவ்வப்போது அவை மீட்டப் படுவது இயல்பானதே. இது என்னுள் மீட்டப்படும் ஒரு உவர்ப்பான நினைவு.
சமையலறையில் கணவனும் மனைவியும் சேர்ந்து சமைப்பது என்பது உண்மையிலேயே ஒரு மகிழ்வான விடயந்தான். தனியே எப்போதும் சமையலறையில் மாயும் மனைவியுடன் சேர்ந்து கணவனும் சமைக்கும் போது அந்தச் சமையலறைக்கே ஒரு தனிக் கலகலப்பு வந்து விடும். சமையலிலும் தனிச்சுவை தெரியும்.
எனது அப்பா, விடுமுறையில் வீட்டுக்கு வந்து நிற்கும் போதெல்லாம் வீட்டின் ஒவ்வொரு வேலையிலும் அம்மாவுடன் இணைந்து விடுவார். அரிசியில் கல்லுப் பொறுக்குவதிலிருந்து கிணற்றடியில் அம்மாவுடன் இருந்து உடுப்புகளுக்குச் சவர்க்காரம் தேய்த்து, உடுப்புகளை அலசிப் பிழிந்து, கொடியில் காய விடுவது வரை வீட்டின் எல்லா வேலைகளிலுமே அவர் கைகளும் பட்டிருக்கும். இதில் சமையல் பக்கம் என்பது அவர் இன்னும் அதிசுவாரஸ்யத்துடன் ஈடுபடும் விடயமாக இருக்கும். தானே சைக்கிளில் போய் சந்தையில் மரக்கறிகள், மீன்… என்று வாங்கி வந்து, தானே அவைகளைச் சுத்தப் படுத்தி… அம்மாவுடன் சேர்ந்து சமைக்கத் தொடங்குவார்.
இப்படித்தான் அப்பாவின் 43வது பிறந்தநாள் அன்றும் சமையல் அமர்க்களமாய் நடந்து கொண்டிருந்தது. அன்று கணவாய்ப்பிரட்டல், கணவாய்க் குழம்பு, கணவாய்ப் பொரியல், மரக்கறிகள்… என்று அடுப்புகள் நெருப்பும், கொதிப்புமாய் தளதளத்துக் கொண்டிருந்தன. அப்பா டெயிலிமிரறில் வந்த ஏதோ ஒரு செய்தி பற்றி அம்மாவுக்கு விவரித்துக் கொண்டு அடுப்புக்கும் வெளிக்குமாய் நடந்து கொண்டிருந்தார். இடையிடையே புளுக்கொடியலின் தும்பிழுத்து, தேங்காய்ச்சொட்டையும் ‘நறுக்‘ கென்று கடித்துச் சுவைத்துக் கொண்டும் இருந்தார். நட்டு, நொறுக்கு இல்லாமல் அப்பா இருக்க மாட்டார். பிள்ளைகள் எங்களோடு சேர்ந்து மாங்காய்ச்சொட்டும் உப்பு-மிளகாய்த்தூளும், பனங்கிழங்கும் மிளகுதூளும், புளுக்கொடியல், மணிலாக்கொட்டை… என்று எப்போதும் எதையாது கொறித்துக் கொண்டே இருப்பார்.
அது ஒரு சனிக்கிழமையாகவோ அல்லது ஞாயிற்றுக்கிழமையாகவோ இருந்திருக்க வேண்டும். பிள்ளைகள் நாம் பாடாசாலைக்குச் செல்லாமல் வீட்டில் நின்றோம். சமையல், ஏலமும் கறுவாவும் கராம்பும் தேங்காய்ப்பாலும் கறிவேப்பிலையும்… என்று வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் கமகமத்தது. ஏன், வீட்டுக்கு வெளியே வீதியிலும் கூட வாசம் வீசியது. எங்களுக்கு அந்த வாசமே பெரும் பசியாக உருவெடுக்க நாங்கள் குளித்து, உடைமாற்றி சாப்பிடுவதற்குத் தயாரானோம்.
குசினிக்குள், அப்பா வாய் ஓயாது அம்மாவுக்குக் கதைகளும் பகிடிகளும் சொல்லிக் கொண்டே இருந்தார். கறி கொதிக்கும் சத்தத்தை விடப் பெரிதாகச் சிரிப்பும் சந்தோசமும் அங்கு களை கட்டி இருந்தன.
திடீரென அப்பா “சிவா, இந்தக் கறியைப் பாரும்” என்றார். அம்மா அகப்பையில் சிறிது கறி எடுத்து, ஊதி, அதில் கொஞ்சத்தைக் கையில் ஊற்றிச் சுவைத்தா. ம்… உப்பு. ஒரு பெரிய சட்டி நிறைந்த கணவாய்க்குழம்பு உப்பாய்க் கரித்தது.
கதையும் சிரிப்பும் கலந்த சந்தோசக் களிப்பில்… இருவருமே ஆளுக்கொருதரம் என்று கறிக்கு இரு தரம் உப்பைப் போட்டு விட்டார்கள். என்ன செய்வது, அவ்வளவு மினைக்கெட்டு சமைத்ததைக் கொட்ட முடியுமா? அப்பா அவசரமாக இன்னொரு தேங்காய் உடைத்துத் துருவினார். அம்மா பாலைப் பிழிந்து, முதற்பாலையும் இரண்டாம் பாலையும் அப்படியே கறிக்குள் விட்டா.
இன்னும் கொஞ்சம் வெங்காயம்… இன்னும் என்னென்ன எல்லாம் உப்பைக் குறைப்பதற்கான பரிகாரமாக அமையுமே அவையெல்லாம் கறிக்குள் போடப் பட்டன. உப்புக் கரிப்பு கொஞ்சம் குறைந்தாலும், ‘உப்புக்கறி’ என்பதை மறுக்க முடியவில்லை.
“சரி, உப்புக்கணவாய் சாப்பிட்ட அப்பாவின் 43வது பிறந்தநாளை என்றைக்குமே மறக்க மாட்டோம்“ என்று சொல்லி நாமெல்லோரும் அந்தக் கறியைச் சாப்பிட்டு முடித்தோம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வந்த கவலை நாம் சாப்பிட்டு முடித்ததில் கொஞ்சம் ஆறி விட்டது.
இப்போது நான் கணவாய் சாப்பிடுவதில்லை. இருந்தாலும் அப்பாவின் அந்த 43வது பிறந்தநாள் என் நினைவை விட்டு இன்னும் அகலவில்லை. அவ்வப்போது ஞாபகத்தில் வந்து எட்டிப் பார்க்கிறது. அப்போதெல்லாம் அந்தச் சமையலின் வாசமும் ஓடி வந்து மூக்கினுள் ஒட்டிக் கொள்கிறது.
பொன்ஸ் இன் புத்தக விமர்சனம் இன்று என்னை எழுதத் தூண்டியது.
சந்திரவதனா
28.03.2007
17 comments :
நல்ல நினைவு மீட்டல்.
ஆனா,நானோ மரக்கறிகாறி
உங்களையும் weired இல் எழுத அழைப்புவிடுக்கிறேன்.
http://pirakeshpathi.blogspot.com/2007/03/weird_25.html
நன்றி
weird spelling முதல் எழுதியதில் பிழையாக உள்ளது
/அன்று கணவாய்க்கறி. கணவாய்க் குழம்பு, கணவாய்ப் பொரியல், மரக்கறிகள்.../
I am sorry I don't understand what this is. Could you post? I love to learn new things.
Thanks
Rumya
ரம்யா
கறி என்பது ஒரு பொதுவான சொல்.
மரக்கறி, மச்சக்கறி, கோழிக்கறி, கத்தரிக்காய் கறி... என்று கறி என்ற சொல் எல்லாவகையான
கறிகளுக்கும் பாவிக்கப் படும்.
ஆனால் நான் இங்கே கணவாய்க்கறி என்று குறிப்பிட்டது கணவாயில் வைக்கப் படும் பிரட்டல் கறியை.
இது பொரியலாகவும் இல்லாமல் குழம்பாகவும் இல்லாமல் தேங்காய்ப்பால் விட்டு பொடுபொடுக்க வைத்த பிரட்டல் கறியாக இருக்கும்.
குழம்பு என்றால் அள்ளி ஊத்தக் கூடிய வகையில் தடிப்பாக இருக்கும்.
சொதி என்றால் தேங்காய்பால் விட்டு தூள் போடாமல் பச்சைமிளகாய் போட்டு வைக்கப்பட்டிருக்கும். அள்ளி அள்ளி ஊத்திச் சாப்பிடக் கூடியது.-
பொரியல் தெரிந்ததுதானே. கொஞ்ச எண்ணெய்யிலோ அதிக எண்ணெய்யிலோ கலகலக்கப் பொரிக்கப் பட்டிருக்கும்.
கணவாய் என்பது ஒருவகை மீன் இல்லையா? அதை சாப்பிட எனக்கு பயம் , அந்த மீன் அதிகம் செதில்களுடன் , பக்கவாட்டில் இறக்கை போல எல்லாம் வைத்துக்கொண்டு இருக்கும்.
வவ்வால்
கவணவாய்க்குச் செதில்கள் இல்லை.
மை இருக்கிறது.
சுவையானது.
எனது மகனும் கணவாயை ஒரு தரம் தொலைக்காட்சியில் பார்த்ததின் விளைவாக கணவாயை சாப்பிடுவதில்லை.
கணவாய்க்குழம்பு ஒன்றின் ஒருவித செய்முறையை இங்கு கண்டேன்
கணவாய்க்கறி
இப்படியும் வைக்கலாம்
சந்திர வதனா!
உங்கள் அப்பா அம்மா கணவாய்க்கறிக்கு 2 தரம் உப்பிட்டது ஆச்சரியம் தரவில்லை.
ஆனால் வவ்வாலுக்கு கணவாய் தெரியாதது மிகப்பெரிய அதிசயம்.
ஆள் நிறைய அறிவியல் செய்தி எழுதுபவர்.
யோகன்,
//ஆனால் வவ்வாலுக்கு கணவாய் தெரியாதது மிகப்பெரிய அதிசயம்.
ஆள் நிறைய அறிவியல் செய்தி எழுதுபவர்.//
ஹி..ஹி ...எங்க ஊருல அப்படித்தான் கணவாய் மீன் இருந்துச்சு அத வைத்து சொல்லிட்டேன்.ஆமாம் நீங்கள் மீன் வகையை சொல்கிறீர்களா இல்லை ஜெல்லி ஃபிஷை சொல்றிங்களா, அதுக்கும் கணவாய்னு தூய தமிழ் பெயர் உண்டென நினைக்கிறேன்.இங்கே சாதாரணமான ஒரு மீனுக்கே கணவாய்னு பேரு, அதன் துடுப்புகளில் குஞ்சம் போல இருக்கும். அதைப்பார்த்தால் கால்கள் போல தெரியும்.என் பேரு கூட வவ்வால்னா பறவைனு நினைச்சு இருப்பிங்க வவ்வால் மீன் பேர தான் இப்படி சுருக்கமா வச்சு இருக்கேன் :-))
கணவாய் மீன் கொஞ்சம் ரப்பர் போல வதக் வதக்னு இருக்கு, மென்மையாக இல்லை , அங்கேயும் அப்படித்தான் இருக்குமா?
வவ்வால்!
நீங்கள் குறிப்பிடும் யெலி மீன் சாப்பிடுவதில்லை.அது மிக விசத்தன்மை கொண்டது.
கணவாய் செதிளற்றது, இரத்தம் இல்லாதது, ஆனால் அதன் தோலுள் பலவகை நிறம் மாறும் தன்மையுடைய திரவம் ஜாலம் காட்டும். இதன் ஓரங்களில் உள்ள இறகு அமைப்பே இது நீந்த உதவுகிறது.
இது தலையை பின்பக்கம் வைத்தே நகரும்,அத்தலையுள் கிளிச் சொண்டு போல் பற்கள் இரண்டு உண்டு.அத்துடன் அத்தலையில் கூந்தல் எனக் கூறும் இரு நீளமான கைகள் நுனியில் ஒட்டும் தன்மையுடைய அமைப்புடன் உணவைப் பிடிக்க உதவுகிறது.இது எதிரியைக் கண்டதும் தன் கருமையான மையைக் கக்கிவிட்டு அந்த இருளில் எதிரி திணற மறைந்து விடும்.
இதில் பல வகை உண்டு.ஒரு வகைக்கு முதுகுள் ஓடு இருக்கும்,தூய கல்சியம், இது ஒரு மிக சிறிய யானையை எனக்கு ஞாபகப் படுத்தும். இதில் இராட்சத11 மீட்டர் நீளம்(ஆச்சரியப்பட வேண்டாம்)http://www.dinosoria.com/calmar_cachalot.htm வகையும் உண்டு சமீபத்தில் ஆழ்கடலில் ஜப்பான் ஆராச்சியாளர்கள் படமாகியது யூருயூப்பில் உண்டு.
அத்துடன் திமிங்கிலத்தின் மிகப் பிரிய உணவு..ஒரு நாளுக்கு 200 கிலோ.
ஈழத்தில் வவ்வால் மீனை வாவல் எனவும் சில இடங்களில் கூறுவார்கள்.
சுவையான மீன், முள்ளு மிக மென்மையானது. இருவகையுண்டு வெள்ளை,கருமை...
கணவாயைத் துண்டுகளாக நறுக்கி மாவில் முக்கிப் பொரித்துக் கிடைக்கிறது என உண்டேன். ரப்பரைப் போல இழுவையாக இருந்தது. நீங்கள் உண்ட கணவாயும் அப்படித்தான் இருந்ததா? இல்லை மெத்தென்று இருந்ததா?
உங்கள் தந்தையாரையும் அவர் தொடர்பான அழகான நிகழ்வையும் அருமையாக நினைவு கூர்ந்திருக்கின்றீர்கள்.
எனக்கு மிகப்பிடித்த உணவென்றால் கணவாய், நண்டு, இறால்.
எங்கட ஊர்ப்பக்கம் மைபோட்டுத்தான் கணவாய்க்கறி காச்சுவினம். கன்னங்கரிய நிறத்திலதான் கறிவரும்.
பின்பொரு காலத்தில மைவிட்டுக் கணவாய்க்கறி காச்சினதப் பாத்தவங்கள், 'டேய், என்ன தாச்சிய கவுட்டு வைச்சே கறிவைச்சனி?' எண்டு நக்கலடிச்சாங்கள். இப்பெல்லாம் மையில்லாமல்தான் கணவாய்க்கறி.
ஊரில நாறவிட்டுக் கறிவைக்கிறது சுவைக்காக. இஞ்ச ஐஸ்போட்டு வாறதெல்லாம் நாறிவாறபடியா பிரச்சினையில்லை. ;-)
அனைக்கோட்டை - உயரப்புலம் சந்தியில இருந்த 'சும்மா ரீ ரூம்' கடையில கணவாய்ப்பொரியலை விதம் விதமா கண்ணாடிப் பெட்டிக்குள்ள வைச்சிருப்பாங்கள்.
யாழ்ப்பாணம் போய் வரேக்க அதைப்பாத்து வயிறெரிஞ்சுகொண்டு போய் வாறது இப்ப ஞாபகம் வருது.
கணவாய் தமிழ்நாட்டிலும் கணவாய் என்றே அழைக்கப்படுகிறது. வட தமிழ்நாட்டிலும், தென் தமிழ்நாட்டிலும் பல மீன்களுக்கு பெயர்கள் வேறுபட்டாலும் (உதாரணம்: வடக்கு – வவ்வால், தெற்கு – வாவல்; வடக்கு – வஞ்சிரம், தெற்கு – சீலா அல்லது நெய்மீன்; வடக்கு – சுதும்பு, தெற்கு – குதிப்பு) கணவாய்க்கு வடக்கிலும் தெற்கிலும் ஒரே பெயர்தான். மலையாளத்தில் கணவா.
கணவாயில் இரண்டு வகை இருக்கிறது – (1) squid எனப்படும் வகை – இதற்கு உள்ளே இருக்கும் ஓடு கண்ணாடி போல தெளிவாக, மெல்லியதாக இருக்கும்; (2) cuttlefish எனப்படும் வகை – இதற்கு உள்ளே இருக்கும் ஓடு கனமாக, வெள்ளையாக இருக்கும்.
கணவாய் cephalopod எனப்படும் வகையினது. Cephalo என்றால் தலை, pod என்றால் கால் – அதாவது தலையோடு கால்கள் உள்ள பிராணி. மொத்தமாக எட்டுக் கால்கள். ஆனால் சிலந்திக்கும் இதற்கும் நெருங்கிய சொந்தம் கிடையாது. நத்தை, சங்கு, சிப்பி வகைகளுக்கு ரொம்ப சொந்தம். அவைகளுக்கு வெளியே இருக்கும் ஓடு, இவற்றிற்கு உள்ளே இருக்கிறது. இவைகளுக்கு வெளியே இருக்கும் ருசியான தசைப் பகுதி, அவற்றிற்கு உள்ளே இருக்கிறது. அவைகளுக்கு ஓடு பாதுகாப்பு. இவற்றிற்கு ஓடுவதுதான் பாதுகாப்பு. கருப்பு மையை உமிழ்ந்து விட்டு அதி விரைவாக நீந்தி தப்பித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திமிங்கிலம், சுறா, சந்திரவதனா அவர்களின் வீட்டுச் சட்டி முதலானவற்றில் விதி முடிந்து விடும்.
கணவாய் மீன்கள் தமிழ்நாட்டில் ஓரளவு கிடைத்தாலும் கடல்புரத்து மக்கள் தவிர வேறு எவரும் விரும்பி உண்பதில்லை. பல பேருக்கு கணவாய் என்றால் என்ன என்பதே தெரியாது என்பதை இப்பதிவுக்கு வந்த பின்னூட்டங்களில் இருந்து அறியலாம். கேரளாவில் ஓரளவு பரவலாக கணவாய் உண்ணப்படுகிறது. கடல் உணவை ரொம்ப தீவிரமாக உட்கொள்ளும் வங்காளிகள் இதை சாப்பிடுகிறார்களா என்று தெரியவில்லை.
உலகளவில் சீனா, ஜப்பான், கொரியா, தென்கிழக்காசியாவிலும், மத்திய தரைக்கடலையொட்டிய தென் ஐரொப்பாவிலும் (குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின்), இக்கலாச்சாரம் உள்ள தென்னமரிக்காவிலும், இது விரும்பி உண்ணப்படுகிறது. கணவாய்க்கு மிக நெருங்கிய சொந்தமான ஓக்டோபஸும் இந்நாடுகளில் உண்ணப்படுகிறது. ஜப்பான், கொரியாவில் பச்சையாகவும், காய்கறிகளுடன் லேசாக வதக்கியும் உண்கிறார்கள். ஜப்பானிய டெம்பூரா (tempura) முறையில் வட்ட, வட்டமாக நறுக்கிய கணவாயை மாவில் போட்டு பஜ்ஜி போல பொரித்தெடுத்து சாப்பிடலாம். இதையே கலமாரி (kalamari) என்ற பெயரில் பல அமெரிக்க உணவகங்கள் இப்போது வழங்குகின்றன. ஆனால் கலமாரி என்பது ஸ்பானிய மொழியில் கணவாயின் பெயர். இப்போது பாருங்கள்:
கட்டில் ஃபிஷ், ஸ்க்யிட் -- ஆங்கிலம்
கணவாய் – தமிழ்
கணவா – மலையாளம்
இகா – ஜாப்பனிஸ்
கலமாரி – ஸ்பானிஷ்
ஆக, க் அல்லது க்-ன் உயிர்மெய் எழுத்துக்கள் எல்லா மொழிகளிலும் கணவாயின் பெயரில் இருக்கின்றன. இது தற்செயலானதா?
கணவாய் சமைக்கும் போது இதை எவ்வளவு விரைவாக சமைத்து முடிக்கிறீர்களோ அவ்வளவு நல்லது. ஏனென்றால் இதன் தசை பச்சையாகவே சற்று ரப்பர் பதம் கொண்டது. சமைக்க சமைக்க இது மேலும், மேலும் ரப்பராகி விடும். இருப்பினும் நம் ஊரில் இதை, மற்ற இறைச்சி வகைகளாக நினைத்துக் கொண்டு, அதிகமான நேரம் அடுப்பில் வைத்துக் கிண்டிக், கிளறியே சாப்பிடுகிறோம். இப்படி சமைக்கப்பட்ட உணவில் நாம் சுவைப்பது தசையையல்ல, அது சுமந்து கொண்டிருக்கும் மசாலா வகைகளையே.
அப்பாடா, பின்னூட்டமாக எழுத ஆரம்பித்தது பெரிதாக நீண்டு விட்டது. எனவே, எனது பதிவுத்தளமான ஞாயிறு தபாலிலும் (www.thabaal.blogspot.com) இதைப் பதிந்து விடுகிறேன்.
மேலதிக தகவல்களுக்கு காண்க: http://en.wikipedia.org/wiki/Squid
யோகன் ,
இங்க பாருங்க ஏவிஎஸ் சொல்லி இருப்பதை , கணவாய் மீது தடிமனான ஓடு போன்று இருக்குமாம் அதனை தான் நான் செதில் என சொல்லிவிட்டேன், எப்படி சொல்வது அதை என தெரியவில்லை. மற்றபடி நான் சொன்னது போல கால் போன்று தெரியும் என்றும் சொல்லியுள்ளார் அப்படி எனில் நான் பார்த்ததும் இதே கணவாய் மீனைத்தான் , நான் சொன்னதை போல அனைவரும் கணவாய் மீன் வதக் வதக் என ரப்பர் போல இருக்கும் என்றே சொல்லியுள்ளார்கள்.
அதற்குள் எனக்கு கணவாய் மீன் தெரியவில்லை என சொல்லிவிட்டீர்கள் , ஏவிஸ் அவர்களும் இதான் சாக்கென பலருக்கும் கணவாய் மீன் பற்றி தெரியவில்லை என்கிறார் :-))
கணவாய் மீனைப்பார்ப்பதற்கு முன்னர் சாப்பிட்டு இருக்கிறேன் அதனைப்பார்த்த பிறகு சாப்பிட பிடிக்கவில்லை, இது மீன் போலவே இல்லை இது ஏதோ கடல் வாழ் உயிரினம் என சொன்னேன், அவர்கள் தான் இது மீனே தான் என சாதித்தார்கள். ஆனால் இப்பொழுது ஏவிஸ் கூட அது மீன் அல்ல என்றே சொல்லியுள்ளார்.
தவறுக்கு மன்னிக்க.
நான் இப்பதிவிற்கு முன் இட்ட மறுமொழியில் கணவாய்க்கு தமிழகத்தின் வடக்கிலும் தெற்கிலும் ஒரே பெயர்தான் என்று சொல்லியிருந்தேன். இன்று (செப்டெம்பர் 26, 2007) சென்னையில் FishO’Fish என்ற கடைக்குப் போயிருந்தேன். அங்கே விலைப்பட்டியலில் உள்ள பெயர்களை மேய்ந்து கொண்டிருக்கும்போதுதான் கவனித்தேன் Squid என்பதற்கு தமிழில் கடம்பா என்று எழுதியிருந்தார்கள். எனவே, வடக்குப் பகுதிகளில் இது கடம்பா என்றழைக்கப்படுகிறது என்பதே சரி.
என்னுடைய தள பதிவில் இதை சரி செய்துள்ளேன். காண்க: http://thabaal.blogspot.com/2007/09/blog-post_17.html
யோகன், வவ்வால், ஏவிஎஸ், வசந்தன்
உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.
கணவாய் பற்றிய
சில தகவல்களைப் பெற முடிந்தது.
வசந்தன்
வல்வெட்டித்துறையாரும் கணவாயை மையோடுதான் சமைப்பார்கள்.
எங்கள் வீட்டில் மை எடுத்துச் சமைப்பதைப் பார்த்து அவாகள் எங்களுக்குக் கணவாய் சமைக்கத் தெரியாது என முடிவு கட்டி விட்டுhர்கள்.
ஏவிஎஸ்
அக்கறையுடன் தகவல்களைத் தந்ததற்கு நன்றி.
றாகவன்
கணவாயைச் சரியான முறையில் சமைத்தால் இறப்பர் மாதிரி வராது.
Post a Comment